ஜெகநாத் நடராஜன்

1

குலசரம் சொன்னதை மகள் கோசலையைப் பெண்பார்க்க வந்தவர்கள் கேட்டுக் கொண்டார்கள். நூறு பவுன் நகையும், ரொக்கமாக  இருபது லட்ச ரூபாயும், குறிப்பிட்ட வகை காரும் கேட்டார்கள். மாப்பிள்ளை வீட்டினரோடு வந்திருந்த பெரியவர் நிதானமாகவும், புன்னகைத்தபடியும் ஒன்று ஒன்றாகக்  கேட்டார். அவர்கள் கூடி விவாதித்து ஒத்திகை பார்த்து வந்தது போல இருந்தது. மாப்பிள்ளையின் அம்மா குலசரத்தையும், மாப்பிள்ளையின் அப்பா அவளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படியெல்லாம் கேட்பதற்கு அவர்கள் பரம்பரை பணக்காரர்கள் இல்லை. பையனைப் படிக்க வைத்திருக்கிறார்கள். நல்ல விதமாய் வளர்த்திருக்கிறார்கள். குலசரத்திடம் வசதி இருப்பதால் கேட்டுப் பார்க்கலாம் என்று கேட்கிறார்கள். முதலிலேயே இவ்வளவுதான் தருவோம் என்று சொல்லியிருக்கலாமோ என்று குலசரத்துக்கு தோன்றியது. அவன் யோசனையில் இருந்தான். தனக்குப் பின் எல்லாம் தன் ஒரே மகளுக்குத்தான் ஆனாலும் கல்யாணத்தின் போது பேசி வாங்குவது சம்பிரதாயம், சாமர்த்தியம், பெருமை. யார் இதையெல்லாம் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை.

“இது எங்க விருப்பம் அப்புறம் உங்க விருப்பம். நிர்பந்தமெல்லாம் எதும் இல்ல. உங்க மகளுக்கு நீங்க செய்யறீங்க. இடையில நாங்க யாரு?” பெரியவர் சற்று உரத்த குரலில் பொதுவாக எல்லோரையும் பார்த்துச் சொன்னார்.

அவர்கள் நூறு பவுன் கேட்டதற்கு, அறுபது பவுன். இருபது  லட்சம் கேட்டதற்கு பத்து லட்சம். அவர்கள் கேட்டதைவிட கொஞ்சம் குறைச்சலான விலையுள்ள கார். சட்டி சாமான், பண்ட பாத்திரமெல்லாம்  குறையில்லாமல் செய்கிறேன் என்று குலசரம் சொன்னான். அதைத்தான் எதிர்பார்த்து வந்ததுபோல சரி என்று சொல்லிவிட்டார்கள். நீங்களே நிச்சயதார்த்தத்திற்கும், கல்யாணத்திற்கும் நல்லநாள் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, பெண் பார்க்க வந்த வெளியூர்க்காரர்கள் சந்தோஷத்துடன்  கைகூப்பி திரும்பிப்போனார்கள்.

 அவர்கள் படியிறங்கியதும் அந்த வீட்டை அமைதி சூழ்ந்து கொண்டது. அமைதியைக் கலைத்தபடி உள்ளூர் ஜனங்கள் மெல்ல எட்டிப் பார்த்தார்கள். அவர்களிடம் வீட்டிலுள்ளவர்கள் யாரும் எதுவும் பேசாததால் அமைதியாகத் திரும்பிப் போய்விட்டார்கள். தூக்குச் சட்டியிலும், குத்துப் போகணியிலும் மிச்சமிருந்த சாப்பாடு வீடு வீடாகப் போயிற்று.

“.எந்த வீடும் வய்த்தெரிச்சப் பட்றக்கூடாது. பாத்து நடந்துக்க”. குலசரம் தன் மனைவி சாலாட்சியிடம் சொல்லியிருந்தான்.

மகள் கோசலை அலங்காரம் கலைக்காமல் மாப்பிள்ளை வீட்டாருக்காகக் கட்டிய சேலை மாற்றாமல் அறைக்குள்ளேயே முடங்கிவிட்டாள். கோசலை எதாவது சொல்கிறாளா? என்று அம்மாக்காரியிடம் குலசரம் கண்களாலேயே கேட்டான். அவள் இரண்டுமுறை அந்த அறைக்குள் போனாள். கோசலை அமைதியாகவே இருந்தாள். அவளிடம் பேச பயமாக இருந்தது. அவளும் என்னதான் பேசுவாள். முதல் மாப்பிள்ளை சொந்தத்தில் பார்த்து, நிச்சதார்த்தம் வரைக்கும்போய் நின்றுவிட்டது. ஜாதகம் சரியில்லை என்று காரணம் சொன்னார்கள். குலசரம் அரிவாளைத் தூக்கிக்கொண்டு போனான்.

 ”என்ன வெட்டுனா உம்மக சந்தோஷமா இருந்துருவான்னா வெட்டு.” என்று அக்கா முறைக்காரி பூவக்கா தலையைக் கொடுக்க வந்தாள். அவள் சொல்லில் அமைதியாகி, சொம்புத் தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு, தன் வீட்டுக்குள் வந்து குலசரம் அழுததில் மற்றவர் அழுகை சத்தமில்லாமல் போனது.

 இரண்டாவதாக மாப்பிள்ளையாகப் பார்த்தவனை கோசலையே வேண்டாம் என்று சொல்லி விட்டாள். குலசரம் அவளிடம் பேசாமல் மனைவியிடம் பொங்கித் தணிந்தான். 

” கல்யாணத்துக்கு பெறகு வாழமாட்டன்னு சொன்னாலோ, எதையாது அரச்சு தின்னு உசிர போக்கிக்கிட்டாலோ என்ன பண்ணுவோம். பிடிக்கலன்னு சொன்னாளே இந்த மட்டுக்கு நல்லதுன்னு நினப்பியளா அத விட்டுட்டு ..”

 அவள் சொல்லச் சொல்ல அமைதியானான்.

அடுத்ததாக மாப்பிள்ளை பார்க்கும்முன்,  ஒரு முறை ஜோஸ்யம் பார்த்துவிடலாம் என்று சாலாட்சி சொன்னாள். அவனுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை என்றாலும் சூழ்நிலை அவனுக்கு எதிராக இருந்தது.

எந்த ஜோதிடரைப் பார்க்க என்று யோசித்து வீரசிராமணி  ஜோஸியரைக் கண்டுபிடித்துப் போனான். நிறைய கூட்டம். காத்திருக்க வேண்டியிருந்தது. ஜாதகத்தைக் கொடுத்ததும் பிரிக்கும் போதே, குல தெய்வத்தைக் கும்பிடுகிறீர்களா? என்று ஜோஸியர் சாதாரணமாகக் கேட்டார். குலசரம் என்ன இப்படியொரு கேள்வி என்று யோசிப்பதற்குள் ”கும்புடுறியா? குடுக்கிறியா? என்று விலுக்கென நிமிர்ந்து கோபமாகக் கேட்டார், அந்தக் குரலின் சீற்றமும், கோபமும் சாமி என்று அவனுக்கு தெரிந்து போயிற்று. அவன் நடுங்கினான். ஜாதகத்தை எடுத்து கண்ணில் ஒற்றி, வெற்றிலை பாக்கும், அரளிப் பூவும் சேர்த்து அவனிடமே ஜோஸியர் திருப்பிக் கொடுத்தார். வாங்கிய அவனுக்கு கை நடுங்கிற்று, கண்கள் கலங்கின. முட்டிக்கொண்டு அழுகை வந்தது.

”இனி வரவேண்டாம்.”

 ”பொண்ணோட  கல்யாணம்?”

“ சாமிகிட்ட கேளு.”

குலசரத்தின் கால்கள் வலுவிழந்தன. அவன் தன்னைத் தாங்கி, நடக்க ஆரம்பித்தபோது

” யார்கிட்டயும் ஜாதகத்த காட்ட வேண்டாம். பணம் பெருத்த அப்பனுக்கு பொறந்த மகன்னு ஜாதகம் சொல்லுது. அத இத சொல்லி காச கறப்பானுவ. தப்பான பாதையில போயிட்டா பெருத்த சங்கடம் வந்து சேரும்.”

அவன் சம்மதம் என்பது போல் ஜோஸியரைக் கும்பிட்டான். நடந்தான்.

சாலாட்சி புருஷன் வரவுக்காக வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். தரையிலிருந்து நாலடி உயரத்தில் உயர்த்தி தளம் போட்டுக் கட்டிய வீடு. ஊருக்குள் வரும் சாலையில் பேரூந்து தூரமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஊருக்குப் பக்கத்தில் வரும்வரை பார்த்துக் கொண்டிருந்தாள். ஜன்னல் ஓரமாக குலசரம் அமர்ந்திருந்தான். வீட்டைக் கடந்துபோய் அரச மரத்தடியின் திரும்பி ஒலி எழுப்பி, புழுதியைக் கிளப்பிக்கொண்டு நின்றது. அவன் வீட்டுக்குள் வருவதற்குள் அடுப்பில் காப்பிக்கு தண்ணி வைத்து விட்டாள். காய்ந்த தென்னை ஓலை பற்றிப் படபடவென்று எரிந்தது. வீட்டுக்குள் வந்து அமர்ந்தவனிடம் உடனே பேச வேண்டாமென்று காத்திருந்தாள். தண்ணீர் குடித்தான். காப்பி குடித்தான். ஜாதகப் பையை சாமி படத்துக்கு முன்னால் வைத்தான். கும்பிட்டான். அமைதியாக இருந்தான். அவளைப் பார்க்கவில்லை. அவளும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

 அவன் பஸ் ஏறியபோதே மூக்கு வியர்த்து ஜோசியம் பார்க்கப் போயிருப்பதை ஊர்க்காரர்கள் தெரிந்து கொண்டார்கள். வீரசிராமணி ஜோஸியர் அப்போதுதான் ஊரில் மிகப் பிரபலமாகிக் கொண்டிருந்தார். சொன்னது சொன்னபடி நடக்கிறது என்று பெயர் வாங்கியிருந்தார். அவனிடம் அவர் என்ன சொன்னார் என்று ஊருக்கு தகவல் தெரியாமல், நேரம் அமைதியில் கழிந்து கொண்டிருக்க, குமாரசாமி தாத்தாதான் வீட்டுக்குள்  முதலில் வந்தார். ”வாங்க தாத்தா.” என்று அவன் அழைத்து நாற்காலியை எடுத்துப் போட்டான். ”காப்பி கீப்பி போட்டுறாதத்தா. “ தாத்தா சாலட்சியைப் பார்த்துச் சொன்னார்.

“ வீரசிராமணிக்குப் போயிருக்கறதா சொன்னாங்க..” தாத்தா பொடி டப்பியிலிருந்து பொடியை எடுத்து உறிஞ்சிக் கொண்டார். அவன் முகத்தைப் பார்த்தார். சாலட்சிக்கு அது பிடித்திருந்தது. அவளும் நெடு நேரமாக வாய்க்குள் வார்த்தைகள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள்.

