— சிவமணி

ஈஸ்வரி என்ற ஈஸுக்கு பார்க்கின்ற மாப்பிள்ளை எல்லாம் தட்டி கொண்டே சென்று கொண்டிருந்தது. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் முன்பெல்லாம் முத்தையா, ஒத்த வீடு நல்லமுத்து வீட்டுல கேக்குறாங்க, காரியாப்பட்டி விசயன் வீட்டுல கேக்குறாங்க நாந்தே கொஞ்ச நாள் ஆவட்டுமுன்னு  சொல்லிப்புட்டேன். உடனே போயி நின்னா நம்ம புள்ளைக்கு ஏதோ குறை இருக்குன்னு பேச ஆரம்பிச்சுருவாங்க, “சரி தானே அமுசு” (அம்சவள்ளியை அப்படி தான் அழைப்பர்) மனைவியிடம் கேட்டு வைப்பார். 

அது என்னவோ சரிதேன், நரம்பில்லாத நாக்கு நாலு பக்கமும் தான் பேசும் என்றாள் அமுசு.

அப்போ எல்லாம் ஏன் தள்ளி போட்டமுன்னு தெரியல, எல்லாம் திமிரு என நொந்து கொண்டார் முத்தையா. சோசியர் சதாசிவம் கிட்ட தான் சாதகம் எல்லாம் பார்த்தோம். எப்போதும் அவர் சொன்னது தப்பியது இல்ல. சிறிதும் பிசகாது. வைகாசி ல முடிஞ்சுடுமுன்னு சொல்லித் தான் விட்டார். ஆவணி முடிஞ்சே 3 மாசம் ஆச்சு. என்ன கிரகமோ தெரியல. சதாசிவமும் இந்த பக்கம் வந்தா அந்த பக்கம் போறாப்புல, என்ன விவரமுன்னு தெரியலையே, விரட்டி புடிக்க வேண்டியது தான். “அங்க இங்க ஆளை வச்சு சதாசிவத்தைப் பிடிச்சுடனும்” என்று உதறிய துண்டோடு அவரின் தன்னம்பிக்கையும் உதிர்ந்து தான் போயிருந்தது.

சதாசிவமே வீடு தேடி வந்தார். முத்தையா தப்பா எடுத்துக்காத “புள்ள ஆயில்யம் நட்சத்திரத்தில பொறந்திருக்கு, சாதகப்படி  மாமனாரோ, மாமியாரோ இருக்க கூடாது” அதான் அமைய லேட் ஆகுது.  உன் மனசு கஷ்டப்படுமுன்னு தான் சொல்லல. சொல்லாம இருந்ததால கொஞ்சம் விரசா பார்க்க ஆரம்பிச்ச, சொல்லிருந்தா அப்பவே சிரத்தை இல்லாம இருந்து இருப்ப. சதாசிவத்திற்கு சிறிது மூச்சு வாங்கி சமாதானமாகியது.

பரவாயில்லை சதாசிவம் அதுக்கு நீ என்ன செய்வ, எல்லாம் என் நேரம். பரிகாரம் ஏதும் செய்யணுமா…சொல்லு செய்யுறேன். 

இருக்கு முத்தையா. நீ கம்யூனிஸ்ட்காரன் வேற. நம்புறியோ என்னவோன்னு அப்பவே சொல்லல. 

நீ சொல்லப்பா. எதுனாலும் செய்யுறேன். புள்ளைக விசயத்துல கணக்கு பாக்க முடியாதுல என்றார் முத்தையா. 

சரி. திருச்சி ஸ்ரீரங்கம் இருக்குல்ல. அங்க போயி விஸ்வரூப தரிசனம் பார்க்க ஈஸு வ கூட்டிட்டு போ. அந்த தரிசனம் பார்க்க விடியற்காலை ஐந்து மணிக்கு எல்லாம் இருக்கணும். கோவில் வாசலை 5.30 மணிக்கு தான் திறப்பாங்க. ஓடி போயி டிக்கெட் வாங்கணும். முதல் நூற்றி ஐம்பது பேத்துக்கு தான் அனுமதி, சரியா புரிஞ்சுதா. வேகமா ஓடுறது தான் முக்கியம். “உன்னால முடியலைன்னா பரவாயில்ல ஈஸுவை முதல போயி டிக்கெட் வாங்க சொல்லிரு”

 பெறவு அங்கிருந்து திருமணஞ்சேரி போயிட்டு அவங்ககிட்ட விவரம் சொல்லு, அவங்களே பரிகாரம் சொல்லுவாங்க. சதாசிவம் பாரத்தை இறக்கி வைத்ததை  போல உணர்ந்தார்.

