ஜெகநாத் நடராஜன்

1

வயற்காட்டில் இரவு நேரத்தில் அழுகுரல் கேட்பதாக ஊர் முழுவதும் பேச்சு பரவத்துவங்கியிருந்தது. ஆரம்பத்தில் யாருக்கும்  அந்தப் பேச்சு குறித்த ஆர்வமில்லாமலிருந்தது. ஆனால் தெருமுக்கு, பிள்ளையார் கோவில், காப்பிக்கடை என்று இரண்டு ஆட்கள் கூடுமிடத்தில் முதல் விஷயமாக அது பேசப்பட்டு, மூன்றாவது நான்காவது நபரும் சேர்ந்து கொண்டார்கள். சின்ன வயதுப் பயல்கள் செவிகொடுக்க வந்த போது பெரியவர்கள் விரட்டினார்கள். அவர்கள் வீட்டில் போய் அதை ரகசியம் போலச் சொல்ல பெண்களுக்கும் ஆர்வம் வந்தது. அவர்கள் கேட்க முயன்ற போது, ”வாய மூடிக்கிட்டு கெட, எவஞ்சொன்னான்?” என அடக்கப் பட்டார்கள். 

அதன் பின் அழுகுரலை முதலில் கேட்டவர் யார்? என்று அறியும் முயற்சி ஊருக்குள் துவங்கியது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஆரம்பித்து, எவருக்கும் யார் தமக்குச் சொன்னார்கள் என்று சொல்லத் தெரியாமல் அந்தத் தேடல் நின்று போயிற்று. ஊருக்குள் இப்படி எதாவது புரளிகள் பரவி, வந்தது போல் காணாமல் போவது வழக்கமான நிகழ்வுதான் என்பதால் யாரும் கவலைப்படவில்லை.

சில வாரங்களில் மீண்டும் அந்தப் பேச்சுவந்தது.சொன்னவன் சக்கிலியக்குடி கோட்டை. அதிகாலையில் கிழக்குத்தெரு அச்சமட்டியார், காப்பிக்கடையை திறக்க வீட்டுக்கதவை திறக்க வரும்போது, வாசலில் உட்காந்திருந்தவனைப் பார்த்து மிரண்டுவிட்டார், ”ஏல யாரு?” என்று பயமும் ஆவேசமுமாகக் கத்த, வீடு விழித்து, தெரு கூடிவிட்டது.

சக்கிலியன் கோட்டை நேராக சுடுகாட்டிலிருந்து வந்திருந்தான். முதல் நாள் ஊருக்குள் ஒரு சாவு.வாழ்ந்து அனுபவித்த கட்டை. ஆலியாட்டமும் வேட்டுமாய் சுடுகாடு கொண்டுவைத்துவிட்டு வந்த ஜனம் தூங்கிக் கொண்டிருக்கும் காலைவேளையில் கோட்டை வந்திருக்கிறான்.. முகம் பயமும் பீதியுமாகக் கிடந்தது. ”என்னடா? ஏன் இப்பிடி உட்கார்ந்திருக்க.” என்று கேட்ட குரலுக்கு முகம் பார்க்காமலேயே பதில் சொன்னான்.

”சாமீ, அழுக சத்தத்த கேட்டேன்.”

“கேட்டியா? ”

நாப்ன்கந்து பேர் ஒன்றாக்க் குரல் கொடுத்தார்கள்.

”பாத்தேன். நல்ல நெலவு வெளிச்சம்.தலைய விரிச்சுப் போட்டுக்கிட்டு பம்பு செட்டு தொட்டி மேல உக்காந்து அழுதுக்கிட்டிருந்துது. ”

”அப்புறம்?

”கையி காலெல்லாம் நடுங்கிடுச்சு. நடக்க முடியல தலசுத்துது கண்ணு இருட்டுது”

”என்னல சொல்லுத, சுடு காட்டுல பொணத்த எரிக்கற  நீயே இப்படிச் சொன்னன்னா?’ 

