— மயிலன் ஜி சின்னப்பன்

1

ஏரியை ஒட்டிய ஒழுங்கையில் அவசரமாக சாமிக்கண்ணு நுழைந்தபோது கண்ணுக்கெட்டிய கோடிவரை ஆள்வாசம் இருக்கவில்லை. மாட்டுவண்டி போக்குவரத்தில் மிஞ்சி நிற்கும் நடுக்கோட்டு புற்தடம் நீண்ட விரிப்பைப் போல தெரிந்தது. நடையிலிருந்த தவிப்பை இட்டுக்கட்ட தக்க சமயத்தில் மறைவிடம்தான் தோதாக சிக்கவில்லை. சித்திரை மாதத்து சுள்ளாப்பும் புரட்டிக் கொண்டுவரும் குடலுமாக மனிதருக்கு ஒரு மாதிரி கிருகிருவென ஆகிவிட்டது. முந்தைய இரவு குடித்த சாராயத்தைதான் நொந்துகொள்ள வேண்டும்.

‘கொட கறுவ.. அலாரம் வெச்சு வந்து பேண்டுட்டு போயிருக்கானுவ.. இன்னும் அர அவரு கெழிச்சி வந்தா கொளுத்துற வெளியிலுக்கு எல்லாங் காஞ்சு வரட்டி ஆயிருக்கும்.. வயிறும் செத்த கெடக்காது போல..’ இரண்டடி எடுத்து வைப்பதற்குள் உள்ளுக்குள் குடுகுடுகுடுவென ஏதோ உருளுவதைப் போலிருந்தது. சட்டென வேட்டியை உயர்த்திக்கொண்டு குத்த வைத்துவிட்டார். புட்டத்தில் கோரைப் புற்கள் கோக்கு மாக்காக கீறியதெல்லாம் அந்தக் கணத்தில் உறைக்கவேயில்லை. ஒரே அழுத்தில் ஒட்டுமொத்த குடலையும் இறக்கி வைத்ததைப் போலிருந்தது. லயித்த பெருமூச்சுடன் சற்றுநேரம் அப்படியே அசையாமல் இருந்தார். நாற்றத்தை அள்ளிக்கொண்டு வந்து முகத்தில் அறையும் வேனல் காற்று அத்தனை தொந்தரவாகப் படவில்லை.

வேட்டியை இறக்கிக்கொண்டு ஒழுங்கையில் இறங்குவதற்கும், எதிரில் கோபி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. “என்ன மாமா ஒரே ஓட்டமா வந்த மாதிரி இருந்துச்சு.. கடைல நின்னு மாமா மாமான்னு கத்துறேன்.. காதுலயே வாங்காம நட அத்தன வெரசா இருந்துச்சு..” காலையிலேயே கரைவேட்டி கட்டி, செண்ட்டடித்துக்கொண்டு வாயைப் பிடுங்க வந்துவிட்டவனை அருவருப்பாக பார்த்தபடி சாமிக்கண்ணு ஏரி இறக்கத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

“கேக்குறதுக்கு பதிலிருக்கா பாரு.. வயித்தாலதான போச்சு.. வாயால இல்லேல்ல..”

தோளில் கிடந்த துண்டை உதறி அடிப்பதைப் போல கையை உயர்த்தி, “வப்பன் பேச்சு அப்புடியே வந்துருக்கு பயமவனுக்கு..” என்றவர், “என்னடா காலங்காத்தால வேட்டிய கட்டிட்ட.. திரும்ப செயிச்சதுல இருந்து கெப்புரு மசுரு ஏறி போச்சுரா ஒங்களுக்கு..” பதில் ஒரண்டையிழுத்தார்.

“ஏன் நீங்க சிஎம்மாவலாம்ன்னு இருந்தது எதுவும் தட்டுக்கெட்டு போச்சா?” கோபியின் நக்கல் பேச்சுகளில் இடப்பக்கமாக கோணும் அவனது வாயைப் பார்க்க சாமிக்கண்ணுக்கு பற்றிக்கொண்டு வரும்.

“டிவி பொட்டி தர்றேன்னுட்டு ஆசைய காட்டி ஓட்டு வாங்கிப் புட்டிய.. வீட்டுக்கொரு கக்கூச கெட்டித் தர்றோம்ன்னு சொல்ல வாய் வருமா..? இங்க பாரு… பாத நெடுக்க அட தட்டி வெச்சிருக்கானுவ..”

“அப்புடி சொன்னா மட்டும் நீரு எங்களுக்கு ஓட்டு போட்ற போறியளா? எதுக்கு மாமா ச்சும்மா வாய போட்டு தேச்சிட்டு இருக்க..”

“இப்ப எதுக்குரா பாண்டி மவனே வெள்ளன வந்து வேட்டிய உருவிட்டிருக்க? சோலி இல்லையா ஒனக்கு..” வறண்டது போக ஒதுங்கியிருக்கும் நீரில் இறங்கியபடி சாமிக்கண்ணு கேட்டார்.

“செடிய வெட்றதுக்கு வசூலுக்கு அன்னிக்கு வந்தேன்.. பெறவு தரேம்ன்னீய.. அதுக்கு அங்குட்டு ஆள புடிக்கவே முடியல..”

“அதுக்குன்னு காலு கலுவ வர்றப்பவாடா வாருல வெச்சு முடிஞ்சிட்டு வருவேன்..?” எரிச்சலுடன் கேட்டார்.

“ஆயரமா நா எலுதிக்கிறேன்.. அத்தைக்கிட்ட கொடுத்து வைங்க.. அப்பறமா வந்து வாங்கிக்கிறேன்..”

