பண்டன்று பட்டினம் காப்பு!

நகர்வு

Pattinathaar

பண்டன்று பட்டினம் காப்பு! 

-நாஞ்சில் நாடன்

நான்கு தமிழ்ச் சொற்கள் கொண்டது, இந்தக் கட்டுரைத் தலைப்பு. பண்டு, அன்று, பட்டினம், காப்பு என்பன அவை. பண்டு எனில் பழமை எனப் பொருள். பண்டு, பண்டை, பண்டைய எனில் முன்பு, முற்காலத்தில் எனப்படும். முன்பு ஒரு கட்டுரையில், யாம் மேற்கோள் காட்டிய மதுரகவி ஆழ்வாரின் பாடல் வரி, ‘பண்டை வல்வினை பாற்றி அருளினான்’ என்பது பழமையான, கணக்கில் காலங்காலமாகச் சேர்ந்திருக்கின்ற தீவினைகளை நீக்கி அருளினான் என்று பொருள் வரும். ‘நாணுத் துறவுரைத்தல்’ அதிகாரத்துத் திருக்குறள்,

‘நாணொடு நல்லாண்மை பண்டுடையேன், இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்’

என்கிறது. ‘நல்ல ஆண்மையையும் நாணம் எனும் நற்குணமும் முன்பே பெற்றிருந்தேன். இன்றோ, என்னிடம் காமுற்றோர் ஏறும் மடல் மட்டுமே உள்ளது’ என்பது குறளின் பொருள். மடலேறுதல் பற்றிப் பேசப் புகுந்தால் இந்தக் கட்டுரையின் வரம்பு அகன்றுவிடும்.

மலையாளத்தில், ‘பண்டைக்குப் பண்டே’ என்றொரு சொல்லாடல் உண்டு. முன்னைக்கும் முன்னே என்ற பொருளில். பண்டொரு காலத்தில் என்றால், முன்னொரு காலத்தில் என்பது பொருள்.

பதினைந்தாவது திருப்பாவையில் ஆண்டாள், ‘வல்லையுன் கட்டுரைகள், பண்டேயுன் வாயறிதும்’ என்பாள். ‘கட்டுக்கதைகள் சொல்வதில் நீ மிகவும் திறமைசாலி. முன்பே உன் வாய் சாமர்த்தியம் அறிவோம்’ என்பது பொருள். ஆகக் கட்டுரை எனும் சொல்லுக்கு, கட்டிச் சமைக்கப்படும் உரை என்றும் பொருள் இருந்திருக்கிறது.

மாணிக்கவாசகர், திருவாசகத்தின் ‘குழைத்த பத்து’ பகுதியில், ‘பண்டைக் கொடுவினை நோய்’ என்கிறார். ‘யாத்திரைப் பத்து’ பகுதியில், ‘பண்டைத் தொண்டரொடும்’ என்கிறார். ‘திருப்படை ஆட்சி’ பகுதியில், ‘பண்டறியாத பர அனுபவங்கள்’ என்கிறார். சங்க இலக்கியங்கள், பழமை அல்லது முன்பு எனும் பொருள்களில், பண்டு, பண்டை, பண்டைய, பண்டையின் எனும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளன.

அன்று எனும் சொல்லுக்கு அன்றைய தினம் என்றும், அல்ல என்றும் பொருள். இங்கு அன்று என்ற சொல், அல்ல எனும் பொருளில் பயன்படுகிறது. அன்றன்று என்றால் அன்றாடம், தினம்தினமும், From day to day என்று பொருள். நன்றன்று என்றால் நல்லது அல்ல என்று பொருள். அன்றன்று என்றால் இல்லவே இல்லை என்றும் பொருள். ‘நீ அன்று அவன்’ என்றால், ‘நீ இல்லை அவன்’ என்று பொருள். அதாவது, இங்கு அன்று என்பதற்கு மாறுபாடு, Different என்பது அர்த்தம். செய்யுளில் அன்று, அன்றே, அன்றோ என்பன அசைச் சொற்களாகவும் பயன்படும். ‘புரந்தரனார் பெருந்தவமாய்ப் போயிற்று அன்றே!’ என்பான் கம்பன், மண்டோதரி கூற்றாக.

