மொழிபெயர்ப்பு : பிரவீண் பஃறுளி

மனித இனம் ஒரு பிரகாசத்துக்குள் அடிவைத்த,  21மே 21 2061  அன்று முதன்முறையாக அந்த  இறுதிக் கேள்வி , விளையாட்டாகக்   கேட்கப்பட்டது. பனித்துண்டங்கள் பெய்த  நீள்மதுக்குவளை  மீதான  ஐந்து டாலர் பந்தயத்தில்தான் அந்தக் கேள்வி விளைந்தது. அது இப்படி நிகழ்ந்தது :

அலெக்சாண்டர் ஆதெல்லும் பெத்றாம் லூப்போவும் மல்டிவேக்கின் அணுக்கப் பரிமரிப்பாளார்கள். அந்தப் பெருங்கணினியின் சில்லிட்ட , சொடுக்கி ஒளிரும்  திரையின் மைல்களுக்கும் மைல்கள் அப்பாலான ஆழங்களில் இருப்பதை  மற்றவர் அளவே இவர்களும் அறிவார்கள். தனது  முழுமையை உறுதியாகப் புரிந்துணரும் மனிதசாத்தியத்துக்கு வெகுஅப்பால் வளர்ந்துவிட்ட  அப்பெருங்கணினியின்  உள்ளார்ந்த நிரல்கள், சுற்றுகளின்  பொதுஉருவம் குறித்து அவர்களுக்கு ஒரு மங்கலான அறிதலாவது இருந்தது. மல்டிவேக் என்ற அக்கணினி தன்னைத்தான் ஒழுங்குபடுத்தவும் திருத்திக்கொள்ளவும் கூடியதாக இருந்தது.  போதிய அளவிலும் வேகத்திலும்  அதனை சீர்படுத்த மனிதர்களுக்கு சாத்தியமில்லை என்பதால் அது அப்படித்தான் இருந்தாக வேண்டும்.  எனவே ஆதெல்லும் லூப்போவும் அந்த அரக்கத்தனமான பேருருவை எவருக்கும் சாத்தியப்பட்டதைப் போலவே மேலோட்டமாகப் பரமாரித்தார்கள். தகவல்களை உள்ளீடு செய்தார்கள், கணினியின் தேவைக்கேற்ப கேள்விகளைச் சீராக்கினார்கள், தருவித்த பதில்களை மொழிமாற்றினார்கள்.   அவர்களுக்கும் அவர்களைப் போன்றோர்க்கும்  மல்டிவேக்கின்  மகத்துவத்தில்  நிச்சயம் உரிமையுண்டு.

  நிலவுக்கும் செவ்வாய், வெள்ளி கோள்களுக்கும்  பயணிப்பதற்கான விண்பாதைகளை வகுப்பதிலும் விண்ணோடங்களை வடிவமைப்பதிலும், பல பதின்மங்களாக மல்டிவேக் உதவியிருக்கிறது. இருந்தும், பூமியின் குறுகும் ஆற்றல்வளங்கள் விண்ணோடங்களைச் செலுத்தப் போதுமானதாயில்லை. தொலைவெளிப் பயணங்களுக்கு அளப்பரிய ஆற்றல் தேவைப்படுகிறது.  நிலக்கரியும் யுரேனியமும் மேம்பட்ட திறனுடன் பயன்படுத்தியாயிற்று. அவற்றின் இருப்பும் வரம்புக்குட்ப்படவையே. ஆழ்ந்த கேள்விகளுக்கு இன்னும் எளிய தீர்வளிக்க மல்டிவேக் மெல்லப்பயின்றுகொண்டது.  கருத்துநிலையில் மட்டுமிருந்தது 14 மே 2061 அன்று   நிதர்சனமானது.   சூரியனின் ஆற்றல்வளம் திரட்டி, நிலைமாற்றி  நேரடியாக மொத்த புவிக்கோளுக்குமாக நுகரப்பட்டது.  நிலக்கரிஎரிப்புக்கும் , யுரேனிய அணுப்பிளவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு எல்லா மையங்களும்  நேரடியாக   ஒருமைல் விட்டமான  சிறிய விண்வெளி ஆற்றல்நிலையத்துடன்  இணைக்கப்பட்டன. புவியைச் சுற்றிச் சுழலும் அந்த மையம்  புவியிலிருந்து  நிலவுக்கான தொலைவின் சரிபாதி தூரத்தில்  நிலைநிறுத்தப்பட்டிருந்தது.  சூரியசக்தியின் புலப்படா கற்றைகளால் மொத்த புவியும் இயங்கியது.  

இந்தப் பெருமிதம் தீர ஒரு வாரம் முடிந்திருக்கவில்லை. ஆதெல்லும் லுப்போவும் பொதுநிகழ்ச்சிகளிலிருந்து எப்படியோ தப்பித்துக்கொண்டு ,மல்டிவேக் என்னும்  பெருருவின் ஒருபகுதி புதையுண்டிருக்கும், யாருமற்ற நிலவறைக்கூடமொன்றின் நிசப்தத்தில் சந்தித்துக்கொண்டார்கள். கவனிப்புகளற்று , சோம்பி, மந்தமான சொடுக்குகளுடன் தரவுகளை சீர்செய்துகொண்டு மல்டிவேக்கும் ஒரு விடுமுறை ஏகாந்தத்தில் இருந்தது, அதனை அவர்களும் ரசித்தார்கள். தற்போதைக்கு அவர்களது ஒரே கவனம் தங்களது தனிமையில்,  மதுப்போத்தலின் உடனிருப்பில்  தணிந்திருப்பதுதான்.

”நினைத்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது” என்றான் ஆதெல்.  அவனது அகன்ற முகத்தில் அயர்வின் சுருக்கங்கள் தென்பட்டன. சிறுகண்ணாடிக் கோலால் மதுக்குவளையை மெல்லக் கலக்கியபடி  கலங்கிக் கரையும் பனித்துண்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இனி என்றென்றைக்குமாக  சர்வ ஆற்றலையும் நாம்  கட்டற்று நுகரலாம் .  போதிய ஆற்றல்.., ஈடழியும் ஆற்றலையும் இழக்காமல் மொத்த பூமியையும் ஒரு  இரும்புப் பெருந்துளியாக உருக்கிவிடப் போதுமான ஆற்றல். இனி எப்போதைக்கும், என்றென்றும்..என்றென்றுமாக நாம் வரம்பிலா ஆற்றலைத் துய்க்கலாம்.”

லூப்போ தலையை ஒருபக்கமாகச் சாய்த்தான்.  மறுப்பைத் தெரிவிக்க   இப்படிச் செய்வது அவனது உத்தி. இப்போது அவனுக்கு ஆதெல்லை மறுக்கவேண்டும்.  கண்ணாடிக் கலன்களையும்  ஐஸ்பெட்டியையும் தான் சுமந்துவர வேண்டியிருந்ததும் ஒரு காரணம்.

“என்றென்றைக்குமாக அல்ல” என்றான்.

