பிராமண மதம் தன் வேலையைத்தான் செய்யும் ஆனால் நாம் அதை ஏற்கலாமா?

நகர்வு

Bhraminism-Authority

கைவல்யம்

குடிஅரசு

21-2-1949

  மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேயின் இந்து சாமராஜ்யம் என்ற வைதிக சநாதனக் கும்பலின் லட்சியத்தை நிறைவேற்றிட பாரதிய ஜனதா கட்சி, தீவிரமாக முயன்று வருகிறது. இந்தச் சூழலில், தமிழகத்தில் பார்ப்பனர்களான எஸ்.வி.சேகர், மாலன், பத்ரி நாராயணன், ஒய்.ஜி. மகேந்திரன், ஹெச். ராஜா, சேஷாத்திரி போன்றோர் வைதிக சநாதன வருணாசிரமத்தை அமல்படுத்திட ஊடகங்கள் மூலம் துடிக்கின்றனர்.  பிறப்பு அடிப்படையில் பார்ப்பனரான வ.ரா., சின்னக் குத்தூசி, ஞாநி போன்றவர்கள்  வைதிக சநாதனத்திற்கு எதிராகத் தங்கள் வாழ்க்கை முழுக்கக் குரல் எழுப்பியுள்ளனர். ஆனால், நவீன வாழ்க்கைக்குச் சிறிதும் பொருத்தம் இல்லாமல், மனுவின் வழியில் நடக்க முயலுகிற பார்ப்பனர்களின் முன்னோடிகள்தான் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பை நிறுவி, முன்னர் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொலை செய்தனர் என்பது வரலாறு. நாட்டை மத அடிப்படைவாத அரசியலில் தள்ளிக் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் துணை போவதுடன், மீண்டும் வருணாசிரமத்தை நிலை நிறுத்திட பார்ப்பனர்கள் முயலுகின்றனர். இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், காந்தி கொல்லப்பட்டபோது, தந்தை பெரியாரின் குடிஅரசு(21-2-1949) இதழில் கைவல்யம் எழுதிப் பிரசுரமான பிராமண மதம் தன் வேலையைத்தான் செய்யும் ஆனால் நாம் அதை ஏற்கலாமாஎன்றகட்டுரை,  நிலவெளி இதழில் மறுபிரசுரம் ஆகிறது. வாசித்து விவாதிக்க வேண்டுகிறேன்.

       நண்பர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம், காந்தி கொலை: பத்திரிகைப் பதிவுகள் என்று  தொகுத்துப் பதிப்பித்திருக்கும் நூலில் இருந்து, ஒரு பகுதி, இங்கே தரப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, சுட்டுக் கொல்லப்பட்டபோது, சக்தி, திராவிட நாடு, வெள்ளி மணி, ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குடியரசு, பிரசண்ட விகடன், குமரி மலர், தமிழ் முரசு, தி இந்து போன்ற பத்திரிகைகளில் பிரசுரமான பதிவுகள், இன்றைய இந்திய அரசியல் சூழலில் மறு பேச்சுகளை உருவாக்குகின்றன. அவை, அவசியம் வாசிக்கப்பட வேண்டிய வரலாற்றுத் தகவல்கள்.- ஆசிரியர்

பிராமண மதம் தன் வேலையைத்தான் செய்யும் ஆனால் நாம் அதை ஏற்கலாமா?

