-நாச்சியாள் சுகந்தி

கனை ஹாலில் இருந்த சோபாவில் தூங்க வைத்தார். எல்லா அறைகளின் விளக்குகளையும் ஒன்றுவிடாமல் அணைத்தார். கிச்சனுக்கு போய் ஒரு சொம்பு நிறைய தண்ணீரைக் கடகடவென குடித்தார். பீரோவில் இருந்து கணவர் முதன்முதலாக வாங்கிக்கொடுத்த மஞ்சள்நிற பூனம் சேலையை எடுத்தார். அறையில் எரிந்துகொண்டிருந்த ஜீரோ வாட்ஸ் பல்பும் அணைந்தது. 

முருகவேல் வழக்கம்போல போதையில் இருந்தான். அவன் கழுத்தில்  சேலையைச் சுற்றி இறுக்கினாள். திடீரென ஹாலில் இருக்கும் சோபாவை நோக்கி பூனை போல ஓடினாள். உறங்கிக்கொண்டிருந்த சுதாகரை எழுப்பிக் கூட்டி வந்தாள்.

*******

துறைமங்கலம் ஏரி இந்த மழைக்கும் நிரம்பாமல் காய்ந்து கிடந்தது. அகன்று விரிந்திருந்த ஏரியின் நடுவே குட்டை போல நீர் தேங்கியிருந்தது. அந்த ஏரி முழுக்க கருவேலம் மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. சுதாகர் மனம் சோர்ந்துபோய் கவலையாக இருக்கும்போதெல்லாம் ஏரிக்குள் இருக்கும் சிறுபாறையின் மீது வந்து உட்கார்ந்துகொள்வான். நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இப்போது அந்த பாறையின் மீது சுதாகர் உட்கார்ந்திருந்தான். அவனது மனம் ஏரிக்குட்டை நீரை விட மிக மோசமாகக் கலங்கியிருந்தது. அந்த கலங்கலில் கவலை அதிகமிருந்தது. கவலையைவிடவும் அதிகமாக,’ முத்தழகி  என்னப்போயி ஏமாத்திட்டு போயிட்டா’ என்கிற ஆதங்கம் இருந்தது.

நேற்று பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருக்கும் சில்லறை விலை உரக்கடைக்கு பி.டி  பருத்திவிதை கொடுக்க போயிருந்தபோதுதான் முத்தழகியைப் பார்த்தான். முத்தழகி இவனைப் பார்க்கவில்லை. அவளுக்கு கல்யாணமான பிறகு இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறான். இந்த ஏழு வருடத்தில் அவள் ஒல்லிக்குச்சி உடம்பு கொஞ்சமும் தேறவில்லை. கழுத்தில் மஞ்சள் கயிருடன் தங்கத்தில் தாலிக்கொடியும் கூடவே இன்னொரு செயினும் போட்டிருந்தாள். கைகளில் தங்க வளையலும் மூக்குத்தியும் கால்கொலுசுமாக பணக்கார முத்தழகியாக இருந்தாள். அவனோடு பழகிய முத்தழகி பாவாடை சட்டையிலோ நைட்டியிலோ அல்லது தொளதொளவென இருக்கும் சுடிதாரிலோதான் இருந்தாள். ‘என்ன சுதாகரு…வூட்ல வேலயில்லியா…ஏரிக்காட்டுல வந்து குந்திகிட்டு இருக்க’ என வெள்ளந்தியாகக் கேட்கும் முத்தழகிக்கு அழகே அவள் அந்த தெத்துப்பல்தான். 

