திரை பிம்ப உருவாக்கமும், ஊடகங்களின் மிகையான புனைவுகளும்

நகர்வு

உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் திரைப்படம், தமிழில் பெற்றுள்ள வரவேற்பை வேறு எங்கும் பெறவில்லை. தமிழர்கள் தங்களைத் திரைப்படங்களுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்தவர்கள் இல்லை என்பதால், திரையினை ஏற்கும் இடங்களும் விலக்கிப் பார்க்கும் இடங்களும் உண்டு. தமிழக மக்கள் தெளிவாகத் திரையினை மட்டுமே அரசியலுக்கான அடித்தளமாகக் கொள்ளாததால், உலகின் மாபெரும் நடிகரான சிவாஜிக்குக் கடைசி வரை அரசியலில் வெற்றி கிட்டவில்லை. ஆனாலும், சிவாஜி கணேசன் குறித்த உயரிய மதிப்பினை இன்றளவும் வைத்திருக்கின்றனர். திரையின் பிம்பத்தை ரசிப்பதும், நடிகரை ஆதரிப்பதும் ஒன்றல்ல, அவை வேறு வேறானவை என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்.

சமீப காலமாகப் பல ஊடகங்கள், தமிழ் மக்களின் அரசியலோடு தொடர்புடைய ஆளுமைகளின் பிம்பங்களை மலினப்படுத்துவது, கொச்சைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது என்பதைத் திட்டமிட்டு செய்து வருவதை மக்கள் அறிவர். இதுநாள் வரை ‘தமிழ்நாடு சினிமா மாயைக்குள் வீழ்ந்து கிடக்கும் கேவலமான மாநிலம்’, ‘தமிழர்கள் தங்களின் அரசியலை சினிமா நடிகர்களிடம் ஒப்படைக்கும் அறிவற்ற விசிலடிச்சான் குஞ்சுகள்’, ‘தமிழகம் என்றுதான் சினிமாக் கவர்ச்சிக்கு டாடா சொல்லிவிட்டு உண்மையான அக்கறையுடையவர்களை ஆதரிக்குமோ’ என்றெல்லாம் ஊடகங்கள் தொடர்ந்து பேசி வந்திருப்பது நம் நினைவுக்கு வரும். ஆனால், அதே ஊடகங்கள் தற்போது எந்தவிதக் கூச்சமும் இல்லாமல், இந்த மாநிலத்தில் வாழ்ந்தபோதும் மக்களின் எந்தப் பிரச்சினைகளிலும் அவர்களுடன் போராடுவது என்றில்லாமல் கருத்துகூடச் சொல்வதைத் தவிர்க்கிற / தயங்குகிற நடிகர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போன்ற பொய்யான கட்டமைப்பினைச் செய்கின்றன. எனவே, பிம்ப உருவாக்கம் என்பது இங்கு என்னவாக உள்ளது? அதன் காரணிகளான சக்திகள் யாவை? யோசிக்க வேண்டியுள்ளது.
பிம்பம் என்கிற சொல் கொடுக்கிற பொருளைவிட பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள IMAGE என்கிற சொல்லோ சற்று கூடுதலான பொருள் கொள்ளலை அளிக்கிறது. இரு சொற்களின் ஊடாகவும் பயணிக்கலாம்.