”நா, என் குல சாமிக்கி என்ன குற வச்சேன்.”

குலசரம் தலை குனிந்திருந்தவன் நிமிர்ந்து கேட்டான்.

”யாரு சொன்னா. நாக்கு அழுகிரும்.” 

”ஜோஸியர் சாமிய கும்பிடுதியான்னு கேட்டாரு” குலசரம் அழுது விடுபவன்போல சொன்னான்.

” அப்படியா “

குமாரசாமி தாத்தா அமைதியாகப் பார்த்தார். வடிவு ஆச்சி, கருப்பாயி ஆச்சி, தாமரை, முப்புடாதி, செண்பகம் என்று ஆளாளுக்கு வந்து விட்டார்கள். வருத்தமான நேரத்தில் அவர்கள் வந்தது சாலாட்சிக்கு எரிச்சல் முட்டிக்கொண்டு வந்தது.

“ என்னவோ ஒரு குறை இருக்கு போலருக்கு. எதாவது நேந்துட்டு செய்யாம விட்டியா?”

”இல்லையே. நம்ம சாமி முண்டன் அப்படி என்ன கேட்டுறப் போகுது, சைவச்சாமி. சிலை கூட கிடையாது. பீடம்தான் அலங்காரம் பண்ண. காவி வேட்டி. லாலா கட பலகாரம்.அது கேட்டு நா எத இல்லன்னு சொல்லிறப் போறேன். எப்படியோ கெடந்த என்ன இன்னக்கி இந்த உசரத்ல சாமி வச்சிருக்கு. அதுக்கு செய்யாம யாருக்குச் செய்யப் போறேன்.”

” அதுதான.” வந்தவர்கள் உச்சுக் கொட்டினார்கள்.

”ஆமா வாஸ்தவந்தான. ஜோசியன் வேற எதும் சொல்லலியா?”

தாத்தா கூர்மையாகப் பார்த்துக் கேட்டார்

”இல்லயே. அந்த ஒரு கேள்வியோட ஜாதகத்த மடக்கி கையில குடுத்துட்டாரு.”

வந்தவர்கள் முகம் ஒரு மாதிரி ஆயிற்று

”நீ எதாவது வேண்டியிருந்தியா சாலாச்சி?”

”கோசல கல்யாணம் நல்ல விதமா நடக்கணும்னுதான் வேண்டியிருந்தேன். நா, என்ன அவுகளும் அதத்தான் வேண்டியிருந்தாஹ. வேற என்ன வேணும் எங்களுக்கு. அதுதான் எங்க மனசில குறை. சாமிக்கு என்ன குறை வச்சோம்ன்னு தெரியலயே. லாரிக் கம்பெனிக்கு சாமி பேரத்தான் வச்சிருக்கோம். சாமி பேர சொல்லாம அவுஹ சாப்பாட்டகூட கையில எடுக்க மாட்டாஹ.”

”சொன்ன ஜோஸியன் முழுசாச் சொல்லாம ஏன் முழுங்கிச் சொல்லியிருக்கான். வேற யாரையாவது பாக்கலாமா?”

”வேற யார்கிட்டயும் ஜாதகத்த காட்ட வேண்டாம்ன்னு சொல்லிட்டாரு.”

அங்கு அமைதி நிலவியது. முகங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டு பார்க்காததுபோல நின்றன.

”சரிப்பா நாம நமக்குள்ள  பேசி என்ன ஆவப்போகுது. நீ குளிச்சுட்டு முதல்ல கோவிலுக்குப்போயி சூடத்த ஏத்தி கும்பிட்டுட்டு வா. சாமி கிட்ட உனக்கு எதாவது குறை வச்சிருக்கனான்னு மனசார கேளு. சொல்லாமலா போயிரும்.”

குமாரசாமி தாத்தா எழுந்து கொண்டார். சாலட்சி திருநீற்றுக் கொப்பறையைக் கொண்டுவந்து நீட்டினாள்.

குமாரசாமி தாத்தா கும்பிட்டு எதையோ முணுமுணுத்து தான் முதலில் பூசிக்கொண்டு குலசரம் நெற்றியிலும் பூசினார். சாலாட்சி காலில் விழுந்து கும்பிட்டு எழுந்தாள்.. ஏ கோசல என்று மகளைக் கூப்பிட்டாள். உள் அறையிலிருந்து எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கோசலை ஓடிவந்தாள். தாத்தா அவளைப் பார்த்தார். ”பூசுங்க தாத்தா” சாலாட்சி சொன்னாள்.

 தாத்தாவின் கைகள் திருநீற்றுக் கொப்பறையையே துழாவியது. கோசலையின் முகத்தைப் பார்த்தது. துழாவுவதும், பார்ப்பதும் எதையோ ஆழ்ந்து யோசிப்பதுமாக இருந்தார்.அவர் கையை நகரவிடாமல் எதோ விடுக் விடுக்கென்று இழுத்தது போல இருந்தது. அவரையே அனைவரும் பார்த்தார்கள். ஆள் காட்டி விரலை மூக்கில் வைத்து இமைகள் படபடக்க கண்மூடி நின்ற கோசலையும் பார்த்தாள். தாத்தா பூசாமல் திருநீற்று கொப்பறையைக் கொடுத்து நகர்ந்து விட்டார். சாலாட்சி திருநீற்றைப் பூசி மகளை அழைத்துக் கொண்டு போனாள். கட்டிலில் அமர்ந்த கோசலை அம்மாவைப் பார்த்தாள். 

“பயப்படாத” என்றாள் அம்மா.

2

சாயங்காலமாக கோவிலுக்குப் போனார்கள். ஆள் அனுப்பி தென்காசியிலிருந்து குலதெய்வத்திற்கு மட்டுமல்லாமல் கோவிலிலிருக்கும் எல்லா சாமிக்கும் மாலை வாங்கிவரச் சொன்னான். கனத்த மல்லி மாலை. குலதெய்வத்துக்கு மண்டப லாலாக் கடையில் இனிப்புகள், நான்கு வாழைத்தார் என்று ஆட்டோவில் வந்து இறங்கிற்று. பாயசம் வைக்க சாலாட்சி பானையை தயார் செய்தாள். அரிசி, வெல்லம் , தேங்காய் என்று தேடித்தேடி சேர்த்து வைத்தாள். மாவிளக்குப் போட மாவு திரித்தாள்.

 ”போடறதோ போடற கொப்பற பாயாசமா போடு.” என்று யாரோ சொல்லி விட்டுப் போனார்கள். யார் என்ன சொன்னாலும் அது சாமி சொல்லச் சொல்வதாகவே குலசரம் நினைத்தான். கொப்பறை பாயாசம் போட்டு விட்டு ஊருக்குச் சொல்லாமலிருக்க முடியுமா? வீடு வீடாக சாலட்சி போய்  கோவிலில் கொப்பறை பாயசம் போடுவதைச் சொல்லி பூஜைக்கு வரச்சொல்லி சொல்லிவிட்டு வந்தாள்.

எல்லோருக்கும் சொல்லியாகிவிட்டதா என்பதை கணவனும் மனைவியும் பேசி உறுதிப்படுத்திக்கொண்டார்கள். மறந்த வீட்டுக்கு மறுபடி போனார்கள். சாமிக்கு மனசு குளிருதோ இல்லையோ ஊரில் ஆவலாதி எதும் வந்து விடக் கூடாது என்பதில் குலசரம் கவனமாக இருந்தான்.

அந்த ஊரில் அவன் எல்லோருக்கும் எடுபிடியாகத்தான் சின்ன வயதில் இருந்தான். சோத்துக்குத்தான் வேலை பார்த்தான். அழுக்கு சட்டை, நிறம் மங்கி நாளான வேட்டி, வேட்டிக்கி கீழே தொங்கும் பெரிய டிரவுசர். பட்ட வெட்டிய தலைமுடியோடு அவன் ஊரில் எல்லா வீடுகளுக்கு வெள்ளையடித்தான். மாடு மேய்த்தான். மரம் வெட்டிக் கொடுத்தான். ஓலை பிரித்துக் கொடுத்தான். நெல் அவித்தான். காயவைத்தான். காய்ந்த்தும் மில்லுக்குக் கொண்டுபோய் அரைத்து அரிசியாக்கிக் கொண்டு வந்தான். நெல் அறுவடையின்போது களத்தைக் காவல் காத்தான். பக்கத்து ஊர் டிராக்டர் உழவுக்கு ஊருக்கு வந்தபோது டிரைவிங் பழகினான். லைசன்ஸ் வாங்கினான். ஊருக்கு வந்த லாரியில் ஏறி சென்னைக்குப் போனான். டிரைவர் ஆனான். யார் யாரோ அவனுக்கு உதவி இன்று ஐந்தாறு லாரிகள், டிராக்டர், நிலபுலன், கல்யாணம், மனைவி என்று வாழ்கிறான். யாரையாவது அவன் கூப்பிடாமல் விட்டால் புதுப் பணக்காரன், திமிறு என்று சொல்லி  விடுவார்கள். ”வாங்கித் தின்னதெல்லாம் மறந்து போச்சா?” என்று நாலு பேருக்கு முன்னால் நிறுத்தி அவமானப்படுத்தி விடுவார்கள். கோபம் கொண்டால் வீட்டு விசேஷம் எதற்க்கும் வர மாட்டார்கள். ”என்னத்ல குறைஞ்சு போயிட்டோம்ன்னு எங்ககிட்ட சொல்லல.” என்று பஞ்சாயத்து கூட்டி விடுவார்கள்.

பிரச்சினை வரக்கூடாதென்று யோசித்து எல்லோருக்கும் சொன்னதால், சின்னதாக கோவில் பூஜை என்று ஆரம்பித்தது எதோ பெரிய விசேஷம் போல வீடு ஆட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.. சவுண்ட் செட்டுக்குச் சொல்லி கோவிலைச் சுற்றி நான்கைந்து டியூப் லைட்டுக்குச் சொல்லி விட்டான்.

” மத்த சாமிக்கு எல்லாம் வாங்கியிருக்கியா?” என்று குமாரசாமி தாத்தா கேட்ட பிறகுதான் மறந்து விட்டதெல்லாம் ஞாபகம் வந்தது. தீவெட்டி, சாராயம், சுருட்டு, சின்ன ஆட்டுக் குட்டி அம்மனுக்கு, சேவல், அதோடு ஒரு கிடாயும் வாங்கியாகி விட்டது. எல்லாம் மனசுக்கு நிறைவாக இருந்தாலும் குலசரத்துக்கு. அடிக்கடி ஜோஸியக்காரனின் முகம் நினைவில் வந்து வந்து போயிற்று. ”என்ன குறை வைத்தேன் என் சாமிக்கு” என்று  நெருக்கமானவர்களிடமெல்லாம் கண்ணீர் சிந்தினான். யாராவது எதாவது காரியமாக எதையாவது சொல்வார்கள் என்று எதிர் பார்த்தான். கவலைப்படாதே என்று எல்லோரும் வெறும் வார்த்தைகளைத்தான் சொன்னார்கள்.