இதையும் ஏன் குறையா வைக்கணும். அடுத்த வாரமே போறேன். கட்டி கொடுக்க தானே போறமுன்னு பெருசா படிக்க வைக்கல, அதுவும் இப்ப குறையா இருக்கு. முத்தையாவின் பெரும் மூச்சு சதாசிவத்தை ஏதோ செய்தது. சதாசிவம் நிசப்தத்தை போர்வையாக்கினார்.

 அமுசு சில நேரம் மனசு உடைஞ்சு பேசி விட்டுடுவா, இந்த சிறுக்கி எந்த நேரத்துல பொறந்தாலோ, அந்தந்த காலத்துல நடக்க வேண்டியது நடந்தா தானே சந்தோசமா இருக்கும். என்ன விதுச்சி இருக்கோ தெரியல, ஒன்னும் புரியல என்பாள்.

 ஈஸுவின் காதில் விழுந்து விட. “தானே அழ ஆரம்பிப்பாள்”. நானா தவ்விக்கிட்டு இருக்கேன். கல்யாணம் செஞ்சு வைங்கன்னு நீங்களா பார்க்குறீங்க. அப்புறம் வேணானுமுன்னு சொல்லுறீங்க. எதுவும் நடக்காட்டினா என் தலையில தான் விடியுது. கடவுளே, குருடனோ, முடவனோ யார் வந்து நின்னாலும் போதும் நான் கட்டிக்க சம்மதம் சொல்லுறேன். “இதுக்கு மேல இவங்க புலம்பலை என்னால தாங்கிக்க முடியலடி” ஈஸு சிநேகிதி சரஸிடம் சொல்லிட அமைதி இருள் சூழ்ந்து இருந்தது. 

சிலசமயம் ஈஸுவை கட்டுப்படுத்த அமுசு திணறினாள். அமுசும் வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்குறது இல்ல.  “நடக்குறது தானே நடக்கும்” என்ற புலம்பல் சத்தம் எப்போதும் வாடிக்கையாகி கொண்டிருந்தது. 

“இனிமேட்டா பொறக்க போறான்” இவளுக்குன்னு ஏற்கனவே பொறந்து இருப்பான்னு”  அப்பத்தா செல்லம்மா தான் அடிக்கடி சொல்லும். அப்படி அவ சொல்லுறது கொஞ்சம் ஆறுதலா இருக்கும் ஈஸுக்கு.  இந்த வருஷம் வெள்ளாமை நல்ல இருக்கு, ஈஸு க்கு மட்டும் “நல்ல இடம் அமைஞ்சுட்டா போதும், இந்த உலகத்துல வேற என்ன வேணும்” முத்தையா இதே வார்த்தையை  சொல்லிவிட்டு அமைதியாகி விடுவார்.

ஈஸு நல்ல நிறம், அவளுக்கு என்ன குறைச்சல், அவளுக்கு நிமிசத்துல மாப்பிள்ளை அமைஞ்சுடும் “அமுசு, நாங்கதான்  எங்க போக போறமோ, எத்தனை சீப்பட போறோமோ, நீ ஏன்  இப்படி கவலை படுறன்னு”  பக்கத்து வீட்டு ராக்காயி எப்போதும் சொல்லுவா. அவளையும் இப்போ எல்லாம் பார்க்க முடியல அமுசுவால். 

“இல்லை, இல்லை, நாந்தேன் அவள பார்க்கிறத தவிர்க்கிறேன், ஒரு நேரம் இருந்தாப்புல இருக்க மாட்டா.  அவ கொஞ்சம் ஓட்ட வாயி. ஒன்னு கிடக்க ஒரு வேதனையை சொல்லிப்புட்டா, அதை அவ பாட்டுக்கு எங்கையாவது சொல்லிடுவா. நம்ம நேரம் அப்படி இருக்குனு மனசுக்குள்ளையே புழுங்கிக்க வேண்டியது தான்” என்று அமுசு அடுப்பை பார்த்தே பேசுவா. பேசுற வார்த்தை எல்லாம் அப்படியே அடுப்போடு கருகி போயிடும் என்ற நம்பிக்கை தான் அவளை அப்படி நடக்க வைக்குது.

