ஏமிலாந்தி  

நகர்வு

Goat Lamb

கா.சி. தமிழ்க்குமரன்

முன்சாரம் 1   

தெருமுக்கில் இருந்த குட்டிச்சுவரில் வெள்ளாட்டங்குட்டிகள் தம்பிஞ்சுக் கால்களால் ஒத்தடம் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தன. செம்பட்டை நிறத்தில் உள்ள தாய்க்கோழி தம்உருவத்தைப் பெரிதாகக் காட்ட இறகுகளைப் புல்லரித்து தம் ஏழுகுஞ்சுகளை இறக்கையின் அரவணைப்பில்வைத்துக்கொண்டே தம்கால்நகத்தால் அந்த இடத்தைக் கீறிக்கொண்டிருந்தது. டவுனில் இப்போதுள்ள தலைமுறைக்கு கோழி அடைகாக்கும் குஞ்சுபொரிக்கும் என்பதே ஆச்சரியமூட்டும் செய்திதான். பிராய்லர் கோழியைப் பார்த்து விதவிதமாய்ச் சாப்பிட்டு அதுபோலவே வளர்க்கப்பட்டவர்கள். அழிவின் விளிம்பில் இருக்கும் நாட்டுக்கோழியைச் சமைக்கும்போது எட்டு வீட்டுக்கு மணக்கும் என்பது சொன்னால்தான் தெரியும். தாராளமாய்க் கிடைக்கும் இந்த பிராய்லர் கோழிகளை நாம் சாப்பிடுவதையும் சாப்பிடாததையும் தீர்மானிப்பவர்கள் நம் கண்ணுக்குத் தெரியாத யாரோ என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதைச் சொல்லும்போதே கோழிக்கறியின் ருசி நாவெல்லாம் படர்ந்து உங்கள் ஆசையைத் தூண்டுமே. இல்லையா/ …. ஏங்க இதைநான் நம்பனுமாக்கும். ஒரு பத்துப்பைசா புளிப்புமிட்டாயைப் பார்த்தாலே நாக்குக்கு கீழே குளம்கட்டுது. நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அப்படி இருந்தாத்தான் மனுசப்பய இல்லாட்டி சவந்தான் பார்த்துக்குங்க. பார்த்தீங்களா நான் சொல்லவந்ததை விட்டுட்டு தடம்மாறிப் போகிறேன். இந்த நேரத்தில் அதுவல்ல பிரச்சினை. எப்படி எப்படியோ இருந்த இந்த இடம் வெறுமையாய் சீண்டுவாரத்துக் கிடக்கிறது. ஒருகாலத்தில் கொய்க் கொய்யினு மக்கள் விலக இடமில்லாமல் பலசரக்கு வாங்க கூடிய இடம்.

மாணிக்கம் ரெண்டாள் அகலத்தில் இருப்பார். மீன்வலைபோல கைவைத்த பனியனை அந்த ஊரில் அவரைத்தவிர  வேறுயாரும் போட்டிருக்க மாட்டார்கள். பலசரக்குகடை திறந்தவுடன் கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்யும்வரை கையைக் கட்டிக்கொண்டு காத்திருப்பார். எல்லாம் முடிந்தவுடன் முதல்ஆளாய் அவருக்கென ஸ்பெசலாய் தேக்குமரத்தில் செய்யப்பட்ட வழுவழுப்பான குண்டிப்பலகையில் சப்பள சளபுளன்னு உட்காந்துவிடுவார். எழுந்திருக்கும் போதுதான் கொஞ்சம் திண்டாட்டம். யாராவது ஓரிருவரின் தயவு தேவைப்படும். ஒருஆளா இரண்டுஆளா என்பது அவரவர் உடல்வாகைப் பொறுத்தது. அப்படியொரு பாரியான உடம்பு.

இப்போதெல்லாம் யாரையும் எதிர்பார்ப்பதில்லை. உட்காருகின்ற இடத்தில் தலைக்குமேல் மாடுகட்டும் தாம்புக்கயிறைக் கட்டித்தொங்க விட்டிருக்கிறார். அதைப்பிடித்துதான் உட்காருவதும் எழுந்திருப்பதும். அந்தநேரத்தில் பார்க்கவேண்டுமே தக்கிமுக்கி ஒரு போராட்டமே நடக்கும். உடம்பைக் குறைக்க அவரும் என்னவெல்லாமோ செய்துதான் பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. சமீபத்தில் ஒருநாட்டு வைத்தியர் ஒரு லேகியம் செய்து கொடுத்திருக்கிறார். ம்கூம் ஒன்னும் நடக்கலை. லேகியம்தான் நாளுக்குநாள்  குறைகிறது. உடம்பு குறைந்தபாடாய் இல்லை. காலையில் கடை திறந்தவுடன் உட்காருபவர், கூட்டம் குறைய மதியம் மூன்றுமணியாகும். அதன்பிறகுதான் மதியச்சாப்பாட்டிற்கு கடையைவிட்டு எழுந்திருப்பார். இடையில் கடையில் வேலை.பார்க்கும் எல்லோருக்கும் பக்கத்து கடையிலிருந்து கண்ணாடி.கிளாசில் டீ வரும்போது மாணிக்கத்திற்கு மட்டும் வீட்டிலிருந்து பிளாஸ்க்கில் ஸ்பெசல் பில்டர் காபி வரும்.

