– துரை. அறிவழகன்

அம்மாசியின் இளம்பிராயத்து ஞாபகக் குகையில் மலைப் பூவரச மரமும், தைலம்மா நினைவும் அரைத்துப் பூசின தோட்டு மஞ்சளாக ஒட்டிக் கொண்டிருந்தது. அடர்ந்த நிழலும், மார்கழி பனியின் குளிர்ச்சியும் சுமந்த மலைப் பூவரசம் மரத்தடியில் இதய வடிவிலான பூவரச இலையைச் சுருட்டி ‘பீப்..பீப்..’ என நெஞ்சுக் காத்தையெல்லாம் வாய்க்குக் கொண்டு வந்து பீப்பி ஊதிக் கொண்டிருப்பாள் தைலம்மா; பீப்பி ஊதும் போது வாய் குவிந்து குருவி வாயாகிவிடும். 

நொய்யல் ஆற்றங்கரை வனமெங்கும் கூழைக்கெடா, நீர்க்காக்கை, நாமக்கோழி, சாக்குருவி குரல்களோடு பூவரச இலை பீப்பியின் ஒலியும் கலந்து தைலம்மா இதயச் சிரிப்பாய் ஒலிக்கும். பீப்பி ஊதியபடி ஆற்றங்கரையோர வனத்தைச் சுற்றி வரும் போதும் பச்சரிசி மாவுருண்டையை வாயில் அதக்கிக் கொண்டிருப்பாள் தைலம்மா. போதாததற்கு இடுப்பில் சொருகி இருக்கும் நீலநிற சுருக்குப் பையில் வறுத்த ஈசலும், கருப்பட்டியும் கலந்து நாளெல்லாம் கொறிக்க வைத்திருப்பாள். நீல நிற வெல்வெட் சுருக்குப் பையில் வெள்ளி கோடுகள் பூக்கோலம் போட்டிருக்கும்.

தைலம்மாவோடு எப்பவும் சேர்ந்தே சுற்றி வருவார்கள் அவளுடைய சேக்காளிகள் பூங்கோதையும், சிட்டாளும். சேக்காளிகள் கையில் பனை மட்டை சுமந்து திரிவார்கள். வனத்துக்குள் வெக்கை ஓடத் தொடங்கியவுடன் பூவரச மரத்தடியில் வாக்கூடு, கொட்டாம்பெட்டி, கருப்பட்டிப்பெட்டி, கிண்ணிப்பெட்டி என விதவிதமான சித்திரங்கள் பனை மட்டையிலிருந்து உருவாகத் தொடங்கிவிடும். எந்த வெக்கையும் பூவரச மர குளிர்ச்சியை எதுவும் செய்து விட முடியாது. மரமெல்லாம் பூத்து நிற்கும் மஞ்சள் பூக்களோடு குழந்தைகளை காத்து நின்றது மலை பூவரசு. மலைப் பூவரசத்தைச் சூழ்ந்து செழித்து சில்லிப்பு காட்டி நின்றன அத்தி, கனக சம்பா, புரசு, நீர்மருது, புங்கன், கருப்பாலை, இலுப்பை மரங்கள். தங்க நிறப் பூக்கள் கொண்ட கனகசம்பா மரத்தின் நீரோடிய இலை நரம்புகளில் பட்டுத் தெறிக்கும் சூரிய துணுக்குகள் வனமெங்கும் பிஞ்சுக் கை ரேகையாக படர்ந்து இருக்கும்.

மரங்களுக்கு மேல் ஓயாது றெக்கையடித்துத் திரியும் நாரை, சீம்புறு, சாக்குருவி, செம்புத்தான் பட்சிகள். இரவெல்லாம் வேட்டை முடித்து கண் சொருகிப் போய் பூவரசு மரத்து இலைக்கூட்டுக்குள் பகலெல்லாம் அடைந்து கிடக்கும் கூவைகள்.

சின்னாறு, நீலியாறு, கொடிகுவரியாறு, சாடியாறு, காஞ்சிமா ஆறு என பனை ஓலைப் பட்டையின் ரேகைகளாக ஓடிய நீர்வரத்தை வாங்கிக் கொண்டு சாடிவயலில் சிற்றோடைகள் ஒன்று சேர குமருப் பெண் செழிப்பாக பிரவாகமெடுத்து ஓடியது நொய்யல் ஆறு. கெளுத்தி, விரால், பனையேறி கெண்டை என வெள்ளி ஒளியாக மீன் குஞ்சுகள் பாய்ச்சல் காட்டிக் கொண்டிருக்கும்  ஆற்றின் போக்கெங்கும்.

நாச்சிவலசு குடியிருப்புகளைத் தாண்டி ஆற்றங்கரை வனத்தையும் தாண்டி பனங்காடு, காட்டுக் கிழவியின் கூந்தலாக விரிந்து கிடந்தது; கிணற்றுச் சேரத்தில் முளைத்திருக்கும் செடிகளில் கூடுகட்டி நாச்சிவலசுக்குள் குரல்காட்டித் திரியும் சிட்டுக் குருவிகளோடுதான் அம்மாசியின் பொழுது விடியும். பனி விலகி சூரியன் முளைத்த சுவடில் காடு நோக்கி நகர்ந்துவிடுவான் அம்மாசி. 

காடைகளின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கும் பனங்காடு. பனைமரப் பொந்துகளில் இருந்து அதிசயமாக முகம்காட்டும் பனங்காடைகள். பனங்காடை மட்டுமில்லாது காட்டுக்காடை, வாள்காடை, பூங்காடை, பக்காடை, அரிக்காடை என எண்ணற்ற காடைகள் காட்டு புதர்களுக்குள் கூடமைத்து ஒளிந்து வாழ்ந்தன. தைலம்மாவும் அவள் சேக்காளிகளும் கூடும் பூவரச மரத்துக்கு அருகில் இருந்துதான் காடை கவுதாரிகளை வேட்டையாடுவான் அம்மாசி. 