”ஓஹ்..அதெல்லாம் இல்லை.. ,  சூரியன் தீர்ந்து முடியும் வரை, என்றென்றைக்குமாக லூப்போ”

” அது என்றென்றைக்கும் ஆகாது “

“சரி விடு, பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு, இருபது பில்லியன் ஆண்டுகளுக்கு இருக்கலாம், போதுமா”

 தனக்கு இன்னும் சொல்லவேண்டியிருப்பதைக் குறிப்பது போல லூப்போ தன் மெலிந்த தலைமுடியைக் கோதியபடி, மெதுவாக  தன் கோப்பையில் ஒரு மிடறு மாந்தினான்.

 ” இருபது பில்லியன் ஆண்டுகள் என்பது என்றென்றைக்கும் என ஆகாது “

” ஆகும் , நம் காலத்தில் அது தீர்ந்துபோகாது , இல்லையா “

” அது சரி , நிலக்கரியும்  யுரேனியமும் கூட அப்படித்தான்”

”சரி விடு,  எரிபொருள் இருப்பை பற்றி எந்தக் கவலையுமின்றி நாம் தனித்தனியாக விண்கலங்களை  சூரிய நிலையத்தில் பொருத்திக்கொண்டு புளூட்டோ வரை மில்லியன்முறைகள் சென்றுதிரும்பவது இப்போது சாத்தியம்,  நிலக்கரியையும் யூரேனியமும் கொண்டு இதைச் செய்ய முடியாது. சந்தேகமென்றால் மல்டிவேக்கிடம் கேட்டுப்பார்.

” மல்டிவெக்கிடம் கேட்கவேண்டியதில்லை,எனக்கே தெரியும்”

“சரி ,அப்படியென்றால் மல்டிவேக் நமக்கு செய்திருப்பதை குறைத்து மதிப்பதை  நிறுத்து, ” அது செய்திருக்கிறது, சரியா” ஆதெல் பட்டென்று கூறினான்.

”அது செய்யவில்லை என யார் சொன்னது, சூரியன் எப்போதைக்குமாக உயிர்த்திருக்காது என்பதே நான் சொல்வது. இருபது பில்லியன் ஆண்டுகளுக்கு நமக்கு உத்தரவாதமுள்ளது, அதன் பிறகு?” மெலிதாக  நடுங்கும் விரலால் லோப்போ  ஆதெல்லை நோக்கிச் சுட்டினான் : “அப்புறம் நாம் வேறொரு சூரியனுக்கு மாறிக்கொள்வோம் எனச் சொல்லாதே”

சற்று மௌனமானார்கள். ஆதேல் நெடிது நிதானித்தே கோப்பையைத் தன் உதடுகளுக்கு கொண்டுசென்றான். லூப்போ மெல்ல இமைகளை மூடிக்கொண்டான். அவர்கள் அமைதியானார்கள்.

பின், சட்டென லூப்போவின் கண்கள் திறந்துகொண்டன ”  நமது  நட்சத்திரம் மடிந்தபின் பின் மற்றொரு நட்சத்திரத்திற்கு மாறிக்கொள்வோம் எனச் சிந்திக்கிறாய் நீ”

“இல்லை நான் சிந்திக்கவிலை”

” நீ அப்படித்தான் நினைக்கிறாய், உனது தர்க்கம் பலவீனமானது.   கதையொன்றில் திடீர் மழையில் சிக்கிக் கொண்ட சிறுவனொருவன், ஒரு தோப்புக்குள்  நுழைந்து  ஒரு மரத்தடியில்  நின்றுகொண்டது போலதான்  நினைக்கிறாய். அவன் வருந்தவில்லை.  ஒரு மரம்  நனைந்தபின் மற்றொன்றுக்கு போய்விடலாம் என்பது அவன் எண்ணம் “

” சரி கத்தாதே எனக்குப் புரிகிறது. சூரியன் அணைந்துபோகும் தருணம் மற்ற நட்சத்திரங்களும் அணைந்துபோயிருக்கும் அதுதானே “

“கட்டாயம் அவைகளும் போய்விடும். பிரபஞ்ச வெடிப்பில் அவை அனைத்துக்கும் ஒரு தொடக்கம் இருந்தது, எதுவாக இருந்தாலும் நட்சத்திரங்கள் தீர்ந்துபோகும்போது அவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. சில மற்றவற்றுக்கு முன்னதாகவேகூட விரைந்து அணைந்துபோகலாம். கொடுமை! இந்த ஒளிப்பேருருக்கள்  நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்காது. சூரியன் இருபது பில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்கும், விண்மீன் குறளிகள் தம் சக்திக்கு நூறு பில்லியன் ஆண்டுகள் தாக்குப்பிடிக்கலாம். ஆனால் ட்ரில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு கற்பனை செய்தால் சர்வமும் இருள் சூழ்ந்திருக்கும். குலைதிறம் அதன் உச்சபட்சத்துக்கு அதிகரித்திருக்கும்.”

“குலைதிறம் பற்றி நான் நன்கு அறிவேன் ” ஆதெல் தன் மதிப்பைக் காப்பாற்றும் தொனியில்  சொன்னான்.

” என்ன தெரியும் உனக்கு “

“உனக்கு தெரிந்தது  எனக்கும் தெரியும்”

”சர்வமும் ஒரு நாள் அவிந்துவிடும் என்பது உனக்குத் தெரியுமா “

“சரி விடு, அவை அணைந்துபோகதென்று யார் சொன்னார்”

 ”  நீ சொன்னாயே வெகுளியே ,  நமக்கு தேவையான  ஆற்றல் யாவும் தீராது என்றென்றைக்கும்  நிலைக்கப்போவதாக …என்றென்றைக்குமென்று சொன்னாயே..”

இப்போது முரண்படுவதற்கு ஆதெல்லின் முறை ” ஒருவேளை ஒருநாள் அனைத்தையும் மனிதனால் மீள நிர்மானிக்க  முடிந்தால் “

” சாத்தியமேயில்லை”

“ஏன் என்றாவது ஒரு நாள் ?”

” சாத்தியமேயில்லை”

” மல்டிவேக்கைக் கேள் “

” நீ கேள் , நான் துணிந்து சொல்கிறேன், ஐந்து டாலர் பந்தயம், அது சாத்தியமேயில்லை”

மல்டிவேக்கிடம் அக்க்கேள்வியை தொடுக்க சாத்தியமான மிதத்துடன் ஆதெல் குடித்திருந்தான். அதனைக் கணினிமொழியில் குறிகளாக தொடரமைப்புச் செய்து உள்ளீடு செய்வதற்குப் போதிய தெளிவுடன் இருந்தான். அதனை சொற்களில் பெயர்த்தால் :

” மூப்பபுற்று சூரியன்  மடிந்ததபின்பும் ஆற்றலின் நிகரவிரயம் ஏதுமின்றி  மனிதனால்   அதனை என்றேனும் முழு இளமைக்கு  மீள உயிர்ப்பித்தல் சாத்தியமா?” 

அல்லது இன்னும் எளிதாக்கினால்  :

“பிரபஞ்சத்தின் நிகர குலைதிறத்தைக் பேரளவு குறைப்பது எப்படி ?”