”பூவக்காவை கூப்பிட்டியாடா? என்று கருப்பாயி ஆச்சி சாப்பிட்டு வட்டு இலையை மடித்து தூரப் போடப் போனவள் அவனைப்பார்த்துக் கேட்டாள்.

”வெளையாடுதியா?” என்று குலசரம் சீறினான். அவள் வந்து பேசுகிறேன் என்று என்று சைகையில் சொல்லிவிட்டுப் போனாள்.

அவன் ஒரு நாளில் ஒரு தடவையாவது அவன் தூரத்து சொந்தமான பூவக்கா மீது கோபப்பட்டான். அவள் மகனுக்கு நிச்சயதார்த்தமான கோசலையின் கல்யாணத்தை நிறுத்தியிராவிட்டால் கல்யாணமாகி ஆறு மாதம் ஆகியிருக்கும். கோசலை கர்ப்பவதியாகிக்கூட இருக்கலாம். புத்தி கெட்ட கிழவி அவளைக் கூப்பிடச் சொல்லுது பாரு என்று நினைத்த போது.

”கூப்புடு ஒண்ணும் குறஞ்சுடாது.”

என்று கையை துடைத்துக் கொண்டு கருப்பாயி வந்தாள்.

அவன் கோபம் கொண்டான்.

“ தள்ளி வச்ச பொல்லாப்பு உனக்கு ஏன்னு கேக்கறேன். உன் மகள கட்டிக்க அவ மகனுக்கு குடுத்து வைக்கலன்னு நின.”

கருப்பாயி ஆச்சி பேசிக்கொண்டே போனாள்.

 குலசரம் அமைதியாக யோசிக்க

’உன் சம்சாரத்துகிட்ட யோசன கேக்காத அவ வேண்டாம்ன்னுதான் சொல்லுவா.”

என்று சொல்ல, உள்ளே வந்த

சாலாட்சி ”கூப்பிடுங்க” என்றுதான் சொன்னாள்.

இருவரும் பூவக்கா வீட்டுக்குப் போனார்கள். பெரிய வீடு. வாசல் கடந்து தளம் கடந்து நடுவீடு கடந்து உள்ளேபோன போது மானவெளியில் பருத்தியைக் குவித்துப்போட்டு நான்கைந்து பேர் அமர்ந்து பஞ்சைப் பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

”வாங்க வாங்க”

என்று அக்கா அவர்கள் வந்ததை சந்தோஷமாகச் வரவேற்றுச் சொன்ன மாதிரித்தான் இருந்தது. தளத்திற்குள் வந்து அமர்ந்தார்கள். நல்ல பூச்செங்கல் பதித்த தளம். குளிர்ச்சியாய் இருந்தது. வீரசிராமணிக்கு ஜாதகம் பார்க்கப்போனது முதல் கோவிலில் பூசை வரைக்கும் குலசரம் விலாவரியாகச் சொல்லி முடித்தான். பூவக்காவுக்கு எல்லாமே தெரிந்திருந்தது. பூசைக்கு கண்டிப்பாக வருவதாகச் சொன்னாள். குலசரத்துக்கு மனசு குளிர்ந்தது போலிருந்தது

.” வந்து இருந்து எல்லாருமா சேந்து கோசலை கல்யாணத்தையும் நடத்திக் குடுக்கணும்.” கெஞ்சுவது போலச் சொன்னான்.

 பூவக்கா சரி என்று சொல்வதற்குள். ”வருவாஹ வாராம எங்க போவாஹ” என்று சாலாட்சி வரிசை வைத்தாள்.” பின்ன ..” என்று அக்காக்காரி சொல்லி வாசல் வரைக்கும் வந்தாள். அவர்கள் தெரு திரும்பும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனசு கனமாக மாறியது.

வீட்டுக்குள் வந்தவள் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். பின் குளிக்க தண்ணீர் எடுத்து வைத்தாள். சேலைகளை எடுத்துப் பார்த்து கோவிலுக்குக் கட்டிப்போகும் வாக்கில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கட்டிலில் போட்டாள். வீடெங்கும் தேடி மயிர்க் கொடியை எடுத்து வைத்தாள்.

 அவள் புருஷன் வயலுக்குப் போயிருக்கிறார். மிளக்காய்ப் பழம் பிடுங்குகிறார்கள். வர இருட்டாகி விடும். அவருக்கு காத்திருக்கும் அவசியமில்லை. அவள் போயிருக்கிறாள் என்று தெரிந்தால் அவரும் கோவிலுக்கு வந்து விடுவார். கோசலை தன் வீட்டுக்கு மருமகளாக வராமல் போனதில் அவருக்கும் வருத்தம் உண்டு. வாழ்வில் சில வருத்தங்கள் எதுவும் செய்ய முடியாமல் வருத்தங்களாகவே தங்கி விடுகின்றன.

3

நாலு மணிக்கு மேல் பூஜைப் பொருட்களையும், பண்ட பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் கோவிலுக்கு கிளம்பத்துவங்கினார்கள். எல்லோரும் முக்கிய விஷேஷம் போல பளிச்சென்ற துணியுடுத்தியிருந்தார்கள். ”கொட்டு மேளமும், கெரக ஆட்டமும்தான் இல்ல. இருந்தா கோவில் கொட மாதிரித்தான்”. கூட்டத்தில் யாரோ யாரிடமோ பேசினார்கள். சின்னஞ் சிறுசுகள் புடைசூழ, அழகின் உருவமாக கோசலை சென்று கொண்டிருந்தாள்.

அரை ஏக்கர் நிலப்பரப்பில் கோவில். ஈசான மூலையில் பெருவாகை மரம் உயரமாக வளர்ந்து நின்றது. காய்ந்த அதன் காய்கள் காற்றில் உரசி சலசலத்தன. பூசை செய்யும் பண்டாரம் இவர்களுக்காகவே காத்திருந்தான்.   ஒத்தாசைக்கு இரண்டு மூன்று சின்னப் பையன்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.” மாலைய சொன்ன இடத்ல வையி. பூச சாமாங்கள சொன்ன இடத்ல வையி. கேக்கும்போது எடுத்துத் தரணும் எங்க வச்சம்ன்னு தெரியாம தலையச் சொறிஞ்சன்னா நிமிட்டிப் புடுவேன் நிமிட்டி.” என்று விரட்டிக் கொண்டிருந்தான்.

 கொப்பறை பாயசத்துக்கு மண்தோண்டி பனைமட்டை துடுப்புகளோடு தயாராக இருந்தது. கல்யாண சமையல் செய்யும் பிச்சையா நெற்றி முழுக்க பட்டையடித்து, வேட்டியும் துண்டுமாக நின்று கொண்டிருந்தான். அடுப்புக்கு விறகுக் கட்டைகள் வாங்கிப் போட்டிருந்தான். அடுப்பு பற்ற வைக்க குப்பியில் மண் எண்ணெய். ரெண்டு கற்பூரத் துண்டுகள். அருகே தீப்பெட்டி. சுவர் ஓரமாக ஒரு மாசமே ஆகியிருக்கும் ஆட்டுக் குட்டியும், வளர்ந்த ஆடும் நின்றன. இரு கால்களும் கட்டப்பட்ட சேவல் குதிக்க முயன்று கொண்டிருந்தது. வந்தவர்கள் அவரவர்க்குப் பிடித்த இடங்களில் அமர்ந்தார்கள். வந்தவர் அமர வைக்கோல் விரிக்கப்பட்டிருந்தது. சமுதாயக் கூட வாடகை சமுக்காளங்களும் கிடந்தன.

”சொன்னதெல்லாம் வந்திருக்கா?”

”ஒரு குறையும் இல்ல.”

பண்டாரம் சந்தோஷமாக குலசரத்திடம் சொன்னான்.

குலசரத்துக்கு தன் குலதெய்வமான முண்டனுக்குப் பக்கத்தில் போக பயமாக இருந்தது. ஓரமாய் நின்று பார்க்கும்போதே உடல் சிலிர்த்தது.

பண்டாரம் சாமிகளைக் கவனிக்க துவங்கினான். முத்தாலம்மன். கருப்பச்சாமி. சுடலைமாடன், சிலைகள் நீர் விட்டு கழுவப்பட்டிருந்தன. சந்தனக் குழைச்சலில் பண்டாரத்தின் கைகள் நடமாடின, கும்பிட்டபடி சாமியின் கண்களைத் திறந்தான். முதலில் முத்தாலம்மன் கண் திறந்து பார்த்தாள். மாலையைப் போட்டு குங்குமம் வைத்து, பறித்துக்கொண்டு வைத்திருந்த வேப்பிலையும் சூலாயுதமும் முன்னால் வைத்து, பழக்குலை ஒன்றை வைத்து இலை விரித்து தேங்காய் உடைத்தான். அப்படியே அடுத்த சாமிகளும் அவன் கை வண்ணத்தில் உயிர் பெற்றன. கல்லில் வடித்திருந்த கருப்பசாமி சந்தனக் குழைவின் இடை வெளியில் முறுக்கிய கறுப்பு மீசையோடிருந்தார், சுடலை மாடனுக்கு பெயிண்ட் அடித்திருந்ததால் பண்டாரத்திற்கு பெரிய வேலையில்லை.

பிச்சையா அதற்குள் பாயசக் கொப்பறையை சூடாக்க ஆரம்பித்திருந்தான். துணைக்கு வந்த முத்தம்மா தேங்காய்களை உடைத்து திருக ஆரம்பித்திருந்தாள். கூப்பிடாத நிறையப் பேர் வந்து எட்டிப் பார்த்து பூசைக்கும் பாயசத்துக்கும் நேரமிருக்கிறது என்று போய்விட்டார்கள்.

நேரமாக நேரமாக ஒரு ஈரக் காற்று வீசியது. அடுப்பைச் சுற்றி வந்து திபு திபு வென எரிந்த நெருப்பை அணைத்து புகையைச் சுருட்டி வானம் நோக்கிக் கொண்டு போயிற்று. மழை வருமோ, எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டுமே என்ற கவலை திடீரென்று குலசரம் மனதில் தோன்றி கவலைக் குள்ளாக்கியது. கோவிலில் இருந்துகொண்டு இப்படி நினைக்கலாமா என்று ஆறுதல் சொல்லிக்கொண்டான். தன் குலசாமி பக்கம் போக அவனுக்கு ஆசையாக இருந்தது. நடக்க, ஜோசியரின் கோபக் குரல் காதில் ஒலித்து அடங்கியது. அவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சாமி பக்கம் போனான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த சாலாட்சி, அவன் போவதைப் பார்த்து தானும் வந்தாள். எழுந்த கோசலையை இரு என்று கைகாட்டி இருக்க வைத்துவிட்டு வந்தாள்.

