— கவிஞர் மஞ்சுளா தேவி

கவிஞரின் கணவராய் இருத்தலை விட
கவிஞரின் மனைவியாய் இருத்தல் கொஞ்சம்
இலகுவானதுதான்.
கவிஞரின் கணவராய் இருத்தல் என்பது
ஓடும் அணில்பிள்ளை போல்
நிறைந்திருக்கும் சொற்களை நீவிக் கொடுத்தல்
தான் கணவன் அல்ல காதலன் என்று உணர்தல்
மூன்றாய் பிளந்திருக்கும் அவளின்வெந்தயத் தளிரில்
தான் ஒரு தளிர் என உறுதி கொள்ளல்.
உணவுமேசை மீது இறைந்துகிடக்கும்
நட்சத்திரங்களை நகர்த்திவைத்துவிட்டு
நான்கு இட்லிகளை விண்டு உண்ணுதல்.
விரித்துக்கிடக்கும் புத்தகங்கள் நிறைந்த
படுக்கையில் அவளுக்கும் தனக்கும் என
ஓர் இடம் செய்தல்.
குழந்தைகள் விளையாடும் ஒரு வீட்டை
குளிர்குழை கூழாங்கல் என அவளுக்குக் கையளித்தல்.
சாதாரணளுக்குள் இருக்கும் அசாதாரணளையும்
அசாதாரணளுக்குள் இருக்கும் சாதாரணளையும்
உயிர்ப்பித்தல்.
தன் உள்ளங்கை வெப்பத்துக்குள்
அவளின் உலகத் துயர்களை தூசாக எரித்தல்.
சொற்கள் அவளைத் தின்பதும்
அவள் சொற்களைத் தின்பதும் ஒன்றென உணர்தல்.

மலை ஏறும் அணங்கு இறங்கும் என்று
கையில் பானகத்தோடு காத்திருத்தல்.
கவிஞரின் கணவராய் இருத்தல் என்பது
அவள் பருகும் விசத்தைத் தொண்டையோடு
தடுத்துநிறுத்தல்.