அக்னிக்கொசுவம்

நகர்வு

Agni-Kosuvam

உமாமகேஸ்வரி

மொட்டைமாடித் தரை சிவப்புக் கட்டம்போட்ட சேலைபோல் வெயிலில் படபடத்து, தீத்தன்மை கொண்டு அவள்மீது படர்ந்தது. ‘’ச்சை” என்று தலையை உலுக்கிக் கொண்டாள். முழங்கால்களுக்குள் முகம் புதைத்து, விழிகளை இடறிய ஆகாயம் அவ்வளவு துல்லிய நீலத்தில் மடிப்பு மடிப்பான மேகங்களுடன் மாபெரும் சேலையாக விரிந்து நடுங்கி அவளை இழுத்து இறுக்குவதாக அச்சுறுத்தியது. ‘’ச்சீ” என்ற முனகலோடு நீர்கனத்த கண்களை மூடினாள். சுவரையொட்டி தென்னையின் அசைவு பச்சைக் கொசுவங்கள் கொண்ட ஒரு புடவையாகத்தான் தோன்றியது. பக்கவாட்டில் மின் கம்பங்களோடு நீண்ட அடர் கருப்புத் தார்ச்சாலை ஒளிக்கரையிட்ட சேலையின்றி வேறென்ன? எல்லாமும் சேலை, புடவை, சேலை, புடவை.. கடவுளே, I am absolutely obsessed; obsession…  அப்படியானால் இது தான் டாக்டரை அணுகவேண்டிய அளவு தீவிரமான பிரச்னையா?… அவள் கேள்வியை குறித்தது அலைபேசியின் அழைப்பொலி, அவன்தான்; உடனடியாக ஒற்றை விரலால் அந்த அழைப்பைப் புறக்கணித்தாள்.

படிகள்…. இறங்க இறங்க நீண்டு கொண்டே போகும் படிகள், கடக்க முடியாத இக்கோடை இரவு, பழங்களைக் கூட புடவை அடுக்குகாகக் காட்டும் இந்த மனம், இறந்தது விட்டதா? விரைந்து அறையின் தனிமையில் தன்னை அடைத்துக் கொண்டாள்.

 “கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம்கூட ஆகல திடுதிப்னு காரைக் காணோம், இந்தப் புது மருமக, ஆளயும் காணோம். இவ ஒனக்குச் சரி வருவாளானு கவலையாயிருக்குடா” அம்மா மரக்கரண்டியில் இருந்த தோசையை அவன் தட்டில் வைத்தாள், அடுப்புக்கு ஓடி அடுத்த தோசை ஊற்றினாள்.

‘’அதான் அவங்கப்பா உடனே ஃபோனில் சொல்லி மன்னிப்புக் கேட்டாரேம்மா கொஞ்சம் விட்டுதான் பிடிப்போமே”

‘’அப்டி என்னதான்டா நடந்துச்சு உனக்கும், அவளுக்கும்…”

உண்மையான ஆதங்கம் தவிர அவன் அம்மாவின் குரலில் வேறெதுவும் இல்லை.

‘’அதேதாம்மா நானும் கேட்கிறேன் அப்படி என்னதான்மா நடந்தது உனக்கும் அவளுக்கும்…”  அவசரமாக வாஷ்பேஸனில் கை கழுவினேன்.

‘’டேடேய், ஒரேயொரு தோசை…

‘’போதும்மா” கதவைத் தாண்டி வெளியேறியவனை,

‘’எனக்கும், அவளுக்குமா, போட்டேனா பாரு உன்னய;” என்று கரண்டியை ஓங்கிக் காட்டி விட்டு, அடுப்பை அணைத்தாள் அவன் அம்மா.

‘’நான் அந்தப் பொண்ணுகூடப் பேசினதே மொத்தம் பத்து வார்த்தைக்கு மேல் வராதே” புலம்பியபடி படுக்கையில் சரித்தாள்.

