பெரீம்மா

நகர்வு

Periyamma

கிருத்திகா

இருள்  கவிந்து  கொண்டே  வந்தது. ஒற்றை  விளக்கின்  வெளிச்சத்தால்  இருளுக்குச்  சாயமேற்றிவிடமுடியாது  என்று  எனக்குத்  தோன்றியது. இருந்தும்  அந்தச்  சிறிய  மெழுகுவர்த்தியின்  ஒளியில்  சொற்பப்  பிரதேசம்  நனைந்து  கிடந்தது.

சிமிண்ட் பூச்சுத்தரையில்  சிந்திக்கிடந்த  வெளிச்சம்  சுற்றிப்படர்ந்திருந்த  இருள்  முழுமைக்குமான  ஒரு  ஆசுவாசப்புள்ளியாக   இருந்தது. நான்  ஒழுகிவிழும்  மெழுகுவர்த்தியின்  நீர்மக்கூழை  பார்த்தவாறிருந்தேன். 

அத்தை, பெரீம்மாவின்  போட்டோவிற்கு  கனகாம்பர  சரத்தைச்  சூட்டிவிட்டாள்.

” ஒங்க  பெரீம்மாவுக்கு  கனகாம்பரப்பூவுன்னா  உசிரு. நெருக்கக்  கட்டி  தலையில  வச்சிக்கும்” என்றவளிடமிருந்து  பெருமூச்சு  கிளம்பிற்று. 

” கனகாம்பரப்பூவ  வச்சிக்கிட்டு, வெத்தலப்பாக்கப்  போட்டு  ஒதட்ட  செவப்பாக்கிக்கிட்டு  ஒங்கப்பார  மயக்குனா…. சட்டுன்னு  பாத்தா  அவளுவோ  மாரியே  இருப்பா….அந்தப் பத்தாயத்தப் பத்தி நெனச்சாலே  என்  வயிறு  பத்தி  எரியும்.”

அம்மா  திடீர், திடீரென  சொல்லிவிட்டு  அழுவாள். இருளில்  பத்தாயம்  கண்ணுக்குப்  புலப்படாவிட்டாலும்  அது  இருக்குமிடத்தை  கண்கள்  கூர்ந்து  நோக்கின.

நெல்மணிகளின்  மொர, மொரத்த  வாசத்தைத்  தனக்குள்  அடக்கி  வைத்திருந்த  பத்தாயத்துக்கு  அந்த   வாசம்  அதன்  ஞாபகச்சூட்டில்  உறைந்து  போன  ஒன்றாயிருக்கும்  என்பதில்  ஆச்சரியமில்லை.

 நான்  எழுந்து  மெல்ல  நடுக்கூடத்திற்கு  வந்தேன். முற்றத்துக்  கம்பிகளின்  வழியே  கசிந்து  ஒழுகிய  நிலா  வெளிச்சம்  தரையில்  நீள்கோடுகளுடன்  பரவிக்கிடந்தது.

முற்றத்தின்  ஓரத்தில்  வளர்ந்திருந்த  முல்லைக்கொடி  வார்னிஷ்  பூசப்பட்ட  வழுவழு  தூணில்  பாய்ந்து  ஓட்டில்  ஏறியிருந்தது. சுவரில்  விழுந்த  கொடியின்  நிழலில்  சில  அரும்புகள்  மலர்ந்திருந்தன.

நிழலுக்குக்  கண்ணைப்  பறிக்கும்  வர்ணமில்லை. வடிவங்களின்  கோர்ப்புதான்  நிழல். அதனால்தான்  கண்ணுக்குப்  புலப்படாது  கொடியில்  அரும்பியிருந்த  பூக்களெல்லாம்  வரிவடிவங்களாகச்  சுவரில்  தெரிந்தன.