காதிலேயே வாங்காதவரைப் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை கட்டாந்தரையாக தெரிந்த பரப்பைப் பார்த்துகொண்டு நின்றார். ஆங்காங்கு தேங்கிக் கிடந்த குட்டைகளில் ஐந்தாரு பொடியன்கள் துண்டைப் போட்டு இழுத்து மீன் கிடைக்கிறதாவென பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“நாலு வருசத்துக்கு முந்தி ஒங்கப்பனும் நானும் மீன் ஏலத்துக்கு புடிச்ச ஏரி… எப்புடி பொளந்து கெடக்கு பாரு..”

“ம்ம்..”

“பொட்டு தண்ணீ தங்கமாட்டேங்குது.. தரித்தர்யம் புடிச்சு போச்சு..”

“எதாச்சும் இப்புடியே சொல்லுங்க.. செடி இப்புடி மண்டிக் கெடந்தா.. பூரா வெசம்… ஆவியாக்கியுட்டு போயிருது.. தண்டுக்கு தண்டு வேர் போட்டு காடு மாதிரி ஆயி கெடக்கு பாருங்க.. ரெண்டு க்ரேன உள்ள எறக்கிவிட்டா பூராத்தையும் நெம்பி யெறிஞ்சிசடலாம்..”

அவனுக்கு பதிலே சொல்லாமல் சாமிக்கண்ணு மேட்டில் ஏற ஆரம்பித்தார்.

“ஆயரமா எலுதிக்கவா.. புடி கொடுக்காம போனா எப்புடி..?”

“ஒங்க ஆட்சிதான நடக்குது… ஆள கூட்டியாந்து காமிச்சு வரி காசுல பண்ணு இந்த வேலையெல்லாம்…”

பின் தொடர்ந்து வரும் நடையின் சரசரப்பு நின்றுபோனது அவருக்கு கேட்காமலில்லை. நிறுத்தாமல் பேச்சைத் தொடர்ந்தார்..

“இல்லேன்னா ஒங் கைக்காசு போட்டு பண்ணி… கட்சியில நல்ல பேரெடுத்து..  அடுத்தவாட்டி தொகுதிய காங்கிரஸ்காரனுக்கு உடாம நீயே வாங்கிரு..” வேட்டியை விருட்டென வெட்டி மடித்து கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

 2

“எல்லாத்துக்கும் சிங்கப்பூர் துபாய்ல வேல பாக்குறவந்தான் நொட்டனும் இவனுகளுக்கு.. வாலிபால் மேச் நடத்தறதுலேந்து கும்பாயிசேகம் வரைக்கும் அவனுகளே படியளந்துட்டு கெடக்கனும்.. அங்க என்னமோ எல்லாவனும் பேன்க் வேலைக்கு போயி சம்பாரிக்கிற மாதிரி.. ஏதோ தூரத்துல இருந்து ஊருக்கு செய்யுற சந்தோசத்துக்காக அனுப்புறான்.. இங்க குண்டி நோவாம இவனுக குறுக்க மறுக்க போய்க்கிட்டும் வந்துக்கிட்டும்.. ஒருத்தவொருத்தன்கிட்டயும் ஒத்த பைசா வாங்குறதுக்கு கவட்டிக்குள்ள பூந்து வரவேண்டியிருக்கு..” சாமிக்கண்ணு ஆடு வாங்க கேரளாவுக்கு புறப்பட்டு போயிருப்பதாக டீக்கடையில் பேச்சு வந்தபோது கோபிக்கு சுல்லென்று பொத்துக்கொண்டு வர படபடவென பொரிய ஆரம்பித்துவிட்டான். பொத்தாம்பொதுவாக அவன் பேசியதை அங்கிருந்தவர்கள் ரசிக்கவில்லை. கண்டிக்கவும் ஒருத்தருக்கும் வாயெழவில்லை.

அவனை மேற்கொண்டு உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும் எண்ணத்தில் ரெங்கசாமி கொக்கி போட்டார்.. “ஏம்பி.. இன்னுமா வசூலு முடியல? ஒன்னு ரெண்டு மாசத்துக்குள்ள வேலய முடிக்காட்டி மழ கீது வந்து தொலச்சிரும்ய்யா.. மூத்தரமாட்டு பேஞ்சா கூட ஒலையில வண்டி உள்ள எறங்க முடியாது அப்பறம்..”

“காசு கொடுக்காட்டியும் நக்கலு நையாண்டின்னு கிருத்திருவ மசுரு வேற.. பிச்சக்காரன் மாதிரிதான் ஒவ்வொருத்தனையா வெரட்டி வெரட்டி கேக்க வேண்டியிருக்கு..” பேச்சு வாக்கில் ‘அவன் இவன்’ என சொல்லிவிட்டதை உடனே உணர்ந்து சுற்றியிருந்த முகங்களை ஏறிட்டான். 

“சாமிக்கண்ணையா சொல்ற.. வரண்டிப்பய பத்து காசு தர மாட்டான்..” ரெங்கசாமிக்கு கோபியின் காட்டம் போதவில்லை. வம்பாடுபட்டாவது கொஞ்சம் குளிர் காய்ந்துவிட வேண்டும்.  மற்றவர்களுக்கும் பேச்சு ஒரு முகமாக திரும்பிவிட உத்வேகம் துளிர்த்துவிட்டது.

“மலபாரி கெடா ஒன்னும் தாயாடு ரெண்டும்.. மூணுமா சேத்து முப்பத்தியஞ்சு ரூவாய்க்கு வரும்போல.. கூட ஒத்தரையும் கூட்டிக்காம ரகசியமா பொறப்ட்டு போயிருக்கான்..“ என்றது ஒரு குரல்.

