— மயிலன் ஜி சின்னப்பன்

1

ஏரியை ஒட்டிய ஒழுங்கையில் அவசரமாக சாமிக்கண்ணு நுழைந்தபோது கண்ணுக்கெட்டிய கோடிவரை ஆள்வாசம் இருக்கவில்லை. மாட்டுவண்டி போக்குவரத்தில் மிஞ்சி நிற்கும் நடுக்கோட்டு புற்தடம் நீண்ட விரிப்பைப் போல தெரிந்தது. நடையிலிருந்த தவிப்பை இட்டுக்கட்ட தக்க சமயத்தில் மறைவிடம்தான் தோதாக சிக்கவில்லை. சித்திரை மாதத்து சுள்ளாப்பும் புரட்டிக் கொண்டுவரும் குடலுமாக மனிதருக்கு ஒரு மாதிரி கிருகிருவென ஆகிவிட்டது. முந்தைய இரவு குடித்த சாராயத்தைதான் நொந்துகொள்ள வேண்டும்.

‘கொட கறுவ.. அலாரம் வெச்சு வந்து பேண்டுட்டு போயிருக்கானுவ.. இன்னும் அர அவரு கெழிச்சி வந்தா கொளுத்துற வெளியிலுக்கு எல்லாங் காஞ்சு வரட்டி ஆயிருக்கும்.. வயிறும் செத்த கெடக்காது போல..’ இரண்டடி எடுத்து வைப்பதற்குள் உள்ளுக்குள் குடுகுடுகுடுவென ஏதோ உருளுவதைப் போலிருந்தது. சட்டென வேட்டியை உயர்த்திக்கொண்டு குத்த வைத்துவிட்டார். புட்டத்தில் கோரைப் புற்கள் கோக்கு மாக்காக கீறியதெல்லாம் அந்தக் கணத்தில் உறைக்கவேயில்லை. ஒரே அழுத்தில் ஒட்டுமொத்த குடலையும் இறக்கி வைத்ததைப் போலிருந்தது. லயித்த பெருமூச்சுடன் சற்றுநேரம் அப்படியே அசையாமல் இருந்தார். நாற்றத்தை அள்ளிக்கொண்டு வந்து முகத்தில் அறையும் வேனல் காற்று அத்தனை தொந்தரவாகப் படவில்லை.

வேட்டியை இறக்கிக்கொண்டு ஒழுங்கையில் இறங்குவதற்கும், எதிரில் கோபி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. “என்ன மாமா ஒரே ஓட்டமா வந்த மாதிரி இருந்துச்சு.. கடைல நின்னு மாமா மாமான்னு கத்துறேன்.. காதுலயே வாங்காம நட அத்தன வெரசா இருந்துச்சு..” காலையிலேயே கரைவேட்டி கட்டி, செண்ட்டடித்துக்கொண்டு வாயைப் பிடுங்க வந்துவிட்டவனை அருவருப்பாக பார்த்தபடி சாமிக்கண்ணு ஏரி இறக்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

“கேக்குறதுக்கு பதிலிருக்கா பாரு.. வயித்தாலதான போச்சு.. வாயால இல்லேல்ல..”

தோளில் கிடந்த துண்டை உதறி அடிப்பதைப் போல கையை உயர்த்தி, “வப்பன் பேச்சு அப்புடியே வந்துருக்கு பயமவனுக்கு..” என்றவர், “என்னடா காலங்காத்தால வேட்டிய கட்டிட்ட.. திரும்ப செயிச்சதுல இருந்து கெப்புரு மசுரு ஏறி போச்சுரா ஒங்களுக்கு..” பதில் ஒரண்டையிழுத்தார்.

“ஏன் நீங்க சிஎம்மாவலாம்ன்னு இருந்தது எதுவும் தட்டுக்கெட்டு போச்சா?” கோபியின் நக்கல் பேச்சுகளில் இடப்பக்கமாக கோணும் அவனது வாயைப் பார்க்க சாமிக்கண்ணுக்கு பற்றிக்கொண்டு வரும்.

“டிவி பொட்டி தர்றேன்னுட்டு ஆசைய காட்டி ஓட்டு வாங்கிப் புட்டிய.. வீட்டுக்கொரு கக்கூச கெட்டித் தர்றோம்ன்னு சொல்ல வாய் வருமா..? இங்க பாரு… பாத நெடுக்க அட தட்டி வெச்சிருக்கானுவ..”