பட்டினம் எனும் சொல், தமிழர் அறியாததல்ல. சேரன் தம்பி இசைத்த சிலம்பின் காவிரிப்பூம்பட்டினம் அறிவோம். கடியப்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், சீரங்கப்பட்டினம், மசூலிப்பட்டினம் என்பன நாம் அறிந்த ஊர்ப்பெயர்கள். ஏன், சென்னைப்பட்டினத்தை மறந்திடப் போமோ? தமிழக ஊழலின் தலைமைப்பீடம் அல்லவா?

பட்டினம் எனும் சொல்லுக்குப் பேரகராதி நான்கு பொருள் தருகிறது. 1. நெய்தல் நிலத்து ஊர், Maritime Town. சிறுபாணாற்றுப்படை, ‘பனி நீர்ப் படுவின் பட்டினம்’ என்கிறது. குளிர்ந்த நீர்க் குளங்களை உடைய பட்டினம் என்று பொருள். நெய்தல் நில வர்ணனை பேசும் பாடல் வரி அது. 2. காவிரிப்பூம்பட்டினம். பட்டினப்பாலை, காவிரிப்பூம்பட்டினம் குறித்துப் பேசும்போது, ‘புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம்’ என்கிறது. மாக்கள் என்றால் மக்கள், முட்டா என்றால் குறையாத என்று பொருள். சிலப்பதிகாரம், ‘பாடல் சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்’ என்கிறது. 3. ஊர், Small Town. பட்டினச்சேரி எனும் சொல்லுக்கு Hamlet of Fishermen, நுழையர் வாழிடம் என்று பொருள் தருகிறது. பட்டினவன் எனும் சொல்லுக்கு பரவ இனத்தவன் என்கிறது. அதாவது பரதவன். 4. சரீரம், Body.

பட்டணம் என்றாலும் அது பட்டினமே. பட்டணம் எனும் சொல், கடற்கரை ஊர், நகரம், சென்னப் பட்டணம் எனும் பொருள் குறித்தன. பட்டணவாசி என்றால் நகரவாசி. பட்டணப் பிரவேசம் என்றொரு சொல்லாடல் அறிவோம். சிறப்பாகப் பக்குவம் செய்யப்பட்டு, சென்னையில் விற்கப்பட்ட பாக்கு, பட்டணம் பாக்கு எனப்பட்டது. மூக்குப்பொடியில் ஒருவகையை, பட்டணம் பொடி என்றனர். முகத்தல் அளவு ஒன்றைப் பட்டணம் படி என்றோம். பட்டினத்தார் அல்லது பட்டினத்துப் பிள்ளை எனப்பட்ட ஞானியைப் பலரும் பட்டணத்தார் என்கிறார்கள். அது தவறு என்கிறார் திரு.வி.க. காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த அவர் இயற்பெயர் திருவெண்காடர். பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவர். இவரது ஐந்து நூல்கள் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது யாவும் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனைய பிரபந்தங்கள் அனைத்தும் தொகுக்கப்பெற்று ‘பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடல் திரட்டு’ எனும் பெயரில் வழங்கப்பட்டு வருகின்றன.

நமது வரிசையில் நான்காவது சொல் ‘காப்பு’. காப்பு என்றால் எங்களூரில் உடனடிப் பொருள் பொன்வளையல். ‘கையிலே ரெண்டு காப்புகூட இல்லே!’ என்பார்கள். முருகன், பகவதி அம்மன் சாமிகளின் சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு என்பனவும் காப்புத்தான். மங்கலச் சடங்குகளின்போது காப்புக் கட்டுதல் உண்டு. காய்ப்பு என்பதனை மக்கள் வழக்கில் காப்பு என்பர், அதுவேறு. குற்றவாளிக்குக் கைவிலங்கு பூட்டுவதை, ‘காப்பு போட்டுட்டானுக’ என்பார்கள்.