லேசாக  வீசிய காற்றுக்குக்  கொடியும், அதன்  நிழலும்  ஒருசேர  அசைந்தன. கொடியில்  இலைகள்  அடர்த்தியாய்  செழித்திருந்தன. அட்சதையரிசி  தூவியது  போல  மேலே  நட்சத்திரங்களின்  சிதறல். 

” குமாரு, சாப்புட  வா…..”

அத்தை சமையல்  உள்ளிருந்து  அழைத்தாள். படத்திறப்பு  விழாவுக்கு  வந்த  உறவுசனத்தில்  பெரும்பாலானோர்   கிளம்பியிருக்க, நானும், அத்தையும்  இன்னும்  சில  உறவுகள்  மட்டும்  எஞ்சியிருந்தோம். 

கழனித்தண்ணீர், வெங்காயச்சருகு,  மண்புழு  உரம்  என்று  விதவிதமாய்  சத்து  சேர்த்து  பெரீம்மா  வளர்த்திருந்த  முல்லைக்கொடி  அவளற்ற  அண்டவெளியில்  வாழ்வதற்கான  சாத்தியக்கூறுகள்  குறித்து  சிந்தித்து  கவலைப்பட்டுக் கொண்டிருக்கக்கூடுமென்று  நான்  நினைத்துக்கொண்டேன்.

” குமாரு, உப்புமா  ஆறிப்போவுது  பாரு….”

அத்தை  சத்தமாய்  குரல்  கொடுக்க,  நான்  மறுமுறைக்கு  வாய்ப்பளிக்காது  விரித்து  கிடந்த  பனையோலைத்  தடுக்கில்  சென்றமர்ந்தேன்.

நீளமான  சமையலறையின்  இடது  மூலையிலிருந்த  தொட்டி  முற்றத்தில்  கொஞ்சமாய்  பாசி  படர்ந்திருந்தது. முற்றத்தையொட்டிக்  கிடந்த  அம்மிக்கல்  பெரீம்மா  அரைத்து  வழித்தெடுத்த  மசாலா  வாசத்தை  இன்னமும்  சுமந்து  கொண்டிருந்தது. 

மஞ்சள்  கலந்த  வெள்ளை  உடலில்  திரட்சிகளைத்  தாங்கி  நின்றிருந்த  பெரீம்மாவை  விட்டுப்  பெரீப்பா  ஓடிப்போனதற்கு  பயமே  காரணம்  என்று  எல்லோரும்  அப்போது   பேசிக்கொண்டார்களாம். அந்தப்  பேச்சு  இப்போது வரை  தொடர்கிறது. பிணம்  குளிப்பாட்டி  முடிக்கையில்,

” இந்தச்  சந்தனக்கட்டைய  மணக்கவுடாம  அந்தப்  படுபாவிப்  பய  பொசுக்கிப்புட்டானே….” என்று  பெண்கள்  மத்தியில்  ஒரு  குரல்  எழுந்தது.  

நீளமான  தேக்கம்பெஞ்சில்  பெரீம்மாவைக்  கிடத்தியிருந்தார்கள். வயிற்றின்மேல்  கோர்த்தபடி  கிடந்த  அந்த  நீள, நீள  விரல்கள்  எத்தனைமுறை  அப்பாவை  அணைத்திருக்கும்  என்ற  எண்ணம்  திடீரென  எழுந்து  கசந்தது.

செம்பழுப்பு  நிற  பெஞ்சின்  மீதான  அவளது  சயனக்கோலம்   ஒரு  ஓவியம்  போலத்  தெரிந்தது. கருஞ்சிவப்பு  வண்ண  பட்டுப்புடவையை  அவளுக்கு உடுத்தி  விட்டிருந்தார்கள். அவளுடைய  திருமணப்புடவை அது.

புடவையிலிருந்த  சரிகைக்கோடுகள்  அவள்  மேனியில்  ஒளிக்கீற்றுகளாய்  மின்னின. மயில்களும், அன்னப்பட்சிகளும்  அவள்  மேல்  ஊர்வலம்  போயின. 