’இந்த ஏழு வருஷத்துல என்னிக்காச்சும் என்னப் பத்தி  நெனச்சிருப்பாளா? அப்படி நெனச்சிருந்தா என்ன வுட்டுட்டு வேறவொருத்தன கட்டியிருப்பாளா? அந்த பய பெல்லு கம்பனியில வேல பாக்குற பயங்கிறதாலதான என்ன வுட்டுட்டு அவனெக் கட்டிக்கிட்டா? அவள நேர்ல எப்படியாச்சும் பாத்து நாக்கப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டாத்தான் எம்மனசு சாந்தியாகும்.  காசு,பணத்துக்காக காதலிச்சவன நட்டாத்துல வுட்டுட்டு போயிடுவாளுங்க. இவளுகளையெல்லாம் உயிரோட கொளுத்தனும். இவ பாட்டுக்கு மயிரே போச்சுன்னு போயிட்டா…நானு உசிர கையில புடிச்சுகிட்டு நாதாரியா சுத்திkகிட்டு கெடக்குறேன். . ’ முத்தழகி, நீ பண்ணுனது நியாயமா சொல்லு’ – சுதாகர் முத்தழகி நேரில் நிற்பது போல நினைத்து மனதுக்குள் புலம்பினான். நேற்று அவளைப் பார்த்த போது ஏற்பட்ட அதிர்ச்சியும் தன்னை விட்டுவிட்டு போய்விட்டாளே என்கிற கோபமும் இயலாமையும் சேர்ந்து அவனை இரவு முழுதும் தூங்க விடவில்லை. இரவு முழுதும் கொட்டக்கொட்ட முழித்திருந்து, ’எப்படா விடியும், எதாவது காரணம் சொல்லி வீட்டைவிட்டு வெளியே போகலாம்’ என காத்திருந்தவன் என்றும் இல்லாத வகையில் கருக்கலிலேயே வீட்டை விட்டு வெளியேறினான். எங்கு போவது என தெரியாமல் அவன் வீட்டிலிருந்து பொடிநடையாக நடந்து புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்து அங்கிருந்த டீக்கடையில் டீக்குடித்தான். குடித்த டீக்கு காசு கொடுத்தபோது, கடைக்காரர்,’என்ன தம்பி நம்ம தலைவரு புள்ள நீங்க…உங்ககிட்ட போயி காசு வாங்கறதா” என சொல்லி காசு வாங்க மறுத்துவிட்டார். அதுவே சுதாகருக்கு எரிச்சலாக இருந்தது. எங்குபோனாலும், தலைவரு புள்ள, தலைவரு புள்ள… என்ன மயிறு தலைவரு புள்ள. பள்ளிக்கோடம் படிக்கும்போதும் இதே தொல்ல தான். தலைவரு புள்ள நீனு …என்ன படிக்கிறன்னு சொல்லித் திட்டாத டீச்சருங்க கெடையாது. தலைவரு புள்ளைய எங்க இங்கிலிஷ் ஸ்கூல்ல படிக்க வச்சாரு. கவர்மெண்ட்டு ஸ்கூலு. எந்த ஸ்கூல்ல படிச்சாலும் படிப்பு ஏறல. படிப்பு வரலேன்னு    சும்மா விட்டானுங்களா… கட வச்சுக் கொடுத்தானுங்க. எனக்கும் ஏவாரத்துக்கும் என்ன சம்பந்தம். அதுவும் செருப்புக்கட….  அதுவும் படுத்துக்குச்சு.  ஆயா, தாத்தா, தம்பி, தங்கச்சி எல்லாம் திட்டாத திட்டு இல்ல.பேச்சாத பேச்சு இல்ல. இந்த தலைவரு அப்பங்காரன் அடிக்காத அடியா!படுபாவி, அவனோட அடிக்கு பயந்துகிட்டுத்த்தான் இந்த ஏரிப்பாறையில வந்து படுத்துக்கெடந்தேன். அப்பத்தான் ஆடு மேய்க்க வந்துச்சு முத்தழகி. பேச்சுத் தொணைக்கி அது எங்கிட்ட பேசுச்சு. பேசிப்பேசி, அது தான் லவ் பண்றேனு சொல்லிச்சு. கிருஷ்ணா தேட்டர்ல பகல் ஆட்டத்துக்கு படத்துக்கெல்லாம் கூட்டிட்டு போச்சு. எத்தினி படம் பாத்திருப்போம். ஒருவாட்டி திருச்சிக்கி அழைச்சிட்டு போயி மலைக்கோட்டயெல்லாம் பாத்தோம். அப்புறமா ஒருவாட்டி திருச்சி போயி, அங்கிருந்து கல்லணைக்கு போயிட்டு மாரிஸ் தேட்டர்ல படம் பார்த்திட்டு ராவுக்குத்தான் வூட்டுக்கு வந்தோம். பஸ்ஸு, திருச்சியிலிருந்து பெரம்பலூரு வரும்போது பாடாலூரு வந்துச்சுன்னா ரெண்டு பேரும் வேறவேற சீட்டு மாறி ஒக்கார்ந்து, யாருக்கும் யாரையும் தெரியாத மாதிரி பஸ் எறங்கி வூட்டுக்குப் போவோம். இப்படியெல்லாம் எங்கூட சுத்திப்புட்டு வேற ஒருத்தன கட்டிக்கிட்டு போயிட்டியே முத்தழகி..இது நியாயமா சொல்லு’ என மீண்டும் மீண்டும் அழுதான். 