சாமியைப் பார்த்ததும் அவனுக்கு அழுகை வந்தது. இத்தனைக்கும் பீடம்தான் அது. மாலையிடப் பட்டிருந்தது. மஞ்சளில் நனைத்தெடுத்த கோடி வேட்டியை குறுக்கும் நெடுக்குமாக கட்டியிருந்தான் பண்டாரம். பெரிய வாழை இலையில் இனிப்புகள். பழங்கள் கதலிப்.பழக்குலை, சாமியின் ஆணிச் செருப்பு. கக்கத்துக் கட்டை. சரம் சரமாய் துளசி மாலை. கல்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. குலசரம் சாமிக்கு முன் அமர்ந்தான்.சாலாட்சி பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். புகை காற்றில் அங்கும் இங்கும் படர்ந்து கண் கரித்தது. சில்லென்று குளிர் பரவியது. 

”மழ வரும்போலருக்கே”

யாரோ சொன்னார்கள்

”பாயாசம் என்னாச்சு. எல்லாம் ரெடியா இருக்கு. பாயாசம் கொதிச்சுட்டா மணியடிச்சு சூடம் காட்டிறலாம்.”

பண்டாரம் சூழ்நிலையைச் சொன்னான்.

பிச்சை கோபமாக அவனைப் பார்த்தான்.

கொப்பரை பாயசம் போடச்சொன்ன குமாரசாமி தாத்தாவை சிலர் கடிந்து கொண்டார்கள்.

”மழக்கி அவரு என்ன செய்வாரு””

தாத்தா மூக்குப் பொடியை உறிஞ்சியபடி மழ அது பாட்டுக்கு வரட்டும். ஆகறத பாருங்க என்றார். கட்டைகளை அள்ளிப்போட்டு எரித்தும் தண்ணீர் கொதிக்கவில்லை. துருவிய தேங்காயும், சிப்பத்தில் இருந்த அச்சுவெல்லமும் காத்திருந்தது.

“தீய பேப்பய காத்து எங்கிட்டோ கொண்டுக்கிட்டுப் போவுது.”

பிச்சை மொத்தமாகச் சொன்னான். யாரும் அதனை ஆமோதிக்க வில்லை.சற்று நேரத்தில் மழை வந்துவிட்டது. விருந்தாளி மழை. ஒவ்வொரு சாமிக்கும் பத்துக்குப் பத்து இடம்தான் இருந்தது. அதற்குள் கூடிய மட்டும் ஒண்டினார்கள். சிலர் ஓடினார்கள். குடை பிடித்துக் கொண்டு பூவக்கா வந்தாள். உள்ளே வராமல் வெளியிலேயே நின்றாள்.

”என்னக்கா எனக்கு மட்டும் இந்த மாதிரி ஆகுது”

மழையை பொருட்படுத்தாமல் வெளியே வந்த குலசரம் கேட்டான். அக்கா அவனை ஆவி சேர அணைத்துக்கொண்டான்.

கருப்பாயி ஆச்சிக்கு சாமி வந்தது. முத்தாலம்மன்தான். ஐந்து சாமிகள் இருக்கும் கோவிலில் தாய்ச்சாமி. எப்போதும் முதலில் அவள்தான் வருவாள். வேப்பிலையும் சூலாயுதமும் பண்டாரம் கொண்டுவந்து கொடுத்தான். கொட்டும் மழையில் அவள் அங்கும் இங்கும் ஓடினாள். வேப்பிலையை ஆக்ரோஷமாகக் கடித்துக் உருவினாள். கூடவே ஓடியவர்கள் அவள் சேலையை நழுவி விடாமல் கட்டினார்கள். அவள் இன்னும் கொஞ்சம் அருளோடு ஆடினால் மற்ற சாமிகளும் ஆடத் துவங்கி விடுவார்கள். குமாரசாமி தாத்தா அவளைச் சாந்தமாக்குவதில் தீவீரமாக இருந்தார். வெற்றிலை உதட்டோடு அவள் சிரித்தாள். ”இரு இரு அமைதியா இரு ஆத்தா.” என்றபடி அவளை நகரவிடாமல் பிடித்தார்.

சுடலமாடன் ஆடும் முத்து கிட்டினன், கருப்பசாமியாடும் விக்ரம்வந்து விட்டார்கள். குலசரம் தன் குலசாமி முண்டணைப் பார்த்தான்

“.என்னப்பா பாக்க உன் குல சாமியாட யாருமில்லன்னா,” அக்கா கேட்டாள். அவன் ‘’ஆமா’’ என்றான். அவனுக்கு சாமி வராது. பத்து வருஷமாக அவனுக்கு சாமி வருத்திப் பார்த்துவிட்டு வேண்டாம் என்று விட்டு விட்டார்கள். சித்தப்பா, பெரியப்பா என்று பெரிய குடும்பம்தான். சின்ன வயதில் சாமியாட இடமில்லாமல் கூட்டம் சிதறும். நாளடைவில் ஆளுக்கொருவராகப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்கள் வாரிசுகளும் ஆண்கள் இல்லை. ஒன்றுவிட்ட பெரியப்பா முறையில் செல்லையாப்பா இருக்கிறார். அவருக்கும் அவன் சாமிதான் குலதெய்வம். செல்லையாப்பா மிலிடரியில் இருந்தவர். சென்னையில் ஏ டி எம்மில் காவலுக்கு இருக்கிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை. மனைவியின் அக்கா மகளை எடுத்து வளர்த்தார். வளர்ப்பு மகள் வீட்டில்தான் வாசம். அவர்  இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அவருக்குச் சொல்லாதது கடைசி நேரத்தில் அவனுக்கு உறைத்து வருத்தமாக இருந்தது. 

நேரம் ஆகஆக கோவிலுக்குள் கூட்டமும், கூச்சலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. சின்ன தூறலாய் மழை விழ ஆரம்பித்தது. திடீரென்று மின்சாரம் போயிற்று. இருட்டில் ஆளாளுக்கு ஒருபக்கம் ஓடினார்கள். ஆய் என்ற பெரிய சத்தத்துடன் சுடலை மாடன் துள்ளினான். தொடர்ந்து கருப்பன். முத்தாலம்மையும் கூடச் சேர்ந்து கொண்டாள். கொட்டு மேளம் இல்லை. நாதஸ்வரம் இல்லை. வில்லுப்பாட்டு இல்லை. மழையில் தேய்த்த சந்தனம் மார்பில் வழிய, மாலைகளோடு ஆட வழியில்லாமல் சாமிகள் துடிப்பதும் அடங்குவதுமாக இருந்தார்கள். வெளிச்சத்துக்கு கொளுத்திய தீவெட்டியை சுடலை மாடன் பிடுங்கிக் கொண்டான் செஞ்சோடு அணைத்துக் கொண்டு இன்னும் இன்னும் என்றான். இன்னும் இரண்டையும் வாங்கி மார்புடன் அணைத்துக் கொண்டு முன்னால் ஓடப் போகிறவனைப் போல எட்டுவைத்து எட்டுவைத்து நின்றான், இருட்டில் யாரோ குலவையிட்டார்கள். நேரமாயிற்று. இனியும் காத்திருக்க முடியாது. மழை நிற்கும் பாடில்லை. இன்னும் பெரிதாகப் பெய்யும். சாமிக்கு சூடம்காட்ட முடிவாயிற்று. அதற்குள் அச்சு வெல்லத்தை நொறுக்கி தேங்காய்ப் பூவை தூவி பச்சரியைக் கலந்து குத்துச் சட்டிகளில் பிச்சை கொண்டு வந்து வைத்தான்.

பண்டாரம் ”நல்ல வேலை செய்திய” என்றான்.

 குலசரத்துக்கே திருப்தியில்லாமல் அன்றைய குலதெய்வ பூஜை முடிந்து போயிற்று.

”என்ன குறை வச்சோம். ஏன் சாமிக்கி பிடிக்கல.” என்று குலசரம் வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் கேட்டான். எதுவும் பேசத் தோன்றாமல் அவளும் கண்ணீர் உகுத்தாள். மகள் கோசலைக்குத் தெரியாமல் அவர்கள் இருவரும் கலக்கமாக இருந்தபோது மழை மீண்டும் உக்கிரமாக ஆரம்பித்து. விடிய விடியப் பெய்தது.

4

தெய்வக் குத்தம் என்று ஊருக்குள் பேச்சாயிற்று. விடிந்ததும் கணவனும் மனைவியும் கோவிலுக்குப் போனார்கள். அலங்கோலமாகக் கிடந்த அனைத்தையும் அள்ளிப் போட்டு சுத்தம் செய்தார்கள். குலசரம் மனம் உடைந்து போனான். சாமிக்கு முன்னாலேயே நெடு நேரம் அமர்ந்திருந்தான். ’’வீரசிராமணி ஜோதிடரை நான் போய் பார்த்து விட்டு வரட்டுமா?’’ என்று சாலாட்சி கேட்டாள். அவனுக்கு அவரது ஆக்ரோஷமான குரல் மீண்டும் ஞாபகம் வந்தது அமைதியானான். வேண்டாம் என்று தலையசைத்தான். அவர்கள் கோவிலிலிருப்பதைக் கேள்விப்பட்டு பூவக்கா வந்தாள். வீட்டுக்குப் போனதாகச் சொன்னாள். மூவரும் என்ன பேசுவதென்று தெரியாமலிருந்தார்கள்.

”உனக்கு எதோ தெரியும் நீ சொல்ல மாட்டங்கற, எம்மகள உன் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கல. பரவால்ல அந்த வருத்தம் இப்ப எனக்கு இல்ல. ஆனா நீ ஜோஸியம்ன்னு சொன்னியே அது என்ன? சொல்ல மாட்டியாக்கா?”

அக்கா எதிர்பாராமல் குலசரம் கேட்டான்.

”சொல்ல என்னப்பா இருக்கு. ஜாதகத்த பாத்தாரு இடைகால் ஜோஸியரு. வேண்டாம் சரிப்பட்டு வாரதுன்னு சொல்லிட்டாரு. எங்க வீட்டு அவுஹளுக்கு இடைகால்காரரு சொல்லுததுதான் வேதம். நா, மறுத்து என்ன சொல்லமுடியும். எல்லா வருத்தத்தையும்  முழுங்கிக்கிட்டு பேசாம இருந்தேன். நீ நெஞ்ச தொட்டுச் சொல்லு, உன் மகளவிட அழகான பொண்ணையா என் மகனுக்கு கட்டி வச்சிருக்கேன். இல்ல, உன்னவிட உசத்தியான இடத்லயா பொண்ணு பாத்திருக்கேன்.”

அக்கா அழுது புடவையில் மூக்கைச் சிந்தினாள்.

குமாரசாமி தாத்தாவும் வந்து சேர்ந்தார். என்ன பிரச்சினை என்று ஆழ்ந்து யோசித்த குமாரசாமி தாத்தா, ’’உன் மகளுக்கு கல்யாணம் நடக்கணும். மாப்பிள்ளை பாக்கலாமான்னு கேக்கத்தான நீ ஜோஸியர்கிட்ட போன. உனக்கு பதில் கிடைக்கல. அதுதான உன் பிரச்சினை. சாமிகிட்ட பூக்கட்டி கேப்போம். என்ன தாயீ சொல்லுத.” என்றார்.

”வேண்டாம் தாத்தா முன்ன பின்ன எதாவது  வந்தா மனசுக்கு கஷ்டமா இருக்கும்“ என்று சாலாட்சி தயங்கினாள். 