‘ எரியப்போகும்  உடலுக்கு  இத்தனை  பிரகாசம்  ஏன்….’

புரியவில்லை. எல்லோருக்கும்  அது  ஒரு  ஆச்சரியம்தான். பளபளவென்று  துலக்கி  வைத்த  தங்கக்குடம்  போல்  அப்படியொரு  மிளிர்ச்சி…..

” பாவி  செறுக்கி, குடுத்து  வைக்காத  பயலுக்கு  வாக்கப்பட்டு  ஒரு  சொகத்தையும்  அனுபவிக்காத  போயி  சேந்துட்டாளே….”

உறவுமுறை  ஆத்தா  ஒன்று ஓங்கி  குரலெடுத்து  அழுதது. 

‘ ஒருமாதம்  பெரீம்மாவுடன்  குடும்பம்  நடத்திவிட்டு  பெரீப்பா  ஏன்  ஓடிப்போனார்…..குத்துவிளக்கை  படுக்கையறை  விளக்காக்கி  குளிர்காய  அச்சமாயிருந்திருக்குமோ……..’

” குமாரு, இம்மாம்  பெரிய  வூட்டுல  தனியாளா  கெடக்குறன்டா. நீயாவது அடிக்கடி  வந்துட்டுப்  போ…..” என்று  பெரீம்மா  எப்போது  பார்த்தாலும்  கூறுவாள்.

மூன்று  வயதுவரை  அவளின்  இடுப்பில  மர்ந்து  அவள்  ஊட்டிய  சோற்றைத்  தின்று  வளர்ந்திருந்ததில்  அவள்  மேல்  எனக்கு  அலாதியான  அன்பு  உண்டு. அது  அவ்வபோது  கிளம்பும்  அம்மாவின்  புலம்பலில்  லேசாக  ஆட்டம்  காணும்.

” இவள  வச்சி  வடிக்கமாட்டாமதான்  அந்தாளு  ஓடிப்போனாரு. அவரு  போனதும்  ஒங்கப்பாருக்கு  தூண்டிலப்  போட்டுட்டா …”

ஆரம்பத்தில்  இலைமறை  காய்மறையாகப்  பேசிய  அம்மா, நான்  வளர்ந்ததும்  உட்கார  வைத்து  ஒரு  பாட்டம்  அழுது  தீர்த்துவிட்டாள். நம்ப  முடியவில்லை, நம்பாமலும்  இருக்க  முடியவில்லை. 

நான்  கைகழுவி  நிலைப்படியில்  தலை  தட்டாதவாறு  குனிந்து  வெளியே  வந்தேன். பக்கத்திலிருந்த  சாமியறையில்  எரிந்து  கொண்டிருந்த  விளக்கின்  சுடர்  கதவுத்  திறப்பின்  வழியே சன்ன  இழை  வெளிச்சத்தை  பாய்ச்சியிருந்தது.

நான்  கதவு  திறந்து  உள்ளே  எட்டிப்பார்த்தேன். பெரிய, பெரிய  படங்களிலிருந்த  தெய்வங்களின்  முகங்களில்  அசாதாரண  சோகம்  அப்பிக்கிடந்தது  போல  என்னுள்  பிரமை  எழுந்தது. வெறும்  படங்களுக்குச்  சக்தி  உண்டாக்கி  விடுகின்றன  மனிதர்களின்  கைகூப்பல்கள்.

பூச்சரங்களும், ஊதுபத்தியும், சாம்பிராணியும்  அவற்றின்  அந்தஸ்தைக்    கூட்டிவிடுகின்றன. வெறுமனே  வரையப்பட்ட  ஓவியங்களுக்கு  தெய்வத்தன்மையை  புகுத்திவிடுகின்ற  மனிதர்களை  எண்ணுகையில்  எனக்குச்  சிரிக்க  வேண்டும்  போலிருந்தது.