“கொண்டாந்து பண்ண ஆரம்பிக்க போறானாமா?” சலிப்போடு புகையிலையைத் துப்பியபடி ரெங்கசாமி கேட்டார்.

“ஏற்கனவே கொடியாடுதான் நாலஞ்சு நிக்கிதே வாசல்ல.. எதாச்சும் கணக்கு பண்ணியிருப்பான் பெருசா..”

“பொண்டாட்டியும் அவனுமா சேந்து புளுக்க அள்ளுறதுக்கா?” கூட்டுச் சிரிப்பொலி.. கடைக்காரரும் சேர்ந்து சிரித்தார்.

“இந்த கேரளா ஆடெல்லாம் எங்குன போயி வ்சாரிக்கிறான்.. ஊருக்காரன் எவங்கிட்டயாச்சும் எதும் சொல்றானா பாரு.. நேத்திக்கு சாயந்தரமுட்டும் இங்குனதான் ஒக்காந்திருந்தான்.. ஒரு வார்த்த விடல..”

“ஆம்பலாப்பட்டு ஆளு ஒருத்தன் வாங்கியாந்திருக்கானாம்.. அத புடிச்சு வ்சாரிச்சு போயிருக்கான்.. குட்டி போட்டு சீக்கிரமே சென வெச்சுக்குமாம்.. கறி வெயிட்டும் நல்லா நிக்கும் போல..”

“ச்சும்மாவே எறங்க பாத்துதான் பேசுவான்.. இதுல பண்ணக்காரனா வேற ஆயிட்டான்னா கிட்ட ச்சேக்க மாட்டான் ஒருத்தனையும்..”

சாமிக்கண்ணுவைப் பற்றி இயல்பாக ஆரம்பித்திருந்த பேச்சை அங்கு கூடியிருந்தவர்களுக்கு தத்தமது காழ்ப்பை இறக்கிவைக்க தொக்காக தான் மாற்றி கொடுத்துவிட்டதாக கோபிக்கு தோன்றியது. மேற்கொண்டு அவனால் எதுவுமே பேச முடியவில்லை. பேச்சு சாமிக்கண்ணு வீட்டு படுக்கையறை வரை போய் வந்தபோது, அவன் தடுமாறிவிட்டான். 

அப்பா இருந்தவரை மாமாவுக்கும் அவருக்குமான சினேகமே தனி. தன்னோடுதான் ஏனோ மாமா ஒட்டுவதேயில்லை. கட்சிக்காரன் என்றாலே களவாணிப்பயலாகத்தான் இருப்பான் என்ற கசப்பு தட்டும் நிந்தனை. காணும் இடத்திலெல்லாம் முகத்தை முறிக்கும் பேச்சு – அதில் ஊடாடும் ஒரு குத்தல். 

தான் விட்ட வார்த்தைகளையே கச்சாவாக்கி தற்போது நடக்கும் யோக்கியர்களின் வழக்காட்டில் அவனால் சாமிக்கண்ணு பக்கம்தான் சார்பெடுக்க முடிந்தது. அதோடு, அமர்ந்திருக்கும் எட்டு பேரில் இருவருக்கு மட்டும்தான் வசூல் நோட்டில் பெயரிருக்கிறது என்பதை யோசித்தபோது அவ்விடத்தில் மேற்கொண்டு நிற்கவே அவனுக்கு கூசியது. 

3

வெள்ளைவெளேரென நிற்கும் தலைச்சேரி ஆடுகளின் மீது ஊர்க் கண்கள் மேயாமலிருக்க இன்னொரு அடுக்கு முற்படலை வைத்து வேலி நெருக்கிக் கட்டப்பட்டது. மேய்ச்சலுக்கு கூட அம்மூன்றும் வெளியே கொண்டு வரப்படவில்லை. கொல்லையிலிருந்து மாவிலைகளையும் கொய்யா இலைகளையும் வெட்டி கொப்பு கொப்பாக டிவிஎஸ் எக்ஸெல்லில் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது சாமிக்கண்ணுக்கு ஓர் இனம்புரியாத பதற்றம் – கவனிக்கப்படுவதாலோ கவனிக்கப்படுவதாக நினைத்துக்கொள்வதாலோ. இந்தப் பதற்றமே அவரது சுபாவத்தைத் திரிக்க ஆரம்பித்தது – தனது வழக்கமான இறுமாப்பை விட்டுவிட்டு வலியப்போய் காண்போரிடம் பேச்சு கொடுத்தார். அந்தப் போலித்தனம் அவருக்கே அசிங்கமாக பட்டதோ என்னவோ, மூன்றாம் வாரமே அந்தப் புது ஆடுகளை ஏற்கனவே இருந்த நான்குடன் மேய்ச்சலுக்கு வெளியே இழுத்துப் போக துவங்கிவிட்டார்.

கையில் அலக்குத் தொரட்டியுடன் ஆட்டுக்கூட்டத்தை இரு வேளைகள் கொல்லைக்கு கூட்டிச் செல்லும் சாமிக்கண்ணு, ஓரிரு நாட்களுக்கு பிறகு எவருக்கும் அத்தனை அந்நியமாக தெரியவில்லை. செல்லும் வழியில் ஆங்காங்கே நிறுத்தி வேலியோரத்து குலைகளை வளைத்துப் பிடிப்பார். புதிதாக வந்திருந்த மூன்றுக்கும் தவ்விப் பிடிப்பதில் அத்தனை லாவகம் போதவில்லை. அதைப் பார்க்கவே அவருக்கு வேடிக்கையாக இருந்தது.