ஈஸு பொறந்த போது அந்த வீடே விசேஷத்தில் நிறைந்து வழிந்தது. ஈஸுவின் தாத்தா தன் ஆத்தா இருளாயியே பிறந்து விட்டாள் என்பதற்கு ஆதாரமாய், அவங்களுக்கு இருக்குற மாதிரியே கன்னக்குழியும், இடது முழங்கையில் ஒரு மருவும், அதே இடத்தில் இருப்பதாக சொல்லி எல்லாரையும் வியக்க வைத்தார். அது முதலு ஈஸுவை ஆத்தா ஆத்தான்னு தான் கூப்பிடுவார். 

முத்தையாவிற்கு பூர்வீக சொத்து கைக்கு வந்த பிறகு, “தன் மக பிறந்த ராசின்னு ஊரே சொல்லி திரிந்தார், அவரு எங்க போனாலும் சைக்கிள் கேரியர்ல உட்கார வைச்சு அழைச்சுக்கிட்டு போவார். எங்க வீட்டு மஹாலக்ஷிமின்னு” சொல்லி தான் ஈஸு வை அறிமுகப் படுத்துவார். விளைச்சல் எல்லாம் அமோகமாக இருக்க, பணம்,  வசதி எல்லாம் கூடி போச்சு. அப்போ இருந்த முத்தையா இப்போ இல்ல.

அந்த சின்ன வயதில் ஈஸு பட்டாம்பூச்சி போல பறந்து திரிவாள். இப்போது எல்லாம் யார் கண்ணுலயும் படுறது இல்லை. சன்னல் கதவின் ஓரத்தில் வெயில் படும் படி உட்கார்ந்து கொள்வது தான் நிரந்தர வேலையாகி போனது. அவளால் எந்த சந்தோஷத்தையும் உள்வாங்க முடியவில்லை. 

“யாராவது வயிறு தள்ளிக்கிட்டு போன போதும், இவகூட ஈஸுக்கு சின்னவ தான்.  இவளுக்கு கூட அமைஞ்சு போச்சு, வயிற தள்ளிக்கிட்டு பகுமானமாய் நம்ம முன்னாடி போறான்னு, மசக்கையான பொண்ணுங்க யாரும் வீட்டைத் தாண்டி போனாலும் அவ்ளோ தான்” அமுசுவின் புலம்பல் ஈஸுவைத் தாக்க ஆரம்பித்து விடும். அந்த அனலில் விழுந்து அவள் புழுவாய் துடிப்பதை யாரிடமும் சொல்ல முடியாது திணறுவாள் ஈஸு.

அப்படி தான் மீனா , பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்தவ. அமுசு கண்ணில் பட்டு விட்டாள். “நீ கயலு பொண்ணு தானே. எத்தனை மாசமடி அம்மா”.

“ஒன்பது மாசம் அத்த”

“சின்னாளப்பட்டில தானே இருக்க இப்ப”

“இல்ல அத்த. இப்போ திண்டுக்கல்லுக்கு வீடு கட்டி போயாச்சு”

“அப்படியா, ஒன் ஆத்தா ஒண்ணுமே சொல்லலியே”

“மறந்துருக்கும்” என்பதை விழுந்தும் விழாத மாதிரி சொல்லி விட்டு “ சரி அத்த வாரேன்” என நகர்ந்தாள்.  

“அவளுக்கு அமைஞ்சு வாரிசு பெத்துக்க வந்திருக்கா” என்று ஆரம்பிச்சு இராவு முழுசும் புலம்பும் அளவுக்கு போயி விடும். விட்டது. கயலு மகளின் தாக்கம் அன்றைய இரவை இரையாக்கியது.

காலைப் பொழுதில் யாரோ கதவை அரட்டி தட்டும் சத்தம் கேட்டது. காலையிலேயே யாரு இப்படி தட்டுறது என அமுசுவின் குரல் கேட்டு சின்னமணி “நாந்தேன் மருமகளே, சின்னமணி சின்னாளபட்டியில் இருந்து” யச குரல் கொடுக்க நிதானமானாள். சின்னமணி பத்திரிகை கொடுக்க வந்து இருந்தார்.  “மகளுக்கு கல்யாணம் வச்சு இருக்கேன்” என்றார்.

