முள் மரம் கொல்க!

நகர்வு

முள் மரம் கொல்க!

நாஞ்சில் நாடன்

விசும்பு எனும் சொல்லுக்கு மூன்று பொருள் சொல்கிறது பிங்கல நிகண்டு. “விண்ணும் சுவர்க்கமும் மேகமும் விசும்பே” என்பது நூற்பா. அதாவது, விசும்பு என்றால் ஆகாயம், வான், வெளி. விசும்பு என்றால் தேவலோகம், வீடு, துறக்கம். விசும்பு என்றால் மேகம், கார், கொண்டல், முகில், எழிலி. இம்முப்பொருள் அன்றியும், திசையை, திக்கைக் குறிக்கவும் விசும்பு என்ற சொல் ஆளப்பட்டிருக்கிறது.

புறநானூற்றில் இரண்டாம் பாடல், முரிஞ்சியூர் முடிநாகராயர் பாடியது. பாடப் பெற்றவர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன். பாடல் வரிகள் :

                       மண் திணிந்த நிலலும்,
                      
நிலன் ஏந்திய விசும்பும்,
                      
விசும்பு தைவரு வளியும்,
                      
வளித் தலை இய தீயும்,
                      
தீ முரணிய நீரும்.

என்று நீளும். ஐம்பெரும்பூதத்து இயற்கை பேசுகிறார் புலவர். மண் செறிந்தது நிலம், அதன்மேல் வளர்ந்து நிற்பது வானம், வானம் தழுவி வரும் காற்று. காற்றால் எழுந்தது நெருப்பு, நெருப்புக்கு முரணான நீர் என்பது பாடல் வரிகளின் பொருள்.

நாலடியாரில், 373வது பாடல் :

        ‘அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
       
செங்கண்மால் ஆயினும் ஆகமன்தங்கைக்
   கொடுப்பதென்று இல்லாரைக் கொய்தளிர் அன்னள்
   விடுப்பர்
தம் கையால் தொழுது.’

என்கிறது. அழகிய தலமாகிய துறக்கத்தின் அமரர்களால் தொழப்படும் திருமாலே ஆனாலும், தம் கையில் கொடுப்பதற்கு ஒரு பொருளும் இல்லை என்றால், கொய்யும் தளிர் போன்ற – மாந்தளிர் போன்ற – நிறத்தினை உடைய விலைமாதர் – இருமனப் பெண்டிர் (திருக்குறள்) – முலைக்கோட்டு விலங்கு (கம்பன் – பரத்தையர் (சங்க இலக்கியம்) –  பொருட் பெண்டிர் (சங்க இலக்கியம்) – தம் கைகளால் தொழுது போய்விடச் சொல்லுவார் என்பது பொருள்.

ஆக, ஈண்டு விசும்பு எனில் துறக்கம், சுவர்க்கம், வீடு. விசும்பேறு எனும் சொல்லுக்கு இடியேறு, Thunder Bolt என்கிறது இலக்கிய அகராதி. அசனி ஏறு என்பான் கம்பன். திருக்குறளின் இரண்டாவது அதிகாரம் வான் சிறப்பு. அதன் பாடல் கூறுகிறது:

        விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே
       
பசும்புல் தலை காண்பு அரிது.

என்று. இங்கு விசும்பு எனில் மேகம். வானத்தில் நின்றும் மேகத்தின் துளி வீழாமற்போனால், பசும்புல்கூட முளைக்காமற் போகும் என்பது குறளின் எளிய பொருள்.

கனடா நாட்டில் இருந்து வெளியாகும் ‘காலம்’ எனும் காலாண்டு இதழில், 2016ஆம் ஆண்டு நானெழுதிய கட்டுரைத் தலைப்பு ‘விசும்பின் துளி!’. பிறகு அதே தலைப்பில், எனது கட்டுரை நூலொன்று, 342 பக்க அளவில், விஜயா பதிப்பக வெளியீடாக 2016இல் வெளியானது.

எனக்குத் தோன்றுகிறது நீள் விசும்பு; வானின் கொடை. கார் – முகில் -கொண்டல் – எழிலி – மேகம். மேகத்தின் கொடை மழை. மழையின் நீரே சிற்றோடைகள், கால்வாய்கள், யாறுகள், நதிகள், குட்டை – குளம் – வாவி – தாடகம் – பொய்கை – ஏரி – பேரேரிகள். கடல்கள், மாக்கடல்கள். நீர்த்துளியின் சுழற்சியே மறுபடியும் வெண்மேகம், தடித்த எழிலி எனத் தகவமைத்துக் கொள்கிறது இயற்கை.

துறக்கம், சுவர்க்கம், வீடு, பரமண்டலம் என அனைத்து மதங்களும் போதிக்கின்றன. அவரவர் நம்பிக்கைசார்ந்த விடயம் அது. கண்முன்னே காணக்கிடப்பது, வான், கொண்டல், மழை, நீர்த்துளிப் பெருக்கமான யாறுகள்.

