லாவண்யா சுந்தர்ராஜன்

தகவல் தொழிற்நுட்பத்துறையில் பணிபுரிவது வரமா, சாபமா என்பது எனது நீண்டநாள் கேள்வி. நான் பள்ளிப்பருவத்தில் பலவிதமான பரிசோதனைகளுக்கு எலியாகியிருக்கிறேன். அப்படிப்பட்ட பரிசோதனைகளில் ஒன்று எனது ஊழ்வினையால் நிகழ்ந்ததென்று சொல்ல வேண்டும். பதினொன்றாம் வகுப்பில் கணிதப் பிரிவு, அறிவியல் பிரிவு, வணிகவியல் பிரிவு என்று எந்த துறையில் மேற்கொண்டு படிக்க வேண்டுமோ அதனைச் சார்ந்து இதில் ஏதேனும் ஒரு பிரிவை விருப்பத் தேர்வு செய்து கொள்ளலாம். மருத்துவம், பொறியியல் இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வகை செய்யும் உயிரியல் என்ற பாடம் நான் பதினொன்றாம் வகுப்பு சென்ற போது கணினி அறிவியல் என்று மாற்றப்பட்டு கணித பிரிவு பொறியாளர்கள் பக்க சார்வானது. பதினொன்றாம் வகுப்பில் கண்ணி அறிவியல் பயிற்றுவிக்க வந்த இளம் ஆசிரியை அப்போது தான் கல்லூரியை முடிந்து விட்டு வந்திருந்தார். பிற ஆசிரியர்கள் போலன்றி எங்களிடம் மிகவும் நட்பு பாராட்டினார். அதன் பொருட்டோ கணினி அறிவியலின் கணினி மொழிகள் மற்றும் அவற்றில் கோட்பாடுகளை எழுதிப் பெற்ற மாய போதை பொருட்டோ எனக்குத் தகவல் தொழிற்நுட்பத் துறை அதீத ஈடுபாட்டைக் கொடுத்தது. அதன் பொருட்டே உயர் கல்வியைப் பயின்று இந்தத்துறையுள் நுழைந்தேன். கடந்த பதினாறாண்டுகளாக என் வேலை எனக்கு எந்த நேரமும் சலிப்பே ஏற்படுத்தியதில்லை. தினமும் அதில் கிடைக்கும் சவால்கள் என் வேலையை மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன, அப்படியென்றால் இது வரம் தானே இல்லை அதை வரமென்று மட்டும் அவ்வளவு எளிதாக வரையறுத்து விட முடியாது. இந்த துறையுள் நடக்கும் அரசியல்கள், வேலையைச் சரியாகச் செய்கின்றோமா என்று நிமிடத்துத்துக்கொரு முறை நடக்கும் கண்காணிப்புகள், கொடுக்கும் சம்பளத்துக்கு 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் உங்களைப் பணி நிமித்தம் தொந்தரவு செய்வோம் என்று நினைக்க்/மேலாளர்களின் அத்துமீறல்கள், அந்த அத்துமீறல்களே இல்லை அவர்களின் உரிமை என்பது போல நடந்து கொள்ளும் மெத்தனங்கள், மேலாளர்களை மனம் கவர உடன் பணிபுரிபவர்களுக்குக் குழி தோண்டிக் கொண்டேயிருக்கும் பிற பணியாளர்கள், கொடுத்த பணிகளைத் திறன் படி முடித்தாலும் இன்னும் இன்னும் என்று எதிர்பார்த்து கொண்டேயிருக்கும் சூலைவாய் அரக்கன் அந்தத் துறை. ஆடம்பரமான கட்டிடம், எந்த நேரம் பளீரென்று இருக்கும் பணியிடம், தேவைக்கு அதிகமாய் குளிரூட்டப்பட்ட அறைகள், யாருமே அமர்ந்து இளைப்பாறாமல் ஏங்கிக் கிடக்கும் உயர்தர இருக்கைகள், எந்த நேரமென்றாலும் இலவசமாய் கிடைக்கும் காப்பி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள், இன்னபிற உணவு வகைகள், இதைத் தவிர மாதம் ஒருமுறை நான்கு நட்சத்திர விடுதியில் மதிய உணவு, வருடம் ஒருமுறை குடும்பத்தோடு உல்லாச பயணங்கள் எல்லாமிருக்கும். ஆனாலும் இங்கே பணிபுரியும் எல்லோரும் தனித்தனியானவர்கள் மணல் போன்றவர்கள், உயிருள்ள இயந்திரங்கள். இந்தத் துறையில் பணியிலிருப்போர் வெளியிலிருந்து காண்போர் கண்களுக்குத் தெரிவது போல மின்னும் நட்சத்திரங்கள் அல்லர். தன்னைத் தானே எரித்துக் கொண்டு எப்போதும் விழத் தயாராக இருக்கும் எரிகற்கள். நான் உட்பட இந்தத் துறையில் வேலை செய்யும் எல்லோரும் ஏன் இப்படி உதிரிகளாக அலுவலகத்துக்குள் ஒட்டாது இருக்கிறோம் என்பது எனது நெடுநாள் கேள்வி. அதற்கான விடையை இந்த கட்டுரை மூலம் தேடியிருக்கிறேன்.

இந்தத் துறையில் பதினாறாண்டுகளும் மேல் பணிபுரிந்த அனுபவம், எஸ் செந்தில்குமார் தகவல் தொழிற்நுட்ப துறை சார்ந்து வெளியாகியுள்ள  நாவல்களை வாசித்து ஒரு கட்டுரை எழுத முடியுமா என்று கேட்டவுடன் மறுக்காமல் ஒத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைக்கு எழுதும் பொருட்டு  இத்துறை சார்ந்த பதிவுகளை உள்ளடக்கிய நாவல்களைத் தேடத் தொடங்கினேன். இரா முருகனின் மூன்று விரல், கனகதூரிகாவின் இருள் தின்னும் இரவுகள், ஆர். வெங்கடேஷின் இடைவேளை, விநாயக முருகனின் ராஜீவ் காந்தி சாலை, செல்லமுத்து குப்புசாமியின் இரவல் காதலி, சைலபதியின் பெயல்,  தமிழ் பிரபாவின் பேட்டை, ஆரூர் பாஸ்கரின் வனநாயகன்,, கார்த்திக் பாலசுப்ரமணியனின்  நட்சத்திரவாசிகள், சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம், ஹரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் என்று பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை இந்த ஆய்வுக்கென எடுத்துக் கொண்டேன். இதில் பெயல், பேட்டை இரவல் காதலி ஆகியவற்றில் கதை மாந்தர்கள் சிலர் தகவல் தொழிற்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள், ஆகவே அவர்களின் பணியிடம், நடவடிக்கை போன்ற சில பதிவுகள் இந்த நாவல்களில் இருப்பதால் அவற்றை இந்த துறைசார் நாவல் என்று வட்டத்தின் விளிம்புக்கு அருகே கொண்டு வந்திருக்கிறது.  ஆனால் அவற்றின் கதைக்களங்கள் வேறு. ராஜீவ் காந்தி சாலை தகவல் தொழிற்நுட்ப துறையில் நடக்கும் பைத்தியக்காரத்தனங்களை மட்டுமல்லாது அவை எப்படி சென்னை போன்ற மாநகருக்குள் நுழைந்தது என்ற தொடங்கி அவை நகரை அதன் எழிலை விளைநிலங்களை சூறையாடி மாற்றி கான்கிரீட்டால் செய்து கண்ணாடியால் மூடிய பளபளக்கும் கல்வனங்களாக்கியது என்ற வரலாறு பற்றி விரிவாகப் பேச முயற்சி செய்திருக்கிறது. அதில் தகவல் தொழிற்நுட்ப துறையின் சிலர்  வாழ்க்கையையும் பதிவு செய்கிறது. இதனை முழுமையாகத் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த நாவல் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. மூன்று விரல், வனநாயகன் இந்த நாவல்களில் கதைசொல்லியே இந்தத் துறையில் பணிபுரிபவன். அந்தத் துறைக்குள் நடக்கும் துரோகங்கள், சலிப்புகளை, கோமாளித்தனங்களை, வில்லங்கங்களைப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கின்றது. ஆனால் இந்த நாவல்களில் துறைசார் பதிவுகள் எவ்வளவு உண்டோ அதே அளவில் துறை சாராத பதிவுகளும் உண்டு. இடைவேளை பொருளாதார மந்தநிலையின் போது பணி நீக்கம் செய்யப்பட்ட மூவரின் வலி மிகும் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. இந்த நாவலில் அடிப்படையான அம்சம் பகட்டான வேலையிலிருந்த மூவர் திடீரென ஒருநாள் வேலை இழந்த பின்னர் அவர்களுக்கு நடக்கும் உளவியல் சிக்கல்களை பதிவு செய்கிறது. ஆனால் நாவல் மொத்தமும் துறைசார் பதிவுகளை விடப் பொருளாதார தேக்கநிலை எந்தெந்த துறையை எப்படி எல்லாம் பாதித்தது என்ற பதிவுகள் அதிகமிருக்கின்றன. உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவல் தகவல் மிக முக்கியமான உளவியல் சிக்கலை, இதுவரை யாரும் பேசிடாத சிக்கலையும், மிக உயர்ந்த வகுப்பு துறையாக கருதப்படும் இந்தத்துறையில் சாதி அரசியலுண்டு என்ற அதிர்ச்சியை பதிவு செய்கிறது. ஆனால் இந்த நாவலில் தகவல் தொழில்நுட்ப துறைசார் பதிவுகளோடு பல்வேறு சமூக அவலங்களைப் பேசுகிறது.  இந்தத்துறை நாவல் முழுவதும் தகவல் தொழிற்நுட்ப துறைசார் பதிவுகளும் அதன் கதைமாந்தர்களின் வாழ்க்கையும் அதிக பாசாங்கில்லாமல் பதிவு செய்வது இருள் தின்னும் இரவுகள், நட்சத்திரவாசிகள் இந்த இரண்டு நாவல்களில் மட்டுமே. இருப்பினும் பிற நாவல்களில் வரும் இத்துறை சார் பதிவுகளை ஆங்காங்கே சேர்த்துக் கொண்டால் போதுமானது என்று முடிவுக்கு வந்தேன்.