திரைப்படம் என்கிற நவீன கதை சொல்லும் வடிவத்திற்கும், மரபான கதை கூறும் வடிவங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு என்பது பிம்ப உருவாக்கத்தில்தான். கதையினைச் சொல்லுதல், எழுதுதல், நடித்துக்காட்டுதல் என்கிற வகைமைகளுக்குள் கதைக்குள்ளாகச் சித்திரிக்கப்படும் பாத்திரங்கள், நிலவெளி, காலநிலை அனைத்துமே கேட்கிற , வாசிக்கிற, பார்க்கிற மனிதரின் மனதிற்குள் பிம்பமாக உருவகித்துக் கொள்ளப்படும். மனிதரின் இந்தக் கற்பனை சக்தியை, கற்பித சாத்தியத்தை சினிமாவோ தனக்குரியதாக எடுத்துக் கொள்கிறது. எனவே, இதுவரை அகத்தினுள் நடைபெற்ற பிம்ப உருவாக்கச் செயல்பாடானது திரையிலோ அகமும் புறமும் என்பதாக மாறிவிடுகிறது. இந்தப் புதிய பிம்ப உருவாக்கத்தை கதை, ரசிகர், ஊடகங்கள் என்கிற மூன்று கூறுகளின் வழியாக விளங்கிக்கொள்வது எளிது.
கதையின் வழியாக உருவாக்கப்படும் பிம்ப உருவாக்கம் என்பதே முதலாவதும் முதன்மையானதும் ஆகும். அவ்வாறான கதைகளில் தனக்கு / சமூகத்திற்கு இணக்கமான, ஏற்புடைய பிம்பங்களுடன் மட்டுமே ரசிக மனம் கொள்ளும் ஈர்ப்பு நிகழும். அதன் காரணமாக ரசிகரின் அகத்திற்குள், அந்தக் கதையின் கதாபாத்திர பிம்பத்திற்குள் பொருந்தி, நடித்த நடிகர்மீது உருவாகும் பிம்பமும் அதன் தொடர்ச்சியான பிம்ப உருவாக்கமும் இரண்டாம் வகையாகும். இவ்விரண்டு கூறுகளின் பிம்ப உருவாக்கச் செயல்பாடுகள் , இயல்பான தன்மைகள் வழியாக வளர்ச்சி அடைபவை. தமிழில் மேற்காணும் இரு வகையை விடப் பெரியதும் இயல்புக்கு மாறானதுமான, ஊடகங்கள் உருவாக்கும் பிம்ப உருவாக்கங்கள் மூன்றாவது வகை ஆகும்.

கதையின் / திரையின் பிம்பச் சித்தரிப்பு

தமிழ்த்திரையானது தொடக்ககாலப் புராண, மதக் கதையாடல்களிலிருந்து விலகி, மக்கள்சார் நவீனக் கதையாடல்களுக்கு உரியதாக மாறிய பின்னர் நாயக பிம்பம் கூடுதல் கவனம் பெறத் தொடங்கியது. நாயகத் தன்மைக்குள் சூழ்ச்சி / தந்திரம், ஏமாற்றுதல் போன்ற கூறுகள் தவிர்க்கப்பட்டதும் அந்தப் பிம்ப உருவாக்கம் இயல்பாகத் தமிழின் தொல்கூறின் மேல் நிலைத்துவிட்டது. மக்களை மையப்படுத்திய கதைகளின் வழியான பிம்பங்கள் கூட்டு அறம் சார்ந்ததின் தொடர்ச்சியாகவும் நவீன அரசியல் சிந்தனையின் வழியான நகர்தலாகவும் ஒருங்கே உணரப்பட்டதால், மாபெரும் தலைமைக்குரியதாகியது. எனவே, அவை நேர்மையைவிட அதனுடன் இணைந்த வீரமிக்கதாக, அதிகாரக் கட்டுமானங்களை மக்களுடன், மக்களுக்காக எதிர்கொள்ளும் தன்மையுடையயதாக நாயக பிம்பம் செறிவானது. ஆனால், இதற்கு மாறாகத் தனிமனித சாகசம், கொண்டாட்டம், அகந்தை போன்ற கூறுகளைக்கொண்ட கதைகளின் பிம்பங்கள் வெறுமனே கதைகளுடைய பாத்திரங்களாக மட்டுமே தேங்கிவிடுகின்றன.


