பெரும்பான்மையும் விதிவிலக்கும் – கீதா இளங்கோவனின் துப்பட்டா போடுங்க தோழி கட்டுரைத் தொகுப்பு குறித்து

நகர்வு

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய படம் குட்நைட். படத்தின் நாயகனுக்கு தூங்கும்போது குறட்டை விடும் அல்லது குறட்டை விடுவதற்காக தூங்கும் பழக்கம் உள்ளது. இதனாலே அவன் அனுபவிக்கும் இன்னல்களினால் அவனுக்கு தேவையற்ற தாழ்வு மனப்பான்மையும் வாழ்வின் மீதான எரிச்சலும் உள்ளது. திருமணம் ஆனபின்னும் இதே குறட்டை தொடர்வதால் விவகாரம் வெடித்து பிரியும் நிலைக்குச் செல்கிறார்கள் தம்பதியினர். சினிமாவில் காட்டப்படும் இந்த மிகை என்பதை மறந்து மைக்கை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினால் சந்திக்கும் பத்து தம்பதியினரில் மூன்று இணைக்காவது இந்தப் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். குறட்டை என்பது வாழ்வதற்கே தொந்தரவு செய்கிறது எனக் கூறி விவாகரத்துக்கு அணுகுவது எல்லாம் மேலைநாடுகளில். இங்கே அது ஒரு தொந்தரவாகப் பார்க்கப்படுவதில்லை. அதனோடு பழகி வாழ்ந்துவிடுகிறார்கள் கணவன் மனைவியும் அம்மா அப்பாவும். சரி சினிமா விடுத்து கட்டுரைத் தொகுப்புக்கு வரலாம்.

ஆணாதிக்க திமிரில் வெளிப்படும் ஒரு வாக்கியத்தை புத்தகத்தின் தலைப்பாக வைத்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார் ஆசிரியர். இது இணைய இதழில் தொடராக வந்ததன் தொகுப்பு. நான் பேசுவது பெரும்பான்மைப் பெண்களைப் பற்றி என என்னுரையிலே எச்சரிக்கை விட்டு – கொஞ்சம் கோபத்துடனான இந்த எச்சரிக்கை புத்தகத்தின் மைனஸ் – விதிவிலக்குகளைக் கைவிடும் கட்டுரை ஆசிரியர் பெண்களுக்கான பல உபயோகமான அறிவுரைகளை தொகுப்பெங்கும் சுவாரசியமாக எழுதி உள்ளார்.

சுயபரிவு குறித்து விளக்கும் தலைப்பிலான கட்டுரை ஆண் பெண் இரு பாலருக்கான மோட்டிவேஷன் ஜன்னலை அழகாக திறக்கிறது. அதேபோல் கல்யாணம்தான் பெண்ணுக்கு எல்லாமுமா என்ற தலைப்பிலான கட்டுரையை ஆணுக்கு என்று மாற்றியும் வாசிக்கலாம். பெண்ணுக்கு நகை முக்கியமா தலைப்பு கட்டுரையில் அந்தஸ்தை வெளிப்படுத்த ஆண்கள் பெண்களை நகை ஸ்டாண்டாக பயன்படுத்துகிறார்கள் என்பதுகூட சில இடங்களில் ஒத்துப்போகும் ஒன்றுதான். ஆனால் நகை அணியாத வறுமைக்கோட்டுப் பெண்களின் சுதந்திரம் எங்கும் பாதிப்பதில்லை என்று சொல்வது அபத்தமான ஒன்று.

சுதந்திரமாக இருங்கள் என்று பெண்களுக்குச் சொல்லப்படும் செய்தியாக தொகுப்பெங்கும் வெளிப்படும் கட்டுரைகள் அதே பெண்களால்தான் இன்னொரு பெண்ணின் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்ற முரணையும் தாங்கி வந்திருக்கிறது. கல்யாணமாகி மூன்றே மாசத்தில் விஷேசம் இல்லையா என்று கேட்பவர்கள் மாமியாராகவும் அம்மாவாகவும்தான் இருக்கிறார்களே தவிர அப்பாவோ மாமனாரோ இல்லை. கரு தங்காமல் போவது பெண்ணுக்கு மட்டும் பிரச்சனை இல்லை. ஆணுக்கும்தான். இருந்தாலும் பெரும்பான்மைப் பெண்கள்தான் குறி வைக்கப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டாலும் விதிவிலக்காகவும் சில விஷயங்களை யோசிக்க வேண்டியுள்ளது. விவாதிக்க வேண்டிய புத்தகம்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page