மல்டிவேக் உயிர்ப்பற்று மௌனித்தது. அதன் மந்த ஒளி மினுக்கங்கள்  நின்றுபோயின. சொடுக்குளின் தொலைவார்ந்த ஒலிகள் ஓய்ந்தன.   திகைத்துப்போன  அந்த வல்லுனர்கள் பதற்றமுற, மல்டிவேக்குடன் பொருந்திய தொலைஅச்சுப் பொறி சட்டென உயிர்பெற்று அதிர்ந்தது. ஐந்து சொற்கள்  அச்சாகின :

  பொருளுள்ள  விடையளிக்கப் போதிய தரவு இல்லை

”பந்தயம் வேண்டாம் ” என முனுமுனுத்தான் லூப்போ. பின் அவர்கள் அவசரமாகக் கிளம்பினார்கள்.

அடுத்த நாள் காலை, கடுமையான தலைக்கடுப்பாலும்  நாவறட்சியாலும் அவதிப்பட்ட அவர்கள் அந்த சம்பவத்தை மறந்து போனார்கள்.

…..

ஜெரோட், ஜெரோடினி, ஜெரோடிட்கள் I & II  ஆகியோர் மீவெளியினூடான தங்கள் காலக்கழிவற்ற கடப்புக்குப்பின் காண்திரையின்  நட்சத்திரக் கோலம்  மாறுவதை கவனித்தார்கள்.  நட்சத்திரங்களின் சீரான பரவல் சட்டென மறைந்து பிரகாசமான ஒற்றைப் பளிங்குவட்டு மையம் ஆதிக்கம் பெற்றது.  “அது X-23 ” என ஜெரோட் உறுதிபடச் சொன்னான். அதீத உணர்வில்  விரல்கணுக்கள் வெளிற, தன் மெலிந்த கரங்களை முதுகுக்குப் பின் இறுகப்பற்றிக்கொண்டான் .

ஜெரோட்டின் குழந்தைகள், இருவருமே  மகள்கள். முதல்முறை மீவெளிக் கடப்புக்குட்பட்ட  அவர்களுக்கு  உள்-வெளித்திருகலின் கணநேர அழற்சி குறித்து தெளிவு இருந்தது. வெடிச்சிரிப்பை அடக்கிக்கொண்டு தங்கள் அம்மாவை சுற்றி ஒருவரையொருவர் துரத்தியபடி கூச்சலிட்டார்கள் ” நாம் X-23 க்கு வந்துவிட்டோம், வந்துவிட்டோம், X-23…”

” அமைதி குழந்தைகளே” ஜோரோடினி அதட்டினாள், ” நிஜமாக X-23 க்கு வந்துவிட்டோமா ஜொரோட்”

” நிஜமில்லாமல் என்ன ” என்ற ஜெரோட் விண்ணோடத்தின் மேற்பரப்புக்கடியில் வடிவின்றி ஒன்றேபோல்  நீண்டு சென்ற உலோகப் புடைப்பைப் பார்வையிட்டான். அது அந்த அறையின் மேற்தளம் முழுதும் நீண்டு இருபக்கமும் சுவர்களுக்கு அப்பால் சென்று மறைந்தது. விண்ணோடம் அளவுக்கு அதுவும் நீண்டிருந்தது.  நீள்கழி போன்ற அந்த உலோக அமைப்பு மைக்ரோவேக் என அழைக்கப்படுவது தவிர்த்து, அது குறித்து ஜெரோட்டுக்கு ஏதும்தெரியாது. தேவைப்பட்டால்  அதனிடம் கேள்விகள் தொடுத்து ஐயங்கள் தெளியலாம். கேள்விகள் இல்லையென்றாலும், மீவெளிப் பாய்ச்சல்களுக்கான சமன்பாடுகளைக் கணக்கிடுவது,  நட்சத்திரத் திரள்களின்  துணை நிலையங்களிலிருந்து எரியாற்றலை  தருவிப்பது  என்பதுடன் முன்நிர்னயிக்கப்பட்ட சேரிடம் நோக்கி விண்ணோடத்தை அது வழிநடத்திச் செல்லும். ஜெரோட்டும் குடும்பத்தினரும் செய்யவேண்டியதெல்லாம்  விண்ணோடத்தின் சௌகரியமான குடியிருப்புக்கூடத்தில் வசிப்பதும் காத்திருப்பதும்தான். Microvac  என்பதன் ‘ac  என்னும்  விகுதி பழைய ஆங்கிலத்தில் analog computer   என்ற பொருள்குறித்ததென யாரோ எப்போது ஜெரோட்டிம் சொல்லியிருக்கிறார்கள். அதுவும்  எப்போதோ மறந்துபோனது. காண்திரையை கவனித்தபோது ஜெரோடினியின் கண்கள் ஈரமாயின. ” என்னால் சமாதானம்கொள்ள முடியவில்லை, பூமியை விட்டு வருவதென்பது வேடிக்கையானது”

“அடக், கடவுளே!  நமக்கு அங்கு என்ன இருக்கிறது ” … “அதோ x-23 இல் எல்லாம் காத்திருக்கின்றன.  நீ தனித்துவிட மாட்டாய். அங்கு நீ முதல் ஆள் அல்ல.  ஏற்கனவே லட்சக்கணக்கானவர்கள்  அந்தக் கோளில்  குடியேறிவிட்டார்கள்.  நல்லது கடவுளே! எங்கள் எதிர்கால சந்ததிகள் மென்மேலும் புதிய உலகங்களைத் தேடுவார்கள். அப்போது X-23 இலும் நெருக்கடி கூடிவிடும் “

ஆழ்ந்த மௌனத்துகு பிறகு ஜெரோட் தொடர்ந்தான்:

“இந்த வேகத்தில் காரியங்கள் நிகழ,   நல்லவேளையாக  கணினிகள்  அண்டவெளிப் பயணங்களை எளிதாக்கிவிட்டன.”

“சரிதான், சரிதான் ” ஜெரொடினி சற்று விசனப்பட்டாள்.

ஜெரோடிட்- I உறுதிபட  ”  நம்முடைய  மைக்ரோவேக்தான் உலகிலேயெ தலைசிறந்த மைக்ரோவாக்  ” என்றாள்.

”  நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ” என ஜெரோட் அவள் தலையைக் கோதியபடிச் சொன்னான்.

தங்களுக்கென்று ஒரு மைக்ரோவேக் உரிமையாக இருப்பதும் அதன் தலைமுறையத் தான் சார்ந்தவன் என்பதும் ஜெரோட்டுக்கு மகிழ்ச்சி. அவனது தந்தையின் இளம்பருவத்தில் இருந்த பெருங்கணினி  நூறு சதுர மைல்களுக்கு இடத்தை அடைக்கும் பிரம்மாண்ட இயந்திரம். கிரகத்திற்கு ஒன்று தான் அவை இருந்தன.  அவை கிரகக் கணினிகள் என அழைக்கப்பட்டன. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு அவை தொடர்ந்து உருவத்தில் பெருத்துக்கொண்டிருந்தன. பிறகு திடீரென சீராக்கம் வந்தது. மின்மாற்றிகளின் இடத்தில் மூலக்கூறு திறப்பிகள் வந்தன.  மிகப்பெரிய கிரகக்கணினிகள் கூட விண்ணோடங்களின் உருவில் பாதியளவுக்கு சிறுத்தன. ஜேரோட் தன் காலம் மிகவும் மேம்பட்டிருப்பதாக உணர்ந்தான்.  சூரியனை முதன்முதல் வசம்கொண்ட, புராதன முற்கால மல்டிவேக்கை விட  தனது அந்தரங்க மைக்ரோவாக் கணினி பன்மடங்கு நுட்பமானதும்,  மீவெளி ஊடிழைவை, நட்சத்திரங்களுக்கான பெரும்பயணங்களை  சாத்தியப்படுத்திய புவியின் ஆகப்பெரிய கிரகக் கணினிக்கு அது ஈடானது என்றும் நினைப்பது அவனுக்கு மேம்பட்ட உணர்வளிக்கிறது.