திருக்குறளின் பதினெட்டுப் பாடல்கள் ஆறு எனும் சொல்லை ஆள்கின்றன. ஆனால் அவை – வழி, நெறி, ஆறு எனும் எண் எனும் பொருள்களில்  பயன்படுத்தப்பட்டுள்ளன. யாறு என்றாலும் ஆறுதான். திருக்குறள் யாறு எனும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆறலைக்கள்வர் என்றொரு சொல்லுண்டு தமிழில். நெடுஞ்சாலைத் திருடர் என்று சொல்லலாம். இன்று தலைவர் எனப்படுபவரை அச்சொல் அடையாளப்படுத்தும்.

கலித்தொகையின் முதலாம் கலியான பாலைக்கலி பாடிய பெருங்கடுங்கோ, இருபதாவது பாடலில், ‘யாறு நீர் கழிந்தன்ன இளமை’ என்பார். மழை பெய்து நுங்கும் நுரையுமாக ஆற்றில் பெருக்கெடுத்துப் பாயும் பெருவெள்ளம் மெல்ல மெல்ல வடிந்து போய்விடுவதைப் போல இளமையும் நாட்செல, நாட்செல கழிந்து போகும் என்பது பொருள்.

ஆறுகளைப் பற்றி யோசிக்கும்வேளையில், ஆறு எனும் சொல் முதலில் எனக்கு ஞாபகப்படுத்துவதும், மனம் கருதுவதும், கற்பிப்பதுவும் தேரேகால் என்பதையே! இது சொந்தக்காரியம், தனிப்பட்ட விடயம்.

பழையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து கால் பிரிவது தேரேகால். கால் எனில் கால்வாய். திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை அது. அதிலிருந்து கிளை பிரிந்தது கால்வாய். தேரேகால் என்றாலும் எமக்கது ஆறு.

என்னுடைய நாவல்களில், சிறுகதைகளில் தேரேகால் ஒரு கதாபாத்திரம்.  தேரேகாலின் வலதுகரையில் ஒருகாலத்தில் மாட்டுவண்டித் தடமாக இருந்து பின்னர் பேருந்து, சரக்குந்துகள் போகும் அளவுக்குக் கப்பிக்கல் சாலை. வீரநாராயணமங்கலம் எனும் எங்கள் ஊரின் வடக்கு எல்லையாக ஓடிவந்து, கிழக்கு எல்லையாகத் திரும்பி, மூன்று கிலோமீட்டர் தூரத்தில் நாகர்கோயில்–திருநெல்வேலி நெடுஞ்சாலையைச் சந்திக்கும் சாலை அது. வழியில் வீராணமங்கலம் காலனி, வீமநகரி சாலைப் பிரிவு, திருப்பதிசாரம், தேரேகால்புதூர். தேரேகாலுக்கு, சாலை தோழன் எனும் விதத்தில்.

வேதம் தமிழ்செய்த மாறன், நம்மாழ்வாரின் அம்மா காரிப்பிள்ளை பிறந்த ஊர் அன்று திருவண்பரிசாரம், இன்று திருப்பதிசாரம். திருவாழிமார்பன் கோயிலுக்கு வந்தவர்களுக்குத் தெரியும், திருப்பதிசாரம் தெப்பக்குளத்தின் சிறப்பு. தெப்பக்குளத்துக்கு உள்மடை பழையாற்றில் இருந்து என்றால், வெளிமடை தேரேகால். ஒருவேளை, நம்மாழ்வார் காலத்தில் இருந்தே வடிவமைக்கப்படாத ஓடையாகத் தேரேகால் கிடந்திருக்க வேண்டும்! நாமென்ன கண்டோம்?

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில், பழையாற்றில் தடுப்பணை கட்டி, தேரேகாலைச் செப்பம் செய்து, பத்து கிலோமீட்டர் தூரத்தில் கிடந்த தேரூர் குளத்துக்கு நீர் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்திருக்க வேண்டும். எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது! மழைக்காலம் தொடங்கும் முன்பே, தேரூர் குளத்துப் புரவு விவசாயிகள் கூட்டமாக ஐம்பது அறுபது பேர் கையில் வெட்டுக்கத்தி, மண்வெட்டி, குட்டையுடன் வந்து, தேரேகால் முகப்பில் துவங்கி, தேரூர் குளம் வரை ஆற்றைச் செப்பனிடுவார்கள். ஆற்றின் இரு கரைகளிலும், சிலசமயம் ஆற்றின் நடுவே திட்டுக்களில் மண்டிக்கிடக்கும் புதர்களை, கொடிகளை, நீர்த்தாவரங்களை வெட்டி மாற்றி, பதவல்களைக் களைந்து ஒழித்து, சின்ன ஆனை அறுகு மண்டிய மேடுகளை வெட்டி நிரப்பாக்கி, தேரூர் குளத்துக்குத் தடங்கல் இன்றி நீர் பாய வழிசெய்வார்கள். மதியத்துக்கு உளுந்தங்கஞ்சியும் வறுத்தரைத்த துவையலுக்குமான ஏற்பாட்டுடனே வருவார்கள். தேரூர் குளத்துப் புரவுக்காரர்கள் அத்தனைக் கருத்துச் சிரத்தையுடன், ஆண்டுக்கு ஒருமுறை தேரேகாலைத் துலக்குவார்கள்.