மாணிக்கம், கடைப் பையன்களை வேலையேவுவது கணீரென்று ரோட்டுக்கு கேட்கும். குரல்தான் முரடாய் இருக்குமேதவிர இளகிய மனதுக்குச் சொந்தக்காரர். கடையில் கூட்டம் விலக இடமிருக்காது. ஒவ்வொரு சரக்கிலும் இரண்டு ரகம் இருக்கும். சாதாரண ஏழைபாழைகளுக்கு சுமாரான ரகமும் வசதியானவர்களுக்கு  நல்ல ரகமுமாய் ஆளுக்குத் தகுந்த சரக்கு. கடைக்கு வெளியே ரகவாரியாய் அரிசிச் சாக்குகள் பிரித்து பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.  ஆள் அத்தந்தண்டி உருவமாய் இருந்தாலும் வருகின்ற எல்லோரிடத்திலும் நைச்சியமாய்த் தேனொழுகப் பேசுவார். சின்னப் பையன்களைக்கூட வாங்க போங்கன்னுதான் பேசுவார். இதைக் கேட்கும் சிறுவர்கள் அப்படியே கூச்சத்தில் நெளிவார்கள். சுத்துப்பட்டி ஊரிலிருந்தெல்லாம் பெண்கள் கக்கத்தில் கடாப்பெட்டியை இடுக்கிக்கொண்டு கடன்சிட்டையுடன் வந்து வாங்கிச்செல்வார்கள். காலத்தில் வெள்ளாமை வீடுவந்து சேர்ந்தவுடன் சிட்டையை நேர் செய்வார்கள். அந்தநேரத்தில் மாணிக்கத்தின் கணக்குப்பிள்ளை ஊர்ஊராகச் சென்று வசூல் செய்துவிட்டு வருவார். ஒருசிலர் மல்லியும் மிளகாய்வத்தலும் சோளமாகக்கூட சிட்டையை நேர்செய்வார்கள். அந்தநேரத்தில் இரட்டைமாட்டு வண்டியில் கணக்குப்பிள்ளையையும் சேர்த்து வண்டியில் ஏற்றி அனுப்பி அனுப்பிவைப்பார்கள்.

மாணிக்கத்திற்கு போட்டியாக கடை ஆரம்பித்தவர்கள் முழுதாய் ஒருவருடம்கூட ஓட்டமுடியாமல் மண்டியிட்டனர். உள்ளூரில் மட்டுமல்லாமல் பக்கத்து ஊரிலும் அதே கதைதான். அடுத்த ஊரிலிருந்து காசு இல்லாமல் வந்து கடாப்பெட்டி நிறைய சாமான்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவார்கள். உலையை வைத்துவிட்டு  அரிசி வாங்கவரும் பெண்கள்  என்றுமே வெறுங்கையுடன் திரும்பியதில்லை. இப்படி கொடுத்து வாங்குறவருக்கு முன்னாடி யாருதான் போட்டிக்கடை நடத்திவிட முடியும். ஒவ்வொரு வருசமும் சித்திரை வருசப்பெறப்புக்கு முதல்நாள் பேரேட்டில் ரொம்பநாளு வராக்கடனா இருக்குற ரூபாய் பத்து இருபதாயிரத்தை பேரேட்டில் இருந்து தூக்கிவிடுவார். இம்புட்டு நாளாய் வராதபணம் இனிமேலா வந்துவிடப்போகிறது என்ற அனுபவம்தான். ரெண்டு நாளைக்கு ஒருக்கா மதுரையில் இருந்து லாரியில் சரக்குவந்து இறங்கும்.

இவ்வளவு நாளாய்  கடை நடத்திவருவதால் வாங்கும் ஒவ்வொருவரின் தகுதியை நாடிபி டிக்காமலேயே தெரிந்து வைத்திருப்பார். ஒழுங்காய் பைசல் செய்வதுயாரு டிமிக்கி கொடுக்கிறது யாருங்குறது மாணிக்கத்துக்கு அத்துப்படி. இவ்வளவு நேக்காய் யாரு யாருக்கு கொடுத்து வாங்கனுமின்னு கோளாறாய் யாவாரம் செய்தவர் கடைசியில் இப்படி ஆயிட்டாரே என்று ஊருக்குள் சின்ன வருத்தம் அவ்வப்போது வந்துபோகும். நொடித்துப்போய்க் கடையைச் சாத்தினபின்பு கடன் சிட்டை வைத்திருந்தவர்கள் இந்தா அந்தா என இழுத்துக்கடத்தியே நாமம் சாத்தினார்கள்.