“அப்புடி சொன்னா மட்டும் நீரு எங்களுக்கு ஓட்டு போட்ற போறியளா? எதுக்கு மாமா ச்சும்மா வாய போட்டு தேச்சிட்டு இருக்க..”

“இப்ப எதுக்குரா பாண்டி மவனே வெள்ளன வந்து வேட்டிய உருவிட்டிருக்க? சோலி இல்லையா ஒனக்கு..” வறண்டது போக ஒதுங்கியிருக்கும் நீரில் இறங்கியபடி சாமிக்கண்ணு கேட்டார்.

“செடிய வெட்றதுக்கு வசூலுக்கு அன்னிக்கு வந்தேன்.. பெறவு தரேம்ன்னீய.. அதுக்கு அங்குட்டு ஆள புடிக்கவே முடியல..”

“அதுக்குன்னு காலு கலுவ வர்றப்பவாடா வாருல வெச்சு முடிஞ்சிட்டு வருவேன்..?” எரிச்சலுடன் கேட்டார்.

“ஆயரமா நா எலுதிக்கிறேன்.. அத்தைக்கிட்ட கொடுத்து வைங்க.. அப்பறமா வந்து வாங்கிக்கிறேன்..”

காதிலேயே வாங்காதவரைப் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை கட்டாந்தரையாக தெரிந்த பரப்பைப் பார்த்துகொண்டு நின்றார். ஆங்காங்கு தேங்கிக் கிடந்த குட்டைகளில் ஐந்தாரு பொடியன்கள் துண்டைப் போட்டு இழுத்து மீன் கிடைக்கிறதாவென பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“நாலு வருசத்துக்கு முந்தி ஒங்கப்பனும் நானும் மீன் ஏலத்துக்கு புடிச்ச ஏரி… எப்புடி பொளந்து கெடக்கு பாரு..”

“ம்ம்..”

“பொட்டு தண்ணீ தங்கமாட்டேங்குது.. தரித்தர்யம் புடிச்சு போச்சு..”

“எதாச்சும் இப்புடியே சொல்லுங்க.. செடி இப்புடி மண்டிக் கெடந்தா.. பூரா வெசம்… ஆவியாக்கியுட்டு போயிருது.. தண்டுக்கு தண்டு வேர் போட்டு காடு மாதிரி ஆயி கெடக்கு பாருங்க.. ரெண்டு க்ரேன உள்ள எறக்கிவிட்டா பூராத்தையும் நெம்பி யெறிஞ்சிசடலாம்..”

அவனுக்கு பதிலே சொல்லாமல் சாமிக்கண்ணு மேட்டில் ஏற ஆரம்பித்தார்.

“ஆயரமா எலுதிக்கவா.. புடி கொடுக்காம போனா எப்புடி..?”

“ஒங்க ஆட்சிதான நடக்குது… ஆள கூட்டியாந்து காமிச்சு வரி காசுல பண்ணு இந்த வேலையெல்லாம்…”

பின் தொடர்ந்து வரும் நடையின் சரசரப்பு நின்றுபோனது அவருக்கு கேட்காமலில்லை. நிறுத்தாமல் பேச்சைத் தொடர்ந்தார்..

“இல்லேன்னா ஒங் கைக்காசு போட்டு பண்ணி… கட்சியில நல்ல பேரெடுத்து..  அடுத்தவாட்டி தொகுதிய காங்கிரஸ்காரனுக்கு உடாம நீயே வாங்கிரு..” வேட்டியை விருட்டென வெட்டி மடித்து கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