பெரீம்மா  ஒருபடி  மேலேபோய்  படங்களிலிருந்த  தெய்வங்களை  உயிரோட்டமுள்ளவைகளாக  ஆக்கியிருந்தாள். கனிந்த  பழங்களைப்  போல  தெய்வ  முகங்கள். படங்களுக்குள்  தெய்வங்களா  அல்லது  தெய்வங்களைச்  சிறைப்பிடிக்கும் மரச்சட்டங்களா  என்று  புரியவில்லை.

பெரீம்மா  நன்றாகப்  பாடுவாள். தேவாரம், திருவாசகம்  அத்துப்படி. சாமிப்படங்களின்  முன்  நின்றமேனிக்குக்  கைகூப்பி, கண்கள்  மூடி  அவள்  பாடும்போது  காற்றின்  அரவம்கூட  கேட்காது. 

அன்றிரவு  முழுக்க  மின்சாரம்  வரவில்லை.  

” கிராமம்னாலே இப்புடித்தான். கரண்டு போனா ஒடனே திரும்பி வராது.லயன் மேன் மனசு வச்சி வந்து கரண்ட் கம்பத்த சொரண்டுறப்பதான் லைட்டுக்கெல்லாம் உசுரு வரும். “

திண்ணையில் புரண்டு கொண்டிருந்த மாமா அருகில் படுத்திருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

சிறுசுமல்லாத, பெருசுமல்லாத வீடு அது. இருந்தும் பெரீம்மா  ஒருத்திக்கு அது பெருசுதான். தொப்பைப் பெருத்த தூண்களின் வேலைப்பாடான  இரண்டு தலைகளும் அவை தாங்கும் உத்திரங்களும், சன்னஞ்சன்னமான  ரீப்பர்களும்  நேர்த்தி  குறைச்சலில்லாத  அழகோடு  இருந்ததில்  வியப்பேதுமில்லை. பெரீம்மாவுக்கான  அந்த  வீடு  அந்தமாதிரியானதொரு  அமைப்பில்  இருந்தது, செய்து  வைத்த  ஏற்பாடு   போல  எனக்குப்பட்டது.

” நான்  பிரசவத்துக்குப்  போயிருந்தப்ப  ஒங்கப்பாருக்கு  சோறு  போட்டு  தன்  பசிய  அமத்திக்கிட்டா. அந்தப்  பத்தாயத்துக்கும், சொவத்துக்கும்  நடுவுல  அவுங்க  ரெண்டுபேரும்  இருந்தத   நானே  என்  கண்ணாலப்  பாத்தன்டா. அப்ப  ஒனக்கு  நாலு  வயசு. அந்த  நிமிசம்  தாலிய  அறுத்து  வீசிறலாமான்னு  தோணுச்சி. அடக்கிக்கிட்டு  ஒங்கப்பாரப்  புடிச்சி  இழுத்துக்கிட்டு  வந்துட்டன். “

சொல்லிவிட்டு  கண்களை  இறுக  மூடி  நீர்க்கோடுகளை  கன்னத்தில்  வழியவிட்ட  அம்மா, பெரீம்மாவின்  இழவுக்கு  கடனேயென்று  வந்தாள்.

” இன்னிவரைக்கிம்  விசயம்  வெளில  தெரியாது. அடக்கி  வச்சவ  நான். அவுத்து  வுட்ருந்தன்னா அவள  வழியனுப்ப  ஒரு  நாயி  வராது. அனாதப்பொணமா  கெடந்து  புழு, புழுத்துதான்  போகோணும். அசிங்கத்த  மிதிச்சிப்புட்டு  அத  வெளில  வேற  சொன்னா  நம்ம  கால  நாறக்  காலாப்  பாப்பானுங்க. அத  நெனச்சி  கம்முன்னு  இருந்துட்டன். இப்பவும்  அவளுக்கு  ஒரு  சொம்பு  தண்ணி  ஊத்த  எனக்கு  மனசில்ல. நாளபின்னால  பேச்சாயிரக்கூடாதுன்னு   வர்றன்” என்ற  அம்மா  ஒரு அடி  விலகியே  நின்றிருந்தாள்.