மகாத்மா காந்தி அவர்கள் பெரியவர்களில் பெரியவர் என்று உலகமெல்லாம் சொல்லிவிட்டது. உலகத்திற்கு இவ்வளவு அறிமுகப்பட்டவர்கள் எப்பொழுதுமே இருந்ததில்லை. அப்பேர்ப்பட்ட பெரியவரை‘ இந்து மகாசபையைச் சேர்ந்த ஒருவர், சுட்டுக் கொன்றார். ‘இந்துக்களே! நீங்கள் தீண்டாமையை விட்டுவிடாமல் போனால் உங்கள் இந்துமதம் அழிந்துபோகும். இந்துக்களே! நீங்கள் சாதி வித்தியாசத்தையும், கீழ்மேல் என்பதையும் விட்டுவிடாமல் போனீர்களானால் நீங்களே அழிந்து போவீர்கள். உங்கள் மதத்தை  வியாபாரத் தோரணையில் கொண்டுவந்து, உங்கள் கோயில்கள் விபசார விடுதியாகவிருக்கிறது’என்று அவர் சொன்னார். இந்த வார்த்தைகளெல்லாம் சனாதன தருமமென்கிற பிராமணர்களுக்கெல்லாம் நேர் விரோதம். சனாதன இந்து, அது வேண்டும் அப்படியேயிருக்க வேண்டுமென்கிற இந்து, புராண இந்து, குருக்கள் கட்டுப்பாட்டை இந்து மதமென்று நம்பிக்கொண்டிருக்கும் இந்து, மதசம்பந்தமான வேஷங்களும், அபிநயங்களும், லாபங்களும் பிழைப்புகளுமுடைய இந்து, புரோகிதன் அர்ச்சகன், சாஸ்திரி, குரு முதலிய இந்து, தானதருமம் வாங்கிப் பிராமண போஜனமுண்டு வாழும் எல்லாப் பிராமண இந்து ஆகிய எல்லாம் இந்துவும் மகாத்மாகாந்தி வார்த்தையில் திருப்திகொள்ள மாட்டார்கள். எந்தப் பிராமணனும் சனாதன தருமத்திற்கு விரோதமாக நடப்பான். ஆனால் அதற்கு மாற்றமாக ஒரு சீர்திருத்தம் வந்தால் எவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். திருவையாறு ஆஸ்டல் சமபந்தி போசனத்தை உலகமெல்லாம் சுற்றி, எல்லா ஜாதியாருடனிருந்துண்ட ஆனரபில் சீனிவாசசாஸ்திரியே ஒத்துக்கொள்ளவில்லை என்றால்,  மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பேச்சில் ஒத்துக்கொள்வார்கள் என்றாலும் மறைவாக அதைக் கெடுக்க மறைவில் தந்திரமான பேச்சு, செய்கை எல்லாம் செய்வார்கள்.

மகாத்மாகாந்தி அவர்கள் தேசீயத்தை முன்னணியிலிருந்து நடத்திப் பலனுக்குக் கொண்டுவந்து செல்வாக்குப் பெற்றவரானபடியால் அவரை நேரடியில் பகைத்துக்கொள்ள முடியவில்லை. சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அவர்கள் வழக்கம். சமயம் கிடைத்தால் சனாதன தருமத்தை நிலைநிறுத்தவே, பார்ப்பனர்கள் பூர்வீக இந்து தருமத்தையும், இந்துக் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டுமென்று எழுத்துப் பிரசங்கமும் செய்வார்கள். இவர்கள் எவ்வளவு தூரம் இந்து தர்மத்திலும் ஏற்பாட்டிலும் இருக்கிறார்கள் என்று யார் கேட்பது? புத்தியிருப்பவன் சொல்வதை புத்தியில்லாதவன் கேட்டுத்தானே ஆக வேண்டும். சிறிதுசமயம் கிடைத்தவுடன் கல்விமந்திரி அவினாசிலிங்கம் செட்டியாரைக்கொண்டு, பண்டைய மத சம்பிரதாயங்களுக்கு விரோதமாக உபாத்தியாயர்கள் மாணாக்கர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாதென்று உத்தரவு போட வைத்து விட்டார்களே! பண்டைய மத சம்பிரதாயத்தில் தீண்டாமையும், வருணாஸ்ரமும்தானே முக்கியம். காந்திப் பக்தர்கள் வேலையைப் பார்த்தீர்களா? தீண்டாமையும் ஜாதி வித்தியாசமும் போக வேண்டுமென்றுதானே மகாத்மாகாந்தியின் உபதேசமும் எண்ணமும். “இனிமேல்  மகாத்மாகாந்தி சொல்லியதைப் பின்பற்றி நடந்து காட்டுவதே அவருக்குச் செலுத்தும் பக்தியும் மரியாதையும்”என்றுகூட்டத்தில் கோவிந்தாப் போடுகிறார்கள். அதோடு அவர்கள் பக்தி முடிந்துவிடும். தேசீய வாழ்வில் மகாத்மாவைத் தேசம் கொண்டாடியே தீரும். தங்கள் மேன்மைக்கு முட்டாள்களை ஏய்த்துத் தங்கள் முன்நிற்க  எதிலும் சேர்வார்கள். “எனக்குச் சாதியில்லை, எல்லா வீட்டிலும் சாப்பிடுவேன்”என்பான். சாப்பிடுவான். அவர்கள் வீட்டுக்குப் போனால் அங்கு வேறுமாதிரியாகவிருக்கும். அதிலும் சோறு பார்ப்பானுக்கு லாபமாகவும், நமக்கு நஷ்டமாகவுமிருக்கிறது. ஏய்த்துப் பழகினவனும், ஏமாந்து பழகினவனும் சரியாக நடக்க வேண்டுமென்பதைச் சொல்லுகிறது சுயமரியாதைச் சங்கம்.