 2

“எல்லாத்துக்கும் சிங்கப்பூர் துபாய்ல வேல பாக்குறவந்தான் நொட்டனும் இவனுகளுக்கு.. வாலிபால் மேச் நடத்தறதுலேந்து கும்பாயிசேகம் வரைக்கும் அவனுகளே படியளந்துட்டு கெடக்கனும்.. அங்க என்னமோ எல்லாவனும் பேன்க் வேலைக்கு போயி சம்பாரிக்கிற மாதிரி.. ஏதோ தூரத்துல இருந்து ஊருக்கு செய்யுற சந்தோசத்துக்காக அனுப்புறான்.. இங்க குண்டி நோவாம இவனுக குறுக்க மறுக்க போய்க்கிட்டும் வந்துக்கிட்டும்.. ஒருத்தவொருத்தன்கிட்டயும் ஒத்த பைசா வாங்குறதுக்கு கவட்டிக்குள்ள பூந்து வரவேண்டியிருக்கு..” சாமிக்கண்ணு ஆடு வாங்க கேரளாவுக்கு புறப்பட்டு போயிருப்பதாக டீக்கடையில் பேச்சு வந்தபோது கோபிக்கு சுல்லென்று பொத்துக்கொண்டு வர படபடவென பொரிய ஆரம்பித்துவிட்டான். பொத்தாம்பொதுவாக அவன் பேசியதை அங்கிருந்தவர்கள் ரசிக்கவில்லை. கண்டிக்கவும் ஒருத்தருக்கும் வாயெழவில்லை.

அவனை மேற்கொண்டு உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணத்தில் ரெங்கசாமி கொக்கி போட்டார்.. “ஏம்பி.. இன்னுமா வசூலு முடியல? ஒன்னு ரெண்டு மாசத்துக்குள்ள வேலய முடிக்காட்டி மழ கீது வந்து தொலச்சிரும்ய்யா.. மூத்தரமாட்டு பேஞ்சா கூட ஒலையில வண்டி உள்ள எறங்க முடியாது அப்பறம்..”

“காசு கொடுக்காட்டியும் நக்கலு நையாண்டின்னு கிருத்திருவ மசுரு வேற.. பிச்சக்காரன் மாதிரிதான் ஒவ்வொருத்தனையா வெரட்டி வெரட்டி கேக்க வேண்டியிருக்கு..” பேச்சு வாக்கில் ‘அவன் இவன்’ என சொல்லிவிட்டதை உடனே உணர்ந்து சுற்றியிருந்த முகங்களை ஏறிட்டான். 

“சாமிக்கண்ணையா சொல்ற.. வரண்டிப்பய பத்து காசு தர மாட்டான்..” ரெங்கசாமிக்கு கோபியின் காட்டம் போதவில்லை. வம்பாடுபட்டாவது கொஞ்சம் குளிர் காய்ந்துவிட வேண்டும்.  மற்றவர்களுக்கும் பேச்சு ஒரு முகமாக திரும்பிவிட உத்வேகம் துளிர்த்துவிட்டது.

“மலபாரி கெடா ஒன்னும் தாயாடு ரெண்டும்.. மூணுமா சேத்து முப்பத்தியஞ்சு ரூவாய்க்கு வரும்போல.. கூட ஒத்தரையும் கூட்டிக்காம ரகசியமா பொறப்ட்டு போயிருக்கான்..“ என்றது ஒரு குரல்.

“கொண்டாந்து பண்ண ஆரம்பிக்க போறானாமா?” சலிப்போடு புகையிலையைத் துப்பியபடி ரெங்கசாமி கேட்டார்.

“ஏற்கனவே கொடியாடுதான் நாலஞ்சு நிக்கிதே வாசல்ல.. எதாச்சும் கணக்கு பண்ணியிருப்பான் பெருசா..”

“பொண்டாட்டியும் அவனுமா சேந்து புளுக்க அள்ளுறதுக்கா?” கூட்டுச் சிரிப்பொலி.. கடைக்காரரும் சேர்ந்து சிரித்தார்.

“இந்த கேரளா ஆடெல்லாம் எங்குன போயி வ்சாரிக்கிறான்.. ஊருக்காரன் எவங்கிட்டயாச்சும் எதும் சொல்றானா பாரு.. நேத்திக்கு சாயந்தரமுட்டும் இங்குனதான் ஒக்காந்திருந்தான்.. ஒரு வார்த்த விடல..”

“ஆம்பலாப்பட்டு ஆளு ஒருத்தன் வாங்கியாந்திருக்கானாம்.. அத புடிச்சு வ்சாரிச்சு போயிருக்கான்.. குட்டி போட்டு சீக்கிரமே சென வெச்சுக்குமாம்.. கறி வெயிட்டும் நல்லா நிக்கும் போல..”