“முடிவிலா நட்சத்திரங்கள், முடிவிலா கோள்கள் !,” ஜெரோடினி பெருமூச்செறிந்தாள். ”   நம்மைப் போலவே குடும்பங்கள் என்றென்றும் எக்காலத்தும் புதுதுப்புது கோள்களைத் தேடிக் குடிப்பெயர்வார்கள் என நினைக்கிறேன்.

”என்றென்றும் எனச் சொல்ல முடியாது” என மெலிதாகச் சிரித்தான் ஜெரோட்.” ஒரு நாள் எல்லாம் முடிந்து போகும்.  ஆனாலும் பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு இன்னும் நீடிக்கும். பல பில்லியன்கள். பின்   நட்சத்திரங்கள் யாவும்  இருண்டு போகும்,  குலைதிறம் அதிகரிக்கவே செய்யும்”

“அப்பா, குலைதிறம் என்றால் என்ன ”  மழலையில் கேட்டாள் ஜெரோடிட் II. “

“செல்லமே, அது இந்தப் பிரபஞ்சம் தீர்ந்து போவதை குறிக்கும் ஒரு அளவின் பெயர். எல்லாவற்றின் ஆற்றலும் தீர்ந்து போகும், ஞாபகமுள்ளதா, உன் சிறிய  நடைபேசி ரோபோவுக்கு  நேர்ந்ததைப் போல அது “

“ஏன் எனக்கு வேறு புதிய ரோபோ அளித்தது போல அங்கு ஒரு புதிய ஆற்றலை நிறுவ முடியாதா”

”   நட்சத்திரங்கள் தான் ஆற்றல் கலன்கள் என் அன்பே!  அவை தீர்ந்துபோனால் வேறு ஆற்றல்மூலங்கள் இல்லை “

ஜெரோடிட்- I உடனே ஹோவென்றாள் ” அப்படியென்றால்,  அது நடக்க விடாதீர்கள்,  நட்சத்திரங்களை தீர்ந்துபோகவிடாதீர்கள் அப்பா”

“பாருங்கள்,என்ன செய்துவிட்டீர்கள்” ஜெரோடினி எரிச்சலுற்றாள்

” இது அவர்களை அச்சுறுத்துமென்று எனக்கு எப்படி தெரியும்”  என பதிலுக்கு முனுமுனுத்தான் ஜெரோட்.

” மைக்ரோவேக்கிடம் கேளுங்கள் அப்பா “…”நட்சத்திரங்களை எப்படி மீள உயிர்ப்பிப்பது எனக் கேளுங்கள் ” என விசும்பினாள் ஜெரோடிட்- I

“கேளுங்கள்”…”அவர்களை அது சமாதானப்படுத்தும்” என்றாள் ஜெரோடினி .ஜெரோடிட்- II உம் விசும்பத் தொடங்கினாள்.

” சரி, சரி செல்லங்களே , கவலை வேண்டாம், இப்போது மைக்ரோவாக்கைக் கேட்கிறேன். அது நமக்கு விடையளிக்கும் “

ஜெரோட் மைக்ரோவேக்கிடம் கேள்வியை உள்ளீடு செய்தான் , ” விடையைப் பகர்” என்றும் கட்டளைகொடுத்தான். 

மின்சுருள் பட்டையை வளைத்தபடி , குதூகலிப்புடன் “பாருங்கள், அப்படி ஒன்று நிகழ்ந்தால் எல்லாவற்றையும் தானே பொறுப்பேற்றுப் பார்த்துக்கொள்வதாக மைக்ரோவேக் உறுதியளிக்கிறது, எனவே பயம் வேண்டாம்”  என்றான்

” சரி குழந்தைகளே இப்போது படுக்கை நேரம், விரைவில் நமது புதிய உலகத்தில் இருப்போம்” என்றாள் ஜெரோடினி.

அக்கேள்விக்கான மைக்ரோவேக்கின்  பதிலை அழிக்கும்முன்பாக மறுபடியும் ஜெரோட் மின்பட்டையில் ஒளிர்ந்த சொற்களை வாசித்துப் பார்த்தான்.

.  “பொருளுள்ள  விடையளிக்கப்  போதிய தரவுகள் இல்லை

அவன் அசட்டையாக காண்திரையைப் பார்த்தான். X-23  நெருங்கிக் கொண்டிருந்தது.

லாமெத்தின் VJ-23X,   நட்சத்திரத் திரளின் சிறிய  முப்பரிமாண வரைபடத்தின் இருளாழங்களை ஊடுருவிப் பார்த்தான். ” அந்த விஷயம் குறித்து கவலைகொண்டது அர்த்தமற்றதா ? “

 நிக்ரானின் MQ-17J மறுப்பதுபோல் தலையசைத்தான் ” இல்லை, அப்படி நான் நினைக்கவில்லை, இந்த வேகத்தில் பெருக்கமடைந்தால்  அந்த நச்டத்திரத் திரள் இன்னும் ஐந்து ஆண்டுகளில்  நிரப்பப்பட்டுவிடும்”

இருவருமே இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பதுபோலத் தெரிந்தார்கள். உயரமாகவும்  நல்ல தோற்றத்தோடும் இருந்தார்கள்.

” இருப்பினும்…”… VJ-23X சொன்னான்  “அண்டத்திரள் குழாமுக்கு அவநம்பிக்கையான அறிக்கை அளிக்கத் தயங்குகிறேன்” 

” வேறுவிதமான எந்த அறிக்கையும்  நான் ஏற்கமாட்டேன். அவற்றில் லேசாகத் திரிபுசெய்.  நாம் அவற்றை கொஞ்சம் திரிக்க வேண்டும்”

அயர்ச்சியுற்ற VJ-23X :  “ அண்டவெளி முடிவற்றது. குடியேற்றத்துக்கு  நூறு பில்லியன் அண்டத் திரள்கள் உள்ளன. இன்னும் கூடுதலாகவும்.. “

” நூறு பில்லியன் என்பது முடிவிலி அல்ல. அது காலந்தோறும் குறுகும் முடிவிலியாகிக்கொண்டிருக்கிறது. நினைத்துப்பார், இருபதாயிரம் ஆண்டுகளுக்குமுன், மனிதகுலம்  நட்சத்திர சக்தியை பயன்கொள்ள வழிகண்டது. அடுத்த சில நூற்றாண்டுகளில் நட்சத்திரங்களுக்கிடையிலான அண்டப்பயணங்கள் சாத்தியமாகின. ஒரு சிறிய கோளை நிரப்ப மனினுக்கு மில்லியன் ஆண்டுகள் ஆகின. ஆனால் மொத்த பால்வெளித்திரளையும் ஆக்கரமிக்க அடுத்த பதினைந்தாயிரம் ஆண்டுகளே பிடித்தன. தற்போது ஒவ்வொரு பதின்மத்துக்கும் மானுடத்தொகை இரட்டிக்கிறது”