மாட்டு ரோமத்தை மெல்லிய கயிறாக்கி நுணியில் சுருக்கு முடிச்சு போட்டு கம்புகளில் கட்டி கண்ணி வைத்து காடை, கௌதாரிகளை வேட்டையாடுவதில் சமர்த்தன் அம்மாசி. மரக்கூட்டத்துக்குள் மறைந்து கொண்டு அம்மாசி அச்சு அசல் காடை கவுதாரி போல் எழுப்பும் சீழ்க்கை ஒலிக்கு ஏமாந்து வரும் பட்சிகள் அம்மாசியின் கண்ணிக்கு தப்ப முடியாது. நொய்யல் ஆத்தங்கரைக்கு வரும் கொக்குகளும் சில சமயங்களில் அவன் கண்ணியில் மாட்டிக் கொள்ளும்.

மாட்டுச் சாணத்தில் புதைத்து சுட்ட காடை முட்டைகளோடும், நெருப்பில் வாட்டிய காடைகளோடும் பூவரச மரத்தடியில் தைலம்மாவைச் சந்திப்பான் அம்மாசி. இடுப்பில் சொருகி இருக்கும் சுருக்குப் பையில் வைத்திருக்கும் ஈசலும், கருப்பட்டியும் கலந்த பண்டத்தை அம்மாசிக்குக் கொடுப்பாள் தைலம்மா. பூங்கோதைக்கும், சிட்டாளுக்கும் கூட திறக்காத தைலம்மாவின் சுருக்குப் பை அம்மாசிக்கென்றால் திறந்துவிடும் அதிசயத்தைப் பார்த்தபடி இருக்கும் பூவரசு மரம்.

பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், ஓரத்துப்பாளையம்  தடங்களில் வழி அமைத்துக் கொண்டு பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்தது நொய்யல் ஆறு.

பூவரச மரக்காட்டுக்கு தைலம்மாவும், காடை வேட்டைக்கு அம்மாசியும் போகாத நாட்களில் நொய்யல் ஆத்துக்கு மீன்பிடிக்கப் புறப்பட்டுவிடுவார்கள் இருவரும். கையை விட்டு விலகிப் போகாமல் சுத்தி வரும் வெள்ளாட்டை தைலம்மாவோடு கிளம்புவதென்றால் கசாலையில் கட்டிவிட்டு, நழுவி நழுவி கீழிறங்கும் டவுசரை இழுத்து அரைஞான் கயிற்றை மேலேவிட்டு இறுக்கிக் கொண்டு கிளம்பிவிடுவான் அம்மாசி. 

வெள்ளாட்டுக்கு புளியந்தழைகளையும், பசுந் தீவனங்களையும் போதுமான அளவு கொல்லையிலிருந்து கொண்டு வந்து அதன் காலடியில் போட்டுவிட்டுத் தான் கிளம்புவான். சொம்பில் கரைத்துக் காத்திருக்கும் புளித்தண்ணியை குடித்து வயித்தை ரொப்பிக் கொண்டு உலகத்தையே பிடித்துவிடப் புறப்பட்டவர்கள் போல நடப்பார்கள் இருவரும்: கையில் தூண்டிக் கம்பு இருக்கும்.

வாழை முளைத்த சேத்து மண் தடத்தில் தோண்டத் தோண்ட நெளியும் புழுக்களை அரித்து கொட்டாங்கச்சியில் நிரப்பிக் கொண்டு நடைபோடுவார்கள். ஆத்தை அடையும் போது கால் பறக்க ஓடி வந்து சேர்ந்து கொள்வார்கள் சிட்டுவும், பூங்கோதையும்.

தூண்டில் முள்ளில் சிக்காமல் புழுவை மட்டும் நேக்காக அரித்துக் கொண்டு போகும் தந்திரக்கார மீன்களெல்லாம் உண்டு நொய்யல் ஆற்றில். தூண்டிலைப் போட்டுவிட்டு தக்கை இழுபடுவதை கண்கொத்திப் பாம்பாக பார்த்திருந்து லாவகமாக இழுத்து சிக்கிக் கொண்ட மீனை கைபிடிக்குள் கொண்டு வருவதில் அம்மாசி கில்லாடி. காடைக்குக் கண்ணி வைக்கவும், கெண்டைக்குத் தூண்டில் போடவும் கைகாரன் அம்மாசி.  அவன் ராசிக்கும், கைவாகுக்கும்  கெண்டை, கெழுத்தி, விரால், உளுவ என்று வகை வகையான மீன்கள் வலையில் சிக்கிக் கொள்ளும். உற்சாகம் கொப்புளிக்க, பிடிபடும் மீன்களை மண் சட்டியில் பத்திரப்படுத்துவார்கள் தைலம்மாவும் அவள் சேக்காளிகளும். “ஆத்தாடி, எம்புட்டு மீன்க” வாயும், கண்ணும் அப்படித்தான் விரிந்து விடும் தைலம்மாவுக்கு.  தைலம்மா, சிட்டாள், பூங்கோதை எழுப்பும் உற்சாக ஆரவாரம் இன்னும் நாலு மீன் சேர்த்துப் பிடிக்க வைக்கும் அம்மாசியை. வெயில் ஏற ஏற சூடு பரவும் பாறைகளில். ஆத்து நீர் கதகதப்பு சுகத்தில் மீன்களெல்லாம் புரண்டு விளையாடும். பாறை இடுக்குகளில் பாசி படிந்த வேர் முண்டுகளுக்குள் இருந்து முகம் காட்டும் மீன் குஞ்சுகள். 

கொக்குகளும், நாரைகளும், மடையான்களும் கூட்டம் கூட்டமாக மேற்கு நோக்கி பறந்து மறையும். ஆற்றோர நாணல் புதர்களுக்குள் மறைந்து திரியும் பூச்சிகளை தேடி மேய்ந்து கொண்டிருக்கும் சிறு பட்சிகள். அம்மாசி மீன் பிடிக்கும் பகுதிக்கு சற்று எட்டத்தில் கூத்தம்பட்டி சிறுவர்களின் அக்குறும்பு தாங்க முடியாததாக இருக்கும். கூத்தம்பட்டி சிறுவர்கள் காட்டும் பாய்ச்சலில் மீன்கள் பதறியடித்து நீருக்குள் முங்கி காணாமல் போகும். அந்தமானைக்குப் போய் அவர்களை நாலு அப்பு அப்பத் தோணும் அம்மாசிக்கு. தைலம்மா முன்பாக அப்படிச் செய்யாமல் தன்னை அடக்கிக் கொள்வான் அம்மாசி. ஆனாலும் அவனுக்குள் ‘பொசு பொசுப்பு’ அடங்காது. அரக்கப் பறக்க மறைந்த மீன்கள் அம்மாசியின் தூண்டிலுக்கு வெகு தூரத்திற்கு அப்பால் போய்தான் முகத்தைக் காட்டும்.  

