க்ளாசிக் ரீடிங்-தொடர்-கணேசகுமாரன்

நகர்வு

பாற்கடல் – லா. ச. ராமாமிர்தம்

‘உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ ஒண்ணு. ரொம்ப deep ஓரு பவர். yes. deep power. this is power.’

லா. ச. ரா ஒருமுறை நோய்வாய்ப்பட்டபோது அவர் எழுதியதை அவர் மகன் சேகர் படித்துவிட்டு சொன்ன கருத்துதான் மேலே உள்ளது. கிட்டத்தட்ட இந்தப் பாற்கடலும் அப்படியே. லா. ச. ராவின் டைரிக் குறிப்பு அல்லது லா.ச. ராவின் முகநூல் பதிவுகளின் (இருந்திருந்தால்) தொகுப்பு என்று சொல்லும்படியான தொகுப்பு.

முதல் பாதியில் லா. ச. ராவின் பெங்களூர் வாசம் வரை மிகவும் சிக்கலான அனுபவத் தொகுப்பினை புத்தம் புதிய மொழி நடையில் வாசித்த உணர்வுதான். சென்னைக்கு ஜாகை மாறியதும் கொஞ்சம் மனதுக்கு ஒட்டும் அனுபவங்களும் எழுத்தும். லா. ச. ராவே சொல்வதுபோல் காவியத்தன்மை இழையோடும் அனுபவக் கட்டுரைகள்தான். அதில் மாற்றில்லை. ‘என் பாட்டிக்குச் செல்லமாக நான் பெரிய தீவட்டி. என் தம்பி சின்னத் தீவட்டி. அவளுடைய கடைசிப் பிரயாணத்தில் தீவட்டி பிடித்துச் சென்றது நினைவுக்கு வருகிறது’ போன்ற லா. ச. ராவின் நடைச்சுவை அங்கங்கே மின்னத்தான் செய்கின்றன.

தி. ஜ. ராவின் வரிகள் வேறு லா. ச. ராவின் நினைவுகளை துரத்திக்கொண்டே வருகின்றன. ‘கதையாம் கட்டுரையாம் சரித்திரமாம் கதை என்னடா கதை ஒருமுறை திறந்த கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு. ஊர்வலம், கறுப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்தி, சார்ஜ், துப்பாக்கிச் சூடு இவையெல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமின்றி வேறு என்ன’. தி.ஜ.ரா பெரிய ஆள். எவ்வளவு உண்மையான வார்த்தை. உண்மைதான். கண்கள் திறந்து பார்க்கத் தவறுவதால்தான் எத்தனை கதைகள் எழுதப்படாமல் கிடக்கின்றன. எல்லா காலத்துக்கும் எல்லா எழுத்துக்கும் உகந்த வார்த்தைகள்.

நாஸ்டால்ஜியா ஞாபகம் மீட்டெடுக்கும் வித்தை எழுத்துக்கும் பஞ்சமில்லை. ஒரு வரியில் இடையில் திடீரென எழுதிப் போகிறார். ‘இன்று டிவியில் பொல்லாதவன். சேகர், ஸ்ரீகாந்த் (மகன்கள்) திரும்ப மணி பத்தாகும்.’ லா. ச. ராவின் எழுத்துக்கு தனி ருசி உண்டுதான். ‘திவசம் கழிந்து மூணு நாட்களுக்கு வீட்டில் பட்டினி தெரியாது. மூலைப் பழையதிலும் கண்டான் குழம்பிலும் இரண்டு மூன்று நாட்கள் வண்டி தூம்தடகாவில் ஓடும்.’ இயல்பான நகைச்சுவை உணர்வு துயரத்தையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு எழுதிப்போகும் வார்த்தைச் சித்திரங்கள். டெல்லி வாழ்வு விவரிப்பில் அன்னியத்தனம் தெரிந்தாலும் அந்த விருந்தில் இடம்பெறும் ஊறுகாய் சம்பவம் மனம் தொடுகிறது.

தான் பிறந்து குழந்தையாய் இருந்த கதை விவரித்து வரும்போது பால்யம் தாண்டிய எழுத்துகளில் தன்னைக் குறித்துதான் எவ்வளவு நையாண்டி. கஞ்சா லேகியம் தின்றுவிட்டு மயங்கிய கதை விவரிப்பு, பிரசவத்துக்குப் போன அம்மாவைப் பற்றிய அனுபவக் கதை, ஆஸ்த்மாவுக்குள் சிக்கிய அப்பாவின் இளைப்பு என சிற்சில இடங்களில் லா. ச. ராவின் எழுத்து லாகிரி மாயம் செய்கிறது. அதுவும் அம்மா பற்றிய எழுத்துகளில் தனி ஒளி மின்னுகிறது. ‘தொண்டை மட்டும்தானே ருசி. மூக்கு வரைதானே மணம்.’ ‘சுயநலம்தான் நம்பிக்கைத் துரோகத்துக்கு வித்து.’ ‘தங்க அணிலைக் கண்டால் எங்கே புரண்டாய் என்று விசாரிக்க மாட்டோம். அதன் தோலை உரிக்க என்ன வழி? அதனால்தான் தங்க அணில் கண்ணில் படுவதில்லை.’ என்றெல்லாம் அடிக்கோடிட்டுக் கொள்ளும் லா. ச. ராவின் வரிகள் சட்டென்று நெஞ்சில் பதிகின்றன.

மொகரம் பண்டிகை குறித்த கட்டுரை தேவையற்ற நீளம் போவதுபோல ப்ளேக் நோய் பற்றிய அனுபவமும் அந்தரத்தில் தொங்குகிறது. தன் கட்டுரைத் தொகுப்பு குறித்து சுய விமர்சனமாய் லா. ச. ராவே கூறும் ‘நானும் பார்க்கிறேன். இந்த வரலாறு பூராவே ஏதோ சொல்ல ஆரம்பித்து எங்கெங்கோ போய் எதிலேயோ முடிக்கிறாய். அதுவும் முடிவற்ற முடிவு. சொல்ல வந்ததுதான் என்ன?’ வாசகன் இந்தக் கேள்வியைக் கேட்டுவிடக் கூடாதென்பதற்காக லா. ச. ராவே சுய பகடியாய் தன் எழுத்து குறித்து கூறிவிட்டதை நாம்தான் லெஜன்டின் எழுத்து என்பதற்காக குறை கூற மறுத்து இதுவும் ஒருவித புது எழுத்து என்று கொண்டாடுகிறோமோ என அநேக பத்திகளில் தோன்றுகிறது. அப்பாவை அண்ணா என்றும் தாத்தாவை அப்பா என்றும் அழைக்கும் அவர்கள் வழக்கத்தில் வாசகன் கொஞ்சம் மண்டை காய்ந்துதான் போகிறான். லா. ச. ரா எழுத்திலாவது இந்தக் குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்.

ஒரு வரியில் இடம்பெறும் பத்து வார்த்தைகளில் நான்கு வார்த்தைகள் சமஸ்கிருதமாகப் படுவதும் தாவித் தாவி குதிக்கும் லா. ச. ராவின் சொல் நடையில் வாசகன் நின்று நிதானித்து தடுமாறிக் கொண்டிருக்கும்போது புத்தகம் முழுவதும் விரவிக்கிடக்கும் எழுத்துப் பிழைகள் வாசிப்பு இன்பத்தை கேள்விக்குரியதாக்குகிறது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page