ரசிகர்களின் பிம்ப உருவாக்கங்கள் :

தமிழ்த்திரையின் கதைளது பிம்ப வார்ப்புகள், தமிழ்ப் பார்வையாளரால் ஏற்று, அங்கீகரிக்கப்பட்டுத் தொடர்ந்து கொண்டாடப்படுதாவகும். இத்தகைய கதைகளின் பாத்திர / பிம்ப உருவாக்கத்தைச் சிலாகித்து மகிழும் ரசிக மனம் அவ்வாறான பிம்பங்களுக்கு உயிரூட்டும் நடிகரைக் கொஞ்சம் கவனிக்கத் தொடங்குகிறது. நாளடைவில் கதையின் நாயகனது பிம்பப் படிமம் பிடிக்கப் பிடிக்கப் பாத்திரமேற்கும் நடிகரை மேலும் பிடிக்கவே செய்யும். இந்நிலையில், ரசிகர்கள் கதையின் பிம்ப உருவாக்கத்திற்கு வெளியே / இணையாகத் தமது மனவெளிக்குள், நடிகரின் பிம்பம் குறித்தான வார்ப்பில் ஈடுபடுகின்றனர். கொஞ்சமாகத் தன்னைச் சுற்றியுள்ளோரிடம் தனது பிம்ப ரசிப்பை வெளிப்படுத்துகின்றனர். தன்னையொத்த பிம்ப ரசிப்புத் தன்மையுடையவர்களுடன் இணைகின்றனர். கூடிப் பேசி, மகிழ்ந்து தாம் உருவாக்கிய பிம்பத்தின் சிறப்பை பகிர்ந்து வளர்த்தெடுக்கின்றனர். வெகு சிலர் மன்றங்கள் அமைக்கின்றனர். இவை, பொதுவாகப் பல மொழிகளில் நடைபெறும் செயல்பாடுகள்தான் எனினும் தமிழில் முக்கியமானதும், தனித்துவமும் பெறுகின்றன. தமிழ் ரசிக மனதிற்குள் உருவாகும் பிம்பக் கட்டமைப்புக்கும் அதன் விளைவான பிம்ப உருவாக்கத்திலும் கதை, ரசிகர் எனும் இரு அலகுகளுடன் தமிழ்ச் சமூகத்தின் கூட்டுத் தன்னிலையே முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது. உலகமெங்கும் திரையின் கதை பிம்பத்திற்குள் நடிக்கும் நடிகருக்குரிய அடிப்படையாக இருக்கும் கூறுகள் மொழி, இனம் மற்றும் அவற்றுள் உயர் மேட்டிமை ஆகும். இன்னும் சொல்லப்போனால் கதையைவிட, கதையினைத் திரையில் நிகழ்த்திக் காட்டும் பிம்ப உருவாக்கமே பிரதானமானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, உலகத்தைக் காப்பாற்றுவதான ஹாலிவுட்டின் ஆங்கிலக் கதையின் நாயக பிம்பத்திற்குள்ளும் அமெரிக்காவின், வெள்ளையின நடிகர்களின் பிம்பப் பொருத்தம் மட்டுமே நிகழமுடியும். அங்குள்ள கறுப்பினத்தவருக்குக்கூட வாய்ப்பு இல்லை. அங்கே அப்படி என்றால், இங்கும் அவ்வாறேதான். ஹிந்திப் படத்தினுள் ஹிந்தி நிலம் எனப்படும் பகுதியில் இருந்து வருவோரின் பிம்பம் மாத்திரமே பொருந்துகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற திராவிடப் பகுதிகளிலும் கூட இதே நிலையே உள்ளது. ஆனால், தமிழில் மட்டும் கதையின் பிம்ப உருவாக்கமே அடிப்படைக் கண்ணி என்பதால் அந்த பிம்பத்தினைத் தாங்கி, ஏற்று நடிப்பவரின் பிம்பம் இரண்டாம்பட்சம் மட்டுமே.