“பாக்க நம்மூரு கொடி கெடா மாதிரிதானய்யா இருக்கு.. எதுக்கு இத்தன வெல வெச்சு விக்கிறான்..” ரெங்கசாமி வழியில் வைத்து விசாரிக்க, சாமிக்கண்ணுக்கு பதில் சொல்லவே எரிச்சலாக இருந்தது. சட்டென முகத்தைக் காட்டவும் முடியவில்லை. கேட்டுவிட்டு போய் அந்தப் புகையிலை வாயில் இந்தச் சேதிகளையும் போட்டு குதப்பித் துப்புவார் என்பது தெரியும். வேண்டாவெறுப்பாக இரண்டொரு வார்த்தையில் பதில் சொல்ல, ரெங்கசாமியும் நீட்டி முழுக்காமல் நிறுத்திக்கொண்டார். 

விஷயறியும் தொனியில் கேட்பவர்களுக்கு சாமிக்கண்ணு ஆனால் போதும் போதுமெனும் அளவிற்கு கதையளந்தார். அப்படியான தருணங்களில் தன்னையும் மீறிய பெருமிதம் முகத்தில் மிளிரும்.

“ஊர்ப்பக்க வெள்ளாடு மாதிரிதான் இருக்கும்.. தொடை ச்சப்பக்கிட்ட நல்லா முசுமுசுன்னு மசுரு இருக்கு பாருங்க.. அதான்.. அத பாத்து வாங்கனும்.. அதோட இப்படி கலுத்த ஒட்டி ஒரு காப்பி கொட்ட கலர்ல லேசா பட மாதிரி இருக்குல்ல.. அப்படியிருந்தாதான் அது அசல் தலச்சேரி..” இதெல்லாம் தன்னிடமிருக்கும் மற்ற ஆடுகளிலிருந்து அந்தப் புது சோடியில் வித்தியாசமான அம்சங்களாக இவரே பார்த்து வைத்தவைதான். ஆனால் சொல்லும்போதிருக்கும் மிடுக்கு வேறு விதமாக இருக்கும். “கேரளால இதையெல்லாம் தரைலயே விடமாட்றான்.. பூரா பரண்தான்.. ஒசர ஒசரமா கெட்டி வெச்சுதான் வளக்குறான்.. போயி பாத்தா வாய பொளக்க வருது.. அப்படி வெச்சிருக்கான்.. நம்ம சேட்டன்கிட்ட க்ராசு எதுவுமே கெடையாது.. எல்லாமே அசலுதான்..” 

இரண்டு தாயாடுகளில் ஒன்றை சினையாக பார்த்து வாங்கி வந்திருந்தார். குட்டிகள் வந்ததும் ஒரு சிறிய கொட்டில் எழுப்பிவிடும் ஆசை இருந்தது. தலைச்சேரி ஆட்டுப்பண்ணையை வட்டாரத்தில் முதல் ஆளாக உருவாக்கப் போகிறோம் என்ற உற்சாகம் சொரிந்த நாளில், பூவரச மர ரீப்பர் ஒரு லோடு கொண்டு வந்து இறக்கினார். அமிர்தத்துக்கு இதையெல்லாம் பார்க்க சலிப்பாக இருந்தது. பண்ணை குறித்த திட்டங்களையும் கனவுகளையும் அவளிடம் சொல்லும்போது பதிலெதுவும் சொல்லமாட்டாள். முன்பு தகர தொட்டிகளில் வீடு முழுக்க மீன் தவ்விக்கொண்டிருந்ததைப் பார்த்தவள்; அவளால் அப்படித்தான் இதைப் பார்க்கமுடியும் – அவளது சோகையை சாமிக்கண்ணு சட்டையே செய்யமாட்டார்.

“கலப்பே கெடையாது.. பூரா அசலுதான் இருக்கும் நம்மக்கிட்ட.. அசல் தலச்சேரின்னா சாமிக்கண்ண தேடிதான் எல்லாவனும் வரணும்..”  சொல்லிய நாளிலிருந்து கொடியாட்டுக் கூட்டத்தை வீட்டின் பின்கட்டில் கொண்டுபோய் கட்டிவைத்தார்.

வந்ததிலிருந்து  ஒரு மாத காலமாக அங்குலம் கூட வளராமலிருக்கும் அம்மூன்றும் இவர் கண்ணுக்கு மட்டும் நாளுக்கு நாள் எடை கூடுவதாகத் தெரிந்தன. சினையாட்டுக்கான கவனிப்பு பிரத்யேகமாக இருந்தது. வரப்போகும் குட்டிகளில் கடா இருந்தால் வீரனாருக்கு அதை நேந்துகொடுப்பதாக வேண்டிக்கொண்டார். ஆடுகளைப் பார்க்கவும் விசாரிக்கவும் அவ்வப்போது யாரேனும் வந்துபோவது நாளுக்கு நாள் புது அந்தஸ்த்தாக தெரிந்தது.

“ஆளு புது ஆளா இருக்கு.. யாரு எவுருன்னு அடையாளந் தெரியலயே..?”

“இருக்கும் இருக்கும்..” கோபி பைக்கை ஒருக்களித்து நிறுத்திவிட்டு இறங்கினான்..

“என்னடா இங்குட்டு..”

“பண்ண எப்பிடியிருக்குன்னு பாக்க வந்தேன்..” வாய் இடப்பக்கம் போகவில்லை என்றாலும் சாமிக்கண்ணுக்கு அது சுருக்கென்றிருந்தது.