கொட்டாங்கச்சியில் பாதிக்கு மேல் புழுக்கள் காலியாகியிருக்கும் போது மண் சட்டியில் நிறைந்த மீன்கள் ‘தளக்…புளக்’ கென்று புரள ஆரம்பித்துவிடும். கொழம்பு வைத்தால் நாலு வீடு ஒரு நேரத்திற்கு திருப்தியாகச் சாப்பிடலாம். கருவேலங்காட்டைத் தாண்டி, கரும்பு வாசம் மூக்கில் இனிக்க மீன்பிடி முடித்து நான்கு பேரும் வீடு சேரும் போது, பொழுது உச்சத்தை தொட்டுவிடும். தைலம்மாவின் மச்சு வீடு நாழி ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. வாசலில் எப்போதும் சிலுசிலுத்து நிற்கும் முரட்டு வேப்ப மரமொன்று. தொன்ம வாசனையை சுமந்தபடி நாழி ஓட்டுப் பாசிப் பூவாய் மலர்ந்திருந்தது அம்மாசி தைலம்மா உறவு.

வீட்டு முற்றத்தைத் தாண்டினால் பண்டம் பாடிகளின் மூத்திர கவிச்சி அடிக்கும் தொழுவம். தொழுவத்தில் ஆறடி மனுச நீளத்துக்கு கல் தொட்டிகளில் ததும்பி நிற்கும் தவிட்டுத் தண்ணி; பண்டம், பாடிகள் எறப்பு வாங்காமல் எப்போதும் குளுந்து போய் இருந்தன. பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர்,இருகூர், சூலூர், ஒரத்துப்பாளையம் வழியாக பாஞ்சு கொண்டிருந்த நொய்யல் ஆத்துப் போக்கு நாச்சிவலசு, கூத்தம்பட்டியையும் செழிப்பாக வைத்திருந்தது. நொய்யல் ஆத்து செழுமையை வாங்கி வளர்ந்தாள் தைலம்மா. 

காட்டு பூவரச மரத்திற்கு அருகில் நின்றிருக்கும் இலுப்பை மரத்தில் அணங்கு அடைந்து கிடப்பதாக கிராமத்தில் பேச்சு அலையோடிக் கிடந்தது. நாச்சிவலசு, கூத்தம்பட்டி பெருசுகள் அஞ்சி ஒதுங்கிப் போன இலுப்பை மரப் பொந்தில் குருவி முட்டை திருடித் தின்பதை மட்டும் அம்மாசி நிறுத்தவே இல்லை. அவனுக்கும், தைலம்மாவுக்கும் துளிகூட அச்சமே இருப்பதில்லை.

“வரட்டுமே எந்த அணங்கு என்ன செய்யுதுனு பாப்போமே” என்று தைலம்மாவிடம் வீரம் பேசுவான் அம்மாசி. பூவரசு மரத்தைத தொட்டுப்போனது யானைகளின் வழித்தடம். வயது முதிர்ந்த பெண் யானை தலைமையில் கடந்து போகும் யானைக் கூட்டத்தைப் பார்ப்பதில் பூரித்துப் போவாள் தைலம்மா. துண்டுபடாமல் நீண்டு கிடந்த காட்டில் பசுந்தீவனங்களை ஒடித்துத தின்றபடி அலையும் யானைகள். 

“அதுதான் கொம்பன்; வழிகாட்டி யானை” என்பான் அம்மாசி. யானைகளைப் பற்றிய நிறைய விஷயங்களை தைலம்மாவுக்கு அவன்தான் சொல்வான். சில்லு கொம்பன், கட்ட கொம்பன், மொன்ன வாலு என ஒவ்வொரு யானையைப் பற்றியும் கதைகதையாகச் சொல்லுவான் அம்மாசி. அம்மாசியின் கதைகளைக் கேட்டு கண்ணெல்லாம் விரிந்துவிடும் தைலம்மாவுக்கு.

ஒத்தைக் கொம்பு யானையையோ, சூறை நாற்றமடிக்கும் யானையையோ தூரத்தில் பார்த்துவிட்டால் எச்சரிக்கை ஆகிவிடுவான் அம்மாசி. தைலம்மாவையும் இழுத்துக்கொண்டு அரவங்காட்டாமல் பதுங்கிவிடுவான்.

“ரொம்ப ஆபத்தானவன் இந்த ஒத்தக் கொம்பன். சிக்குனோம் நம்மள சிதறடிக்காம விடாது” என்பான் யானை மறைந்த பிறகு அம்மாசி. காட்டுக்குள் யானைகளுக்கான சோளம், பனிவரகு என மானாவாரி பயிர்கள் தான்தோன்றியாக முளைத்துக் கிடந்தன.

குருவி முட்டைகளை சேகரிக்க தைலம்மா, பூங்கோதை, சிட்டு ஆகியோருடன் வனத்துக்குள் புகும் அம்மாசி யானை வழித்தடங்களை எச்சரிக்கையாக பார்த்து நடப்பான். யானை தடத்தில் குவிந்து கிடக்கும் சாணத்தில் கால் புதைத்து மிதிப்பதென்றால் கொள்ளைப் பிரியம் தைலம்மாவுக்கு. சாணத்தின் சூட்டை வைத்து யானைகள் கடந்து போன நேரத்தை கணக்கிட்டுவிடுவான் அம்மாசி. யானைகளை விட வாசனை பிடிப்பதில் சூரனாயிருந்தான் அம்மாசி. யானைகளைப் போல, ஒரு முறை நடந்து போன வழித்தடம் அவன் மூளைக்குள் பதிந்துவிடும். 