”பேயின்னா பயந்தாங்கள”

”ஏல ராத்திரி பூரா பொணத்த எரிச்சுக்கிட்டு வந்து உக்காந்துக்கிட்டுவந்து பேயி பிசாசுன்னு சொல்லுத . ஏன் அந்த வயக்காட்டு வழியா போன?’’

”சத்தம் வருது சத்தம் வருதுன்னு ஊருக்குள்ள பேச்சு வந்தத நா, நம்பல அதுதான் அந்த வழில வந்தேன்”

”அப்ப அது நெஜந்தானா? நீ பாத்தியா?’’

”பாத்துட்டுத்தான வந்து இப்படிக் கிடக்கேன். நல்ல நெலா வெளிச்சம். காத்து வீசுது.வயக்காட்டுக்குள்ள எங்கனயோ கெடந்து நரி ஊளை விடுது.அவ அங்கன குத்த வச்சு மாட்த்தி அழுதுக்கிட்டிருக்கா? ”

” நல்லா முகத்த பாத்தியாடா? ”

”மொகத்த வேற பாக்கணுமாய்யா? கண்ணீரும் கம்பலையுமா கேவிக் கேவி அழுகுதா? என்ன பாத்துடுவாளோன்னு ஆமணக்குச் செடிக்குள்ள போய் ஒளிஞ்சுக்கிட்டேன். அவ மேக்க பாக்க இருக்கா, நா கெழக்க இருந்து வாரேன். ஈர சேல, தல விரிஞ்சு கெடக்கு. ஆவலாதி சொல்லுதமாதிரி பேசிக்கிட்டே அழுவுதா. ”’

”என்ன என்னடா சொன்னா? ”

”என்ன சாமி ஈரக்கொல நடுங்குங்கேன். விவரம் கேக்கிய.. ”

என்றவன் அமைதியாக இருந்துவிட்டு

‘கண்ணால பாத்தேன். என்ன செய்யணுமோ செய்யுங்க? ”

என்று எழுந்து நடக்கத்துவங்கினான்.

கூட்டம் பின்னால் செல்ல

”நில்லுடா”

பெரிய பாட்டையா கத்தினார். அவர் ஊருக்குள் பெரியவர்.ஊர் அவருக்கு கட்டுப்படும்.

கோட்டை நின்றான்

”என்னடா நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க”

”முடியல சாமி நாலு மடக்கு சாராயம் குடிச்சாத்தான் நடுக்கம் நிக்கும்போல இருக்கு. ” 

”சரி முடியும்போது வா. பேசணும்”

தலையாட்டியபடியே யாரையும் திரும்பிப் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாகப் போய்விட்டான். 

ஜனம் மிரட்சியோடு நின்றது.

கோட்டை ஊர்ப் பிணம் எரிப்பவன் அவனே பயந்திருக்கிறான் என்றால் அவதான்.அழுகச்சத்தம் கேட்டுச்சு.அழுகச்சத்தம் கேட்டுச்சுன்னு ஊருக்குள்ள பேச்சு வந்தது நெஜந்தான்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. 

