அனுபவம் – இலங்கைப் பயணம் (3) – டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்

நகர்வு

சேனையூரிலிருந்து திரு.பால சுகுமார், நான், பொன்காசி மூவருமாக முக்கால் மணி நேர ஆட்டோ பயணத்தில் திருகோணமலை சென்றோம். உண்மையில் நாங்கள் இருந்த இடத்திலிருந்து படகு வழியாக திருகோணமலை சென்றால் ஐந்து நிமிடத்தில் சென்று விடலாம். அதாவது குவிந்த வில் ஒன்றின் முனையிலிருந்து அதன் நாண் வழியாக மிக விரைவாக வில்லின் இன்னொரு முனைக்குப் போவதற்குப் பதிலாக, வளைந்த வில்லின் முதுகுத்தண்டு வழியாக அரை வட்டமடித்து அடுத்த முனைக்குப் போனால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அமைப்பில் திருகோணமலையின் கடல் அமைப்பும், இயற்கைத் துறைமுகமும் அமைந்திருந்தது. சற்றே நேரமானாலும் முக்கால் மணி நேரமும் மூக்கைத் துளைக்காத கருவாட்டுப் பந்தல்களைப் பார்த்தபடி கடற்கரை ஓரமாகவே பயணப்பட்டு திருகோணமலையை அடைந்தது அனுபவத்திற்கு கூடுதல் அனுகூலமாக அமைந்தது.

முதல் நாள் கல்லாறு சதீஷின் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் ஆணையாளர் திரு.நவநீதன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்திப்பது என்று முடிவானது. அவருடன் பணியாற்றும் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார அலுவலர் திரு.குணபால விஜயரத்தினம் அவர்களை அவ்வப்போது தொடர்புகொண்டு எங்களது வருகையை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தோம். இருவரும் காலையிலேயே எழுத்தாளர் உமா வரதராஜன் மூலம் கூடுதலாக அறிமுகம் ஆகியிருந்ததால், அலுவலக நேரம் கடந்த பிறகும், அன்பின் நிமித்தம் எங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக் காத்திருந்தனர். சந்திப்பில் நூல்கள் குறித்து பொதுவாகப் பேச ஆரம்பித்தாலும், தொடர்ந்து ஈழத்தின் நிலம், மொழி, கலை, கலாச்சாரம் என ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கல்வி, கலை, இலக்கியம் சார்ந்த உரையாடலாக அமைந்தது. கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் நூறு சிறுகதைகள் தொகுப்பினைப் பரிசாகப் பெற்றுத் திரும்பினோம்.

ஆட்டோவில் திருகோணமலை வந்து கொண்டிருக்கும்போதே அன்றைய இரவுக்கு இலக்கியச் சந்திப்பு ஒன்று ஏற்பாடாகி உள்ளது என்று பாலசுகுமார் கூறி இருந்தார். அதன்படி, அலஸ்தோட்டம் ரிங்கோ ஸ்ரார் கபரினா உல்லாச விடுதியில் ஏற்பாடாகியிருந்த 7 மணி கூட்டத்திற்குத் தயாரானோம். கிட்டத்தட்ட பன்னிரண்டு முதல் பதினைந்து பேர் கலந்துகொண்ட தேநீர் சந்திப்பில் திருகோணமலையிலுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட முக்கிய சந்திப்பாக அமைந்தது. இக்கூட்டத்தில் திருகோணமலை எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பித்தல், புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடுதல், பழைய நூல்களைத் தேடிப் பதிப்பித்தல் மற்றும் திருகோணமலையில் ஆரம்பித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சிகளை ஒருங்கிணைக்கும் சாத்தியங்கள் தொடர்பாக பலவும் பேசப்பட்டன. அனாமிகா பண்பாட்டு மையத்தின் கை கோர்ப்புடன் திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இந்த இலக்கியச் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் கவிதை நூலொன்றும் வெளியிடப்பட்டது. டிஸ்கவரி ஆரம்பித்த போதிருந்து வாசகராகவும், நடனக் கலைஞராகவும் அறிமுகமாகி இருந்த, நடன ஆசிரியர் அபிராமி அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

மறுநாள் காலையில் திருகோணமலையிலுள்ள சிவன் கோவிலுக்குப் போவது என்று முடிவானதால் அதன்படி விடியற்காலையிலேயே நடைபோட்டோம். எனது முதல் வியப்பு சுத்தமான கடல்நீர். டிஸ்கவரி சேனல் போன்றவற்றில் பார்ப்பது போல் பளிங்கு போன்ற கடல் நீர் சென்னை கடற்கரையில் சாத்தியமில்லை என்பதால், அதைத் திருகோணமலை கடற்கரையில் கண்டு வியந்தேன். அழகான காட்சிகளும், கூடவே அற்புதமான ஒரு புகைப்படக் கலைஞரும் அமைந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா? அண்ணன் பொன் காசிராஜன் சிறப்பான படங்களை எடுத்துத் தள்ளினார். பாலசுகுமார் நல்ல குரல்வளம் மிக்க பாடகர் என்பதால், கோயில் வாசலில் அமர்ந்து திருவாசகம் பாடச்சொல்லிப் பதிவு செய்துகொண்டோம்.

கோவிலில் வெண்பொங்கலும், வழியில் கிழங்கு ரொட்டியும் சாப்பிட்டோம். இளநீர் குடித்தோம். திரும்பிய வேகத்தோடு, பேருந்தைப் பிடித்து கொழும்பு புறப்பட்டோம். ஆறு மணி நேர பேருந்துப் பயணம் பற்றி எழுதினால் தனி கட்டுரைகளாக ஐந்தாறு தேறும். ஒருவழியாக கொழும்பு வந்து சேர்ந்தோம். இங்கே அண்ணன் சதீஷ் மற்றும் அண்ணியார் அவர்களின் ஏற்பாட்டில் காத்திருந்தது இரவு விருந்து. பயணத்திற்கு முன்பான பொருட்கள் வாங்குவது என இரவு நேர கொழும்பினைச் சுற்றிக் கடந்து, இரவு 12 மணிக்கு விமான நிலையம் வந்தோம். 09- 08- 2023 அன்று அதிகாலை சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.

ஈழத்தில் அதிகமும் காணக் கிடைத்த பனைமரங்கள் எனக்கு வியப்பளிக்கவில்லை. எனக்குப் பிடித்தமான பனைமரத்தின் நுங்குகளை வெட்டாமல் முத்தலாக விட்டிருப்பதும், அதற்கான காரணமாக மரம் ஏறுவதற்கு ஆட்கள் இல்லை என்று தெரிந்ததும் வருத்தமாகவே இருந்தது. பயணத்தின் பல இடங்களிலும் பனம்பழங்கள் விழுந்து நசுங்கிக் கிடந்தன.

பயணம் நிறைவு

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page