முன்சாரம் 2

புதிதாய் முளைத்த இரண்டுமாடிக் கட்டிடம். அந்த ஊருக்குச் சம்பந்தமில்லாது அம்மாம் பெரிய கட்டிடம் பணத்தால் இழைக்கப்பட்டிருந்தது. துட்டு வச்சிருக்கிறவன் ரெண்டுமாடியும் கட்டுவான் இல்ல நாலுமாடியும் கட்டுவான் பார்த்தா பார்த்துட்டு பேசாமல் போகுறதை விட்டுட்டு உனக்கு எதுக்கு இம்புட்டு பொச்சுக்காப்பு என்று நீங்கள் கேட்கலாம். துட்டு இருக்கிற புண்ணியவாளன் கட்டுறான் என்று சொல்லிவிட்டு ஈசியாய்க் கடந்துவிட முடியாது. ஏனென்றால் நம்ம கண்ணுக்கு எதுக்க நம்மளைவிட கேவலமாய் இருந்த ஒருவன் திடீருன்னு செல்வம் கொழிக்க வளந்து நிக்கிறான்னா நீங்க அவன் சிவகாசிப்பக்கம் நோட்டு மாத்துற வேலை செய்யுறானோ என்று சந்தேகப்படுறீங்கதானே அதுதான் இல்லை. பாத்தீங்களா இல்லையின்னு சொல்லுறதுக்கு முன்னாடி அரசியல்ல இருப்பான்னுதானே நினைக்கிறீங்க  நீங்க திரும்பவும் தப்பாத்தான் நினைக்கிறீங்க. பின்னே எப்படி கண்ணுக்கு எதுக்க குபீருன்னு ஒருவன் விஸ்வரூபம் எடுத்து நிக்கமுடியும். வாயி இருக்குல்ல வாயி அதவச்சுத்தான். எல்லோருக்கும்தான் வாயி இருக்குது அப்படீன்னு நீங்க நினைக்குமுன்னே நான் கேட்டுட்டேன். நமக்கெல்லாம் வாயிஇருந்து என்ன பிரயோசனம் சாப்பிடுவதைத்தவிர? இது வேறவாயி அதாவது வாயுள்ளவன் உள்ளே வாழைப்பழம் கொண்டுபோனவன் வெளியேன்னு சும்மாவா சொன்னாங்க அந்தவாயி இது. இப்போ ஒங்களுக்கு தெளிவாய்ப் புரிஞ்சுருக்குமே. அதுமாதிரி ஆளுதான் இந்தவீட்டுக்கு சொந்தக்காரன். இந்த ஊருக்கு அவசியப்படாத ஆள்உயர கேட்டில் நாய்கள் சாக்கிரதை  என்று எழுதிய பலகை சங்கிலியால் பிணைக்கப்பட்டு தொங்க விடப்பட்டிருந்தது. இது அந்த ஊருக்கே வித்தியாசமாய்ப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

இந்த இடத்தில் ஒட்டுத்திண்ணையுடன் கூடிய பழைய ஓட்டுவீடு மண்சுவருடன் நின்றுகொண்டிருக்கும். அந்த ஒட்டுத்திண்ணையும் மண்ணால் கட்டி எழுப்பப்பட்டதுதான். ஒவ்வொரு வெள்ளி செவ்வாய்க்கும் சாணிகொண்டு வீட்டை மெழுகும்போது இந்த திண்ணையையும் சாணியைக்கரைத்து மெழுகவேண்டும். ஒரு ரெண்டுவாரத்திற்கு மெழுகாமல் விட்டுவிட்டால் திண்ணையின் ஓரஞ்சாரம் யாராவது உட்காரும்போது பொதுக் பொதுக்கென்று கீழே விழுந்துவிடும்.  அவ்வளவு ஸ்ட்ராங்கான திண்ணைகள். அந்தத் திண்ணையில் அழுக்கான நாலுமுழ வேட்டியுடன் முத்தையா ஒருவாரம் வளர்ந்துகிடக்கும் தாடியைக்கூட மழிக்காமல் தெருவில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார். காடுகரையின்னு வெயில்ல கிடந்து வேலைபார்ப்பது சின்னவயசிலேயிருந்து பிடிக்காது. நிழலாட்டமாய் வேலைசெய்தே பழகிவிட்டது. ஒருவாரம் பத்துநாள் ஆனாலும் சும்மா இருந்தாலும் இருப்பாரேதவிர கெஞ்சிக் கெதறிக் கூப்பிட்டாலும் காடுகரையின்னு ஒருஅடி எட்டு எடுத்து வைக்கமாட்டார். அவரு வருவாரா ராசாமகன் வெயில்பட்டால் உருகிப்போயிடுவாருல்ல மனைவி அப்படித்தான் அங்கலாய்த்தாலும் வெயில்பட்டால் மேனி கருத்துவிடும் என்பது போல காட்டுப்பக்கம் ஒரு எட்டு எடுத்து வைக்கமாட்டார். விசேச நாட்களில் யாராவது ஆள்அனுப்பிவிட்டால் போதும் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார். மறுநாள் விசேசத்திற்கு முதல்நாள் காலையிலையே மண்டபத்தில் போய்நிற்பார். விட்டால் காலில் விழுந்துவிடுவார் போலத்தான் மிகப் பணிவான பேச்சு. தலைமை சமையல்கார் அவர்தான் காண்ட்ராக்டரும்கூட அவருக்கு எடுபிடியாகவும் அண்டாக்களையும் தேக்சாக்களையும் அடுப்பில் தூக்கி வைக்க இறக்க அரிசி மூட்டைகளை தூக்கி தேக்சாவில்போட என்று அசராமல் நிற்பார். இவருடைய கையில் நிரந்தரமாய் இரண்டு பெண்கள் பெரிய விசேசங்களுக்கு பெண்கள் அதிகமாய்த் தேவையென்றாலும் உடனே திரட்டிவிடுவார்.அவர்களிடம் மட்டும் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். சம்பளத்துடன் ரெண்டுநாள் சாப்பாட்டுமுறை கழிந்துவிடும் தவிர மிச்சம் மீசாடியும் கிடைக்கும் என்பதால் வெட்டி அதிகாரத்தை குண்டியில் துடைத்த கல்லாய் நினைத்து கடந்துசெல்வார்கள்.