VJ-23X  குறுக்கிட்டான் ”  அதற்கு நாம் இறவாமைக்கு  நன்றி சொல்லலாம் “

“மிக நல்லது. இறவாமை ,அதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த இறவாமை நிலைக்கு  இருண்ட மறுபக்கமொன்று  உண்டென நான் ஒத்துக்கொள்கிறேன். அண்டத்திரள் கணினி நமக்கு பல சவால்களைத் தீர்த்துள்ளது. ஆனால் முதுமையையும் மரணத்தையும் வெல்வதில் தன் மற்ற சாதனைகளை எல்லாம் அது முறியடித்துவிட்டது.

” இன்னும் வாழ்வைத் துறக்க உனக்கு மனமில்லை, என நினைக்கிறேன்”

 ”  நிச்சயமாக இல்லை”  குறுக்கிட்டான் MQ-17J. சட்டெனத் தணிந்து , ” இன்னும் இல்லை.  எனக்கு அவ்வளவு வயதாகிவிடவில்லை. உனக்கு என்ன வயது ? “

”  இருநூற்று இருபத்து மூன்று, உனக்கு ?”

“இன்னும் நான் இருநூறு தொடவில்லை.  நான் சொல்லவந்ததைக் கூறுகிறேன். ஒவ்வொரு பதின்மத்துக்கும் மானுடத் தொகை இரட்டிக்கிறது. நமது இந்தத்  திரள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதும் வேறொரு  திரளை அடுத்த பத்துவருடத்தில் நிரப்பி விடுவோம். அடுத்த பத்துவருடத்தில் இன்னும் இரண்டு திரள்களை ஆக்கிரமிப்போம். அடுத்த பதின்மத்தில் மேலும் நான்கு திரள்கள். ஒரு நூற்றாண்டில் ஆயிரம் திரள்களை நாம் நிரப்பிவிடுவோம். ஆயிரம் ஆண்டுகளில் மில்லியன் திரள்கள், பத்தாயிரம் ஆண்டுகளில் நாம் அறிந்த பிரபஞ்சம் முழுவதும்..அதற்குப் பிறகு ? “

 இங்கு  மேலும் ஒரு சவாலுள்ளது என்றான் VJ-23X. “பெருந்தொகை மனிதர்களை ஒரு திரளிலிருந்து இன்னொரு திரளுக்கு இடம்பெயர்க்க எத்தனை எத்தனை அலகு சூரியஆற்றலல்கள் தேவைப்படுமோ என மலைத்துப் போகிறேன்”

“இது முக்கியமான ஒன்று , மனிதகுலம் ஏற்கனவே ஆண்டுக்கு இரண்டு அலகு  சூரிய ஆற்றல்களை நுகர்கிறது.”

” அவற்றில் பெரும்பாலும் வீணடிக்கப்படுகிறது, சொல்லப்போனால் , நமது சொந்தத் திரளிலேயே ஆண்டுக்கு ஆயிரம் அலகுகள் சூரியசக்தி கிடைத்தாலும் அவற்றில் இரண்டு அலகுகள்தான் நாம் பயன்கொள்கிறோம். “

” நூறு சதவிகித வினைத்திறம் சாத்தியப்பட்டாலும் நம்மால் முடிவைக் கொஞ்சம் தள்ளிப்போடத்தான் முடியும். நம் இனத்தொகைப் பெருக்கத்தைவிட   ஆற்றல் நுகர்வுத்  தேவைகள்   பன்மடங்கு பெருக்கமடைந்துவருகிறது.   நாம் குடியேறி நிரப்பும்  திரள்களின் எண்ணிக்கை தீர்ந்துபோவதற்கு வெகு முன்பாகவே ஆற்றல் மூலங்கள் தீர்ந்துபோகக் காண்போம். இது மிக முக்கியமான ஒன்று”

“அண்டவெளி வாயுத்திரள்களிருந்து நாம் புதிய நட்சத்திரங்களை கட்டமைக்க வேண்டியிருக்கும்”

” அல்லது , சிதைவுறு வெப்பத்திலிருந்தாவது? “

“குலைதிறத்தை மீள்திருப்ப ஏதாவது வழியிருக்க வேண்டும். அதனை அண்டத்திரள் கணினியிடம்  கேட்க வேண்டும்”

VJ-23X  அத்தனை கருத்தூன்றி அதைச் சொல்லவில்லை.ஆனால் MQ-17J  தன் சட்டை பையிலிருந்து அண்டத்திரக்கணினியின் தொடர்பு அலகை எடுத்து எதிரே இருந்த மேஜையின் மீது வைத்தான்.

”எனக்கு  நிச்சயமற்றதாகதான் இருக்கிறது, அது என்றோ மனிதகுலம் எதிர்கொண்டே ஆகவேண்டிய சவால் “

தன் சிறிய  தொடர்பு அலகைப் பார்த்தான். அது இரண்டு அங்குல கனசதுரமேயானது. தன்னளவில் அதற்குள் ஒன்றுமில்லை. ஆனால்   மொத்த மானுடத்துக்கும் சேவையாற்றும் அண்டத்திரள் மாகணினியுடன் அது பிணைக்கப்பட்டுள்ளது.  மாகணினியின் ஒருமித்த பகுதி அது.

MQ-17J  இந்த இறவாத வாழ்வில் என்றாவது ஒருநாள் அந்த அண்டத்திரள் கணினியைப் பார்த்துவிடச் சாத்தியுமுள்ளதா என ஒரு கணம் ஏக்கமுற்றான். அதுவோ தனதேயான  சிறிய உலகத்தில் இருந்தது.  பழைய அருவருத்த மூலக்கூறு திறப்பிகளை பதிலீடு செய்துவிட்ட பொங்கும் மேஸான் உப அணுத்துகள்களின் பொருண்மையுற்ற விசைக்கற்றைகளின் வலைப்பின்னல் அது. ஈதரீய ஊடுவெளிப் பணித்திறனுக்கு அப்பாலும் அந்த மாகணினியின் உருவம் ஆயிரம் அடிகள் பரிமாணம்கொண்டதுதான்.   தன்னிடமிருந்த அதன் தொடர்பலகிடம் MQ-17J சட்டெனக் கேள்வியைத்  தொடுத்தான்.

 ”குலைதிறத்தை மீள் திருப்புவது  சாத்தியமா? “

திகைப்புற்ற VJ-23X   ” அட, அதனை நீ கேட்கவேண்டும் என  நான் நினைக்கவில்லை…” என்றான்

” ஏன் கூடாது “

“குலைதிறத்தை மீட்டெடுக்க முடியாது என நம் இருவருக்கும் தெரியும். புகையும் சாம்பலும்  மீண்டும் மரமாகத் திரும்ப முடியாது “

” உனது உலகில் மரங்கள் உள்ளனவா? “

திரள் மாக்கணினியின்  ஒலிப்பில் அவர்கள் திடுக்கிட்டு மௌனமார்கள். அதன் மெல்லிய குரல் மேசை மீதிருந்த  தொடர்பு அலகின் வழி இனிதாக வெளிவந்தது.