2

ரத்தினசாமியின் கிணரு வயக்காட்டுக்கு தெக்கே இருந்தது. மாவட்டத்தில் அந்த மாதிரி கிணரு இல்லை என்று பேசிக் கொள்வார்கள்.. இரண்டு கிண்றை ஒன்றாக வெட்டிய நீள அகலம். நல்ல ஆழம். ரெண்டு மோட்டர். கிணருவெட்டி மண் தோண்டும்போது அள்ளிய சரளைக் கற்கள் பக்கத்தில் குட்டி மலை போலக் கிடந்தது.  சுற்றி தென்னை மரங்கள்.உச்சியில் ரெண்டு கொடுக்காப்புளி மரங்கள்.மரத்தில் தூளி கட்டி பச்சைக் குழந்தைகள் தூங்கும். ஆட்கள் மேலேறி மேலேறிப் பதிந்த ஒற்றையடி தடம். மத்தியானச் சாப்பாடு கூலி ஆளுங்களுக்கு அங்கேதான், எந்நேரமும் பறவைச் சத்தம் கேட்கும். எந்தக் கோடைப் பகலிலும் அங்கு நிழல் கிடக்கும்.கிணற்றில் எப்போதும் நீர் இருக்கும். இரண்டு நாள் தொடர்ந்து மழைவந்தால் நீர் நிலமட்டம் வந்துவிடும். யாருக்கும் குளிக்க அனுமதி இல்லை.”’ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆச்சுன்னா யாரு அலையுதது என்பான் ரத்ன சாமி. பம்ப் செட் மீது ஏறி, கிணற்றில் குதித்து அலையடிக்க அவன் குளித்ததை அபூர்வமாக சிலர் பார்த்திருக்கிறார்கள். ஒருமுறை ரகசியமாகக் குளித்த சிலரின் துணிகளைக் காணவில்லை.அது அவன் வேலைதான். ஆனால் யாருக்கும் அவனிடம் கேட்க துணிவில்லை. வாழை இலையில் மானத்தை மறைத்துக் கொண்டுஅவர்கள் ஊருக்குள் ஓடினார்கள்.

 ரத்தினசாமி  ஒரு முசுடன்.கல்யாணவயசு. வாழ்க்கை அவனுக்கு எதையும் காட்டாமல் கடந்து போயிருந்தது. சொன்னா வெளையற நஞ்சை. நல்ல தண்ணீப்பாடு. என்ன இருந்தும் சிரிக்க துட்டு குடுக்கணும் அவனுக்கு. வயலுக்கு வரும் யாரையும் கண்டு கொள்ள மாட்டான்.ஆட்கள் வந்து போவதால் பயிருக்கு பாதுகாப்பு. சோத்துக்கு மிளகாய்கூட அவனிடம் சொல்லிக் கொண்டுதான் பறிப்பார்கள்.எடுத்துக்கங்க என்று மனசாரச் சொல்ல மாட்டான். கேட்காத்தௌ போல, பார்க்காததுபோல நிற்பான். 

”வடக்கோரத்து செடில நாலு கத்திரிக்கா நேத்து கெடந்துச்சு. ரெண்டு வெளஞ்சது, ரெண்டு பிஞ்சு நாலையும் இன்னிக்கி காணல”

பொத்தாம் பொதுவாக சொல்லிச் செல்வான்.யாரும் வாய் தொறக்க மாட்டார்கள்.

”வடக்கோரத்து செடில நாலு கத்திரிக்கா நேத்து கெடந்துச்சு. ரெண்டு வெளஞ்சது, ரெண்டு பிஞ்சு இன்னிக்கி காணல”

களை எடுத்துக் கொண்டே மாடத்தி அவன் குரலில் சொல்வாள். வடிவானவள் அவள்.சிரித்து விட்டுப் பேசுவாள். சிரிப்பை எல்லோருக்கும் வரவழைப்பாள்.

”எங்க போயிருக்கும்? ”

எவளோ எங்கிருந்தோ கேட்க

”ராத்திரில வந்த நரி கொண்டு போயிருக்கும்”

வயல் காட்டில் சிரிப்பு அள்ளும்.அப்படி ஒருநாள் மாடத்தி சிரித்த போது கடகப் பெட்டியில் ஆமணக்கு ஒடித்துப் போட்டுக் கொண்டு மறைவாய் நின்ற ரத்தினசாமி பார்த்துவிட்டான். அவன் அதைப் பார்க்காதவன் போல போனதை, மாட்த்தியும் இன்னும் சிலரும் பார்த்து விட்டார்கள்.