“ஏரி ச்செடிய பூரா நெம்பியெடுத்து தூருவாரிட்ட போல.. மொத்தமுங் க்ளியரா இருக்கு..”

“ஆமாமா.. எல்லாருமா வாரியெடுத்து கொடுத்த காசுக்கு நானே அருவால கொண்டு போயி செத்துனாதான் உண்டு..” அழுத்தமில்லாமல்தான் சொன்னான்.

“ஊரு மசுருன்னு சுத்தாம எதுனா தொழில பாரு.. இல்லேன்னா கடேசி வரைக்கும் பேனர் வெக்கிற சோலிதான் பாப்ப..” அறிவுரை போலில்லாமல் அது அவனைக் குதறிவிடும் தொனியில் இருந்தது. திண்ணையில் உட்கார போனவன் அப்படியே நின்றுவிட்டான்.

“என்னைய பாத்தாலே ஒங்களுக்கு பொச பொசன்னு வரும்போல..”

சாமிக்கண்ணு அவன் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளாதவரைப் போல சைக்கிள் செயினுக்கு எண்ணெய் போட்டு சுற்றிக்கொண்டிருந்தார். எதையோ இட்டு நிறப்புவதைப் போல அமிர்தம்தான் பேச்சுக்கொடுக்க வேண்டியிருந்தது.

“அம்மா நல்லாருக்காடியய்யா.. வர்றதேயில்ல இங்கிட்டு..”

“இருக்குத்த.. ச்சொன்னாலும் எங்கிட்டும் நகரமாட்டேங்குது..  வர சொல்றேன்..”

“வம்மாள பாக்க வீட்ல நாதியில்ல.. பேனரு கட்டு.. பேனரு..” சாமிக்கண்ணு முனக்கமாக சொன்னது இருவருக்கும் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

“ஒக்காருய்யா.. டீ போட்டாறேன்..”

“இல்லத்த.. கெளம்புறேன்..  நாளைக்கு வரி கூட்டம் நடக்குது.. அத ச்சொல்லிட்டு போவத்தான் வந்தேன்..” வண்டியைத் திருப்பிவிட்டான். சட்டென அவன் அப்படி செய்தது சாமிக்கண்ணுக்கும் சங்கடமாக இருந்தது. திரும்பிப்பார்த்த போது வேலியைத் தாண்டி வண்டி போயிருந்தது. அதன் பிறகு அவர் வீட்டுக்கு அந்த ஆடுகள் சாகக் கிடந்த நாள் வரை அவன் வரவேயில்லை.

4

கொடியாட்டு கடா எதுவும் தலைச்சேரியில் ஏறிவிடக் கூடாதென மேய்ச்சலுக்கும் தனித்தனியாகவே கூட்டிச் செல்லப்பட்டன. நாளாகாக சாமிக்கண்ணுக்கு இந்தச் சோலி அலுப்புத்தட்ட ஆரம்பித்தது. சேர்த்தே இழுத்துக்கொண்டு போய் வெவ்வேறு இடத்தில் இரு கூட்டத்தையும் மேய விடுவார். ஏரியையொட்டிய ஒழுங்கை பக்கம் போனால், கொடியாட்டு கூட்டம் தன்னாலேயே அறுப்பு முடிந்த வயக்காட்டு பக்கம் இறங்கிவிடும். தலைச்சேரிகள் காட்டாமணக்கு பக்கமாக பாயும். கொடிக்கூட்டம் காட்டாமணக்கில் வாயே வைக்காது. சாமிக்கண்ணுக்கு மெனக்கட்டு இரண்டையும் பிரித்து வைக்கும் சோலி மிச்சம். கொஞ்ச நேரம் லாந்திவிட்டு, ஒரு டீயையும் பீடியையும் இழுத்துவிட்டு, நாலைந்து நக்கல் புரளி பேசிவிட்டு சாவகாசமாக வந்து வீட்டுக்கு இழுத்துப்போனால் போதும். 

ஓரிரு நாட்களில் இப்படி ஒழுங்கையையொட்டி மேயவிடுவது சாமிக்கண்ணுக்கு வசதியாக தெரிந்தது. செடிகளும் மண்டிக்கிடக்கின்றன. ஆடுகள் ரொம்ப தூரம் போவதில்லை. மேய்ச்சல் ஒரு தனிச் சோலியாகவே தெரியவில்லை.

அப்படியொரு காலை, சினையாடு மேயச்சலுக்கு வராமல் சோர்ந்து தனித்து நின்றது – ஒரு மாதிரி முன்னங்கால்களைத் தரையில் விசுக்கி விசுக்கி தேய்க்க ஆரம்பித்தது. குட்டிப்போடும் காலத்திற்கு வந்திருக்கும் மசக்கை என்று சாமிக்கண்ணுக்கு பட அதனை கொட்டிலிலிருந்து கொண்டுவந்து கட்டாந்தரையில் பொசுபொசுவென வைக்கோலைப் பரப்பி தனிமைப்படுத்தி வைத்தார். முட்டிக்கொண்டிருக்கும் வயிறுக்கு மூன்று குட்டிகளாவது இருக்கவேண்டுமென தோன்றியது. வைக்கோலில் நிற்காமல் கீழே விழுந்த ஆடு, கால்களை வெட்டி வெட்டி இழுத்தபடியே இருந்தது – வலிப்பு கண்டதைப் போல ஆட்டம் காட்டியது. சாமிக்கண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘என்ன சாதியெலவு இது.. குட்டிப்போட கொண்டாந்து விட்டா குப்புற குப்புற பெரட்டிக்கிட்டு கெடக்கு…’ 

சற்று நேரத்திற்குள் ஆட்டுக்கு நாசியில் கெட்டி மஞ்சளாக கோழை அடைத்துக்கொள்ள, சாமிக்கண்ணுக்கு என்னவோ சரியாகப்படவில்லை. ஓடிப்போய் தும்பைத் தழையை பறித்து சாரைப் பிழிந்து நாசியில் விட்டுப்பார்த்தார். எதிர்த்து தும்மலடிக்கப் போகிறதென விலகி நின்ற கணத்தின் நிகழ்வில்தான் மனிதர் அரண்டு போனார். மூச்சை ஆழ இழுத்த ஆட்டுக்கு தும்மலே கட்டவில்லை. மாறாக கண்கள் செருகிக் குத்திட்டுவிட்டன. அமிர்தம் தலையிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள்.