டவுணில் உள்ள இரண்டு கல்யாண மண்டபங்களில் என்ன விசேசம் நடந்தாலும் முத்தையாதான் வேலைக்குப் பெண்களைத் திரட்டிக்கொண்டு போவார். சமையல்கலை வித்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக கைவரத் தொடங்கியது. சாம்பாருக்கு என்னென்ன எவ்வளவு போடனும் ரசம் சுவையைக்கூட்டுவதற்கான பக்குவம் மொளகாப்பொடி எம்புட்டு போடனும் எத்தனை செரங்கை உப்பு போடுறது இதையெல்லாம் சொல்லியா தரணும். ஏங்க கண்பார்த்தா கை செஞ்சிடாதுதவிர அந்த வேலைகளையெல்லாம் அவன்தானே சொல்லச்சொல்ல செஞ்சிக்கிட்டு இருக்கான். அடுத்து என்ன செய்யனுமுன்னு சொல்வதற்கு முன்னாடியே எல்லா வேலைகளையும் செஞ்சு எள்ளுன்னா எண்ணையா நின்னார். இவருடைய நல்லநேரமோ என்னமோ காண்ட்ராக்டர் நிரந்தரமாய் வெளியூர் சென்றுவிட இவரை நேரிடையாகப் பார்ட்டிகளிடம் மண்டபத்துக்காரர்கள் கைகாட்ட  புதிய சமையல் காண்ட்ராக்டர் ஆனார். ஓரளவு வருமானம் ஓரளவு என்ன அவர் எதிர்பாராத அளவு வருமானம் வரத் தொடங்கியது. அதற்குப் பின்னர் முத்தையாவின் நடவடிக்கையே மாறிப் போனது.தும்பைப்பூவாய் வேட்டிசட்டையுடன்தான் அலைவார். வேலைக்கு வரும் பெண்களிடம் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது. அவர்களுக்கு கூலிபேசினால் ஒன்னுக்குப் பாதியாகத்தான் போய்ச்சேரும். விசேசங்களுக்கு எத்தனை பேருக்கு என்னென்ன வகைகள் எவ்வளவு ரூபாய் ஆகும் என்ற விபரங்கள் அத்துப்படி ஆகிவிட்டன.

கூலிக்காண்ட்ராக்ட் என்ற நிலையிலிருந்து தலைக்கு இத்தனை ரூபாய் என்று பேசும் அளவுக்கு மொத்தக் காண்ட்ராக்டாய்ப் பேசி எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தார். உள்ளூரிலேயே சீப்பாக கூலியாட்கள் கிடைத்தார்கள். மறந்தும்கூட தொழில்நுணுக்கத்தை வேலையாட்களிடம் சொல்லி்க்கொடுப்பதோ, ரேட் பேசும்போது துணைக்கு யாரையாவதுகூட்டிக்கொண்டு போவதோ முத்தையாவிடம் கிடையாது. தன்காலுக்குக் கீழே தனக்கு ஒரு போட்டியாளரை உருவாக்க விரும்பாமல் முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார். ஆரம்பத்தில் சரக்குப்போட மாணிக்கம் இருந்தார். எவ்வளவு கேட்டாலும் உள்ளூர்க்காரன்தானே என்ற நம்பிக்கையில் யோசிக்காமல் கொடுத்தார். அடுத்த ஊர்க்காரர்களுக்கே கடன் சிட்டைக்கு கொடுத்துவிட்டவர்தானே உள்ளூர்க்காரனுக்கு கொடுக்கமாட்டாரா அப்படீன்னுதானே நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் நினைப்பது சரிதான் உள்ளூர்க்காரன்தவிர தொழிலில் வளர்ந்துவரும் மனிதன் நம்மால் முடிந்தஅளவு கைதூக்கி விடுவோம் என்ற தயாள குணமும் ஒருவகையில் குருட்டுத்தனமான நம்பிக்கையும்தான்.