தமிழ்த்திரைக்கான கதையினுள், ‘நாயக பிம்ப உருவாக்கத்தில் ’ தமிழ் அறம் சார்ந்த நிலைப்பாடு முக்கியமாகிற அளவுக்கு, அதனைப் பிரதிபலிக்கும் நடிகர் தமிழராக இருந்தே ஆக வேண்டும் என்பதான உலகின் பிற பகுதிகளில் உள்ளது போன்ற கட்டாயம் / இனவாதம் இல்லை. அதனால்தான், கதையின் நாயக பிம்பத்திற்குள் தமிழரான சிவாஜிகணேசனின் பிம்பத்தைவிட, மலையாளியான மருதூர். கோபாலமேனன். ராமச்சந்திரமேனன் எனும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தையே முதலாவதாக்கினர். திரைக்கு உள்ளேயும் திரைக்கு வெளியேயும் எம்.ஜி.ஆரின் பிம்பம் ஒரேமாதிரியாகவே உருவாகியது. பெரியார், காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் இருந்தபோதே, அவர்கட்கு எதிரானது என்றபோதும் எம்.ஜி.ஆர். தைரியமாக, தமிழ் ஓர்மையில் எழுந்த திராவிட சிந்தனையாளராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். படங்களின் பிம்பங்களுக்குள் இருந்த தைரியமான, வேகமான நடிகராகவும், மக்களின் பக்கம் நிற்கிற அரசியலாளராகவும் இணைந்த அவரின் பிம்ப உருவாக்கம் ரசிகர்களிடம் மேலும் மேலும் வலுப்பெற்று அண்ணாவின் தம்பியானதால், மாபெரும் தலைவனாக்கியது. முக்கியமாக, தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளுடன் இணைந்தே எப்போதும் பயணித்ததால் எம்.ஜி.ஆர் மீதான பிம்ப உருவாக்கம் அவரது ரசிகர்களிடம் இருந்ததைப் போலவே மக்களிடமும் தொடர்ந்து அழுத்தமாக உருவாகியது. உலகின் பேரதிசயமாகத் திகழ்வது, திரை நடிகர் ஒருவரது பிம்பம், அவர் மறைந்து கால் நூற்றாண்டுகள் கடந்த பின்பும் உயிரோட்டமுடையதாக இருப்பதாகும். அது, தமிழில் எம்.ஜி.ஆருக்கு இன்றும் உள்ள செல்வாக்கே ஆகும். அவரை மறுத்து, அரசியல் பேச எந்த அரசியலாளரும் இப்போதும் இருப்பதாகத் தெரியாத அளவு அவருடைய கதை (திரை), ரசிகர் மற்றும் தமிழ் மக்கள் ஆகிய கூட்டு பிம்ப உருவாக்கம் மிக வலிமையாக உள்ளது.


ஆனால், எம்.ஜி.ஆர். அதிகாரத்திலிருந்தபோதே அவரை எதிர்த்துத் தைரியமாக அரசியல் பேசிய நடிகர் டி.ராஜேந்தர். டி.ஆரின் படங்களைக் கால்கடுக்க வரிசையில் நின்று பார்த்து வெள்ளி விழாக்களாக்கியவர்கள் அனைவரும் அவரது அரசியல் ஈடுபாட்டை ரசிக்கவில்லை. அவரின் பிம்பம் போல முடி, தாடி வைத்துக்கொண்டு, டி.ஆரின் பிம்ப உருவாக்கத்தை நிகழ்த்திய வெகுசிலர்போல மிகக் குறைவான ஆதரவை மட்டுமே அரசியலில் கொடுத்தனர். அதே போல எம்.ஜி.ஆரால் கலை வாரிசு என அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் மற்றும் ராமராஜன் போன்ற நடிகர்களின் அரசியல் பிரவேசங்களின் போதும் அவர்களது பிம்ப உருவாக்கத்தினை ரசித்துக் கொண்டாடியவர்களும் முழுமையாக உதவவில்லை.

ஊடகங்கள் கட்டமைக்கும் மிகைபடுத்தப்பட்ட புனைவுகள்:

கதையின் பிம்பச் சித்தரிப்பும் அதனை ரசிக்கும் மனங்களில் நிகழும் பிம்ப உருவாகுதல்களும் ஒன்றுபடும்போது மட்டும் ரசிகர்கள் மகிழ்கின்றனர். அவ்வாறு பொருந்தாதபோது தாங்கள் மகிழ்ந்து உருவாக்கிக் கொண்ட பிம்பங்கள் நடித்த படமே என்றாலும் கண்டு கொள்வதில்லை. எனவே, தமிழில் கதையின் நாயக பிம்ப உருவாக்கமே மையம் என்பதும் அதனையேற்று நடிக்கும் நடிகரின் மீது ரசிகர்கள் கட்டமைக்கும் பிம்பம் துணைமை மட்டுமே என்பது விளங்கும். திரை, ரசிகர் எனும் இரு கூறுகளின் வழியான பிம்ப உருவாக்கங்கள் இயல்பானவை. ஆனால், இவ்விரண்டிற்கும் தொடர்பே இல்லாததாகவே ஊடகங்களின் பிம்ப உருவாக்கங்கள் உள்ளன.
காலனியத்தின் விளைவாக, இந்தியாவில் நவீனத்துவம் அறிமுகமானது எனக் காரல் மார்க்ஸ் மதிப்பிடுவார். காலனியத்தால் மேற்கின் நவீன கலை, இலக்கிய வடிவங்களும் இங்கு அறிமுகமாகின. திரைப்படமும் அவற்றுள் ஒன்று. ஆனால், பிற வடிவங்களைவிட சினிமா மட்டுமே பெரும் வணிகப் பண்டமாகியது. அச்சு ஊடகங்களான நாளிதழ்களுக்கும் வார இதழ்களுக்கும் ‘சினிமா’ இலவசமான மூலதனமாகவும் தொடர்ந்து மிகுந்த பணம் சம்பாதிக்கிற கச்சாப் பொருளாகவும் ஆக்கப்பட்டது. திரைப்படத்தை எடுப்பவர்கள் முதல் போடுகிறார்கள், இலாபம் / நஷ்டம் பார்க்கிறார்கள். அவ்வாறே, படத்தைப் பார்க்கிறவர்கள் பணம் கொடுத்து மன மகிழ்வை, கொண்டாட்டத்தை / எரிச்சலைப் பலனாக அடைகிறார்கள். ஆனால், திரை விளம்பரம், திரைப்படம் பற்றிய செய்திகள், துணுக்குகள், கிசுகிசுக்கள், தொடர்கள், நடிகர், நடிகையரின் அந்தரங்கம் குறித்த தகவல்கள், அவர்களின் கவர்ச்சியான புகைப்படங்கள், அவர்களைப் பற்றிய கட்டுரைகள் எனத் தொடர்ந்து ‘சினிமா’வைத் தங்களுக்கான வணிகப் பண்டமாக்குபவை ஊடகங்கள் மட்டுமே.

தமிழரின் எழுதும் மரபானது அனைத்து மதங்களுக்கும் முற்பட்டது என்பதால் மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே பரவலான எழுத்தறிவைப் பெற்றிருந்தது தமிழ்ச் சமூகம். இடைக்காலத்தில் வைதிக மதத்தின் தாக்கத்தால் விலக்கி வைக்கப்பட்டிருந்த எழுத்தறிவைக் காலனியம் அளித்த நவீனக் கல்வி வழியாக, மீண்டும் அனைவருக்குமானதாக ஆக்கும் முயற்சிகள், இங்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே நடந்துள்ளன. காலனிய இந்தியாவில் சென்னை மாகாணத்திலும் / குடியரசு இந்தியாவில் தமிழ்நாட்டிலும் இத்தகைய செயல்பாடுகள் அதிகமாக நிகழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. மேலும், மூவாயிரமாண்டு இலக்கியங்களிலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட எளிய வாழ்வியல் உண்மைகளே அதிகம் என்பதால், எழுதப்பட்டவை உண்மை என்பதாக ஏற்றுக்கொள்ளும் மன நிலையும் தமிழ் மக்களிடம் உண்டு. ஆனால், ஊடகங்களுக்கு…?