தேரூர் குளத்துக்கு வெள்ளம் கொண்டுசெல்வதால் தேரேகால். தேரேகாலை வடக்கு – கிழக்கு எல்லையாகக் கொண்ட வீரநாராயணமங்கலம் எமக்குப் பூர்வீகமாக அமைந்தது தற்செயலா? அல்லது முன்வினையா? ஒருபக்கம் சொல்கிறார்கள் யாவுமே முன்பே தீர்மானிக்கப்பட்டவை, வினை, விதி, தெய்வாதீனம் என. இன்னொரு பக்கம் கோவலன் கொலைப்பட்டது தற்செயல், மதுரை எரியுண்டது தற்செயல், ஒரு பொற்கொல்லன் தவறுக்கு ஆயிரம் பொற்கொல்லர் வெட்டி வீசப்பட்டதும் தற்செயல் என்று. அவனவன் இன்று பல்லாயிரம் கோடிப்பணம் தனக்கும் பிள்ளைகளுக்கும், வைப்பாட்டி பிள்ளைகளுக்கும், கொழுந்தியாள் பிள்ளைகளுக்கும் என அடித்து மாற்றிக் குவித்துப் பதுக்கிவைத்திருப்பதும் முன்வினைப் பயனா?, தற்செயலா? அறத்தின் ஆறு இதுவென வேண்டா என்பார் திருவள்ளுவர். அறத்தின் ஆறு எதுவெனக் கொள்வது இன்று?

மூலைக்கரைப்பட்டி – முனைஞ்சிப்பட்டி கிராமத்தில், வடக்கு எல்லையாக வடக்குவாழ் செல்வியும் சுந்தரமூர்த்தி விநாயகரும் அமர்ந்த தெருவில், எளிய விவசாயி புலமாடன் பிள்ளைக்கும் செவினிப்பிள்ளைக்கும் பிறந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. என் அனுமானம், அவர் பிறந்த ஆண்டு 1887 என்கிறது.

செவினிப்பிள்ளை எனும் பெயரை ஆண்பால் எனக் கொண்டு, எப்படி ஐயா ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கும் என்ற முற்போக்குக் கேள்வி எல்லாம் கேளாதீர்! முன்பே சொன்னோம், நம்மாழ்வாரின் அம்மா பெயர் காரிப்பிள்ளை என்று. என் அம்மையின் அம்மை பெயர் மாடிப்பிள்ளை, ஆரிய நாட்டுக்காரி. அதுவே என் சகோதரிக்கு இட்ட பெயரும். ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் நாயகியின் அம்மா பெயர் நீலாப்பிள்ளை. பதினொன்றாம் வகுப்புவரை என்னுடன் வாசித்த இரண்டு சிவகாமிப் பிள்ளைகளில் ஒருத்தி தாழக்குடி மேலத்தெரு, இன்னொருத்தி தாழக்குடி பள்ளத்தெரு.

அது கிடக்கட்டும். கடும்பஞ்சம் நிலவிய காலை, ஊரில் கிடந்தால் பட்டினியில் செத்துப்போவோம் என்று அஞ்சி, புறப்பட்டு, நாங்குநேரி, பணகுடி, வள்ளியூர், காவல் கிணறு, ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், சந்தைவிளை, தாழக்குடி வழியாக நடந்து, வீரநாராயணமங்கலத்தின் கிழக்கெல்லையாக ஓடிக்கொண்டிருந்த தேரேகாலின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் கருங்கல் வரிப் பாளத்தின்மீது கிடந்தவர் மூலைக்கரைப்பட்டி- முனைஞ்சிப்பட்டி புலமாடன் பிள்ளை மகன் சுப்பிரமணிய பிள்ளை. அப்போது அவருக்குப் பதினைந்து வயது, ஆண்டு 1902 என இருக்கலாம்.

உள்ளுர்ப் பண்ணையார் ஒருவர் விசாரித்து, வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய், வாழையிலைச் சருகில் பழையது பிழிந்துவைத்துச் சாப்பிடச் சொல்லி, மாட்டுத் தொழுவத்தில் படுக்கவைத்து, மாடு மேய்க்கச் சொல்லி, வேளாண்மை பயிற்றி, மாட்டு வண்டி பூட்டச்சொல்லி, ஆதரித்துப் போற்றிய காரணத்தால் வீரநாராயணமங்கலம் எமக்குப் பூர்வீகமாயிற்று. தேரேகால் எமக்குத் தாய் ஆறும் ஆயிற்று.

ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன், எம் தாத்தனை அன்று ஆதரித்த பண்ணையாரின் பேரனுக்கு வாழ்க்கைப்பட்டு, வந்த பெண்மணி ‘மகடூஉ முன்னிலை’,  ‘அவ்வையார் படைப்புக் களஞ்சியம்’ எனும் அரிய நூல்களைப் படைத்த பேராசிரியர், நான் அக்கா என விளிக்கும் தாயம்மாள் அறவாணனின் மூத்த சகோதரி. ஆகத் தேரேகாலும் எம் செஞ்சோற்றுக் கடன்.

கவிஞர் தாணு பிச்சையா ஒரு கவிதையில் கேட்டார், ‘நான் என்ன கம்மாளன்?’  என்று. நானுமே அந்தக் கேள்விக்குத் தகுதியானவன்தான். ஆம்! ‘நான் என்ன வெள்ளாளன்?’ பஞ்சம் பிழைக்க, முனைஞ்சிப்பட்டியில் இருந்து கால் பறிக்க, என் அப்பனைப் பெற்ற தாத்தன் முடிவெடுத்திராவிட்டால், பசியால் சோர்ந்து, தேரேகால் பாலக்கலுங்கில் அவர் கண்மயங்கிக் கிடந்திராவிட்டால், அந்த ஆற்றுக்கும் எனக்கும் என்ன உறவு? ‘கயிற்றரவு’ சிறுகதையில் புதுமைப்பித்தனின் கடைசி வரிபோல், நானும் கேட்கலாம், ‘நாஞ்சில் நாடன் எங்கே?’ திருஞான சம்பந்தர் சொன்னதுபோல், தாத்தா போயினார், தந்தை போயினார், தானும் போவேன்! ஆனால் தேரேகால் சினந்தும் துள்ளியும் தத்தியும் சோர்ந்தும் நடக்கும்.

ஒருவேளை, ஆறு என்று இன்று நான் குதூகலித்துப் பாடும் தேரேகால் பாலத்தில், அன்று அந்தப் பதினைந்து வயதுச் சிறுவன் களைத்து மயங்கிப் படுத்திராவிட்டால்,  ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, ‘கம்பனின் அம்பறாத்தூணி’, ‘சிற்றிலக்கியங்கள்’  தமிழுக்கு நட்டப்பட்டிருக்கக்கூடும்.

ஐப்பசி மாதத்து அடைமழையில், பழையாற்றில் பெருவெள்ளம், தேரேகாலிலும் பெருவள்ளம், கண்டமூட்டுப் பத்தின் கரையில் உடைப்பு என்றிருந்த காலை, ஆற்றில் மிதந்துபோன நெற்றுத் தேங்கால் ஒன்றைப் பிடிக்கப்போன நான், ஆழமும் வேகமும் கணிக்காமல் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொக்குப் பிடித்துக்கொண்டிருந்த நேரம், எவர் கரமோ என்னைக் கொத்தாகப் பற்றிக் கரை சேர்த்தது. அது, சம்பவித்திராவிடில் அறுபதாண்டுகள் முன்பே என் சடலம் ஊதிப்பெருத்து எங்கோ கரை ஒதுங்கி இருக்கும்!

உடலெல்லாம், விரல் இடுக்குகளில்லாம் சிரங்கு. என்னைக் கைப்பிடித்து ஆற்றுக்கு இழுத்துக்கொண்டு போய், மாடு குளிப்பாட்டும் வைக்கோல் பத்தையை எடுத்து இரத்தம் வடியக் கரகரவெனத் தேய்த்துக் குளிப்பாட்டினார் அப்பா. அழுதுகொண்டே கரையேறிய நான், சாலையில் கிடந்த நல்ல வாக்கான வெட்டாங்கல் ஒன்றை எடுத்துக் குறிபார்த்து எறிந்து, அவர் கால் முட்டியைக் காயப்படுத்தியது இன்றும் நினைவில் உண்டு. முதுகில் விரல் தடம் பதிய அறைவாங்கி, அழுதுகொண்டே வீட்டுக்குப் போன என்னை, அம்மா பிடித்து, மண் படிப்புரையில் உட்காரவைத்து, தெரிசனங்கோம்பு மகாதேவ ஐயரின் சாரதா ஆயுர்வேத வைத்தியசாலையில் வாங்கி வந்திருந்த மருந்தெண்ணையைக் கோழி இறகால் தொட்டுப் புண்களில் வைத்த பொழுதின் சுகமும் நினைவில் உண்டு. அப்போது நான் உள்ளுர் அரசினர் துவக்கப்பள்ளியில் நாலாவதோ, ஐந்தாவதோ வாசித்துக்கொண்டிருந்தேன்.