காப்பு என்ற சொல்லுக்கு 21 பொருள்களைப் பட்டியலிடுகிறது Tamil Lexicon. 1.பாதுகாவல், 2.காவலாயுள்ளது, 3.காப்பு நாண், 4.மந்திரக்கயிறு, 5.தெய்வ வணக்கம், 6.காப்புப் பருவம், 7.திருநீறு, 8.வளை, 9.வேலி, 10.மதில், 11.கோட்டையின் உள்ளுயர் நிலம், 12.கதவு, 13.கதவின் தாழ், 14.அரச முத்திரை, 15.ஏட்டுக் கயிறு, 16.காவலான இடம், 17.ஊர், 18.திக்குப் பாலகர், 19.சிறை, 20.பாதரட்சை, 21.அரசன் நுகர்தற்குரிய பொருள்கள்.

எவனும் அரைகுறை வடமொழி விசுவாசி, காஷ்பம் எனும் சொல்லில் இருந்துதான் காப்பு என்ற தமிழ்ச்சொல் வந்தது என்பான். அதை நான் கணக்கில் கொள்ளவில்லை.

திருமாலைக் காப்புக் கடவுள் என்கிறது பிங்கல நிகண்டு. பிள்ளைத்தமிழ் நூல்களின் முதற்பருவத்தைக் காப்புப் பருவம் என்றனர். காப்பு மறம் எனில் காவல் வீரர். தெய்வம் காப்பதற்காக, மூன்று, ஐந்து அல்லது ஏழு பாடல்களால் பாடப்படும் பிரபந்தம் காப்புமாலை எனப்பட்டது. நாச்சியார் திருமொழி, ‘காப்பு நாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்’ என்கிறது. காப்புதாரி என்றொரு சொல் பட்டியலிடப்பட்டுள்ளது Right of private defence, தற்காப்பு உரிமை என்ற பொருளில். இன்றைய சினிமா நடிகர், அரசியல் தலைவர், இனக்காவலர் – குலக்காவலர் அந்த உரிமையை அறிந்துவைத்திருக்கிறார்கள்.

பண்டு, ஊர்களில், கோயில் திருவிழாவுக்குக் கொடியேறிவிட்டது என்றால், கால் நட்டுவிட்டார்கள் என்றால், அந்த ஊர்க்காரர்கள், வரிக்காரர்கள், திருவிழா முடியும்வரை வெளியூர் செல்ல இயலாது. அயலூர் சென்று இராத்தங்க முடியாது. அதனைக் காப்புத் தடை என்றார்கள். காப்புக் கட்டியாயிற்று என்றார்கள்.

ஆக, ‘பண்டன்று பட்டினம் காப்பு’ எனும் இந்தக் கட்டுரைத் தலைப்பிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருள் கண்டாயிற்று. ‘பண்டன்று பட்டினம் காப்பு’ என்ற தொடரின் பொருள் என்ன? பட்டினத்தின் காவலானது முன்புபோல இல்லை என்று பொருள் கொள்ளலாமா? முன்புபோல அல்ல என்றால், அண்மைக்காலமாக காவல் சீரழிந்துவிட்டது எனலாமா? மாநிலம் எனும் மாபெரும் பட்டினத்தின் காப்பு, காமராசர் காலம்போல அன்று, இன்று கேவலமாகிப் போயிற்று என்று பொருள் கொள்ளலாமா? அல்லது மத்தியில் தலைமுறை தலைமுறையாக, வாரிசுகளும் வாரிசுகளின் வாரிசுகளும், அவர்களுக்கு ஏவல் கேட்டு நிற்பவர்களும் ஆட்சி செய்ததைப் போல அன்று, இன்று நடக்கும் ஆட்சி என்று பொருள் கொள்ளலாமா?