நாலு வார்த்தை பேசி அனுப்ப மனசு இல்லாது அமுசு பேச்சு கொடுத்தாள் “மாமா மாப்பிள்ளை எந்த ஊரு?

 “மேலூர் மா. இடமெல்லாம் விசாரிச்சாச்சு. அவங்களுக்கும் நம்மல  ரொம்ப பிடிச்சு போச்சு. எல்லாம் நம்ம முனீஸ்வரன் அருள் தான். கூடாமலே இருந்துச்சு. அப்புறம் அப்படி இப்படின்னு பரிகாரம் செஞ்சு இரண்டு மாசத்துல எல்லாம் கூடி வந்துருச்சு”. மேலும் தொடர்ந்தார்.

“பாந்தமான குடும்பம். நல்ல வசதி, இவ தான் வேணுமுன்னு, மருமகளா வரணுமுன்னு ஒத்த கால்ல நின்னுட்டார் சம்மந்தி. ஒரே குறிக்கோள்ல உடனே கல்யாணம் வச்சுட்டோம். வெளில இருந்து பணம் வர வேண்டி இருக்கு. கொஞ்சம் டைம் கொடுக்க சொன்னோம், கேட்கல மருமகளே, நக நட்டு எல்லாம் உங்க பொண்ணுக்கு நீங்க போடுறதை போடுங்க. நாங்க என்ன சொல்ல ன்னு சொல்லிப்புட்டாங்க”.  என்றார் சின்னமணி.

“அப்புறம் நானும் சரி ன்னு சொல்லிட்டேன், பேத்தி ஈஸுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சான்னு” கேட்டார் சின்னமணி 

அவசரமா பார்க்கல…அவளுக்கும் அத்தனை வயசு ஆகலியே,  சரி மாமா   கல்யாணத்திற்கு வந்துடுறோம் என்று அமுசு சொல்லி விட சின்னமணியும் விடைபெற்றார். 

ஈஸு பதட்டமாய் கீழே குனிந்து உட்கார்ந்து இருந்தாள். “என்னவோ தெரியல இன்னைக்கு அம்மாவிடம் இருந்து எந்த புலம்பலும் வராதது ஈஸுக்கு நிம்மதியாய் இருந்தது. “ஈஸு குழாய் தண்ணி வருதுன்னு” ராக்காயி சொல்லி விட்டு ஓடினாள். 

பஞ்சாயத்து தண்ணி வர வள்ளி அக்காவுக்கும், அமுசுக்கும் குழாய் தகராறு. ரொம்ப நெருக்கமா இருந்தவங்க தான். யார் யாரோ எதையோ சொல்லி கொடுக்க வள்ளி அக்கா தான் ஆரம்பிச்சா, “எங்க வீட்டுல விசேஷம் இருக்கு. கொஞ்சம் பொறுத்து தான் புடிக்குறது. அப்படி என்ன அவசரம். மகளும், நீயும் சன்னல்ல உட்கார்ந்து கதை தானே பேச போறீங்கன்னு சொல்ல”  அமுசுவின் சாமியாட்டம் ஆரம்பமானது 

அஞ்சு காசுக்கும், பத்து காசுக்கும் ரோட்டோரத்துல நிக்குறவளுக்கு, என் குடும்ப கதை எதுக்குடி. இது என்ன உங்க அப்பன் வீட்டு குழாயா? என் புருஷன் வம்பாடு பட்டு அங்க இங்க பேசி குழாய் போட்டு கொடுத்தா, எங்களுக்கே வாக்கரிசி போட்டுடுவாளுக போலையே. இனிமே என் வீட்டு பத்தியோ, குடும்பத்தை பத்தியோ பேசினா ஒட்ட அறுத்து புடுவேன் பார்த்துக்கோ, அமுசு பத்ரகாளியாய் கொதித்தாள்.

 மன்னிச்சுரு அக்கா. புத்தி கெட்டு போயி இப்படி பேசிட்டேன். 