“ச்சும்மாவே எறங்க பாத்துதான் பேசுவான்.. இதுல பண்ணக்காரனா வேற ஆயிட்டான்னா கிட்ட ச்சேக்க மாட்டான் ஒருத்தனையும்..”

சாமிக்கண்ணுவைப் பற்றி இயல்பாக ஆரம்பித்திருந்த பேச்சை அங்கு கூடியிருந்தவர்களுக்கு தத்தமது காழ்ப்பை இறக்கிவைக்க தொக்காக தான் மாற்றி கொடுத்துவிட்டதாக கோபிக்கு தோன்றியது. மேற்கொண்டு அவனால் எதுவுமே பேச முடியவில்லை. பேச்சு சாமிக்கண்ணு வீட்டு படுக்கையறை வரை போய் வந்தபோது, அவன் தடுமாறிவிட்டான். 

அப்பா இருந்தவரை மாமாவுக்கும் அவருக்குமான சினேகமே தனி. தன்னோடுதான் ஏனோ மாமா ஒட்டுவதேயில்லை. கட்சிக்காரன் என்றாலே களவாணிப்பயலாகத்தான் இருப்பான் என்ற கசப்பு தட்டும் நிந்தனை. காணும் இடத்திலெல்லாம் முகத்தை முறிக்கும் பேச்சு – அதில் ஊடாடும் ஒரு குத்தல். 

தான் விட்ட வார்த்தைகளையே கச்சாவாக்கி தற்போது நடக்கும் யோக்கியர்களின் வழக்காட்டில் அவனால் சாமிக்கண்ணு பக்கம்தான் சார்பெடுக்க முடிந்தது. அதோடு, அமர்ந்திருக்கும் எட்டு பேரில் இருவருக்கு மட்டும்தான் வசூல் நோட்டில் பெயரிருக்கிறது என்பதை யோசித்தபோது அவ்விடத்தில் மேற்கொண்டு நிற்கவே அவனுக்கு கூசியது. 

3

வெள்ளைவெளேரென நிற்கும் தலைச்சேரி ஆடுகளின் மீது ஊர்க் கண்கள் மேயாமலிருக்க இன்னொரு அடுக்கு முற்படலை வைத்து வேலி நெருக்கிக் கட்டப்பட்டது. மேய்ச்சலுக்கு கூட அம்மூன்றும் வெளியே கொண்டு வரப்படவில்லை. கொல்லையிலிருந்து மாவிலைகளையும் கொய்யா இலைகளையும் வெட்டி கொப்பு கொப்பாக டிவிஎஸ் எக்ஸெல்லில் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது சாமிக்கண்ணுக்கு ஓர் இனம்புரியாத பதற்றம் – கவனிக்கப்படுவதாலோ கவனிக்கப்படுவதாக நினைத்துக்கொள்வதாலோ. இந்தப் பதற்றமே அவரது சுபாவத்தைத் திரிக்க ஆரம்பித்தது – தனது வழக்கமான இறுமாப்பை விட்டுவிட்டு வலியப்போய் காண்போரிடம் பேச்சு கொடுத்தார். அந்தப் போலித்தனம் அவருக்கே அசிங்கமாக பட்டதோ என்னவோ, மூன்றாம் வாரமே அந்தப் புது ஆடுகளை ஏற்கனவே இருந்த நான்குடன் மேய்ச்சலுக்கு வெளியே இழுத்துப் போக துவங்கிவிட்டார்.

கையில் அலக்குத் தொரட்டியுடன் ஆட்டுக்கூட்டத்தை இரு வேளைகள் கொல்லைக்கு கூட்டிச் செல்லும் சாமிக்கண்ணு, ஓரிரு நாட்களுக்கு பிறகு எவருக்கும் அத்தனை அந்நியமாக தெரியவில்லை. செல்லும் வழியில் ஆங்காங்கே நிறுத்தி வேலியோரத்து குலைகளை வளைத்துப் பிடிப்பார். புதிதாக வந்திருந்த மூன்றுக்கும் தவ்விப் பிடிப்பதில் அத்தனை லாவகம் போதவில்லை. அதைப் பார்க்கவே அவருக்கு வேடிக்கையாக இருந்தது.