எப்படிப் பொருள் கொள்வது, ‘பண்டன்று பட்டினம் காப்பு என்றால்? ஊரில் சாதாரணமாகச் சொல்வார்கள், ‘‘ஏ! அவனை முன்ன மாரி நெனச்சுக்கிட்டு சொக்களி பேசீராதே! இப்பம் அவன் சேர்க்கை, நடமாட்டம் எல்லாம் தலைவருக்குக் கூடயாக்கும்!’’ என்று. தலைவர் எனப்படுபவர் யாதெனின், யாவர்க்கும் நன்மை இலாத பிறவி. எந்த அரசியல் கட்சியின், பஞ்சாயத்து அளவிலான அடாவடிக்காரனும் இன்று தலைவர்தான். தெளிவாகச் சொல்லத் துணிந்தால், சின்னத் தோதிலான ரவுடி, கமிஷன் ஏஜெண்ட், கலக்ஷன் பூத், அடியாள் குழுக் கூறுவடி. எனவே, மேற்கோள் காட்டிய உரையாடலின் பொருள், அவன் முன்னைப் போல இல்லை. பலான குறுந்தடியின் பாதுகாப்பு அரண் அவனுக்கு உண்டு என்பது. அதாவது, பண்டன்று பட்டினம் காப்பு. மேற்படியானின் நலன்களின் பாதுகாவல் தலைவர் பொறுப்பில் இருக்கிறது.

பட்டினம் என்பதை ஊர் என்ற பெரும்போக்குப் பொருளில் கொள்ளாமல், சொத்து சுகங்கள் என்று குறிப்புப்பொருளிலும் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. உடல்நலம் என்றும் கொள்ளலாம். பட்டினம் எனும் சொல்லுக்குத் தரப்பட்டுள்ள நான்காவது பொருள் சரீரம் என்று முன்பு கண்டோம்.

ஆகா! மூன்று பக்கங்களில் கட்டுரைத் தலைப்பை நாம் விளக்கியாயிற்று. ஒரு கட்டுரையின் தலைப்பைக் கொட்டி முழக்கி எழுதப்பட்ட கட்டுரை தமிழில், இது முதலாவதாகக்கூட இருக்கலாம்.

அது கிடக்கட்டும்!

ஆக, நாம் வந்து சேர்ந்திருக்கின்ற இடம், ‘பண்டன்று பட்டினம் காப்பு’ என்றொரு புலவர் உரைத்திருக்கின்றார் என்பது. திருவில்லிபுத்தூருக்கு ஒருகாலத்தில் புதுவை என்று பெயர். இன்று புதுவை என்றால் புதுச்சேரியின் குறுக்கம். தமிழக அரசின் இலச்சினையாக இருப்பது, திருவில்லிபுத்தூர்க் கோயில் கோபுரம். அங்கு எட்டாம் நூற்றாண்டில் விஷ்ணு சித்தன் என்ற பெயருடைய பெரியாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் பெயரைத் தமிழில் விட்டுணுச் சித்தன் என்று எழுதுவார்கள்.

வைணவ அடியார்கள் செல்லமாக பட்டர்பிரான் என்பார்கள். அவர் வளர்த்த அருமை மகள் ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியார். ஆண்டாள் ஆணா, பெண்ணா என்றரீதியில் பிரபலங்களின் ஆராய்ச்சியும் உண்டு ஈண்டு.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள் 473. குறள் வெண் செந்துறை எனும் பாவினம் சார்ந்த – நமக்கு சிந்துபூந்துறைதான் கேள்விப்பாடு –  முதற்பாசுரம்:

‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்

செவ்வடி செவ்வி திருக்காப்பு!’

என்பது பலகோடித் தமிழர் நாவில் புரள்வது.

