ஒரு தாமிரபரணி தருணத்தின் பிரவாகம் – கலாப்ரியாவின் கவி உலகம் – சா. தேவதாஸ்

நகர்வு

கலாப்ரியாவின் கவிதைகள் பெரிதும் கருத்துத்தளத்தில் சொல்லப்படுவதில்லை. அவர் கருத்துகளை முன்வைப்பதற்காக எழுதுவதில்லை. பிரச்சனைகளை விவரிப்பதுமில்லை. சூக்கும தளத்தில் தத்துவப்படுத்துவதும் இல்லை. மாறாக ஒரு நிகழ்வுப்போக்காக இயங்கும். வேதியியல் மாற்றம் நிகழும். இருதய நெகிழ்ச்சி மிகுந்திருக்கும். புலன்களெல்லாம் விழிப்புற்றுப் பங்கேற்கும். இப்போது ஓர் உருவங்கொண்டுவிடும் கவிஞரின் அகம், கவிதைப் பிரவாகமாகும், உரைநடை மலர்ச்சியாகும், சுவையான உரையாடலாகும்.

ஜான் சுந்தரின் கவிதைகளைப் பற்றிப் பேசுகையில் கலைஞனின் பார்வை பற்றி இப்படி கோடிட்டுக் காட்டுகிறார்.

“எந்தக் கலைஞனையும் போலவே ஜான் சுந்தரின் ஆரம்ப வாழ்க்கையும், வலியைத் தருகிற வாழ்க்கை. கலைஞனுக்கு ஒரு பார்வையைத் தரும். அது பார்ப்பதையெல்லாம் படைப்பின் மகத்துவத்தோடும், படைப்பின் முரண்களோடும் பார்க்கும். மகத்துவத்தை வியந்தும் முரண்களை உணர்ந்தும் பார்க்கும். கலைமனம் மகத்துவ மலரை முரண் நாரில் கோர்க்கும். அல்லது அந்தச் செடியிலேயே வண்ணத்துப் பூச்சிக்காய் வாடவிட்டுக் காவல் காக்கும். இந்தப் பார்வை வாய்த்தவருக்கு வார்த்தை வாய்க்கும். தேர்ந்தெடுத்த புதுப்புது வார்த்தைக் காட்டங்கள் மூளைக்குள் வடம் பிடிக்கும். அப்போது அவனது மொழியே மைதுன மகிழ்ச்சி கொள்ளும், தன் கொழிப்பைப் பார்த்து, செழிப்பை பார்த்து.”

ஓர் அணைக்கட்டு வேலை நடக்கும்போது இறந்துபோன தொழிலாளர்கள், பொறியாளர்கள் பெயரை கல்லில் பொறித்துக் கொண்டிருக்கையில், இறந்துவிட்ட ஒருவரின் மகன், பிழைப்புக்காக பாத்திரங்களில் பெயர் வெட்டுகிறார். அதுவும் பிழைப்பை நடத்தத் துணை நிற்கவில்லை. வேலை செய்யும் ஓரிடத்தில் பணம் வாங்கிக் கொண்டு வடக்கே போய்விடுகிறார். இவரைச் சிறுபிராயத்தில் பார்த்த அனுபவத்தை உரைநடையில் பதிவு செய்யும் கலாப்ரியா, இறுதியில் கவிதையாக்குகிறார். கலைஞனின் பார்வை பற்றி மேலே அவர் குறிப்பிட்டிருந்தது, இக்கவிதையில் படிந்துள்ளது:

பொதுப்புத்தி

பொதுப்புத்திகாரனாய்
ஞாபக மறதியுடன்
போராடிக் கொண்டிருந்தேன்
பித்தளைப் பாத்திரத்தில்
பெயர் பொறிக்க வந்த
போது பழக்கம்
வீட்டின் பெயரை
கல் வில்லையில்
செதுக்கித் தந்து
காசு வாங்கிய கையோடு
வேற்றூர் சென்றுவிட்டவன்
பெயர் என்ன
அணை கட்டும்போது
இறந்த தொழிலாளர்களின்
அனைத்துப் பெயர்களையும்
பொறிக்க ஆரம்பித்த
அவன் தந்தையே காலமாக
முடித்துக் கொடுத்தவன் அவனாம்
பசுவலி கண்டு அரற்ற
வெளியேறும் பணிக்குடத்துள்
தெரியும் கன்றின் தலைபோல
கல்லுக்குள் அசாதாரணமான சிலை
காணும் சிறப்புப் புத்திகாரன் தான்
துலங்கி வந்து கொண்டிருக்கும்
சிலைகள் ஏனோ கடைசியில்
கொருவாய் விழுந்து வீணாகிப்போகுமென
நொம்பலப்பட்டுச் சொல்லிக்
கொண்டிருந்தான்.
எந்தச் ‘சிற்பியின் நரகத்’தில்
எந்த மொழிக்காரர்களுக்காய்
என்ன வடித்துக் கொண்டிருக்கிறானோ
எழுதப் படிக்கத் தெரியாத அவன்.
(நினைவின் தாழ்வாரங்கள், பக். 194-5)

இந்தத் தொகுப்பில் ஒரு நிகழ்வுப் போக்காக ஒரு கவிதை:

தாமரைப் பூக்களை
வேடிக்கை பார்த்தபடி
இக்கரையில் நிற்கிறேன்
அதன் இலைகளில் காலடி
பதித்து குளத்தின்
அக்கரை சென்றுவிட்டது
கவிதை.

புத்தரின் புன்னகை புரியும் பொலிவான முகம் ஓர் ஆன்மீகக் கனிவாகத் தோன்றும். கலாப்ரியாவுக்கோ அது ஆடு மேய்ப்பவனிடமிருந்து கடன் பெற்றதாக இருக்கிறது.

புத்தன்
தடாக நடுவின்
தாமரையைப் பார்க்கிறான்
சிறுமுறுவலுடன்
பாய்ந்து நீந்திப்
பறித்து வந்து நீட்டுகிறான்
ஆடு மேய்க்கும் சிறுவன்
புதிய முறுவலுடன்
அவனிடம் அன்று
கடன் வாங்கியதுதான்
இன்று புத்தனிடம்
நாம் காணும்
இன் முறுவல்.

புத்தரைப் பொறுத்து ஆன்மீகக் கனவு என்பது சரியாகவே இருக்கக்கூடும். ஆனால் அது ஆடு மேய்ப்பவனுக்கும் சாத்தியமே என்பது கலாப்ரியாவின் பார்வை. ஏனெனில் இது, அறிவாற்றல், தத்துவ தேர்ச்சி சார்ந்தது அல்ல. இதயத்தின் கனிவையும் நெகிழ்ச்சியையும் சார்ந்தது.
இதன் இன்னொரு பக்கத்தை விவரிப்பது போல வேறொரு கவிதை:

குழந்தை தாய் என ஒவ்வொருவராய்
அரவணைத்து
உறக்கம்
என் அருகே நெருங்கும்
முன்னிரவு நொடி
தெருவாசல் கதவைச் சாத்தியவன்
தலையில் விழுந்த
பவள மல்லியை
எடுத்து வந்து
பால் இருளில் தெரியும்
சலவைக் கல்
புத்தர் சிலையின்
அருகில் வைத்துவிட்டுப்
படுக்கிறேன்
விழிக்கிறது
வீடு பூராவும் மணம்.
(தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி, பக் 24)

இந்தப் பார்வை கள்ளமற்ற குழந்தையின் வியப்பாக தவிப்பாக மாறுகிறது.