அடியே வள்ளி நீ பேசலடி, யார் பேச்சையோ கேட்டு தான் இப்படி பேசுற. உனக்கு எங்கடி புத்தி போச்சு. அமுசு அடங்கிட ரொம்ப நேரம் ஆச்சு. இதுக்கு முன்னாடி இப்படி பேசி யாரும் பார்த்தது இல்லை. அந்த இடமே நிசப்தமாய் இருந்தது. வாயை பிளந்தவர்கள் மூடவே இல்லை. வள்ளிக்கு ஆழம் தெரியாம கால் விட்ட மாதிரி நெளிஞ்சா. அன்று தெருவே அமுசுவின் சாமியாட்டத்தையே வாயில் மென்னு கொண்டிருந்தனர்.

சண்டையில் எல்லா ஆங்காரத்தையும் கொட்டி தீர்த்து விட்டாள். “இனிமே ஒருத்தியும் நாக்கு மேல பல்லு போட்டு பேச மாட்டாளுக” கொதிப்பை குறைத்து விட்டு சூட்டை குறைத்தாள்.

 “ஒன் அப்பன் வந்ததும் மாமா சின்னமணி சொன்ன மாதிரி  பரிகாரம் ஏதாவது செய்யணும், “அப்போ தான் விடியும் போல” அமுசுவின் பொருமல், ஈஸு எதிர்பார்த்தது போல வெடிக்க வில்லை. 

அன்று இரவே முத்தையாவிடம் பேச்சை ஆரம்பித்தாள் அமுசு. “மாமா சீக்கிரம் கோவில போயி பரிகாரம் செய்யணும். எனக்கு அதை செஞ்சுட்டா போதும் மதுரை வீரன் கண் திறப்பார்ன்னு நம்பிக்கை இருக்கு. ஈஸுவும் வீட்டுக்குள்ளையே அடைஞ்சு கிடக்கு. ஒரு மாற்றமா இருக்கும்” அமுசு மூச்சு வாங்க விட்டத்தை வெறித்தப் படி பேசினாள். கண்கள் கசிந்து இருந்தது. முத்தையாவிற்கு ஆச்சரியம் தாளவில்லை. 

மு: ஆமா எந்த கோவிலு. 

அ: “திருமணஞ்சேரி”

மு: “உனக்கு எப்படி தெரியும் கோவில் பரிகாரம் பத்தி”

அ: “மாமா சின்னமணி வந்தாப்பல”, அவர் சொன்னார் 

வரப்ப சதாசிவம் அண்ணனை பார்த்திட்டு தான் வரேன்,  ஒரு எட்டு போயிட்டு வர சொல்லி சொன்னாப்புல. எனக்கும் அதான் சரின்னு படுது அமுசு. அந்த வாரமே போகலாம் என்றார்.

விசால கிழமை ராத்திரி குலசாமி எல்லாத்தையும் வேண்டிக்கிட்டு ஊரே அடங்கின பிறகு மூவரும் கிளம்பினாங்க.. சொந்தக்காரப் பய நாகேந்திரன் தான், ஆட்டோவில் கொண்டு போயி இறக்கி விட்டான். ஈஸு க்கு புது காத்தும், நீண்ட பயணமும் புது தெம்பை கொடுத்தது. 

 எத்தனை பேரு கொண்டாடி வளர்க்கப் பட்டவள். இன்று மூஞ்சி கொடுத்து பேச கூட முடியாத அளவுக்கு மனசில் இடைவெளி விழுந்து விட்டது. கௌரவ பிரச்சனைக்காக தானே இந்த கல்யாணம். சமுதாயம் நாலும் பேசும். புகழ்ந்து பேசும் போது ரசிக்கிறோம். இப்போ ஏன் கோவ படணும்.   ஈஸு வின் மௌன மொழி யாருக்கும் புரிவதில்லை. 

ஸ்ரீரங்கம் கோவில் வாசல் வந்தது. சதாசிவம் அண்ணன் சொன்னது போல விஸ்வரூப தரிசன வரிசையில் நின்றனர். 30 வயதை தாண்டிய பெண்களையும் , 35 வயது தாண்டிய ஆண்களையும்  அதிகமாக பார்க்க முடிந்தது. ஈஸுவிற்கு தன்னை போல பல மடங்கு வேதனைகளை அவர்கள் அடைந்து இருப்பார்களோ என்று நினைக்கையில் இரக்கத்தை அந்த இடம் முழுவதும் படர விட்டிருந்தாள். அவர்களின் பார்வை “இந்த சின்ன பெண்ணெல்லாம் ஏன் வந்து இருக்கா” என்பது போல ஈஸுவின் மீது இருந்தது.

