இருண்ட காலத்தின் சிறு வெளிச்சத் திறப்பு- தமிழ்மகனின் படைவீடு வீடு நாவல் குறித்து

நகர்வு

படைவீடு என்னும் பேரரசை தலைமை இடமாகக் கொண்டு தமிழகத்தை ஆண்ட சம்புவராயர்கள் என்னும் மன்னர்கள் பற்றிய விரிவான நாவல் படை வீடு. 550 பக்கத்துக்கு மிக விரிவாய் மிகப் பெரிதாய் மிக நீளமாய் விரிகிறது நாவல். சேர சோழ பாண்டியர்கள் தமிழகத்தைக் காக்க முடியாமல் போன சமயத்தில் தோன்றிய சம்புவராய பேரரசு தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் எவ்வாறு காத்தார்கள் என்பதை துரோகமும் காதலும் ரத்தமும் கலந்து சொல்லப்பட்டிருக்கும் நாவல்.

பெரும் ஆராய்ச்சிக்குப் பின் எழுதப்பட்ட நாவல் என்பது நாவல் முழுவதும் வாசகனுக்குத் தரப்படும் அதீத தகவல்களிலிருந்து தெரிகிறது. ஐம்பூதங்களின் தலைப்பைக் கொண்டு ஐந்து பாகமாய் விரியும் நாவல் படைவீடு அரசின் அறிமுகத்துடன் தொடங்குகிறது. டெல்லியிலிருந்து புறப்பட்டு பல நாடுகளின் மீதும் போர் தொடுத்து நாட்டைக் கொள்ளையடிக்கிறான் மாலிக் காபூர் என்னும் வட நாட்டு அரசன். அவனை எதிர்க்கும் திட்டத்துடன் படைவீட்டின் இளவரசன் ஏகாம்பரநாதர் அண்டை அயல் நாடுகளுக்குச் சென்று மாலிக் காபூரை வெல்ல ஆதரவு கேட்டு நீளும் முதல் இருநூறு பக்கங்கள். பின்பு ஏகாம்பரநாதரின் திருமணம், பட்டம் சூட்டுதல், சாதிய அமைப்பில் பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்று சேர்க்கும் திட்டம் என விரிந்து செல்கிறது. இடையில் டெல்லிக்கே திரும்பிச் செல்லும் மாலிக் காபூர் அங்கேயே மடிகிறான். ஆனாலும் வேறு சில இஸ்லாமிய மன்னர்களின் கீழ் மதுரை ஆளப்படுகிறது. கடைசி நூறு பக்கங்களில் விஜயநகரப் பேரரசுக்கும் சம்புவராயர்களுக்கும் நடுவில் போரும் அதன் முடிவும் கூறப்பட்டுள்ளது. நாவலில் சனாதனத்துக்கும் சமணத்துக்குமான விவாதப் பகுதி மிகப் பிரமாதமாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் நிஜத்திலும் புனைவிலும் அதற்கான தீர்வு சொல்லப்படவில்லை.
எழுத்தாளர் தமிழ்மகனின் அசுர உழைப்பு நாவல் முழுவதும் தெரிகிறது. பாதி நாவலுக்கு மேல் நிரவியிருக்கும் சைவ வைணவ பிரச்சனைகளைச் சொன்ன விதத்தில் ஆசிரியர் தமிழ்மகன் மிளிர்கிறார். அதே போல் மன்னர் காலத்தில் அரசர்களை விட அந்தணர்களின் கை ஓங்கி இருந்தது என்பதை ஆதாரத்துடன் விளக்கும் இடங்கள் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. இளவரசர் ஏகாம்பரநாதர் ஆடித் திருவிழாவுக்கு அனைவரையும் அழைக்கவும் போர் வந்தால் தயாராய் இருக்கச் சொல்லியும் நீளும் பயணம் பலவித அனுபவங்களுடன் சுவாரசியம் தருகிறது. விஜயநகர பேரரசுடனான முதல் போர் வியூகம் விவரிப்பு பிரமாதம். அதுபோல் கடைசி நூறு பக்க போர் காட்சிகளும் விறுவிறுப்பு.

