நம்ம வீட்டு கைப்புள்ள-ஹாப்பி பர்த்டே வடிவேலு-கணேசகுமாரன்

நகர்வு

தமிழில் சில சொற்கள் உண்டு. அதில் ஒன்று ‘வரும்'. இச்சொல்லின் எதிர்ப்பதம் ‘வராது’. தமிழகம் தனக்கான அர்த்தத்துடன் இச்சொற்களைக் கையாண்டு கொண்டிருந்த போதுதான் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு இவ்விரு சொற்களுக்கும் புது அர்த்தம் வழங்கினார். அதுமுதல் அத்தனை மக்களும் அவரின் விளக்கத்தையே பின்பற்றத் தொடங்கினர். ஆசிரியர், ‘இந்த முறையாவது உனக்கு பாஸ்மார்க் வருமாடா' என்றால் ‘வரும்… ஆனா வராது’ என்றான் குசும்பு பிடித்த மாணவன். ‘இந்த மாசமாவது சம்பளம் முழுசா வீட்டுக்கு வருமா?' என்று கேட்கும் மனைவியிடம் ‘வரும்…ஆனா வராது’ என்றான் போதைப் புன்னகையுடன் புருசன். ‘எப்பதான் தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் வரும்' என்று எந்த அரசியல்வாதியிடம் கேட்டாலும், ‘வரும்… ஆனா வராது’ என்றார்கள் ஒட்டுமொத்தமாய் ஒரே குரலில்.

வடிவேலு. தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஓர் நகைச்சுவை நடிகர். இப்போது அவருக்கான அடைமொழி போல் வைகைப் புயலென தமிழ் சினிமாவில் நுழைந்தவரல்ல அவர். ‘என் ராசாவின் மனசிலே' என்ற அறிமுகப் படத்தில் ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாட்டுக்கு ஆடிய வேட்டி கட்டிய கறுப்பான ஒல்லியான வெள்ளந்தி கிராமத்து மனிதன்தான் பின்னாளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சிரிப்பு அடைமொழியானார்.

மேல் உதடினையும் கீழ் உதடினையும் இணைத்து இறுக்கமாக்கி வாயை அகலமாக்கி அழும் அல்லது சிரிக்கும் வடிவேலுவின் உடல்மொழிதான் குழந்தைகளின் ஆதர்சம். என் நண்பரின் நான்கு வயது மகளுக்கு வடிவேலுவின் காமெடிக் காட்சிகள் என்றால் உணவு உறக்கம் தேவையில்லை. தன் தந்தையை நோக்கி ஒற்றை விரல் உயர்த்தி செல்லமாக மிரட்டும் மழலையின் ‘கொண்ட இருக்கும் மண்ட இருக்காது' போக்கிரி திரைப்படத்தில் வடிவேலுவுக்கென உபயோகப்படுத்தப்பட்ட வசனம். ‘முடியல’ என்பதும் ‘இப்பவே கண்ண கட்டுதே’ என்பதெல்லாம் அன்றாடம் மக்கள் உபயோகப்படுத்தும் பதற்ற வார்த்தைகள். ஆனால் இவை நகைச்சுவைச் சொற்களானது வடிவேலு வரவுக்குப் பின்புதான்.

முதல் படத்துக்குப் பிறகு அவருக்கென தனி அடையாளம் தந்தது கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலன் திரைப்படம். கறுப்புக்கு மேலும் கறுப்பு பூசி ஒட்டடைக்குச்சி உடம்பில் மிகத் தளர்வான சட்டையும் டவுசரும் அணிந்து தலைமுடியை வானம் பார்க்க நிமிர்த்தி வைத்துக்கொண்டு நடிகை குஷ்புவைப் பார்த்து ‘ஓ... சட்டே மேல எவ்ளோ பட்டன்' என்று ஆச்சர்யக் குரல் எழுப்பிய வடிவேலு தனிக் கவனம் பெற்றார். கமல்ஹாசனின் தேவர் மகன் படத்தில் வடிவேலு ஏற்ற இசக்கி கதாபாத்திரம் அவரின் நகைச்சுவைப் பயணத்தில் ஒரு கதாபாத்திர கெளரவம். ‘திங்கிற கைல கழுவணும்… கழுவுற கைல திங்கணும்’ என்னும் இசக்கி நமக்கு சிரிப்பினை உண்டாக்கவில்லை. வடிவேலுவுக்கும் வலி உண்டு.

தமிழ் சினிமாவின் மற்றொரு வெற்றிகர நகைச்சுவை நடிகரான அமரர் விவேக்குடன் இணைந்து நடித்த ‘மனதைத் திருடிவிட்டாய்' படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் ‘sing in the rain’ ராக ஆலாபனை கேட்டு தியேட்டரில் பெய்தது சிரிப்பு மழை. பொதுவான நகைச்சுவை நடிகர்களின் முகத்தில் தெரியும் மெல்லிய சோகம் (சாப்ளின் தொடங்கி நாகேஷ் வரை) வடிவேலுவின் முகத்திலும் தொடர்கிறது. இவர் காலத்துக்கு முந்தைய காமெடி நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரின் முகத்திலும் இந்தக் குறிப்பிடத்தக்க உணர்வு கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. வடிவேலு சிரித்தாலும் அந்த சோகம் இருப்பதே அவரால் மிகச் சிறந்த நகைச்சுவை வெளிப்படுத்தும் மனமொழி அறிந்திருக்க முடிகிறது. இதுவே இசக்கி கதாபாத்திரத்தின் வெற்றியாகக் கொள்ள முடியும்.