’’எந்த வழியும் தெரியலன்னா கால்போன போக்குல, போக வேண்டியதுதான் அப்பதான எதாவது வழி கிடைக்கும். பூவு நீ ராசாமணி வீட்டுல பிச்சிப் பூவும், அரளிப்பூவும் இருக்கும். இதுல நாலு அதுல நாலு பறிச்சு  பொட்டலம் கட்டி எடுத்துட்டு வா.”

என்று ஆணையிட்டது போலச் சொன்னார். தளர்ந்து கிடக்கும் நேரத்தில் அவர் அப்படிச் சொல்வது குலசரத்துக்கு ஆறுதலாக இருந்தது.

போன வேகத்தில் பூவக்கா வந்து விட்டாள். கையில் இலையில் நார் கட்டிய இரண்டு பொட்டலங்கள்.

குமாரசாமி தாத்தா வாங்கி சாமிக்கு முன்னால் வைத்தார். அதற்கென்றே வந்தவள் போல கருப்பாச்சி தன் பேத்தியை இடுப்பில் வைத்தபடி வந்தாள்.

”வா நல்ல நேரத்துக்கு வந்திருக்க.” என்ற தாத்தா குழந்தையை இறக்கி விடச் சொன்னார்.

குழந்தை இரண்டு பொட்டலங்களையும் பார்த்தது. ஒன்றை எடுத்தது. தாத்தாவிடம் கொடுத்தது. வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டு குலசரத்திடம் கொடுத்தார், 

“வீட்டுக்குப் போயி பிரிச்சுப் பாரு. சாமி உத்தரவு குடுத்திருந்தா நீ ஆசைப்பட்டத செய்யி.”

” பயமா இருக்கு தாத்தா” என்றாள் சாலாட்சி 

“ நடக்கும் நடக்கும். எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும். பயப்படாம இரு தாயி. உன் மக நல்லா இருப்பா. பூவு நீ இந்த போட்டலத்த எடுத்துட்டுப் போயி கிணத்துல போட்டிரு.”

என்று சாமிக்கு முன்னாலிருந்த இன்னொரு பொட்டலத்தை எடுத்து பூவிடம்  கொடுத்தார். அவள் கனமான ஒன்றை வாங்குவதுபோல் அதனை வாங்கி தன் முந்தியில் முடிச்சிட்டுக் கொண்டாள்.

குலசரம் வீட்டுக்கு வந்து சாமிக்கு முன்னால் பிரித்துப் பார்த்தபோது பிச்சிப்பூ வந்திருந்தது. அவன் சந்தோஷமானான். கல்யாணம் நல்ல படியாக நடந்தால் தனிக்கொடை போடுவதாக சாமியிடம் வேண்டிக் கொண்டான். சாலாட்சி சந்தோஷமாக நடந்தவைகளை கோசலையிடம் சொன்னாள். கோசலை அப்படியா என்பது போல பார்த்தாள். அம்மாக்காரிக்கு அது மனசைப் பிசைந்தது. ஆட்கள் கூடி விட்டார்கள். அந்த ஊரில் இருப்பவர்கள். வேலைக்காக வெளியூர் போனவர்கள். வெளி நாட்டில் இருப்பவர்கள் என்று எல்லோரைப் பற்றியும் விசாரிக்கச் சொன்னான் குலசரம். சொந்தக்காரர்கள் வீடு வீடாய் சாலாட்சி ஏறி இறங்கினாள். கோசலைக்குப் பொருத்தமாக எந்த வீட்டில் மாப்பிள்ளை இருக்கிறான். லட்சாதிபதி குலசரத்தின் மகள் கோசலையைக் கட்டிக் கொள்ளப் போகும் மாப்பிள்ளை யார் என்பது பெரிய கேள்வியாயிற்று.

5

மாப்பிள்ளை யாரென்று முடிவாகும் வரை அந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று கோசலையை வெளியூரில் இருக்கும் சாலாட்சியின் தங்கை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து விட்டார்கள். கோசலையும் ஒன்றும் சொல்லவில்லை. சித்தியோடும் அவள் குழந்தைகளோடும் சந்தோஷமாகவே இருந்தாள் என்று குலசரம் வீட்டில்வந்து சொன்னான். உண்மையில் மாப்பிள்ளை யாரும் அமையாத பெண்ணாக மகள் ஆகிப்போனதில் குலசரம்தான் துடித்துப்போனான். 

வெளியூரில் மாப்பிள்ளை பார்க்கலாம் என்ற யோசனையை குமாரசாமி தாத்தாதான் சொன்னார். அவர் பேத்தி ஒருத்தி வெளியூருக்கு வாழ்க்கைப்பட்டு சந்தோஷமாக இருக்கிறாள். ஆனால், அது காதல் திருமணம். அதனைப் பூசிமெழுகி இரு வீட்டார் திருமணம் போல நடத்திவிட்டார்கள். தாத்தாவுக்கு இதெல்லாம் தெரியாது. அந்தப்பெண் சந்தோஷமாகத்தான் இருக்கிறாள். அவர் சொன்னது நல்ல யோசனையாகப் பட்டது. அதோடு வேறு வழியும் இல்லை.

அங்கும் இங்குமாக வலைவீசித்தான்  ஒரு மாப்பிள்ளையைப் பிடித்தார்கள். படித்திருக்கிறார். திருச்சி பெல் கம்பெனியில் வேலை. தொடர்ந்து படித்துக்கொண்டும் இருக்கிறார். அப்பா ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. அம்மா இன்னும் வேலைக்குப் போகிறார். ஒரு அக்கா. கல்யாணமாகிவிட்டது. சொந்த வீடு. கடன் கஷ்டம் இல்லை.பெண் பார்க்க வந்தவர்கள் தன்மையாகப் பேசினார்கள். மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறது என்று கோசலையும் சொல்லிவிட்டாள். பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று சபையிலேயே மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் சொல்லிவிட்டார்கள். சீர் செனத்தி பற்றிக் கேட்டதும், தங்கள் ஆசையைச் சொன்னார்கள். தன்னால் இதுதான் முடியும் என்று சொன்னதற்கு சரியென்று விட்டார்கள். எல்லாம் நல்லபடியாக முடியும் போது அவர்கள் கேட்டதையெல்லாம் கொடுத்து விடலாம் என்று குலசரம் முடிவு செய்திருந்தான்.

6


வெளியூர்க்காரர்கள் பெண் பார்த்துவிட்டுப்போன இரவில் தூங்கிய குலசரத்துக்கு கெட்டகனவு வந்தது. தனிமையான இடத்தில் தான் யாருக்கோ பயந்து ஓடுவதுபோல. துரத்தும் உருவம் தன்னை மிரட்டுவதுபோல. தன்னைத் துரத்தியது யாரென்று அடையாளம் காண முடியவில்லை. ஆனால் குரல் வீர சிராமணி ஜோசியனின் கனத்த குரல். அதே கோப வீச்சு. நெஞ்சு பொறுக்காத உக்ரம். ஆவேச மூச்சு. அவன் திடுக்கிட்டு எழுந்துவிட்டான். தளத்துக்கு வந்து பார்த்தபோது அப்போதுதான் குளித்த சாலாட்சி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தாள்.’’சாலா’’ என்றான் அவளைக் கூப்பிடும் அன்பான குரலில். அவள் மூன்று முறை கூப்பிட்ட பின்னால்தான் கண்திறந்தாள். பதட்டமாகப் பார்த்தாள். அவனருகே வந்து உட்கார்ந்தாள். கெட்ட கனவொன்றைக் கண்டதாகச் சொன்னாள். தான் கண்ட கனவைப்பற்றி அவன் சொல்லவில்லை. என்ன சொல்லி அவளை ஆறுதல் படுத்துவது என்றும் தெரியவில்லை.

விடிந்ததும் இருவரும் குமாரசாமி தாத்தாவைப் பார்க்கப் போனார்கள். தாத்தா விழித்திருந்தார். ஆனால் அவரால்  எழுந்து நடமாட முடியாமல் படுத்த நிலையிலேயே பேசினார். அவரிடம் தாங்கள் இருவரும் கண்ட கனவைச் சொன்னான்.

’’நானும் வாரேன். ஏழு மணிக்கி கெழக்க போற பஸ்ஸுல போயி ஜோஸியன பாத்துட்டு வந்துருவோம். இனிமே தாமதிக்கப் படாது.’’ தாத்தா எழ முயற்சித்தார். ஆச்சி காப்பியோடு வந்தாள். வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொண்டார்கள். அது தேவை என்பது போலவும் இருந்த்து.

”எதுக்கு பஸ்ஸுல போயிக்கிட்டு. கார வரச் சொல்லுதேன்”. 

”தாத்தா வேண்டாம்.” என்று சொல்லவில்லை.

தாத்தாவும் அவனும் சென்றபோது ஜோசியர் ஊரிலில்லை. எதோ விஷேசத்துக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். அவர் வருவதற்குள் சங்கரன் கோவிலிக்குப் போய் வரலாம் என்று தாத்தா சொன்னார். அங்கு சாமி கும்பிட்டு புற்றுமண் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்ட போது சர்ப்பச் சீறல் கேட்டது. திடுக்கிட்ட அவனிடம் தாத்தா விபரம் கேட்டார். அவன் சொன்னதும் ”எதோ இருக்கு” என்றார். அவனுக்குப் பயமாக இருந்தது. பக்கத்து வீட்டில் வாங்கிய போன் நம்பரில் ஜோஸியருக்குப் பேசிய போது ”உங்கள வர வேண்டாம்ன்னுதான சொன்னேன். பாத்தியளா நீங்க வரும்போது நா இல்ல.” என்றார். அவன் எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பதாகவும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் சொன்னான். தாத்தாவிடமும் சொல்லிப் பேசச் சொன்னான்.பிராப்தமில்லை என்று ஜோஸியர் உறுதியாகச் சொல்லி விட்டார். ”குல தெய்வம் தவிர வேறு யாரும் எதுவும் சொல்ல முடியாது செய்ய முடியாது. நீங்கள் மாப்பிள்ளை பார்த்ததிலேயே ஏதோ தவறு இருக்கிறது.” என்று சொல்லி போனைத் துண்டித்துவிட்டார்.

வீரசிராமணியிலிருந்து வந்த கார் நேரடியாக பூவக்கா வீட்டுக்குத்தான் போயிற்று. மாமாவும் அங்கு இருந்தார். மிளகு வத்தல் வியாபாரிகள் கணக்கு வழக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் இருந்தார்கள். ஒரு பக்கம் பருத்தி பிரிப்பு. மாமா எல்லோரையும் பார்த்தார். ஒவ்வொருவராக வெளியேறியபின் தாத்தா வெற்றிலையை துப்பிவிட்டு வந்தார். பூவக்கா தண்ணீர் சொம்புடன் வந்தாள்.