கண்ணுக்குத் தெரியாத வில்லன் என்பது போல் நாவலில் கண்ணில் படாத எதிரியாய் வரும் மாலிக் காபூர் நாவலின் ஆரம்பகட்ட சுவாரசியத்துக்கு மட்டுமே. மொத்த நாவலில் இரண்டே அத்தியாயத்தில் அவரின் தலை தெரிகிறது. அதிலும் யானைத் தந்தத்தை வேட்டையாடும் காட்சி மாலிக் காபூரின் கதாபாத்திரத்துக்கு பெரிதும் நியாயம் செய்யாத விவரிப்பு. அதே போல் ஒரு சிறு தகவலுக்கு விரியும் பல அத்தியாயங்கள் நாவலுக்குத் தேவையில்லாத தகவல்களுடன் பக்கம் பக்கமாய் விரிகின்றன. அரசர் முதற்கொண்டு அனைத்து மக்களும் பயப்படும் மாலிக் காபூரின் முடிவை ஒரு வரியில் கடந்திருப்பது நெருடல்.

நாவலுக்கு அதி முக்கியமில்லாத சில விஷயங்கள் ஆசிரியரின் எழுத்து நடையில் முக்கியமானதாக எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு வீர வல்லாளர் குறித்த விவரிப்பும் அவரின் முடிவும். இன்னொன்று ஈசன் வாள். இப்படி பல இடங்கள் தகவல் திணிப்புக்கும் அந்நேரத்து சுவாரசியத்துக்கும் எழுதப்பட்டிருக்க வாசகன் எதைத் தொடர்வது என்பதில் கொஞ்சம் களைத்துப் போக வாய்ப்புண்டு. எல்லோருக்கும் தெரியும் விபரத்தை ஏன் மறுபடி விளக்குகிறீர்கள் என நாவலில் வரும் கதாபாத்திரத்தை வைத்தே கேள்வி கேட்க வைக்கிறார் விமர்சகர் தமிழ்மகன்.

இடங்கை வலங்கை பிரச்சனையை இன்னும் தெளிவாக சுருக்கமாக சொல்லியிருக்கலாம். மிகுந்த அயர்ச்சி தருகிறது சில விளக்கங்கள். ஒரு கேள்விக்கு சுற்றி வளைத்துதான் அனைத்து கேரக்டர்களுமே பதில் சொல்கிறார்கள். இது முன் வரலாற்றைத் அந்தக் கதாபாத்திர வாயிலாக தெரியப்படுத்தும் உத்தி என்றாலும் காட்சியாய் விரியவேண்டியதும் பேசியே விவரிக்கிறார்கள். பாரூக் என்ற சுல்தானியனைக் கொல்வது பரமசிவன் என்ற பால் வியாபாரி. அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த இளவரசருக்கு அந்தப் பெருமை சேர்கிறது. அவரும் அதை ஏற்றுக்கொள்வது போல் எழுதப்பட்டிருக்கிறது. ஆசிரியர் கவனித்திருக்கலாம்.

வரலாற்றுக் கதை என்பதால் உண்மைக்கு மாறாக எதையும் விவரிக்கக் கூடாது என்பது உண்மைதான். அதற்காக ஈசன் வாளினைக் கடத்தும் எதிரிக்கு தண்டனை தராமல் போவதும் தன்னைப் பின் தொடரும் ஒற்றனிடம் பின் தொடர்ந்ததற்கு நன்றி கூறி சப்பென்று ஆக்குவதும் நாவலின் சுவாரசியத்துக்கு எதிராய் நிற்கின்றன. கடைசி 100 பக்கத்து சுவாரசியத்தை நாவல் முழுவதும் தந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். அதுபோல் முன்னுரையில் இருந்த தெளிவை வைத்து நாவலைக் கட்டமைத்திருக்கலாம்.

படை வீடு- நாவல்
ஆசிரியர்: தமிழ்மகன்
வெளியீடு: மின்னங்காடி
தொடர்பு எண்: 7299241264

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page