“மாமா, அண்ணே சொன்னது சரிதேன் இம்புட்டு பேரு வந்து இருக்காங்க. நல்ல காலம் பொறக்க போகுது” என்றாள் அமுசு. “எனக்கும் அப்படி தான் அமுசு தோணுது, இப்பவே அமைஞ்சுட்ட மாதிரி தான் இருக்கு” என்றார் முத்தையா. அம்மாவும், அப்பாவும் இப்படி பேசுவது காதில் விழாத மாதிரியே நின்றாள்.

முன் வரிசை ஆள் பேசுவது கேட்டது “கதவு திறந்ததும் ஓடணும், மொத 150 பேருக்கு தான் தரிசனம். இதை கேட்ட அமுசு ஈஸுவிடம் காசு கொடுத்து “வேகமா ஓடி வரிசையில நில்லு புள்ள” என்று ரகசியமாக கிசு கிசுத்தாள். 

துளசி மாலையும், தாமரைப்பூவும் விற்று கொண்டு வந்தவர் முத்தையா குடும்பத்தை பார்த்ததும் “மூணே மாசத்தில் பாருங்க முடிஞ்சுடும்” என்றதும் முத்தையா கைக்கூப்பி கண்கலங்க வணங்கினார்.

 “என்னவோ உங்கள பார்த்ததும் சொல்லணும் போல தோணுது” என்று சொல்லி விட்டு  மாலை விற்பவர் இன்னும் தொடர்ந்தார். யாருக்கு எப்போ பிராப்தம் இருக்கோ அப்போ தானே அமையும். நாம அவரச பட்டு பிள்ளைகளை கஷ்டப்படுத்திட கூடாது. நம்மள நம்பி இருக்கும் வம்சத்தை நாமே உதாசீன படுத்திட கூடாது. நாம முயற்சி செய்வதை மட்டும் விட்டுடாம, நல்ல இடமா பார்த்து முடிக்கணும். தள்ளி விட்டிட கூடாது. 

“அவசரமா கட்டி கொடுத்துட்டேன் ஐயா, பிள்ளைய கண்ணுல காட்ட மாட்டுறாங்க. என் மகளுக்கு விருப்பம் துளியும் இல்லை. ஊரு  உலகம் பேசுமேன்னு கொஞ்சம் கூட விசாரிக்காம கட்டி வச்சுட்டேன். எல்லா கொடுமையும் மவராசி தான் அனுபவிக்குறா. இப்படி கண்ணீர் வடிச்சு வாழுறதை பார்ப்பதற்கு பதிலாக, கொஞ்சம் தாமசமா கட்டி கொடுத்து இருந்திருக்கலாமுன்னு தோணுது. நான் இங்க தான் பூ விக்குறேன். என் கையால பூ வாங்கின பல பேருக்கு நல்லது நடந்து இருக்கு. நானே பாருங்க, புத்தி கெட்டு போயிட்டேன். எனக்கு இன்னொரு மக இருக்கா. அவளுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுத்திடாம, பொறுமையா விசாரிச்சு பார்த்துகிட்டு இருக்கேன். எல்லாத்தையும் அந்த இறைவன்கிட்ட விட்டுட்டேன். நம்ம படைச்ச இறைவனுக்கு நமக்கு என்ன தரனுமுன்னு தெரியும் என்றார்.

முத்தையாவுக்கும், அமுசுக்கும் கண் திறந்தது போல இருந்தது. ஈஸுவை கஷ்டப் படுத்தி விட்டதாக வருந்தினர். அவள் தலையை வாஞ்சையாய் தொட்டு தடவினாள் அமுசு.

 கதவு திறக்கும் சத்தம் கேட்க, ஈஸு பாவாடைய சிறிது உயர்த்தி கொண்டு பறந்தாள். அமுசு கொடுத்த காசில் நுழைவு டிக்கெட் வாங்கி விட் திரை போட்ட கருவறையின் முன்பு அமர்ந்திருந்தனர். காவேரி ஆற்று நீரை யானை கொண்டு வர அபிஷேகம் நடைப்பெற்றது. வயது முதிர்ந்த கன்னிகளின் கண்களில் கண்ணீரோடு கூடிய வேண்டுதலை ஈஸுவும் செய்தாள். 