கண்ணில்  பொட்டுத்  தண்ணீர்  வரவில்லை. யாரோ  கூப்பிட்டதற்கு, “ஊத்தியாச்சி……..” என்றாள். படத்திறப்பு  விழாவுக்கு  அறவே  வரமுடியாது  என்று  விட்டாள்.

” கொள்ளிப்போட்ட  பாவத்துக்கு  நீ  போ. மறுபடியும்  அந்த  வூட்டு  வாசப்படிய  மிதிக்க  எனக்கு  கூசுது” என்ற  அம்மாவை  நான்  வற்புறுத்தவில்லை. 

பொழுது  விடிந்தே  மின்சாரம்  வந்தது. அணைக்காமல்  விட்டிருந்த  விளக்குகள்  பளீரென்று  ஒளிர்ந்ததில்  வீடு  தங்கமுலாம்  பூசிக்கொண்டதுபோல   தகதகத்தது. 

பெரீம்மாவுக்கு  குண்டு  பல்பு  வெளிச்சம்தான்  பிடிக்கும். கரண்ட்  அதிகமாகும்  என்றால்  ஒத்துக்கொள்ள  மாட்டாள்.

” அடப்போடா, குண்டு  பல்பு  வெளிச்சந்தான்  சுள்ளுன்னு  இருக்கும். அந்த  மஞ்ச  வெளிச்சம்  சூரியன  வூட்டுக்குள்ளாற  கொண்டாந்தாப்ல  தகதகங்கும்பாரு.  அதுக்கு  முன்னால  டீப்  லைட்  வெளிச்சமெல்லாம்  சும்மாதான் ” என்பாள். 

வானம்  சாம்பல்  பழமாய்  பழுத்துக்கிடந்தது. அத்தை  அண்ணாந்து  பார்த்துவிட்டு,

” மழை  அடிக்கப்  போவுது” என்றாள். சிலுசிலுத்த   காற்றுக்கு   வீட்டின்  முன்பிருந்த  மரத்திலிருந்து  வேப்பம்பூக்கள்  தரையில்  கொட்டின. 

அடுத்த  பத்தாவது  நிமிடம்  யாரும்   எதிர்பார்க்காதவண்ணம்  சாம்பல்  பழத்தை கீறிக்கொண்டு  சூரியன்  வெளிப்பட, வெயில்  உதிர்ந்து  விழுந்தது. எச்சங்களாக  அங்குமிங்கும்  உதிர்ந்து  கிடந்த  வெயில்  வளிப்பிரதேசத்தில்  தூசுகளும், மாசுகளும்   சுழன்று  கொண்டிருந்ததைப்  படம்பிடித்துக்  காட்டிற்று. 

” இப்புடித்  திண்ணையில  ஒக்காந்து  தெருவ  வேடிக்கப்  பாத்தா  எனக்குப்  பொழுது  போயிரும். மழை  பேஞ்சாலும், வெயிலடிச்சாலும்  இங்க ஒக்காந்து  பாத்துக்கிட்டே இருப்பேன். நேரம் போறதே தெரியாது.”

பெரீம்மா ஒருமுறை சொல்லிவிட்டு என் தலை தடவினாள்.

” நீயாவது  அடிக்கடி  வந்துபோவ  இருந்தீன்னா  ஆறுதலா  இருக்கும். நீயானா  பாதி  நாளு  ஊரூரா  சுத்துற. எதுக்குடா இந்த அலச்சப்பொழப்பு……பேசாம உள்ளூர்லயே ஒரு வேலையத் தேடிக்க வேண்டியதுதான. …..இந்த வூடு, நாலு மா நெலமெல்லாம் ஒனக்குதான். இதுக்கெல்லாம் நீதான் வாரிசு. நீ எதுக்கு கஸ்டப்படணும்…….பேசாம அந்த வேலைய வுட்டுட்டு ஒரு எடத்துல ஒக்காந்து பாக்குற வேலையாத் தேடிக்க……..”