இரா முருகன் எழுதிய மூன்று விரல்கள் மென்பொருள் துறையில் வெளியான முதல் நாவல். வெளியான ஆண்டு 2005. மற்ற எல்லாமே இதன் பிறகு எழுதப்பட்டவை என்று தான் சொல்ல வேண்டும். அயல் நாட்டில் சென்று அங்கே உணவு முறைகள், உறக்க முறைகள் போன்ற ஒவ்வாமைகளோடு, பயன்பாட்டாளர்கள் நாயைப் பிடிக்க, நரியைப் பிடிக்க மென்பொருள் எழுதச் சொன்னாலும், ஆயுள் காப்பீடு மென்பொருள் எழுதச் சொன்னாலும் செய்ய வேண்டிய கட்டாயம் மென்பொருள் துறைசார் வல்லுநர்களுக்கு எப்போதும் உண்டு. பயனாளர்கள் கடவுள் அவர்கள் சொல்வது வேதவாக்கு என்பது இந்த துறையின் அடிப்படை விதி. அவர்கள் செய்யச் சொன்னதை வேறு வழியின்றி செய்வதைச் சலிப்போடு இந்த நாவல் பதிவு செய்கிறது. இந்த நாவல் கையாண்டிருக்கும் தொழிற்நுட்பத்துறை சார் மற்றொரு மிக முக்கியமான, அதிகம் பேசப்பட வேண்டிய சிக்கல் சிறு நிறுவனங்களை தங்களது வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காகவோ அல்லது அந்த சிறு நிறுவனத்தின் வியாபாரத்தைக் கெடுப்பதற்காகவோ  பெரிய நிறுவனங்கள் விலைக்கு வாங்கிக் கொள்ளும் போது உண்டாகும் குளறுபடிகள், பிரச்சனைகளைப் பதிவு செய்கிறது. ஆனால் அந்த சிக்கலின் அடி ஆழம்வரை செல்லாமல் கதை சொல்லி தனது நிறுவனத்தை மாற்றுவதற்கான காரணி போல மிகக்குறைவாகவே தொட்டிருக்கிறது. வலுவான இந்த கதைக்களத்திலேயே மிகநுட்பமான நாவலை எழுதிவிட முடியும். புதிய நிறுவனத்தின் இணைப்பின் மூலம் ஏற்கனவே நிறுவனத்தில் இருப்பவர்களுக்கு வேலை தகுதி, சம்பளம் போன்றவை குறைக்கப்படுவது, சிறு நிறுவனத்தின் பணியாளர்கள் அலட்சியமாகக் கையாளப்படுவது  போன்ற அரசியலில் சில கூறுகளை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது. நிறுவனத்திற்காக தன்னுடைய எல்லா சக்தியையும் செலவளித்து அதனை நிலைநிறுத்துபவன், தானே நிறுவனத்தைத் தொடங்கினால் என்ன என்ற எண்ணத்துக்குள் எப்போதுமே போகாத ஒரு மனநிலையை பெரும்பாலான தென் மாநிலத்தவர்கள் கொண்டிருப்பதையும் இந்த நாவல் சுட்டத்தவறவில்லை. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது one hundred years of solitude நாவி்ல் banana company என்று கிண்டல் தொனியில் எழுதிய அதே உத்தியை நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான மென்பொருள் என்று இரா.முருகன் எழுதியிருப்பதும் அதன் விளக்கங்களும் பல இடங்களில் முகஞ்சுளிக்க வைக்கிறது. கதைசொல்லிக்கு நிறுவன முதலாளி அல்லது மேலாளர் பொருட்டு உண்டான கடும் மன உளைச்சலிருக்கிறது என்பது பல இடங்களில் பதிவாகிறது ஆனால் அந்த காரணத்துக்காகக் கொச்சையான வாக்கியங்களைக் கொண்டு அவர்களைத் திட்டுவது போலவும், அவர்களின் நடவடிக்கைகளைப் பாலுணர்வுடன் கூடிய வசைச் சொற்களால் சொல்லி மகிழ்வதும் நாவலாசிரியரின் மனச்சிக்கலையே காட்டுகிறது. இந்த துறையில் மட்டுமே நடக்கச் சாத்தியமான பலவிஷயங்கள் பேசி வாசகர்கள் இந்த துறை மீது கொண்டுள்ள மாயை போன்றதொரு உணர்வை மாற்றவல்ல பல சாத்தியங்களை உள்ளடக்கிய நாவலுக்கு வலு சேர்க்க தாய்லாந்து மசாஜ் அழகிகளின் உதவியை நாடியிருப்பது வருந்தத்தக்கது. மேலும் இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் இதன் மொழி பல இடங்களில் மிக அசூசையாக உணர வைக்கிறது. மென்பொருள் வடிவமைப்பில் அதன் செயல்பாடுகள் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்வது மிக முக்கியமான கட்டம், அந்த சோதனைகளில் போது கண்டறியப்படும் பிழைகளுக்கு ஆங்கிலத்தில் finding bugs என்பார்கள். அதனைப் பூச்சி பிடித்து என்று எழுதியிருக்கிறார் இரா.முருகன். “Bugs” என்பது மென்பொருள் துறையில் எந்த பொருளோடு வழங்கப்படுகிறது என்ற விஷயம் அறியாத வாசகர்களுக்குப் பூச்சி பிடித்தல் என்று நேரடியாக எழுதியிருப்பது நகைப்புக்குரியது. இரா.முருகன் நகைச்சுவை என்று நினைத்து எழுதியிருக்கும் மொழி இவ்வாறாக விபரீதமாக இருப்பது கொஞ்சம் ஆதங்கத்துக்குரியது.

இருள் தின்னும் இரவுகள் கனகதூரிகா எழுதிய நாவல், இவர் இதனை எழுதிய வருடம் 2010 திரிசக்தி வெளியீடாக வந்த இந்த நாவலில் கால்சென்டர்கள் பற்றிய முதல் நாவல் என்று அதன் அட்டையிலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தகவல் தொழிற்நுட்பத்துறை போன்றதொரு துறையே அழைப்பு/சேவை மையங்கள். உதாரணத்துக்கு நமக்கு அடிக்கடி வரும் உங்களுக்கு இந்தக் கடன் வேண்டுமா அந்தக் கடன் வேண்டுமா என்று வரும் தொலைப்பேசி உரையாடல்களுக்குப் பின்னர் இயக்கும் ஒரு தொழில்நுட்ப துறை இது. இவர்கள் அந்த ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைக் கேட்டு அதற்குத் தீர்வுகளை வழங்குபவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு சில பொருட்களை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் போலிருப்பார்கள். இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நாடுகள் சார்ந்தது என்றால் அதன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்க இந்த சேவை மையங்கள் இரவு நேரத்தில் இயங்கும். இருள் தின்னும் இரவுகள் இந்த தலைப்பே கதையின் மையக்கருத்தை சொல்லிவிடும். இந்த நாவலில் கனகதூரிகா தனது முன்னுரையிலேயே பொருந்தா வேலை என்று ஒன்றை குறிப்பிட வேண்டுமென்றால் கால் சென்டர் வேலை என்று குறிப்பிட்டிருப்பார். குடும்பச் சூழல் பொருட்டு தவிர்க்க முடியாது இந்த பணியில் இருக்கும் கதைசொல்லியின் கதை சிறந்தொரு வாசிப்பனுபவத்தை தருகிறது.

அதன் பிறகு வெளியான இடைவேளை ஆர் வெங்கடேஷ் எழுதியது வெளியான ஆண்டு 2013 ஜூலை. முதல் அத்தியாயத்தில் ஒரு ஓவியத்தை கவித்துவமாக விளக்கியபடி ஆரம்பிக்கும் கதை சடரென மூவர் வேலையும் பறிக்கப்பட்டதும் அவர்கள் மேற்கொண்டு வாழ்வை எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்ற வகையில் விரிகிறது நாவல். தகவல் தொழிற்நுட்பத் துறையை 2007 ஆண்டு தொடங்கிய பொருளாதார மந்த நிலைக்கு முன்னால் அதற்குப் பின்னால் என்று இரண்டு காலமாகப் பிரித்துக் கொண்டு பார்த்தால் துறைக்கு உள்ளேயே செயல்படுபவள் என்று சலுகையை கையில் எடுத்துக் கொண்டு என்னால் சில விஷயங்களைக் கட்டாயம் பகிரமுடியும். 1992 – 1993 ஆண்டு காலகட்டத்தில் என்னுடைய கல்லூரி தோழியின் உறவினர், இந்தியன் ரயில்வேயின் முக்கிய அதிகாரியாக இருந்தவர், “நாங்கள் எங்கள் மென்பொருள்களில் வரும் பிழைகளைச் சரி செய்ய அமெரிக்காவிலிருந்து வரவழைத்திருக்கும் இந்தியப் பொறியியல் வல்லுநருக்கு மாதம் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் அளிக்கிறோம்” என்று அதிர்ச்சி கொடுத்தார். தகவல் தொழிற்நுட்பத் துறை தனது சிறு கால்களை மெல்ல இந்தியாவில் பதிக்கத் தொடங்கியது அந்த காலத்தில் தான். கிட்டதட்ட 28 வருடங்களுக்கு முன்னர் ஒரு லட்சமென்றால் அதன் மதிப்பு எத்தகையது என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். அதன் பின்னர் படிப்படியாக இந்திய நிறுவனங்கள் தங்களது மனிதவளங்களை கணக்குக் காட்டி அவர்களுக்கான மென்பொருள்களை இங்கிருந்து தயாரித்துக் கொடுப்பது அல்லது அங்கே சென்று செய்து தருவது என்று செய்யத் தொடங்கினர். இந்த நிறுவனங்களில் ஒவ்வொரு மனிதனும் நிறுவனத்துக்கு வருமானம் ஈட்டித்தரும் சொத்து என்ற கட்டமைப்பு இருந்தது. ஆகவே அவர்கள் கிட்டத்தட்ட தெய்வீக அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். இந்த நிறுவனங்கள் அசுரத்தனமாக வளர்ந்தன. தனது ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தின் ஐந்து மடங்கை அவர்கள் பயனாளர்களிடமிருந்து வசூலித்தனர். பெரும்பாலான மென்பொருள்கள் அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கென தயார் செய்யப்பட்டன. இது போன்ற காலகட்டத்தில் 2007 பொருளாதார மந்தநிலை வந்த போது அமெரிக்க பொருளாதாரம் மட்டும் பாதிக்கப்படவில்லை அதைச் சார்ந்து இருந்த உலகநாடுகள் எல்லாமே நேரடியாகவோ மறைமுகமாகவோ பொருளாதார வீழ்ச்சியை அடைந்தனர். இடைவேளை நாவலில் “அந்த காலத்தில் ரஷ்யாவில் பனி பொழிந்தால் இந்தியாவில் சளி பிடிக்கும் என்பார்கள். தற்போது அமெரிக்கா” என்றொரு வரி வரும். அப்படி அமெரிக்கப் பொருளாதாரம் பதித்த துறைகள் பல. அதில் முக்கியமாகவும் நேரடியாகவும் பாதிக்கப்பட்டது தகவல்தொழிற்நுட்பத் துறையைச் சார்ந்தவர்கள் தான். பணி நீக்கம், சம்பள குறைப்பு இன்னும் பல்வேறு விதமான செலவினங்கள் குறைக்கப்பட்டன. பல இளைஞர்களின் வாழ்க்கையை அது பறித்தது என்றே சொல்ல வேண்டும். மறுபடி பொருளாதார நிலை ஓரளவுக்குச் சீரானதும் முன்னர் கொடுக்கப்பட்டது போன்ற பகட்டான சம்பளம் பொறியாளர்களுக்கு வழங்கபடவில்லை. ஓரளவு நிதானமான போக்கு வந்தது. இடைவேளை நாவலில் பல இடங்களில் வேலையிழந்த இளைஞர்களில் மனவோட்டங்களை வேலை தந்த பாதுகாப்பைப் பின்னர் அதுவே அவர்களை நடுத்தெருவில் இழுத்து விட்ட அவலத்தைப் பதிவு செய்கிறது. முற்றிலும் தகவல் தொழிற்நுட்ப துறை சார் பதிவுகள் இல்லாவிடினும் அந்த துறையில் பணி புரிபவர்களின் உளவியலை சிக்கல்களை மிக நுட்பமாகப் பதிவு செய்வதால் தகவல் தொழிற்நுட்ப துறைசார் நாவல்களில் இது மிக முக்கியமான ஒன்று.   