·

ந்த முகம் கண்ணாடி தீபக் கண்கள்; பளபளப்பிலும், நிஷ்களங்கத்திலும்… நெருடல்களேயற்ற பேச்சு. இயல்பான தயக்கங்கள், வெட்கங்கள் தாண்டிப் பின் தன்னோடு இணைந்த அந்த மெல்லிய தண்ணுடல். அம்மாவுடனும், அண்ணியுடனும் பல வருடம் பழகிய சகஜ பாவம். குழந்தைகளை இழுத்து மடியிலிருத்துவதும், அண்ணாவின் சின்ன மகன் அவள் காது வளையத்தில் விரல் விட்டு இழுத்து விளையாடுகையில் சிறு வலி மறைத்த குறுஞ்சிரிப்பும்…

எங்கேயும், எதிலும் தவறு காண முடியவில்லை. அவனால் மறுபடியும் குளியலறைக் குழாயில் முகம் கழுவினான், அவளின் சுவடுகளையும் தேய்த்துக் கழுவி விடும் முனைப்போடு நீரின் சீறலையும், கருணையையும் ஏந்தியும், எறிந்தும்.

அம்மா  – அப்பா அவனுடைய திருமணத்திற்கென்றே கட்டித் தந்த அந்தப் புதிய வீட்டில் நுழைந்தபோது, அவள் குரலின் தெறிப்புகள் அவன் மீது மோதின. கட்டிலில் சரிகையில் பக்கத்துத் தலையணையில் ஒரேயொரு வாடிய மல்லிகை; அதன் வாசனையில்லாமல் அவளுக்கேயான பிரத்யேக வாசனை அறை முழுவதும். அலங்கார மேஜையில் கல் பதித்த ஹேர் க்ளிப், உபயோகித்த பொட்டுக்களை சுவற்றிலோ, கண்ணாடியிலோ ஒட்டும் வழக்கமில்லாதவள், அவை அவற்றிக்கான அட்டைகளின் பின்புறத்திலேயே சீராக ஒட்டப்பட்டிருந்தன. அலங்கார மேஜையின் மீது விதவிதமான வெல்வட் வளையல்கள், வித்யாசமான வடிவங்களில் புடவை வகைகள். மைப் பென்சில்கள், டியோ ஸ்பேரேக்கள் வரிசையாக அவள் எல்லாவற்றையுமே இங்கேயேதான் விட்டுப் போயிருக்கிறாள்; பெண் நிழலாடும் இந்த அறை என்னை அலைக்கழிக்கிறது; உறக்கத்தினுடே அவள் சிணுங்கல்கள் கேட்கின்றன, ஒருக்களித்து அவளுக்காகத் துழாவுகிறது அவன் கை.

அடுத்த கட்டிடத்தின் ஜன்னலிருந்து அண்ணி,

‘’என்ன தம்பி, இன்னிக்கும் ஆபிஸிற்கு டிமிக்கியா? ‘’அவள் பறந்து போனாளே”வா? வந்துடுவா தம்பி” புன்னகையோடு கையிலிருந்து பலநிறக் குஞ்சம் போன்ற சிறு துடைப்பத்தால் ஜன்னலைத் தட்டினாள். பதிலையே எதிர்பாராமல் அடுத்த ஜன்னலுக்கு நகர்ந்துவிட்டாள்.

பக்கத்தில் கிடந்த அலைபேசியை எடுத்து நீலமாய் ஒளிர்ந்த அவள் எண்ணை இயக்கினான்.  நூற்றுக்கு மேல் போயிருக்கும் இந்த வேலை…

‘’இந்தச் சந்தாதாரரைத் தற்சமயம் தொடர்புகொள்ள இயலாது” என்றது ஒரு ஈவிரக்கமற்ற இனிய பெண் குரல். தொடுதிரையை வருடி அவளும், அவனும் எடுத்துக்கொண்ட படங்களை நகர்த்தினான். உற்சாகம் மிளிரும் முகம் ஒரு புகாரும் சொல்லவில்லை. திடீரென்று வீட்டை விட்டு வெளியேறுவதற்கான எந்த அபாயக் கூறும் சிறு இசைத் துணுக்கென ஒளிரும் அந்தப் புன்னகையில் இல்லை.

