கடந்த 05.08.2023 அன்று டிஸ்கவரி பப்ளிகேஷன் வெளியீட்டில், அருள்ராசா அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘பனியும் தண்டனையும்’ நூலின் வெளியீட்டு விழாவும், நூல்கள் அன்பளிப்பும் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை தாங்கி வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் கெளரவ திரு. செந்தில் தொண்டமான் அவர்கள் அழகிய வாழ்த்துரையை நிகழ்த்தினார். வெளியீட்டு விழாவிற்கு முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன்.

இலங்கைக்கு முதல் பயணம் என்பதாலும் நானும் குறுகிய காலத்தில் தயாராக வேண்டி இருந்தது. உடன் ஒளிப்பதிவாளர் மற்றும் விகடனின் முன்னாள் தலைமை புகைப்படக் கலைஞர் அண்ணன் பொன். காசிராஜன் என இருவருமாக சென்னையிலிருந்து புறப்பட்டோம். சென்னையிலிருந்து 1.15 மணி நேரத்தில் கொழும்பு சென்று விட்டாலும், அங்கிருந்து மட்டக்களப்பு செல்ல 5 மணிநேர கார் பயணம் மிகுந்த உற்சாகமாக அமைந்தது. ஓரளவு இலங்கையின் நிலப்பரப்பை புரிந்துகொள்ள முயன்றபடி இரவு 1 மணிக்கு மட்டக்களப்பு சென்று சேர்ந்தோம். மறுநாள் திட்டமிட்டபடி வெளியீட்டு விழா துவங்கியது.

நூலினை கோட்டைக்கல்லாறு மக்களின் சார்பில் ஆலயங்களின் தலைவர் (வண்ணக்கர்) திரு.விநாயகமூர்த்தி மற்றும் நூலாசிரியர் கல்லாறு சதீஸ் பெற்றோர்கள் பெற்றுக்கொண்டார்கள். விழா வரவேற்புரையை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய அதிபர் திரு.சசிதரனும், வாழ்த்துரைகளை கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் தலைவர் திரு.விநாயகமூர்த்தி, பட்டிருப்புக் கல்வி வலைய பணிப்பாளர் திரு.சிறிதரன், களுவாஞ்சிக்குடிப் பிரதேசச் செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம், அம்பாரைவில் ஆலயத் தலைவர் திரு .சோதீஸ்வரன், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.ரஞ்சிதகுமார், சேவ் த சில்ரன் அதிகாரி திரு.ஜேசுசகாயம், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் செயலாளர் திரு.கோபாலரட்ணம் ஆகியோரும் வழங்கினார்கள்.

வாழ்த்துக் கவிதையை நவீன மரபுக்கவிஞர் டாக்டர் செல்லையா வாமதேவன் நிகழ்த்த தமிழ் பேசுவோருக்கான ஜேர்மன் இலக்கணம் எனும் நூலை எழுதிய மதி கணபதிப்பிள்ளை, ராபா பல்கலைக்கழக வளாக இயக்குனர் அரூஸ் ஆகியோர் உட்பட விருந்தினர்களாக கெளரவிக்கப்பட்டார்கள்.
டாக்டர் கபீல், டாக்டர் வாயித் உட்பட பட்டிருப்புக் கல்வி வலைய அதிபர்கள் 70 பேரும், அதிகாரிகளாக சுமார் 30 பேரும் கலந்துகொண்டதுடன், அனைவரும் மேடையில் கேடயம் வழங்கிக் கெளரவித்தார்கள். கிழக்கு மாகாண ஆளுநரின் வருகையைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் பேண்ட் வாத்தியத்துடன் மாலை அணிவித்து வரவேற்க நூலாசிரியரின் உரையும், ஆளுநரின் வாழ்த்துரையும் இடம்பெற்றது. சுமார் 500 பேர் மக்கள் கலந்து கொண்ட இந்த விழாவினை கல்விச் சமூகமும், கிழக்கு மாகாண சபையும் முன் நின்று நடத்தியது. பள்ளி மாணவர்களின் நடனங்களுடன், விழா சிறப்பாக நடைபெற்றது.

கோட்டைக்கல்லாறு பொது நூலகத்திற்கு நூல்கள் வேண்டும் என்று டிஸ்கவரிக்கு 2016 ஆம் ஆண்டு அந்நூலகத்தின் நூலகர் வைத்த கோரிக்கையை ஏற்று நூல்கள் தயார் செய்து வைத்திருந்தாலும் அதை முறையாக ஒப்படைக்க இயலாமல் இருந்தது. அதை இந்தப் பயணத்தில் சிறப்பாக செய்து முடிக்க எழுத்தாளர் கல்லாறு சதீஷ் அவர்கள் ஒரு வாய்ப்பினை வழங்கினார். அதன்படி மறுநாள் நூலகத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்விழாவில் நூல்களை முறையாக ஒப்படைத்ததுடன், அந்த நூலகத்தை 10 ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகமாக ஆக்குவதற்கான அவர்களின் வேண்டுகோளினையும் ஏற்றுக்கொண்டோம். விரைவில் இன்னும் 6 ஆயிரம் நூல்கள் வரை அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. (வாய்ப்புள்ள வாசகர்கள் இந்த நல்ல முன்னெடுப்பில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்களால் ஆன ஒத்துழைப்பை வழங்கவும். இந்தாண்டுக்குள் ஒரு பயணமாக ஒருங்கிணைந்து திட்டமிட்டு, நூல்களை வழங்கிவிட்டு வரலாம் என்று நினைக்கிறோம்) முக்கியமான ஒன்று என்றால், அது ஈழ மக்களின் அன்பும் உபசரிப்பும்தான். அதோடு விழாவினை ஒருங்கிணைக்கும் முறையை நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

முதலில் சிறப்பு விருந்தினர்களுக்கு குழந்தைகளின் கைகளால் மாலை அணிவித்து வரவேற்கிறார்கள். குத்துவிளக்கேற்றுகிறார்கள். திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி கடவுள் வணக்கம் கட்டாயம் உண்டு. இந்த நிகழ்வுகளில் எல்லாம் ஓராயிரம் ஆண்டுக்கு முந்தைய நமது நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு எப்படி இருந்திருக்கும் என்பதற்கான கூறுகளைக் காண முடிகிறது என்பதுதான் மிகவும் முக்கியமானது. மட்டக்களப்பினைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். அங்கே தடுக்கி விழுந்தால் ஒரு கோயில் இருப்பது ஒரு வகையில் தமிழ் வரலாற்றில் பக்திகாலகட்டத்தை கண் முன் நிறுத்தும் அதே வேளை, தமிழ் மக்களின் மொழி உச்சரிப்பும், விழா ஏற்பாடுகளும், நடனமும், உணவு உள்ளிட்ட பழக்கவழக்கங்களையும் பார்க்கும்போது, கேரளம் மலையாளத்தை ஒரு மொழியாக கொள்வதற்கு முந்தைய சேர நாட்டின் தமிழ்ப் பகுதியின் எச்சமாகவே மட்டக்களப்பினை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. -வேடியப்பன்
தொடரும்…