இரவல் காதலி செல்லமுத்து குப்புசாமி எழுதியது 2013 டிசம்பரில் வெளியாகியிருக்கிறது. திருமணத்துக்கு வெளியான நட்பு என்பதற்கும் தகவல் தொழில்நுட்பத்துறைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இதில் கதை சொல்லி தகவல் தொழில்நுட்ப துறையில் இயங்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணி புரிகிறார் என்பதைத் தவிர வேறு எந்த முக்கிய பதிவுகளும் இல்லை. தகவல் தொழிற்நுட்பத்துறையில்  நடைபெறும் நேர்முகத் தேர்வில் அலட்சியமான போக்கினை சார்ந்த பதிவுகளும், பிடிக்காத அல்லது பணி சார்ந்து அதிக அழுத்தம் தரும் ஆண் மேலாளர் மீது சக பெண் பணியாளர் தரும் தகாத புகார் போன்ற வெகு சில பதிவுகள் மட்டுமே உள்ளன. பணியிடத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகும் தகவல் தொழில்நுட்ப துறையிலுள் நடக்கும் நுண்ணரசியல் சார்ந்த இன்னும் பல்வேறு விஷயங்கள் உண்டு அதைச் சார்ந்த பதிவுகள் எதுவும் இந்த நாவலில் இல்லை.

விநாயக முருகன் எழுதிய ராஜீவ் காந்தி சாலை வெளியான ஆண்டு 2013 டிசம்பர். முன்னரே பதிவு செய்து போல ராஜீவ் காந்தி சாலை வெறும் தொழிற்நுட்ப துறைசார் நாவலல்ல. அது ஒரு வரலாறு. அந்த வரலாற்றில் சாக்கடை போல கலந்துவிட்டது சபிக்கப்பட்ட தகவல்துறை நுட்பத்தின் பைத்தியக்கார இளைஞர்கள், இளம்பெண்களின் வாழ்க்கை முறை. அந்த சாக்கடையில் ஊறிப் புரண்ட முடை நாற்றம் பிடித்த முதலாளிகள், அவர்களில் இல்லப்பெண்கள் இப்படி விரியும் கதையில் துறைசார் பதிவுகளை தேடிப்பிடித்து இந்தக் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன். இரவல் காதலி மற்றும் ராஜீவ்காந்தி சாலை இரண்டுமே ஒரே பதிப்பகத்தில் வெளியான நாவல்கள். இரண்டிலும் வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே படிக்க முடிந்த பல விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. என்னை மிகவும் சங்கடபட வைத்த ஒரு விஷயம் தகவல் தொழிற்நுட்பத்துறையில் மென்பொருள்கள் உருவாக்கம் செய்யும் ஆணையை பெற்றுத் தர பெண்களை அந்த ஆணை வழங்கும் அதிகாரிகளோடு சென்று உல்லாசமாக இருக்க அனுப்பி வைப்பார்கள் என்ற பதிவு வருகிறது. இரவல் காதலியில் இப்பெண்கள் பற்றி எந்த அடையாளமும் சொல்லாமல் மேலோட்டமாகவும், ராஜீவ் காந்தி சாலையில் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களையே அப்படிப்பட்ட காரியங்களுக்கு அனுப்புவார்கள் என்ற பதிவும் வருகிறது. அப்படி அனுப்பப்படும் பெண்கள் நிறுவனத்தில் பணியழுத்தம் மிகுந்த குழுவில் இருந்தாலும், வேலை எதுவும் செய்யாவிடினும் எந்த கேள்வியும் கேட்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இன்னுமின்னும் பணியில் உயரம் அடைய வாய்ப்புகள் நிறையவரும் என்ற பதிவுகள் உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதும், வருத்தமளிப்பதும் ஆகும். இந்தத் துறையில் பதினாறாண்டுக் காலம்  பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தவள் என்ற சலுகையோடு பெண்கள் மிகவும் கண்ணியமாக நடத்தப்படும் துறைகளில் முதன்மையானது தகவல் தொழிற்நுட்பத்துறை என்பதை உறுதியாகச் சொல்லமுடியும். மேல் சொன்ன விஷயம்  மட்டுமல்லாமல் இன்னும் பல காம சித்தரிப்புகளும், ஒரு மொழி பேசும் கதை மாந்தர்களைப் பற்றிய வன்மமான சித்தரிப்புகளும் நாவலாசிரியரின் மன வக்கிரத்தை மட்டுமே காட்டுகிறது. மேலும் இந்த கட்டுரைக்குத் தேவையான விஷயங்கள் பிற நாவல்களிலும் இருப்பதால் இந்த நாவலைப் பொருட்படுத்தி மதிக்க தேவையற்றது என்றே எனக்கு தோன்றுகிறது.

வனநாயகன் வெளியான வருடம் 2017 ஜனவரி. எழுதியவர்  அரூர் பாஸ்கர். இதில் வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கப் போய், பாதியில் வேலையிழந்து தவிக்கும் கதைக்களம். இதிலும் மூன்று விரல் போல வெளிநாடுகளில் அவதியுறும் தொழிற்நுட்பத்துறையாளர்கள் சார்ந்த பதிவு வருகிறது. தொழிற்நுட்பதுறையில் மிக முக்கியமான பிரச்சனை மொழி சார்ந்தது. இதன் பயனாளர்கள் பெரும்பாலும் அயல்தேசத்தவர்களே அதில் அவர்களில் ஆங்கில மொழியைக் கூர்ந்து நோக்கி அறிந்து கொள்வதற்கே தனிப்பயிற்சி வேண்டும். இந்த நாவலில் முதல் அத்தியாயத்திலேயே மலாய் மொழியில் பேசும் ஒருவனுடன் மன்றாட வேண்டியது போன்ற ஒரு காட்சி வரும். வேற்று மொழியாளரிடம் ஆங்கிலத்தில் பேசிய குற்றம் சாற்றிக் கதை சொல்லிப் பணி நீக்கம் செய்யப்படுவார். அதன் பின்னர் கதைசொல்லியின் வேலை பறிக்கப்பட்டதன் காரணத்தைத் துப்பறிவது போலவே மொத்த நாவலும் இயங்குகிறது.  மேலும் வன நாயகன் நாவலில் பல இடங்களில் துறை சார்ந்த வார்த்தைகளும், மென்பொருள் உருவாக்கக் கோட்பாடுகளும், திட்ட வரையறைகளும் அதன் செயல்பாடுகளும் அப்படியே விளக்கப்பட்டிருக்கின்றது. தகவல் தொழிற்நுட்பத்துறை பற்றிய அறியாத வாசகர்களுக்கு இந்த விளக்கம், வர்ணனைகள் எவ்விதம் புரியுமென்றும் அல்லது அது அந்த புனைவிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்குமோ என்பதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது.

2017 டிசம்பர் வெளியான பெயல் சென்னை வெள்ளத்தைப் பற்றிய கதைக்களம், இதில் சென்னை வெள்ளத்தில் பலியாகும் ஓரிரு நபர்கள் பேய் போல உலவிக் கதை மாந்தர்கள் சிலருக்கு நல்லதையும் சிலருக்குக் கெடுதலையும் செய்வது போன்ற தன்மையில் மாய எதார்த்த கதை போல இதனை வடிவமைக்க முயன்றிருக்கிறார் சைலபதி. ஆனால் அது கை கூடியிருக்கிறதோ இல்லையோ கதைசொல்லியின் காதலி பணிபுரியும் நிறுவனமுள்ள அந்த கட்டிடத்தில் வார இறுதியில் நிலவும் அமானுஷ்ய அமைதி, வாரநாட்களின் பரபரப்பு இவை யாவும் மிகத் தெளிவாகப் பதிவாக அவை உதவியிருக்கின்றன. 2017 டிசம்பரில்  வெளியான தமிழ் பிரபாவின் நாவல் பேட்டை. வடசென்னை மக்களை ரத்தமும் சதையுமாகக் காட்டும் இந்த நாவலில் தகவல் தொழிற்நுட்ப சார்ந்த பதிவுகள் அதன் உள்ளரசியல்கள் எதுவுமே இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நாவல் சென்னையின் சிந்தாதரிபேட்டையின் வரலாற்றையும் அங்கே தற்சமயம் வாழும் சிலரைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் பதிவிடுகிறது. கதை மாந்தரில் ஒருவர், கிட்டதட்ட நாவலை எழுதுபவர் பணிபுரிவது தகவல் தொழிற்நுட்பத் துறை என்பது போன்ற பதிவுகள் உள்ளன. அலுவல்களைத் துரிதமாக முடித்தால் அமெரிக்க, ஐரோப்பா நிறுவனங்களில் பணி புரிபவர்கள் மனம் திறந்து பாராட்டுவதையும், அதுவே ஆசியக் கண்டத்தில் வாழ்பவர்கள் வேலை செய்வது பணியாளர்களின் கடமை என்ற மனநிலையைப் பதிவு செய்கிறது இந்த நாவல்.  ஒரு காசுக்குக் கூட பிரயோஜனப்படாத வார்த்தைகள் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் சகபயணி என்றவிதத்தில் அந்த பாராட்டுக்கள் பல நன்மைகளைப் பயக்கும் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். பணிச்சுமை பெரியதாகத் தெரியாமல் இருக்க இது போன்ற பாராட்டுகள் பெரிதும் உதவும். அதே சமயம் பேட்டை நாவலில் நாவலாசிரியர் பதிவு செய்திருப்பது போலவே அந்த பாராட்டு வார்த்தைகள் தான் சம்பள, பணி உயர்வுகளுக்கு நமது தரப்பு ஆதாரங்களாக இருக்கும்.  