வைத்தியர் வந்து சேரும்போது தாயாட்டுக்கு கடைசி இரண்டு இழுப்புகள்தான் மிச்சமிருந்தன. எதுவும் செய்ய முடியவில்லை. ஐந்தாரு பேர் அதற்குள் கூடிவிட்டார்கள்.  

ஆட்டைப் பார்த்த வைத்தியர் கொட்டிலுக்கு சென்று புழுக்கைக் கழிச்சலை கிண்டிப்பார்த்தார். மற்ற ஆடுகளையும் பிடித்து கண்ணுக்குள்ளும் நாசியிலும் எதையோ தேடுவதைப் போல பரிசோதித்தார். தலைச்சேரி கடாயின் ஆசனவாய்க்குள் விரலை விட்டு நோண்டியெடுத்து பிசுபிசுப்பை அளந்தார்; முகர்ந்து பார்த்தார்.

சாமிக்கண்ணு சித்தப்பிரமை கண்டதைப் போல காலை பரப்பி நீட்டிப்போட்டு உட்கார்ந்து வைக்கோல் பரப்பில் செத்துக்கிடக்கும் சிணையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

எதையோ கண்டுபிடித்துவிட்டதைப் போல வைத்தியர் எழுந்து வந்தார்.

“தொத்து நோயா எதுவும்? வவுத்துப் போக்கு மாதிரி?” கூட்டத்திலிருந்து ஒரு குரல்..

சாமிக்கண்ணுவிடம் வைத்தியர் விசாரித்தார், “தீவணம் என்ன போட்டீய?”

அவர் வாயே திறக்கவில்லை.

“எப்பவும் போல மேய்ச்ச தான்.. புதுசா ஒன்னுங் கொடுக்கலயே..” அமிர்தம்தான் பதில் சொன்னாள்.

“எங்குன மேய விடுவீய..”

“ஏரிய ஒட்டிதான் கூட்டிட்டு போவாரு..” அழுகை அவளுக்கு நிற்கவில்லை. சினையாடு வெள்ளிக்கிழமையில் செத்துப்போயிருப்பது, தன் குடியையே கெடுக்கப்போவதாக கூப்பாடு போட்டாள். 

அந்தப் பக்கமாக போய்க்கோண்டிருந்த கோபி, அமிர்தத்தின் அழுகையைக் கேட்டு கூட்டத்திற்குள் புகுந்து எட்டிப்பார்த்தான். செத்துக் கிடக்கும் தாயாட்டின் கோலத்தில் ஒரு நொடி விக்கித்துப்போய்விட்டான்.

வைத்தியர் அவளது ஓலம் அடங்கும்வரை நிதானித்துவிட்டு கேட்டார் “காட்டாமணக்க எதும் திண்ணுச்சுகளா..?”

“ஆடு எங்கிட்டு காட்டாமணக்கு பக்கட்டு போவும்..? நாத்தமே ஆவாதே..” கூட்டத்திலிருந்து குரல் வந்தது.

“ஜில்லாவுக்கு இது புது சாதில.. நாட்டாடு எதுவும் கிட்டயே போவாது.. இதுக புது எடத்துல விட்டதும் போயி வாய வெச்சாலும் வெச்சிருக்கும்..” வைத்தியர் யோசிப்பதைப் போல பேசினார்.

“தின்னாலும் வயித்துக்குதான ஆவாது.. இப்புடி வெரச்சிக்கிட்டு கெடக்கு.. பூச்சிவட்டு எதுவும் கடிச்சிருக்குமா?” பக்கத்து வீட்டுக்காரர் குழம்பியிருந்தார்.

“வயித்துக்கு கேடு உண்டுதான்.. ஆனா அதவிட நரம்ப புடிச்சி கிந்தியிலுத்துப்புடும்.. ரத்தம் சுண்டி காஞ்சுப்போயிரும்.. மிச்ச ரெண்டுக்குமே கண்ணெல்லாம் வெளிறி போயிருக்கு.. ரெவைக்கு நிக்கிறதே செரமந்தான்…”   

வைத்தியர் பேச பேச சாமிக்கண்ணு தலையை மெல்ல நிமிர்த்தினார். தாடையின் நடுக்கம் கீழுதட்டில் தெரிந்தது. சரணடைந்துவிடும் கெஞ்சலுடன் கண்கள் குறுகிச்சிறுத்தன. ஒரு சுற்று, கூடியிருந்த சனத்தைப் பார்த்தார். எவர் முகமும் தன் கண்களை நேருக்கு நேராக பார்க்கவில்லை என்ற இடத்தில் அநாதரவாக உணர்ந்தார். ஒருவனதைத் தவிர.

