அ.ராமசாமி

டிஸ்கவரி புக்பேலஸின் நிலவெளி என்ற அச்சிதழின் நீட்சியாக வரும் ‘நகர்வு’ இணைய இதழ் தனது மூன்றாவது இதழைப் பெண்கள் சிறப்பிதழாகப் பதிவேற்றம் செய்துள்ளது. கவிதை, கதை, நூல் மதிப்புரை எனப் பெண்களின் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில் வரிசைப்படுத்தப்பெற்றுள்ள சிறுகதைகள்:       

  1. உமா மகேஸ்வரி – மோனா
  2. குதிரைச்சவாரி – நறுமுகை தேவி
  3. கொலப்பசி – நாச்சியாள் சுகந்தி
  4. பிடிமானக்கயிறு – அகிலா
  5. மறைப்பு – ப்ரியா
  6. உள்ளங்கை அல்லி – அம்பிகாவர்ஷினி
  7. வெள்ளைப்பூனை – லாவண்யா சுந்தரராஜன்

வாசிப்பைக் கட்டுப்படுத்துவது அல்லது கவனத்தைக்குவிப்பது என்பதற்குச் சில வழிகள் உண்டு. வாசிப்பவர்களுக்கு வழிகாட்டக்கூடும் என நினைத்து நூலின் முன்பகுதியில் இடம் பெறும் முன்னுரைகளும், பனுவலைக் குறித்த பின்னட்டைக் குறிப்புகளும்   வாசிப்பவர்களின் வாசிப்புகளைக் கட்டுப்படுத்தக்கூடியனவே.  இதழ்கள் வெளியிடும் சிறப்பிதழ்களும் அப்படியான கட்டுப்பாட்டை அல்லது கவனக்குவிப்பைச் செய்கின்றன. அதன் மூலம் குறிப்பிட்ட வகையான வாசகர்களைக் கவர நினைக்கின்றன. 

எழுத்தாளர் எழுதுபவராகச் செயல்படுவதுபோல, வாசகர் வாசிப்பவராக மட்டும் செயல்பட்டால் போதும். அவருக்கு வாசிக்கக் கிடைக்கும்  இலக்கியப்பனுவல் மட்டுமே  வாசிப்புக்கானது. ஆசிரியரின் பிற செயல்பாடுகளோ, அவருக்கிருக்கும் சமூக அரசியல் பார்வைகளோ, அவரின் கலை, இலக்கியப் பார்வைக்கோணங்களோ வாசிப்பின் குறுக்கே நிற்கக் கூடாது. அவற்றை வாசிப்பவர்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கும் வாசிப்பு ஒற்றைத்தள வாசிப்பாக  முடிய வாய்ப்புண்டு. ஒற்றைத்தள வாசிப்பு, வாசிக்கப்பட்ட பனுவல்களின் மீது கருத்தையோ, மதிப்பீடுகளையோ, விவாதப்புள்ளிகளையோ விமரிசனப்பார்வையையோ எழுப்ப முனைவதில்லை. வாசிப்பு என்னும் வினையை முடித்துவிட்டு பனுவல்களிலிருந்து விலகிக் கொள்ளும். ஆனால் ஒற்றைத் தளத்தைத் தாண்டிய வாசிப்பு முறைமைகளே விமரிசனத்தை நோக்கி நகரக்கூடியன.  

 ‘சிறுகதை வடிவம் ஒன்றிரண்டு நிகழ்வுகளையும் சில கதாமாந்தர்களையும் கொண்டதாக அமையவேண்டும்; கதைப்பொருண்மையின் மையத்தை முன்வைத்து விட்டு    அதற்குள் ஒரு திருப்பத்தையும் கதை முடியும்போது முன்வைக்கப்பட்ட மைய விவாதத்தின் மீது ஒரு புரிதலை அல்லது எழுத்தாளரின் முடிவைக் காட்டிவிட வேண்டும்’ என்ற மரபான சிறுகதை வடிவத்தைக் கொண்டுள்ளன. ஆனால் விவாதப்பொருண்மைத் தேர்வு, கதை சொல்வதில் கவனம், மொழியாளுமை, உரையாடல்களில் ஏற்படக்கூடிய நம்பகத்தன்மை போன்றவற்றைக் கவனித்து வாசிக்கும்போது எல்லாக் கதைகளும் திறன் மிக்க எழுத்தாளர்களின் வெளிப்பாடு என்று சொல்லமுடியவில்லை. 