“பாக்க நம்மூரு கொடி கெடா மாதிரிதானய்யா இருக்கு.. எதுக்கு இத்தன வெல வெச்சு விக்கிறான்..” ரெங்கசாமி வழியில் வைத்து விசாரிக்க, சாமிக்கண்ணுக்கு பதில் சொல்லவே எரிச்சலாக இருந்தது. சட்டென முகத்தைக் காட்டவும் முடியவில்லை. கேட்டுவிட்டு போய் அந்தப் புகையிலை வாயில் இந்தச் சேதிகளையும் போட்டு குதப்பித் துப்புவார் என்பது தெரியும். வேண்டாவெறுப்பாக இரண்டொரு வார்த்தையில் பதில் சொல்ல, ரெங்கசாமியும் நீட்டி முழுக்காமல் நிறுத்திக்கொண்டார். 

விஷயறியும் தொனியில் கேட்பவர்களுக்கு சாமிக்கண்ணு ஆனால் போதும் போதுமெனும் அளவிற்கு கதையளந்தார். அப்படியான தருணங்களில் தன்னையும் மீறிய பெருமிதம் முகத்தில் மிளிரும்.

“ஊர்ப்பக்க வெள்ளாடு மாதிரிதான் இருக்கும்.. தொடை ச்சப்பக்கிட்ட நல்லா முசுமுசுன்னு மசுரு இருக்கு பாருங்க.. அதான்.. அத பாத்து வாங்கனும்.. அதோட இப்படி கலுத்த ஒட்டி ஒரு காப்பி கொட்ட கலர்ல லேசா பட மாதிரி இருக்குல்ல.. அப்படியிருந்தாதான் அது அசல் தலச்சேரி..” இதெல்லாம் தன்னிடமிருக்கும் மற்ற ஆடுகளிலிருந்து அந்தப் புது சோடியில் வித்தியாசமான அம்சங்களாக இவரே பார்த்து வைத்தவைதான். ஆனால் சொல்லும்போதிருக்கும் மிடுக்கு வேறு விதமாக இருக்கும். “கேரளால இதையெல்லாம் தரைலயே விடமாட்றான்.. பூரா பரண்தான்.. ஒசர ஒசரமா கெட்டி வெச்சுதான் வளக்குறான்.. போயி பாத்தா வாய பொளக்க வருது.. அப்படி வெச்சிருக்கான்.. நம்ம சேட்டன்கிட்ட க்ராசு எதுவுமே கெடையாது.. எல்லாமே அசலுதான்..” 

இரண்டு தாயாடுகளில் ஒன்றை சினையாக பார்த்து வாங்கி வந்திருந்தார். குட்டிகள் வந்ததும் ஒரு சிறிய கொட்டில் எழுப்பிவிடும் ஆசை இருந்தது. தலைச்சேரி ஆட்டுப்பண்ணையை வட்டாரத்தில் முதல் ஆளாக உருவாக்கப் போகிறோம் என்ற உற்சாகம் சொரிந்த நாளில், பூவரச மர ரீப்பர் ஒரு லோடு கொண்டு வந்து இறக்கினார். அமிர்தத்துக்கு இதையெல்லாம் பார்க்க சலிப்பாக இருந்தது. பண்ணை குறித்த திட்டங்களையும் கனவுகளையும் அவளிடம் சொல்லும்போது பதிலெதுவும் சொல்லமாட்டாள். முன்பு தகர தொட்டிகளில் வீடு முழுக்க மீன் தவ்விக்கொண்டிருந்ததைப் பார்த்தவள்; அவளால் அப்படித்தான் இதைப் பார்க்கமுடியும் – அவளது சோகையை சாமிக்கண்ணு சட்டையே செய்யமாட்டார்.

“கலப்பே கெடையாது.. பூரா அசலுதான் இருக்கும் நம்மக்கிட்ட.. அசல் தலச்சேரின்னா சாமிக்கண்ண தேடிதான் எல்லாவனும் வரணும்..”  சொல்லிய நாளிலிருந்து கொடியாட்டுக் கூட்டத்தை வீட்டின் பின்கட்டில் கொண்டுபோய் கட்டிவைத்தார்.