”அவுஹ காதுக்குப் போயிராம” என்று மாடத்தி கேட்டுக் கொண்டாள். .அவளோட அவுஹ மாசானம்.அவள் புருஷன்..ராத்திரி கல்யாணம் நடந்த அடுத்த ராத்திரிக்குள் அவனோடு பிணக்கு வந்து விட்டது. மாடத்தி வீட்டுக்கு வந்துவிட்டாள். பலர் சொல்லியும், அவளைப் பெத்தவர்கள் அழுது திட்டியும் அவள் போகவில்லை. மாசானம் அவளையே சுற்றி வந்தான். அவள் குளத்தில் குளித்து வந்து சேலை மாற்றுவதை திருட்டுத்தனமாகப் பார்த்தான். அவள் கத்தி ஆட்களை திரட்டினாள். அவந்தான் என்று அவள் காட்டிக் கொடுக்க வில்லை. அவன் மீது இன்னும் கோபம் வந்தது. ஒருமுறை வீடு வந்து அவள் கையைப் பிடித்து இழுத்து, அவளிடம் கடிபட்டான். ஊரார் கேட்டபோது நாய்க்கடி என்றான்.

கோயில் கொடை அன்று தலை நிறைய பூவும் பொட்டுமாய் இருந்த அந்த அழகியை ஆவிசேத்துக் கட்டிப் பிடித்தான்.அவள் கூச்சலில் ஆட்கள் ஓடி வந்து பிரித்துப் பொட்டார்கள். ஊருக்குப் பாட்டைய்யா வீட்டில் விசாரிக்கப்பட்டான். ”ஆசை என்றான். எல்லோரும்  சிரித்தார்கள். பொண்டாட்டிதான என்றான். சரிதான என்று சிலர் சொன்னார்கள்.  ”” அவளுக்கு விருப்பமில்லன்னா விட்டுரணும், மறுபடி இந்த மாதிரி வச்சுக்கப்படாது என்று முடிவு சொல்லப்பட்டது.வெத்தலையில் சத்தியமும் கேட்கப்பட்டது.மறுபடி கை நீண்டால் போலீஸ் வரும் என்று சொல்லப்பட்டது.

இரண்டு முறை அவள் அவன் கண்ணில் பட்ட போது, கண்கள் சிவக்க ’’ஒரு நா ”உனக்கு இருக்குட்டீ” என்றான். அவள் அதை பேச்சுவாக்கில் சிலரிடம் சொல்லி வைத்தாள்.

இப்போது  மாடத்திக்கு ரத்தினசாமியும் எதிரியாகிவிட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். மாடத்தி ஏன் வம்பு என்று அவளது வழக்கமான குலுக்கல் பேச்சை நிறுத்தி விட்டாள். 

ஓரு முறை வரப்பில் எதிரெதிராக ரத்தினசாமியைப் பார்க்கவேண்டி வந்துவிட்டது. குனிந்து நடந்து வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து,  ஒரே நேரத்தில் விலக,  ஒரே நேரத்தில் நிற்க இருவருக்குமே சிரிப்பு பிச்சுக்கிட்டு வந்துவிட்டது.. 

அப்போதிலிருந்து மாடத்தி பழையவனாளாள். எல்லோருக்கும் அது குறு குறு என்றிருந்தது. எல்லாக் கண்களும் அவளைக் குதறின. அவள் இல்லாத நேரத்தில் அவள் பேச்சுதான்.

ரத்தினசாமிக்கும் மாடத்திக்கும் இதுவோ? உரிமையாய் அவள் வெண்டை பிஞ்சைக் கடிப்பதென்ன, துவரக்காயை உரிப்பதென்ன,யாவாரி கழித்துப் போட்ட சொத்தக் கத்திரிக்காயை அவள் எல்லோருக்கும் பங்கு பிரிச்சுக் குடுப்பதென்ன, மார்புக்கு மேல் பாவாடையை தூக்கிக் கட்டிக் கொண்டு மல்லாக்கப் படுத்து ரத்னசாமியின் கிணற்றில் நீச்சல் அடிப்பதென்ன, மாடத்தியின் வாழ்வில் ஒரு ஆண் வந்திருப்பதை எல்லாப் பெண்களும் உணர்ந்து கொண்டார்கள்.

எல்லோருக்கும் குறு குறு என்றிருந்தது.