‘பண்டன்று பட்டினம் காப்பே!’ என்ற ஈற்றடியைக் கொண்ட பாடல் பெரியாழ்வார் பாடியதுதான். வேறுபாடான முழுப்பாடல் சுவையானது.

‘நெய்க் குடத்தைப் பற்றி ஏறும்

எறும்புகள்போல் நிரந்து, எங்கும்

கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்!

காலம் பெற உய்யப் போமின்;

மெய்க்கொண்டு வந்து புகுந்து

வேதப் பிரானார் கிடந்தார்,

பைக்கொண்ட பாம்பணை யோடும்;

பண்டன்று பட்டினம் காப்பே!’

என்பது பாடல். புரிந்துகொள்வதற்கு, ஏகதேசமான எனது உள்வாங்கலை எழுதுகிறேன் தாழே.

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்போல், எங்கும் நிரந்து, எமதுடம்பின் சகல உறுப்புகளையும் கைப்பற்றி நிற்கின்ற நோய்களே! காலத்தே அகன்று சென்று உய்யுங்கள். எம் சரீரமான பட்டினத்தின் காப்பு, பண்டுபோல அன்று. விடப்பையுடைய பாம்புப் படுக்கையோடும் எமது மெய்யினுள் வந்து புகுந்து, வேதப்பிரான் திருமால் இன்று கிடக்கின்றார்.

அஃதாவது, முன்பு எமதுடம்புக்கு வேலியும் இல்லை காவலும் இல்லை. அரசுப் புறம்போக்குப் போலக் கிடந்தது. நெய்க்குடத்தை எறும்பு ஏறி மொய்ப்பதுபோல, கண்ட நோயெல்லாம் ஏறிப் புகுந்து எம்மைத் துன்புறுத்தியது. இன்று என் உடம்பின் காவல் பலமானது. தனது படுக்கையாகிய ஆதிசேடப் பாம்புடன் வந்து கிடப்பது முழுமுதல், ஆதிமூலம். எனவே, என்னைக் கைக்கொண்டிருந்த நோய்காள்! வருமான வரித்துறை சோதனை வரக்கண்ட அரசியல்வாதிகளைப்போல, அதிகார வர்க்கத்தினரைப் போல, சினிமாக்காரரைப் போல, காலம் தாழ்த்தாது ஓடி ஒளிந்து தப்பித்துக் கொள்ளுங்கள். எமது உடம்பின் காவல் இன்று மகத்தானது. Change of Guards. பண்டன்று பட்டினம் காப்பே!

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் ஒவ்வொரு பாசுரத்தையும் பரவித் தொழுது ஏத்தும் வைணவ அடியார்கள், அறிஞர்கள் என்னைச் சகித்துக்கொள்ள வேண்டும். திவ்யப் பிரபந்தப் பாடல்களுக்குப் பொருள் சொல்ல நான் பெரியவாச்சான் பிள்ளையோ, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியோ, புருஷோத்தம நாயுடுவோ, தி.வே.கோபால அய்யரோ, பேராசிரியர் தெ.ஞானசுந்தரமோ அல்ல. எளிய எழுத்தாளன். வடமொழிப் பயிற்சி கிடையாது. வேத உபநிடதங்கள் கற்றவனும் இல்லை. என்னளவில், நான் துய்த்ததோர் பாடலின் வரியைப் பரவலான வாசிப்புக்கு உட்படுத்தவே எனதிந்த முயற்சி. பன்னிரு திருமுறைகளின் பாடலானாலும், சங்கச் செய்யுட்களானாலும், கம்பநாடன் கவிதைகள் ஆனாலும் அச்சமின்றி நானிதைச் செய்கிறேன், செய்வேன். பாரதியிடம் கைமாத்து வாங்கினால்,

‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.’