கவண் கல்லோடு அம்மாசி புறப்பட்டுவிட்டால் காட்டு பட்சிகளுக்கு ஆபத்துதான்.  ஆக்காட்டி குருவிகள் மட்டும் அவன் வாசனையைப் பிடித்து தப்பிவிடும். “கரக்…கரக்..” என்று குரலெழுப்பியபடி திரியும் ஆக்காட்டி குருவிகள் அம்மாசி அரவம் தென்பட்டவுடன் குரல் மாற்றி ஒலி எழுப்பி தங்கள் இனத்து மற்ற குருவிகளை எச்சரிக்கும். காட்டுக்குள் குருவியின் மொழி கடத்தப்பட்டு அலை அலையாகப் பரவும்.

மூங்கில், உன்னு, இருவாட்சி, வெட்டாலம் போன்ற நாட்டு மரங்களின் இலை தழைகளையும், பசுமையான புற்களையும் வயிறு முட்ட மேய்ந்து விட்டு காட்டுப் பாதையில் யானைகள் போடும் சாணத்திற்குக் கூடிவிடும் குரங்கு, இருவாச்சி, கீரிப்பிள்ளை, பட்டாம்பூச்சி போன்ற உயிரிகள். யானைச் சாணத்தின் மணம் காட்டுக்குள் எப்படித்தான் பரவுமோ தெரியாது! அதுக்காகவே எதிர்பார்த்திருக்கும் பறவைகளும், விலங்குகளும் சாண மலையைச் சூழ்ந்து கொண்டு நொடிப் பொழுதில் காணாமல் ஆக்கிவிடும்.

யானைகள் ஒடித்துப் போடும் காட்டு மரங்களின் இழை தழைகளின் இடைவெளியில் சூரியனின் மஞ்சள் ரேகைகள் காடெல்லாம் படலாக பின்னிக் கிடக்கும். யானை வழித்தடத்தின் இருபுரமும் அத்தி, கடம்ப மரம், நொச்சி, பிலு மரங்கள் சில்லிப்புடன் நிற்கும். மரக்கூட்டங்களுக்கு இடையில் புற்றுகளையும், தேரைகளையும் பார்க்கலாம். குப்பென்று மணத்தோடு பன்னீர் மரங்களும் பூத்து நிற்கும். அகன்ற கரும்பச்சை நிற இலைகளுக்கு மத்தியில் பூத்து நிறைந்திருக்கும் வெள்ளை நிற பன்னீர்பூக்கள் காடெங்கும் வசீகர மணத்தை பரப்பி நிற்கும்.

“புற்றுகளும், தேரைகளும், வெள்ளை நிற பூக்கள் பூக்கும் காட்டு மரங்கள் இருக்கும் இடத்தில் நீரோட்டம் அப்படித்தான் இருக்கும்” என்பான் அம்மாசி. யானைகள் தோண்டிப் போட்ட குழிகளில் இருந்து பொங்கிப் பெருகும் ஊத்து நீர் குடித்தபடி பயணிப்பார்கள் தைலம்மா, அம்மாசி பட்டாளம். ஊத்து நீரின் சில்லிப்பும், சுவையும் கொடுக்கும் தெம்பில் நாலு சுத்து அதிகம் சுத்தி வருவார்கள். குருவி முட்டைகள் இருக்கும் பொந்துகளை அடையாளம் கண்டுபிடித்துவிடுவான் அம்மாசி. காய்ந்த வைக்கோல்களையும், காட்டுக் குச்சிகளையும் கொண்டு கட்டப்பட்ட கூட்டுக்குள் இருக்கும் பறவை முட்டைகளை ‘சரசர’வென்று மரத்தில் ஏறி தாய்க் குருவி அசந்த நேரத்தில் களவாடிவிடுவான் அம்மாசி.

காட்டு சுள்ளிகளை பொறுக்கி வந்து அங்கேயே சுட்டுத் தின்று விட்டுத் தான் நகர்வார்கள் அம்மாசியும் அவன் பட்டாளமும். ஆக்காட்டி குருவிகள் பொடி கற்களைக் குவித்து தரையில் கட்டியிருக்கும் கூட்டிலுள்ள சாம்பல் புள்ளி முட்டைகள் மட்டும் அம்மாசியின் வேட்டைக் கண்களில் இருந்து தப்பிவிடும். அம்மாசியின் பார்வையெல்லாம் மரப் பொந்துகளிலும், உச்சாணிக் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் கூடுகளிலும்தான் இருக்கும். வழித் தடங்கள், ஓரத்து புதர் அடைசலுக்குள் பதுங்கிக் கிடக்கும் குருவி முட்டைகள் அம்மாசியிடமிருந்து தப்பிவிடும்.

நொய்யல் படுகையில் விரிந்து நிற்கும் வில்வம், வாகை, காட்டு எலுமிச்சை, கடம்பு, நீலத்திருவத்தி, நாகலிங்கம், மஞ்சக்கடம்பு, மகிழம், இலந்தை மரக்கூட்டங்களின் வளவுக்குள் அம்மாசிக்கான தடம் நீண்டு கிடக்கும். பனிக்காலத்தில் அம்மாசியின் தடத்தில் காட்டு மல்லிகள் மெத்தென்று விரிப்பாக குவிந்து கிடக்கும். காட்டு மல்லி குவியலுக்குள் இருந்து உடை மர முட்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும். காட்டுப் பாதையில் உதிர்ந்து கிடக்கும் மகிழம் பூக்களை எடுத்து தலையில் சொருகிக் கொள்வார்கள் தைலம்மாவும், சிட்டும், பூங்கோதையும். மரத்தில் ஏறி மகிழம் பழங்களை பறித்து வருவான் அம்மாசி.