அமுசு ரொம்ப நிறைவா இருக்கு என்றாள். 

என்னமோ தெரியல, மனசுல இருந்த பாரம் எல்லாம் குறைந்து இருந்தது என்றார் முத்தையா

இந்த நேர்மறையோடு மூன்று ஆன்மாகள் திருமணஞ்சேரி செல்ல தயாரானார்கள். இந்த பயணத்தில் அமுசுவின் முகமும், முத்தையாவின் அகமும் மலர்ந்திருந்தது. மயிலாடுதுறை வழியாக திருமணஞ்சேரியை அடைய மாலையும், கழுத்துமாய் பொண்ணு, மாப்பிள்ளை கண்ணில் பட்டதும் அமுசு “ஆத்தி நல்ல சகுனமால்ல இருக்கு”.

கல்யாணக்கூட்டத்தில் ஒருத்தரை விசாரிக்க துவங்கினார் முத்தையா. மாலை வாங்கி பொண்ணு பேருக்கு அர்ச்சனை செய்ய, அந்த மாலையை பத்திரமா வீட்டில் வச்சுருந்து கல்யாணம் முடிஞ்சதும், மாப்பிள்ளையும், பொண்ணும் அந்த மாலையை எடுத்து வந்து இங்கே போடணும் என்றார்.

எந்த சாங்கியம் செய்ய சொன்னாலும் முறுக்கி கொண்டு திரியும் முத்தையா எல்லாவற்றையும் கேட்பது ஆச்சரியமாய் பார்த்தாள் அமுசு. ஈஸு கழுத்தில் மாலையோடு கோவில் கருவறையில் நிற்க , ஈஸ்வரி, கடக ராசி, ஆயில்யம் நட்சத்ரே என்று அர்ச்சனை நடக்க, முத்தையாவும், அமுசும் ஈஸு வையே பார்த்து கொண்டு இருந்தனர். நம்பிக்கை நிமிர்ந்து நின்றது. எல்லா சடங்குகளும் முடிந்து கிளம்ப ஆயத்தமானார்கள். பணம் கரைந்தது, ஆனாலும் மனசு நிறைந்து வழிந்தது. அமுசு, ஈஸுவை திட்டியதை நினைத்து வருந்தினாள். கண்ணீர் முட்டி கொண்டு வந்தது. 

நிம்மதியான தூக்கம். பேருந்து ஊரை வந்து சேர்ந்தது. விடியும் முன்பே பேசி வச்சுருந்த காரில் யார் கண்ணுலேயும் படும் முன்பே வீட்டை அடைந்தனர். 

இரண்டு வாரத்துல பதிஞ்சு வைச்சு இருந்த இடத்தில இருந்து போன் வர, பதட்டமா முத்தையா அமுசு, அமுசு ஒரு இடத்துல இருந்து கூப்பிட்டாங்க, பொருத்தம் எல்லாம் இருக்காம். ஈஸு போட்டோவ அனுப்ப சொல்லுறாங்க.

ஒன்னு, இரண்டு வரனும் வரத் துவங்கியது. அமுசுக்கும், முத்தையாவிற்கும் சில இடங்களை பிடிக்க வில்லை. ஒரு சில பேர் இன்னைக்கே பார்க்கணுமுன்னு சொல்லும் இடத்தை நாசுக்காக சொல்லி தட்டி விட்டார். அமுசுவின் புலம்பல் சிறிது கொறஞ்சி இருந்தது. ஈஸுவுக்கு பெரிதாய் ஈர்ப்பு இல்லை. சதாசிவம் அண்ணன் ஈஸுவை போல ஆயில்யம் நட்சத்திரம் உள்ள ஒரு பொண்ணுக்கு அந்த கோவில் போயிட்டு வந்த பிறகு முடிஞ்சதாக சொல்லி விட்டு சென்றார். அமுசு தெருவில் அமர்ந்து பேசுவது குறைஞ்சு போச்சு.

மதுரைல இருக்குற திருமண மையத்தில் பதிஞ்சு வைக்க சொல்லி சின்னமணி மாமா போன்ல சொல்லுறாப்புல. அதுக்கு போயிட்டு வாங்க மாமா என்று அமுசு சாந்தமாக சொன்னாள்.