கார்த்திக் பாலசுப்ரமணியன் நட்சத்திரவாசிகள் 2019 ஜனவரி வெளியீடு அசல் தகவல் தொழிற்நுட்பத்துறை சார்ந்த பல பிரச்சனைகளை பதிவு செய்கிறது. ராஜீவ்காந்தி சாலை நாவலில் இரண்டு மூன்று இடங்களில் தகவல் தொழிற்நுட்ப துறை நிறுவனங்கள் இயங்கும் கட்டங்களில் வாசலிலேயே தனியார் வங்கி ஊழியர்கள் வரிசையாக கடைவிரித்திருப்பது போலப் பதிவு வரும். இவர்களில் வேலை தகவல் தொழிற்நுட்பத்தில் பணிபுரிவர் அனைவரையும் கடனாளிகள் ஆக்குவதே, வீடு, சீருந்து, பிள்ளைகளுக்கு மிக உயர்தரமான கல்வி என்று மிகவும் ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்குவது இந்த வங்கிக்காரர்களே, தொழிற்நுட்பத்துறையுள் இயக்கும் அதி நுட்பமான அரசியலையும், பணியழுத்ததையும் தாண்டி இவர்கள் பணிக்கு வருவது மாந்தர தவணைகளைக் கட்டவே என்பதை விரிவாகப் பதிவு செய்கிறது. அதைத் தவிரவும் பணியை மிகவும் நேசிக்கும் ஜீவன்களைப் பண சிக்கன நடவடிக்கை என்று சொல்லி ஒரே நாளில் அடையாளங்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு ஆகாயத்திலிருந்து பூமிக்கு வீசியெறியும் அவலத்தைப் பதிவு செய்யும் களம். அந்த உலகத்தில் நடக்கும் பெரும்பாலான எல்லா பிரச்சனைகளையும் பேசியிருக்கிறது. நம்மை அந்த உலகத்தில் கொஞ்சம் வாழவைத்திருக்கிறது. 2019 ஆகஸ்டில் வெளியான சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் நாவலில் இந்த துறைசார் பதிவுகள் ஒருசில இருக்கின்றன. இந்த நாவலில் பேசுபொருள் மனவளம் குன்றிய ஒரு குழந்தையைப் பற்றியது என்றாலும், நாவல் இத்துறையில் இயங்குவர்களின் கட்டற்ற உணவு பழக்க வழக்கத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இரவு பகல் என்று ஓயாத வேலையழுத்தில் அளவுக்கு அதிகமான உணவு உட்கொள்ளும் பழக்கம் என்ன மாதிரியான பக்கவிளைவுகளைக் கொண்டு வருகிறது என்பதை இந்த நாவல் சொல்லியிருக்கிறது. அதீதமாக உணவுப்பழக்கமும், வீட்டு வெளியே உணவுண்ணும் பழக்கமும் இத்துறைசார் மக்களின் பண்பாடாக இருக்கிறது என்பதை மிக நுட்பமாகப் பதிவிடுகிறது இந்த நாவல்.  2021 ஜனவரியில் வெளிவந்த உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவல்கள் தகவல் தொழிற்நுட்பதுறையில் நாற்பதை நெருக்கும் மென்பொருள் பொறியாளரை இளவயது பொறியாளர்கள் எப்படி தனிமைபடுத்துக்கின்றனர் அப்படி தனிமைபட்டவன் எவ்வாறான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறான், குழுவோடு அவன் ஒட்டாமல் இருப்பது அவனுக்கு என்னென்ன பிரச்சனை கொண்டு அவன் வாழ்வு எவ்வாறு சிதைகிறது என்பதை மிக வித்தியாசமான வடிவில் சொல்கிறது. முற்றிலும் அறிவு சார்ந்து இயங்கும் இந்தத்துறையில் தலைமுறை இடைவேளை என்ற சிக்கல் இதுவரை கையாளாப்படாத களம்.  இந்த நாவலில் என்னை பாதித்த விஷயம் காமம் இவ்வளவு வெளிப்படையாக இத்துறையில் பேசப்படுவது போல பதிவாகியிருப்பதே.

இடைவேளை நாவலில் ஒரு வாசகம் வருகிறது “சட்டென துடைத்துத் தூர எரிந்துவிட்டது கார்ப்பரேட் உலகம்”  இதுவே தகவல் தொழிற்நுட்பத் துறையின் இயக்கமுறை. எப்போதும் யாரையும் காகிதம் போலக் கசக்கி வெளியே எரியும் ஆயத்தத்தோடே இந்த நிறுவனங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இங்கே தவிர்க்கவே முடியாதவர்கள் என்று எவருமே இல்லை. அதைச் சார்ந்த ஊழியர்களின் உளவியல் இயங்குகிறது. இது அனைவர்க்கும் தெரிந்திருக்கும் காரணத்தாலே அவர்கள் எல்லோருமே இயந்திரங்கள் போல எதிலும் அதிகம் ஈர்ப்பு கொள்ளாமல் கொடுத்த வேலை குறிப்பிட்ட வேலை முடிக்கும் உயிருள்ள அறிவுள்ள இயந்திரங்களாக மாற்றப்படுகின்றார்கள்.  தகவல் தொழிற்நுட்ப கனவு உலகம், கற்பனை கண்களுக்கு ஜொலிக்கும் நட்சத்திரம் போன்றது உள்ளே பணிபுரிபவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் உக்கிரம் என்னவென்று. அதில் முக்கிய சில பிரச்சனைகளான நேர்முகத் தேர்வு, மொழிசார் பிரச்சனைகள், இன அரசியல், பணியழுத்தம், நுண்ணரசியல் சார்ந்த விஷயங்கள், செலவின குறைப்பு, பணி நீக்கம், பணி நீக்கத்தின் பின்னர் நடந்தேறும் உளவியல் சிக்கல்கள் இன்னும் பலவற்றை இந்த ஒவ்வொரு நாவல்களும் எப்படிக் கையாண்டிருக்கின்றன என்று விரிவாக அலசுவது முக்கியமானது.

நேர்முகத் தேர்வு – தகவல் தொழிற்நுட்ப துறை தொள்ளாயிரங்களின் இறுதியிலும், இரண்டாயிரங்களில் தொடக்கத்திலும் பெருமளவில் இந்தியாவில் நுழைந்த சமயம் பல மாணவர்கள் கல்லூரியை முடிக்கும் முன்னரே கையில் வேலையோடு வெளிவந்தனர். என்ன படித்தாலும் இறுதியில் பணியமர்வது தகவல் தொழிற்நுட்பத் துறையில். இதனை நக்கலாக நட்சத்திரவாசிகள் மெக்கானிகல் படித்த இரண்டு கதாபாத்திரங்கள் தகவல் தொழிற்நுட்ப துறையில் பணிபுரிவது போல சித்தரித்துக் காட்டியிருக்கும். இப்படி வேலை கிடைப்பது வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆனந்தமானது ஆனால் இதற்கு இரண்டு கோர முகங்கள் உண்டு. முதலாவது கல்லூரி வளாகத்தில் அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதற்காக ஒரே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்த உடன் மீண்டும் தேர்வுக்கு அமரக் கூடாது என்பார்கள். அதில் முதலில் வரும் நிறுவனங்கள் எல்லாமே மிக நல்ல நிறுவனமாக இருக்க வேண்டிய கட்டாயமுமில்லை. அதே சமயம் வாய்ப்பினை விட்டுவிடவும் முடியாது. அப்படியே தேர்வு செய்யப்பட்டாலும் தேர்வு செய்த நிறுவனம் எல்லா மாணவர்களையும் பணியில் அமர்த்திக் கொள்ளாமல் போகும் வாய்ப்பும் உண்டு. ஆகவே பணியில் சேரும் வரை வேலை கிடைத்து விட்டது என்று ஆசுவாசம் கொள்ள முடியாது. ஒருவேளை அந்த நிறுவனங்கள் பணியில் அமர்த்தாமல் இருக்கச் சொல்லும் காரணங்கள் மிக அபத்தமாக இருக்கும். இதனை நம்பி பெருநகரங்களுக்கு வந்துவிட்ட ஏழை மாணவர்கள் பொருளாதார சூழல் காரணமாக வேறு வழியில்லாமல் கிடைத்த வேலையை செய்வார்கள். அந்த துயரத்தை அதிர்ச்சியைக் கொஞ்சமும் கூட்டிக் குறைக்காமல் இருள் தின்னும் இரவுகள் நாவலில் கனகதூரிகா பதிவு செய்து இருக்கிறார். இதன் இரண்டாவது கோர முகம் அப்படி கல்லூரிகளில் இவ்வளவு நபர்களை வேலைக்குச் சேர்க்க வேண்டுமென்று ஒரு இலக்கு வைத்துக் கொண்டு ஒரே நாளில் ஒவ்வொருவரும் நேர்முக தேர்வாளரும் இயந்திரத்தனமாக நாற்பது முதல் ஐம்பது நபர்களை நேர்முகம் செய்து தேர்வு செய்ய வேண்டும் என்று பணிக்கும். இந்த கொடுமையை இரவல் காதலி நாவல் பதிவு செய்திருக்கிறது. அதில் கதை சொல்லி ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தற்கு முதல் காரணம் அவள் அணிந்திருக்கும் உடையும், அவளது அழகும் என்பது கூடுதல் அதிர்ச்சி தகவல். நேர்முக தேர்வுகள் சார்ந்த மற்றொரு கோணம் பணி அனுபவம் கொண்டவர்களாக இருந்தாலும் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது தனது வேலையை ஏதோ ஒரு வேகத்தில் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்தவர்கள் எவ்வாறு பாடுபடுகின்றார்கள் என்று இடைவேளையும், வனநாயகனும், நட்சத்திரவாசிகளும் பதிவு செய்கிறது.