உலகத்திலுள்ள இராஜாக்கள், இராஜப்பிரதிநிதிகள், இராசாங்கத்திற்குத் தலைமை வகிக்கும் பிரசிடெண்டுகள், மந்திரிகள், பிரபுக்கள், சேனாதிபதிகள், புத்த, மகமதிய, கிறிஸ்துவக் குருமார்கள் எல்லா ஜாதியார்களும் மகாத்மாகாந்தியவர்களை மகானென்றும் ஆத்மஞானி என்றும் மகாபெரியவரென்றும் புகழ்ந்து, வாழ்த்தி வருத்தம் தெரியப்படுத்தினார்கள். நமது நாட்டிலுள்ள ஆச்சாரிபீடங்கள், மடாதிபதிகள், ஜீயர்கள், லோககுரு, சமயக்குரு, ஜாதிக்குரு, புரோகிதக்குரு, அர்ச்சகக்குரு, சாஸ்திரி, கனபாடிகள் இனியும் எத்தனையோ பேர்கள், நமது சமயப் பெரியவர்கள், நமது சமயத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறவர்களான எத்தனையோ பேர்கள் மகாத்மாவை ஆத்மஞானி என்றும் பெரியார் என்றும் புகழ்ந்து, மரணதுக்கம் விசாரித்தார்கள். பிராமணர்கள்தவிர மற்றவர்களை மகான் என்றும், ஆத்ம ஞானி என்றும், புகழப் பிராமண மதம் இடம் கொடுக்கவில்லை. எவ்வளவு தப்பில் நடந்த பார்ப்பானாகவிருந்தும் மதவேஷம் போட்டு வேதத்தில் இரண்டு சுலோகம் தெரிந்தவனாகவிருந்தால் குருவென்றும், ஞானி என்றும் சொல்லுவார்கள். அதற்குத் திருஷ்டாந்தமாகத் திருவண்ணாமலையைப் பாருங்கள். ஊராரால் கொடுக்கப்பட்டுத் தமிழ்ப் பரதேசிகளால் சேகரம் பண்ணின மடமும், சொத்தும் தனியாகச் சாமியார் சம்பாதித்ததா? தனிச்சொத்தா? பொதுச் சொத்தா? என்கிற விவகாரம் வர, நான் சொந்தமாகச் சம்பாதித்தது என்று சாமியார் கோர்ட்டில் தீர்ப்புப்பெற்றுச் சொத்தையும் மடத்தையும் தன் சொந்தத் தம்பிக்கு ஒயில் எழுதிவைத்துத் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியாக இருக்கிறார். இவரை ரிஷியிலிருந்து பகவான்  ரமணரிஷியாக்கியிருக்கிறார்கள். இதில் பாருங்கள் ரிஷியின் யோக்கியதையையும் பகவான்தன்மையையும், பார்த்தீர்களா? இதற்கும் சமாதானம் சொல்லுவார்கள். அவருக்கும் தம்பி என்றும், அண்ணனென்றும், நீ என்றும், நானென்றுமுண்டா பற்றில்லாமலிருக்கும் கர்மயோகியல்லவா அவர் என்பார்கள். அதற்குமேல் நம்முடைய பாமரத்தன்மையும், பகுத்தறிவுச் சூனியமும் பாதத்தில் விழுந்து அங்கு பார்ப்பான் வயிற்றுக்குத் தொலைத்துவிட்டுத்தானே வருகிறது. எந்த அயோக்கியனும் எதையும் கூறித் தப்பித்துக்கொள்ள, பெரியார் சொல்லுவதுபோல  மதமிருக்கையில்  அவர்களுக்கு என்ன குறைவு?