காரை நிதானமாக ஷெட்டிற்குள் நிறுத்தியவள் மெல்லிய களைப்போடு தன் அறையை அடைந்தாள். அம்மாவும், அப்பாவும் முகம் மலர்த்து மாற,

‘’என்னாச்சுமா? நீ மட்டும்…

‘’ஏன் வரக் கூடாதா?” என்று அந்தக் கேள்வியை அவள் முறித்த பிறகு அவர்கள் எதுவுமே கேட்கவில்லை.

அப்பாவுடன் உட்கார்ந்து சாப்பிட்டாள். எப்போதும்போல் அப்பாவின் தட்டிலிருந்து தேங்காய்ச் சட்டினியைத் தொட்டுக்கொண்டாள். அவர்களிருவரும் கண்டறிய முடியாத புதைகுழிக்குள் தன் கண்களையும், மனதையும் கவனமாக மறைத்துக்கொண்டாள்; உணவுக் கூடத்தின் வெளிர் சிவப்புத் திரைகள் மிதந்து மேலேறித் தன்னை முந்தானையாகச் சுற்ற யத்தனித்தபோது, படிகளின் ஓடித் தன் அறையை அடைந்தாள்.

அவள் விட்டுச்சென்ற அதே விதத்திலேயே அசங்காமலிருந்தது அறை. மூலை ஹாங்கரில் தொங்கிய மாந்தளிர் நிறப் புடவை மெதுவாகச் செம்மையுற்றுக் களன்று நெருப்பினலையாகப் பரவிப் பெருகி தழுவி, தகர்ந்து தன்னை நோக்கி வருவதாக… விருட்டென்று அதைச் சுருட்டிக் கதவிற்கு வெளியே வீசி எரிந்தாள். உடல் உலுக்கி விழ அவள் அலறியதில் கீழிருந்து அம்மா,

‘’ஷர்மிளா?” என்றாள், உடனே குளிர்ந்து தணிந்து

‘’ஒண்ணுமில்லைமா” என

‘’எண்ணடி, கனவா, விபூதி வச்சுட்டுத் தூங்கு” – அம்மாவின் குரல் அப்பாவை எழுப்பிவிடாதபடி சன்னமாயொலித்தது, அவர்களால் படியேறி வர முடியாது; சிரமம்.

‘’வரவா ஷர்மிளா?”

‘’வேணாம்மா; ஒண்ணுமில்லை.

‘’என்னமா” தூக்கம், களைந்த களைப்பும், பதற்றமுகமாக இப்போது அப்பா.

‘’ஒண்ணுமில்லபா. ஒரு பல்லி…” பொய்க்குதான் பலத்த யோசனைகள் தேவைப்படுகின்றன.

‘’அவ்வளவுதானே, தூங்கும்மா” ‘’கீழே வந்து படுக்கிறியாடா”

‘’இல்லைம்மா, நீங்க படுத்துத் தூங்குங்க.”