பெரீம்மா சொல்லிக்கொண்டே போனாள். கடைசியாக வந்தபோது வற்புறுத்தி இரவு தங்கவைத்தாள். 

” எதேச்சையா  பணியாரத்துக்கு மாவாட்டி வச்சேன். ஒனக்கு பணியாரம்னா உசிராச்சேன்னு, ஆட்டுறப்ப   உள்ளாற ஒரு எண்ணம்  ஓடுச்சி. மின்னலடிச்சாப்ல வந்து நின்னுட்ட ” என்றவள் தொண்டைவரை பணியாரங்களைத் திணித்துவிட்டாள்.

அவளுடைய சமையற்கட்டு அவளுக்கான ராஜ்யசபை  போன்றதொரு அடையாளத்தை அழுந்த பதிய வைத்துக் கொண்டிருந்தது. மேடையடுப்பில் அவள் ஒருவித லாவகத்தன்மையோடு பணியாரங்களைச் சுட்டுக் கொண்டிருந்தாள்.

வலதுகையால் கரண்டியிலிருந்த மாவை பணியாரக்கல்லின் குழிக்குள் நிரப்பியவள் இடதுகையை இடுப்பில் அமர்த்தியிருந்தாள். நெற்றியில் அரும்பிய வியர்வையை அவ்வபோது சேலை முந்தானையால் துடைத்துக்கொண்டு, வெந்த பணியாரங்களைப் பிசிறில்லாமல் திருப்பிப்போட்டாள்.

வரைந்த  சித்திரத்தை  அசையும்  ஒளிப்படமாக  பார்ப்பது  போன்ற  உணர்வு. அந்த  உணர்வில்  உள்ளேப்  போன  பணியாரங்களை  கணக்கு  வைத்துக்கொள்ளவில்லை.

பெரீம்மாவின்  அறையிலிருக்கும் அலமாரியில் பதிக்கப்பட்ட  ஆளுயரக்கண்ணாடி  அவளின்  பிரதிபலிப்புகளை  காட்சிப்  படிமங்களாக  தன்னுள்  அடக்கி  வைத்திருக்கும்  என்று  நான்  நினைத்துக்கொண்டேன்.

அடுக்கடுக்கான  படிமங்களில்  அவள்  விதவிதமான  ஓவியங்களாக  நின்றிருப்பாள். அத்தனை  ஓவியங்களும்  அறைக்குள் பிரதிபலிக்கப்பட்டு  ஜன்னல்  வழி  வரும்  சூரிய வெளிச்சத்தால்  ஒளிர்விடும்  மாயாஜாலக் காட்சி அகத்திரையில் ஓட  மயிர்  கூச்செறிந்தது. 

” ஒங்க  பெரீம்மாவுக்கு  ஆள  அசரடிக்கிற  அழகு. அத  வச்சே  அவ  அம்புட்டு  பேரையும்  மயக்குனா. ஒங்கப்பாரையும்  கைக்குள்ள  போட்டுக்கிட்டா…..”

அம்மாவின்  தீனமான  குரல்  காதில்  ஒலித்து  என்னை  நினைவுலகத்துக்கு  அழைத்து  வந்தது. 

” வூட்டப்  பூட்டிப்போட்டா  வவ்வா  அடஞ்சிரும்  குமாரு. பிற்பாடு  சுத்தம்  பண்றது  கஸ்டம். அதனால  நல்ல  வெலை  வந்தா  வித்துரு…”

மாமா  சொன்னபோது  அத்தைக்கு  அதில்  இஷ்டமில்லை  என்பது  அவள்  முகம்  சுணங்கியதில்  புரிந்தது. 

