சென்னை – ஆங்கிலேயருக்கு முன் பின் – மு. து. பிரபாகரன்

நகர்வு

சென்னைப்பட்டினத்தை நாம் இரண்டாகப் பிரித்துப் பார்க்கலாம். ஆங்கிலேயர் வந்த பிறகு உருவான சென்னை, அவர்களுக்கு முந்திய சென்னைப்பட்டினம். பொதுவாக மனித நாகரிகம் நீர்வளத்தைச் சார்ந்து இருந்தது என்று வரலாறு சொல்கிறது. அப்படி சென்னைப்பட்டினத்தின் நீர்வளம் என்பது கேசவரம் நீர்த்தேக்கத்தில் துவங்கி கூவகம் கிராமத்தை நனைத்தோடி வந்து மெரினாவில் முகத்துவாரம் அமைத்து கடலில் சேர்ந்த நதி (ஆறு) கூவம் ஆகும். சென்னைப்பட்டினத்தின் மண்ணை வளமாக்கி, விவசாயத்தை செழுமைப்படுத்தி, பசுமை சோலைகளை பூத்துக் குலுங்க வைத்து, வழிநெடுக மனித தாகம் தீர்த்த தெளீர் நீரோடையான ஆறுதான் கூவம் ஆறு.

காஞ்சிபுரம் ஆதனூர் நீர்த்தேக்கத்தில் உதயமாகி வந்த அடையாறு, சென்னைப்பட்டினத்தின் நீர்வழிப் போக்குவரத்தாக விவசாயத்துக்கும், மனித தேவைக்கும் உணவுக்கும் மீன்களை வழங்கிய நீர்வழிப் போக்குவரத்தாக இருந்ததுதான் அடையாறு. அப்படியானால் ஆங்கிலேயனுக்கு முன் நதிக்கரை நாகரிகத்தைப் போல் இங்கே மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள். இந்த இரு நதிகளை நம்பி பல கிராமங்கள் இருந்திருக்கின்றன. பல தொழில்கள் நடந்திருக்கின்றன. சிறுசிறு நகரமாகவும் இருந்திருக்கிறது. இங்கு இருந்தவர்கள்தான் பூர்வகுடிகளாக இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். இதுதான் சென்னைப்பட்டினம் என்றும் இருந்திருக்கிறது. இங்கே பல ஏரிகள், தி.நகர், மாம்பலம் குளங்கள் மற்றும் தேனாம்பேட்டை வரை இருந்த மைலாப்பூர் குளம் என்ற நீர் நிலைகளும், வேளச்சேரியில் இருந்த பல்லாயிரம் சதுப்பு நிலங்களும் இம்மண்ணை செழுமைப்படுத்தி கிராமங்களாகவும் சிறுசிறு நகரமாகவும் மாறி இருந்திருக்கிறது.

இவற்றைக் கண்டு மைலாப்பூர் துறைமுகம் வழியாக சென்னைப்பட்டினம் வந்த ஆங்கிலேயர்கள், இரண்டு நதிகளாக ஓடிய கூவம், அடையாறு முன்னிலையாக வைத்து இங்கே முன்பே இருந்த பூர்வகுடி மக்களையும், மீனவர்களையும் வைத்து பெருநகரமாக சென்னைப்பட்டினத்தை உருவாக்கினார்கள். இவற்றை வைத்து நாம் பார்த்தால் ஆங்கிலேயனுக்கு முந்திய வளமிக்க சென்னைப்பட்டினம் பின் வியாபாரத்துக்கு ஆங்கிலேயன் கட்டமைக்கப்பட்ட சென்னை என இப்படித்தான் சென்னைப்பட்டினம், சென்னை மாகாணம், மதராசப்பட்டினம், மதராஸ், சென்னை என்ற பிரிவுகளின் வழியே நாம் இதன் வளர்ச்சியைப் பார்க்கலாம். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் சென்னைப்பட்டினத்தில் வாழ்ந்த பூர்வகுடிகளும் ஆங்கிலேயன் வந்த பிறகு திருச்சியில் இருந்து வந்த மக்களும் சென்னைப்பட்டினத்தின் மொத்த பூர்வகுடிகளாகத்தான் சென்னையை வளம் பெரும் மண்ணாகவும், செழுமை மிக்க நகரமாக மாற்றியதில் பெரும் பங்காற்றி இருக்கிறார்கள்.

இன்று சென்னை தினத்தில் அவர்கள் நினைவோடு சென்னை நாளை நாம் நினைவு கூறுவோம்.

-மு.து.பிரபாகரன்

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page