கனவில் பெய்யும் மழைக் குறிப்புகள் – ந. முருகேசபாண்டியனின் மழைக்கால ராத்திரியும் மூன்று கனவுகளும் தொகுப்பு குறித்து

நகர்வு

சிறுகதை வகைமைக்குள் அடங்காத சிறுகதைகள். யாரோ ஒருவரின் அந்தரங்க டைரியை அவர் அனுமதி இல்லாமல் புரட்டிப் பார்க்கும் மன ஆர்கசத்தை இக்கதைகள் வழங்குகின்றன. முன்னுரையில் ஆசிரியரே சொல்வதுபோல் கதைகளை ரசிக்கும் நிலையிலிருந்து மாறி கதைகள் வழியாக வேறு ஒன்றைத் தேடும் கதைகள் தொகுப்பு முழுவதும். முழுக்க முழுக்க கனவு நிலையில் எழுதப்பட்ட எழுத்து.

தன்னைத்தானே எழுதிக்கொள்ளும் மது ஊறிய எழுத்தின் நடையில் விரியும் கதைகளில் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு வரியில் ஏதாவது ஒரு வார்த்தையில் வாசகன் தன்னைக் கண்டுகொண்டு மகிழ்கிறான். குறைந்த பக்கங்களில் முடிந்துவிடும் கதைகள் முடிந்தபின்னும் தொடர்வது போல் ஒரு மாயை. சொல்லப்போனால் சில கதைகள் முடிந்தபின்புதான் தொடங்குகின்றன. தனித்தனி வரிகளில் கவிதை பேசும் நவீனகால எழுத்து கதைசொல்லியின் எழுத்தில் மிளிர்கின்றன. சிறுகதைக்கான இலக்கணங்கள் தகர்த்து வாசகனை தீவிர வாசிப்புக்குள்ளாக்கும் எழுத்து வகை. சிற்றிதழ் தளத்தில் எழுதப்பட்ட எழுத்தின் வகைமையை இக்கால புதிய எழுத்தாளர்கள் அடையாளம் கண்டு சிலாகிக்கும் கதைகள்.

நிஜத்துக்கும் புனைவுக்கும் இடையிலான மெல்லிய கயிற்றில் ஆடும் கதைகளில் மனம் நடுங்கிய குரல் ஒன்று பிதற்றுகிறது. மாய யதார்த்தப் புனைவில் வாசகனையும் சிக்கவைத்து சாட்சியாக்கும் சாமர்த்தியம் இந்தச் சின்னக் கதைகளின் பெரிய அர்த்தங்களில் உள்ளது. இரு வேறு உலகம் என்னும் கதை மனநலம் பாதிக்கப்பட்டவனின் சுய அலறல் என்றாலும் அங்கங்கே கதை ஆசிரியரின் குரல் தன்னை முட்டி முட்டி எழுதத் தொடங்குகிறது. தலைப்புக் கதையோ சாத்தியமில்லாததை எழுத்தில் சாத்தியமாக்கிப் பார்க்கும் சிதைந்த மனதின் குரலாய் விரிகிறது.

கதைக்கான ஆரம்பமும் முடிவையும் கொண்டிருக்கும் போதை என்னும் கதை. ஒரு சம்பவத்தை அதிக மேல் பூச்சின்றி எழுதியுள்ளார். கதை விவரிப்பில் வாசிப்பவனின் நாசிக்குள்ளும் போதையின் நறுமணத்தை பரவச் செய்திருப்பதில் ஆசிரியரின் வசீகர எழுத்து விளையாடுகிறது. ஒவ்வொரு குடையின் கீழேயும் கதை சபாஷ் சொல்ல வைக்கிறது. சொல்லாமல் சொல்லிச் செல்லும் பல விஷயங்கள் அடங்கிய கதையின் முடிவு அதிர்வாய் ஒன்றைச் சொல்லிப் போகிறது. ஒரு காதலும் தோல்வியும் தெரியும் இடைவெளி கதை சொல்லப்பட்ட விதத்தில் வேறொன்றைச் சொல்லிப் போகிறது.

நாவலுக்கான ஆரம்பம் என்று சொல்லி எழுதப்பட்டிருக்கும் கதையில் தெறிக்கும் பகடி தனிக் கதையாய் வாசித்து ரசிக்கத் தோன்றுகிறது. வாழ்ந்து கெட்ட கலைஞனின் குரலை நாடக பாணியில் பதிவு செய்திருக்கும் தொகுப்பின் இறுதிக் கதை நவீனம் அழித்த இயல்பொன்றின் வலியெனச் சொல்லலாம். சமயநல்லூர் ஆண்டியப்பன் போன்று எத்தனையோ பேர் நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக ராஜபார்ட்டாக மாறிய வலியை அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கதை.

புதிதான ஓர் அனுபவத்தை வழங்குகின்றது ந. முருகேசபாண்டியனின் நனவுலக வாசியின் நினைவுக் குறிப்புகள்.

மழைக்கால ராத்திரியும் மூன்று கனவுகளும்- சிறுகதைகள்
ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்பு எண்: 87545 07070

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page