நகர்வின் பெண்கள் சிறப்பிதழ் – என்ற வகைப்பாட்டுதொகுப்பு முயற்சியின் மீதான வாசிப்பைப் பொதுநிலை வாசிப்பாகச் செய்ய முடியாது. பொதுநிலை வாசிப்பைத் தவிர்த்துக் குறிப்பிட்ட வகை வாசிப்போடு பனுவல்களை அணுகும்படி வாசிப்பவர்களுக்கு நெருக்கடி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதற்குத் தயாரில்லாத வகையினரை விலக்கிவைக்கவும் செய்யும். பெண்கள் சிறப்பிதழில் எழுதியவர்கள் அனைவரும் பெண்கள் என்பதால், எழுதப்பெற்றுள்ள எல்லாமும் பெண்கள் மீதான கவனக் குவிப்பாக இருக்க வாய்ப்புண்டு என்ற முன்குறிப்போடு- முன்முடிவோடு வாசிப்புக்குள் நுழைய வேண்டியுள்ளது. முன்முடிவு பெரிதும் பிழையாகவில்லை. இடம்பெற்றுள்ள ஏழ கதைகளில் ஐந்து கதைகள் பெண்களை – பெண்களின் பிரச்சினைகளை – பெண் மன உணர்வுகளை கதைப்பொருளாக்கியுள்ளன.  

விலகிநிற்கும் இரண்டு கதைகளிலும் பெண்களே மையக்கதாபாத்திரங்களாக இருக்கிறார்கள் என்றாலும் எழுப்பப்பட்ட உணர்வுகளும் முன்வைக்கப்படும் விவாதமும் பெண்களுக்கானது மட்டுமல்ல. பால் வேறுபாடுகள் இல்லாது பொதுவான மனிதர்களுக்குரியன. மறைப்பு என்ற தலைப்பில் ப்ரியா எழுதியுள்ள கதை ஆண்களும் பெண்களுமான  கூலித்தொழிலாளிகளின் – கட்டிடத் தொழிலில் சித்தாள்களாக வேலை செய்பவர்களின் துயரச்சித்திரம் ஒன்றைத் தருகிறது. சொந்த ஊரைவிட்டுக் குடிபெயர்ந்து தற்காலிகக் குடியிருப்பில் இருக்கும் மறைப்பை முன்வைத்து அந்தக் கதையை உருவாக்கியுள்ளார். சொந்த ஊரில் விவசாயமும் வீடும் இருந்தபோதிலும் பெண் பிள்ளைகளின் திருமணத்தின் பொருட்டு நகரங்களுக்கு வந்து கட்டடத் தொழிலில் ஈடுபடுபவர்களின் துயரவாழ்வின் ஒரு கீற்றைப் பதிவுசெய்வதே அந்தக் கதையின் நோக்கம். இத்தகைய துயரச்சித்திரங்களை அதிகம் எழுதிய காலமாகத் தமிழ்ப் புனைகதை வரலாற்றில் எண்பதுகளையே சொல்லவேண்டும். அந்த வகையில் இந்தக் கதை நாற்பதாண்டுகளுக்கு முந்திய புனைகதைப் போக்கின் ஒரு தொடர்ச்சியாக இருக்கிறது 

 அம்பிகாவர்சினியின் உள்ளங்கை அல்லி கதை கடவுளை வணங்குவதில் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர்களின் உள்மனதின் நேர்மறைச் சக்தியையும் மனவோட்டத்தையும் எழுதிக்காட்டியுள்ள கதையாக நகர்த்தப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் அடுக்கப்படாத இந்தக்கதை முழுவதும் ஒருவித விவரிப்பும் அதற்குள் மனவோட்டங்கள் என்பதாக நகர்கிறது.  இவ்விரு கதைகளுமே சொல்முறையாலும் மொழிநடையாலும் புதிய கதைகள் என்பதான உணர்வைத் தரவில்லை.   