கோபியைக் கூட்டத்தில் பார்த்ததும் சுற்றிவந்த தலை அப்படியே நின்றுவிட்டது. கழுத்திலும் நெற்றியிலும் பொல்லென்று வியர்த்துவிட, மனிதர் கண்ணிமைக்கவே இல்லை. அனிச்சையாக வாயிலிருந்து அந்தப் பதில் வந்தது.

“ஏரி பக்கமே அதுக எறங்கல..“ 

(முற்றும்)

01. ஆச்சி

இறுதி ஊர்வலத்தில்
வீசிய காற்று

சவமாய்க் கிடந்தவரை தீண்டியதும்
தன்னுடல் மீதிருந்த பூக்களை உதிர்த்து
நிலமெங்கும் விட்டுச்சென்றார்

02. அபூர்வ நிழல்

ஏதேனும் ஓர் அபூர்வ நிழலில்
என்னை மறைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

மரத்தினுடையதாகவோ பறவையினுடையதாகவோ
மனிதனுடையதாகவோ
மறைக்குமந்த அந்த அபூர்வ நிழல்
இருக்கலாமென
ஒரு அசரீரி கேட்கிறது.

என் மனதின் அபூர்வ நிழல்
தனிமையில் மறைந்திருக்கிறது.
சாபத்தில் எழுந்திருக்கிறது.
என்னுடைய நிழலில்
நீயேன் இன்னும்
தோன்றவில்லையென
அபூர்வத்திடம் கேட்கலாமெனில்
அபூர்வம் மறைந்திருக்கும் நிழல் எதுவென்று
அறியேன்.

03. துளிர்

தருணத்தில்
சிறகசைக்க காத்திருக்கும்
வலசை மனத்தில்
அமைதியின் கிளை
துளிர்க்கிறது

ஜெகநாத் நடராஜன்

1

வயற்காட்டில் இரவு நேரத்தில் அழுகுரல் கேட்பதாக ஊர் முழுவதும் பேச்சு பரவத்துவங்கியிருந்தது. ஆரம்பத்தில் யாருக்கும்  அந்தப் பேச்சு குறித்த ஆர்வமில்லாமலிருந்தது. ஆனால் தெருமுக்கு, பிள்ளையார் கோவில், காப்பிக்கடை என்று இரண்டு ஆட்கள் கூடுமிடத்தில் முதல் விஷயமாக அது பேசப்பட்டு, மூன்றாவது நான்காவது நபரும் சேர்ந்து கொண்டார்கள். சின்ன வயதுப் பயல்கள் செவிகொடுக்க வந்த போது பெரியவர்கள் விரட்டினார்கள். அவர்கள் வீட்டில் போய் அதை ரகசியம் போலச் சொல்ல பெண்களுக்கும் ஆர்வம் வந்தது. அவர்கள் கேட்க முயன்ற போது, ”வாய மூடிக்கிட்டு கெட, எவஞ்சொன்னான்?” என அடக்கப் பட்டார்கள். 

அதன் பின் அழுகுரலை முதலில் கேட்டவர் யார்? என்று அறியும் முயற்சி ஊருக்குள் துவங்கியது. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஆரம்பித்து, எவருக்கும் யார் தமக்குச் சொன்னார்கள் என்று சொல்லத் தெரியாமல் அந்தத் தேடல் நின்று போயிற்று. ஊருக்குள் இப்படி எதாவது புரளிகள் பரவி, வந்தது போல் காணாமல் போவது வழக்கமான நிகழ்வுதான் என்பதால் யாரும் கவலைப்படவில்லை.

சில வாரங்களில் மீண்டும் அந்தப் பேச்சுவந்தது.சொன்னவன் சக்கிலியக்குடி கோட்டை. அதிகாலையில் கிழக்குத்தெரு அச்சமட்டியார், காப்பிக்கடையை திறக்க வீட்டுக்கதவை திறக்க வரும்போது, வாசலில் உட்காந்திருந்தவனைப் பார்த்து மிரண்டுவிட்டார், ”ஏல யாரு?” என்று பயமும் ஆவேசமுமாகக் கத்த, வீடு விழித்து, தெரு கூடிவிட்டது.

சக்கிலியன் கோட்டை நேராக சுடுகாட்டிலிருந்து வந்திருந்தான். முதல் நாள் ஊருக்குள் ஒரு சாவு.வாழ்ந்து அனுபவித்த கட்டை. ஆலியாட்டமும் வேட்டுமாய் சுடுகாடு கொண்டுவைத்துவிட்டு வந்த ஜனம் தூங்கிக் கொண்டிருக்கும் காலைவேளையில் கோட்டை வந்திருக்கிறான்.. முகம் பயமும் பீதியுமாகக் கிடந்தது. ”என்னடா? ஏன் இப்பிடி உட்கார்ந்திருக்க.” என்று கேட்ட குரலுக்கு முகம் பார்க்காமலேயே பதில் சொன்னான்.

”சாமீ, அழுக சத்தத்த கேட்டேன்.”

“கேட்டியா? ”

நாப்ன்கந்து பேர் ஒன்றாக்க் குரல் கொடுத்தார்கள்.

”பாத்தேன். நல்ல நெலவு வெளிச்சம்.தலைய விரிச்சுப் போட்டுக்கிட்டு பம்பு செட்டு தொட்டி மேல உக்காந்து அழுதுக்கிட்டிருந்துது. ”

”அப்புறம்?

”கையி காலெல்லாம் நடுங்கிடுச்சு. நடக்க முடியல தலசுத்துது கண்ணு இருட்டுது”

”என்னல சொல்லுத, சுடு காட்டுல பொணத்த எரிக்கற  நீயே இப்படிச் சொன்னன்னா?’ 

