கவிஞர் மு. மேத்தா பிறந்த நாள் – இயக்குநர் பிருந்தா சாரதி வாழ்த்து

நகர்வு

கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

*
கவிதையை ஜனநாயகப் படுத்தியவர். ஜனநாயகத்திற்காகக் கவிதைக் குரல் கொடுப்பவர். வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவர்
வானம் வரை புகழ் கொடி பறக்க விட்ட கவிஞர். ‘கண்ணீர் பூக்கள்’ என்ற ஒற்றை நூலின் மூலமாகவே புதுக்கவிதை என்றால் என்ன என்பதைக் கடைக்கோடி தமிழன் வரை அறிவித்தவர். எளிய கவிதைகளால் எண்ணற்ற இதயங்களைத் தொட்டவர்.

கண்ணீர் பூக்கள்… அந்நூல் படித்தவர்களை அது வாசகர்களாக அல்ல, ரசிகர்களாக அல்ல, கவிஞர்களாகவே மாற்றியது. அவர் கவிதை
உரைநடைக்கு அருகில் இருக்கும். ஆனால் உயரமான கவித்துவத்தோடு இருக்கும். வெளிவரும்போது அது வாமனனாகத்தான் வந்தது.
விஸ்வரூபம் எடுத்துக் காட்டியபோதுதான் மூன்று உலகங்களையும் மூன்று அடிகளால் அளந்து காட்டிய திரிவிக்கிரமன் அது என்பது புரிந்தது. வசனம் கவிதை ஆகுமா என்று புறங்கையால் ஒதுக்கியவர்களைக் கவிதை தோற்றத்தில் இல்லை தோற்றம் தாண்டிய ஆழத்தில் இருக்கிறது என்று உரக்கச் சொன்னது. மகுடங்களுக்கு ஆராதனைப் பாடல் புனைவது அல்ல… செருப்பையும் பேட்டி எடுத்து அதில் சமூகத்தையும் தத்துவத்தையும் வெளிப்படுத்த முடியும் என்று ஆச்சரியப்பட வைத்தது. ‘சருகுகளை மிதிக்கிற போது சப்திக்கும் நாங்கள் மலர்களை மிதிக்கிறபோது மௌனம் சாதிக்கிறோம்’ என்று நடைமுறைத் தத்துவம் பேசியது. பேசப்படாத, பார்க்கப்படாத பொருட்களெல்லாம் கூட பாடல் புனைவதற்கான கருப்பொருட்கள்தான் என்பதையும் கற்றுக் கொடுத்தது.

வாழை மரத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை அதற்கு ஒரு உதாரணம். ஜன்னல்கள், முகவரிகள், நிழல்கள், அறுவடை போன்ற சொற்களை இவர் பயன்படுத்திய பிறகு எழுத வருகின்ற எல்லாக் கவிஞர்களும் அவற்றைப் பயன்படுத்தினார்கள். அவர்களுக்கும் அச்சொற்கள் புதிய புதிய வாசல்களைத் திறந்து காட்டியது. கண்ணீர் பூக்கள், நடந்த நாடகங்கள், வெளிச்சம் வெளியே இல்லை, அவர்கள் வருகிறார்கள், ஊர்வலம், திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் போன்ற அவரது கவிதைத் தொகுதிகளை எல்லாம் நெஞ்சில் வைத்து நேசித்த நாட்கள் என் இருபதுகளின் இரண்டாம் பாதி.

தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி, மாம்பழ ஊரில் மனக்குயில்கள் அழுகின்றன, தேசத்தைப் போலவே நம் வாழ்க்கையும் தெருவில் நிற்கிறது போன்ற தலைப்புகள் அவருடைய கவிதைகளை யாரும் திரும்பிப் பார்க்காமல் கடந்து போக முடியாது எனும்படியான ஒரு காந்த வயலை உருவாக்கியது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சென்னைக் கம்பன் கழகம் நடத்திய அனைத்துக் கல்லூரிக் கவிதை போட்டியில் கலந்துகொண்டு அதில் முதல் பரிசு பெற்றவுடன் மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய மு.மேத்தா அவர்களைச் சந்தித்து அந்த செய்தியைக் கூறி அவரிடம் வாழ்த்து பெற்றேன். தோளில் தட்டிக் கொடுத்தார். என் ஒவ்வொரு அணுவிலும் பூப்பூத்தது. அப்போது அவரிடம் அவர் எழுதிய ‘அகலிகை’ ‘கண்ணீர் பூக்கள்’ போன்ற கவிதைகளை மனப்பாடமாகச் சொல்லி அவரையும் மகிழ வைத்து நானும் மகிழ்ந்திருக்கிறேன்.

படித்தவுடன் புரிந்துவிடும் எளிமையும், புதிய புதிய சொல்லாட்சிகளும், மரபுக் கவிதைகளிலிருந்து லேசாக எடுத்துக்கொண்ட ஓசை நயமும் அவரது புதுக் கவிதைகளுக்கு அபாரமான கவர்ச்சியூட்டின. கவியரங்குகளில் கதாநாயகனாகத் திகழ்ந்தார். திரைப்படப் பாடல் எழுதுவதற்கு முன்பே திரைப்படப் பாடலாசிரியர்கள் பெற்றிருக்கும் அளவுக்கு ரசிகர்களைப் பெற்றிருந்தார். ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான அவரது இயல்பு அவரது புகழுக்கு மேலும் ஒளி சேர்த்தது.