அழுக அழுக, அவனின் துக்கம் அதிகமானது. கருவேலம் மரம் அடர்ந்த ஏரியில் மேயும் ஆடு,மாடுகளைத் தவிர்த்து மனிதர்கள் யாருமில்லை. கருவேல மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த ஒன்றிரண்டு காகங்களும் குருவிகளும் தன் கடமை தவறாது இரை தேடிக்கொண்டிருந்தன. சில துணை தேடிக்கொண்டிருந்தன. யாருமற்ற இடத்தில் வெளிச்சமும் இருளும் சம அளவில் கலந்த பொழுது சுதாகரின் துக்கத்தை  மேலும் மேலும் அதிகமாக்க அவன் இழவு வீட்டில் ஒப்பாரி வைத்தழுகும் கிழவிகளைப் போல கதறி அழுதான். அப்போது ஒன்றிரண்டு குருவிகள் அவனை உற்றுப் பார்த்தன. 

**************

சென்னை நந்தனம் சிக்னலுக்குஅருகில்  தேவர் சிலையிலிருந்து இடதுபுறமாகத் திரும்பும் சாலையின் நேர் ரோட்டில் இருந்து நான்காவது நிழற்சாலையில் இருக்கிறது டாக்டர் ஜெயந்தியின் மருத்துவமனை. டாக்டர் ஜெயந்திதான் தமிழகத்தின் முதல் மனநல மருத்துவர். இன்று தமிழகமெங்கும் இருக்கும் பிரபல மனநல மருத்துவர்கள் ஜெயந்தியின் மாணவர்கள். டாக்டர் ஜெயந்திக்கே ஒரு மருத்துவர் தேவைப்படும் அளவுக்கு ஒல்லியான தேகமும் மிக மெல்லிய குரலும் வாய்ந்தவர். அவரிடம் சிகிச்சைக்கென்று வந்தவர்கள் யாரும் இதுவரை குணமாகவில்லை என்கிற புகார் வந்தது இல்லை, சுதாகர் ஒருவனைத் தவிர. சுதாகர் ஜெயந்தியிடம் கடந்த நான்கு வருடங்களாக சிகிச்சை எடுத்து  வருகிறான்.  ஆனால் சுதாகரின் நடவடிக்கையிலோ குணநலனிலோ மனநலனிலோ எந்த மாற்றமும் இல்லை. சுதாகரின் அம்மா மணிமேகலையின் பிடிவாதத்தினால் மட்டுமே ஒவ்வொருமுறையும்  பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு வந்து டாக்டர் ஜெயந்தியை பார்த்து மருத்துவம் பார்க்கிறார்கள். மணிமேகலைக்கு தன் மகன் என்றாவது ஒருநாள் பூரண குணமாகி பழைய நிலைக்கு வந்துவிடுவான் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையினால் மட்டுமே , ஊரார் சொல்கிற வார்த்தைகளையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள்ளாமல்  அயராது ஜெயந்தியை தேடிவந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறாள். . ஜெயந்தி முன்னாள் அரசு தலைமை மருத்துவரும் பேராசியையும் கூட. உலக அளவில் பல விருதுகளை வாங்கியிருக்கிறார். 