பெண் நிலைவாதக் கருத்துகளில் ஈடுபாடும் செயல்தளத் தளமுமே முதன்மையானது எனக் கருதும் பெண்ணியச் செயலாளிகள் இலக்கியவாதிகளாகவும் இருக்க நினைப்பதுண்டு. அப்படி நினைக்கும்போது அவர்களின் புனைவுகளில் இலக்கிய நுட்பங்களுக்கு முதன்மை குறைந்து, கருத்தியல் முன்வைப்புகள் முதன்மை பெற்றுவிடுவது எப்போதும் நிகழ்ந்துவிடுகிறது. அதனை அவர்கள் தெரிவுசெய்து முன்வைக்கும் எதிரிணைகள் வழியாகச் சுலபமாக அறிந்துகொள்ள முடியும். வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஏழு கதைகளில் நறுமுகை தேவியின் குதிரைச்சவாரியும் நாச்சியாள் சுகந்தியின் கொலப்பசியும் இந்த வகைப்பாட்டிற்குள் நிற்கின்றன. நிகழ்வொன்றின் போக்கில் ஒற்றைத் திருப்பம் நிகழ்ந்துவிட்டால் கதையாகிவிடும் என்ற புரிதல் அடிப்படையில் எழுதப்பட்ட கதை குதிரைச்சவாரி. திருமணம் செய்யாமலேயே எல்லாம் கிடைத்துவிடுகிறது; அதனால் திருமணத்திற்கு அவசரம் இல்லை என்றவன் மீது ஏற்பட்ட விலகல் நிலை, சட்டென மறைந்து அவனை விரும்புவதற்கும் பாராட்டுவதற்கும் அவனது ஒற்றைக் கூற்றே போதும் என நினைக்கும் அந்தப் பாத்திரத்தின் மனமாற்றம் இயல்பான மாற்றமாக இல்லை.  ‘ஒரு பாலியல் தொழிலாளியைத் திருமணம் செய்துகொண்டு, அவளது கடந்த காலத்தைப் பற்றி எதுவும் கேட்காமல் சேர்ந்து வாழவேண்டும்’ என்ற விருப்பத்தைக் கேட்டவுடன், அவனது நிலையை விஸ்வரூபம் கொண்டதாகச் சொல்லும் கதையின் கடைசிச் சொற்றொடரைச் சொல்வதற்காக எழுதப்பட்டது போலக் கதையின் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி ஆக்குவதுதான் கதையைச் செயற்கைத்தன்மை கூடிய கதையாக்குகிறது. 

நறுமுகைதேவியின் கதையில் கடைசியில் வெளிப்படும் செயற்கைத்தன்மை, நாச்சியாள் சுகந்தியின் கதையில் தொடக்கத்திலேயே வெளிப்பட்டுள்ளது. ஒரு மர்மக்கதையின் தொடக்கம் போல   கதை தொடங்குகிறது.   குடிபோதையில் இருக்கும் கணவனை – அவன் பிரியமாக வாங்கிக் கொடுத்த மஞ்சள் சேலையால் இறுக்கிக் கொலைசெய்யும் மனைவி. அந்தக் கொலையைச் செய்யும்போது தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பி அவனது உதவியோடு அந்தக் கொலையைச் செய்கிறாள். 