எல்லாம் சரி! பாரதி பயன்படுத்தும் ‘தூறு’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் நாயன்மாரே! ‘மாதர் தூறு தூவத் துயர்கின்றேன்’ என்பாரே இராமலிங்க வள்ளல். பாரதி பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில், தூறு என்றால் நிந்தனை, பழிச்சொல், தீங்கு என்று பொருள். ஐயம் இருப்பின் பேரகராதி பாருங்கள். அவதூறு எனில் பழி, Defamation, Slander.

ஒருமுறை, கோவையின் தொழிலதிபர், வைணவ அறிஞர், திரு.D.பாலசுந்தரம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ‘பண்டன்று பட்டினம் காப்பே!’ எனுமிந்தத் தொடர் என்னை வந்து சேர்ந்தது. அண்மையில், பிறிதொரு கட்டுரைக்காக, ‘பார்ப்பு’ எனும் சொல்லுக்கு மேற்கோள் தேடித் திரிந்தபோது, ‘அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாய் அவிழ’ என்று தொடங்கும் பாடலைக் கண்டடைந்தேன். சம்பளம் வாங்கும் தமிழ்ப்புலத்தார்க்கு, தாமரை, ஆம்பல், அல்லி வேறுபாடு தெரியாது. ‘தாமரை உறங்கும் செய்யாள்’ என்று கம்பன் பயன்படுத்தும் வரிக்கும், ‘உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்’ என்ற ஆண்டாளின் வரிக்கும் பொருளறிய மாட்டார்கள். பிறகு எங்ஙனம் வெண்டாமரை, செந்தாமரை, வெள்ளாம்பல், நீலாம்பல், சேதாம்பல், அரக்காம்பல், அல்லி என்ற பேதம் உணர்வது?

‘பார்ப்பு’ பற்றிய என் ஐயம் தெளிந்தபின்பும், முத்தொள்ளாயிரம் புரட்டிக் கொண்டிருந்தேன்.

முத்தொள்ளாயிரம் என்ற செம்மொழித் தமிழின் 41 நூல்களில் ஒன்றெனப்பட்டது, சேர சோழ பாண்டிய மன்னர்மீது தலைக்குத் தொள்ளாயிரம் என 2700 பாடல்கள் கொண்ட நூலாக இருந்திருக்கிறது என அறிகிறோம். யாத்தவர் பெயர் அறிகிலோம், காலம் ஈராயிரம் ஆண்டுப் பழையது என்பது அறிவோம்.

தமிழன் என்பவன் ஆயிரக்கணக்கான கோடிகள் ஈட்டுகிற, வரி ஏய்ப்புச் செய்கிற, ஒழுக்கக்கேடுகளைச் சமூகத்தில் பரப்புகிற சினிமா நடிகனுக்கு பாரத ரத்னா, பத்மவிபூஷண்  கொடுத்ததைக் கொண்டாடுவான், தேவநேயப் பாவாணரைத் தெருவிலே விடுவான். முத்தொள்ளாயிரப் பாடல்கள் 2700இல், இன்று கிடைத்திருப்பது ஐந்து சதமானம்கூட இல்லை.

என்னிடம் இருக்கும் முத்தொள்ளாயிரம் பிரதி, ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் பதிப்பித்தது. அவருடைய பேரன் தீப.நடராஜன் தென்காசியில் அவரது இல்லத்தில் வைத்து 19-01-2006 அன்று கையெழுத்திட்டுக் கொடுத்தது. ரசிகமணி முன்மாதிரியாகக் கொண்ட முத்தொள்ளாயிரம், 1905-ம் ஆண்டில் ரா.ராகவையங்கார் முதன்முதலில் பதிப்பித்தது. ஒன்று நீர் அறிக, ரா.ராகவையங்கார் வேறு, மு.ராகவையங்கார் வேறு.