ந்தமுறைதான் ஜெயந்தி மணிமேகலையிடம் ,’’ உண்மையில நான் ரொம்ப வருத்தப்படறேங்க. நானும் எனக்குத் தெரிஞ்ச எல்லா வைத்தியத்தையும் பார்த்துட்டேன். ஆனா, அவருக்கு குணமாகுற மாதிரியே தெரியல. எனக்கும் ,  மெடிக்கல் சயின்ஸுக்கு அவர் பெரிய சவாலா இருக்குறார். இனிமேல் நீங்க இங்க வர்றது வேஸ்ட். அவர் இருக்குற வரைக்கும் இந்த மருந்து மாத்திரையை தொடர்ந்து கொடுங்க. வேற எதாச்சும் கம்ப்ளெயிண்ட் இருந்தா வாங்க’’ என சொல்லி தன் தோல்வியை மனதார ஒப்புக்கொண்டதால் குனிந்த தலையுடன் எழுந்துபோனார் ஜெயந்தி. மணிமேகலை செய்வதறியாது  விக்கித்து நின்றாள்.வானம்  அவள் மனம் போல் இருண்டிருந்தது. 

*******

பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல் தூக்கிட்டுத் தற்கொலை என்கிற செய்தி தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. முருகவேலின் வீட்டு முன்பு கூட்டம் அலைமோதியது. முருகவேலின் மகள் கீதா சர்வேஸ்வரன் இப்போதைய பெரம்பலூர் எம்.பி. . ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற பந்தாவை எல்லாம் உதறிவிட்டு ’அய்யோ அப்பா, அய்யோ அப்பா’ என தலையில் அடித்து அழுதுகொண்டிருந்தார். கேமராக்கள் அவருடைய அழுகையையே திரும்பத் திரும்ப காட்டிக்கொண்டிருந்தன. .அவருடைய  அழுகையை பார்க்கும் யாருக்கும் அந்த அழுகை அப்படியே தொற்றிக்கொண்டது. முருகவேலின் தற்கொலை குறித்து விசாரணை செய்யப்படும் என காவல்துறை எஸ்,பி பேட்டி கொடுத்தார். எந்த கேமராவும் அமைதியாக உட்கார்ந்திருந்த மணிமேகலையையும் மணிமேகலையின் தோள்மீது சாய்ந்திருந்த சுதாகரையும் காட்டவில்லை.

*******

டாக்டர் ஜெயந்தி,’இனி என்னால் ஒண்ணும் செய்ய இயலாது’ என்று சொன்னவுடன் மணிமேகலைக்கு பைத்தியம் பிடித்தது போல இருந்தது. திருமணமாகி மூன்று வருடங்களாகியும் குழந்தை இல்லை என்று சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்கு மண் சோறு சாப்பிட்டு, வாரம் வாரம் எலுமிச்சை மாலை சாத்த… அந்த வேண்டுதலில் பிறந்தவன் தான் சுதாகர். பிறந்த இரண்டாவது வருடத்திலிருந்து அவனை உற்றுநோக்கிய போதுதான் மணிமேகலைக்கு புரிந்தது, சுதாகர் நார்மலான குழந்தை இல்லை என்பது. மற்ற குழந்தைகளை விட மிக தாமதமாகத்தான் நடந்தான். மூன்று வயதுக்கு பிறகுதான் பேசினான். ஆறு வயதில்தான் ஆன்னா, ஆவன்னா  எழுதப் பழகினான். மகனுக்கு எதோ பிரச்சனை இருக்கிறது என்று உணர்ந்த நாளில் இருந்து மகனைவிட்டு ஒரு நொடிகூட பிரியாமல் அவனுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தந்தாள். சாப்பிட, குளிக்க வைக்க, தானே ஆடை போட்டுக்கொள்ள… என ஒவ்வொரு விஷயத்தையும் அவனுக்கு ஒரு பயிற்சியை போல மீண்டும் மீண்டும் செய்ய வைத்து பழக்கினாள். சத்தான உணவு கொடுத்தாள். ஒவ்வொரு விஷயத்தையும் , படிப்பையும் பல நூறுமுறை சொல்லி சொல்லி கற்க வைத்தாள். தன் மகனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதே தெரியாமல் கட்சி ஆபீஸ், அரசியல் என அலைந்தார் முருகவேல். 