நவரசங்களில் மிகக் கடினமானது நகைச்சுவை உணர்வினை வெளிப்படுத்தும் கலை. ஆயிரம் கவலைகளுடன் திரையரங்குகளுக்கு வரும் மக்களைக் கவலை மறந்து சிரிக்க வைப்பது என்பது எளிதல்ல. அதை வெற்றிகரமாகத் திரையில் நிகழ்த்திக் காட்டிய வடிவேலு தமிழ் சினிமாவின் பதிவு செய்யப்பட்ட தவிர்க்க முடியாத சிரிப்புக் குரல். தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான் என்பது எவருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ வடிவேலுவுக்கு அச்சு அசலாய்ப் பொருந்தும்.

பிற மனிதர்களின் வலி குறித்துச் சிரிக்க நாம் என்று கற்றுக்கொண்டோம். யாரோ முகம் அறியாத ஒருவர் வாழைப்பழத்தோலில் கால் வைத்து வழுக்கி விழுந்தால் எதற்கு நமக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. இதே சம்பவம் நமக்கு நிகழ்ந்தால் அதை வெளியே சொல்ல எதற்குக் கூச்சப்படுகிறோம். அந்த நிகழ்வில் வீர சாகசம் எதுவுமில்லை. ஆனால், வடிவேலு செய்தது இதுபோன்ற வாழைப்பழத்தோல் வீரன் வழுக்கிய கதையை அம்பலமாக்கியதுதான். ‘அடி குடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்னா அடி வாங்கினவன் உயிரோடவா இருப்பான்’ என்று ஒருவர் பேசிச் செல்லும்போது குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் வடிவேலுவைப் பார்த்து ஏன் அப்படிச் சிரிக்கிறோம். அடிப்படையில் நாம் நம்மை கேலி செய்துகொள்வதை விரும்புவதில்லை. ஆனால், பிறருக்கு அவ்வாறு நேரும்போது அதைக் கைக்கொட்டி ரசிக்கவே செய்கிறோம். இதைத்தான் வடிவேலு திரையில் செய்தார். அங்கும் அடிபடுபவராகவே நம்மை வெளிப்படுத்தினார்.

‘நம்மையும் இந்த ஊர் இன்னும் நம்பிக்கிட்டா இருக்கு?’ என்று அவரே அவரைப்பற்றிச் சொன்ன வசனம் எல்லோருக்குமானது. இந்த வசனம்தான் பொதுவாய் பலர் மனதிலும் ஊறிக்கிடக்கும் ஒன்று. எவரும் இங்கே ஜோக்கராவதை விரும்பவில்லை. நாயக பிம்பம் குறித்த அபிலாஷையில் நாம் அனைவருமே ஜோக்கர்கள்தான் என்பதை மறந்துவிடுகிறோம். வடிவேலு ஞாபகப்படுத்துகிறார்.

வடிவேலுவின் சினிமா விலகலுக்கு சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று அவரின் அரசியல் பிரவேசம். ‘இந்த கொரங்கு பொம்ம என்ன வெல?' ‘அது கண்ணாடி சார்’. முகம் பார்த்துக்கொள்ள வேண்டிய அரசியலில் முகம் மாற்றி அசல் கலைஞன் அங்கே சென்றது கால விபத்து. ஆனால், அதனாலெல்லாம் எதுவும் மாறிவிடவில்லை. இன்றும் தொலைக்காட்சி காமெடி காட்சிகள் வழியாகவும் தொலைக்காட்சியில் போடப்படும் பெரும்பாலான சினிமாக்களில் இடம்பெறும் வடிவேலுவின் நகைச்சுவை வழியாகவும் எதுவும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறார் வடிவேல்.

ரீ என்ட்ரியாய் அமைந்த சில படங்களில் பழைய வடிவேலுவைக் காண முடியாமல் தள்ளி வைத்தது தமிழ் சினிமா ரசிக சமூகம். இயக்குநர் மாரி செல்வராஜ் பார்வையில் மாமன்னனின் வடிவேலுவின் இன்னொரு முகம் காட்டப்பட்டது. 100 சதவீத திருப்தி இல்லையென்றாலும் ரசிகன் இந்த வடிவேலுவையும் ரசிக்கத்தான் செய்தான். ‘எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்ட கேட்கும்' என்று தொடங்கிய வடிவேலுவின் சிரிப்பு ராஜ்ஜியம் ‘தந்தான தானா…’ என்று எட்டுக் கட்டையில் எட்டூரையும் தாண்டி கேட்டது. இன்றைய நகைச்சுவையில் இன்னும் வடிவேலு மாமன்னன்தான்.

தனி மனிதனோ, சமூக அமைப்போ சிந்திக்க வேண்டிய ஒன்றை தன் எளிய வசனத்தில் போகிறபோக்கில் சொல்லிச் சென்றவர்தான் வடிவேலு. `நீ புடுங்குறதெல்லாம் தேவையில்லாத ஆணிதான்’ நாம் என்றாவது உணர்ந்திருக்கிறோமா அதை.

காலத்தின் கலைஞன் வடிவேலுவுக்கு நகர்வு இணையதளம் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page