அலுப்போடு உடைமாற்றிப் படுக்கையில் சரிந்தாள்; அணிந்திருந்த துப்பட்டாவை புகுந்த வீட்டிலேயே மறந்து விட்டிருந்ததை நிம்மதியாக உணர்ந்தாள். பிரத்யேகமான அவளுடைய அறையின் மேற்கூரை மடிந்திறங்கி அப்படியே அடுக்கடுக்காக அவள் இடுப்பில் விரிவதாக, மென் நீலச் சுவர்கள் இளகி நுண்மையுற்று சல்லாத் துணிகளாக அவளை மூடுவதாக… அனைத்துமே அறிய முடியாத பொறியென்றால் அனல் தடாகமாவதாக.. உடல் விதிர்க்க ஏ.சி.யை அதிகரித்தாள். இந்த சீதோஷ்ணத்தால் ஏற்படும் பிரமைகள், தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள். ஆம், ஆம் என்று அசைந்தது சுவர்க்கடிகாரம். உளையும் எண்ணங்களேடு தலையணை நுனி பற்றி உறங்காமல் கிடந்தாள். அவன் முகம் மனதின் கரைகளில் மோதித் தெறிக்க, தொடுகைகள் உடலில் ஊர்ந்தன. தன் தேகம் மறந்த கணங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட புறக்கணித்த அழைப்புகள், குறுத்தகவல்கள், விடிந்த பிறகுதான் உறங்கி இருப்பாள் போல;

வெகு நேரம் கழித்து கீழே இறங்கிப் போனபோது,

அம்மா அடுப்படியில் தாளிக்கும் வாசனை வந்தது.

‘’நல்லாத் தூங்கினயா” ஈரக் கூந்தலும், பெரிய பொட்டிட்ட நெற்றியும் கூடவே புன்னகையும்.  அம்மா நீட்டிய காபிக் கோப்பையை வாங்கி உறங்கிக் கொண்டே,

‘’ஏம்மா, நீயும் அப்பாவும் என்னை மிஸ் பண்ணவேயில்ல?”

பதிலற்ற புன்னகையோடு ப்ரிட்ஜைத் திறந்து, காய்கறிகளை எடுத்துக் கழுவினாள் அம்மா.

‘’உனக்கு இதெல்லாம் அலுக்கவேயில்லயா அம்மா”

‘’நீ என்ன கேட்கிறேனே புரியவில்லை.”

‘’ஏன் இங்க வந்தேன்னு என்னைக் கேட்காதீங்க அம்மா ப்ளீஸ்.”

‘’சரி, போய்க் குளிச்சிட்டுச் சாப்பிட வா. இல்லன்னா இப்போ சாப்பிட்டுட்டு பிறகு குளிக்கிறியா”

‘’எப்போதும் சேலை உடுத்திட்டே இருக்கியேம்மா, கஷ்டமாத் தோணலயா”

‘’அதான் உன் ப்ரச்னையா, அங்கே சேலை மட்டும் தான் உடுக்கணுமா”

ஷர்மிளா நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

‘’அப்படி விதிமுறையெல்லாம் இல்லைம்மா, விடு அதை. நான் குளிச்சுட்டு வரேன்.”

அவனைத் தன் உடலில் இருந்து அழித்து அகற்றுவதுபோல் அவ்வளவு நீண்ட குளியல், கூந்தல், முகம், உதடுகள், முலை நுனிகள்… என்று காந்தும் அவன் விரல் நுனிகளைக் கழுவித் தீர்த்துவிட வேண்டும், ஏன் இப்படித் தோன்றுகிறது… கழுத்தில் தொங்கும் தாலிக்கொடி… கண்ணாடியில் துருத்தி நின்றது;

‘’எத்தனாவது தோசைம்மா”

‘’எண்ணாமல் சாப்பிடு”

‘’என்னவென்றே தெரியலயே ஒத்தைக்கொரு பொண்ணு செல்லங்குடுத்துக் கெடுத்து வச்சிட்டேனோ”

‘’உனக்குத்தான் வெங்காயச் சட்னி பிடிக்குமே”

இன்றும் எண்ணற்ற அழைப்புகளைத் துண்டித்தாள், சற்றும் உறுத்தாத மனதோடு. அக்னியின் அலைகள் சேலைகளாக மிதக்கும் அறைக்குள் தாழிட்டே அவள் கிடக்க நாட்கள் நகர்ந்தன.

‘’என்னம்மா” அப்பாவின் கேள்வியிலிருந்த வருத்தம் நெருடியது.