வந்ததிலிருந்து  ஒரு மாத காலமாக அங்குலம் கூட வளராமலிருக்கும் அம்மூன்றும் இவர் கண்ணுக்கு மட்டும் நாளுக்கு நாள் எடை கூடுவதாகத் தெரிந்தன. சினையாட்டுக்கான கவனிப்பு பிரத்யேகமாக இருந்தது. வரப்போகும் குட்டிகளில் கடா இருந்தால் வீரனாருக்கு அதை நேந்துகொடுப்பதாக வேண்டிக்கொண்டார். ஆடுகளைப் பார்க்கவும் விசாரிக்கவும் அவ்வப்போது யாரேனும் வந்துபோவது நாளுக்கு நாள் புது அந்தஸ்த்தாக தெரிந்தது.

“ஆளு புது ஆளா இருக்கு.. யாரு எவுருன்னு அடையாளந் தெரியலயே..?”

“இருக்கும் இருக்கும்..” கோபி பைக்கை ஒருக்களித்து நிறுத்திவிட்டு இறங்கினான்..

“என்னடா இங்குட்டு..”

“பண்ண எப்பிடியிருக்குன்னு பாக்க வந்தேன்..” வாய் இடப்பக்கம் போகவில்லை என்றாலும் சாமிக்கண்ணுக்கு அது சுருக்கென்றிருந்தது.

“ஏரி ச்செடிய பூரா நெம்பியெடுத்து தூருவாரிட்ட போல.. மொத்தமுங் க்ளியரா இருக்கு..”

“ஆமாமா.. எல்லாருமா வாரியெடுத்து கொடுத்த காசுக்கு நானே அருவால கொண்டு போயி செத்துனாதான் உண்டு..” அழுத்தமில்லாமல்தான் சொன்னான்.

“ஊரு மசுருன்னு சுத்தாம எதுனா தொழில பாரு.. இல்லேன்னா கடேசி வரைக்கும் பேனர் வெக்கிற சோலிதான் பாப்ப..” அறிவுரை போலில்லாமல் அது அவனைக் குதறிவிடும் தொனியில் இருந்தது. திண்ணையில் உட்கார போனவன் அப்படியே நின்றுவிட்டான்.

“என்னைய பாத்தாலே ஒங்களுக்கு பொச பொசன்னு வரும்போல..”

சாமிக்கண்ணு அவன் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளாதவரைப் போல சைக்கிள் செயினுக்கு எண்ணெய் போட்டு சுற்றிக்கொண்டிருந்தார். எதையோ இட்டு நிறப்புவதைப் போல அமிர்தம்தான் பேச்சுக்கொடுக்க வேண்டியிருந்தது.

“அம்மா நல்லாருக்காடியய்யா.. வர்றதேயில்ல இங்கிட்டு..”

“இருக்குத்த.. ச்சொன்னாலும் எங்கிட்டும் நகரமாட்டேங்குது..  வர சொல்றேன்..”

“வம்மாள பாக்க வீட்ல நாதியில்ல.. பேனரு கட்டு.. பேனரு..” சாமிக்கண்ணு முனக்கமாக சொன்னது இருவருக்கும் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

“ஒக்காருய்யா.. டீ போட்டாறேன்..”

“இல்லத்த.. கெளம்புறேன்..  நாளைக்கு வரி கூட்டம் நடக்குது.. அத ச்சொல்லிட்டு போவத்தான் வந்தேன்..” வண்டியைத் திருப்பிவிட்டான். சட்டென அவன் அப்படி செய்தது சாமிக்கண்ணுக்கும் சங்கடமாக இருந்தது. திரும்பிப்பார்த்த போது வேலியைத் தாண்டி வண்டி போயிருந்தது. அதன் பிறகு அவர் வீட்டுக்கு அந்த ஆடுகள் சாகக் கிடந்த நாள் வரை அவன் வரவேயில்லை.