பொய்யும்,  கற்பனையும், ஏமாற்றும்  நிறைந்த பிராமணமதத்திற்கு விரோதமாக இருப்பவர்கள்,  யாராயிருந்தாலும் அவர்களை எப்படியும் தொலைத்து விடுவார்கள். நந்தன், சிதம்பரம் கோயிலுக்குள்போக வேண்டுமென்றான். பெத்தான்  சாம்பன் சிவதீட்சை செய்துவைக்க வேண்டினான். இவர்களை நெருப்பில் போட்டு எரித்தார்கள். தீண்டாத சாதி கோவிலுக்குள் போவதும், தீட்சை பெறுவதும் வைதீக மதத்திற்கு விரோதம். நந்தனை நெருப்பில் குளிப்பாட்டித் தன்சந்நதிக்குள் அழைத்து வரும்படியாக நடராஜர் தீட்சதர்களுக்குச் சொன்னதாகச் சொல்லி நந்தனை நெருப்பில்போட்டு எரித்தஉடன் புதுவேஷ்டியும் பூமாலையும் ஒரு பார்ப்பானுக்குப் போட்டுவைத்து நந்தன் அக்கினியிலிருந்து எழுந்து வந்துவிட்டான் என்று கோவிலுக்குள் கூட்டிப் போனார்கள். பெத்தான் சாம்பானுக்கு முத்தி கொடுப்பது முறை என்று சிவபெருமான் குருக்களுக்குச் சீட்டு எழுதினதாகப் பொய்ப்பத்திரமெழுதிப் பெத்தான் சாம்பனை நெருப்பில் போட்டெரித்துச் சுவர்க்கத்திற்கு அனுப்பினார்கள். பெத்தான்சாம்பன் பெண்டாட்டி இராஜசபையில் முறை இட்டாள். அவனை அவன் விரும்பிய மோட்சத்திற்கனுப்பினோம். அதேபோல இந்த முள்ளிச்செடிக்கும் மோட்சம் கொடுக்கிறோமென்று அங்கிருந்த முள்ளிச்செடி ஒன்றைச்சுட்டு இதோ பார் முள்ளிச் செடி மோட்சம் போகிறதென்று கூப்பாடு போட்டு இராஜசபையைத் திருப்திப்படுத்தினார்கள். இந்தக் காலத்தில் செத்தவர்களைப் பிழைப்பிக்கும் சாமியார் இருக்கிறார் என்று நம்பி, டில்லிக்குக் கூட்டிக்கொண்டு போகும் பிராமண விசுவாசமுடைய மந்திரிகளிருக்கையில்,  அந்தக்காலத்தில் அதை நம்பிய மந்திரிகளிருந்ததில் ஆச்சரியமில்லை. அதுவுமல்லாமல் வாயால் சொன்னால் வாயில் ஆப்பு வைத்து அடி. மனதால் நினைத்தால் நெஞ்சில் ஆணி வைத்து அடி என்கிற பிராமண மததரும சாஸ்திரச் சட்டமிருக்கையில், உண்மை