‘’தூக்கமே வரலபா”

‘’டாக்டரிடம் போலாமா” யோசித்தவர்

‘’இல்லைம்மா, நீ நினைத்தபோது தூங்கி, எப்ப வேணா முழிச்சுக்கோ, தூக்கம் வராததுக்கு டாக்டர் வேணாம்.”

வராந்தாவிற்கு நகர்ந்தார்.

‘’மாப்பிள்ளை, மன்னிக்கணும், அவள் குறையோ குற்றமோ எதுவும் சொல்லல; எங்களுக்கும் புரியல; எனக்காகக் கொஞ்சம் பொறுத்துக்கணும்” தணிந்த குரலென்றாலும் அவளுக்குக் கேட்டது. அப்பா தன் கைபேசியைச் சட்டைப் பாக்கெட்டில் வைத்தபடி வாசலைத் தாண்டி தோட்டத்துக்கு நடப்பதைப் பார்த்தாள். அந்நடையின் தளர்ச்சி அவள் இதுவரை கண்டிராதது.

தோட்டத்தில் சிறு தடைக்குப்பின் அப்பா அடுப்படிக்குப் போய் அம்மாவிடம்

‘’தப்புப் பண்ணிட்டோமோ… எல்லாமே அவள் இஷ்டப்படிதான் நடந்தது. அவளுக்கு, யாரையாவது விரும்பினேணு சொல்லியிருந்தா அவனுக்கே கொடுத்திருக்கலாம், அப்டி எதுவும் இல்லையே” ஊற வைத்த பருப்பை அவர் கை களைந்தது. ‘’நீங்க ஆபிஸ் போங்க, பெரிசா எதுவுமிருக்காது. நம்மைப் பார்க்கணும்ணு தோணியிருக்கலாம்.”

அவர் வெளியேறினார், ‘’நான் வரன்மா. மதியம் தூங்காதே. அம்மாவோட பேசிட்டிரு. ஏதாவது படி, டி.வி.பாரு, நைட்ல தன்னால தூக்கம் வரும்”

‘’சரிப்பா” அவள் புன்னகையில் நிம்மதியுற்றுக் கையசைத்தார்.

வன் உள்ளே நுழைந்தபோது அண்ணி ஊஞ்சலில் கிடந்த குழந்தைகளின் உடைகளை மடித்துக் கொண்டிருந்தாள்.

‘’ஏன் தம்பி, காபி போடவா?”

‘’இல்லண்ணி” எவ்வளவு நீண்ட மௌனம். சொற்களுக்கிட்டே பொதியாகிவிடும் சுமையேறிய மௌனம்.

‘’ஏதோ கேட்கணும்ணு நினைக்கிற, எதானாலும் சொல்லுப்பா” அண்ணியின் குரல், பார்வை இதெல்லாம் இளகியேதானிருக்கும் எப்போதும்.

‘’அவள் கடைசியா என்னதான் பேசினா உங்கேளோடயும், அம்மாவோடயும்…

‘’சாதாரணமாத்தாம்பா தம்பி. புடவை, நகை, சமையல், அம்மா, அப்டினு பெரிசா ஒண்ணுமில்லயே”

அண்ணியின் கை சிறிய ப்ரில் வைத்த கவுனை நீவிக் கொண்டிருந்தது.

‘’ம்ம், அது.. தான்…”

‘’சொல்லுங்கண்ணி,”

‘’ம்ம்ம்… அதையெப்டி உன்கிட்ட சொல்லுவேன்… நான் அத்தை கிட்ட… ம்ஹிம்… அவுகளுக்கும் சங்கடந்தேன்… உங்க அண்ணெங் கிட்ட சொல்லிடுறேன்.. கேட்டுக்க…”

ந்திரிகா உருளைக் கிழங்கை இழைக்கத் தொடங்கினாள்.