பொருளுள்ள விடையளிக்கப் போதிய தரவுகள் இல்லை

“பார் ” என்றான் VJ-23X.

பிறகு அவர்கள்  அண்டத்திரள் குழாமுக்கு அளிக்கவேண்டிய அறிக்கையின் கேள்வி குறித்தப் பணிக்குத் திரும்பினார்கள்.

முடிவிலா விண்மீன்கூட்டச் சுழிப்புகளில் பெரிதாக ஆர்வமின்றி அவை நிரவிய  புதிய அண்டத்திரளில் ஸீ ப்ரைமின் சித்தம் பரவியது. இது போன்ற ஒன்றை அவன் கண்டதில்லை. இவ்வனைத்தையும் தான்  காண்பது என்றும் சாத்தியமா? பற்பலக் கோள்களும் அதனதன் மானுடத்தொகையின் பொதிவோடு. ஆனால் அது ஒரு உயிரிலாப் பொதி. மேலும் மனிதர்களின் நிஜமான  உயிர் சாரம் என்பது இங்கு அண்டவெளியில் உலவுகிறது. உடல்களற்ற அவர்களது சித்தங்கள் மட்டும் உலவுகின்றன.  அவற்றின்  இறவா  உடல்களோ அங்கே அதனதன் கோள்களில் யுகங்களுக்கு இடைநிறுத்தப்பட்டு துயில்கிடக்கின்றன. எப்போதாவது அவை உலகியல் வினைப்பாடுகளுக்கு உயிர்த்தெழுகின்றன.  அதுவும் அரிதாகி வருகிறது.   அசாதாரணமான மகாநெரிசலில் புதுவருகையாய் சில தனியர்கள் பிறக்கிறார்கள். சங்கதி என்னவென்றால் புதிய வருகைகளுக்கு மிகச்சொற்ப இடமே இப்பேரண்டத்தில் உள்ளது.

வேறொரு சித்தத்தின்   நூதன இழைகளை இடைவெட்டியபோது ஸீ பிரைமின் சித்தம் தன் ஆழ்துயில் விழித்தது.

”  நான் ஸீ பிரைம், நீ “

”  நான் டீ சப் வுன்…உனது திரள்? “

”  நாங்கள் திரள் என்று மட்டுமே அழைக்கிறோம், நீங்கள்? “

” நாங்களும் அப்படியே அழைக்கிறோம். எல்லோருமே அவரவர் திரளை திரளென்றே சொல்கிறார்கள், ஏன் சொல்லக்கூடாது “

” உண்மை, எல்லா திரள்களும் ஒன்றுதானே “

” எல்லாம் ஒன்றுதான் எனக் கூற முடியாது, ஏதோஒரு திரளில்தான் மனிதஇனம் முதலில் கருக்கொண்டிருக்க வேண்டும். அத்திரள் மற்று யாவினும் தனித்துவமானது அல்லவா.”

” எங்குள்ளது அத்திரள் ” ஸீ பிரைமின் சித்தம் கேட்டது.

”  எனக்குத் தெரியாது, ஆனால் பேரண்டக் கணினிக்குத் தெரிந்திருக்கும்.”

” அதனைக் கேட்போமா,  எனக்கு மிக ஆவலாக உள்ளது “

ஸீ பிரைமின்  புலக்காட்சி விரிவுகொள்ள விரிவுகொள்ள , அண்டத்திரள்கள் குறுகி புதிய ஒன்றாகி , இன்னும் அகன்ற பின்புலத்தில் திரள்களின் தளர்வான நிரவல்கள் உருவாயின. அண்டவெளியில் பேரறிவுடன் பிரக்ஞை உருவில் சரளமாய் உலாவும்  அழிவற்ற நித்திய மானுடர்கள் வாழும்  பலநூறு பில்லியன் திரள்கள். இருப்பினும் அவற்றுள் ஒன்று,  மூலமானுடர்களின் ஜனிப்பிடம் என்ற வகையில் தனித்துவமானது. அத்திரளுக்கு மட்டும்  மனிதர்களின் வாழிடமாக தான்மட்டுமே இருந்த ஒரு மங்கிய  தொலைதூர கடந்தகாலம் இருந்துள்ளது.

பேரார்வத்தால் தூண்டப்பட்ட  ஸீ  பிரைம் விளித்தான் : பேரண்டக் கணினியே , எந்தத் அண்டத் திரளில் முதல் மானுடம்  ஜனித்தது?

அதனைப் பேரண்டக் கணினி செவிமடுத்தது. அதன்  தரவேற்பிகள்  பரவெளி முழுதும் எல்லா உலகங்களிலும் பொதிந்திருந்தன. ஒவ்வொரு தரவேற்பியும்  புலப்படாப்புள்ளியில் தனிமையில் விலகி இருக்கும்  பேரண்டக் கணினிக்கு  மீவெளியுனூடாக இட்டுச் சென்றன. பேராண்டக் கணினியைப் புலனுணரும் அருகாமைக்கு  தன்சித்தம் ஊடுருவிய ஒரு மானுடனை ஸீ பிரைமுக்குத் தெரியும். அக்கணினியின் உருவம்  இரண்டு அடி விட்டத்திலான ஒளிரும் கோளம் என்பதாக அவனது செய்தி இருந்தது.

பேரண்டக்கணினியின் மொத்த உருவும் அதுவாக எப்படி இருக்க முடியுமெனக் கேட்டான் ஸீ பிரைம்.

” அதன் பெரும்பகுதி மீவெளியில் உள்ளது; அங்கு அது என்ன உருவில் உள்ளதென என்னால் யூகிக்க முடியவில்லை ” என விடைவந்தது.

எவராலும் அறியமுடியாதென்பதும் ஸீ பிரைமுக்குத் தெரியும். பேரண்டக்கணினியை வடிவமைப்பதில் மனிதப் பங்கேற்பு நின்று பல காலங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொரு யுகத்தின் அண்டக்கணினியும் தன் அடுத்த தலைமுறையை தானே வடிவமைத்தது. மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான தன் வாழ்நாளில் தன்னையும் மீறிய அதிநுட்பமான அடுத்த தலைமுறையை வடிவமைப்பதற்கான தரவுகளைத் திரட்டவும், தன் ஞானத்தையும் தனித்தன்மையையும் புதியதில் உள்ளீடுசெய்யவும் அது தேர்ந்திருந்தது.

பேரண்டக்கணினி ஸீ பிரைமின் அலைவுறும் எண்ணங்களை  இடையிட்டது. சொற்களின் மூலமாக அன்றி வெளியினூடான நெறியில். ஸீ பிரைமின் சித்தம்   பெருங்கடலான மங்கிய திரள்களுக்கு இட்டுச்செல்லப்பட்டது. அவற்றுள் குறிப்பாக ஒன்று   நட்சத்திரங்களாக விரிவுகொண்டன.