இந்த முக்கோணப்புள்ளிக்குள் – மணிமேகலையும் அவளது மகன் சுதாகரும் சேர்ந்து  கணவன் முருகவேல் எம்.எல்.ஏ.வைக் கொல்வதன் காரணங்கள் முன்கதையாக – முன்னோக்கு உத்தியாக அடுக்கப்பட்டுள்ளன. சாதி வேறுபாடெல்லாம் பார்க்காமல் -அறியாமல் ஏற்படும் காதலைத் தடுக்கும் சாதி ஆணவமும் அதிகார இருப்பையும் கேள்வி கேட்கும் கருத்தியலை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை காலத்தின் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. இப்படியான நிகழ்வுகளும் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திச் சாதி தாண்டிய காதலை – திருமண முறிவைச் சாதிக்கும் நிகழ்வுகள், இந்திய/ தமிழ்ச் சமூகம் தொடர்ந்து சந்தித்துக்கொண்டு இருக்கக் கூடிய நிகழ்வுகளே  . ஆனால் இந்தக் கதையில் வரும் அம்மாவைப் போலத் தனது மகனின் காதலை நிறைவேற்றக் கணவர்களைக் கொல்லும் பெண்களைத் தான் சந்திப்பது அரிதாக இருக்கிறது. 

குடும்ப அமைப்பில் சாதிய விருப்பமும் ஆணவமும் ஆண்களிடம் அதிகமா? பெண்களிடம் கூடுதலா? என்ற கேள்விக்குப் பெண்களிடம் குறைவாக வெளிப்படுகிறது என்று சொல்லிவிட முடியாது. அதே நேரம், நாச்சியாள் சுகந்தி எழுதிக்காட்டும் அம்மாவைப் போன்றவர்கள் இல்லவே இல்லையென்றும் சொல்லிவிட முடியாது. அப்படியிருக்கும் மிகக் குறைவானவர்களில் ஒருத்திதான் மணிமேகலை என்று காட்ட வேண்டுமென்றால் அந்தப் பெண்ணின் மனமாற்றம் கதைக்குள் நிகழ்வதாக எழுதிக்காட்ட வேண்டும். அப்படிச் செய்யாமல் திடீரென்று சாதியெல்லாம் பார்ப்பதைப் பொருட்படுத்தாது கணவனைக் கொல்ல நினைக்கிறார் எனக் காட்டும்போது நம்பகத்தன்மை தோன்றாமல் போய்விடும். கணவனின் அதிகாரத்தையும் பிற பெண்களின் மீது செலுத்திய பாலியல் வல்லுறவுகளையும் ஏற்க மறுத்த சில நிகழ்வுகளையாவது கதைக்குள் முன் நிகழ்வாகக்காட்டியிருக்க வேண்டும். அப்படிக் காட்டாமல் எழுதி முடிக்கத் தூண்டியது நாச்சியாள் சுகந்திக்குள் இருக்கும் செயல் முதன்மை மனம் என்று சொன்னால் அவர் ஏற்கத் தயங்கக்கூடும்; ஆனால் அதுதான் உண்மை.

இவ்விருவரின் கதையைப் போலல்லாமல் குடும்ப அமைப்பில் பெண்களின் நிலை இதுதான்; இவ்வளவுதான் அவர்களால் இயலக்கூடியது என்பதைக் காட்டும் கதையொன்றை எழுதிக் காட்டிக் குடும்ப அமைப்பின் மீதான தனது அதிருப்தியை மெல்லிய கோபமாகக் காட்டியுள்ளார் அகிலா. குடும்ப அமைப்பில் பெண்களுக்கான சுதந்திரம், அதன் எல்லை, அதன் இறுக்கம் என விவாதிக்கப்பட வேண்டியவற்றை எதிர்மறையாக விவாதிக்காமல் நேர்மறை மொழியில் விவாதிக்கும் இந்தக் கதை ‘வேறு வழியில்லை; இதற்குள் தான் பெண்கள் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்’ என்ற புலம்பலைச் சொல்லக்கூடிய கதையாக வாசிக்கும் வகையில் பிடிமானக்கயிறு நிகழ்வுகளை அடுக்கித் தந்துள்ளது.