முன்சாரம் 3

ரவி படிக்கும் காலத்தில் கட்டியவீடு ஆங்காங்கே காரை பெயர்ந்திருந்தாலும் ஸ்ட்ராங்காகவே இருந்தது. அப்போதெல்லாம் திண்ணையில் குதித்து ஏறமுடியாது அவ்வளவு உயரம். இளவட்டங்கள்தான் தாவிஏறி உட்காரமுடியும். மேலவீட்டு பெத்தனனுக்கு தான் ஏறி உட்கார முடியவில்லையே என்ற ஏக்கம் கண்களில் தெரியும். ரவியின் தாத்தா ஏன் இவ்வளவு உயரத்தில் திண்ணையைக் கட்டினார் என்று உள்ளூர்க்காரர்களே மலைத்துப் போய்த்தான் இருந்தார்கள். உங்களிடம் கேட்டால் ஆயிரம் காரணம் உங்கள் வசதிப்படி தோதுப்படி கூறிக்கொண்டிருப்பீர்கள். அப்புறம் அதுவே ஒரு பெருங்கதையாகிவிடும். ஒரு சிறுகதை எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று எழுத்தாளர் பூமணியில் இருந்து கேட்டுப்பார்த்தால் தெரியும்.  பெரிய பெரிய ஆட்களே இப்படிக் கூறிக்கொண்டிருக்கும்போது வாசகராகிய உங்களிடம் எப்படி நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைப்பது? புரியுது நீங்கள் சொல்வது எங்களைவிட எந்தவகையில் நீ ஒசத்தி அதைத்தானே சொல்ல வந்தீங்க. நீங்கள் சொல்வதும் ஒருவகையில் நியாயம்தான். நானே இப்பத்தான் திருவிளையாடல் தருமி மாதிரி எழுதிக்கொண்டிருப்பதை நம்பியும் நம்பாமலும் கதைதான்னு ஒருமாதிரி ஒப்புக்கொள்கிறார்கள். நீங்க பெரிய ஆளுதான் அதுக்காக அந்தச் சிவனே தப்புச் செய்தாலும்  இந்தத் தருமி அதை ஏத்துக்கிட மாட்டான் என்பதை கைநடுக்கத்துடன் உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். அதெல்லாம் அந்தக்காலம் சிவன் சொன்னதைச் சரின்னு கேட்பதற்கு இப்ப கறாராய் முடியாதுன்னு சொல்லிடுவேனாக்கும். பாத்தீங்களா நாம்பாட்டுக்கு ஒருரூட்ல போறதை திசைதிருப்பப் பார்க்குறீங்களே. பொறுங்கள் நான் சொல்ல வருவதை சொல்லி முடிச்சுடுறேன். அந்தக்காலத்தல மண்திண்ணைகள்தான் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். பழக்கம் பேசசெட்டுசேர்ந்துவரும் பெண்கள் உட்கார்ந்தால் குண்டியில சுருக்குச் சுருக்குன்னு குத்தும். ஒரு சாக்கோ இல்லாட்டி கோரம்பாயோ விரித்துத்தான் உட்காரவேண்டும். இந்தக் கச்சடாத்துல வழுவழுன்னு சிமிண்டுத்திண்ணை என்றால் ஊர்முச்சூடும் கெடையாக் கெடந்துடுவாங்க இல்லையா அந்த பயத்துலதான் இப்படிக் கோளாறாக் கட்டியிருக்காரு. இதென்னத்தா இதுல ஏணி போட்டுல்ல ஏறணும் போல என்று பேசிக்கொண்டே பெண்களும் அண்ணாந்து எக்கிப் பார்த்துவிட்டு சிறுவர்களும் ஏக்கப் பெருமூச்சுடன் கடந்துவிடுவார்கள். காட்டுக்கு போயிட்டு வந்தமா அக்கடான்னு துண்டை விரிச்சு படுத்தமான்னு இருக்கணும். பெண்கள் ஒத்தையிலஇருந்தா பேரமைதியா இருப்பாங்க நாலுபேர் சேர்ந்துவிட்டால்போதும் வாயை அடைக்க முடியாது. இந்த அச்சலாத்திக்குத்தான் தாத்தாவின் இப்படியொரு ஏற்பாடு. உதட்டை விரிக்காமல் கிண்டலாய்  கேலிப் புன்னகையை உதிர்க்கிறீர்கள்தானே இதுக்கெல்லாம் அசர முடியுமா? பரவாயில்ல, நீங்க கெளம்புங்க. இந்த திண்ணையில்தான் ரவியும் மாணிக்கத்தின் மகன் சாமிநாதனும் அசராமல் விளையாடும் இடம்.