தமிழ்த் திரைப்பட உலகில், தொடக்கத்தில் அச்சு ஊடக முதலாளிகளே சினிமா முதலாளிகளாகவும் இருந்துள்ளமை கவனிக்கப்பட வேண்டியதாகும். நாளிதழானாலும் வார இதழானாலும் வாசகப் பரப்பை விரிவுசெய்து வணிகத்தைப் பெருக்கிடப் பெரும்பாலும் இலவசங்களை வழங்குவது, திரைத்துறைச் செய்திகளையும் படங்களையும் வழுவழுப்பான காகிதத்தில் வெளியிடுவது என இரு உத்திகளைக் கையிலெடுத்தன. அவை, ஒரு நிகழ்வை, மக்கள் இயக்கத்தை, சமூகப் புரட்சியை இருவிதமாகச் சொல்லும் முறைகள் உண்டு. முதலாவது, மத அடிப்படையில் விளக்கும் முறையாகும். அவ்வகையில் கடவுள் உலகைப் படைத்தார், அவதரித்தார் என்பவற்றைப் போலவே ‘இந்தத் தலைவரால்தான் போராட்டம் நடந்தது’, ‘இவராலேயே விடுதலை கிடைத்தது’, ‘இவர் தூண்டிவிட்டே கலவரம் வெடித்தது’, என எதனையும் ஒற்றைமையப் புரிதலுடன் மக்களை மறுக்கும் தனிமனித பிம்பச் சித்திரிப்பை வளர்த்துக்கொண்டேயிருப்பது. தலைமை தாங்கும் / முன்னணி மனிதரின் பங்கு முக்கியமானதுதான் என்றாலும் மக்களின் ஏற்பிலேயே அதன் முழுமையானது சாத்தியமாகும். இவ்வகையான அறிவியல்பூர்வமான புரிதலுடன் விளக்கும் முறையே இரண்டாவதாகும்.
திரைப்படத்தின் வெற்றி, நடிகரின் வெற்றி போன்ற சொற் சித்திரங்கள் மனித மறுப்பு / வெறுப்பு உடையவர்களின் கட்டமைத்தல்கள் மட்டுமே. எம்.எஸ்..தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி, கபில்தேவ் மாபெரும் வெற்றியாளர் என்பவை சரி. ஏனெனில் அந்த வெற்றிகள் அவர்களால் சாத்தியமானவை. ஆனால், இதே அடிப்படையில் எந்தவொரு கலையின், நடிகரின் வெற்றியை அணுகமுடியாது. எவ்வளவு ஆகச் சிறந்த படைப்பையும் நடிப்பையும் கொடுத்திருந்தாலும், மக்கள் அதனை ஏற்கவும் அங்கீகரிக்கவும் செய்யவில்லை என்றால் அதன் நிலை என்னவாகும் என்பது புரியும். எளிய இந்த உண்மை ஊடகவியலாளர்களுக்குத் தெரியாதா என்ன?. தெரிந்தாலும், மக்கள் மையமாக ஒரு செய்தியை, குறிப்பாகத் திரைப்படத்தைச் சித்திரிப்பதில் அவர்கள் விரும்பாத இரண்டு விளைவுகள் உண்டு. அவ்வாறு மக்கள் மையப் பார்வையில் விஷயங்கள் தொடர்ந்து பேசப்படுமானால், அனைவரும் சமமான பங்கேற்புடைய நவீன மக்களாட்சி வலிமைப்படுவதும், மற்றொன்று அவர்களின் வணிகம் போணியாகாது என்பதுமாகும். எனவே, ஒரே கல்லில் இரண்டு பயன்கள். ‘இந்தக் கட்சி வென்றது’ என்பதற்கும், ‘மக்கள் இந்தத் தடவை இக்கட்சியை அங்கீகரித்துள்ளனர்’ என்பதற்குமிடையே உள்ள வேறுபாடு இதனைப் புரியச் செய்திடும். படம் / நடிகர் / நடிகை, மக்களால் ஏற்கப்பட்டுள்ளமை குறித்துப் பேசினால் மக்களும் தெளிவடைவர். ஆனால், தனிமனிதப் பிம்ப உருவாக்கம் வளராது; பணமும் வராது.

