அது எப்படி எனில்

இன்றிலும் நேற்றிலும்
காலத்தின் பிரக்ஞை அற்று
மாறிமாறி கிடக்கிறாய்

சில நேரம் நீ உண்டிருந்தாய்
சில நேரம் உண்ணவில்லை
நேற்று நீ காதலிக்கிறாய்
நாளை காதலிக்கப்பட்டாய்
இன்று உனக்கு காதலே இல்லை
நீ எப்போதோ இறந்துவிட்டாய்
அது உனக்கும் தெரியும்
ஆனாலும் நீ இப்போதும்
உயிரோடு இருக்கிறாய்

ரயில் பயணத்தில்
சூரிய வெளிச்சம் தாங்காமல்
நள்ளிரவில் விழிக்கிறாய்
நீ எந்த ஊரில் இருப்பதாய்
நினைத்தாயோ உண்மையில்
அந்த ஊரில் தான்
இருக்கிறாய்


வேறொன்றுமில்லை

அறிமுகமான நாளில்
ஒருவரின் பெயரை
மீண்டும் ஒருமுறை கூறிப்பார்க்கிறோம்
முடிந்த அளவு பேசுகிறோம்
அலைபேசி எண் கிடைத்தபிறகு
உரையாடும்போதெல்லாம் அட்டைப்படத்தை
பார்த்துக்கொள்கிறோம்
பெயர் பதிந்து போகிறது
கேட்டுக்கேட்டு சலித்த குரல்
கூட்டத்திலும் தனித்து தெரிகிறது
முகமும் பதிகிறது

நமக்குள் ஏற்றிய
ஒரு பெயரை
ஒரு குரலை
வலுக்கட்டாயமாய் மறப்பதற்கு
மொத்த வாழ்க்கையையும் துண்டங்களாக்கிப் படைக்கிறோம்
ஊனின் ருசி கண்ட ஒற்றை முகம்
புறங்கையை நக்கித் துடைக்கிறது
வேறொன்றுமில்லை
கையிலிருந்து சிதறிய
ஒற்றைத் துளி உதிரமும்
அந்த முகத்தைப் பிரதிபலிப்பதைத் தான்
நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதேயில்லை


ஒரு துளிப் பச்சையம்

நிலத்தில் வேரூன்றிய நெடுமரத்தில்
வேர்கள் மட்டுமே இருக்கிறது
முன்பொரு சமயம் தனதிரு கைகள் நீட்டி வாறி அணைத்துக்கொண்ட மழை
எரிமலையிலிருந்து பொழிந்ததென
அது அறிந்திருக்கவில்லை
வெக்கையில் உறைந்த மரத்தை
சிலர் பட்டுப்போனதென்றார்கள்
சிலர் வெட்டிவிடலாம் என்றார்கள்
வேர்களின் எஞ்சிய பச்சயத்தை நுகர்ந்தபடி
எங்கிருந்தோ அணில்குட்டியொன்று
வந்து சேர்கிறது
பேசிய முகங்களிலெல்லாம்
மரத்தின் அடர் கிளைகளிலிருந்து
குளிர் காற்று வீசுகிறது
கணப்பொழுதில்
ஒரு யுகாந்திர மழை பெய்திருக்கலாம்
அல்லது
கரித்திரையால் கசங்கிய அணிலின் கண்களிலிருந்து வேர்களில் விழுந்திருக்கலாம்
ஒரு துளிப் பச்சையம்