பணியிடம் சித்தரிப்புகள் –  தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் இயங்கும் கட்டிடங்கள் எல்லாமே பளபளக்கும் கண்ணாடி கட்டிடங்கள். அதனுள் எண்ணற்ற விலையுயர்ந்த வசீகரமான இருக்கைகள் இருப்பிடங்கள். விலையுயர் அலங்கார விளக்குகள். அதீத கலையலங்காரங்கள் கொண்ட வரவேற்பறைகள் என்று பார்க்க ஒரு நட்சத்திர விடுதி போலவே இருக்கும், ஆனால் இதன் பயன்பாடுகள் எல்லாமே குறைவாகவே இருக்கும். இந்த இருக்கைகளில் அமர்ந்து நேரம் செலவளிக்க உண்மையான பணியாளர்களுக்குப் பொழுதோ மனமோ வாய்ப்போ அமைவதில்லை. அவர்கள் இருக்கையெல்லாம் நான்குக்கு நான்கடியில் அமைக்கப்பட்ட சுழல்நாற்காலி மட்டுமே. பகலிலும் எரியும் பளீர் விளக்குகள், எந்த நேரமும் இயங்கும் காப்பி தயாரிக்கும் இயந்திரங்கள், எப்போதும் குளிரூட்டும் ஏசிகளின் இரைச்சல், மூச்சு முட்டச் செய்யும் வாசனையூட்டிகள், விதவிதமான உணவுப் பொருட்களைக் கடை விரிக்கும் உணவு அருந்துமிடங்கள் என்ற ஒரு மாய உலகம் இந்த நிறுவனங்கள். இதில் நகைப்புக்குரிய விஷயம் இந்த காப்பி தயாரிக்கும் இயந்திரம், குளர்பானங்கள் சேமிக்கும் குளிர்பதனூட்டிகள், ஏசி எல்லாமே வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கும். இரண்டு அல்லது மூன்று மாத வாடகை அதன் விலைக்கு இணையானதாக இருக்கும். இந்த கட்டிடங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு அசுர முகமுண்டு. வார இறுதியில் அதுவே அமைதி பூங்காவாக அல்லது அசந்து உறங்கும் குழந்தை போலக் காணப்படும் இந்த காட்சியைப் பெயல் மிக அழகாக பதிவு செய்து இருக்கிறது. இந்த நிறுவனங்களில் குளிரூட்டிகளை இயக்குவதில் கூட உள்ள அரசியலை  பதிவு செய்கிறது நட்சத்திரவாசிகள். வெளிநாட்டிலிருந்து வாடிக்கையாளர்களோ அல்லது அதே நிறுவனத்தின் மேலதிகாரிகளோ வரும் போது அவை பதினெட்டு டிகிரி செல்சியஸில் இயக்கப்படும் அப்போது வாசனையூட்டிகளும் அதிகப்படியாக இருக்கும் என்று சொல்லியிருப்பது மிக நுட்பமான பதிவு.

மொழி சார்ந்த பிரச்சனை – தகவல் தொழிற்நுட்ப துறை இந்த அளவுக்கு இந்தியாவிற்குள் நுழைந்த முக்கிய காரணம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த மென்பொருளை உருவாக்க அவர்கள் செலவளிக்கும் வெள்ளிகளில் ஐந்தில் ஒரு பங்கில் இந்தியாவில் செய்துவிட முடியும். அவ்வாறு செலவு செய்து தயார் செய்யும் பொருட்களை வாங்கும் பயனாளர்களும் பெரும்பாலும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்களே. ஆகவே அவர்களுக்கு என்ன தேவையென்று சொல்வதும், பின்னர் பயன்பாட்டில் என்ன பிரச்சனை என்று சொல்வதும் அயல்நாட்டவரே. அயல்நாட்டுப் பயனாளர்கள் அனைவரும் ஆங்கிலத்தை வேறு விதமாகப் பேசுவார்கள் அல்லது அவர்களில் உள்ளூர் புழங்கு மொழியை பொறுத்து அவர்களது ஆங்கிலம் வேறு விதமாகத் திரிந்திருக்கும். அவர்கள் அனைவருக்கும் இந்தியர்கள் பேசும் ஆங்கிலம் புரியும் ஆயினும் மதிக்க தகுந்ததாக இருக்காது. நட்சத்திரவாசிகள் நாவலில் ஒரு கதாபாத்திரத்துக்கு அவருடைய பயனாளரிடம் மொழியை புரிந்து கொள்ளாமல் பல்வேறு சிக்கல்கள் எழும். அதற்காக அவர் பிரத்தியேகமாக ஆங்கில பயிற்சி மேற்கொள்ளும் பதிவுகள் வருகின்றது. இது மிக முக்கியமான ஒருவிஷயம். நமது தொழிற்நுட்ப கல்லூரிகளிலிருந்து மந்தை மந்தையாக ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பொறியாளர்கள் பெரும்பாலோருக்கு ஆங்கிலம் பேசுவதும் எழுதுவதும் மிகப் பெரிய சவால். அதுவும் ஒவ்வொரு உரையாடலும் ஆங்கிலத்தில் தான் செய்ய வேண்டும் என்பதே பெரும் மன உளைச்சலைத் தரவல்லது. அதுவே பயனாளர்கள் பேசும் ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளாமல் ஏதேனும் மென்பொருளில் குளறுபடியானால் அவ்வளவு தான். ஒட்டு மொத்த நிறுவனமும் அந்த ஒற்றை அப்பாவி மேல் தனது உட்சபட்ச ஆயுதங்களைச் செலுத்தத் தொடங்கும்.  வனநாயகனில் வரும் மொழி சார்ந்த பிரச்சனை வேறு விதமான அரசியலைப் பதிவு செய்யும். அந்த நாவலின் பேசப்படும் மென்பொருள் களம் வங்கியிணைப்பு. அதில் சில தில்லுமுல்லுக்களைச் செய்து பணமோசடி செய்ய இருந்த இடத்துக்குத் தன்னையறியாமல் போய் சிக்கிக் கொள்ளும் கதைசொல்லியிடம் மோசடி செய்ய இருந்தவன் வேறு மொழியில் பேசுவான். பின்னர் இதனை அரசியல் செய்து பயனாளரை அவமதித்தாக சொல்லிப் பணி நீக்கம் செய்யப்படுவார் கதைசொல்லி. ஆக மொழி சார்ந்த பிரச்சனை தகவல் தொழிற்நுட்ப துறையில் மிகவும் மன உளைச்சல்களை தரக்கூடிய ஒன்று. இருள் தின்னும் இரவுகள் நாவலிலும் மொழி சார்ந்த உச்சரிப்புகளைச் சரி செய்ய வேண்டி ஒரு மாதம் பயிற்சி நடப்பது போல ஒரு காட்சி பதிவாகிறது.

பெருநிறுவன கலாச்சாரம் –  தகவல் தொழிற்நுட்ப துறையின் வித்தியாசமான இன்னொரு முகம் இன்று பணிக்கு நுழைந்த கல்லூரி கல்வியை முடித்த இளைஞன், நிறுவனத்தின் தலைவரை பெயர் சொல்லி அழைக்க முடியும். இது மேலைநாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பரவிய கலாச்சாரம். வயது அல்லது வேலை அனுபவம் சார்ந்த மரியாதை சுவர்களைக் கட்டமைத்தால் பணி நிமித்தமான சந்தேகங்களை எளிதாக நெருங்கிக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தடையெதுவும் இருக்கக் கூடும் என்பதாலும், அப்படிப்பட்ட எந்த அற்பமான விஷயமும் பணியைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகவும்  இந்த கலாச்சாரம் உருவானது. எந்த காரணம் கொண்டும் பயனாளர்கள் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு எளிய அணுகுமுறையில் குழுவினர் அனைவருமிருந்தால் பணி எளிதாக முடிய வாய்ப்புகள் அதிகம் என்ற கணிப்பு. மேலும் பெயர் சொல்லி அழைக்கும் போது இளகுவான சூழ்நிலையும், நெருக்கமான குழு உணர்வும் வரும் வாய்ப்புகள் அதிகம். இரவல் காதலி நாவலில் நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் நபரை நிறுவனத்தில் ஆறு மாதத்துக்கு முன்னரே சேர்ந்த திறமைசாலி பெண் “நாங்கள் செய்யும் பணிக்கு நீங்கள் பாராட்டை பெறுவீர்கள்” என்று கிண்டலாகச் செல்வது போன்ற காட்சி வரும். அந்த பெண்ணும், அவள் குழுவின் தலைவனும், நிறுவன உயர் அதிகாரியும் நிறுவனத்துக்கு அந்த பெண்ணால் கிடைத்த பெரிய பணி ஒப்பந்தத்தைக் கொண்டாட நட்சத்திர விடுதியில் உணவருந்திக் கொண்டிருப்பது போன்ற காட்சியில் இது சொல்லப்படும். இது தகவல் தொழிற்நுட்ப துறை தவிர வேறு எங்குமே காணக்கிடைக்காத ஒன்று. அது மட்டுமல்ல குழுவில் இணைக்கத்தை கட்டமைக்க வேண்டி மனிதவளத் துறை வல்லுநர்கள் பயிற்சியரங்கங்களை நிறுவனத்தின் உள்ளேயே நடத்துவதும் உண்டு. மேலும் இந்த நிறுவனங்கள் சமூக அக்கறையுடன் செயல்படுகிறோம் என்று பெயரிட்டு சமூக நலம் சார் விஷயங்களையும் அவ்வப்போது செய்வது இந்த கலாச்சாரத்தின் இன்னொரு முகம். அப்படிப்பட்ட பயிற்சிகள், சமூகப் பணி செய்யும் கதையாளர்கள் சார்ந்த பதிவுகள் ராஜீவ் காந்தி சாலையின் வரும். இவ்வாறான கருணை கொண்ட ஏற்ற தாழ்வுகள் கொஞ்சமும் இல்லாத ஒரு உள் சமூகத்தைக் கையாளும் அதே நிறுவனங்களில் பணியாளர்கள் ஏன் உதிரியாகவே இருக்கின்றனர் என்பதை ஒரு போதும் கவனிப்பது இல்லை என்பது ஒரு நகைமுரண். ஒருவேளை தொழிலாளர்கள் உதிரியாக இல்லாமல் ஒன்றுபட்டால் அதற்கான விலையைக் கொடுக்க நிறுவனங்கள் விருப்பாதது காரணமாக இருக்கலாம். இந்த கலாச்சாரத்தின்படி அனைவரும் சமமானவர்களே என்ற கட்டமைப்பை தலைமுறை இடைவெளி நுட்பமாக உடைப்பதை அழுத்தமாக கையாளுகிறது உண்மைகள் பொய்கள் கற்பனைகள். ஆம் இந்த நிறுவனங்களில் நிர்வாக இயங்குனர்களைக் கூட பெயர் சொல்லி அழைப்பார்கள். ஆனால் பெயர் சொல்லி அழைப்பதால் மட்டுமே குழு ஒற்றுமையோ, இணக்கமோ, நிற இன சாதி வேறுபாடுகள் கலைந்தெரியப்பட்டதா என்ற கேள்வியை மிக ஆழமாக எழுப்புகிறது. மேலாளர்களை தன்னலத்துக்காக தேவையில்லாமல் புகழ்வது செயற்கைத்தனமாக இயங்கும்  போலிமனிதர்களை நிறங்களை குறியீடாகக் கொண்டு சித்திரிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.