ஊரின் ஈசான மூலையில் தாத்தா ஒத்திக்குப் பிடித்திருந்த மூன்றரை சென்ட் புரையிடத்தில், அவர் கட்டி வாழ்ந்த தென்னையோலைக் குடிசை வீட்டில்தான், அப்பாவும் வாழ்ந்தார், தனது குடும்பத்துடன். வீட்டுக்குப் புறவாசல், இறச்சகுளம் – தாழக்குடி சாலை சாலையில் இருந்து சரிந்து இறங்கினால் தேரேகால். அன்றெல்லாம் வீட்டில் கஞ்சி குடித்துவிட்டு ஆற்றில் கை கழுவினோம். எந்த வீட்டுக்கும் குழாய்த் தண்ணீர் வராத காலம். மின்னிணைப்பே 1962இல் தான் வந்தது. எங்களுரில் அன்று எந்த வீட்டிலும் கக்கூசு- கழிவறை- Latrine – இல்லை. அந்தச் சொற்களே அறிமுகம் இல்லை. எடுப்புக் கக்கூசும் இல்லை, தொடுப்புக் கக்கூசும் இல்லை. கழிவுநீர் ஓடை இல்லை. நகரங்களில் பிறந்து வளர்ந்து, பெற்றோர் அரசுப் பணி புரிந்து, தாமும் அரசுப் பணி எனும் ஆதாயப் பணிபுரிந்து, தலித்தியம், பெண்ணியம், அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், அண்ணாயியம் என்று கட்டுரை எழுதுபவர்கள் இன்று கேட்கலாம் – நாங்கள், கிராமத்தார் எங்கு, எப்படி சிறுநீர் கழித்தோம், மலம் கழித்தோம், எங்கு கழுவினோம் என்று.

சாப்பிட்டுக் கை கழுவத் தேரேகால், மாடு குளிப்பாட்ட துணி துவைக்க, குளிக்க, குண்டி கழுவ, கும்பிடும் சாமிக்குத் தீர்த்த நீர் மொள்ள, மாட்டுத் தொட்டியில் தண்ணீர் நிறைக்க, சமைக்கவும் குடிக்கவும் தண்ணீர் கோர எல்லாம் எமக்கு அந்த ஆறுதான். எங்களுர் ஆரம்பப்பள்ளி வடக்குப் பார்த்து, ஆற்றைக் கண்காணித்து அமர்ந்து இருந்தது. இடைவேளை மணி அடித்தால், ஓடிப்போய் ஆற்றில் இரண்டு கை தண்ணீர் அள்ளிக் குடித்தோம். சிலர் புறங்கை கட்டிக் குனிந்து நேரடியாக ஆற்றையே பருகினார்கள். இன்றுபோல் அன்றெவரும் பள்ளிக்கு, கல்லூரிக்கு, அலுவலகத்துக்கு, கடைத்தெருவுக்குப் போகும்போது தண்ணீர் போத்தல் சுமந்ததில்லை. ஆற்றின் அடிவயிற்று மணல் தெரிய வெள்ளம் அரித்தோடியது எக்காலமும். மீன்கள் செடிகளோரம் ஆய்ந்து நின்றன. அயிரைகள் கூட்டம்கூட்டமாகக் குலவி நின்றன.

பெருவெள்ளக் காலங்களில், ஆரம்பப் பள்ளியின் முன்னால் படர்ந்து வளர்ந்து நின்ற ஆலமரக் கிளைகளில் ஏறி ஆற்றில் குறித்தோம். கண் சிவக்கும் வரை குளித்தோம். தன்னறிவின்றி ஆற்று நீரோடு சிறுநீரும் பிரிந்துபோயிற்று. சீப்பு என்றும், சட்டறை (Shutter) என்றும் சொல்லப்பட்ட, பழையாற்றுத் தடுப்பணையிலிருந்து கிளை பிரிந்த தேரேகால் முகப்பின் இடது கரையில் வரிவைத்துக் கவிந்து நின்ற புன்னைமரங்களில் இருந்தும் யாற்றில் குதித்தோம். மூத்தார் எவர் பார்த்தாலும் முதுகில் இரண்டு சாத்தி அனுப்பினார்கள். சொந்தக்காரப் பையனா, தெருக்காரனா, சொந்தக்காரன் மகனா என்ற குறுகிய பார்வை, அவர்களுக்கு இருந்ததில்லை.

ஆண்கள், பெண்கள் குளிக்கத் தனித்தனித் துறைகள் இருந்தன. ஆற்றில் கிடந்தாலும் எவரும் துறை அறியமாட்டாதவர் இல்லை. ஆனால் விளக்கு வைத்தபின், பெண்கள் குளிக்க, துவைக்க, குடிவெள்ளம் கோரக் குடத்துடன் வருவதில்லை. எனவே இரவு விழுந்த பின்பு ஆண்கள் எந்தத் துறையிலும் குளித்தனர்.

பாறையாறு எனப்பட்ட பழையாற்றில் இருந்து தேரூர் குளம் சென்று சேரும்வரை அன்று தேரேகாலில் எந்த ஊர் சாக்கடையும் கலக்கவில்லை. பாவம் – புண்ணியம் எனும் சொற்கள் மூடநம்பிக்கைகள் எனக் கருதப்பட்ட காலம் வந்தபிறகு, மக்கள் ஆற்றில் கழிவுநீர் கலப்பது பற்றிய அக்கறையற்றுப் போனார்கள்.