4

கொடியாட்டு கடா எதுவும் தலைச்சேரியில் ஏறிவிடக் கூடாதென மேய்ச்சலுக்கும் தனித்தனியாகவே கூட்டிச் செல்லப்பட்டன. நாளாகாக சாமிக்கண்ணுக்கு இந்தச் சோலி அலுப்புத்தட்ட ஆரம்பித்தது. சேர்த்தே இழுத்துக்கொண்டு போய் வெவ்வேறு இடத்தில் இரு கூட்டத்தையும் மேய விடுவார். ஏரியையொட்டிய ஒழுங்கை பக்கம் போனால், கொடியாட்டு கூட்டம் தன்னாலேயே அறுப்பு முடிந்த வயக்காட்டு பக்கம் இறங்கிவிடும். தலைச்சேரிகள் காட்டாமணக்கு பக்கமாக பாயும். கொடிக்கூட்டம் காட்டாமணக்கில் வாயே வைக்காது. சாமிக்கண்ணுக்கு மெனக்கட்டு இரண்டையும் பிரித்து வைக்கும் சோலி மிச்சம். கொஞ்ச நேரம் லாந்திவிட்டு, ஒரு டீயையும் பீடியையும் இழுத்துவிட்டு, நாலைந்து நக்கல் புரளி பேசிவிட்டு சாவகாசமாக வந்து வீட்டுக்கு இழுத்துப்போனால் போதும். 

ஓரிரு நாட்களில் இப்படி ஒழுங்கையையொட்டி மேயவிடுவது சாமிக்கண்ணுக்கு வசதியாக தெரிந்தது. செடிகளும் மண்டிக்கிடக்கின்றன. ஆடுகள் ரொம்ப தூரம் போவதில்லை. மேய்ச்சல் ஒரு தனிச் சோலியாகவே தெரியவில்லை.

அப்படியொரு காலை, சினையாடு மேயச்சலுக்கு வராமல் சோர்ந்து தனித்து நின்றது – ஒரு மாதிரி முன்னங்கால்களைத் தரையில் விசுக்கி விசுக்கி தேய்க்க ஆரம்பித்தது. குட்டிப்போடும் காலத்திற்கு வந்திருக்கும் மசக்கை என்று சாமிக்கண்ணுக்கு பட அதனை கொட்டிலிலிருந்து கொண்டுவந்து கட்டாந்தரையில் பொசுபொசுவென வைக்கோலைப் பரப்பி தனிமைப்படுத்தி வைத்தார். முட்டிக்கொண்டிருக்கும் வயிறுக்கு மூன்று குட்டிகளாவது இருக்கவேண்டுமென தோன்றியது. வைக்கோலில் நிற்காமல் கீழே விழுந்த ஆடு, கால்களை வெட்டி வெட்டி இழுத்தபடியே இருந்தது – வலிப்பு கண்டதைப் போல ஆட்டம் காட்டியது. சாமிக்கண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘என்ன சாதியெலவு இது.. குட்டிப்போட கொண்டாந்து விட்டா குப்புற குப்புற பெரட்டிக்கிட்டு கெடக்கு…’ 

சற்று நேரத்திற்குள் ஆட்டுக்கு நாசியில் கெட்டி மஞ்சளாக கோழை அடைத்துக்கொள்ள, சாமிக்கண்ணுக்கு என்னவோ சரியாகப்படவில்லை. ஓடிப்போய் தும்பைத் தழையை பறித்து சாரைப் பிழிந்து நாசியில் விட்டுப்பார்த்தார். எதிர்த்து தும்மலடிக்கப் போகிறதென விலகி நின்ற கணத்தின் நிகழ்வில்தான் மனிதர் அரண்டு போனார். மூச்சை ஆழ இழுத்த ஆட்டுக்கு தும்மலே கட்டவில்லை. மாறாக கண்கள் செருகிக் குத்திட்டுவிட்டன. அமிர்தம் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள்.

வைத்தியர் வந்து சேரும்போது தாயாட்டுக்கு கடைசி இரண்டு இழுப்புகள்தான் மிச்சமிருந்தன. எதுவும் செய்ய முடியவில்லை. ஐந்தாரு பேர் அதற்குள் கூடிவிட்டார்கள்.  

ஆட்டைப் பார்த்த வைத்தியர் கொட்டிலுக்கு சென்று புழுக்கைக் கழிச்சலை கிண்டிப்பார்த்தார். மற்ற ஆடுகளையும் பிடித்து கண்ணுக்குள்ளும் நாசியிலும் எதையோ தேடுவதைப் போல பரிசோதித்தார். தலைச்சேரி கடாயின் ஆசனவாய்க்குள் விரலை விட்டு நோண்டியெடுத்து பிசுபிசுப்பை அளந்தார்; முகர்ந்து பார்த்தார்.