மணிமேகலையின் அர்ப்பணிப்பால் சுதாகர் எழுதப் படிக்க கற்றுக்கொண்டான். ஆனால் பள்ளிக்கூடம் சொல்லும் பாஸ், ஃபெயில் மார்க்குகளுக்கு அவன் பொருந்தவில்லை. மணிமேகலைக்கு அவனுக்கு படிக்கத் தெரிந்திருக்கிறது, டிவியில் ஓடும் பெயர்களை வாசிக்கத் தெரிந்திருக்கிறது, அதுபோதும் என்கிற திருப்தி கிடைத்தபோது மகன் பொதுத்தேர்வில் தேர்வாகாத  விஷயம்  ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் விட சுதாகருக்கு இளையராஜாவின் இசை மீது பெரிய ஆர்வமும் ஆசையும் லயிப்பும் இருந்தது. அந்த இசையின் லயிப்பின்போதுதான் முத்தழகியைப் பார்த்தான். 

முத்தழகி வந்ததும் அவனுக்குள் என்னென்னமோ நடந்தது. முதலில் தினமும் தவறாது குளிக்கத் தொடங்கினான். பிறகு கொஞ்சநாட்களிலேயே தலைவாரத் தொடங்கினான். அடுத்து கண்ணாடி பார்த்து ஆடை, அலங்காரம் சரியாக இருக்கிறதா என தன்னைத் தானே ரசிக்கத் தொடங்கினான். அவனது முன்னேற்றம் கண்டு மணிமேகலை மீண்டும் முதன்முதல் தாயானதைப் போல அழுதாள். ‘என் மகன் ஒரு ஆம்பளையாகிட்டான் ஆத்தா….அவனுக்கேத்த எதோ ஒரு மகராசிய அவங்கண்ணுல காட்டிட்ட ஆத்தா. என் கவல தீரவே நீ இப்படி ஒரு காரியம் பண்ணிருக்க ஆத்தா’ என சொல்லி சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனுக்கு பொங்கலிட்டு, ஊரைக் கூட்டி சோறு போட்டாள். அவள் சோறு போட்ட பதிமூன்றாவது மாதம்தான் முத்தழகி, திருச்சி பெல்லில் வேலை பார்க்கும் ஒரு ஃபிட்டரை திருமணம் செய்துகொண்டாள். அன்றிலிருந்து சுதாகர் மெல்ல மெல்ல குன்ற ஆரம்பித்தான். ஏரிக்கரைக்கு போவதை நிறுத்தினான். அவனுக்குள்ளேயே ஒடுங்கினான். மற்றவர்களிடம் பேசும் ஒன்றிரண்டு வார்த்தைகளையும் பேசுவதைத் தவிர்த்தான். மணிமேகலை உயிரைக் கொடுத்துக் கெஞ்சினால் சாப்பிட்டான். சிலநாட்களில் முழுப் பட்டினியாக இருந்தான்.  எப்போதாதவது வீட்டில் சொல்லும் யாரேனும் சொல்லும்  ஒன்றிரண்டு வேலைகளைச் செய்தான். அப்படி ஒருமுறை ஒரு வேலையை செய்ய பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு போனபோதுதான் முத்தழகியைப் பார்த்தான்.