பணியழுத்தம் – தகவல் தொழிற்நுட்ப துறையின் மிக முக்கியமான பிரச்சனை பணியழுத்தம். மன உளைச்சல். அளவுக்கு அதிகமான சம்பளத்தைத் தருகிறோம் ஆகவே இவர்கள் எல்லோரும் அளவுக்கு அதிகமான வேலை செய்ய கடமைப்பட்டவர்கள் என்ற இந்திய முதலாளித்துவ மனநிலை பெரும்பாலான மேலாளர்களிடமிருக்கிறது. மேலாளர்கள் தனது குழுவின் உறுப்பினர் அனைவருமே ஒரு நிமிட நேரம் கூட வீணாக்காமல் வேலை வாங்க வேண்டுமென்று நினைப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்துக் கொடுத்தாலும் ஒருவேளை வேலையை முடிக்கக் கொடுத்த கெடு அதிகப்படியோ என்ற எண்ணமே கொண்டிருப்பார்கள். அலுவலின் முன்னேற்றங்களை பார்க்க மாதமொருமுறை என்று இருந்திருந்த திறனாய்வுகள், மதிப்பீடுகள் வாரமொரு முறை என்று மாற்றிக் கொண்டு அதிலும் நிறைவடையாமல் தினமும் நேற்றென்ன நடந்தது இன்றென்ன செய்வீர்கள் என்று கேட்கும் கட்டமைப்புக்குள் நுழைந்து நுண் மேலாண்மைகளை செய்யத் தொடங்குவார்கள். அதுவும் போதனென்று ஏதேனும் வலைப்பக்கத்தில் என்னென்ன நடக்கிறது என்று பதிவு செய்யச் சொல்வார்கள். அதே  சமயம் சில நிறுவனங்களில் மொத்த குழுவில் சிலர் மிகச் சோம்பேறியாக எதையும் செய்யாமல் இருப்பதும், அவர்கள் வேலையும் சேர்த்து இன்னொருவர் செய்வதுபோன்று ஏற்ற தாழ்வுகளும் அதிகமாக நடக்கும் இந்த சித்திரங்களை ராஜீவ் காந்தி சாலை பதிவு செய்கிறது, ஒரு சில பணியாளர்கள் நிறுவனத்தை ஏமாற்றுவதன் பொருட்டு பணி இயந்திரங்களில் பொருத்தப்பட்டுக் கண்காணிப்பு மென்பொருள்கள் எல்லா பணியாளர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதை நட்சத்திரவாசிகள் பதிவு செய்கிறது. அந்த நாவலில் பணியாளர்கள் தனது கணினியில் எவ்வளவு நேரம் வேலை செய்தார்கள். எவ்வளவு நேரம் வீணாகக் காலம் கழித்தார்கள், எப்போது இருக்கையிலிருந்து எழுந்து சென்றார்கள் என்ற நேரப்பட்டியல்களை மேலாளருக்கு வழங்கும் கணினி செயலியை ஒவ்வொரு பணியாளர்களின் கணினிகளில் நிறுவுவது போன்ற சித்தரிப்பு வரும். பணிக்கு இந்த நேரத்துக்கு வந்து விட வேண்டும், இவ்வளவு நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டுமென்ற எல்லா கட்டுப்பாடுகளுடன் இயங்கும் இந்த நிறுவனங்கள், பணி நிமித்தம் அயல்நாடுகளிலிருந்து வரும் நேரம் காலமற்ற அழைப்புகளையும் கையாள வேண்டும் என்று பணிக்கும். பெரும்பாலான மென்பொருட்கள் தயாரிப்புகளில் உலகத்தின் இரு துருவங்களில் இருப்பவர்கள் இணைந்து செயல்படும் போது இரவு நேரங்களிலும் பணி நிமித்தம் வரும் அழைப்புகளை நிராகரிக்க முடிவதில்லை. அது நள்ளிரவைத் தாண்டி தொடர்ந்தாலும் மறுநாள் நேரத்துக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். எல்லா பணிகளையும் திறம்படச் செய்யவும் வேண்டும். இந்த பணியாளர்கள் குடும்பத்துடன் செலவளிக்கும் நேரம் மிகக் குறைவாக இருப்பதை மனைவி மக்களைப் பார்ப்பதே அவர்கள் உறக்கும் போது என்பது போன்ற காட்சிகள் ராஜீவ்காந்தி சாலையிலும், நட்சத்திரவாசிகள் இரண்டிலுமே வெகு அழுத்தமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பேட்டை நாவலில் மேலே சொன்னது போலக் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான வேலையைச் செய்து கொடுத்த பின்னரும் மரியாதை நிமித்தம் நன்றியோ பாராட்டோ சொல்லாமல் அடுத்த வேலையைச் சுமத்துவதும் பலமடங்கு மன அழுத்தத்தை உண்டாக்கவல்லது. பாராட்டு வார்த்தை எல்லாமே அடுத்த சம்பள, பணி உயர்வுக்கான பாதையை அமைக்கக் கூடும் என்ற இடத்தில் மேலாளர்கள் மிகக் கவனமாக அதனை தாண்டி நகர்ந்துவிடுவார்கள். 

தங்குமிடம் சார்ந்த சித்தரிப்புகள் – பெருநகரங்களில் மட்டுமே இயங்கும் தகவல் தொழிற்நுட்ப துறையில் பணிபுரிய நகரை நோக்கி வரும் இளம்பிராயத்தினர் தங்குமிடங்கள் மிக முக்கியமான் மற்றொரு அம்சம். பணம் கொடுக்கும் விருந்தாளிகள் என்று பொருள்படும் பெண்களுக்குகான தங்கும் விடுதிகள் பற்றிய பிரத்தியேகமான சித்தரிப்புகள் இருள் தின்னும் இரவுகள் நாவலில் வருகின்றன. இந்த விடுதிகளில் காலை மதிய, இரவு உணவுகள் வழக்கப்படும். ஒரே அறையில் இரண்டு முதல் ஐந்து பெண்கள் உறங்கும் வண்ணம் 5க்கு இரண்டரை அடி கொண்ட படுக்கைகள் தாராளமாக நடக்கக் கூட முடியாதபடிக்கு அடுக்கப்பட்டிருக்கும். இந்த விடுதியில் தங்கும் பொருட்டு தனது சம்பளத்தை அதிகமாகச் சொல்லி அவமானப்படும் ஒரு பணியாளரைப் பற்றிய சித்தரிப்பு இந்த நாவலில் வரும். மேலும் இவ்வாறு தங்கியிருக்கும் போது உடன் தங்கியிருப்பவர்களில் விபரீதமான போக்கினால் கதை சொல்லி அனுபவிக்கும் பல்வேறு தொல்லைகளையும் இந்த நாவலில் மிக நுட்பமாகப் பதிவாகியிருக்கும். நான்கைந்து பேர் தங்கும் அந்த அறைக்கு ஒரே ஒரு கழிப்பறையுடன் கூடிய குளியலறையிருக்கும். மேலும் உடைமாற்றக்கூட மறைவிடங்கள் இருக்காது. இரவு பணி முடித்து வரும் பணியாளர்களுக்கு பகலில் உறங்க முடியாத வண்ணம் உடன் தங்கியிருக்கும் மற்ற பெண்கள் சத்தம் செய்து கொண்டிருப்பார்கள். அதே போல இரவில் விரைவில் உறங்க நினைப்பவர்களுக்கும் விளக்கை விரைவில் அணைத்து விட முடியாத தொல்லைகள் இருக்கும். சதா தொலைப்பேசியில் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார்கள். இது போன்ற தங்குமிடம் சார்ந்த பல பதிவுகள் இருள் தின்னும் இரவுகள் நாவலில் உள்ளது. நட்சத்திரவாசிகள் நாவலில் வாகனம் ஓட்டுநர் தனது தங்குமிடத்தின் இடநெருக்கடியைத் தனது சொந்த ஊரில் தன் மிகப்பெரிய வீட்டோடு ஒப்பிட்டு எழுதியிருப்பார். மிக அருமையான பதிவு. சொந்த ஊரை, மிகப் பெரிய வீட்டை, சொந்தங்கள் பந்தங்களை விட்டு கான்கிரிட் காடுகளில் வாழ்வாதாரம் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக வாழ்வது எவ்வளவு பொருந்தாத வாழ்க்கை கனகதூரிகா சொல்வது போலத் தொழில்நுட்பத் துறையில் வேலை என்பது எவ்வளவு பொருந்தாத வேலை?

உல்லாச பயணங்கள், பார்ட்டிகள் – பெருநிறுவன கலாச்சாரத்தின் இன்னொன்றாக வருவது தனது குழுவில் இணக்கத்தைப் பிணைப்பை உண்டாக்க மதிய உணவு வெளியில் சென்று அருந்துவது, வருடம் ஒருமுறை வெளியூர்களுக்கு உல்லாச பயணம் செல்வது மாதந்தோறும் குழுவினரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது, வருட இறுதியில் ஒன்றாக வெளியில் ஏதேனும் உல்லாச விடுதியில் குழுவாகப் போய் வருவது, வெளிநாடுகளுக்குப் போகும்போதோ போய் வந்த உடனேயோ பெரிய விடுதியில் மதிய உணவைக் குழுவினர் அனைவரையும் அழைத்துச் செல்வது என்று பல நடைமுறைகள் இருக்கும். இருள் தின்னும் இரவுகள் நாவலில் வருட இறுதியில் நடக்கும் உல்லாச பயணம் எவ்வாறு இருக்கும் என்று விரிவாகச் சொல்லும் நுட்பமான பதிவிருக்கிறது. நட்சத்திரவாசிகளில் வெளிநாட்டிலிருந்து திரும்பும் கதைசொல்லி தனது குழுவினர்க்கு ஏதோ நிர்ப்பந்தத்தின் பெயரில் மதிய உணவுக்கு விருப்பமின்றி செலவு செய்வது போன்ற நுட்பபதிவு இருக்கிறது. ஒரு மதிய உணவுக்குக் கிட்டத்தட்ட தனது ஒருமாத குடும்ப செலவினை செய்வது போன்ற பதிவு நிஜத்தில் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட வேறு உருப்படியான செலவு செய்யலாமே என்று வாசிக்கும் நம்மை யோசிக்க வைக்கும். இங்கே எல்லா கொண்டாட்டங்களும் இயந்திரத்தனமான அது இன்னொரு வேலை போல நடப்பது இந்தத் துறையில் மட்டுமே. 