தமிழ்த்திரை குறித்த விமர்சனப்பூர்வமான முன்னெடுப்புகள், படிப்புகள், ஆய்வுகள் எனச் சமூக வளர்ச்சிக்காக இல்லாமல், ஊடகங்கள் தங்களுடைய வளர்ச்சிக்காக மட்டுமே சினிமாவைப் பயன்படுத்துகின்றன. அவ்வகையிலான ஊடகச் செயல்பாடுகளுள் முதன்மையானது ‘ஆண் கதாநாயக நடிகர்கள்’ சிலர் குறித்து மிகையாகக் கட்டமைக்கப்படும் புனைவான ‘பிம்ப உருவாக்கம்’. சினிமாவைத் தொடர்ந்து பேசுபொருளாக மாற்றும் ஊடகங்கள் அதனூடாகத் தாங்கள் விரும்புகிற நடிகர்களது பிம்ப உருவாக்கங்களை மட்டும் துல்லியமாகக் கட்டமைக்கின்றன. அவ்வாறான சித்திரிப்புகளின் பின் உள்ள சுயநோக்கங்கள் குறித்து விவாதிக்கத் தொடங்கினால், அது மிக நீண்டு கொண்டேயிருக்கும். ஊடகங்கள் இயல்புக்கு மாறாக, மிகையாக, புனைவாகக் கட்டமைக்கிற பிம்ப உருவாக்கங்கள் குறித்து விளங்கிக்கொள்ள ஒரேயொரு மாதிரியை மட்டும் அணுகலாம்.

தமிழ்த்திரையின் சூப்பர்ஸ்டாராக உள்ள ரஜினி பற்றிய ஊடகப் பிம்ப உருவாக்கங்கள் உலகில் எவருக்கும் கிடைக்காதவை. கர்நாடகாவில் இருந்து தமிழில் நடிக்க வந்த, சிவாஜிராவ் கெய்க்வாட் எனும் மராத்தியப் பெயர் கொண்ட ரஜினிகாந்த், ஊடகங்களின் வணிக, அரசியல் செல்லப் பிள்ளையாவார். கடந்த 40 ஆண்டுகளாக அவர் குறித்த பிம்பத்திற்கு எவ்விதச் சேதாரமும் ஏற்பட்டுவிடாதபடி பாதுகாக்கும் அதேவேளை பல பிரச்சினைகளின் போதும், அதன் பிறகும் அவரது பிம்பத்திற்குக் கூடுதலாக மெருகூட்ட முயலுவது இங்கே நடைபெறுகிறது. அவர் நடித்த சுமாரான படம் குறித்த விமர்சனங்களில்கூட அவரின் பிம்பத்திற்குச் சிறு குறைவும் ஏற்படாவண்ணம், அதனை விமர்சிக்காமலே கடந்துவிடும் சூட்சுமத்தை ஊடகங்கள் கொண்டிருப்பது, அதிசயம்தான். இந்த ஒருவர் என்ன பேசினாலும் செய்தாலும் அதனை நியாயப்படுத்த தமிழ்நாட்டு ஊடகங்கள் இவ்வளவு மெனக்கெடுவதன் பின் உள்ள அரசியல் என்ன? எதுவாயும் இருக்கட்டும். நமது பார்வையின் குவிமையம் ஊடகங்கள் தொடர்ந்து கட்டமைக்கும் இந்த பிம்ப உருவாக்கம் மட்டுமேயாகும்.

ரஜினி 44 ஆண்டுகளாக வெற்றியாளர், அதற்கு ‘அவரது உழைப்பும் திறமையுமே காரணம்’ என்கிற ‘அதனை அதிசயம், அற்புதம்’ என சிலாகிக்கிற ஊடகங்கள் இதற்கு ரஜினி மட்டுமே காரணம் என்னும் பிம்பக் கட்டமைப்பைச் செய்கின்றன. அதேவேளை ரஜினியோ, தனது இந்த வெற்றியில் ‘திறமை, உழைப்பு என்பதோ பத்து சதவீதம்தான்’ (மீதம் 90%) ‘நேரம், காலம், சூழலே மிக முக்கியமான காரணம்’ என்கிறார். இவை ஓரளவுக்கே உண்மை. அப்படியாயின், இதன் முழு உண்மை குறித்த தேடலினைத் தொடர்வோம். தமிழ்த் திரையுலகில் ரஜினி நான்கு தசாப்தங்களாகத் தொடர்வது மட்டுமே உண்மை. ஆனால், அதற்கு அவரது திறமை, உழைப்புதான் காரணமெனில், தமிழில் பெற்ற இதே நிலை அவருக்கு மராட்டியத் திரையிலோ, ஹிந்தித் திரையிலோ, கன்னடத் திரையிலோ சாத்தியப்பட்டிருக்குமா?. கேள்விக்கு உடனடியாக இல்லை / சந்தேகம் என்ற பதிலே கிடைக்கிறது. அவரது திறமை என்பதைவிட கால நேரம், கடவுள் அருளிய அதிசயம் என்று கொண்டாலும் அவருக்கு அறிமுகமான பிற மொழிகளின் திரைகளில் அதே அற்புதம் நிகழுமா?

