சென்னை தினம்- சினிமாக்களில் சென்னை

நகர்வு

சென்னை தினம் முன்வைத்து சென்னையை மையமாக வைத்துக் காட்டப்பட்ட சில சினிமாக்களின் துளிகள்.

மெரினா – இப்போதைய தமிழ் சினிமாவின் முக்கியமான வசூல் நடிகரான சிவகார்த்திகேயனின் அறிமுகப் படம் மெரினா. பசங்க திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்த இயக்குநர் பாண்டிராஜின் தயாரிப்பில் வந்த சினிமா. பிழைப்புக்காக சென்னைக்கு வரும் சிறுவன் பக்கோடா மணியின் விழியில் விரியும் கதை. மெரினாவின் பலதரப்பட்ட மனிதர்களின் முகங்களை உப்புக் கவிச்சியுடன் காட்டிய படம் எனலாம். படத்தின் டைட்டில் சாங்கான வணக்கம் வாழவைக்கும் சென்னை இன்றைய சென்னை தினத்திலும் எங்கும் ஒலிக்கும் பாடலாகும். ஆச்சரிய படத்தின் ஆச்சரியம் காமெடி போர்ஷனைத் தத்தெடுத்துக் கொண்டதுதான் அறிமுக சிவகார்த்திகேயனின் வேலையாகும்.

மே மாதம் – பி. சி. ஸ்ரீராமின் கண்கள் வழியே சென்னையைத் தரிசித்த திருப்தி தந்த படம். ஏ.ஆர். ரஹ்மானின் ஹிட் ஆல்பத்தில் ஒன்று. மார்கழிப்பூவே, என்மேல் விழுந்த மழைத்துளியே, மின்னலே நீ வந்ததேனடி பாடல்கள் இருந்தும் மனதுக்கு ஒட்டாத கதை திரைக்கதையால் படம் தோல்வியைத் தழுவியது. மெட்ராஸ சுத்திப் பாக்கப் போறேன் என்று இதிலும் ஒரு சென்னைப்புகழ் பாடல் உண்டு. இருளும் வெளிச்சமுமாய் ஊடல் கொள்ளும் என் மேல் விழுந்த மழைத்துளி பாடலாகட்டும் இரவு நேர சென்னையை அதன் ட்ராபிக் நெருக்கத்தின் ஊடே பதிவு செய்த ஒளிப்பதிவாகட்டும் மேலும் மேலும் சென்னையை நேசிக்கவைத்தது எனலாம்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – பொதுவாக இயக்குநர் மிஷ்கினின் படங்களில் காட்டப்படும் இரவு நேர சென்னை அதன் இயல்பு மறைந்துதான் காட்டப்படும். இந்தப் படத்திலும் அப்படியே. ஆனாலும் திகில் நிறைந்த ஓநாய் ஆட்டுக்குட்டி துரத்தலுக்கு அந்த அமானுஷ்ய சென்னை வீதியின் நிசப்த செல்லுலாய்டு மஞ்சள் வெளிச்சம் நிச்சயம் மயக்கம் காட்டியது எனலாம். சர்ச், ரயில்வே ஸ்டேஷன், நள்ளிரவு பேருந்து நிலைய நிறுத்தம், அகால சாலை என்று இரவுச் சென்னையை சற்றே புனைவாகக் காட்டி வென்றது இந்தப் படம். பாடல்கள் இல்லாததும் படத்தின் கதை ப்ளாஷ்பேக் காட்சிகளிலும் சென்னையை விட்டுத் தாண்டாததும் இன்னும் மனசுக்கு நெருக்கமாக்கியது சென்னையை.

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page