மாசி, பங்குனி எனும் கடும் கோடைகாலத்தில், பழையாற்றின் நீர் வரத்துக் குறைந்து, தேரேகாலில் வெள்ள ஒழுக்கு அற்றுப்போகும். பள்ளமான சில இடங்களில் வெள்ளம் குட்டையெனத் தேங்கிக்கிடக்கும். பாசி மிதக்கும். குளித்தால் மேலெல்லாம் அரிப்பு உணர்வு தோன்றும். அப்போது எவரும் ஏவாமல், ஊதியம் பெறாமல், வாலிபர் பெரும் மண்வெட்டியோடு வந்து, ஆற்று மணலின் நாலடி விட்டத்தில், இரண்டடி ஆழத்தில் ஊற்றுத் தோண்டிப் போவார்கள். எங்களூர் எல்லைக்கு உள்ளேயே ஐந்து ஊற்றுக்கள் கிடக்கும்.

ஊற்றில் தண்ணீர் இறைக்க வரும் தாயரும் பெண்டிரும் சிறுமியரும், கையில் ஒரு பித்தளைச் சருவம் கொண்டு வருவார்கள், செப்புக்குடத்துடன். ஊற்றுமணலில் சருவம் உரசும் ‘சொரங், சொர்ரங்’ எனும் ஒலி பகல் முழுக்கக் கேட்டுக்கொண்டே இருக்கும். கிழக்கில் தாழக்குடியிலும் மேற்கில் இறச்சகுளத்திலும் இருந்து, ஆண்களும் பெண்களும் அழுக்குத் துணிகளுடன் வந்து, துவைத்து, குளித்து, குடத்தில் ஊற்றுத் தண்ணீருடன் செல்வார்கள். மாலை நேரங்களில் பழையாற்றின் பிராமணத்தோப்பு மணல்மேடு கோலாகலமாக இருக்கும். சிலசமயம், குளித்துவிட்டு உண்ண சிற்றன்னங்களுடனும் வருவார்கள்.

பிரதேச, பிராந்திய பேதமின்றி, இன்று எல்லா ஆற்றங்கரைகளும் ஆக்கிரமிப்புக்கு ஆட்பட்டுள்ளன. தேரேகாலின் வடக்கு மற்றும் கிழக்குக் கரைகளில் ஏர்மாடு பத்திக் கொண்டு போகலாம். நானும் போயிருக்கிறேன். ஆற்றங்கரையில் மாடு மேய்த்திருக்கிறேன். புல்லறுத்திருக்கிறேன். உண்ணிப்பழம், காராம்பழம், பூலாத்திப்பழம், சப்பாத்திக்கள்ளிப் பழம் பறித்துத் தின்றிருக்கிறேன். தாழம்பூக்கள் பறித்திருக்கிறேன். ஆற்றின் கரை, இன்று கரையை ஒட்டிய வயல்காரர்களின் அபகரிப்புக்கு ஆட்பட்டுப் போயிருக்கிறது. நாட்டில் பல்லாயிரக்கணக்கில் ஊதியமும் கையூட்டும் வாங்கும்  அதிகாரிகள் யாவரும் நோய் நொடிகள் ஏதும் இன்றி, சீருடனும் சிறப்புடனும் சகல சம்பத்துக்களுடனும் ஆனந்தமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எவன் ஆண்டாலும் நீர்நிலைகள், நீர்வழிகள் ஆக்கிரமிப்புக்கு இங்குக் கேட்பார் கேள்வி இல்லை. ஆதார் அட்டை இருந்தால்போதும்.

அதிகபட்சம் 10 கி.மீ. தூரம் பாயும் தேரேகாலின் சீர் இதுவென்றால் பொருநை, வைகை, பெண்ணை, பாலாறு, காவிரியின் கதி என்ன? கடவுள் மறுப்பாளர்களும், தம்மையே கடவுள் என்று கற்பிப்பவரும் நடத்தும் இயற்கை நிர்மூலத்தில் நாம் எல்லாம் அவப்பிறப்புக்களா? ‘அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதும் ஆட்சி செலவே நினைவர்!’ என்பார் தாயுமானவர். நமது இன்றைய அவலங்களின் உச்சம் அது. தலைவர் எனத் தம்மை நிறுவிக் கொண்டவரின் வரைமுறையற்ற, மாநிலத்தையே கவ்விப்பிடித்து விழுங்கும் ஆசை. பேராசை எனும் சொல்லைத் தாண்டிய பிறிதோர் சொல் தமிழில் இல்லை என்று தோன்றுகிறது. அந்தச் சொல்லைத் தேடச்சொல்லும் ஆட்சியாளரின் கொடும் கொள்ளை. சக மாந்தரின் குலம் அறுக்கும் ஆசை அது.