********

‘’ஏம்முத்தழகி, நானு அழகா இல்லேன்னா யாரையோ கட்டிக்கிட்டு போயிட்ட”

“அய்யோ இல்ல சுதாகரு..ஒனக்கு எப்பிடி சொல்லி புரிய வைப்பேனு தெரியலியே’’

‘’நீனு எல்லாஞ்சொல்லு…எனக்குப் புரியும்.நா மக்கு இல்ல…. என்ன எதுக்கு வுட்டுட்டு போன…. ஒனக்கு கொஞ்சங்கூட எம்மேல பாசமே இல்லியா. எனக்கு ஒன்ன விட்டா யாரத் தெரியும் சொல்லு. எங்கம்மா, நீனு, ஒங்கவூட்டு ஆடு, மாடுக…இதுமட்டுந்தான எனக்கு தெரியும். அப்புறம் ஏன் என்ன வுட்டு போன… நா பாவம்னு ஒனக்கு தோணலியா…அய்யோ நாம வுட்டுட்டு போயிட்ட்டா சுதாகரு என்ன பண்ணும்னு நீனு நெனக்கலியா’’

‘’சுதாகரு, நா போனதுனாலதான் நீனும் நானும் உயிரோட இருக்கோம். இல்லாட்டா இன்னேரம் நீனும் செத்திருப்ப…இல்லாட்டா, நானும் செத்திருப்பேன்.’’ 

***********

ஆடுகளை ஏரிக்கரையிலிருந்து ஓட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு வரும் மண்சாலையில் சுடிதாரின் துப்பட்டாவை தலைக்கு போர்த்தியபடி மொபைல் போன் எப்.எம் –மில் பாட்டுக் கேட்டுக்கொண்டே வந்த முத்தழகியின் முன்பு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வாயில் சிகரெட்டு புகைத்துக்கொண்டே அவன் வந்தான். அவன் வேட்டியில் கட்சியின் கொடி கரையாக இருந்தது.

 ‘’ஏக்குட்டி, யாரு நீனு….சேவாயி பேத்தியா?’’

‘’ஆமாங்க, நீங்ங்…க ’’ என இழுத்தாள். 

‘’அடி… ஆடு மேய்க்கிற சிறிக்கி…பேச்சப் பாரு” என பேசிக்கொண்டே இருந்தவன் ஒல்லியான முத்தழகியின் அருகில் சென்றான். முத்தழகிக்கு அவன் மேல் அடித்த சாராய நாற்றமும் அவனது அருவெறுப்பான பார்வையும் நிலைமையை புரிய வைத்தது. அவன் அவளைத் தூக்கி தன் வலது தோளில் போட்டான்.   முத்தழகிஆட்டுக்கு  தழை அறுக்க  இடதுபக்க இடுப்பில் சொருகியிருந்த அருவாளை உருவி சட்டென அவனின் கெண்டைக்காலை அறுத்தாள். வலி தாங்க முடியாமல் அவன் , அவளை கீழே போட்டான்.  தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து தலை தெறிக்க முத்தழகி ஓட, விரட்டிப் பிடித்தான்.   