இரவெல்லாம் வேட்டைக்குப் போய் வந்த களைப்பில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவால்கள் அடைந்து கிடக்கும் இச்சி மர தோப்புக்குள் மட்டும் தைலம்மாவை அழைத்துச் செல்லமாட்டான் அம்மாசி. இச்சி மர தோப்புக்குள் இருக்கும் சுடலைசாமி என்றால் மட்டும் அம்மாசிக்கு கொஞ்சம் பயம். நாச்சிவலசு, கூத்தம்பட்டி கிராமத்து மக்கள் சுள்ளி பொறுக்கக் கூட இச்சித் தோப்புப் பக்கம் வருவதில்லை. வௌவால்கள் அடையும் பக்கம் சின்ன அரவங்கூட காட்டமாட்டார்கள். சுடலைச்சாமி பொக்கிஷமாக நினைத்து வௌவால்களுக்கு சின்ன தொந்தரவும் கொடுக்க மாட்டார்கள்.  ஆல மரம் போன்ற விழுதுகள் சடை சடையாகத் தொங்கும் இச்சி மரமெங்கும் தலை கீழாகத் தொங்கிக் கிடக்கும் வௌவால்கள். இச்சி மர தோப்புக்குள் தனிக் காட்டு ராஜாவாக ஆட்சி செய்து கொண்டிருந்தார் சுடலை. அணங்கு கதைகளை நம்பாமல் இலுப்பை மரப் பொந்தில் குருவி முட்டை திருடும் அம்மாசி சுடலைசாமியிடம் மட்டும் வால்தனம் காட்ட மாட்டான்.

அது ஒரு இதமான இளவெயில் காலம். அன்று அம்மாசி காடை வேட்டைக்குப் போய்விட்டான். தைலம்மா ஓலை கொழுக்கட்டைகளை குண்டானில் அள்ளிக் கொண்டு பூவரசு மரத்தடியில் அமர்ந்திருந்தாள். சிட்டுவும், பூங்கோதையும் கருப்பட்டிப் பெட்டியும், கிண்ணிப்பெட்டியும் முடைய பனை மட்டைகளை சேகரித்துக் கொண்டு தைலம்மாவோடு குளுந்த நிழல் பகுதியில் சேர்ந்து அமர்ந்து கொண்டார்கள். கூப்பிடு தூரத்தில்தான் காடைகளுக்குக் கண்ணி வைத்து அம்மாசி காத்திருந்தான். மரக்கூட்டங்களின் சலசலப்புக்கு மத்தியில் வில்லாகப் பாய்ந்த ஒலியாக அவனது சீழ்க்கைச் சத்தம் விட்டு விட்டு கேட்டுக் கொண்டிருந்தது. கருத்த மேகக் கூட்டத்தின் அசைவாக தூரத் தொலைவில் யானைக் கூட்டம் நகர்ந்து போனது. பூவரசு மரத்திற்கு அருகில் இருந்த இலுப்பை மரக் கிளைகளில் சாம்பல் நிற அணில் ஒன்று ‘கீச்’சொலி எழுப்பியபடி அலைந்து கொண்டிருந்தது.

பூவரசு மரத்தடியில் மண்டிக் கிடந்த செடிகளுக்குள் அலைந்து திரிந்த தேன் சிட்டுக்கள் தான் முதலில் தைலம்மாவின் வேதனைக் குரலைக் கேட்டன. இலுப்பை மரத்தில் அறை தூக்கத்தில்  அசந்திருந்த கூவை ஒன்று பதட்டத்துடன் அரைக் கண் விழித்துப் பார்த்தது. வயிற்றைப் பிடித்துக் கொண்டு குன்னிப் போய் உட்கார்ந்திருந்த தைலம்மாவை நெருங்கி ஆசுவாசப் படுத்த முயன்றார்கள் சிட்டுவும், பூங்கோதையும். காடைகளுக்குக் கண்ணி வைத்து காத்திருந்த அம்மாசியின் செவிப்புலனை தொட்டுவிட்டது தைலம்மாவின் ஈனக்குரல். நொய்யல் படுகையிலிருந்து மாட்டு ரோமம் கட்டப்பட்ட கண்ணி குச்சிகளை அநாதரவாக விட்டு விட்டு பதறிப் போய் பூவரசு மரத்தடி நோக்கி ஓடினான் அம்மாசி.

“ஒண்ணுமில்ல…ஒண்ணுமில்ல… நீ போய் உன் வேலையப் பாரு” என்று தைலம்மாவை நெருங்கவிடாமல் அம்மாசியை விரட்டி அடித்தார்கள் சிட்டும், பூங்கோதையும். பூவரசு மரத்தோடு ஒண்டிக் கொண்டிருந்த தைலம்மாவை ஆத்து நடையாக அழைத்துப் போய் வீடு சேர்த்தார்கள் சிட்டும், பூங்கோதையும். வீடெல்லாம் கூடிவிட்ட கிராமத்து சனங்களுக்கு மிளகு, தோட்டு மஞ்சள், வெத்தலை, பாக்கு, சக்கரையெல்லாம் கொடுத்து சந்தோஷப்பட்டான் தைலம்மா அப்பன்.

கிணத்தடி இலைச் சருகு குவியலில் தைலம்மாவை உட்கார வைத்து நீரூற்றினார்கள் நாச்சிவலசு நரை பூத்த பெண் மக்கள். வெள்ளி முளைத்த அந்தப் பொழுதில் பதுங்கி நின்ற அம்மாசியை கவனித்துவிட்டாள் ஊர்க் கிழவி ஒருத்தி. ‘என்னமோ ஏதோ’ வென்று மறுகி மறுகி சுத்திக் கொண்டிருந்தான் அம்மாசி.

“பாரு, நீ இனியும் காட்டுப் பக்கம் போய் குதியாட்டமெல்லாம் போடக்கூடாது. அம்மாசி பயலோடு சேந்து சுத்துற வேலையெல்லாம் இனி கூடாது” நாச்சிவலசு நூத்துக் கிழவி சொன்னதுக்கு தலை ஆட்டி வைத்தாள் தைலம்மா. வயித்தவலி விடாமல் துரத்தியது தைலம்மாவை. உளுந்தங்கஞ்சி, நெய் கத்திரிக்காய் என்று விதவிதமான பண்டமெல்லாம் சாப்பிட்டும் வயித்துச் சூடு ஆறவில்லை தைலம்மாவிற்கு. பச்சை முட்டையில் நல்லெண்ணை ஊற்றி கொடுத்துப் பார்க்கச் சொன்னாள் நூத்துக் கிழவி. எந்த கை வைத்தியத்துக்கும் மட்டுப் படவில்லை தைலம்மா வயித்துவலி.