3

ரத்தினசாமி கிணத்தில் பொணம் கிடப்பதாக ஊருக்குள் தகவல் வந்தது, ஒரு மழைக்காலத்தில். பயிர்பச்சை வாசமும், மங்கலான வெளிச்சமும், தவளைச் சத்தமும், தூரத்தில் விழுந்து கலைந்த இடியும், நீர்ச் சலசலப்பும் தாண்டி ஊர் ஓடியது. கிணற்றை அடைந்த போது கனத்த மழையும், கும்மிருட்டும் வந்து விட்டது. தீப்பெட்டிகள் நனைந்து விட்டன. சிலோனில் இருந்து வந்திருந்த மூணுகட்டை வின்சிஸ்டர் பேட்டரி ஒரு வீட்டில் இருந்ததை யாரோ எடுத்து வந்தார்கள். பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு எடுத்துவர ரெண்டுபேர் கிளம்பிப் போனார்கள்.

ரத்னசாமியின் கிணத்துக்கு நட்ட நடுவாக செவப்பு சேலை கட்டியிருந்த பொணம் குப்புற கிடந்தது.  தொடுகைக் கம்பால் இழுத்து திருப்பிப் போட்டார்கள். எல்லாக் கண்களும் அதிர்ந்து பார்த்தன.  மாடத்தி.

ஊருக்குள் போலீஸ் வந்தது பகலில்.

‘’கொடிக் குறிச்சிக்கி மாமா வீட்டுக்குன்னுதான் போனா.மழ. வயக்காட்டு வேலை இல்ல. வீடு ஒழுகுது.போயிட்டுவரட்டுமேன்னு விட்டேன்.இப்பிடி ஆச்சே இப்பிடிஆயிடுச்சே ஆத்தா, ” மாடத்தியின் அப்பன் கங்கன்  அழுதான்.

”என்ன பிரச்சினை அவளுக்கு? ”

எல்லோரும் யோசித்தார்கள். அவள் புருஷனைப் பற்றிச் சொன்னார்கள்.

குடித்துவிட்டுக் கிடந்த மாட்த்திக்கு ஒரு இரவு மட்டும் புருஷனான மாசானம் வந்து சேந்தான்.

”உண்மைய சொல்லீரு”

”எனக்கு தெரியாது”

ஏட்டையா ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விட்டார். பல் உடைந்து ரத்தம் வந்தது.

”போலீஸ் அறன்னா அறதான். ”

ஆனால் மாசானம் சொன்னதையே சொன்னான்.’’ எனக்கு எதும் தெரியாது. நா அவள பாத்தே ரொம்ப நாள் ஆச்சு ‘’

‘’அப்பிடியா? ரொம்ப நாள் ஆச்சா? நீ சொல்லுதத நா, நம்பணுமா? கொஞ்சம் இரு , கேக்கற விதமா கேக்கேன்.’’.

ஏட்டையாவும் பாட்டையாவும் அங்கும் இங்கும் சென்று ரகசியம் போலப்  பேசிக் கொண்டார்கள் யாரும் அசையாமல் என்ன நிகழப் போகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். .வடை தின்று டீ குடித்து, பாசிங் ஷோ சிகரெட்டும் பிடித்த கொஞ்ச நேரத்தில் ஏட்டையா, ”ஒரு தகவல் வந்திருக்கு? யாரு ரத்தினசாமி? ” என்று கேட்டார்.

ரத்தின சாமி அஞ்சு கிலோ மீட்டர் தள்ளியிருந்த சுரண்டைக்குப் போயிருந்தான். புது ரக நெல் விதை வந்திருக்கிறது என்று கேள்விப் பட்டிருந்தான், மொளகா யாவாரி அவனுக்கு நெருக்கம். அவரோடு அங்கிருந்து  திருனெவேலி போய் ஊர் சுற்றிவிட்டு, அவனைத் தேடிப்போன ஆள் சொன்ன தகவல் கேட்டு, பிளசர் எடுத்துக் கொண்டு பதட்டமாக ஊருக்குள் வந்தான்.