ரவியைவிட சாமிநாதன்தான் படிப்பில் கெட்டிக்காரன். இப்படி ரவி சொல்வதன் மூலம் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பள்ளியில் படித்து நாற்பது வருடங்களைத் தாண்டிவிட்டது. அந்தக் காலத்தில் நான்தான் நல்லாப் படிப்பேனாக்கும் நான்தான் முதல்மார்க் என்று சொன்னால் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. கூடப்படிச்சவங்க யாராச்சும் இருந்தாக்கூட இவன் இப்படித்தான் படிப்பான் அப்படீன்னு சொல்லுறதுக்கும் ஆளில்லை. இப்படிப்பட்ட நேரத்துல இன்னமும் பழசை மறக்காமல் உண்மையை ஒத்துக்கொள்வதற்கும் ஒரு பெரிய மனசு வேணும்தானே அது அவனிடம் இருந்தது. சாமிநாதன் உள்ளூரில்தானே இருக்கிறான் அதனாலதான் நீ அடக்கி வாசிக்கிறாய் அப்படீன்னு நெனச்சா அது ஒங்க தப்பு. ஏன்னா இப்போதெல்லாம் ரவியைக்கண்டால் இதுவரை பார்க்காத ஆளைப்போல் கண்டும் காணாமலும் என்று சொல்வார்களே அப்படிக்கூட இல்லாமல் யாரோ அறியாதவர் தெரியாதவர் போலத்தான் நடந்துகொள்கிறான். ரொம்ப நாளைக்கு முன்னாடி ரவி வலியப்போய் பேச்சுக் கொடுத்தபோதும் விட்டேத்தியான பார்வையுடன் பட்டும்படாமலும் பதில் சொல்லிவிட்டு சடுதியில் நடையைக் கட்டிவிட்டான்.

சாமிநாதனை நினைக்கும்போதெல்லாம் ரவி மிகவும் சஞ்சலப்பட்டுத்தான் போவான்.படிக்கின்ற காலத்தில்இவர்கள் இருவரும் சேர்ந்து சுற்றாத இடமில்லை. இயல்பிலேயே கொஞ்சம் கொஞ்சமென்ன நல்ல வசதியானவன் சாமிநாதன். தின்பண்டமாக ரவி சேவு கொண்டுவந்தால் சாமிநாதன் கேக் கொண்டு வருவான். ரவிக்கு இப்படியொரு பண்டமெல்லாம் இருக்கா என்று விழிகள் விரியும். இரவு வீட்டுக்குப் போகும்வரை ஒன்றாகவே சுற்றித்திரிவார்கள். பள்ளி முடித்து மேற்படிப்பு படித்திருந்தால் சாமிநாதன் பெரிய ஆபீசர் ஆகியிருப்பான். ஒரு ஊருக்கல்ல பல ஊர்களுக்கு படியளக்கிற குடும்பமாய் இருந்துவிட்டு ஒத்தையில் அடுத்த ஊருக்கு தனியே படிக்க அனுப்புவாகளா. படிப்பு என்பது அறிவை வளர்க்க என்று யார் சொன்னது. வெயில்ல கெடந்து வேகாம நெழலாட்டமா கவுருமெண்டு உத்தியோகம் கெடைச்சுடாதான்னுதானே அவனவன் விழுந்து சாகுறான். விதி விதின்னு சொல்றாகளே அது யாரைவிட்டது. யாரும் எதிர்பார்க்காமல் அம்மாம்பெரிய  பலசரக்குக்கடை நொடிச்சுப்போச்சு. இதைச்சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் நம்பித்தான் ஆகணும். என்னய்யா இந்தக்காலத்துல போயி விதி சதின்னுக்கிட்டு இருக்கேன்னு கேக்குறீங்கள்ள. நீங்க கேட்டதுலயே பதிலும் அடங்கியிருக்குதுஅப்படீன்னு சொன்னா ஏன்சார் இப்படி மொறச்சுப் பார்க்குறீங்க.  உண்மையைத்தான் சொல்றேன் நீங்க சொன்னீங்கள்ள சதின்னு அதுதான் உண்மை. இதை வெளிப்படையா யாராவது இப்படி இப்படி இதனாலதான் இப்படி ஆகிப்போச்சுன்னு சொல்லி அதையாராவது முத்தையாவிடம் போட்டுக் குடுத்துட்டாங்கன்னா, ஒன்றையனா காசுக்கு பெறாமல் ஏன் வெட்டியாய் அவனோட பகையை சம்பாதிச்சுக்கணும், அதுக்காகத்தான் மொட்டையா விதின்னு சாெல்லி டபாய்ச்சுக்கிறது. இப்படிச் சாெல்லிட்டா யாருக்கும் பகையாளியாகாமல் இந்தியாமாதிரி நடுநிலமை வகிச்ச மாதிரியும் ஆச்சு உள்ளுக்குள் குத்திக்குடையும் மனசாட்சிக்கு துரோகம் செய்யாமலும் இருக்கலாம் இல்லையா? என்னய்யா இப்படி தொடைநடுங்கிக்கிட்டு பேசுறீங்க ஒங்க ஊருல பெரிய ஆளுங்களே இல்லையா பஞ்சாயத்து பஞ்சாயத்துன்னு ஒன்னு இருக்குமே அதெல்லாம் எங்க போச்சுன்னு நீங்க குமுறிட்டாப்போச்சா? நீங்க எந்தக் காலத்துல இருக்கிறீங்க? அதெல்லாம் வழக்கொழிஞ்சு மாமாங்கமாயிடுச்சு. சாதிஅரசியலும் துட்டு அரசியலும் இப்ப எல்லா இடத்திலும் பரவி ஊரையே கெடுத்துல்ல வச்சிருக்கு. நீங்க சொல்லுறதெல்லாம் இன்னும் சினிமாவில மட்டும்தான் நடந்துக்கிட்டு இருக்குது. சும்மா சும்மா இப்படி எடக்கட்டை போடுற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க அது நல்லா இல்ல ஆமா. பின்ன என்னங்க அதுநடந்து எவ்வளவோ காலம் ஓடிப்போச்சு. ரவி இப்பொழுது அரசு உத்தியோகத்திலும் சாமிநாதன் ஒரு தனியார் ஸ்பின்னிங் மில்லிலுமாக வேலையில் இருக்கின்றனர். ரவி தன்பெற்றோரைப் பார்க்க அவ்வப்போது வந்து செல்வதுண்டு. ஆங் சொல்ல மறந்துபோச்சு இப்போதெல்லாம் ரவி வீட்டுக்குவந்து திண்ணையில் உட்கார்ந்தால் கால் கீழே தட்டுகிறது. அந்த அளவு தெரு உயர்ந்துவிட்டது. தெருமட்டும்தான்.