விரட்டிப்பிடித்தவன் அதேவேகத்தில் அவள் பாவாடையை பிய்த்து எறியாத குறையாக உருவினான். அவள் அலறினாள். அவன் எதையும் பொருட்படுத்தாமல் அவளை அந்த கணமே முற்றிலும் முழுதாக அனுபவிக்க துடித்தான். போதையும் அவளின் வியர்வை வாசமும் அவனை வெறியாக்கியது. அந்த வெறியில் ,’’ஏண்டீ, அந்த கிறுக்குப் பயல ஒனக்குப் புடிக்குது. சோடி போட்டுட்டு அவங்கூட தேட்டரு, கல்லணன்னு சுத்துற….எம்வூட்டுக்கு நீயி வந்தா அவென் ஒன்ன சோலி பாக்க மாட்டான். நாந்தான் பாக்கனும். இது தெரியுமா…தெரியாதா ஒனக்கு. ஒங்கப்பன் என்ன இப்படி செஞ்சுட்டான்னு  அவங்கிட்ட சொல்லுவியா…. சொல்லுவியா…. அப்படி சொன்னாலும் அந்த பயித்தியக்கார பயலாள என்ன செய்ய முடியும்? ஒருவேள சொன்னேனு வைய்யி, அதுக்குப்பொறகு  நீனும் அந்த பயலும் இதே ஏரியில தான் காக்காவும் கழுகும் கொத்தித் திங்குற பொணமா இருப்பீங்க. ம்ம்ம்ம்….அப்புறம் ஒஞ்சித்திகாரி சந்திரா எப்படி செத்தான்னு ஒங்காயா சேவாயிகிட்ட கேட்டுப்பாரு… போ… ஒனக்கு எம்.எல்.ஏ பையங்கேக்குதா…பிச்சக்கார நாயி”

தொடையில் வழிந்த ரத்தத்தோடு தரையில் கிடந்தாள்  முத்தழகி 

*******

இரவு, பசியையும் துக்கத்தையும் அதீதமாக அதிகரிக்கும். அதே இரவு மனதை ஆற்றுப்படுத்தி மிருக மனதை மனிதத்தன்மையின் எல்லைக்குக் கூட்டிச் செல்லும். இரவில் தான் அதி உன்னத விஷயங்கள்  நடந்தேறும்; அற்ப விஷங்களும் நடக்கும்.  இரவு ஒரு மாயவிநோதம்.

சென்னையிலிருந்து காரில் பெரம்பலூருக்கு திரும்பி வரும்போது, நல்லிரவைத் தாண்டியிருந்தது. மணிமேகலைக்கு மகனை குணப்படுத்த எந்த வழியும்  தெரியவில்லை. ’கொழந்தையா இருந்ததுல இருந்து மசமசன்னு இருந்த பயல கஷ்டப்பட்டு தேத்தி, எல்லாரையும் போல நார்மலான மனுஷனா ஆக்கிவுட்டா அந்த மதுரகாளியம்மா. அங்கயும் இங்கயும்னு அழகா போயிட்டு வந்திட்டு இருந்த எம்பையனுக்கு என்ன ஆச்சு….யாரு அவன என்ன செஞ்சா? காத்து கருப்பு அண்டியிருக்கும்னு நெனச்சு அலையாத கோயிலில்ல. வேண்டாத தெய்வமில்ல. என்ன ஆச்சுன்னே தெரியலையே. மொத்தமா பேச்சே இல்லாம, பாத்த எடத்தையே உத்துபாத்துக்கிட்டு ஒக்காத்து இருக்கான்.  பசிக்குதுன்னு கூட சொல்ல மாட்டேங்குறானே. நா இருக்குறவரைக்கும் அவன கண்ணா பாத்துக்குவேன். நா செத்துட்டா யாரு இவன பாத்துக்குவா…நா உயிரோட இருக்குறப்பவே பெத்த அப்பனே பயித்தியக்காரா, பயித்தியக்காரான்னு சொல்றாரு. நான் போயி சேந்துட்டா எம்புள்ள நெலம என்னாகும். சோறில்லாமயே செத்துடுவானா? அடியே மதுரகாளி இவன இந்த கதியாக்குறதுக்கா நான் உங்கிட்ட மடிப்பிச்ச வாங்கி இவன பெத்து வளத்தேன். எனக்கும் எம்புள்ள எல்லாரையும் போல ஆளா   இருக்கனும்னு ஆச இருக்குமில்லியா?   மனதுக்குள்லேயே அரற்றி அரற்றி அழுதாள்.  அழுததழுது அவள்  கண்களும் முகமும் வீங்கியதுதான்  மிச்சம்.    