ஏட்டையா கேட்ட கேள்விக்கு, ”ஐயோ அய்யையையோ நா அப்பிடியா யாராவது சொல்லுங்க” என்றான். யாரும் எதுவும் சொல்ல வில்லை. யார் எது சொன்னாலும் அது அவர்களுக்கு சிக்கலைக் கொண்டுவரும்.

வேன் மாடத்தி பொணத்தை தூக்கிப் போனது. மாசானமும், ரத்தினசாமியும் விசாரணைக்குப் போனார்கள்.

”அடிச்சுக் கொன்னு பொணத்த தூக்கிப் போட்டிருக்கு”

”ஒரு ஆளு வேலை இல்ல ரெண்டு ஆளு”

”கைய வச்சிருக்கானுவோ”

யாராய் இருக்கும்?  சாத்தியமான எல்லா வழிகளிலும் விசாரணை நடந்தது.

எதுவும் பேரவில்லை.

ரத்னசாமிக்கு அதுல பிரச்சன அதனாலதான் அவன் கல்யாணமே பண்ணிக்கல என்ற விஷயம் போலீசால் கண்டு சொல்லப்பட்டது.

மாசானம் ஒரு மாதிரியாக இருந்தான். யாருடனும் பேசவில்லை.

தொடவே விடாதவள் நெஞ்சில் நெருப்பு  வைத்து விட்டு வந்திருந்தான்.

கிணற்றுப் பக்கம் யாரும் போகவில்லை.

சிலநாள் கழித்து இரண்டு டீசல் மோட்டார் கொண்டுவந்து நாள் முழுக்க கிணற்று தண்ணீரை இரைத்துக் கொட்டினார்கள். காலியான கிணற்றின் ஆழத்தை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

சில நாளில் தண்ணீர் பொங்கி மேலே வந்துவிட்டது. யார் கிணற்றைப் பார்த்தாலும் மாடத்தி சிவப்பு சேலை கட்டி பிணமாக மிதந்த காட்சியே தெரிந்தது.

ஒரு நாள் மாசானம் ஊர்க்கோடி ஆலமரத்தில் தொங்கினான்.

மாடத்தி மீது உசிரையே வைத்திருந்தான் என்றார்கள்.

மாடத்தி உசிர் போனது போனதுதான்.எப்படி யாராய் இருக்கும் என்று பலரும் குழம்பினார்கள். சிஐடி போலீஸ் விசாரிக்கிறது. விரைவில் புடுச்சுவிடுவார்கள் என்று நம்பப்பட்டது.

அந்த வருஷம் ரத்னசாமி வயலில் வெள்ளாமை இல்லை. யாரும் அவனிடம் கேட்கவில்லை. முளைத்தது காய்த்தது எல்லாவற்றையும் ஆளாளுக்கு அள்ளிப் போனார்கள். அவன் அவமானம் தாங்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தான்.

ஒரு வருடத்தில் எல்லாம் மறக்கத்துவங்கியிருந்தது. ஊர் விசேஷங்களில் ரத்னசாமி கலந்து கொள்ள ஆரம்பித்தான். மெல்ல வயலுக்கும் வர ஆரம்பித்தான்.நின்று விவசாயம் பார்க்காமல் ஆய்க்குடி வெத்தல யாவரிக்கு பாட்டத்துக்கு விட்டுவிடலாம் என்று யோசித்தான்.தூரத்து சொந்தத்தில் புருஷன இழந்த ஒருத்திய அவன் கட்டிக்கிடுவானா என்ற கேள்வி வந்த போது, சரி என்றுவிட்டான்.எப்படி என்று அனைவருக்கும் ஆச்சர்யம். ”அவனுக்கு அதுல பிரச்சினை இருக்கே என்றவர்களுக்கு, . ”அது ஒண்ணுதான் கல்யாணதுக்கு முக்கியமா? என்று பதில் சொன்னவர்கள் கேள்வி கேட்டவர்களைவிட வயதானவர்களாக இருந்தார்கள்.. ”பணம் வச்சிருக்கான்ல, வேற எதும் தேவ இல்லபோல அவளுக்கு.” என்று வரப்போறவளை புறம் பேசினார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருந்த வேளையில்தான் வயற்காட்டில் கேட்ட அழுகுரல் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்து,.சக்கிலியன் கோட்டையும் அதை நேரிலும் பார்த்திருந்தான்.