சாலாட்சி விஷயம் தெரிந்து வந்துவிட்டாள். இன்னும் சிலர் வந்த போது ”கொஞ்சம் இருங்கத்தா முக்கியமா பேசிட்டு இருக்கோம்.” என்று தாத்தா விரட்டினார்.

’’குலசரம் பொண்ணு வாழ்க்கை நீங்க சொல்லுததுலதான் இருக்கு. நீங்க எந்த ஜோஸியன் கிட்ட அவ ஜாதகத்த காட்டுனீங்க. ஏன் அவள உங்க பையனுக்கு வேண்டாம்ன்னு சொன்னீங்க. ஜாதகத்ல எதாவது குறை இருக்கா. இருந்தா சொல்லுங்க அது நிவர்த்திக்கு எதாவது பரிகாரம் இருக்கான்னு விசாரிக்கலாம்.”

தாத்தா அவசர அவசரமாகப் பேசினார். மாமா என்ன பேசுவதென்று தெரியாதவர் போல இருந்தார்.

அத்தையும் மாமாவும் அமைதியாக இருந்தார்கள்.

சாலாட்சி விசும்பினாள்.

”பொம்பள கண்ணீரு சிந்தப்படாது”

மாமா சொன்னார்

”எம் பொண்ணுக்கு வழி சொல்லுங்க. நா அழல”

மாமா அப்போதும் அமைதியாக இருந்தார். பூவக்கா அவன் முகத்தையே பார்த்தாள். குலசரம் வீரசிராமணிக்குப் போய் வந்த விஷயத்தைச் சொன்னான்.’’எதோ ஒரு குத்தம் இருக்கு. சொல்லுங்க மாமா. உங்க கால்ல விழுந்து கேக்கறேன்.’’ விழுந்தான். அழுதான். மாமா அவனை தூக்கினார்.

”நீங்க கேக்கறதனால சொல்லுதோம். மனசில வச்சுக்க கூடாது. எதாவது நேரத்ல இதபத்தி பேசக்கூடாது”

பூவாக்கா பேச ஆரம்பித்தாள்.

”சொல்லுத்தா இவங்களுக்கு அதா வேல”

கோசலைய குமாருக்கு நிச்சயம் பண்னுனதுல இருந்து வீடு சரியில்லாம போச்சு. அவுஹ வரப்பு வழுக்கி விழுந்தாக. நா அங்கணத்ல வழுக்கி விழுந்து ரெண்டு நா நடக்க முடியாம கெடந்தேன். குமாருக்கு திடீருன்னு வேலை போச்சி. தோப்புல நூறு தேங்காக்கு மேல அவண்டு குடிஞ்சு போட்டுச்சு. கன்னுக்குட்டிக்கி கூட இல்லாம பசுவில பால் சுரப்பு நின்னு போச்சு. எல்லாத்துக்கும் மேல யாரோ கதவ தட்டுற சத்தம் எதோ அவசரம் போல, எதோ ஒரு விஷயம் சொல்ல வரது மாதிரி சத்தம் கேக்கும். திறந்து பாத்தா யாரும் இருக்க மாட்டாங்க. நா அவுஹன்னு மாறி மாறி கதவ திறப்போம். பயமா இருக்கும். கால் நடுக்கம் கை நடுக்கம் வந்து பகல்ல கதவ பூட்டிக்கிட்டு தூங்கிகிட்டு இருப்போம். எனக்கும் அவுஹளுக்கும் கல்யாணத்ல எதோ பிரச்சினை இருக்குன்னு மனசில பட ஆரம்பிச்சுது. கோசலைய கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம்ன்னு நா வலிச்சுத்தான் முடிவு பண்ணுனேன். அதுக்குப் பெறவு பிரச்சின ஒண்ணு ஒண்ணா குறஞ்சிது. குமாருக்கு கூடுதல் சம்பளத்ல வேலை கிடச்சுது. நாங்க எந்த ஜோஸியத்தையும் பாக்கல. எங்களுக்கு வேற வழி இல்ல.  

அனைவரும் பதட்டமாகப் பார்த்தார்கள்.

கோசலைக்கு மாப்பிள்ளை பாக்கலாம்ன்னு முண்டன்கிட்ட பூப்போட்டுப் பாத்தமே. 

அக்காக்காரி அழ ஆரம்பித்தாள்.

”என்ன மன்னிச்சிருங்க”

பூவக்கா இன்னும் அழுதாள்

குலசரம் திடுக்கிட்டுப் பார்த்தான்

”நீ ரெண்டு பொட்டலமும் பிச்சிப்பூதான் வச்சிருக்கன்னு தெரிஞ்சதனாலதான் ஒரு பொட்டலத்த உன் கிட்ட கொடுத்து கிணத்ல போடச் சொன்னேன்.”

தாத்தா அமைதியாகச் சொன்னார். 

”நா, கோசலைக்கு நல்லது நடக்கட்டும்ன்னு நினைச்சேன். எங்களால அவ கல்யாணம் நடக்காம இருக்குன்னு ஊர்ல ஒரு பேச்சு இருக்கே அது மாறட்டும்ன்னு நினைச்சேன். சாமி முன்னால நல்லதுக்குத்தான பொய்ய சொல்றோம்ன்னு நினைச்சேன்”.

அவ அழுகை அதிகமாகிக்கொண்டே போனது. வாசலில் நிழல்.

”சொன்னா கேக்க மாட்டியளா மூதேவிஹளா.”

தாத்தா அதட்டியதும் திபுதிபுவென ஆட்கள் ஓடினர்.

சாமிகிட்டதான் நீ கேக்கணும் குலசரம். தனி ஊட்டு போட்டுறலாமா அப்பதான் எல்லா சாமியும் வரும்.

அவன் பார்க்க

”மழ கிழ வரும்ன்னு  பயப்படாத கொட்டக போட்டுறலாம். கரண்டுக்கு கவலைப் படாத ஜெனெரேட்டர் வச்சுக்கலாம். சீவல்குளம் தங்கையா வில்ல கூப்பிடு. நல்ல கொட்டுக்காரன் அடிக்கற அடில சாமிய வர வைக்கறவன் யாருன்னு விசாரிப்போம்.”

ஆங்…

என்று கத்தினார் மாமா. அவருக்கும் சாமி வரும். உடலை முறுக்கிப் பிழிவது போல சுட்டினார். குலசாரம் பிடித்துக் கொண்டான். சகுனம் நல்லாத்தான் இருக்கு. குலசரம்மா நீதான் நல்ல படியா நடக்க துணை இருக்கணும். பாரத்த உன் மேல போட்டுட்டு வேலைய ஆரம்பிக்கலாமா?

தாத்தா மாமாவுக்குள் பாலித்திருந்த சாமியை மிரட்டிக் கேட்டார்.

மாமாவின் முகம் பெண் முகம் போலாயிற்று. புன்னகை பொலிந்து சிரிப்பாய் மாறிற்று. ஏகாந்த சிரிப்பு. உதட்டு சுழிப்பும். ஆட் காட்டி விலை மேலும் கீழும் அசைந்தது. அதற்க்குள் யாரோ வேப்பிலை ஒடித்து வந்து விட்டார்கள். கருப்பாயி பாட்டி சாமி வந்து ஓட்டமும் நடையுமாய் வந்தாள். வாசலுக்கும் வீட்டுக்கும் ஓடினாள். மாமாவுக்கும் துடிப்பு அதிகமானது. எதோ நல்லது நடக்கப்போகிறது என்று குலசரமும், கோசலையும் உணர்ந்தார்கள்.

7

கோவில் கோமரத்தார் உள்ளூரிலும் வெளியூரிலும் இருந்தார்கள். குலசரம் எல்லோருக்கும் சொன்னான். தனிக்கொடை போடுவதாகவும். அதை தனிக்கொடை என்று நினைக்க வேண்டாம் என்றும், பொதுக் கொடையாகவே நினைக்க வேண்டும் என்றும் சொன்னான்.கொஞ்சம் வசதிக் குறைவானவர்களுக்கு தானே டிகெட் எடுத்துக் கொடுக்கவா என்று கேட்டான். வேலைக்குப் போக வசதியாக சனிக்கிழமை கொடையை வைத்திருந்தான். சென்னை திருச்சி மதுரையில் இருப்பவர்களை ஒரு பஸ்ஸில் கூட்டிக்கொண்டு வந்து கொண்டு போய் விட்டுவிடலாம் என்று குமாரசாமி தாத்தா யோசனை சொன்னார். யார் வருகிரார்களோ இல்லையோ சாமியாடுபவர்கள் வரவேண்டும். எல்லா சாமியும் ஆடித்தான் குலசரத்தின் சாமி முண்டனிடம் கேட்க வேண்டும்.  முண்டன் வந்து ஆடும் ஒரே ஒரு பெரியப்பா முறை செல்லைய்யா சென்னையிலிருந்து  கண்டிப்பாக வந்து விடுவதாகச் சொல்லிவிட்டார், மகள் கல்யாண விஷயம் பற்றியும் அவரிடம் சொல்லி குலசரம் கண் கலங்கினான். அவர் என் பேத்தி கல்யாணமில்லாடா. நீ சொல்லணுமா? வருவேன். கண்டிப்பா வருவேன். என்றார். அவர் வந்தால் சாமியே வந்ததுபோல என்பது முடிவாகிவிட்டது.

சொன்ன எல்லோரும் கோவில் கொடைக்கு வந்துவிட்டார்கள். சொல்ல விட்டுப் போனவர்களும் விஷயம் கேள்விப்பட்டு வந்து விட்டார்கள். கோவில் கொடைகளின் போது ஊர் கட்டும் களை கூடியிருந்தது. தன் தனிக்கொடை போல குலசரம் நடந்து கொள்ளவில்லை. வழக்கமாக கோவில் கொடை நடத்துபவர்களிடம் பணத்தைக் கொடுத்து சாமி மனம் குளிர எல்லாம் செய்யுங்கள் என்று சொல்லி விட்டான். வழக்கமான கோவில் கொடைகளின் போது நடக்கும் பாட்டுக் கச்சேரியோ, ஆட்டம் பாட்டமோ மட்டும் இல்லை. எல்லா உற்சாகத்தையும் மீறி வருத்த இழைகள் குலசரத்துக்கும் அவன் மனைவிக்குமிடையே ஓடிக் கொண்டிருந்த்து. பூவக்கா முதல் நாளே வந்துவிட்டாள். அடுக்களை நிர்வாகத்தை எடுத்துக் கொண்டாள். பிச்சைய்யாவை வரச்சொல்லி வீட்டிலேயே அடுப்பு கூட்டி சமைக்கச் சொல்லி விட்டார்கள். வருவோர் எவரையும் சாப்பிடாமல் விடவில்லை. 

கோசலைக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்குச் சொல்லிவிட வேண்டுமா என்பது ஒரு கேள்வியாக தொக்கி நின்றது. இன்னும் நிச்சயதார்த்தம் கூட நடக்கவில்லை. அவர்கள் நம் வீட்டில் கை நனைக்கவில்லை. சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று குமாரசாமி தாத்தா சொல்லிவிட்டார்.