தெரிந்தவர்களும் வாய் பேசமுடியுமா? பூமியை விஷ்ணுவுடைய படுக்கை ஆதிசேஷனென்னும் ஆயிரம் தலையை உடைய பாம்பு தாங்கவில்லை. ஆகாயவெளியில் ஆகர்ஷணசக்தி தாங்குகிறது. கெருடன் அண்ணன் அருணன் ஏழு குதிரை பூட்டியரதத்தில் சூரியனை வைத்து வீதி சுற்றவில்லை. சூரியன் இருந்த இடத்திலேயே இருக்கிறது. அது பெரிய அக்கினி கோளம். பூலோகத்திற்கு வந்து நம் பெண்களுடன் கூடிப் பிள்ளை பெறாது. சிவபெருமான் நமது பெண்களின் கற்பை அழிக்கப் பூலோகத்திற்கு வரமாட்டார். அதுபோலவே விஷ்ணு வைகுண்டத்தைவிட்டுப் பூலோகத்திற்கு வந்து நமது பெண்கள் குளிக்கும்பொழுது கரையில் வைத்திருந்த சேலையை, எடுத்து மரமேறி நிர்வாணமாக இரண்டு கையையும் மேலே கூப்பினால்தான் சேலை  கொடுப்பேன் என்று சொல்லவுமாட்டார். இந்த வேலைதானா நமது சாமிகளுக்கு? அதற்காகவா பூலோகத்திற்கு எழுந்தருளுகிறார்கள். உலகத்திலுள்ள எந்தச் சாமியும் செய்யாத வேலையை, நம்ம சாமியும் செய்யாதப்பா. பால்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கோமியக்கடல், என்கிற   கடல்களில்லை. கங்கை சிவபெருமானின் சடையிலிருந்து உற்பத்தியாகி ஓடி வருவதல்ல. இமயகிரியிலிருந்து பனி உருகிவருகிறது. அகஸ்தியர் கங்கையிலிருந்து கமண்டலத்தில் கொண்டுவந்து பொதிகையில் ஊற்றிய தண்ணீர்ப் பிரவாகமல்ல காவிரி. பொதிகையில் மழைபெய்து அதனால் வருவது என்கிற   பூகோள சாஸ்திரத்தை உபாத்தியாயர்கள் சொல்லி விட்டார்களாம். இவை பண்டைய மத சம்பிரதாயங்களுக்கு, விரோதமென்று இராஜாங்கத்திற்கு தெரிந்திருக்கிறது. இனிமேல் அப்படிச் சொன்னால் உபாத்தியாயர்களைத் தெண்டிப்போமென்று இந்தக் காலத்து ஆங்கிலேய மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டிருக்கும் கல்வி மந்திரியே உத்தரவு போட்டால், பண்டைய மத சம்பிரதாயத்திலேயே அழுந்திக்கிடக்கும் ஸ்மிருதிச் சட்டமந்திரிகள் என்ன செய்யமாட்டார்கள்?