பதினைந்து வருசத்துக்கு முன்பு கடன் அதிகமாகி, பொழப்பு தேடி ஊர் விட்டு போன சாமிக்கண்ணு கடன் கப்பி எல்லாம் அடைத்து விட்டு, காரும், கழுத்து நிறைய நகையுமாய் குலதெய்வதுக்கு படையல் போட வந்திருந்தவள் அமுசை பார்த்ததும் ஒரே அழுகை. அமுசும் வெடித்து சிதறினாள். “எப்படியம்மா இருக்க, எத்தனை வருசமாச்சு” சாமிக்கண்ணுவின் ஆத்மார்த்த அணைப்பு அமுசை  இன்னும் மனசை இளக செய்தது.

வசதி, வாய்ப்பு எல்லாம் வந்துருச்சு புள்ள. கடன் எல்லாம் அடைச்சு பல நாளு ஆச்சு. ஆனா சமைஞ்சு பத்து வருஷம் ஆகியும் கல்லாணம் அமையவே இல்லை என் மகளுக்கு. பிள்ளைக கல்யாணம் முடிச்சு தான் ஊருக்கு போகணுமுன்னு நானும், என் கூட்டாளியும் சபதம் போட்டு இருந்தோம். அது என்னவோ ஆயில்யம் நட்சத்திரமாம். பொறக்கும் போது அது எல்லாம் பார்த்தா பெத்தோம். போன வருஷம் தான் மணமா முடிஞ்சுது. இப்போ என் மக சொல்லுறா சுக பிரசவம் இல்லாட்டியும் பரவாயில்லை, நட்சத்திரம் பார்த்து வயிறு கிழிச்சாவது நல்ல நட்சத்திரத்துல பெத்துக்கனுமுனு நாள் பார்க்க சொல்லி இருக்கா. நான் பட்ட கஷ்டம் பிள்ளைக படக்கூடாதுன்னு சொல்லுறா. அவளுக்கு எந்த குறையும் வரக்கூடாதுன்னு “நம்ம மதுரைவீரனுக்கும், பொங்கரம்மாளுக்கும்” பொங்க வச்சு கும்புட்டு விட்டு சாதி சனத்தை பார்த்திட்டு போகலாமுன்னு வந்தோம். குலசாமிய வீட்டுல வச்சு கும்பிட்டாலும், நேர்ல வந்து பார்க்குற மாதிரி வருமா. நம்ம காலம் எல்லாம் வேற புள்ள என்று சொல்ல வாயடைத்து நின்றாள் அமுசு. 

ஈஸு பெரிய மனுசியா ஆகி இருப்பாளே? எப்போ கல்யாணம்? மாப்பிள்ளை ஏதும் பார்க்க ஆரம்பிச்சுடீயா? என்றாள் சாமிக்கண்ணு

பார்க்க ஆரம்பிக்கணும். கல்யாணத்துக்கு சொல்லி அனுப்புறேன் என்றாள் அமுசு. 

“சரி வரேன் அமுசு” என்று நடந்த சாமிக்கண்ணு அமுசுவின் கண்ணை சாமியாய் வந்து திறந்து சென்று கொண்டிருந்தாள். 

அன்று சாதகம் பார்த்த பிறகு, அதை இன்று வரை யாரும் தொடவே இல்லை. அலமாரிலேயே அப்படியே கிடந்தது. 

அமுசுவிடம் இருந்த மாற்றம் சிறிது ஈஸுவை ஆசுவாசப் படுத்தி இருந்தது. அவளை பேரன்பாய் பார்க்கத் துவங்கினர். அவளுக்கு கல்யாண ஆசை அரும்ப துவங்கி இருந்தது

தினமும் அமுசு அந்த திருமணஞ்சேரி மாலைக்கு சாம்புராணி போட்டு கும்பிட்டு வர தொடங்கினாள். பூஜை அறையில் அந்த மாலை தொங்கி கொண்டிருந்தது. எல்லா நேர்மறை எண்ணங்களும் அந்த மாலைகளில் பின்னி பிணைந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. இந்த மூன்று ஆன்மாக்களும் அந்த நேர்மறையை சுவாசிக்கப் பழகி இருந்தனர்.