ஊரிலுள்ள எல்லா கோவில் சாமிக்கும் மாலைபோட ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கொட்டுக்காரர்கள் அக்கா வீட்டில் இளைப்பாறினார்கள். வில்லுக்காரர்கள் சமுதாய மண்டபத்தில் இருந்தார்கள். மைக் செட் அலறியது. பெரும்பாலும் டி.எம் சௌந்தர்ராஜன். சீர்காழி கோவிந்தராஜன். பித்துக்குளி முருகதாஸ் பாட்டுகள்.

சாமிக்கு குற்றாலம் தண்னீர் கொண்டுவர வருங்காலத்தில் சாமியாடப் போகிறவர்கள் போனார்கள். குற்றாலம் தண்ணீர் கொண்டு வந்து சாமிக்கு ஊற்றி பூஜை நடக்கும் சாயங்கால பூஜை. அதன் பின் அர்த்த ராத்திரி பூஜை. அந்தப் பூஜையில்தான் சாமி முழு வீச்சுடன் இருக்கும். சாமியிடம் கேட்க முடியும்.

முண்டன் சாமியாடப் போகும் செல்லையாப்பா மாலைக் கொடை வரைக்கும் வந்து சேரவில்லை. வருவார் என்று எல்லோரும் சொன்னார்கள். சென்னைக்குப் போன் செய்தபோது அவர் புறப்பட்டதாகவும் வழியில் சுகவீனமாகி திருச்சியில் இறங்கி விட்டதாகவும் வீட்டில் சொன்னார்கள். அவரிடம் போன் இல்லை. வழியில் எதிர்ப்படும் ஆட்கள் யாராவது அவருக்கு உதவ முன்வந்தால் போனில் பேசுவார். அவர் வந்து எதாவது பஸ்ஸில் இறங்கினால் ஊருக்கு கூட்டிவர டி.வி. எஸ் வண்டியில் ஆள் நின்றது. அவர் எதாவது போன் செய்தாரா என்று அரை மணிக்கொருமுறை போன்செய்து கேட்டுக்கொண்டார்கள். எல்லோரும் வந்த பஸ்ஸில் அவர் வந்திருக்கலாம் என்று குலசரம் பெத்தாவிடம் சொன்னான்.

நம்ம கோவிலுக்கு நாமதான போகணும் என்று அவர் சொன்னதாக அவள் சொன்னாள். அந்த அந்தக் காலத்து மனிதர் எப்படியும் வந்து விடுவார் என்றும், அதையே நினைக்காமல் வேறு வேலை பார்க்கும் படியும்  குமாரசாமி தாத்தா சொன்னார். ஆனால் மனம் போகவில்லை. சாமியிடம் என்ன குறை வைத்தேன் என்று கேட்காமல் சாப்பிடக்கூட கூடாது என்றுதான் அவன் இருந்தான். அவனை அறிந்த சாலாவும் சாப்பிடவில்லை. 

மாலைப் பூசை முடிந்து ஊர் சற்று உறக்கமும், விழிப்புமாக இருந்தபோது கொட்டுச் சத்தம் கேட்டது. அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்து காதுகளில் அறைந்தது.வீடுகளைப் பூட்டும் சத்தம், ஆட்கள் நடக்கும் சத்தம். அவசரக் குளிப்புச் சத்தம். நாய்க் குரைப்பு. பசுக்களின் சத்தம் எல்லாம் அடங்கி கோவில் சாமியாட்டத்திற்காக தயாரானது.

குமாரசாமி தாத்தா நாதஸ்வரக் காரரைப் பார்த்து கையசைத்தார். நாதஸ்வரம் நின்றது. ஆடு வெட்ட சேர்ந்த மங்கலத்திலிருந்து வந்தவன் இடுப்பிலிருந்த கத்தியை உருவி  குட்டி ஆட்டை முதலில் அறுத்தான். காலை வெட்டி வாயில் திணித்தது முத்தாலம்மனுக்கு எதிரே வைத்தான். சாமியாடிகள் வேட்டியைச் சுற்றிக் கட்டினார்கள். கால்சட்டை, சாட்டை, அரிவாள், மணிக் கம்பு. பிணமாலை வண்ணார் தீவெட்டிகளை இன்னும் செய்து கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் வாளியில் முடிந்த தீவெட்டிகள் எண்ணையில் மூழ்கிக் கொண்டிருந்தன. 

ஆடுகள் சுடல் மாடனுக்கும், கருப்ப சாமிக்கு எதிரே நின்றன. நீண்ட அரிவாளைக் கும்பிட்டுக் கொண்டிருந்தவன் குமார சாமி தாத்தவைப் பார்த்தான். அறுத்தே போடு. வெட்டி துண்டாகலன்னா மனசு கஷடமாயிரும் என்றார். கரகரவென்று அறுபடும் ஆட்டின் உயிர்க் குரல் கேட்டது. முண்டம் கீழே விழுந்து ரத்தம் தெறிக்க துள்ளி அடங்கியது. கூட்டம் மூச்சுப் பேச்சில்லாமல் நின்றது.

 செல்லையாப்பா யாரும் எதிர்பாராத வகையில் கோவிலுக்குள் வந்தார். குலசரம் முகம் பிரகாசமாயிற்று. அதற்காக காத்திருந்தவள் போல கருப்பாயி ஆச்சி ஓடினாள். தாத்தா கையை உயரே தூக்கி கையை அசைக்கத்த் துவங்கினார். நாதஸ்வரக்காரர்கள் முழு மூச்சையும் ஊதினார்கள். வானம் நோக்கி ஊதி, காதுகளைக் குறிவைத்தான் சின்னதாக பூமியை நோக்கி வட்ட மடித்தான். பார்த்துக் கொண்டிருந்த  கொட்டுக்காரன்  டும் டும் டும் என்று முழங்க, சின்ன அசைவு பெரிய அசைவு சின்ன அசைவு பெரிய அசைவு கொண்டு சாமிகள் ஆட ஆரம்பித்தன.

 பண்டாரம் பெரிய வாளி சந்தனத்தை எடுத்து வந்து அள்ளி ஒவ்வோருவரின் மார்பிலும் பூசி, கையில் கோர்த்திருந்த மாலைகளில் ஒன்றை எடுத்துப் போட்டான். வழக்கமாக சாமி ஆடாதவர்களில் சிலருக்கும் சாமி வந்து உருண்டார்கள். கொட்டும் நாதஸ்வரமும் சேர்ந்து முழங்க எல்லாச் சாமிகளும் உக்கிரமாக ஆடின. எல்லாச் சாமிகளும் இன்னும் அமைதியாகவே நிற்கும் செல்லையா பெரியப்பாவின் முன் கூடினர். சாமி வருத்தக் கூடிய டாண் டண்டன் டான் டாண்டண்டண்டான் கொட்டு முழங்கியது, நாதஸ்வரம் தொடர்ந்தது. 

 ”ஆய்…’ கோபக்கார சுடலை முறைக்க, பண்டாரம் சுடலை கையில் தீவெட்டியைக் கொடுத்தான். கருப்பாசாமி அரிவாளை வைத்துக் கொண்டு துடிதுடித்து ஆடியது. காருப்பாச்சியும் இன்னும் இரு பெண்களும் குலவையும் ஓட்டமுமாக இருந்தனர்,

”வரப் போறியா இல்லையா?”

குமாரசாமி தாத்தா சத்துக்கு மீறி கத்தினார். ஒரு காலத்து சாமியாடிதான் அவர்.. சாட்டை எடுத்தாரென்றால் அது திரியாகும் வரை தன்னை அடித்துக் கொள்பவர்.

தாத்தா கைதட்ட திடீர் அமைதி

செல்லையாப்பா அமைதியாக நின்றார். எல்லாச்சாமியும் அவருக்கு திருநீறு பூசினார்கள். குலசரம் அருகிலேயே நின்றான். சாலாட்சியும், கோசலையும் ஒரு ஓரமாய் நின்றார்கள். கருப்பசாமி செல்லையாப்பாவுக்கு முன்னால் நின்று தரையில் மணிக்கம்பை குத்திக் குத்தி சுழன்று ஆடியது.

நடு நிசி.

ஒரு கொட்டுக்காரனும், தீவட்டி சகிதமாக பண்டாரமும், துணைக்கு ஒருவரும் சுடலை மாடசாமி வேட்டைக்குப் போன திசையில் ஓடினார்கள். சாமி நிலையில்லாமல் ஓடியது. கோவில் தாண்டி குளம், கருவேல மரங்கள், ஒத்தையடி பாதை, சாமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கொட்டுக்காரனும், பண்டாரமும் ஒரு மேட்டில் நின்று விட்டார்கள். இருட்டுக்குள் தீவெட்டி வெளிச்சம் அங்கும் இங்கும் ஓடியது. திடீரென காணவில்லை. இருவரும் பதட்டமாகப் பார்த்து நின்றார்கள். தூரமாய் மீண்டும் வெளிச்சம். கொட்டுக்காரன் பலமாக கொட்டை அடிக்கத் துவங்கினார். ஆங் ஆங் என்று சாமி ஓடி வந்தது. கோவிலை நோக்கி ஓடியது. இருவரும் பின் தொடர்ந்தார்கள்.

 சுடலை மாடன் வேட்டை முடிந்து வருவதைப் பார்த்து மற்ற கொட்டுக்கள் முழங்கத்துவங்கின. வில்லுக்காரரும் சேர்ந்து கொண்டார்.வேட்டைக்குப் போய் வரும் சுடலைமாடன் பாட்டு கேட்டது. சாமி வந்து வில்லுக்காரர்களுக்கு முன் ஆடியது.

 இன்னும் கொஞ்ச நேரமே பூசைக்கு இருந்தபோது செல்லையாவுக்கு சின்ன உதறல் வந்தது. அவரைச் சுற்றி மேள தாளங்கள் முழங்க அவர் ஆவேசம் வந்து துள்ளினார். அவரது வேட்டி சட்டை மாற்றி காவி வேட்டி கட்டப்பட்டது, ஆணிச் செருப்பில் அவர் அங்கும் இங்கும் ஓடினார். கக்கக் கட்டைகளை வைத்து துள்ளினார். குலவைச் சத்தம் கேட்டது. ஆட்டம் முடிந்து கொஞ்சம் அமைதி வந்தபோது, தாத்தாவின் கையசைவு பார்த்து சத்தம் நின்றது. பக்கத்தில் நின்றவர்கள் விலக, தாத்தா குலசரத்தை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து முண்டனுக்கு முன்னால் நிறுத்தினார்.

சாமி அவனை கோபமாகப் பார்த்தது

”நா எதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிக்கணும்.”

கை கூப்பினான்.

சாமி அவனையே பார்த்தது. பெருங்குரலெடுத்து விசும்பி விசும்பி அழுதது. குலசரத்தைப் பார்க்காமல் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டது

”யார பாத்து யாரு முகத்த திருப்பறது. உன் புள்ள இல்லையா?’

குமாரசாமி தாத்தா குரல் கொடுத்தார்

”ஆவ் ஆவ்” என்று சாமி அங்கும் இங்கும் போனது. மார்பிலடித்துக் கொண்டது.