பிராமண வைதீகமதவாதிகள், அவர்கள் மதத்திற்கு விரோதம் பேசினவர்களையும், பகுத்தறிவுவாதிகளையும் அழித்தே விட்டார்கள். இந்து ராஜாக்களின் உதவி பெற்றிருந்ததால், சாதாரண ஆட்சேபனைகளுக்கும் கொடுமையாகத் தண்டித்தார்கள். பழைய ராஜசபையில் பிராமணப் புரோகிதன் ஒரு மந்திரியாகவிருப்பான். மதவிஷயக் கேசுகளிலெல்லாம் அவன் தீர்ப்பே முடிவு. தீர்ப்புக்குச் சட்டம் மனுஸ்மிருதியே. திருமலைநாயக்கர், சிவாஜி காலத்திலுமப்படியே நடந்தது. பிராமணன் எந்தக் குற்றம் செய்தாலும் தண்டனை கிடையாது. பிராமணன் கொலைக்குற்றம் செய்தால் அவன் தலையைச் சிரைத்து அசலூருக்கு அனுப்பிவிட வேண்டியது. மற்ற குற்றங்களுக்குத் தண்டனை எப்படியிருக்கும்? நீங்களே ஆலோசித்துக்கொள்ளுங்கள். “பார்ப்பார் பெருத்து வடுகன் துரைத்தனம் பாழ்த்ததுவே”என்று விஜயநகரம் அழிந்ததைக் கண்டு ஒரு  புலவன் பாடினான் .விஜயநகரம் அழிந்தபின் அவன் பாடினதால் அந்தப்புலவன் தப்பியிருக்கலாம். பதினைந்து வருடத்திற்கு முன் பாலக்காட்டுக்குப் பக்கமுள்ள ஒரு கிராமத்தில்நடந்த, ஒரு வைதீக மதத்தின் தீர்ப்பைச் சொல்லுகிறேன். நம்பூதிரிப் பிராமணர்கள் மலஜலம் கழிவிற்குப் போய்த் தண்ணீருக்கு ஆற்றுக்கோ, குளத்திற்கோ சுத்திசெய்ய வருகையில் கோவணத்தைத் தூக்கி ஆண்குறியைக் கையில் தொட்டுக்கொண்டு வருவார்கள். அதேபோல ஒருநம்பூதிரிப் பிராமணன் ஒரு குளத்திற்குப் பக்கம் வந்தான். அந்தக் குளமுள்ள கிராமத்திற்குப் புதிதாகப்போயிருந்த உத்தியோகஸ்தர்களின் பெண்கள் இரண்டுபேர், அதில் குளித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வேலைக்காரன் பெண்கள் குளிக்கிறார்கள் அங்கே  போகப்படாதென்று தடுத்தான். நம்பூதிரி கேட்கவில்லை. தள்ளினான். நம்பூதிரிக்குக் கோபம்வந்து, அந்த ஊர்ப் பெரிய பணக்கார நம்பூதிரியிடம் சொன்னான். உடனே ஜெம்பியான அந்த நம்பூதிரி, அந்த ஊரிலிருக்கும் எல்லா நாயர் குடும்பங்களும் வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட வேண்டுமென்று உத்தரவு போட்டான். உத்தரவு போட்ட நம்பூதிரி ஜெம்பியானதால், பூமியெல்லாம் அவனுடையது. குடியிருப்பு மட்டும்தான் குடியிருப்பவர்களுக்குச் சொந்தம். குளத்திற்குப்போன நம்பூதிரிக்கு ஆட்டிய  நம்பூதிரி என்று பெயர். ஆட்டிய நம்பூதிரி என்றால் நம்பூதிரிப்  பிராமணர்களுக்குப் புரோகிதன். அதனால் எல்லா நம்பூதிரிகளுக்கும் கோபம் வந்து எல்லோரும் ஒன்று சேர்ந்தார்கள். குடிகளெல்லாம் போய்க் கெஞ்சிக் காலில் விழுந்தார்கள். அந்த இரண்டு பெண்களும் சபைக்குவந்து விழுந்து கும்பிட ஆளுக்கு 25 ரூபாய் குற்றம் வைக்கத் தீர்ப்பு கூறினார்கள். அப்படியே நடந்தது. ஆங்கில உத்தியோகஸ்தர்களும் ஆங்கில எல்லையுமானதால் இவ்வளவோடு வைதீகம் நீதியை முடித்தது. இல்லையேல் குன்னம்பாறை ஏற்ற வேண்டியதுதான். குன்னம்பாறை என்றால் பாலக்காட்டு இராஜாக்கள் குற்றவாளியைக் கொலை செய்யுமிடம். மலையாளத்தில் மத ஆதிக்கம், பூமி ஆதிக்கம் உடையவர்கள் நம்பூதிரி பிராமணர்கள். அதுவுமல்லாமல் இராஜாக்கள் பிரபுக்களான நாயர்கள் வீட்டில் சம்பந்தமென்கிற