இலுப்பை மரத்து கூவையின் அலறல் தைலம்மாவின் காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. இலுப்பை மர குருவிகளின் எச்ச வாடை தைலம்மாவின் மூச்சை அடைத்து வயித்தைக் குமட்டியது. குருவிகளின் றெக்கையடிப்பாக கண்ணில் பூச்சி  பறந்தது. நாச்சிவலசு கீழத்தெரு கிழவி வெயிலுகாத்தாள் சிவப்பு பட்டுத் துணியை விரித்து சோழி உருட்டிப் பார்த்தாள். தைலம்மா கண்களின் பாப்பா ஒரு நிலையில்லாமல் அலை பாய்ந்தது. தொழுவத்தில் கட்டிக் கிடந்த மயிலையும், காங்கேயனும் வெயிலுகாத்தாளைப் பார்த்து வெருண்டன. நீட்டி மடக்கி உட்கார்ந்து கொண்டு உருண்டு நின்ற சோழியைப் பார்த்து விரல் மடக்கி கணக்குப் போட்டாள்.

வெயிலுகாத்தாளைத் தொடர்ந்து வந்த ஊர் சனங்கள் சோழியையும், கிழவியையும் நிலை குத்திப் பார்த்தபடி இருந்தார்கள். தைலம்மாவின் ஆத்தாவும், அப்பனும் வெயிலுகாத்தாள் முகக்குறியை பார்த்தபடி நின்றார்கள். “ஒடம்பு மலர்ந்த நேரம் இப்படியா நோவு வந்து சேரணும். எந்தக் காத்து கருப்பு இப்படி போட்டு ஆட்டுதோ தெரியலையே” என்றபடி போயிலையை வாய்க்குள் ஒதுக்கினாள் மட்லம்மா.

சுத்தி நின்ன சனங்களை ஒரு வட்டம் பார்த்துவிட்டு தைலம்மாவின் அப்பனிடம் நிலை குத்தியது வெயிலுகாத்தாள் கிழவியின் கண்கள். கிழவியின் கண்கள் உக்கிரம் ஏறி கொள்ளிக் கனலாக தகதகத்துக் கொண்டிருந்தது. கையில் வெத்திலையை எடுத்து விபூதியை குவித்து நடு விரலால் வட்டம் போட்டாள்.

“ம்ம்ம்… என்ற உக்கிரமான செருமல் கிளம்பியது கிழவியிடமிருந்து. ஏதோ பிடிபட்டது போல் தலையை ஆட்டிக் கொண்டாள். கன்னி மூலையில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சணப்பை காத்து வேகத்தில் ஆடியது. கிணத்தடி நீர் வாய்க்காலாக ஓடி வாழையை நனைத்து தென்னை மர வேரைச் சுற்றி தேங்கி நின்றது. தென்னையில் கட்டப்பட்டிருந்த வெள்ளாடு ‘ம்மே’ என்று குரலெழுப்பியபடி வாய்க்கால் ஈரத்தில் வாய் வைத்தது.

“ஆத்தா கூட்டுல கைவச்சிருக்கா. ஆத்தாதான் வெகுண்டு தொரத்துரா” இழுத்து வாங்குன மூச்சோடு வெயிலுகாத்தாள் வாயிலிருந்து தெறித்து விழுந்தது வார்த்தைகள். “சுடலைசாமி நீதானப்பா காப்பாத்தணும்”, கிழவி சொன்னதைக் கேட்டு கூடி இருந்த சனங்களில் ஒருத்தி தன்னையறியாமல் அரற்றினாள்.

“எடத்த காட்டு தாயி. பரிகாரத்தையும் சேத்து சொல்லிரு” தைலம்மாவின் அப்பன் வெலவெலத்துப் போய் கேட்டான்.

“காடு, மேடென்று நேரங்காலம் தெரியாம சுத்துனா இப்படித் தான் வென வந்து சேரும். எங்க போய் வெனயத்த தேடிக்கிட்டு வந்து இப்படி நிக்கிறாளோ தெரியலியே”, பரிதாபமாக முணங்கினாள் தைலம்மாவின் ஆத்தாகாரி. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் பயந்து பதுங்கி நின்ற சிட்டும், பூங்கோதையும் வெலவெலத்துப் போய் விட்டார்கள். எந்த குட்டு எப்படி உடையப் போகிறதோ? இருவருக்கும் பேச்சு மூச்சு அடைபட்டு விட்டது.

ஆட்டுக் கொட்டிலில் ‘தேய்..தேய்..’ என்று குரலெழுப்பியபடி  நின்ற அம்மாசியின் நினைவெல்லாம் தைலம்மாவின் நிலையை நினைத்துத் தான் தவியாய் தவித்தி நின்றது.  கண்ணு தைலம்மா வீடு நோக்கி தைத்து நிக்க கை மட்டும் வெள்ளாட்டுக்கு பசுந்தீவனங்களை காட்டிக் கொண்டிருந்தது;  வெயிலுகாத்தாள் தைலாம்மா வீட்டு முற்றத்தைத் தாண்டி உள்ளே போவதைப் பார்த்ததில் இருந்து உயிர் நழுவி உடல் கூடாகி நின்றான் அம்மாசி.

“குருவிக அலையுது. எச்ச வாட மூச்ச அடைக்குது; காளியாத்தா கூட்டுக்குள்ள சேக்காளி கையவிட்டது இவ பக்கம் பாஞ்சிருச்சு. நொய்யல் வண்டல் ஓர காட்டு மரத்த காட்டுது. இலுப்ப மரம் சிலுசிலுக்குது”, மூச்சு வாங்க சொல்லி நிறுத்தினாள் கிழவி. வெடவெடத்து ஆடிய உடம்பிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. 