சாமிக்கண்ணு சித்தப்பிரமை கண்டதைப் போல காலை பரப்பி நீட்டிப்போட்டு உட்கார்ந்து வைக்கோல் பரப்பில் செத்துக்கிடக்கும் சிணையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

எதையோ கண்டுபிடித்துவிட்டதைப் போல வைத்தியர் எழுந்து வந்தார்.

“தொத்து நோயா எதுவும்? வவுத்துப் போக்கு மாதிரி?” கூட்டத்திலிருந்து ஒரு குரல்..

சாமிக்கண்ணுவிடம் வைத்தியர் விசாரித்தார், “தீவணம் என்ன போட்டீய?”

அவர் வாயே திறக்கவில்லை.

“எப்பவும் போல மேய்ச்ச தான்.. புதுசா ஒன்னுங் கொடுக்கலயே..” அமிர்தம்தான் பதில் சொன்னாள்.

“எங்குன மேய விடுவீய..”

“ஏரிய ஒட்டிதான் கூட்டிட்டு போவாரு..” அழுகை அவளுக்கு நிற்கவில்லை. சினையாடு வெள்ளிக்கிழமையில் செத்துப்போயிருப்பது, தன் குடியையே கெடுக்கப்போவதாக கூப்பாடு போட்டாள். 

அந்தப் பக்கமாக போய்க்கோண்டிருந்த கோபி, அமிர்தத்தின் அழுகையைக் கேட்டு கூட்டத்திற்குள் புகுந்து எட்டிப்பார்த்தான். செத்துக் கிடக்கும் தாயாட்டின் கோலத்தில் ஒரு நொடி விக்கித்துப்போய்விட்டான்.

வைத்தியர் அவளது ஓலம் அடங்கும்வரை நிதானித்துவிட்டு கேட்டார் “காட்டாமணக்க எதும் திண்ணுச்சுகளா..?”

“ஆடு எங்கிட்டு காட்டாமணக்கு பக்கட்டு போவும்..? நாத்தமே ஆவாதே..” கூட்டத்திலிருந்து குரல் வந்தது.

“ஜில்லாவுக்கு இது புது சாதில.. நாட்டாடு எதுவும் கிட்டயே போவாது.. இதுக புது எடத்துல விட்டதும் போயி வாய வெச்சாலும் வெச்சிருக்கும்..” வைத்தியர் யோசிப்பதைப் போல பேசினார்.

“தின்னாலும் வயித்துக்குதான ஆவாது.. இப்புடி வெரச்சிக்கிட்டு கெடக்கு.. பூச்சிவட்டு எதுவும் கடிச்சிருக்குமா?” பக்கத்து வீட்டுக்காரர் குழம்பியிருந்தார்.

“வயித்துக்கு கேடு உண்டுதான்.. ஆனா அதவிட நரம்ப புடிச்சி கிந்தியிலுத்துப்புடும்.. ரத்தம் சுண்டி காஞ்சுப்போயிரும்.. மிச்ச ரெண்டுக்குமே கண்ணெல்லாம் வெளிறி போயிருக்கு.. ரெவைக்கு நிக்கிறதே செரமந்தான்…”   

வைத்தியர் பேச பேச சாமிக்கண்ணு தலையை மெல்ல நிமிர்த்தினார். தாடையின் நடுக்கம் கீழுதட்டில் தெரிந்தது. சரணடைந்துவிடும் கெஞ்சலுடன் கண்கள் குறுகிச்சிறுத்தன. ஒரு சுற்று, கூடியிருந்த சனத்தைப் பார்த்தார். எவர் முகமும் தன் கண்களை நேருக்கு நேராக பார்க்கவில்லை என்ற இடத்தில் அநாதரவாக உணர்ந்தார். ஒருவனதைத் தவிர.

கோபியைக் கூட்டத்தில் பார்த்ததும் சுற்றிவந்த தலை அப்படியே நின்றுவிட்டது. கழுத்திலும் நெற்றியிலும் பொல்லென்று வியர்த்துவிட, மனிதர் கண்ணிமைக்கவே இல்லை. அனிச்சையாக வாயிலிருந்து அந்தப் பதில் வந்தது.

“ஏரி பக்கமே அதுக எறங்கல..“ 

(முற்றும்)