செலவின குறைப்பு என்பது தகவல் தொழிற்நுட்பத்துறை சமீப காலமாகக் கண்டுவரும் மிகப்பெரிய சிக்கல். கிட்டதட்ட 2000 வரையிலிருந்த ஆடம்பர செலவுகள் எல்லாவற்றையும் இரண்டாயிரத்து இரண்டு மூன்று காலகட்டத்தில் இருந்த பொருளாதார வீழ்ச்சியின் போது படிப்படியாகக் குறைக்கத் தொடங்கின இந்த பெருநிறுவனங்கள். இரண்டாயிரத்துப் பத்துகளுக்குப் பிறகு கொத்து கொத்தாக ஆட்குறைப்பு, பல நிறுவனங்கள் மூடப்படுவது அல்லது அடிமாட்டு விலைக்குப் பிற பெரிய நிறுவனங்களோடு இணைதல் இப்படிப் பல விஷயங்கள் நடந்தேறின. பல்வேறு பொருளாதார ஏற்ற தாழ்வின் போதும் ஒவ்வொரு நிறுவனமும் கையில் எடுக்கும் ஆயுதம் செலவின குறைப்பு ராஜீவ் காந்தி சாலை நாவலில் முதல் சில அத்தியாயத்திலேயே தனது எல்லா கிளைகளிலும் காப்பி தேநீர் தயாரிக்கும் ஆட்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகக் காப்பி தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி வைப்பது என்ற முடிவை நிறுவனத்தின் முதலாளி சொல்வது போல இருக்கும். மேலும் உயர்தர தொழில் இலச்சினை பெற்ற தண்ணீர் புட்டிகளை வாங்குவதற்குப் பதில் விலை குறைவான தண்ணீர் புட்டிகளை வாங்குவது போன்ற சித்தரிப்புகள் வந்திருக்கும். இதே செலவின குறைப்பு என்ற காரணத்தைக் காட்டியே நல்ல பணியாளரை வேலையில்லாமல் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கும் தள்ளுவது போன்ற சித்தரிப்பு வரும். நட்சத்திரவாசிகள் நாவலிலும் இரக்கமற்ற பணி நீக்கும் நடவடிக்கை அதே செலவின குறைப்பின் பெயரிலேயே நடந்தேறும். இது மிக நுட்பமான அரசியல். அவ்வாறு பணி நீக்கம் செய்யப்படும் பணியாளர் மிகச் சிறந்த பணியாளராக இருந்தாலும் தனது வாழ்க்கை முழுவதும் அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செலவளித்தாலும் அவர் மேல் இந்த நிறுவனங்களுக்கு எந்த இரக்கமும் இருக்காது. ஒரு காசுக்குக் கூடப் பெறாத அடையாள அட்டையைக் கூட அவரிடம் பிடிக்கத் தயங்காது. எந்த அளவுக்குக் கருணை கொண்டவை என்று இந்த நிறுவனங்கள் காட்டிக் கொள்கின்றனவோ அந்தளவுக்கு அவை இரக்கமற்றவை மனிதநேயமற்றவை. அப்படி செலவினத்தைக் குறைக்கப் பெருநிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கதை மாந்தரின் மனச்சிக்கல்களை வாழ்வியல் பிரச்சனைகளை சித்தரிக்கிறது இடைவேளை. வேலை என்பதும் வருமானம் என்பதும் மனிதனுக்கு எவ்வளவு மிடுக்கைக் கொடுக்கிறது அது இல்லாமல் போகும் போது எவ்வளவு அவமானமுறுகிறான், மனச்சிதைவடைகிறான் அல்லறுகிறான் என்று பல கோணங்களில் இந்த நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. பெருநிறுவனங்களில் வேலை செய்யும் போது மருத்துவ காப்பீடு முதல் இன்னும் பல்வேறு பாதுகாப்புகள் இருக்கும், வேலை போன பின்னர் எதற்குமே காப்பீடு கிடையாது. குடும்பத்திலிருப்போர் கூட ஆறுதலோ அரவணைக்கும் வார்த்தைகளையோ சொல்வது சில நாட்களுக்கு மட்டுமே என்று மிக அழகாகப் பதிவு செய்கிறது.

எல்லா துறையினர் போலவே தகவல் தொழிற்நுட்ப துறையிலும் நடக்கும் நுட்ப அரசியலில் ஒன்று தனக்குப் பிடிக்காதவரை  மிக எளிதாக அவமானம் செய்வது, அது மிக நன்றாக வேலை செய்பவராக இருந்தாலும் தன்னை மீறி வேறு வழியில் தனது தேவையை நிறைவேற்ற முற்பட்டால் எல்லாவிதத்திலும் அவரை நிராகரிப்பவர்கள் உண்டு. அவர் கருத்துக்கு எந்த மதிப்பும் கொடுக்காமல் அவர்கள் சொல்வது எல்லாமே தேவையற்றது என்பது போல நிராகரிக்கும் மேலாளர் மிக திறமை வாய்ந்த பணியாளர்களைப் பைத்தியங்களாக ஆக்குவார்கள். இந்த பதிவு நட்சத்திரவாசிகளில் இருக்கிறது. பெயல் நாவலில் குழுவின் எல்லோர் முன்னும் இப்படி வேலையே தெரியாமல் வந்து ஏன் உயிரை எடுக்கின்றீர்கள் என்று சொல்லி கதைசொல்லியின் காதலியை அவமானம் செய்வார்கள். எந்த கருத்தையும் எதிர்மறை கருத்தையும் சொல்லத் தகுந்த அந்தரங்கம் இருக்க வேண்டும் என்று மனிதவள கோட்பாட்டறிக்கைகள் உண்டு இருந்தாலும் இதெல்லாம் இங்கே சாதாரணம் பணியாளர்கள் எல்லோரும் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று உள் உணர்வோடும், தாழ்வுணர்வோடும் வைத்திருக்க மேலாளர்கள் தனிப் பயிற்சி எடுத்துக் கொண்டு வருவார்கள். இது மட்டுமல்லாது தன்னை அவமானம் செய்த மேலாளர் மேல் பாலியல் துன்புறுத்தல் என்று தகாத புகாரை செய்யத் தயங்காத பணியாளர்களும் உண்டு என்பதைப் பதிவு செய்வது இரவல் காதலி. அங்கீகாரம் சார்ந்த அரசியல்களும் இந்த துறையில் மிகச் சாதாரணம். அங்கீகாரம் என்பது கண்துடைப்பே, முதல் நாள் விருது பெறும் கதை மாந்தர் மறுநாள் தனது வேலையை ராஜினாமா செய்யும் போது மேலாளர் கொஞ்சமும் வருத்தம் கொள்வதில்லை என்று பதிவு செய்து அதிரவிடுகிறது நட்சத்திரவாசிகள். பணி முடிக்கும் வரை தொடர் அங்கீகாரம் பெறும் கதைசொல்லி அற்ப காரணத்துக்காகப் பணி நீக்கம் செய்யப்படுவதைப் பதிவிடுகிறது வனநாயகன். உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவலிலும் மூத்த தலைமுறையில் இருக்கும் பொறியாளரை இளம்பணியாளர்கள் பலமுறையில் அவமானம் செய்கின்றனர்.

இன அரசியல் – பெரும்பாலான தகவல் தொழிற்நுட்ப பெருநிறுவனங்கள் சென்னை, பெங்களூரு, பூனே, நொய்டா, குர்காவுன் போன்ற நகரங்களில் பெரிய அளவில் இயங்குகின்றன, இந்த நிறுவனங்களில் உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாது எல்லா மாநிலம் சார்ந்த மக்கள் வந்து வேலை செய்கின்றனர். பிற துறைகளைப் போலவே இந்தத் துறையிலும் ஒரே மொழி பேசும், ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகச் சேர்ந்து உணவருந்த போவது, பணியிடம் தாண்டி குடும்ப நண்பர்களாக வலம் வருகின்றனர். இவ்வாறு குழுக்கள் உருவாகும் போது அங்கே சில குழு அரசியல்களும் உருவாகின்றன. ராஜீவ்காந்தி சாலை நாவலில் ஒரு மொழி பேசும் மக்கள் எல்லோரையும் மிகவும் கயவர்கள் போலவும், கீழ்மை குணம் படைத்தவர்கள் காசுக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள். எல்லாவித விட்டுக்கொடுத்தல்களையும் செய்து தான் பணி உயர்வு பெற்றனர் என்று சித்தரிக்கும் பல காட்சிகளும், கட்டமைப்புகளும் வசனங்களும் வந்திருக்கின்றன. அந்த மொழி பேசும் மக்கள் மீதான நாவலாசிரியரின் வன்மத்தையே இது வெளிப்படுத்துகிறது. வனநாயகன் நாவலில் தமிழ் அல்லாத தென்னிந்திய மொழி பேசும் ஒரு நபரின் உச்சரிப்பைக் கிண்டல் செய்து அவர் இன்ன மொழி பேசும் நபர் என்று சித்தரிப்பைச் செய்திருப்பார். நட்சத்திரவாசிகள் நாவலில் குறிப்பிட்ட மொழி பேசும் பெண்ணை அவளுக்குத் தகுதி தகுந்த வேலையைக் கொடுக்காமல் அவளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் சித்தரிப்பு வருகிறது. அவள் பேசும் மொழியும் அவளது மேலாளர் பேசும் மொழியிலிருந்து வேறுபட்ட மொழி, பாலின வேறுபாடு சார்ந்த மற்றொரு நுட்பமான பதிவு நட்சத்திரவாசிகள் நாவலில் இருக்கிறது. கொடுத்த வேலையை மிகத் திறம்படச் செய்யும் திறமைசாலி பெண்ணை பிரசவ விடுப்பிலிருந்து திரும்பிய காரணத்தால் அடிக்கடி விடுப்பெடுக்க வாய்ப்புண்டு என்று ஒரு பணிக்குழு அவளைத் தேர்ந்தெடுக்கத் தயங்கியது என்று வரும் பதிவு மிகவும் முக்கியமானதும் நுட்பமானதுமாகும். பேட்டை நாவலில் பதிவாகியிருக்கும் இன அரசியல் ஒருவித நகைச்சுவையோடு அதீத கற்பனையோடு எழுதப்பட்டிருக்கிறது. அதில் இலங்கையை சார்ந்த பயனாளர் ஒருவர் கதைசொல்லி தமிழன் என்று பழிவாங்கும் நோக்கோடு குறைகளைக் கண்டறிகிறார் என்று முன்முடிவுக்குக் கதைசொல்லி வந்திருப்பார். இது வெறும் கற்பனை என்று நினைத்து நகர்ந்து விட முடியாது. தனது வாழ்வாதாரத்தை பிடிக்கும் இந்தியர்களை வெறுக்கும் இன வெறியர்கள் பல கண்டங்களில் நிஜத்திலும் உண்டு. பிற நாடுகளுக்குப் பயணமாகும் இந்திய தொழிற்நுட்பதுறையினர் பலரும் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த களம் மிக விரிவாக எழுதப்பட வேண்டிய களமாகும். சாதி அரசியலையும், அதனால் பணியுயர்வு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாவது போன்ற சித்தரிப்பு உண்மையகள் பொய்கள் கற்பன்னைகள் நாவலில் உண்டு. 

மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களில் பொறியாளர்கள், மேலாளர்கள், உயர் அதிகாரிகள் தவிர காவலாளிகள், வாகன ஓட்டிகள், கட்டிடம், புல்வெளியை பராமரிப்பவர்கள், தரை, கழிவறைகளைச் சுத்தம் செய்பவர்கள். பணியிடத்து மிக அருகில் பெட்டிக்கடைகளை வைத்திருப்பவர்கள் என்று பல்வேறு தொழிலாளர்களும், சிறு தொழில் முனைவர்களும் இருப்பார்கள்.  ராஜீவ்காந்தி சாலை நாவலில் வாகன ஓட்டிகள், அவர்களை ஒப்பந்தத்தில் பணியமர்த்தியிருக்கும் பணியாளர்கள், பெரிய கண்ணாடி வளக்கத்திற்கு வெளிய பழைய தள்ளுவண்டியில் பழம், சிகரெட் போன்றவை வியாபாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட வேறு வாழ்வாதாரங்களை எல்லாம் இழந்த வயதான பெண்மணி அவர்களில் கதை, வாழ்க்கை பின்னணி என்று விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது ஆனால் அவர்கள் எல்லோருமே ஒரு பதுமைகளாக வந்து போகின்றனர். நாவலுக்கு வலு சேர்க்கும் ஒரு சில கதாபாத்திரங்களைக் குறிப்பிட்டு சொல்லிவிடலாம். நட்சத்திரவாசிகள் முதல் அத்தியாயத்திலிருந்தே இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் வருவார்கள் இவர்கள் ஒவ்வொருவரும் நாவலில் மையக்கருவான “பின்க் ஹேன்ட் ஷேக்” என்ற நிகழ்வில் ஏதேனும் ஒருவகையில் பிணைக்கப்பட்டிருப்பார்கள். உதாரணத்துக்கு ராமசுப்பு என்ற காவலாளி அந்த நிகழ்வு நடக்கும் போது அசம்பாவிதம் எதுவும் நடக்கக் கூடாதென்று வரவழைக்கப்படுவார், இப்படி ஒரு துன்பியல் சம்பவத்துக்கு தானும் ஒரு சாட்சியாகப் போவது தெரியாமல் முதல் நாள் இரவுபணி முடித்து அதிகாலை நான்கு மணிக்கு திரும்பியவரை, எட்டுமணிக்கு முக்கியமான வேலை நீங்கள் வரவேண்டுமென்று சொல்லி அழைத்திருப்பார்கள். அவரை அலுவலகத்துக்கு விட வந்திருக்கும் வரும் வண்டியின் வாகன ஓட்டுநர் அவருக்கும் அது நீட்டிக்கப்பட்ட பணியாக அமைந்திருக்கும் ஒருவரை ஒருவர் உறக்கத்தை விரட்டிக் கொள்ள ஊர்கதை பேசி, தேநீர் அருந்தி வேலைக்குச் செல்வார்கள். இதில் பின்னணியாக முன்பே சொல்லியது போலச் செலவின குறைப்பு என்ற கட்டமைப்பும் இருக்கும். இருந்தாலும் அவர்களின் வாழ்வைத் துயரங்களை மிகச்சிறப்பாக நட்சத்திரவாசிகள் காட்சிப்படுத்தியிருக்கும். அதே போலவே நிறுவன வளாகத்திலுள்ளேயே இயங்கும் பெட்டிக்கடை போன்ற ஒன்றில் இருக்கும் மணி என்ற சிறு தொழில் முனைவரிடம் அந்த பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் கடன் வாங்கியிருப்பார். வாங்கும் சம்பளம் எல்லாம் கடன் தவணைக்கு போய் விடும் போது வருமான வரி சேமிப்புக்கு திடீரென பெரிய தொகை கட்ட கடன் வாங்குவதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். பளபளக்கும் கண்ணாடி மாளிகையில் லட்சங்களில் புரளும் பல பொறியாளர்களின் நிலை இதுவே.

பெருநகரங்கள் இந்த துறையின் மூலம் அடைந்த நன்மைகள் சில அவற்றுள் ஒன்று பலருக்கு நல்லவேலையும் வாழ்க்கையும் மேலும் இந்த நிறுவனங்களைச் சார்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பலரது வாழ்வாதாரம் என்ற நன்மைகள், ஆனால் விளைந்த தீமைகளில் முக்கியமானது நகர விரிவாக்கம், அதன் பொருட்டு விவசாய நிலங்கள் குடியிருப்பு மனைகளாகவும், பெரிய நிறுவனங்களுக்கு விற்கப்படுபவையாகவும் மாறியது, நிலமோசடிகள், குற்றங்கள், போக்குவரத்து நெரிசல், கை மீறிய காசு கொடுக்கும் தீய பழக்கங்கள் என்று பட்டியலிடலாம். நகரப் பெருக்கத்தால் விளைந்த பல்வேறு இயற்கை சூழல் சீர்கேடுகள் பொருட்டு விளைந்த மாபெரும் வெள்ளம் எல்லாமே ஒரு தொடர் நிகழ்வுகள். இவை சுற்றுச் சூழலுக்கும், நகரங்களுக்கும் கொண்டு வந்த பாதிப்புகள் ஒருபுறமிருந்தாலும், சமூக தனிமனித உளவியலை இந்த பெருநிறுவனங்கள் எவ்வாறெல்லாம் பாதித்து என்பதை மிக அருமையாக இடைவேளை நாவலில் சொல்லியிருக்கும் சில வரிகள் கொண்டே எழுதிவிட முடியும்  பெருநிறுவனங்களில் வேலை பார்க்கும் போது எதையும் நினைத்துப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கை எல்லாமே என்னால் தான் நடக்கிறது என்று பெருமிதம் அது தரும் வேலையின் மீதான போதை இது மனசிக்கல்களுக்கான தொடக்கம். இந்த நிறுவனங்களுக்கு உள்ளே இருக்கும் போது எல்லாம் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அதே நேரம் இன்னுமின்னும் என்று ஒப்பீடுகளைச் சொல்லிச் சொல்லி இதைத் தவிர வேறு எதைச் செய்யவும் திறமையற்றவர்கள் என்று அவநம்பிக்கையை உருவாக்கிவிடுகிறது.  இடைவேளை நாவலில் வரும் ஒருவரி இந்த துறையில் பணிபுரிபவர்களின் மனப்போக்கை எளிதாகச் சித்தரிக்கும் “ பார்க்கறதுக்கு தான் ஐடி வேலை கவர்ச்சியா இருக்கும் ஹை கிளாஸ் கூலிகள். எல்லாம் நல்லா போச்சுன்னா மண்டை கனம் ஏறிக்கும். கீழ விழ ஆரம்பிச்சா பிடிச்சிக்க பிடிமானம் கூட கிடையாது” என்ற வரிகள் இந்த நிறுவனத்தில் இயங்கும் எல்லோருக்கும் பொருந்தும். எப்போதுமே இந்த துறையுள் இயங்கும் ஊழியர்களின் ஆழ்மனநிலை பாதுகாப்பின்மையும், நம்பிக்கையின்மையும் கொண்டே அலைவுரும். இத்தனை தாண்டி இந்த பணியை என்னைப் போலவே பைத்தியக்காரத்தனமாய் காதலிக்கும் பல கதைமாந்தர்களை இங்கே பட்டியலிடப்பட்ட நாவல்களில் காணலாம்.

இத்துறையின் மிக முக்கியமான பிரச்சனைகளான பணி நிரந்தரமின்னை, வேலை போன பின்னர் கசக்கி எரியப்பட்ட காகிதங்களாக வாழச் சபிக்கப்பட்ட மனிதர்கள், பணி அழுத்தம், பணியிடத்தில் நிகழும் நுண் அரசியல், இரவு பணியினால் உண்டாகும் மன உளைச்சல்கள், உடல் கோளாறுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் இந்த நாவல்களில் சித்தரிக்கப்பட்டாலும் இந்த துறையில் இன்னும் எழுதப்படாத பல பக்கங்கள் இன்னும் இருக்கின்றன. புதிது புதிதாக மாறும் தொழிற்நுட்பம் அதை எப்போதும் பந்தயக் குதிரைகள் போலத் துரத்தி பிடித்து தன்னை எப்போதுமே மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் இந்த துறையின் முக்கியமான சிக்கல். கல்லூரி படிப்பு முடித்து விட்டு வரும் இளம்பிள்ளைகளுடன் போட்டிப் போட்டு மென்பொருள்களை கட்டமைக்க வேண்டிய சவால் அது உண்டாக்கும் மன அழுத்தம், சிக்கல்கள் இது மற்றொரு மிகப்பெரிய களம். மேலும் பயனாளர்கள் இடத்துக்கே போய் வேலை செய்யும் ஒப்பந்த தொழிளாளர்களுக்கு உரிய பல்வேறு பிரச்சனைகள் அவர்களால் குழுவோடு இணைங்க முடியாத மனோநிலையிருக்கும், ஒப்பந்த பொறியாளர்களுக்கும் முழுநேர பொறியாளர்களும் கிடைக்கும் இடையே நடக்கும் ஒப்பீடுகள் போன்ற பல சிக்கல்கள், உளவியல் பிரச்சனைகள். மென்பொருள் ஒப்பந்தம் பணியாளர்களுக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனை அவர்கள் அடிக்கடி நேர்முகத் தேர்வுக்கு போக வேண்டிய  கட்டாயம் இருக்கும், நிறுவனத்தில் வருமானம் ஈட்டு தருபவர்களுக்கும் (billing candidate), வருமானம் ஈட்டாதவர்களுக்குமிடையே மேலாளர்கள் காட்டும் பாகுபாடு இவையாகவும் மிக முக்கியமான களங்கள், தகவல் பாதுகாப்பு பொருட்டு இந்த துறையுள் நடக்கும் கோட்பாடுகளும் அதன் மீறல்கள் பின் விளைவுகள், இயந்திரமயமாக்குதல் பின் விளைவுகள், பணி இழந்ததன் பொருட்டு புதிய நிறுவனங்களைத் தொடங்கிய சிறு தொழிலதிபர்கள், தொடர்ந்து பணி மாற்றம் செய்வதால் நட்பு வட்டம் இல்லாமல் தவிக்கும் ஊழியர்களின் சமூக அந்தஸ்து, பாதுகாப்பு, நம்பதன்மை சார்ந்த உளவியல் சிக்கல்கள், ஒரு பணியின் குழு உலகில் பல்வேறு மூலைகளில் பணிபுரிவதால் அவர்களுக்கிடையே நடக்கும் ஒருங்கிணைப்பு அவர்களுக்கு எந்தெந்தவிதமான சிக்கலைக் கொண்டு வருகிறது முக்கியமாக உறக்க நேரத்தை இந்த தொலைப்பேசி வழி நடக்கும் பின்னிரவு கலந்துரையாடல்கள் எப்படிப் பாதிக்கின்றன அவை உண்டாக்கும் உறவுச் சிக்கல்கள் என்னென்ன என்று எழுத ஏராளமான விஷயங்கள் இந்த துறை சார்ந்து ஏராளம் மிச்சமிருக்கின்றன. வரும் காலம் அப்படிப்பட்ட நாவல்களை ஆவலோடு எதிர்நோக்கியபடி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.