நிகழ்களம் 4  

அந்த உயர்ந்த கேட் போடப்பட்டுள்ள வீட்டின் கதவுகள் மெதுவாய்த்திறக்க ஓசைப்படாமல் உள்ளே நுழைந்தது அந்தக் கார். காருக்குப் பக்கத்திலேயே வீல்சேரைத் தள்ளிக்கொண்டுவர முத்தையாவைத் தூக்கி அதில் உட்காரவைத்து வீட்டினுள் தள்ளிக்கொண்டு சென்றனர். என்னய்யா நல்லா இருந்த மனுசன் திடீருன்னு என்ன ஆச்சு? பொறுங்க சார் பொறுங்க ஏன் இப்படிப் பதட்டப்படுறீங்க? முத்தையா என்ன ஒங்களுக்கு மாமனா மச்சானா இல்ல கொடுக்கல் வாங்கல் ஏதும் வச்சிருக்கீங்களா ஒன்னும் இல்லையா பின்னே ஏன் இப்படிப் பதட்டப்படுறீங்க கொஞ்சம் பொறுமையாய்க் கேளுங்க. வாட்ஸ்அப்ல ஒரு கதை வந்துச்சு அது சரியாத்தான் போச்சு. ஆயிரம் விவசாயிங்களையும் நயன்தாராவையும் அரசாங்கம் கைது பண்ணிடுச்சுன்னு சொன்னா எல்லாரும் மொதல்ல நயன்தாராவை எதுக்கு கைது செஞ்சாங்கன்னுதான் கேப்பாங்களாம். ஆயிரம் விவசாயிங்க கண்ணுக்கு தட்டுப்பட மாட்டாங்க. அதுமாதிரி நல்ல மனுசன் எல்லோருக்கும் உதவி செஞ்சவன் அப்படீன்னு இதுவரைக்குச் சொன்ன மாணிக்கம் இப்படி ஆயிட்டாருன்னு சொல்லும்போது வாயை இறுக மூடிக்கிட்டு என்னான்னு ஒருவார்த்தை கேக்கலை. இதிலிருந்து ஒன்னு தெரிஞ்சுபோச்சு நீங்களும் நயன்தாராவுக்கு ஆதரவான பார்ட்டிதான்னு. ஆனா சாதாரண கிராமத்து வெள்ளந்தி சனங்கள் அப்படி இல்லை மனசுல உள்ளதை அப்படியே கொட்டிடுவாங்க எப்படீன்னு கேக்குறீங்களா அவசரப்படாம பொறுமையா கீழே வாசிச்சுப் பாருங்க.

“வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்னு சொல்றது சரியாத்தான் இருக்குது”.

“என்னக்கா என்ன சொல்றே ஒன்னும் புரியலை?”.

“ஆமா  சொன்னேன் சொரக்காயிக்கு உப்பில்லையின்னு”.

“இப்படி திண்டுக்கு முண்டா பேசுனீன்னா நான் என்னத்தை எடுத்துக்கிறதாம்”.

“இந்தா இருக்கானே இந்த பெரியவீட்டுக்காரன் இவன் மாணிக்கத்தை எப்படியோ சொக்குப்பொடி போட்டு ஏமாத்தி சேத்த சொத்து நெலைக்குமா என்ன இந்தாபாரு ஒன்றவாட்டம் ஆஸ்பத்திரியில போயி குடுத்துட்டு வாராங்க”.

“பின்னே என்னக்கா இவன் சமையல் கண்ட்ராக்டர் ஆயிட்டேன்னு சொல்லி மொத்த மொத்தமா சரக்கு வாங்கிட்டு அந்த நம்பிக்கையில ஒரு பெரிய தொகைய இந்தா தாரேன்னு சொல்லிட்டு ஆட்டையப் போட்டுட்டான்ல”.