தொடுவானில்
கண்முட்டும் இடத்தில்
துவங்குகிறது
தண்டவாளமும் வானவில்லும்
ரயிலுக்கு காத்திருக்கும்
குழந்தையொன்று சொல்கிறது
அப்பா ரயில் வானவில்லில்
ஏறிப் போய்விட்டால்
என்ன செய்யறது?
(தண்ணீர் சிறகுகள், பக் 67)

குரு – சீடன் உறவு நிலை பற்றி இத்தொகுப்பிலுள்ள நான்கு கவிதைகள் தனித்துவமானவை. குருதான் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டியவராயிருக்கிறார். அதுவும் தன் சீடர்களிடமிருந்து. நையாண்டியுடன் இந்த உறவுநிலை பதிவாகின்றது. இதில் முத்தாய்ப்பாக பகடியுடன் உள்ள கவிதை:

சீக்கிரம் சித்தி அடையுங்கள்
குருவே
இலையுதிர்காலம் தொடங்குகிறது
வெயிலும் இந்த வருடம் அதிகமாம்
எச்சரிக்கின்றன பறவைகள்.

குரு – சீடன் உறவு நிலையைப் பற்றி பேசுகையில், ஏகலைவனை முன்வைத்து ஒரு முரண்சித்திரம் உருக்கொண்டுவிடுகிறது:

கட்டைவிரல்
காணிக்கை கொடுத்தபின்
ஏகலைவன் வைத்த
துரோணன் சிலை
முன்
காட்டுப் பன்றிகள்
காட்டம் காட்டமாய்ப் பெருகுகின்றன.

இதற்கு முன்னரும் ஏகலைவ சித்திரம் கலாப்ரியாவிடம் உருப்பெற்றது. ‘ஏகலைவ விரல்கள்’ (தண்ணீர் சிறகுகள்) என்ற தலைப்பில் இழப்பின் வலி விதவிதமாய் பதிவாயிருக்கும்:

புள்ளிகள் வைத்த பின்
விரல்களறிந்து கொள்ளும்
வாசல் கோலத்தின் வடிவத்தை
யாழோ குழலோ தோலோ
பழகிய விரல்களறியும்
சுரபேதம்
கணினி விசைப்பலகையின்
அழிந்த எழுத்துக்களை
அரசு அலுவலகத்தின்
அறிந்த விரல்கள் அறியும்
நடந்து களைத்த
பாதம் நீவி கால் விரல்
நகம் திருத்தும்
கைவிரல்கள்
கொய்யும் கொடுக்கும்
குழந்தைக்குச் சோறூட்டும்
கைகுலுக்கும்
கண்ணீர் துடைக்கும்
கயிற்றில் சுருக்கிடும்
கட்டைவிரல் அறுத்து
காணிக்கை தரும்
எழுதும் தீட்டும் எய்யும்
எண்ணும்
ஏகலைவனுக்கு மட்டும்
ஒன்று குறைவாய்.

மனிதர் சார்ந்தும் உயிரினங்கள் சார்ந்தும் இயங்கிய கலைஞனின் பார்வை, ஓர் உலகியல் பொருள் வரை எட்டுகிறது, அதே தீவிரத்துடனும் நுட்பத்துடனும்.

ஆற்றின்
தொடர் பாடலைக்
கேட்டுக் கொண்டிருக்கிறது
ஒரு மருத நில
உரிப்பொருள் போல
படித்துறையில்
யாரோ
மறந்து வைத்த
யாரும் எடுத்துப் போகாத
சோப்பு டப்பா.
(தண்ணீர் சிறகுகள், பக் 56)

கலாப்ரியாவின் பார்வை விளிம்பு நிலையை அலாவியே சென்று கொண்டிருக்கிறது. தட்டில் பிச்சை கேட்கும் கழைக்கூத்தாடிப் பெண்ணுக்கு பறவையொன்று பரிசளித்துப் போவதாக ஒரு படிமம்.

கழைக் கூத்தாடிய
பெண்
ஏந்தி வரும் தட்டில்
சிறகுதிர்த்துப் போகிறது
பறவையொன்று.
உடனே இன்னொரு காட்சி:
குழந்தை
வரைந்தது
பறவைகள் மட்டுமே
வானம்
தானாக உருவானது.
(தண்ணீர் சிறகுகள், பக் 43)

கணியன் பூங்குன்றனின் சங்க காலப் பாடலை முரண்நிலையில் வைத்துப் பார்க்கிறது ஒரு கவிதை. எளிமையான விவரிப்பில் சிரிக்கவும் வைக்கிறது, அதிரவும் வைக்கிறது.