4

 மாலையில்தான் கோட்டை வந்தான். நெற்றிமுழுக்க குங்குமமும் திருநீரும் பூசியிருந்தான். நீண்ட மயிரை முடிச்சுப் போட்டுக் கட்டி, வெற்றிலைக்கறை உலர்ந்த உதட்டோடு நின்றான். இந்த முறை கூட்டமும் கேள்விகளும் அதிகமாக இருந்தன.

”எதுக்கு நா பொய்சொல்லப்போறேன். கண்டத சொன்னேன்”

”ஏண்டா அவ அழுதா போய் என்னன்னு கேக்க வேண்டியதுதான”

”இன்னிக்கு போறியாடா? ”

”சாமீ சாகச் சொல்லுதியளா? ”

”அவ நல்லவதான”

நாலஞ்சுபேறா போய் பாருங்க. ”

”யாரு அந்த நாலுபேரு? ”

”தீக்கு பேயி பயப்படும்”.

”சாமியாடுதவன் ரெண்டு பேர் கூட போங்க. ”

”நீ பாக்கும்போது மணி என்னடா இருக்கும்? ”

நிலா நட்ட நடு வானத்துல இருந்துச்சு. ”

சாதிக்கு இருவர் என்று முடிவாயிற்று. நள்ளிரவில் ஊர் கூடி அனுப்பி வைத்தார்கள்.

அன்று அழுகுரல் கேட்கவில்லை. 

அடுத்த நாளும் 

அதற்கு அடுத்தநாளும் 

அதன் பிறகு யாருக்கும் அதில் ஆர்வமில்லை.

ஆனாலும் இனிமேல் ஊரில் பிண எரிப்பு பகலில்தான் என்று கோட்டை கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.

ரத்ன சாமி வெற்றிலைக் கொடிக்காலுக்கு பாட்டத்துக்கு வயலைக் கொடுத்துவிட்டான். மணி முதலியார் ஆட்களோடு வந்து தோது பார்த்துப் போனார். ரத்னசாமியின் வயலைச் சுற்றி அகத்திக் கன்றுகள் வைக்கப் பட்டன. அவை வளரும் போது வேலியாகிவிடும்.

வயல் உழவு நடந்ததைப் பார்க்க மணி முதலியார் தனியே வந்தார். குளக் கரையில் லூனா வண்டியையும், செருப்பையும் கழற்றிப் போட்டுவிட்டு, வயலுக்குள் நடந்து வந்து கொண்டிருந்தவருக்கு, பட்டப்பகல். கிணற்றில் யாரோ துணியை அடித்து துவைக்கும் சத்தம் கேட்டது. தூரத்திலிருந்து பார்க்க, சிவப்பு சேலை கிணற்றுக்கு மேலே வந்து வந்து போயிற்று. அருகே நடக்க, நடக்க சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நிற்க, கிணற்றிலும் யாருமிலாதிருக்க

மணி மயங்கி விழுந்தார். 

நினைவு வந்த போது, ”பாத்தேன் பாத்தேன்” என்றார்.

ஜனங்களுக்கு புரிந்து போயிற்று. வந்தது அவதான். மாடத்தி.

5

உழுததோடு நிலம் கிடந்து போயிற்று. அப்படியே கிடந்த தண்ணீரில் தூசு விழுந்து நிறம் மாறிப் போயிற்று.ஆட்கள் போய் வர புதுப்பாதை எடுக்க கேட்பாரற்ற நிலமாக ரத்னசாமியின் நிலம் ஆயிற்று.