ஷர்மிளாவின் அறைக் கதவு திறந்திருந்தது. ஆனாலும் விரல் மடக்கித் தட்டி அவள் உள்ளே வரச்சொன்ன பிறகுதான் சந்திரிகா நுழைந்தாள். ஷர்மிளா லேப் டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள். இவளைப் பார்த்ததும் நிமிர்ந்து புன்னகைத்து,

‘’வாங்கக்கா” என்று லேப் டாப்பை மூடினாள்.

‘’தொந்தரவு பண்றேனா ஷர்மிளா?”

‘’இல்லை சந்திரிக்காக்கா, நிசமா பொழுதே போகல”

‘’புதுவீடு பிடிச்சிருக்கா, தம்பியே பார்த்துப் பார்த்துக் கட்டுச்சு. செங்கல் செங்கலா, ஜன்னல் டிஸைன் ஏதோ ப்ரெஞ்ச் ஜன்னலாம். எல்லோரும் வீடு கட்டிட்டு குடி வருவாங்க, இந்தத் தம்பி குடியிருந்துக்கிட்டே வீடு கட்டுதுணு கிண்டலடிப்பாங்க எல்லோரும், சாப்பிடக்கூட அத்தை பத்துத் தரம் கூப்டாதான் வரும்” மிக எளிமையான பேச்சு. வகிட்டில் குங்கும். இன்னும் மஞ்சள் பூசும் முகம் இருக்கிறதா உலகில் என வியந்தாள் ஷர்மிளா,

‘’ஆமாக்கா, நல்லாருக்கு, பிடிச்சிருக்கு, நாணுமே கொஞ்சம் இன்டிரியர் டிஸைன் பண்ணனும்ணு இருக்கேன்.” அவளைப்போல் பளீரென்று சிரிக்கக வரவில்லையேயெனத் தயங்கிப் புன்னகையில் தெளிந்தன இவள் உதடுகள்.

‘’எல்லா விசேஷமும் முடிஞ்சிடுச்சு. இனி குளிப்புச் சேலை தருவது மட்டும்தான் பாக்கி. எங்க ஹனிமூன் போகப் போறிங்க? தம்பி கல்யாணத்துக்கு முந்தி அந்தமான்ணு சொல்லிட்டியிருந்துச்சு. அப்புறம் ஷர்மிளா முடிவுதான்னுடுச்சு” மறுபடியும் அந்தச் சிரிப்பு.

‘’அதென்னக்கா குளிப்புச் சேலை” புருவங்கள் நெரிந்தன ஷர்மிளாவுக்கு.

‘’உங்க பக்கம் வழக்கமில்லை? புதுப் பொண்ணு இந்த வீட்டுக்கு வந்து, முதல்முதலா ‘’மாத நாட்கள்” முடிந்து தலை குளித்த பிறகு அவளுக்கொரு பட்டுக் கொடுத்து பலகாரமெல்லாம் செஞ்சு, சொந்த பந்தத்திற்கு விருந்து வைப்பாங்க. எனக்கு கல்யாணத்துக்கு முதல் வாரமே வந்தது, இங்கே வந்த பிறகு வரவேயில்லை. நின்னுக்குச்சு. அப்புறம் ஹனிமூனாவது, கத்தரிக்காயாவது. காலைல தலைசுத்தல்; வாந்திணுதான்.. அத்தைக்குக்கூட அந்த அஞ்சாம் நாள் சேலை – அப்டியும் சொல்றாங்க.. விசேஷம் வைக்க முடியலணு லேசா வருத்தம்.. ‘’மளமளவென்று பேசிக் கொண்டே போனாள் சந்திரிகா.

இவள் உச்சந்தலை திகுதிகுவெனத் தகித்தது.

‘’என்ன காட்டுமிராண்டித் தனம் இது, அப்பா அம்மா ஒரே பெண் என்றாலும் பூப்புனித நீராட்டுவிழா கூட நடத்தல. நீ பாட்டுக்கு பள்ளிக்கூடம் போம்மாணு அனுப்பிட்டாங்க..”