“அது ஊருக்கே தெரிஞ்ச சமாச்சாரம்தானே”.

“எத்தனை பேரு வாயில விழுந்திருப்பான் தெய்வம் நின்னு கொல்லுமுங்குறது சரியாத்தானக்கா இருக்குது”.

“ஏயப்பா கொஞ்ச ஆட்டமா ஆடுனான் மாணிக்கம் கும்புடுறது துடியான் சாமிதானப்பா நல்லா ஆடுறா ஆடுறான்னு ஆடவிட்டுட்டு இப்ப ஒரேயடியா மொடக்கிடுச்சுல்ல”.

“பாவமுக்கா அந்த ஆளு இவன் திரும்பக் கொடுக்கமாட்டேன்னு சொன்ன அதிர்ச்சியில பக்கவாதம் வந்து விழுந்தவர்தான் இன்னும் எழுந்திருக்கவே இல்லையே”.

“நல்லவங்களையும் ஆண்டவன் சோதிக்கத்தானே செய்யுறான்”.

“ஓகோன்னு வாழ்ந்த குடும்பம் இந்தப்பயலாலே நெலகொலஞ்சுல்ல போச்சு”.

“பின்னே அந்த ரூவாதானே இம்புட்டு ஒயரக் கட்டிடமா நிக்குது”.

“பாவமுக்கா கடன்னு கேட்டுவந்தவர்களுக்கு எல்லாம் இல்லேங்காமல் கொடுத்து விட்டவருக்கு இப்ப கொடுத்து உதவத்தான் யாரும் இல்லை”.

“அவரும் சரி சாமிநாதனும் சரி கடன்னு யாருட்டயும் வாங்குனது இல்ல தெரியுமா. இருந்த கட்டியா சாப்புடுவாங்க இல்லையின்னா கரைச்சிக் குடிப்பாங்க. ஒன்னுமே இல்லையின்னா வயித்துல ஈரத்துணியை கட்டிக்கிட்டு இருப்பாங்களேதவிர ஒத்தரூவா கடன்கேட்டு யார்வீட்டு வாசல்லயும் நின்னது கிடையாது”.

“மானஸ்தன் இப்பயும் யாருட்டயும் யாரப்பத்தியும் ஒருவார்த்தை தப்பா பேசுனது இல்லக்கா”.

“அதுதான் எல்லாருக்கும் தெரியுமே”.

“சரிக்கா அடுத்தவீட்டுக்கதையெல்லாம் நமக்கெதுக்கு ஒலையில அரிசி கெடக்குது நா வாரேன்”.

இதோட கதை முற்றும் என்று போடுறேன்னு வச்சுக்குங்க உங்களுக்கெல்லாம் சந்தோசமா இருக்குமே? ஒருத்தன் எப்படி எப்படி இருந்தாலும் நம்ம கண்ணுக்கு முன்னாடி செஞ்ச தப்புகளுக்கான பலாபலன்களை அனுபவிச்சுடுறான்ல அப்படீன்னா இந்த முடிவு சரிதான்னு ஒத்துக்குறீங்கதானே. இப்படியெல்லாம் முடிக்கனுமுன்னுதான் எனக்கும் ஆசை. ஆனால் யதார்த்தமுன்னு ஒன்னு இருக்கே அதுக்கு துரோகம் செய்ய முடியுமா. கதை என்பதாலேயே நினைத்ததை எல்லாம் இஷ்டத்துக்கு எழுதி புகுந்து விளையாட முடியுமா என்ன? நமக்குன்னு மனசாட்சியின்னு ஒன்னு இருக்குதுல்ல. ஒரு தவறும் செய்யாத மாணிக்கம் எதற்காக பணத்தையெல்லாம் இழந்து சட்டடியாய் வீட்டுல கெடக்கனும். இப்படிக் கேட்டால் அவன் முற்பிறவியில் செய்த பாவம் அப்படீன்னு அதுக்கும் ஒரு காரணத்தை கண்டுபிடிச்சு சொல்வீங்க. எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் இன்னும் ஒருத்தன் நல்லா இருக்கான்னு சொன்னா அதற்கும் முற்பிறவியிலேன்னு பழைய வியாக்கியானம் பாட ஆரம்பிச்சுடுவீங்க. சரி, அதவிடுங்க. இதையெல்லாம் ஒத்துக்கிட்டாக்கூட கதை இப்படி முடியலை என்பதுதான் உண்மை. பின்னே எப்படித்தான் முடிக்கப்போறே என்று அவசரப்படதீர்கள். அதான் கடைசி கண்டாச்சுல்ல. ஒரு முடிவுக்கு வரத்தானே போறோம். இப்பவும் முத்தையா எப்பவும்போல வாய்ச்சவடாலில் கிடைத்தவர்களை ஏமாத்தி சமையல் காண்ட்ராக்டில் ஓகோன்னு ஊர்க்காரர்கள் பிரமிக்க காரைவிட்டு இறங்காமல் திரிகிறான். வேறு என்ன சொல்ல?

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page