”யேய், நீ யாருகிட்டயும் சொல்ல வேண்டாம். நா, கேக்கேன். அவளோட எதாவது வம்பு வழக்கு வச்சுக்கிட்டியா?

பாட்டையா ரத்னசாமியை சந்தித்து அவன் நிலைக்காக வருந்தி அவனுக்கு எதாவது செய்ய வேண்டுமென்று அக்கறையோடு ஒரு நாள் கேட்டார்.

”காசு வேணும்ன்னு ஒருதடவ கேட்டா, குடுத்தேன்.”

”எதுக்கு?”

”சீல வாங்கணும்ன்னு சொன்னா

”எதுக்கு?”

”கொடிக்குறிச்சில யாரோடயோ நெருக்கம். அவனோடயே இருந்துறப்போறேன்னு சொன்னா?”

”அடப்பாவிப் பயல, ஏஞ் சொல்லல?”

”சொல்லி என்ன ஆவப் போகுது, சண்ட சச்சரவுதான் வரும்.’

”சத்தியமாச் சொல்லு வேற எதும் நடக்கலையே

”நடக்க வழி இல்ல தாத்தா, தெரிஞ்சு கேக்கியளா? தெரியாம கேக்கியளா? சிரிச்சா சிரிச்சேன். பாத்தா பாத்தேன். ஆசைதான். வேற என்ன முடியும் என்னால.

அவன் குரல் கம்மியது.

”அப்ப கொடிக்குறிச்சிக்கு போனவளுக்கு என்னவோ நடந்திருக்கணும்’”

”ஆமா.”

”யாரையோ தேடிப் போனவளை யாரோ கைவைத்துக் கலைத்துப் போட்டுவிட்டார்கள்.

அமைதியாக வலைவிரித்த போலீஸ் குற்றவாளிகளைப் பிடித்து ஊருக்குள் கொண்டுவந்து காட்டிப் போயிற்று. காறித்துப்பலும் கல்லெறியுமாய் அவர்கள்  பாளையங் கோட்டை ஜெயிலுக்குப் போனார்கள்.செத்தவள் உடம்பில் கீறலும் பல்தடமும் கிடந்ததை மாசானத்திடம் சொன்ன போலீஸ்காரணும் அவர்களோடு வந்திருந்தான்.அதை சொல்லாமலிருந்திருந்தால் மாசானம் செத்திருக்க மாட்டான் என்று விசனப்பட்டான்.அதை யாரும் அவ்வளவாக மதித்துக் கேட்கவில்லை. 

பாட்டையா ரத்னசாமியை தேற்ற பரந்த அந்த நிலத்தை பாழிலிருந்து காக்க என்னவெல்லாமோ செய்தார்.

கடைசியாக புனலூரிலிருந்து  மந்திரவாதி வந்தான். அங்கும் இங்கும் நடந்தான்.அவனுக்குள் பேசினான். எதையோ ஓதினான்.

ஊர் கூடி நின்று வேடிக்கை பார்த்தது.

”முக்குல ஒரு கல்லு வச்சுருங்க.’’

என்றான்

”கல்லா

”ஆமா. பூச பண்ணனும்,சாவல் காவு கொடுக்கணும். அப்போ அவ வரமாட்டா?

”இங்கதான் வைக்கணுமா?” 

”ஆமா. ஏன்?”

”இல்ல அவ வேற ஜாதி. கீழ் ஜாதி”

சிரித்த மந்திரவாதி சொன்னான்.

”ஜாதியெல்லாம் மனுஷனுக்குத்தான். ”பேய்க்கு ஜாதி இல்ல. அறியோ?”

சொல்லிவிட்டு நடந்தான்.ஜனங்களும் நடந்தார்கள். நடந்து கொண்டிருந்த ரத்னசாமி பாட்டையாவை நோக்கி சம்மதம் என்பதுபோல தலையசைத்தான்.

சிரிப்பும் கேலியும் கிண்டலுமாக மாடத்தி அவனுக்குள் வந்து போனாள். அவனும் புன்னகைத்துக் கொண்டான்.

©©©©