இந்த ஆசையின் ஒரு சாட்சி, இன்றைய நதிகளின் பேரவலம். அண்மையில்,  பிரான்சு- ஜெர்மனிக்கு எல்லையாக ஓடும் ரைன் (RHINE) நதியை ஸ்ட்ராஸ்பூர் நகரில்  சந்தித்தேன். அதேபோல், பாரிஸ் நகரில் செம்மாந்து நிற்கும் ஈஃபில் கோபுரம் முன்னால் ஆழமும் அகலமும் வேகமுமாகப் பாயும் செயின் (SEINE) நதியையும்.  இரு நதிகளையும் கண்ணுற்றபோது, இந்திய நதிகளுடனான ஒப்பீட்டைத் தவிர்க்க இயலவில்லை. அவமானமாக இருந்தது. புனிதங்கள் மிகவும் ஏற்றப்பட்ட சரயு, கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா, நர்மதா, சபர்மதி, மகாநதி, கிருஷ்ணா, சந்திரபாகா, கோதாவரி, துங்கா, பத்ரா, காவிரி, பெரியாறு, வைகை, பொருனை, பவானி, நொய்யல்… அந்த இரு நதிகளையும் கண்ணுற்றபோது, அகமனத் தூண்டுதலாகத் தோன்றியது, அவற்றில் ஒன்றில் விழுந்து செத்துப்போகலாம் என. இந்தக் கட்டுரை எழுதும் வேலை நினைவில் இருந்ததால், உயிரோடு இந்தியா திரும்பினேன்.

எம் தலைமுறையின் வாழ்நாள் சோகம் இது. எதிர்வரும் தலைமுறையின் தொலைக்கமுடியாத பாவமாகவும் ஆகிவிடுவதற்கு நாமும் பொறுப்புத்தானே எனும் குற்றவுணர்வும் வாட்டுகின்றது. உலகிலேயே ஏன், இந்திய நதிகள் மட்டுமே இத்தனை கேவலப்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தூறு செய்யப்பட்டு நாற்றம் வீசிச் செத்து மிதக்கின்றன? அறநூல்கள், சாத்திரங்கள், சம்பிரதாயங்கள், அனுட்டானங்கள்  இந்தியனுக்குப் போதித்துத் தந்ததென்ன? அவன் கெடுத்தான், இவன் கெடுத்தான் என்று மாறிமாறிப் புலம்பல் செய்வதன்றி, நேர்செய்ய நாம் கைக்கொண்ட பணிகள் என்ன? பிரபஞ்சத்துக்கே நாங்கள்தான் மரபும், பண்பும், இசையும், இறைமையும், மொழியும், நன்னடையும் நல்கினோம் என்று வாய்மொழியால் கொண்டாடித் திரிவதன்றி நம் பொறுப்பு என்ன? மேடைப் பொழிவுகளுக்குக் கைதட்டிச் சிரிப்பதோடு தீர்ந்துபோகுமா எல்லாம்?

‘இளையதாக முள்மரம் கொல்க’ என்றானே வள்ளுவப் பேராசான்! திருவள்ளுவருக்குக் காவி உடுத்துவதா, உருத்திராக்கம் பூணுவதா, பூணூல் போடுவதா, அவர் சமணரா, கிறித்துவரா, மழிப்பதா, நீட்டுவதா என்பதில் மட்டும்தானே நம் கவலை! எமது பண்பாட்டுச் சிறப்பு என்று புல்லரித்துப் புளகப்பட்டு, இறைவன் கோயில் எல்லாம் ஏறி இறங்கி, பிரசாதம் வாங்கி நக்குவது அன்றி நாம் கொன்ற முள்மரம் எத்தனை? ஊழல் மலிந்த அத்தனை அரசியல்காரர்களும், அதிகாரிகளும், வணிகரும், நீதிமான்களும், ஊடகக்காரரும், திரைத்தொழில் புரிபவரும், கல்விக்காரரும், மருத்துவக்காரரும் இன்று முள்மரங்களாக, பெருவிருட்சங்களாக மாறிச் சமூக நலன்களைத் தின்று வேரோடிச் செழிக்கவில்லையா? அவர்களுக்குச் சொறிந்து கொடுப்பதுதான் நமது சமூகப் பொறுப்பா? இறைப் பணியா? பண்பாட்டுக் காவலா? அறங்களின் மாட்சியா?

தில்லியில் நுழைந்ததுமே யமுனை செத்துவிட்டது என்றார்கள். யமுனை மட்டுமல்ல, எந்த நதி இன்று துய்ய நதி? நதி எனும் சொல் எங்கள் வடமொழி, இல்லவே இல்லை எங்கள் தமிழ்மொழி எனும் தர்க்கத்தால் நதிகள் வாழ்ந்துவிடுமா? சாக்கடைக் கழிவுநீர்ப் பெருக்கத்தின் காவலுக்கா நமது பாடல்பெற்ற திருத்தலங்களும் உலகம் பயந்த, உலகளந்த, உலகம் காத்த திருமேனிகளும்?

எங்காவது போயிருந்து, காட்டு மரத்தின் தூரில் சாய்ந்து, நெஞ்சில் அடித்து அழலாம் என்று தோன்றுகிறது, நமது ஆறுகளை நினைத்து! செத்தவர்க்கு அழுவதன்றி வேறென்ன செய்ய இயலும்?

தேரேகால் மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன?