‘புறத்திரட்டு’ என்ற நூலை எவரோ ஒருவர் தொகுக்க, அந்த நூலில் இருந்தே முத்தொள்ளாயிரப் பாடல்கள் சில கிடைத்துள்ளன. 1570 பாடல்கள்கொண்ட தொகை நூலான புறத்திரட்டு, பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொகுக்கப் பெற்றிருக்கிறது. ஒருவேளை, ‘புறத்திரட்டு’ கிடைக்கப்பெறாமல் போயிருந்தால் முத்தொள்ளாயிரத்தின் ஒரு பாடல்கூட நமக்குக் கிடைத்திராது.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 1938ஆம் ஆண்டில் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை ‘புறத்திரட்டு’ நூலைப் பதிப்பித்திருக்கிறார். ஒருகாலத்தில், பல்கலைக்கழகங்கள் பல சிறப்பான பணிகளை ஆற்றியிருக்கின்றன. ஏலத்தில் துணைவேந்தர் பதவிகள் அன்று விற்கப்பட்டிருக்கவில்லை. பேராசிரியப் பணிகள் விலை பேசப்பட்டிருக்கவில்லை. முனைவர் பட்டங்கள் கூவி விற்கப்பட்டிருக்கவில்லை. பெண் வாணிபமும் நடந்திருக்கவில்லை.

இரசிகமணி, கிடைத்த முத்தொள்ளாயிரப் பாடல்களில் 99 பாடல்களுக்கு, உரைக்குறிப்புகள் எழுதியுள்ளார். பாடம் சிதைந்துபோன, சீர் காணாமற்போன, இலக்கணப் பொருத்தமில்லாத பாடல்கள் என்று ஒன்பதைத் தனியாகத் தந்துள்ளார். அவற்றுள் ஒன்பதாம் பாடலின் ஈற்றடி,

‘பண்டன்று பட்டினங் காப்பு’ என்று காண உவப்பாக இருந்தது.

ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பு யாக்கப்பட்ட முத்தொள்ளாயிரப் பாடலின் ஈற்றடி ஒன்று எட்டாம் நூற்றாண்டுப் பெரியாழ்வாருக்கும் வாய்த்த மகிழ்ச்சி, உவகை, களிப்பு அது. இரசிகமணிக்குக் குறிப்புரை எழுதக் கொடுப்பினை இல்லாத அந்தப் பாடல், வேறெந்தப் பதிப்பிலும் இடம்பெற்றிருக்குமோ, பொருள் உரைக்கப்பட்டிருக்குமோ என்ற ஆவலாதி இருந்தது எனக்கு.

தேடியபோது, கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 1+99+9=109 பாடல்கள் எனத் தொகுத்து, உரையும் எழுதப்பெற்ற பதிப்பு ஒன்று கிடைத்தது. இன்னொரு பதிப்பில், பழைய உரைகளில் கிடைக்கப்பெற்ற இருபத்திரண்டு பாடல்களும் முத்தொள்ளாயிரப் பாடல்களாகக் கொள்ளப்பட்டு 1+99+9+21=130 என்று பதிப்பிக்கப்பெற்ற நூலொன்றும் கிடைத்தது. என்னதான் கணிதத்தில் பட்ட மேற்படிப்பு என்றாலும், இந்தப் பதிப்புகளின் பாடல்களைக் கணக்கிடும்போது, எனக்கு ‘சீனி சக்கரை சித்தப்பா’ போட்ட சட்டமன்ற உறுப்பினர் கணக்கு நினைவில் வந்து அச்சுறுத்துகிறது!

ஆச்சரியம் என்னவென்றால், இரசிகமணி பொருள் காண இயலாத அந்தப் பாடல், ‘பண்டன்று பட்டினங் காப்பு’ என்ற ஈற்றடியைக் கொண்ட பாடல், எந்த எழுத்தும் சீரும் திருத்தம் செய்யப்படாமல், அப்படியே அச்சிடப்பெற்று, உரையும் எழுதப்பட்டிருக்கிறது. உரை பொருத்தமாகவும் இருக்கிறது. இனி, பாடலைப் பார்க்கலாம்.