ஏதோ ஒரு ஊரில்
நின்றது பேருந்து
அருகில் அதுவரை
வாளாது இருந்தவன்
இறங்கிப் போனான்
நான் தான் கணியன் பூங்குன்றன்
இதுவும் என் ஊரல்ல
என்றபடி…

அலாதியான மன நிலை ஒரு கவிதையில். தாயின் ஈமக்கிரியையின் போது உணரும் குளிர்மை, தான் தாயின் கருப்பைக்குள் இருக்கும்போதும் இருந்திருக்கும் என்று வியக்கவைக்கிறது.

அம்மாவை எரித்து
சிகை மழித்து
ஆற்றில் மூழ்குகையில்
வெறும் தலையில்
மார்பின் குளிர்ச்சியுணர்ந்த
தாமிரபரணித் தருணம்
கருப்பைக்குள்ளும்
இப்படித்தானோ
என்று வந்த நினைப்பு
இன்று அதிகாலையிலும்.
(தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி, பக் 59)

கலாப்ரியாவின் கவி உலகை திறக்கையில் ஒரு சீனக்கவிதை நினைவுக்கு வந்தது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக்கவிஞர் வாங்சேய் எழுதியது. சதா மலைகள் காடுகள் நதிகள் என கானகத் தனிமையில் திரிந்து வந்தவர். அவரின் ஒரு கவிதை.

யாரும் காணப்படவில்லை இம்மலையில்
குரல்கள் மட்டுமே தொலைவில் கேட்கின்றன
மேற்கின் வெளிச்சம் பரவுகிறது கிளைகளினூடே
பசுமையாய் தான் ஒளிரும் புல்மீது பரவுகிறது.

இத்தமிழ் வடிவம் ஆக்டேவியோ பாஸின் ஆங்கில மொழியாக்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 19 மொழிபெயர்ப்புகள் இக்கவிதைக்கு வந்துள்ளன. ஏன்?

1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது இக்கவிதை. இங்கே இந்த இயற்கை நிகழ்வை உணர்வதாக யாருமில்லை. உடனடியானதும் உலகளாவியதுமான அனுபவம் தொடர்புறுத்தப்படுகிறது. தனிமையைச் சொன்னாலும், குரல்கள் கேட்பதால் உயிர்வாழ்வின் இருப்பு இருக்கின்றது. வேர்ட்ஸ்வொர்த் போன்ற இயற்கைக் கவிஞர்கள் இயற்கைக் காட்சியால் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பதிவு செய்வதாக இல்லை இக்கவிதை. இயற்கை தாண்டியும் மனிதம் தாண்டியதுமான பேரெழுச்சி உணர்த்தப்படுகிறது. மாலை வேளை சூரிய ஒளி பௌத்தம் சொல்லும் அமிதவ புத்தரின் தரிசனத்தைக் குறிப்பிட்டு, satori போன்றதான தன்னெழுச்சியான விடுதலையுணர்வை, விழிப்புணர்வை உணர்த்துவது என்று இதனை விளக்குகிறார் ஆக்டேவியோ பாஸ்.

இங்கேயும் கருத்தில்லை, பிரச்சனையில்லை, தத்துவபடுத்தல் இல்லை, ஒரு நிகழ்வுப்போக்கு இயல்பானதாக இயற்கை நிகழ்வு, விடுதலையுணர்வினை வழங்கும் அதிசயமாகிறது.

‘பேனாவுக்குள் அலையாடும் கடல்’ வாய்க்கும்போது அதிசயம் இயல்பாகும். தாமிரபரணித் தருணம் குளிர்மையினைத் தந்து கொண்டே பிரவாகமாகிவிடும்…

சா. தேவதாஸ்

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page