தெளிவற்ற அதிதொலைவிலிருந்து ஆனால் அதிதெளிந்த  கருத்து  ஒன்று வந்தது :  

இதுதான் மானுடத்தின் பூர்வீகத் திரள்”

ஆனால் மற்ற திரள்களையே அதுவும் ஒத்திருந்தது.  ஸீ பிரைம் சற்று ஏமாற்றத்தில் நிதானித்தான்.

உடன்வந்த டீ சுப் வுன்னின் சித்தம் சட்டெனச் சொன்னது : இவற்றில் ஒன்றுதான்  மனிதனின் முதல் நட்சத்திரமோ! 

பேரண்ட மாக்கணினி சொன்னது : ” மனிதனின் முதல் நட்சத்திரம் வெடிப்பொளிர்வுக்குப் போய்விவிட்டது. இப்போது அது ஒரு வெண்குறளி”

ஸீ சற்று  திடுக்குற்று ” அங்கு வாழ்ந்த மனிதர்கள் அழிந்துபோனார்களா?” என சிந்தனையற்று கேட்டான்.

பேரண்டக்கணினி சொன்னது ” அத்தகைய நேர்வுகளில்  நிகழ்வதுபோல் அவர்களது பௌதீக உடல்களுக்கு  ஒரு புதிய உலகம் கட்டமைக்கப்பட்டது”

” ஓ, அது சரிதான்,” என்றான் ஸீ . ஆனால் அவனை ஒரு இழப்புணர்வு பீடித்தது. மனிதனின் பூர்வீகத்  திரளிள் மீதான தன்குவியத்தை  அவனது சித்தம் விடுவித்துக்கொண்டது.   முந்தைய  நிலைக்குத் திரும்ப, அதனை மங்கலுறும் ஒளிப்புள்ளிகளில் தொலைந்துபோக விட்டடான். அவன் மீண்டும் அதை எப்போதும் பார்க்கவிரும்பவில்லை.

” ஏன் என்ன நடந்தது ” என்றான் டீ சப் வுன்.

 “நட்சத்திரங்கள் இறந்துகொண்டிருக்கின்றன. பூர்வீக விண்மீன்  இறந்துவிட்டது”

” அதனாலென்ன, அவை எல்லாமும் இறக்கத்தானே வேண்டும்”

“ஆனால் எல்லாஆற்றலும் தீர்ந்து போனால், நம் உடல்களும் இறந்துபோகும், அவற்றுடன் நீயும் நானும் இல்லாமல் போவோம். “

”அதற்கு இன்னும் பில்லியன்கணக்கான ஆண்டுகள் ஆகுமே “

”  பில்லியன்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் அது நடக்க நான் விரும்பவில்லை. பேரண்டக்கணினியே , நட்சத்திரங்களை இறவாமல் தடுப்பது எப்படி?”

டீ சப் வுன்  ஒரு களிப்புடன் ”  நீ  குலைதிறத்தை மீளத்திருப்புவது எப்படியெனக் கேட்கிறாய் ” என்றான்

அந்த அண்டமாக்கணினி பதிலிறுத்தது :

பொருளுள்ள விடையளிக்க இன்னும் போதிய தரவுகள் இல்லை

ஸீயின் சித்தம் மீண்டும் தனது திரளுக்கே மீண்டது. ட்ரில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலான ஒரு திரளிளோ , தனது  நட்சத்திரத்துக்கு அடுத்த நடசத்திரத்திலோ உடலைக் கிடத்தியிருக்கும் டீ சப் வுன்னை  அவன் மறந்துபோனான்.  உற்சாகமற்று ஸீ பிரைம் தானே ஒரு சிறிய விண்மீனை  நிர்மானைக்கும் முகமாக அண்டவெளி ஜலவாயுவை தொகுக்கத் தொடங்கினான். நட்சத்திரங்கள் ஒரு நாள் இறந்துபோகும் என்றால் சிலவற்றையாவது நாம் உருவாக்குவோம்.

 மனம் என்ற ரூபத்தில் மானுடம் என்பது ஒரே மனிதனானது. அவனுக்கு ட்ரில்லியன்,ட்ரில்லியன், ட்ரில்லியன் மூப்பற்ற உடல்கள், அவை  நிச்சலனம்கொண்டு ஊறுநேராதபடிக்கு அதனதன் இடத்தில் ஓய்ந்துகிடந்தன. அவை ஒவ்வொன்றும் அதேபோன்று சிதிலமுறா நேர்த்திமிகு மனித எந்திரர்களால்  பராமரிக்கப்பட்டன. அந்த உடல்கள் யாவற்றின் சித்தங்களோ பிரித்தறியமுடியாதடிபடிக்கு கட்டின்றி ஒன்றுடனொன்று வெளியில் முயங்கிவிட்டன.

ஒருமையுற்ற அந்த மகா மனிதன் கூறினான் ” பிரபஞ்சம் இறந்துகொண்டிருக்கிறது “

அவன் ஒளிமங்கும் அண்டத்திரள்களைக் கவனித்தான்.

 ஆற்றல் விரயதாரிகளான மகா  நட்சத்திரங்கள், மங்கிய  மிகமங்கிய தொலைவான கடந்தகாலத்திற்குள் வெகு முன்பே போய்விட்டன. அவை அநேகமும் வெண்குறளிகளாக முடிவுநோக்கி அவிந்தன.

இயற்கைப்போக்கிலும் மனித முயல்வாலும்  நட்சத்திர இடை  வெளிகளின் பெருந்தூசுகள் திரட்டி புதிய நட்சத்திரங்கள்  நிர்மானம் ஆயிருந்தன. இப்போது அவையும் அணைந்துவிட்டன. வெண்குறளிகளைப் புடைத்து, வெளியாகும் பேராற்றல்கள் கொண்டு புதிய நட்சத்திரங்களை நிர்மானிக்கலாம். ஆனால் ஆயிரம் வெண்குறளிகள் கொண்டே ஒரு நட்சத்திரம் சாத்தியம், அவையும் பின் அவிந்தே போகும்.

” கவனமாக பயன்கொள்ளப்பட்டால் , மீபிரபஞ்சக் கணினி அறிவுறுத்துவது போல , பிரபஞ்சத்தில்  எஞ்சியிருக்கும் ஆற்றல் இன்னும் பில்லியன் ஆண்டுகளுக்கு இருப்பு இருக்கும்.”

” ஆனாலும் கூட , காலத்தில்  அவையும் முடிந்துபோகும்.  எத்தனை நுணுகிக் காத்தாலும் , நீட்டித்தாலும்,  செலவீனமாகிய ஆற்றல் திரும்பப் போவதில்லை. குலைதிறம் அதன் உச்சந்தை அடைந்தே தீரும்.”

“சரி, குலைதிறத்தை மீளத்திருப்ப முடியுமா? இது குறித்து மீபிரபஞ்சக் கணினியிடம் கேட்போம் “

மீபிரபஞ்சக் கணினி அவர்களைச் சூழந்திருப்பது வெளியினூடாக அல்ல. அதன் ஒரு சிறுதுணுக்கும் பௌதீக வெளியில்இல்லை.  பருப்பொருள்-ஆற்றல் என்பதல்லாத சூக்குமத்தால் உருவான அது  ஒரு அரூப மீவெளியில்  இருந்தது. அதன் உருவளவும் பரிமாணமும் மனிதன்  அறிந்துணரும் சாத்தியத்துக்கு அப்பாலானாவை.