‘நாம நெடுவேல் நலங்கிள்ளி சோணாட்டுத்

தாமரையும் நீலமும் தைவந் – தியாமத்து

வண்டொன்று வந்தது வாரல் பனி வாடாய்

பண்டன்று பட்டினங் காப்பு!’

என்பது பாடல். பேராசிரியர் செ.உலகநாதன், முனைவர் கதிர்முருகு ஆகியோரின் உரைகளை வாசித்தபின், பாடலின் பொருளை நான் விளங்கிக்கொண்ட விதம் வருமாறு.

குளிர்ந்த வாடைக்காற்றே! சோழ நாட்டுத் தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தடவித் தேன் நுகர, இரவின் சாமத்தில் வண்டொன்று வருவதுண்டு. அப்போது காவிரிப்பூம்பட்டினத்தில் காவல் இல்லை. இப்போது அச்சம் தருகின்ற நெடிய வேலையுடைய நலங்கிள்ளியின் காவல் உள்ளது. எனவே, பண்டுபோல் இல்லை, இன்று பட்டினம் காப்பு.

குறிப்புப் பொருள்: முன்பு தலைவிக்குக் காவல் இல்லை. இன்பம் துய்க்கத் தலைவன் நடு யாமத்தின்கண் வந்துபோவான். இன்றோ, தலைவியை இல்லத்தில் காவலில் வைத்துள்ளனர். எனவே, குளிர்ந்த வாடைக்காற்றே! தலைவனிடம் சொல்லி வை. பண்டன்று பட்டினம் காப்பு.

உண்மையில், இஃதோர் அகத்துறைப் பாடல். பெரியாழ்வார், நோய்களுக்குச் சொல்கிறார், பண்டுபோல் இல்லை இன்று பட்டினம் காவல் என்று. முத்தொள்ளாயிரப் புலவர், தோழி மூலமாகத் தலைவியின் இற்செறிப்புச் சூழலைத் தலைவனுக்கு உணர்த்தும் முகத்தான் கூறுகிறார், பண்டன்று பட்டினம் காப்பு என்று.

நான் சற்றுக் குதர்க்கமாகப் பொருள்கொண்டு பார்க்கிறேன். பண்டு எமக்கு கொள்ளை, கொலை, வன்புணர்வு, சுரண்டல், அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, ஊழல், லஞ்சம், அநீதி, கொடுமை இவற்றில் இருந்து காக்க, நேர்மையான அரசியல் தலைமை இருந்தது. காமராஜர், கக்கன் போன்றவர் இருந்தனர். எம்மைப்போன்ற சாதாரண குடிமக்களுக்கு, ரேஷன் கடையில் வரிசையில் நிற்பவர்களுக்கு, ஒரு காப்பு, காவல் இருந்தது.

இன்று அந்தக் காப்பு இல்லை. ஆள்பவரே அறுக்கிறார் கழுத்து! பண்டன்று பட்டினம் காப்பே!

*

பட்டினத்தார் அல்லது பட்டினத்துப் பிள்ளை எனப்பட்ட ஞானியைப் பலரும் பட்டணத்தார் என்கிறார்கள். அது தவறு என்கிறார் திரு.வி.க.

சம்பளம் வாங்கும் தமிழ்ப்புலத்தார்க்கு, தாமரை, ஆம்பல், அல்லி வேறுபாடு தெரியாது

பட்டினம் என்பதை ஊர் என்ற பெரும்போக்குப் பொருளில் கொள்ளாமல், சொத்து சுகங்கள் என்று குறிப்புப்பொருளிலும் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது

ஒருகாலத்தில், பல்கலைக்கழகங்கள் பல சிறப்பான பணிகளை ஆற்றியிருக்கின்றன. ஏலத்தில் துணைவேந்தர் பதவிகள் அன்று விற்கப்பட்டிருக்கவில்லை. பேராசிரியப் பணிகள் விலை பேசப்பட்டிருக்கவில்லை. முனைவர் பட்டங்கள் கூவி விற்கப்பட்டிருக்கவில்லை

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page