அவர் எழுதியதைப் போலவே, ‘விளம்பரங்களுக்குதான் வெளிச்சம் தேவை. வெளிச்சத்திற்கு விளம்பரம் தேவையில்லை’ என்பதை உணர்த்தியது.

‘நீண்ட தூரம் சுமந்து வந்த பல்லக்கை இறக்கி வைத்துவிட்டு
இளைப்பாறுகையில்
திரை விலகித் தெரிந்தது
உள்ளே நீ இல்லை என்ற உண்மை’

என்பது வெறும் காதல் கவிதை மட்டும்தானா? அதைத் தாண்டி அதற்கு ஆன்மீக பொருள் ஏதும் இல்லையா என்றெல்லாம் சிந்திக்க வைக்கும் ஆழம் மிகுந்தது அவரது கவிதை. ஆனால் முதல் பார்வையில் ஏமாற்றக் கூடிய எளிமை கொண்டது.

‘தாண்டத் தாண்ட கோடுகளைத் தள்ளித்தள்ளிப் போட்டுக்கொண்டால் ஜனநாயகம் ஒரு கோட்டுக்குள்தான் இருக்கிறது’ என்று அரசியல் போகும் போக்கை அனாயசமாக பகடி செய்யும் பல கவிதைகளை எழுதி இருக்கிறார். ‘கனவுகளை நான் வெறுக்கிறேன். அவை எத்தனை அழகானவையாக இருந்தாலும் நிழல்களின் ஒப்பந்தங்களை விட நிஜங்களின் போராட்டங்களே எனக்கு பிடிக்கும்’ என்பதைப் போன்ற வாழ்வியலுக்கு வழிகாட்டும் பல வரிகளைப் படைத்திருக்கிறார்.

‘பேசக்கூடாதா? என்னதான் மௌனம் மொழிகளிலேயே சிறந்த மொழி என்றாலும் இன்னொரு மொழியை தெரிந்து வைத்துக் கொள்வதில் என்ன குற்றம்? பேசு’ இது போன்ற ஏராளமான காதல் கவிதைகள் எழுதி இளைய இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார். ‘அற்பர்களின் சந்தையிலே அன்பு மலர் விற்றவன் அன்பு மலர் விற்றதற்குத் துன்பவிலை பெற்றவன் முட்புதரில் நட்பு மலர் முளைக்கும் என்று நம்பினேன். முளைத்து வந்த பாம்புகளே வளைத்தபோது வெம்பினேன்’ இவ்வாறான தன்னிரக்கக் கவிதைகள் எழுதி பலரையும் கண்ணீர் விட வைத்திருக்கிறார். கவியரசர் கண்ணதாசனின் சுய இரக்கக் கவிதைகளில் காணப்படும் சுய தரிசன ஒளியை இது போன்ற கவிதைகளில் காண முடியும்.

புதுக் கவிதையில் சிறுகதைகள் எழுதி பரிசோதித்தார். அதில் ஒன்று ‘அகலிகை’. ‘கானகத்தில் பாழ்வெளியில் காத்திருக்கும் கல்லொன்று
கால் ஒன்று படுவதற்குக் காலம் வரவேண்டும் என்று. காற்றடிக்கும் இடி இடிக்கும் கண்ணீர் போல் மழை நனைக்கும் கானகத்தில் பாழ்வெளியில் காத்திருக்கும் கல்லொன்று கால் ஒன்று படுவதற்குக் காலம் வரவேண்டும் என்று’ என்று தொடங்கும் அந்த கவிதையைப் பல முறை சொல்லிச் சொல்லி மகிழ்ந்திருக்கிறேன். ‘அகலிகை’ பற்றி அவர் எழுதிய குறுங்காவியம் என்றே அதைக் கூறலாம்.

‘மனச்சிறகு’ என்ற அவருடைய மரபுக் கவிதை நூல் புதுக்கவிதையும் மரபுக்கவிதையும் கலப்புத் திருமணம் செய்து கொண்டதைப் போல் கவர்ச்சியாக இருக்கும். ‘அவளும் நட்சத்திரம்தான்’ என்றொரு சிறுகதைத் தொகுதி எழுதியிருக்கிறார். சோழ நிலா, மகுட நிலா போன்றவை அவரது வரலாற்று புதினங்கள். அவரது நேர் முகங்கள் ‘முகத்துக்கு முகம்’ என்ற அழகான தலைப்போடு வெளிவந்தது. ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ என்ற புதுக் கவிதை நூலுக்காக சாகித்ய அகடமி பரிசினையும் பெற்றிருக்கிறார்.

எளியவர், இனியவர், என் நெஞ்சில் என்றும் நிலைத்தவர் கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

*
அன்புடன்,
பிருந்தா சாரதி
செப்டம்பர் 5

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page