”என்ன வேணும் உனக்கு .. ”

என்று விட்டு

”சாமி கிட்ட நீயே கேளு.” என்று குலசரத்திடம் குமாரசாமி தாத்தா சொன்னார்,

காலில் விழுந்தவன்.

”என்ன வேணும்ன்னு சொல்லுங்க. என்ன குறை வச்சேன். பிச்சக்காரனா உன் வாசல்ல நின்னு அழுதேன். என்ன ஆளாக்கணும்னு சொல்லிட்டு வெளியூர் போனேன். தொட்டதெல்லாம் துலங்குச்சு. பணம் செல்வாக்கு எல்லாம் இருக்கு. உனக்கு என்ன குறை வச்சுறப்போறேன்.”

குலசரம் சாமியிடம் உள்ள பஞ்சாயத்தை அன்றைக்கே தீர்த்துவிடப் போவது போலப் பேசினான்.

சாமி சிரித்தது, பின் அழுதது.

சொல்லு சொன்னாத்தான தெரியும்’

தாத்தா சாமிக்கு அருகில் வந்து சொன்னார். சாமிக்கு இன்னொரு மாலை, இன்னும் கொஞ்ச சந்தனம், இலையில் இனிப்புகளை வைத்து பூவக்கா நீட்டினாள். சாமி கர்ஜனையுடன் தட்டி விட்டது, கூட்டத்தினர் ஆளுக்காள் எடுத்துக் கொண்டார்கள்.

”என்ன கோபம் ஆங்.”.

தாத்தாவின் குரல் உக்கிரமாக இருந்தது. சாமியை வரவைக்கும் மேளம் தட்டச் சொல்லி தாத்தா மேலே கையைத்தூக்கி படபடவென்று அசைத்தார். கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மேளக்காரன் அடித்து நொறுக்கினான். பண்டாரம் குமாரசாமி தாத்தாவுக்கு மாலையைப் போட்டு சந்தனம் பூசினான். மேளச் சத்தம் தாத்தாவுக்கும் சாமியைக் கொண்டு வந்தது. முண்டனைப் பிடித்த கையை தாத்தா எடுக்கவே இல்லை. 

”சொல்லு…’

என்றபடி திருநீற்றை அள்ளிப் பூசினார்

”என்ன ஆனாதை ஆக்கிட்டியேப்பா. யாருமில்லாம போவேன். ஊருமில்லாம போவேன்.”

முண்டன் ஆண்குரலும் பெண் குரலுமாகச் சேர்ந்து அழுதது. அது பார்த்து பெண்கள் அழுதார்கள். ஆண்கள் கலங்கினார்கள்

”என்ன சொல்லுத, நாங்கள்லாம் இருக்கமில்ல”

”உனக்கு பெறகு?”

”எனக்குத்தான் ஆம்பள வாரிசு நீ குடுக்கலையே”

”ஓவென்று சாமி அழுதது. தரையில் கிடந்து உருண்டது. முண்டம் துள்ளுவது போல துள்ளித் துள்ளி அடங்கியது.

தாத்தாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. நின்றிருந்த மற்ற சாமிகளுக்கும் துடிப்பு அடங்கிப் போயிற்று

பூவக்கா பானகம் கொண்டு வந்தாள். முண்டனை தாத்தா மடியில் கிடத்தி, வெங்கலச் சொம்பைக் கொடுத்தார். இரு கை பிடிக்கும் சொம்பு. சாமி நிமிடத்தில் காலிசொம்பை வீசியது

”திருநீரு பூசு”

திருநீற்று மரவையை தாத்தா நீட்டினார்.

சாலாட்சி கோசலையை இழுத்து வந்தாள்.

”பூசு கல்யாணம் ஆகணும் அவளுக்கு.”

சாமி பார்த்தது. கோபம் கொண்ட பார்வை. உக்கிரமான பார்வை. மாட்டேன் என்று தலையசைத்துக் கொண்ட்து

”ஏன்?”

”அனாதையாக்காதீங்கப்பா என்னைய.”

சாமி எல்லோரையும் பார்த்தது. குமாரசாமியையும் பார்த்தது. சரியா? என்பது போல கண்ணசைவில் கேட்டது. அவர் கையைப் பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டது. குலசரத்தை அணைத்துக் கொண்டது. காலில் விழுந்த சாலாட்சியை பார்த்து.” தருவியா?” என்றது. அவள் புரியாமல் பார்த்தாள்.

”தருவேன்னு சொல்லு”

அவளுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது

”நீயாவது சொல்லுப்பா”

”என்ன வேணும்ன்னு நா கேட்டுக்கிட்டுத்தான இருக்கேன்.”

”அவனும்தான கேக்கறான். உன் பெரியப்பன் செத்த பின்னால உனக்குப் பின்னால சாமிக்குன்னு யாரு இருக்கா. சுடல மாடன், கருப்பசாமி, முத்தாலம்மனுக்கெல்லாம் ஆளு இருக்கு. உன் சாமிக்கு இல்லையே. அனாதை ஆயிருவேன்னு அழுகுது. நீதான குடுக்கணும். என்ன என்னன்னு கேட்டா.. தரேன்னு சொல்லு. சாமிக்கு வாரிச தரேன்னு சொல்லு.”

குலசரம் ஒன்றும் புரியாமல் பார்த்தான்.

சாமிக்கு விக்கல் எடுத்தது தண்ணி தண்ணி என்று ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். கூட்டம் விலக்கினார்கள். பனை விசிறி கொண்டுவந்து காற்று வீசினார்கள். 

சூரியன் வரதுக்குள்ள கற்பூரம் காட்டுங்க.

பண்டாரம் மணியடித்தான். ஒவ்வொரு சாமிக்கும் காட்டினான். எல்லோரும் ஒற்றிக் கொண்டார்கள். இலைகள் போடப்பட்டன. சாப்பிட்டார்கள்.

குலசரமும், சாலாட்சியும். கோசலையும் அமைதியாக இருந்தார்கள்.

எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்தார்கள் அலுப்பு ஆயாசத்தோடு இரண்டு நாள் தூங்கினார்கள். மூன்றாவது நாள் பெரியப்பா கிளம்பினார். சட்டை, வேட்டி, பெரியம்மாவுக்கு புடவை, மகளுக்கு புடவை. பணம் எல்லாம் கொடுத்து பொதிகை ரயிலில் டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்தான். ரயில் கிளம்பும் முன்  செல்லையா பெரியப்பா,” குலசரம் என்ன விட்டுறாதப்பா” என்று சொன்னார். பெரியப்பா சென்னை சென்று சேரவில்லை. ரயிலிலேயே உயிர் பிரிந்துவிட்டது. அவனுக்குத்தான் போன் வந்தது. சென்னை பெரியம்மாவுக்கு போன் செய்தபோது, இனி என்னைத் தேடாதே. வரமாட்டேன் என்று அவர் போனில் பேசும்போது சொன்னதாகச் சொல்லி அழுதாள். அவன் சென்னைக்கு கார் எடுத்து வந்து மகனாக எல்லாக் கடன்களையும் முடித்தான். இனி முண்டன் சாமிக்கு அவன் மட்டும்தான் இருக்கிறான் என்ற நினைப்பு மனதை அழுத்தியது.

அதன் பின்

கோசலையை பார்த்துவிட்டுப் போன, வெளியூர் மாப்பிள்ளையை சூழ்நிலை சரியில்லை என்று சொல்லி கல்யாணப் பேச்சை குலசரமே நிறுத்தி விட்டான். சாலாட்சி அழுதாள். கோசலை ஒன்றும் சொல்லவில்லை. அதன் பின் கோசலைக்கு மாப்பிள்ளை பார்க்கும் மனசே வரவில்லை. அவனிடம் அது பற்றி யாரும் கேட்கவில்லை. 

சாலாட்சி தனி அறைக்குள் இருந்து கொண்டாள். யாருடனும் பேச்சு இல்லை. சிரிப்பு இல்லை. எங்கோ வெறித்து யாரையோ பற்றி யோசிப்பது போல இருந்தாள். ஒரு இரவு அவளைக் காணவில்லை. பதறிப்போய் தேடினான் குலசரம். ஊரே விழித்துக் கொண்ட்து. கோசலை கோவிலில் முண்டனுக்கு முன்னால் இருந்தாள். அனைவரும் பதற அவள் எதுவும் நடக்காத மாதிரி புன்னகைத்தாள். குலசரம் கோபம்கொண்டு முண்டன் பீடத்தைப் பார்த்தான். எம் மகள இந்தக் கதிக்கி ஆக்கிட்டியே என்று மாலைகளைக் கழற்றி எறிந்தான். முட்டிக் கொண்டான். ரத்தம் வழிந்தது, ஆஸ்பத்திரிக்கு தூக்கிப் போனார்கள்.

 சாலாட்சிக்கும் மனசு விட்டுப் போயிற்று. சுவையாக சமைக்கவும், உடுத்தவும், அலங்காரம் செய்யவும், வீட்டைவிட்டு வெளியே செல்லவும் மனசே இல்லை. எத்தனை பேர் என்னென்னவிதமாகவோ கூப்பிட்ட போதும் கோசலை குளிக்க மறுத்தாள். பேச மறுத்தாள். வெளியே வர மறுத்தாள். சாமி அவளை ஆட் கொண்டுவிட்டது என்று சொன்னார்கள். கோசலை இன்னும் கொஞ்சநால் அப்படியே இருந்தால் அவள் மயிர் இறுகி  சடை விழுந்து விடும் என்று சொன்னார்கள்.

குமாரசாமி தாத்தா படுத்துவிட்டார். அவரால் எழுந்து வர முடியவில்லை. கோவிலுக்கு கூட்டிப் போய் சாமி வருத்தி அவரைப் படுக்க வைத்து விட்டதாக ஆச்சி எல்லோரிடமும் குலசரத்தைப் பற்றி குறை சொல்லிப் புலம்பினாள். இரு முறை குலசரம் பேசப் போனபோது ”பேச என்ன இருக்கு” என்று விரட்டி விட்டாள்.

கொஞ்ச நாளில் தாத்தா சீவன் போய்விடும் என்று சொல்லப்பட்ட போது, குலசரம் தாத்தாவைப் போய்ப் பார்த்தான். கையைப் பிடித்துக் கொண்டார்,

“இப்படி ஆயிருச்சே” அழுதான்.

“என்ன ஆயிருச்சு. நீ சாமிக்கு ஒரு ஆம்பள பயல கொடுக்காட்டி அது உன் பொம்பள புள்ளைய உன்ன விட்டுப் போக விடாது. உனக்குப் பின்னால சாமிய அனாத ஆக்கிறாத.”

தாத்தா மெல்லிய குரலில் அவனுக்குப் புரியும்படி சொன்னார்.

குலசரத்துக்குப் புரிந்தது. சம்மதம் என்பது போல தலையசைத்தான். வீட்டுக்கு வந்த அவன் தன்னைப் பார்க்கும் விதம் வேறு விதமாக இருப்பதை சாலாட்சி உணர்ந்தாள்.

சுபம்