‘’அம்மா அம்மா” மகள் குரல் கேட்டதும்,

‘’வரேன் ஷர்மிளா” என வாசலுக்கு ஓடினாள் சந்திரகா

ண்ணனின் பேச்சு முடிந்த பிறகும் இவன் அலைபேசியைக் காதிலிருந்து எடுக்காமல் உட்கார்ந்திருந்தான். ‘’பாவம் அவள், என்னவெல்லாம் நினைத்து மனம் உடைந்தாளோ” நெற்றியை ஒற்றை விரலால் அழுத்திக் கொண்டாள்.

·

‘’என்ன பழக்கம் இது?” அக்னியேறி எரியத் தொடங்கிய துப்பட்டாவை வீசி எறிந்தாள். ‘’புது மணப் பெண்ணின் முதல் மாத விலக்கைப் புகுந்த வீட்டில் கொண்டாடுறாங்கள், அதுக்கு ஒரு பட்டுச் சேலை வேறயாம், எதைப் பரிசோதிக்க, என்னத்தை நிரூபிக்க இந்த விழா? அந்தரங்கத்தில் எட்டிப் பார்க்கும் அபத்தம்.. அவள் எண்ணங்கள் அபத்தம்.. அவள் எண்ணங்கள் குமுறின. விருட்டென்று எழுந்தாள். கைப்பையைக்கூட எடுத்துக் கொள்ளவில்லை. கதவைப் பூட்டவில்லை. கார் சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு தாறுமாறாக 14 கி.மீ வேகத்தில் ஓட்டி ஊரை அடைந்தாள்.

எத்தனை நாட்கள், எத்தனை வாரங்கள் எனக்கும், அவனுக்குமிடையே அடர்ந்து விட்டன.

·

வன் ஸ்டிரியங்கை ஒரு கையால் பிடித்தபடியே அவள் எண்ணை ஒற்றினான். அநேகமாக இருநூறாவது தடவையாக நீண்டு ஒலித்து நிசப்தமானது. ‘’இந்த சந்தாதாரர் தங்கள் அழைப்பை ஏற்கவில்லை” மொபைலை சீட்டில் எறிந்தான். பயணம் முழுவதும் அவள் சொற்கள் தத்தும் புறாக்கள்போலக் கூடவே வந்தன, எவ்வளவு நீளமான, முடிவேயற்றதாகத் தோன்றுகிற பயணம்.

‘’வாங்க மாப்பிள்ளை” பதறி எழுந்தார்கள் அவளின் அம்மா.

ஹாலின் மறுமூலையில் உட்கார்ந்து மொபைலுக்குள் குனிந்திருந்தாள் லேசாய் அவனைப் பார்த்துவிட்டு, மறுபடியும் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

‘’ஏண்டி, உனக்கே இது நியாயமாத் தெரியுதா, வந்த பையனை என்னணு கூடக் ‘’கேட்காம..”

‘’அத்தை அவளை எதுவும் சொல்லாதிங்க” என்றவன் அவளிடம்

‘’உன் விருப்பத்தை மீறி அந்த வீட்டில் எதுவும் நடக்காது, என்னை நம்பினால் என்னோடு வரலாம்.. உன் முடிவுதான்.. எனக்கு நீ வேண்டும்” இறைஞ்சலோ, பதற்றமோ இல்லாத தெளிந்த தொனி. அவளின் அம்மா அரவமின்றி அங்கிருந்து தோட்டத்துக்கு நகர்ந்தாள்.

இப்போது அவள் கண்கள் துளிர்விட்டு நிமிர்ந்தன. நீர் வரம்பிட்ட கண்கள். அவன் மணிக்கட்டைப் பற்றினாள். மழை ஆரம்பித்ததை அவர்கள் அறியவில்லை.

·

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page