உணர்வில் விளையாடும் எழுத்து – செந்தில் ஜெகன்நாதனின் மழைக்கண் குறித்து

நகர்வு

Mazhaikan

இந்த வாழ்க்கை பலமும் பலவீனமும் கொண்ட மனிதர்களாலே கையளிக்கப்பட்டிருக்கிறது. எந்த நொடியிலும் கொலைவாளினை வீசிடும் பதற்றத்திலேயே ஒரு புன்னகையை உதிர்க்க முடிகிறது. செந்தில் ஜெகன்நாதனின் கதை மாந்தர்கள் இவ்வாறுதான் சிரிக்கிறார்கள். இவ்வாறுதான் வெறுக்கிறார்கள். இவர்களை எவ்வாறு நேசிப்பது எதைக்கொண்டு வெறுப்பது என தடுமாறும் நொடியில் ஆறுதலாய் மீட்டெடுக்கும் ஒரு கரம் இருந்துவிட்டால் எல்லாம் நன்றாய் இருக்கும்தானே.

நித்தியமானவன் கதையில் வருபவனுக்கு சினிமாதான் எல்லாம். எல்லாம் என்றான பின்பு அதுதானே சாகடிக்கும்; வாழவும் வைக்கும். கசப்பாய் தொண்டைக்குள் இறங்கும் ஒரு நிஜத்தினை வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறார். எவ்வம் கதையின் கடைசி பத்தியில் வெளிப்பட்டுவிடும் சினிமாவுக்கான இமேஜ் தவிர மீதக்கதை காண முடியாத சகிக்க முடியாத ஒன்றை வாதை மீறி வெளிப்படுத்துகிறது. பொருத்தமான தலைப்புடன் அமைந்த முத்தத்துக்காக கதை சில பால்ய ஞாபகங்களை மீட்டெடுக்கும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. நம் வாழ்க்கையில் தவறவிட்ட முத்தங்களின் எண்ணிக்கை நினைவில் புரண்டால் அது இந்தக் கதையின் வெற்றி.

தலைப்புக் கதையான மழைக்கண் முதல் வரி வாசிக்கத் தொடங்கும்போது உள்ளுக்குள் ஊடுருவும் நடுக்கம் கடைசி வரி கடந்தும் தொடர்கிறது. வயல்வெளிகளின் பச்சையும் பருத்திப்பஞ்சின் மென்மையும் ஒரு புறம் கடக்கும் அதே சமயம் வலியின் வரைபடத்தை அணுஅணுவாக விவரித்திருக்கிறார் ஆசிரியர். அத்தனை எளிதில் அழிந்துவிடாத மழைக்கோலம் இந்தக் கதை.

நெடுநல் உள்ளொருத்தி கதையின் முடிவில் பூங்கொடியின் முடிவை ஆசிரியர் தெளிவாக முன் வைக்கவில்லை. மற்றபடி உணர்ச்சியில் விளையாடும் இந்தக் கதையின் சொல்முறை கவனிக்க வைத்தது. காகளம் கதையும் சரி சொன்ன விதமும் சரி பிரமாதமான ஒன்று. குற்ற உணர்வு ஒரு மனிதனை அதிகபட்சம் என்ன செய்துவிடும்; நல்ல மனிதர்கள் மத்தியில் நல்லவனாய் வாழவும் வைக்கும். இதுபோன்ற கதைகளில் எளிதாக வெல்கிறார் ஆசிரியர்.

நேசன் கதையில் மீண்டும் ஒரு சிறந்த கதைசொல்லியாக புன்னகைக்கிறார் ஆசிரியர். தொகுப்பின் சுமார் கதை ஆடிஷன். ஏனோ கதையும் அதன் முடிவும் பெரிதான எந்த வித உணர்வையும் ஏற்படுத்தவில்லை. கவித்துவமான எழுத்தில் அங்கங்கே ஆச்சரியம் காட்டுகிறார் எழுத்தாளர். ‘நிறைசூலியின் வயிற்றில் ஏற்படும் நமைச்சலைப் போல…’, ‘தீபாராதனை காட்டி அணைத்த தெய்வ வடிவாய்…’ என்று மின்னல் தெறிப்புகள். அறிமுகமே இல்லாம மனசத் தொடுறவன் கலைஞன் என்றொரு வரி தொகுப்பில் வருகிறது. அப்படி தொடுகிறார் ஆசிரியர்.

மழைக்கண் – சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் – செந்தில் ஜெகன்நாதன்
வெளியீடு – வம்சி
.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page