கலியாணமும் உடையவர்கள். இத்தனையுமிருப்பதால் அவர்கள் இஷ்டம் சட்டம். உத்தரவுதான் நடவடிக்கை. அரிசியும், சர்க்கரையும் பாலும் சேர்த்துச் செய்வதற்குப் பால்பாயசமென்று பெயர். அது மலையாளத்தில் விஷேடம். அதைத் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் செய்து சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் குற்றம், தண்டனை. உளுந்துமாவும் கொஞ்சம் அரிசிமாவும் சேர்த்துச் செய்வதற்கு மலையாளத்தில் வப்படமென்று பெயர். அதைத் தாழ்ந்த சாதிக்காரர்கள் பொரித்துச் சாப்பிடக்கூடாது. இப்படியே அனேக ஆக்கினைகள் மலையாளத்தில் அநேககாலம் நடந்துவந்தது. இங்கிலீஸ் நாகரீகமும் இங்கிலீஸ் படிப்பும் பரவினதால், எல்லாம் குறைந்து போயிற்று. மலையாளத்து ராஜாக்களெல்லாம் நம்பூதிரிப் பிராமணர்களின் பிள்ளைகளானாலும் இராஜா ஜாதியில் வித்தியாசத்தைப் பிராமணர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். கொச்சி ராஜா பிராமணப்பந்தியில் சாப்பிடலாம். திருவனந்தபுரத்து ராஜா பிராமணப்பந்தியைப் பார்க்கலாம். இப்படியே ஒருவருக்கொருவர் வித்தியாசங்களை, மதத்தின் பெயரால் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். அதனால் சண்டைதான். ஒற்றுமையில்லை. இராஜாக்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டாலும், பிராமணனுக்கு லாபமே ஒழிய நஷ்டமில்லை. பிராமணன்  சிப்பாயாய் இருப்பதுமில்லை. சாஸ்திரமுமிடந் தரவில்லை. சண்டையில் ஜெயித்தவனுக்குக் கிடைத்த பொருள்களையெல்லாம், பிராமணனுக்குத் தானம் கொடுத்துவிட வேண்டுமென்பது பிராமணனுடைய தருமசாஸ்திரமென்கிற ஸ்மிருதியின் கட்டளை. இந்தநிலையில் மலையாளமிருந்ததால், டிப்பு சுல்த்தான் வெகு சுளுவாக மலையாளத்தை ஜெயித்தார். அதைவிடச் சுளுவாய் ஆங்கிலேயர்கள் கைக்கு வந்தது. இப்பொழுது அவரவர்கள் கைக்கு வந்திருக்கிறது. பிராமணர்கள் பழைய ஏட்டைத் திருப்பிப் பார்க்கிறார்கள். எங்கெல்லாம் சந்து கிடைக்கும் அங்கெல்லாம் நுழைக்கலாமென்றிருக்கிறார்கள். கோடிநாம அர்ச்சனை. லெட்ச புஸ்ப அர்ச்சனை, லெட்சதீபம், நவக்கிரகபூஜை, ஜெபம் எல்லாம் செய்யப் புறப்பட்டுமிருக்கிறார்கள். அதிலும் இவர்களுக்கு லாபம்தான். கடைக்காரனுக்குப் பத்துரூபாய் அதிகச் சம்பளம் கொடுக்காத வியாபாரியும் இரண்டு படி நெல்லுக்கூட  அதிகம் கொடுக்காமல் வயலில் வேலைசெய்யும் தாழ்ந்த சாதியார்களை வயிறு ஒட்டவைக்கும் மிராஸ்தாரர்களுமிருக்கையில், அர்ச்சனைக்கும் தீபத்திற்கும் குறைவென்ன? இதனால் மகாத்மாவின் ஆலோசனைக்கோ,  அவர் காட்டிய வழிக்கோ ஏதாவது உபயோகமுண்டா? மகாத்மாவின் வழியைப் பின்பற்றி நடக்கச்செய்து விடுமா? “கடவுள் அருள் வேண்டாமா? கடவுளுக்குச் செய்வது குற்றமா?” என்கிற வார்த்தையே மனிதனை ஏமாற்றுவதுபோலவே கடவுளையும் ஏமாற்றும் வார்த்தை. உண்மையும் சத்தியமும்தான் கடவுளிடமும் பலன் தரும். கடவுளுக்குச் சத்திய சொரூபியென்கிற பெயரேதவிர,  அர்ச்சனை நந்தாவிளக்கு சொரூபியென்கிற பெயரில்லை. ஒவ்வொரு வைதீகச் சமயவாதிகளும் மனிதனையும், கடவுளையும் ஏமாற்றக்கூடாதென்று கேட்டுக்கொள்ளுகிறோம். அதைச் சொல்லவே சுயமரியாதைச் சங்கம் வந்ததேயல்லாமல் எந்தச் சமூகத்தையும் பகைத்துக் கொள்ளவல்ல.