பொறி தட்டியது போல தைலம்மாவின் அப்பன் அவளுடைய சேக்காளிகளைத் தேடினான். கால் நரம்புகள் சுண்டி இழுக்க அதுக்கு மேல் ஒண்டி ஒழிய முடியாத பரிதாபத்தோடு முகத்தைக் காட்டினார்கள் சிட்டும், பூங்கோதையும.

பூங்கோதையும், சிட்டுவும் இலுப்பை மரத்தை அடையாளம் காட்டுவதாக ஒத்துக் கொண்ட பிறகு வெயிலுகாத்தாள் கிழவி கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசப்பட்டாள். மூச்சிரைப்பும், உக்கிரமும் மட்டும் தணியவில்லை.

“பொங்க வச்சு, கெடா வெட்டி ஆத்தாவ சாந்தி பண்ணுங்க. எல்லாம் சரியாப் போகும்”

கிழவி சொல்லியது காளியாத்தாவே உத்தரவு கொடுத்தது போல் குளுந்து போனார்கள் தைலம்மாவின் ஆத்தாளும், அப்பனும். மஞ்சப் பால் குடித்து வேர்வை அடங்கி ஆசுவாசப்பட்டாள் கிழவி. கண்ணில் ஒத்திக் கொண்டு கிழவி திருநீறு பூசிய பிறகு சற்று தெளிச்சியானாள் தைலம்மா. சிட்டும், பூங்கோதையும் தான் இன்னும் ஒரு நிதானத்துக்கு வராமல் மிரண்ட மயிலைக் கன்னாக நின்றார்கள்.

“நாங்க ஒண்ணும் செய்யல. அம்மாசிதான் இலுப்பை மரக் குருவி கூட்டிலிருந்து முட்டையை களவாண்டான். அவன் தான் மாட்டு வரட்டியில் சுட்டு எல்லாருக்கும் கொடுத்தான்” நடுங்கி வாய் குழறி விஷயத்தைப் போட்டு உடைத்தாள் சிட்டு. விஷயம் வெளிப்பட்டுப் போனதில் தப்பிப் பிழைத்தார்கள் சிட்டும், பூங்கோதையும்.

“சுள்ளி பொறுக்கக் கூட இலுப்ப மரத்துப் பக்கம் போறதில்ல. ஆத்தா அணங்கா ஒறஞ்சு நிக்குற மரத்துல கால் பதிக்க என்ன நெஞ்சுறம் இந்த அம்மாசிக்கு. இதுகளும் தான் வாய் அலைஞ்சு வாங்கித் தின்னுறுக்குகளே’, கூடி நின்ன கூட்டத்திலிருந்து முகத்தை அஷ்ட கோணலாக்கி ஒருத்தி சொன்னாள்.

“சரிதான் விடுங்க. கொழந்தைங்க என்னமோ நாக்கு ருசிக்கு செஞ்சிருச்சுங்க. காளியாத்தா வெளையாட்டு அதுகளுக்கு தெரியுமா என்ன?” சுத்தி நின்ற எல்லோரையும் மட்டுப்படுத்திவிட்டு சிட்டு, பூங்கோதை நெத்தியிலும் திருநீறை பூசிவிட்டாள் கிழவி.

“வீட்டு கன்னி தெய்வம் துடியா இருக்கு. சொன்ன மாதிரி பொங்க வச்சு, கெடா கொடுத்துருங்க. காலத்துக்கும் ஆத்தா காவலா நின்னு குலத்த காப்பா” 

கிழவி வாயிலைத் தாண்டி காணிக்கையோடு மறைந்த பிறகு ஊர் சனங்கள் ஒவ்வொருவராக களைந்தார்கள்.

வயித்து வலி கண்டு துடிச்ச தைலம்மா முகம் அம்மாசி கண்களுக்குள் உறைந்து போனது. அதுதான் அவன் அவளைக் கடைசியாகப் பார்த்தது. அசலூருக்கு வாக்கப்பட்டுப் போய்விட்டதுகூட செய்தியாகத் தான் அவனுக்குக் கிடைத்தது. சிட்டும், பூங்கோதையும் கூட அதற்குப் பிறகு பூவரச மரத்துப் பக்கம் போவதில்லை. பூவரசு மரத்தடியில் பனை ஓலைகள் காஞ்சு சருகாகிக் கிடந்தது. எப்போதாவது காட்டுப் பக்கம் காடை பிடிக்கப் போகும் அம்மாசி பூவரசு மரத்தை ஏக்கத்தோடு பார்த்து வளர்ந்தான்.

தைலம்மாவுக்கு பூவரச மரத்தடியில் நெருப்பில் வாட்டிய காடையையும், மாட்டுச்சாண வரட்டியில் சுட்ட காடை, குருவி முட்டைகளையும் கொடுத்து அவள் கொண்டு வரும் ஓலை கொழுக்கட்டையையும், கருப்பட்டி கலந்த ஈசலையும் வாங்கிச் சாப்பிட்டு யானை வழித் தடங்களில் வனத்தைச் சுத்தி வந்த போது அம்மாசிக்கு வயது பதிமூன்று. இப்போது வயது அறுபதைத் தாண்டிவிட்டது. நரை விழுந்து பால்யத்து வனப்பெல்லாம் இழந்து எங்கோ ஒரு காட்டுக்குள் ஐம்பத்தைந்து வயது கிழவியாக களை பிடுங்கிக் கொண்டோ, மாடுகளுக்கு தீவனம் அறுத்துக் கொண்டோ இருக்க வேண்டும் தைலம்மாள் இப்போது. நினைக்கவே காந்தல் அலையோடி நெஞ்சு எரிந்தது அம்மாசிக்கு. 

நாச்சிவலசைச் சுத்தி சிலுசிலுத்து பாய்ந்து கொண்டிருந்த ஓடைகள் தைலம்மாவைப் போல தடம் மறைந்து போய்விட்டன. தீத்திப் பள்ளம், பீட் பள்ளம், ஸ்பிக் பள்ளம் என தடம் மறைந்து போன ஓடைகளால் பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருந்த நொய்யலும் சீக்குப் பிடித்து  நூலாக மெலிந்து போய்விட்டது.