பிற சினிமாக்களில் கதாநாயகன் ஆவதற்குரிய தகுதியின்மையாகச் சொல்லப்படும் ‘கறுத்த நிறம்’ உடைய ரஜினியைத் தமிழ்த்திரை மட்டும் ஏன் ஏற்றுக் கொண்டாடுகிறது? தமிழில், கறுப்பு ஏற்கப்பட்டதுடன் முதன்மையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் பின்புலக் காரணி திறமையோ, அதிசயமோ அல்ல. அது, தமிழ்ச் சமூகத்தின் மனநிலை வெளிப்பாடே ஆகும். தமிழர்கள் நவீன, முற்போக்கான, மதம் கடந்த நகர்வான, திராவிட அரசியலைத் தங்களது அடையாளமாக மட்டுமின்றி, கருத்தியலாகவும் ஏற்றதனால் தமிழ்த்திரையில் மட்டும் கதாநாயக பிம்பத்திற்குப் பொருந்துகிற உடலாக கரிய நிறம் ஏற்கப்பட்டுள்ளது. தமிழ் ஓர்மையின் மேல் எழுந்த திராவிட வெற்றியின் இந்தப் பயனை ரஜினியே அவரையும் அறியாமல் அனுபவித்து வருகிறார். விஜயகாந்த், முரளி, விஜய், தனுஷ், விஷால், விஜய் சேதுபதி என தமிழில் மட்டும் இந்தப் பட்டியல் இன்றுவரை நீள்கிறது. ஊடகவியலாளர்களுக்கும் அறிவுத்தளத்தில் உள்ளவர்களுக்கும் இதெல்லாம் தெரியும். தெரிந்திருந்தபோதும், திராவிட அலை எனும் நவீனச் சிந்தனையின் மக்கள்மய வெற்றியின் விளைவாக சாதி / மத அடிப்படையில், தாங்கள் பெற்றுவந்த பல சலுகைகளையும் அனுபவித்துவந்த பெரும் பலன்களையும் இழந்தவர்கள் என்பதால், அடிப்படையான கருத்தியலை, காரண, கருத்துக்களையெல்லாம் விட்டுவிட்டு, வெறுமனே பிம்பங்களை மட்டும் பேருருவாக்கம் செய்து வந்தனர். வருகின்றனர்.

சொந்தக் காசில் பார்க்கும் திரைப்படங்கள் நமக்குள் கட்டமைக்கும் நாயக பிம்பச் சிததிரிப்பும், அதனை ரசித்து, நமக்குள் உருவாகும் பிம்பங்களும் கூடுதலாக நாம் உருவாகுகிற பிம்பமாக்கலும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் குலதெய்வங்கள் போன்றவை. ஆனால், பணம் கொடுத்து வாங்கிப் படிக்கும் / பார்க்கும் ஊடகங்களோ அவர்களுக்கு நலன் பயக்கும் பிம்ப மிகை உருவாக்கங்களை நமது இயல்பான பிம்பங்களின் மேல் வரைய முற்படுபவை. மூத்தோர் வழி நடக்கும் இயல்பான முறையின் மீது சொர்க்கம், நரகம் போன்ற கற்பிதங்களை மதவாதிகள் கட்டமைக்க முற்படுதலைப் போன்றதே ஊடகங்கள் திரைப் பிம்பங்கள் மீது எழுப்புகிற மிகையான பிம்ப உருவாக்கங்கள் / மாபெரும் செல்வாக்கு போன்ற சித்திரிப்புகள் எல்லாம்.

– சேரலாதன்

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page