பிராமண மதஸ்தவர்கள் அநேகர் உத்தமபுத்தர்களை அழித்தார்கள். நமது தமிழுக்குக் காவியமெழுதி, இலக்கியமெழுதி, இலக்கணம் நிகண்டு செய்து, தமிழைக் காப்பாற்றி நிலைநிறுத்தின அநேக சமணப் பணடிதர்களைக் கழுவில் போட்டு அழித்தார்கள். யாகம் கூடாது, உயிர்க்கொலையால் துக்கநிவர்த்தியும் மோட்சமுமில்லை என்று சொன்னதுதான் அவர்கள் செய்த குற்றம். இந்தக் குற்றத்திற்குப் புத்தர்களையும் சமணர்களையும் அழித்த திருவிளையாடல் புராணத்தையும், பெரிய புராணத்தையும் படித்துக் கேட்டுச் சைவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். புத்தன் சக்கரமல்ல நமது தேசீயக்கொடியில் பறப்பது. புத்த அசோகரின் சத்தியம் நேர்மை நீதியேயெல்லோருக்கும் பொதுவாய்ச் சக்கரமாகப் பறக்கிறது. சைவர்களே! எங்கும் நிறைந்த பொருள் எதுவோ அதற்குச் சிவமென்று பெயர். ஆசையற்றவிடத்தில்தான் அப்பொருளைக் காணமுடியும். நிராசையின்றித் தெய்வமுண்டோ? ஆசையற்றவிடம் சிவம்என்று சொன்னவர்களும் உங்கள் பெரியவர்கள்தானே? நீங்கள் சைவசமயத்தை வியாபிக்கப் பிரசாரம் செய்யப் போகிறதாகச் சொல்லுகிறீர்கள். சைவப்பிள்ளைகள்தவிர, மற்ற சைவசமயப் பிள்ளைகளைத் தேவாரப் பாடசாலையில் சேர்ப்பதில்லை. அது நீதியா? நேர்மையா? மாம்சம் தின்கிறார்கள் என்பீர்கள். நீங்கள் சேர்த்துக்கொண்டால் மாமிசத்தைவிட்டு விடுகிறார்கள். காட்டு மிருகத்தை அடித்துப் பச்சைமாமிசத்தைத் தின்ற பண்டையக்காலத்துப் பரம்பரைதானே நாமெல்லாம். சைவச்சாமியில் மாமிசம் திங்காத ஒரு சாமியைச் சொல்லுங்கள். சமயக் கொடுமை, சாதி ஆணவம், ஆசாடபூதி வேஷம், அந்தரங்கப் புரட்டு எல்லாம் விட்டுவிட்டுச் சமரசமாய் நீதியும் நேர்மையும் கைக்கொண்டு அதையே பின்பற்ற வேண்டுவதே மகாத்மாகாந்தியைப் பின்பற்றுவதாகும். அதுவே நன்மையுமாகும்.

 காந்தி படுகொலை; பத்திரிகைப் பதிவுகள். கடற்கரய் மத்தவிலாச அங்கதம். சென்னை; சந்தியா பதிப்பகம். பக்கம்: 368, விலை:ரூ. 360/-. தொடர்புக்கு: 044-24896979

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page