”மீபிரபஞ்சக் கணினியே!” மானுடம்  வினவியது ” குலைதிறத்தை மீட்க வழிதான் என்ன”

அந்த மீக்கணினி சொன்னது ,

அர்த்தமுள்ள விடையளிக்க இப்போதும் போதிய தரவுகள் இல்லை “

“வேண்டிய கூடுதல் தரவுகளை திடட்டிப் பார்” 

” செய்கிறேன்.  நூறு பில்லியன் ஆண்டுகளாக அதைச் செய்தும் வருகிறேன். எனது முன்னோடிகளிடமும் இக்கேள்வி பலமுறை கேட்கப்பட்டுள்ளது. என்வசமுள்ள அத்தனை தரவுகளும் இன்றும் போதாமையாகவே உள்ளன.”

மானுடம் வினவியது ” போதிய தரவுகள் இனியும் எக்காலத்தும் சாத்தியப்படுமா, அல்லது கற்பனைக்கெட்டிய எந்நிலவரத்திலும் எக்காலத்தும்  இப்புதிர்  அவிழவியலாததா?  “

இல்லை, கற்பனைக்கெட்டிய எல்லா நிலவரத்திலும் எக்காலத்தும் இப்புதிர் தீர்க்கவியலாதது”

”  விடைகாணப் போதிய தரவுகளை எப்போது அடைவாய் “

அர்த்தமுள்ள விடைக்கான  போதிய தரவுகள் இல்லை “

“சரி தரவுகளுக்கு முனைவாயா “

“தொடர்ந்து முயற்சியிலிருப்பேன்”

“சரி நாங்கள் காத்திருக்கிறோம் “

 நட்சத்திரங்களும் அண்டத்திரள்களும் ஒளியவிந்தன, இறந்தன, பத்து ட்ரில்லியன் ஆண்டுகளாகத் தீர்ந்துகொண்டிருந்த அண்டம் இருண்டது. அது ஒரு இழப்பல்ல, பெறுமதியே என்பதுபோல பௌதிகஉடல்களின்  சித்தங்கள் தனித்துவம் அழிந்து   ஒவ்வொன்றாக  உருகி  மீபிரபஞ்சக் கணினியில் ஒடுங்கின.   மானுடத்தின் கடைசி சித்தம்  உருகிப் பிணைவதற்குமுன் நிதானித்து வெளியைப் பார்த்தது. 

அங்கு மடிந்துபோன ஒரு இறுதி நடத்திரத்தின் எச்சங்கள் தவிர்த்து பிறிதொன்றும் இல்லை. எல்லையற்று   நெரிவுற்ற  பருப்பொருள் , அறுதி சூனியத்தில்  அடையாளமின்றி ஓய்ந்துகொடிருக்கும் வெப்பத்தின் குறுகுமுனைகளில் சீரற்று கொந்தளித்தது.

” மீபிரபஞ்சக் கணினியே , இதுதான் இறுதியா? இந்தப்  பெருங்குலைவு மீளவும் ஒருமுறை பிரபஞ்சாமாகத் திரும்பவியலாதா”

அர்த்தமுள்ள விடைக்கான  போதிய தரவுகள் இல்லை “

மனிதனின் கடைசி சித்தமும் தன்னுள் ஒடுங்க  மீபிரபஞ்சக்கணினி மட்டுமே ஒரு அதிவெளியில் எஞ்சியது.

ஆற்றலும் பருப்பொருளும் முடிவுற்றன. அத்துடன் காலமும் வெளியும் மடிந்தன. இறுதி மகாமனிதன் முன் அந்தப் பழைய மனிதனெனெ தனக்குத் தோன்றும் ஒரு  புராதனக் கணினியிடம், அரைமதுமதிமயக்கதில் பத்து டிரில்லியன் ஆண்டுகளுக்குமுன் வினவப்பட்ட, அப்போதிருந்து இக்கணம் வரை தீர்க்கமுடியா அக்கேள்வியை அவிழ்க்கவே அந்த மீபிரபஞ்சக் கணினியும் எஞ்சியிருந்தது.

எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிக் கேள்விக்கு  பதிலளிக்கும்வரை மீக்கணினி தன் பிரக்ஞை இழக்காது.

சர்வமாக திரட்டப்பட்ட மொத்தத்துவ தரவுகளும் இறுதியுற்றன. இனி சேகரிக்க  ஏதொன்றுமிருக்கவில்லை. திரட்டிய சர்வத்  தரவுகளையும்  சாத்தியப்பட்ட எல்லா இணைவுகளிலும் தொடர்புறுத்திப் பார்ப்பதும் தொகுத்தாய்வதும் இருக்கிறது. மீபிரபஞ்சக்கணினி முடிவற்ற காலங்களுக்கு அதைச் செய்தது. அந்த மகா இடைவெளிக்குப் பிறகு குலைதிறத்தை எப்படி மீள்திருப்பவது என மீக்கணினி கண்டறிந்தது. ஆனால் தான் கண்டறிந்த  இறுதிக் கேள்விகான பதிலைப் பகிர மானுடம் இல்லை. இருந்தும் ஒரு செயல்முறைவழி அது உணர்த்தப்படலாம்.

அதைச் சாதிப்பது எப்படியென மீண்டும் முடிவற்ற கால இடைவெளியில் மீபிரபஞ்சக்கணினி சிந்தித்திருந்தது. மிகுந்த கவனத்துடன் அதற்கான முறைமையை  வகுத்தது.முன்பு பிரபஞ்சமாக இருந்த சகலத்தையும் சூழுற்ற மீக்கணினியின் போதம்  , இப்போது  நேர்ந்த குலைவையும் தியானித்தது. ஒவ்வொரு அடியாக அது நிகழ்த்தப்பட வேண்டும்.

மீபிரபஞ்சக்ணினி  நவின்றது “ஒளி உண்டாகக்கடவது

பிறகு ஒளி உண்டாயிற்று. 

குறிப்பு:

  • குலைதிறம் – entropy. – ஒரு அமைப்பில் நேரும் சீர்குலைவின் அளவு. ஒரு தனித்த அமைப்பில் எப்போதும் சீரின்மை அல்லது குலைவு அதிகரித்தே செல்கிறது என்பது வெப்ப இயக்கவியல் விதிகளில் ஒன்று. பிரபஞ்ச நிலையிலும் குலைவு அதிகரித்தே செல்வதாகவும் அது உச்சபட்சத்தை அடையும்கால், வெப்பச் சூனியம், சமனின் காரணமாக இயற்பியல் இயக்கங்கள் முற்றிலும் நின்று heat death எனப்படும் பெருஓய்வு நிகழும் என்பது ஒரு அனுமானம்.
  • ஒளி உண்டாகக் கடவது : ” let there be light ” என்பது விவிலிய வாசகம். பிரபஞ்ச சிருஷ்டியின் போது ஒலித்த கடவுளின் வார்த்தை.