தமிழகத்தில் சமீபகாலமாக இந்துத்துவ ஆதிக்க சக்திகளின் அராஜகங்கள் அங்கங்கே நிகழ்ந்து வருகின்றன. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடித்த கதையாக இலக்கியத்துக்குள்ளும் இப்போது அதன் அராஜக போக்கு எட்டிப் பார்த்திருக்கிறது.
தமிழக அரசுடன் இணைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈரோடு புத்தக கண்காட்சியில் எதிர் வெளியீடு, நிமிர் பதிப்பகம், திராவிடர் கழகம் போன்ற பதிப்பக ஸ்டால்களில் காவல் துறையினர் அத்துமீறி நுழைந்து குறிப்பிட்ட சில புத்தகங்களை விற்கக் கூடாது என பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளனர். புத்தகங்களுக்கு தடை விதிப்பதும் அதனை விற்கக் கூடாது என முடக்குவதும் ஒருவித மோசமான பாசிச வெளிப்பாடு. அடிப்படை சுதந்திரத்தின் மீது கட்டவிழ்க்கப்படும் அராஜகப் போக்காகும். இதனை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
காவல் துறையின் இந்த மோசமான செயலைக் கண்டித்து பல இடங்களில் எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ள நிலையில் கவிஞரும் நடிகரும் தொலைக்காட்சித் தொடர் இயக்குநருமான கவிதா பாரதி அவர்கள் முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு பின்வருமாறு …

இனி ராமராஜ்யம்தான் நடக்கும், புடிக்காதவங்க பாகிஸ்தான், சவுதிக்குப் போயிடு… இப்படி வாட்சப்பில் குரல் பதிவை அனுப்பியவர் சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன்.
ஈரோடு புத்தக கண்காட்சி அரங்குகளுக்குள் நுழைந்து இந்துத்துவாவுக்கு எதிரான நூல்களை விற்கக் கூடாது என்று தடை விதித்தார் ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம்.
என்ன நடக்கிறது காவல் துறைக்குள்… ஒருவேளை இவர்களுக்கெல்லாம் டி.ஜி.பி. அண்ணாமலையா..? மேற்படி காவல் துறை அதிகாரிகளில்
ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இன்னொருவர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
பணியிடை நீக்கம்ன்னா..? வீட்ல சும்மா உக்கார வெச்சு, முக்காச் சம்பளம் தருவாங்க…
கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்ன்னா..? ஆபீஸ்ல சும்மா உக்கார வெச்சு முழுச் சம்பளமும், அலவன்சும் தருவாங்க. ஆத்தாடி என்னவொரு கடுந்தண்டனை.
கவிதா பாரதி
இதுபோன்ற செயல்கள் எழுத்துரிமையைப் பறிப்பதோடு இலக்கியச் செயல்பாட்டையும் முடக்கும் ஒன்றாகும். காவல் துறையின் வன்முறை வெளிப்பாட்டினை நகர்வு இணையதளம் கண்டிக்கிறது.