 பனங்காடுகளெல்லாம் அழிந்து பனங்காடைகள் திசை தெரியாமல் மறைந்துவிட்டன. நூத்துக்கணக்கான பறவைகளையும், மரங்களையும் தெரியாத ஒரு தலைமுறை உருவாகிவிட்டது. பால்ய நாட்களின் நினைவுக் குகையைத் தவிர எல்லாமும் அந்நியமாகிவிட்டது அம்மாசிக்கு.

தைலம்மாவோடு அலைந்து திரிந்த மலைக் காடுகளை ஒட்டிய கிராமங்களில் யானைகளின் வழித் தடங்களை அழித்து சிமெண்டு வீடுகள் முளைத்துவிட்டன. சீதை, தைலம், பைன் மற்றும் வேலிக்காத்தான் போன்ற மரங்களின் விதைப் பரவலால் நாட்டு மரங்கள் அழிந்துவிட்டன. அழகுக்காக நடப்பட்ட கேமிரா, ஸ்காட்ச் ப்ரூம், ஈப்படோரியம், பார்த்தீனியம் போன்ற வெள்ளையர்களால் நடப்பட்ட புதர்ச் செடிகள் புல்வெளிகள் மீது படும் சூரிய ஒளியை மறைத்ததால் புல்வெளிகள் அழிந்து யானைகளின் உணவு ஆதாரம் அழிந்துவிட்டது. யானைகள் காட்டிலிருந்து அருகில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து கரும்பு தோட்டங்களையும், வாழை தோப்புகளையும் அழிக்கத் தொடங்கிவிட்டன.

அம்மாசியின் கைவாகு பேசி நின்ற  மஞ்சக் கொல்லையிலும், கரும்புக் காட்டிலும் யானைகள் புகுந்து அழிச்சாட்டியம் பண்ணின. களத்து மேட்டில் கொட்டாய் அமைத்து இரவெல்லாம் காவல் காத்ததில் ஒடம்பு நோவு கண்டுவிட்டது அம்மாசிக்கு.

மலைக் கிராமங்களில் வெடிச்சத்தம் அடிக்கடி கேட்க ஆரம்பித்துவிட்டது. காட்டுவாசிகளின் பறை ஓசைக்கு பழகி விலகிப் போயிருந்த யானைகள் வெடி சத்தத்தில் நரம்புகள் அறுபட சிதறுண்டன.

நொய்யல் ஆறாக சாடிவயல் பகுதியில் ஒன்றுதிரண்ட ஓடைகளின் மறைவு நாளில் கொம்பன் யானைகளும் மறைந்து போயின. கொம்பன்கள் நடந்த தடத்தில் வௌவால் எச்ச வாடை படர்ந்து புராதன நினைவை சுமந்து நின்றன. தாய் யானை தோண்டிய நீருற்றுகள் மணல் மூடி தூர்ந்துவிட்டன. வெடிச் சத்த அதிர்வில் பெண் யானைகளின் பாலுணர்வு சுரப்பிகளும் தூர்ந்துவிட்டது. ஆண் துணை சேராமல் வெக்கை மூச்சோடு பெண் யானைகள் மறைந்த திசையெங்கும் வௌவால் எச்ச வாடை காலத்தின் முகத்தில் புழுதியை அறைந்து நின்றது.

மிளகாய் கொல்லையில் நீர் பாய்ச்சி விட்டு திரும்பும் போதோ, கரும்பு காட்டில் அறுப்பு முடித்து தோகை நரம்புகள் படிந்த நெஞ்சோடு திரும்பும் போதோ சிட்டுவைப் பார்ப்பான் அம்மாசி. தைலம்மா அசலூரில் வாக்கப்பட்டு தடம் மறைந்து வாழ்ந்து வந்தால், சிட்டுவோ உள்ளூர் சம்சாரிக்கு வாக்கப்பட்டு தடம் தேய்ந்து கொண்டிருந்தாள்.

பனி காலத்தில் காடெல்லாம் பூத்து சிரிக்கும் காட்டு மல்லியாக கதை பேசித்திரிந்த சிட்டுவும் மாறித்தான் போயிருந்தாள். ஒற்றை வார்த்தை பேசுவதற்குள் நெஞ்சுக் கூட்டில் முள் தைத்தவளாக சிதறுண்டு நகர்ந்தாள்.

முதிர்ந்த கிழவியான பிறகும் இலுப்பை மர அணங்கு பயமும், இச்சி வனத்தில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வௌவால்களின் நினைவு பயமும் அம்மாசியை விட்டு பத்தடி விலகி நின்றே பேச வைத்தது சிட்டுவை. அம்மாசியோடு ஒட்டிக் கொண்டு தொடர்ந்தது அவனது குருவி முட்டை திருட்டின் வெப்ப சலனம்.

“நான் பாத்தும் காலமாகிப் போச்சு. கடைசியா பாத்தப்ப கண்ணை சுத்தி கருப்பு வளையம் போட்டு வத்திப் போய் இருந்தா”, தைலம்மாவைப் பற்றி சிட்டு சொன்னதைக் கேட்டு திராணியற்று எச்சிலை முழுங்கி நெஞ்சாறிக் கொண்டான் அம்மாசி.

சாயமும், கழிவும் கலந்து நொய்யல் ஆத்தை முடமாக்கியது போல் பால்ய உறவுகளின் விரிசல் அம்மாசியை முடமாக்கிவிட்டது. பூங்கோதையைப் பற்றி கேட்க நினைத்து கேட்காமலேயே இருந்துவிடுவான். தூரத்தில் எறவு வாங்கி நின்று கொண்டிருந்த வெள்ளாட்டின் ஈன முனங்கல் போலாகிவிட்டது அம்மாசியின் குரல்.

இனி வரும் தலைமுறைகளுக்குத் தெரியாத அலையோடி நின்ற நினைவுகளோடு ஆளுக்கொரு திசையில் சுமக்க முடியாத ஞாபக அடுக்குகளோடு நடந்து மறைந்தார்கள் சிட்டும், அம்மாசியும். அவர்களின் வெக்கையோடிய மூச்சை வாங்கிக் கொண்டு நூலாக நொண்டியபடி ஓடியது நொய்யல் ஆறு.

*********