என்றாலும் சுமார் அறுபதடி அகலமும் பத்து கிலோமீட்டர் நீளமும் இருக்கும் அந்த ஆற்றில் இன்று அல்லியும் வெள்ளாம்பலும் செவ்வாம்பலும் மலர்கின்றன. மூன்றுமே ஒன்றுதான் எனச் சாதிக்கும் தமிழ்ப் பேராசிரியப் பெருங்குடி அறிந்திருக்க வாய்ப்பில்லை. கெண்டையும், கெளுத்தியும், ஆராங்கும், விலாங்கும், உலுவையும், தேளியும், அயிரையும், திலேபியாவும், ஆமைகளும், தவளைகளும், நீர்ப்பாம்புகளும் நீந்துகின்றன. கரையோர மரங்களில் செண்பகமும், மைனாவும், குயிலும், கொக்கும், தாரையும், கிளியும், காகமும், வால் நீண்ட கரிக்குருவியும், சாம்பல் குருவியும், சிட்டுக்குருவியும், ஆந்தையும், கூகையும், தேன் சிட்டும் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரித்து வாழ்கின்றன. மீன்கொத்திகள் இரை தேடுகின்றன. பஞ்சவர்ணங்கள் பாய்கின்றன.

ஆற்றிலும் கரைகளிலுமாய் எண்ணற்ற தாவரச் சிற்றினங்கள் வளர்ந்து தழைத்துப் பெருக்கின்றன. ஆற்றின் திட்டுக்களிலும் கரைகளிலும் வல்லாரை, கொடுப்பை, கையாந்தகரை, ஆலங்கீரைகள் வளர்கின்றன. மரங்கள் என ஆல், அத்தி, புன்னை, இலுப்பை, வேம்பு, புங்கு, மஞ்சணத்தி, வாகை, பூவரசு, நாவல், தென்னை, பனை, கடுக்காய் வளர்கின்றன. புதர்களாய்த் தாழை, அழிசு, நொச்சி, காரை வளர்கின்றன. எப்போதாவது சவளக்காரர்கள் வந்து வலைவீசி மீன் பிடிக்கின்றார். இன்னும் மீன் வலையில் சிக்கித் துடிக்கும் மீன்களைச் சிறார் வேடிக்கை பார்க்கின்றனர். எத்துக்குத்தாய்  சிக்கிக்கொண்ட தண்ணீர்ப் பாம்பை அஞ்சி விலகுகின்றனர்.

வடக்குமலையில் கனத்த மழை பெய்யும்போது, பழையாறு உடைத்து, புரவுப் பத்துக்களில் கடல்போல் அலையடித்துப் பெருகிவரும் செம்மண் கலங்கிய பெருவெள்ளம் தேரேகால் கரையையும், கண்டமூட்டிலோ, விதைப்பண்ணை எதிரிலோ, திருப்பதிசாரம் தாண்டியோ இன்னும் உடைத்துப் பாய்கிறது.

ஊருக்குப்போனால் எனது ஆறு வயது, நான்கு வயதுப் பேரன்கள் ஆற்றுக்குக் குளிக்கப்போகிறார்கள், எனது தங்கைகளுடன் அல்லது தம்பிகளுடன். மீன் பிடிக்க வேண்டும் என்கிறார்கள். ‘தாத்தா, நம்மூரு ஆத்துல ஸ்வேண்ட் ஃபிஷ் இருக்கா?’ என்கிறான், ஒருவன்.

இன்னும் அவர்கள் பெருவெள்ளம் பார்த்ததில்லை. அவர்களுக்கு நீச்சல் சொல்லித் தருகிறேன் என்று என் வக்கீல் தம்பி, அவர்களுக்கு ‘டாடி தாத்தா’, சொல்லி வைத்திருக்கிறான்.

இறச்சகுளம், திருப்பதிகாசம், தாழக்குடி சாலைகளில் பழையாறும் தேரேகாலும் உடைந்தால் சின்னாட்கள் தீவுபோல் கிடந்திருக்கிறது எம்மூர்.

இன்று பெரும்பாலோர் ஆற்றில் குளிப்பதில்லை. ஆற்று நீர் பருகுவதில்லை. குடிநீருக்கும் மாட்டுத் தொட்டிக்கும் குடம்குடமாய்ச் சுமப்பதில்லை. மாடு இருந்தால் அல்லவா மாடு குளிப்பாட்டுவது? துவைப்பதற்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆற்றங்கரை, ஓடைக்கரை வளரும் கீரைகளை எவரும் ஆய்ந்து வந்து துவரன் வைப்பதாகவும் தெரியவில்லை. காரட் – பீன்ஸ் துவரன் எளிதாகிவிட்டது.

அன்று நீச்சல் தெரியாத கிராமத்து மனிதர் இல்லை. இனி நீச்சல், குளங்களில் போய்ப் பழகவேண்டியது வரும். காலம் என்பது கறங்குபோல் சுழன்று, மேலது கீழாய், கீழது மேலாய் ஆக்கிவிடுகிறது.

அவரவர் தலையிலும் மானுடத்தின் விதி!

***

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page