” அண்ணி  பொழங்குன  வூடு. அவங்கப்பாரு  அதுக்கு  குடுத்த சீதனம். முப்பத்தஞ்சி  வருசம்  இந்த  வூட்ட  அந்த  மவராசி  ஆண்டிருக்கு. இத  விக்கணும்னு  சொல்லும்போதே உசிரப் புடுங்குறமாரி இருக்கு.”

அத்தை சொல்லிவிட்டு அழுதது. அம்மாவை விட பெரீம்மாவைத் தான் எல்லோருக்கும் அதிகம் பிடிக்கும். அப்பாவுக்கும் அப்படித்தான் பிடித்திருக்க வேண்டுமோ என்னவோ.

அத்தை கிளம்பிப் போன பிறகு வீடே வெறிச்சோடிப்போனது. நான் பெட்டியில் துணிகளை அடைத்தேன். எட்டு மணிக்கு மினிபஸ்  பிடித்தால் அரைமணி நேரத்தில் டவுனுக்குப் போய்விடலாம். அங்கிருந்து பத்து மணிக்கு ரயில். 

நான் சும்மாவே வீட்டை ஒரு சுற்று சுற்றி வந்தேன். கொல்லையில் பெரீம்மா அருகம்புல் வளர்த்திருந்தாள். கனகாம்பர செடிகள் பெருவாரியான இடத்தை ஆக்கிரமித்திருந்தன.

கொல்லையை நடுவே பிரித்தது பெரீம்மாவின் காலடியில் உருவான ஒற்றையடிப்பாதை. இனி அதில் புற்கள்  முளைக்கக்கூடும். முளைத்த புற்களின் ஊடே நெருஞ்சி அடரும். நான் மௌனமாக உள்ளே வந்தேன்.

முற்றத்தில் இருந்த முல்லைக்கொடியை, சமையலறைப் பாத்திரங்களை படுக்கையறை ஆளுயரக் கண்ணாடியை, வாசற்திண்ணையைப் பார்க்க பார்க்க மனசு வலித்தது. தெருவிலுள்ள வேப்பமரம் கூட   பெரீம்மா வைத்ததுதான். 

‘எல்லாமே அவளின் அரவமற்ற பொழுதுகளை இனி எப்படிக் கழிக்கும்…………அடர்த்தியான  மௌனம்  பரவிய  வீட்டுக்குள்  இனி ஒரு உயிர்நிழலின் நடமாட்டம் நிகழ வாய்ப்பேயில்லை.’ 

யோசித்துக்கொண்டே நான் பத்தாயத்தினருகில் வந்து விட்டேன். பத்தாயத்துக்கும், சுவருக்கும் இடைப்பட்ட அந்த இடைவெளியைப் பார்க்காதிருக்க முடியவில்லை 

‘ வீட்டின் அனேக இடங்களை விட அந்த மிகச்சிறிய இடம் பெரீம்மாவின் மனதிற்கு நெருக்கமான இடமாக இருந்திருக்கக்கூடும். தன்னை மலர்த்திக் கொண்ட அந்த இடத்தைப் பெரீம்மா ரொம்பவே நேசித்திருப்பாள்.’ 

என்னுள் இறுகிக் கிடந்த முடிச்சு சட்டென  அவிழ்ந்தாற் போலிருந்தது. அவ்வபோது அம்மா புலம்பும்போதெல்லாம்  பெரீம்மா மேல் ஏற்பட்ட ஏதோவொரு உணர்வு இனி தோன்றாது. 

” இவ்ளோ சொல்லியும் அவளப் பாக்க ஓடுறியே. அவமேல ஒனக்கென்னாடா அவ்ளோ பாசம்…….?”

அம்மா அடிக்கடி கேட்பாள்.

என்ன சொல்லமுடியும்? 

‘ பெரீம்மா மேல் எனக்கு அவ்ளோ பாசம். அவ்ளோதான்…….’  

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page