காரை விழுப்புரத்தில் ஒரு சாலையோர மோட்டலில் நிறுத்தச் சொல்லி  சிறுநீர்க்கழித்து வந்தாள் மணிமேகலை. கார் டிரைவர் டீ சாப்பிடுவதை தூரத்திலிருந்து பார்த்தாள். மணிமேகலைக்கு பசிப்பதும் போலவும் பசிக்காதது போலவும் இருந்தது. ’மனசுக்கும் வயித்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?   மனசு கவலையா இருந்தா சுத்தமா பசிக்கிறதேயில்ல. பசிக்கும் மனசுக்கும் என்னா தொடர்புன்னு  யாராச்சும் ஆராய்ச்சி செஞ்சிருக்காங்களா? இந்தப்பய பசிக்குதும்மான்னு சொல்லி எம்புட்டு நாளாச்சு. நானா கட்டாயப்படுத்திக்  குடுத்தா கொஞ்சமா கொறிக்கிறான். வயிறு ரொம்ப எப்ப சாப்புட்டு பழையபடி மனுஷனா சுத்துவானோன்னு தெரியலையே மதுரகாளியம்மா’  என தனக்குத்தானே புலம்பியவள் சுதாகரின் சாய்ந்திருந்த தலையை சரி செய்து தன் மடியில் படுக்க வைத்தாள். சுதாகர் ஏதோ புலம்புவது போல அவளுக்குக் கேட்டது. இதைத்தான் அவன் கடந்த நான்கு வருடமாக புலம்பிக்கொண்டிருக்கிறான். தன் மனதுக்குள்ளேயே திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிறான். என்றாவது ஆழ்ந்து உறங்கும் அன்று அவனது மனதின் குரல் வெளியே கொஞ்சம் முனகலாகக்  கேட்கும். ஆனால் ஒன்றுமே புரியாது. எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த புலம்பல் புரியவேயில்லை.

மணிமேகலை, அவன் முகமருகே தன் காதைக் கொண்டுபோனாள். ‘’ஏம்ப்பா முத்தழகிய அப்படி பண்ணுன…. ஏம்ப்பா முத்தழகிய அப்படி பண்ணுன…அவ பாவமில்லியா….நா பாவமில்லியா….. பயித்தியகாரப்பய ,  பயித்தியகாரப்பயன்னு சொல்லிச்சொல்லி என்னக் கொன்னுட்டப்பா…என்னக் கொன்னுட்ட ’’ –  அவன் புலம்பியதைக் முதல் முறையாக புரிந்ததும் மணிமேகலைக்கு சர்வமும் ஆடியது. முகம் வியர்த்துக்கொட்டியது. கை,கால் என மொத்த உடலும் நடுங்கியது. அழுகையும் கோவமும் இயலாமையும் என சொல்லமுடியாத உணர்வு அவளை என்னென்னமோ செய்தது. அதேவேளையில், திடீரென ஏதோ அசுர பலம் உடல் முழுதும் புகுவது போல உணர்ந்தாள். ஒருவேளை மகனைப் போல தானும் ஆகிவிட்டோமோ என பயந்தாள். 

********* 

ணிமேகலை தன் கையிலிருந்த சேலையின் ஒரு பக்கத்தை சுதாகரிடம் கொடுத்தாள். சுதாகர் பலம்கொண்ட மட்டும் இழுத்தான். அவன் பத்து வயது சிறுவனாக இருந்தபோது  முருகவேல் தன் வீட்டு வயலில் இருந்த மோட்டர் ரூமில் சந்திராவை அவள் கட்டியிருந்த சேலையினால்  இப்படித்தான் கழுத்தை இறுக்கினான். பின்பு அவளை தரதரவென இழுத்து வந்து அங்கிருந்த மாமரத்தில் கட்டித் தொங்கவிட்டான். சுதாகர், முருகவேல்  செய்தது போலவே அச்சுப்பிசகாமல்  செய்தான்.  மாமரத்துக்குப் பதிலாக மின்விசிறி வாகாகத்தான் இருந்தது. 

சுதாகருக்கு  பசிக்க ஆரம்பித்தது.