இவ்வைந்து கதைகளிலிருந்தும் முற்றிலும் விலகிய புனைவுகளாக இருப்பன உமாமகேஸ்வரியின் மோனாவும் லாவண்யா சுந்தரராஜனின் வெள்ளைப்பூனையும் எழுத்தில் நீண்ட அனுபவமும் தொடர்ச்சியாக எழுதியெழுதிப் பழகிய பக்குவமும் கொண்ட இருவரும் உருவாக்கித் தரும் வாசிப்பு அனுபவங்கள் மற்றவர்களின் பனுவல்கள் உருவாக்கும் வாசிப்பனுவங்களைவிட நுட்பமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நான் வாசித்த வரையில் இதுவரையிலான உமா உமாமகேஸ்வரியின் புனைகதைகளில் வெளிப்படும் மென்மையான முன்வைப்பை இந்தக் கதையில் மீறியிருக்கிறார் என்றே சொல்லத்தோன்றுகிறது. இளைய ஆடவனோடு தனிமையில் பேசிக்கொண்டும் உடல் சார்ந்த நெருக்கத்தோடும் இருக்கும்    அம்மாவை ஏற்றுக் கொள்வதா? நிராகரிப்பதா? எனத் தவிக்கும் மோனாவிற்கு ஆறுதலாக ஒரு பாத்திரத்தை -நிதியை உருவாக்கிப் புதிய வெளியில் பயணம் செய்ய வைத்திருக்கிறார். தனது வேலையின் பொருட்டுத்   அம்மாவையும் தன்னையும் விட்டு விலகி இருக்கும் அப்பாவின் மீது அவளுக்கு இயல்பாக் கோபமும் வருத்தமும் ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படி ஏற்படக்கூடிய கோபத்தைத் தாண்டியதாக அம்மாவின் செயல்கள் தோன்றும்போது அந்தச் சின்னப்பெண் நிலைதடுமாறவே செய்வாள்; செய்கிறாள்.  அவளது தனிமையைத் தனது வருகையால் இட்டு நிரப்பும் இளைஞனை ‘மகளின் கணவனாக ஆக்க நினைக்கும் அம்மா’ என்பது நமது சமூகத்தில் பார்க்க முடியுமா?  கதையை வாசிக்கும்போது ஏற்படும் முக்கியமான கேள்வி. இதைத் தனது   ‘அப்பாவிடம் தடுமாற்றமில்லாமல் சொல்லிவிடும் மகள்’ என்பதும் நடக்க க்கூடியதா? என்பதும் இன்னொரு கேள்வி. இவ்விரண்டு கேள்விகளையும் தொடர்ந்து உருவாகும் முடிச்சுகளும் அதற்குப் பின்னான நகர்வுகளும் பல கேள்விகளோடு கூடியன. அப்படியான கேள்விகள் எழுவது இயல்புதான். இந்த இயல்பைத் தாண்டிய பிறழ்வுகளும் விலகல்களும் தான் அதிர்ச்சிகரமான வாழ்க்கையாக இருக்கின்றன. அப்படியொரு பிறழ்வைக் கதையாக்கிய – சின்னச் சின்ன நகர்வுகளாலும் பாத்திரங்களின் செயல்களாலும் சமாதானப்படுத்திவிடும் உரையாடல்களாலும் வாசிப்பவர்களை ஏற்கச் செய்கிறார் கதாசிரியர். தனது கதையின் சொல்முறையால் முழுமையடையச் செய்துள்ள உமா மகேஸ்வரியின் எழுத்து எப்போதும் போல ஈர்ப்புடன் இருக்கிறது.

லாவண்யா சுந்தரராஜனின் கதை கதையின் மையப்பாத்திரத்தின் தேர்வு மூலம் விவாதிக்கத் தக்க கதையாக மாறியிருக்கிறது.  பன்னாட்டுக் குழும நடைமுறைகள் பின்பற்றப்படும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நகரிய வாழ்க்கையை இதுவரை எழுதிக் காட்டிய புனைவுகள் பலவற்றை வாசித்திருக்கிறோம். பெரும்பாலும் உயர்கல்வியும் எல்லாத்தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் சம்பளமும் கொண்ட மனிதர்களையே அக்கதைகளில் சந்தித்திருக்கிறோம். உயர் நடுத்தர வர்க்க மனிதர்களுக்கிடையே இருக்கக்கூடிய- உருவாகும் புதிய வாழ்க்கை நடைமுறைகளையும், பணிசார்ந்த வெளியிலும் குடும்ப வெளியிலும் வெவ்வேறாக இருக்க வேண்டிய நெருக்கடிகளையும் எழுதிய புனைவுகள் உருவாக்கிய நம்பகத்தன்மை அது.  குறிப்பாக தேச எல்லைகளைக் கடந்த தகவல் தொழில் நுட்பத்துறையில் ஒருநாள் என்பதைக் கறாராகக்  கடைப்பிடிக்க முடியாத கால மாற்றம், ஆண் – பெண் உறவில் ஏற்படும் நெகிழ்ச்சிகள், அதனால் உருவாகும் புதுவகைக் குடும்பக் கட்டமைப்பு எனவும் கதைகள் எழுதப்பெற்றுள்ளன. இந்தப் பொதுப் போக்குகளிலிருந்து விலகிய கதையொன்றை வெள்ளைப்பூனையாகத் தந்துள்ளார் லாவண்யா சுந்தரராஜன் 

உயர்நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் நுழைபவர்களிடம் காணப்படும் தொழில் போட்டியும் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளத் துடிக்கும் தவிப்பும் புதிய தொழில் நுட்பப்பணிகள் சார்ந்த வேலைகளில் காணப்படும் பணிப்பண்பாடு. அந்தப் பண்பாட்டைப் பன்னாட்டுக்குழுமங்களின் குறிப்பான வேறுபட்ட பணிப் பண்பாடாகவே சொல்லலாம். இத்தகைய பணிப்பண்பாடு உயர்மட்டத்தில் மட்டுமில்லை;  அடிமட்டப்பணிகளில் ஒன்றான துப்புரவுப் பணிக்குள்ளும் நிலவுகிறது என்பதை நுட்பமாகச் சொல்கிறது கதை. இந்தப் பணிப்பண்பாடு இந்தியச் சாதிய மனோபாவத்தில் உயர்சாதி/ உயர்வர்க்க மனங்களில் தங்கியுள்ள நிறம் சார்ந்த/ தீண்டாமை சார்ந்த வேறுபாடுகளின் நீட்சியாகவும் இருக்கக்கூடும் என்ற எண்ணவோட்டங்களை உருவாக்கும் உரையாடல்களையும் கதை நிகழ்வு மாற்றங்களையும் கதையில் உருவாக்குகிறார் லாவண்யா. குடியிருப்புப் பகுதி மனிதர்களும் வேலைபார்க்கச் செல்லும் மனிதர்களும் வெள்ளை வண்ணத்தின் மீது காட்டும் மோகத்தையும் அசூயையும் நுட்பமாகச் சொல்கிறார்.  ஒவ்வொரு நிகழ்வும் கதை அடுக்குகளும் சொல்லப்படுகிறது என்பதை உணர்த்தாமல், தானாக நகர்கிறது என்பதைப்போல எழுதும் லாவகம் லாவண்யாவின் மொழிநடையாலும் விவரிப்புகளினாலும் சாத்தியமாகியிருக்கிறது.

பெண்கள் எழுதிய ஏழு கதைகளை ஒன்றாகத் தொகுத்துப் பெண்களின் பார்வைகளை ஒருசேர வாசிக்கவும் விவாதிக்கவுமான வாய்ப்பை உண்டாக்கியிருக்கும் நகர்வின் இந்தச் சிறப்பிதழ் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.சில கதைகள் ஏற்கெனவே வாசித்த கதைகளின் மாதிரிகளாகத் தோன்றுகின்றன; சில கதைகள் செயற்கைத்தன்மை தூக்கலான கதைகளாக உள்ளன. சில கதைகள் கவனித்துப் பேச வேண்டியனவாக இருக்கின்றன. இந்தக் கலவையான தொகுப்பிற்காக நகர்வு ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  

பிப்ரவரி இதழை வாசிக்க:

https://nagarvu.com/category/இதழ்-நகர்வு/பிப்ரவரி-2021-இதழ்-நகர்வு/