”பேயின்னா பயந்தாங்கள”

”ஏல ராத்திரி பூரா பொணத்த எரிச்சுக்கிட்டு வந்து உக்காந்துக்கிட்டுவந்து பேயி பிசாசுன்னு சொல்லுத . ஏன் அந்த வயக்காட்டு வழியா போன?’’

”சத்தம் வருது சத்தம் வருதுன்னு ஊருக்குள்ள பேச்சு வந்தத நா, நம்பல அதுதான் அந்த வழில வந்தேன்”

”அப்ப அது நெஜந்தானா? நீ பாத்தியா?’’

”பாத்துட்டுத்தான வந்து இப்படிக் கிடக்கேன். நல்ல நெலா வெளிச்சம். காத்து வீசுது.வயக்காட்டுக்குள்ள எங்கனயோ கெடந்து நரி ஊளை விடுது.அவ அங்கன குத்த வச்சு மாட்த்தி அழுதுக்கிட்டிருக்கா? ”

” நல்லா முகத்த பாத்தியாடா? ”

”மொகத்த வேற பாக்கணுமாய்யா? கண்ணீரும் கம்பலையுமா கேவிக் கேவி அழுகுதா? என்ன பாத்துடுவாளோன்னு ஆமணக்குச் செடிக்குள்ள போய் ஒளிஞ்சுக்கிட்டேன். அவ மேக்க பாக்க இருக்கா, நா கெழக்க இருந்து வாரேன். ஈர சேல, தல விரிஞ்சு கெடக்கு. ஆவலாதி சொல்லுதமாதிரி பேசிக்கிட்டே அழுவுதா. ”’

”என்ன என்னடா சொன்னா? ”

”என்ன சாமி ஈரக்கொல நடுங்குங்கேன். விவரம் கேக்கிய.. ”

என்றவன் அமைதியாக இருந்துவிட்டு

‘கண்ணால பாத்தேன். என்ன செய்யணுமோ செய்யுங்க? ”

என்று எழுந்து நடக்கத்துவங்கினான்.

கூட்டம் பின்னால் செல்ல

”நில்லுடா”

பெரிய பாட்டையா கத்தினார். அவர் ஊருக்குள் பெரியவர்.ஊர் அவருக்கு கட்டுப்படும்.

கோட்டை நின்றான்

”என்னடா நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க”

”முடியல சாமி நாலு மடக்கு சாராயம் குடிச்சாத்தான் நடுக்கம் நிக்கும்போல இருக்கு. ” 

”சரி முடியும்போது வா. பேசணும்”

தலையாட்டியபடியே யாரையும் திரும்பிப் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாகப் போய்விட்டான். 

ஜனம் மிரட்சியோடு நின்றது.

கோட்டை ஊர்ப் பிணம் எரிப்பவன் அவனே பயந்திருக்கிறான் என்றால் அவதான்.அழுகச்சத்தம் கேட்டுச்சு.அழுகச்சத்தம் கேட்டுச்சுன்னு ஊருக்குள்ள பேச்சு வந்தது நெஜந்தான்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாருக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. 

2

ரத்தினசாமியின் கிணரு வயக்காட்டுக்கு தெக்கே இருந்தது. மாவட்டத்தில் அந்த மாதிரி கிணரு இல்லை என்று பேசிக் கொள்வார்கள்.. இரண்டு கிண்றை ஒன்றாக வெட்டிய நீள அகலம். நல்ல ஆழம். ரெண்டு மோட்டர். கிணருவெட்டி மண் தோண்டும்போது அள்ளிய சரளைக் கற்கள் பக்கத்தில் குட்டி மலை போலக் கிடந்தது.  சுற்றி தென்னை மரங்கள்.உச்சியில் ரெண்டு கொடுக்காப்புளி மரங்கள்.மரத்தில் தூளி கட்டி பச்சைக் குழந்தைகள் தூங்கும். ஆட்கள் மேலேறி மேலேறிப் பதிந்த ஒற்றையடி தடம். மத்தியானச் சாப்பாடு கூலி ஆளுங்களுக்கு அங்கேதான், எந்நேரமும் பறவைச் சத்தம் கேட்கும். எந்தக் கோடைப் பகலிலும் அங்கு நிழல் கிடக்கும்.கிணற்றில் எப்போதும் நீர் இருக்கும். இரண்டு நாள் தொடர்ந்து மழைவந்தால் நீர் நிலமட்டம் வந்துவிடும். யாருக்கும் குளிக்க அனுமதி இல்லை.”’ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆச்சுன்னா யாரு அலையுதது என்பான் ரத்ன சாமி. பம்ப் செட் மீது ஏறி, கிணற்றில் குதித்து அலையடிக்க அவன் குளித்ததை அபூர்வமாக சிலர் பார்த்திருக்கிறார்கள். ஒருமுறை ரகசியமாகக் குளித்த சிலரின் துணிகளைக் காணவில்லை.அது அவன் வேலைதான். ஆனால் யாருக்கும் அவனிடம் கேட்க துணிவில்லை. வாழை இலையில் மானத்தை மறைத்துக் கொண்டுஅவர்கள் ஊருக்குள் ஓடினார்கள்.

 ரத்தினசாமி  ஒரு முசுடன்.கல்யாணவயசு. வாழ்க்கை அவனுக்கு எதையும் காட்டாமல் கடந்து போயிருந்தது. சொன்னா வெளையற நஞ்சை. நல்ல தண்ணீப்பாடு. என்ன இருந்தும் சிரிக்க துட்டு குடுக்கணும் அவனுக்கு. வயலுக்கு வரும் யாரையும் கண்டு கொள்ள மாட்டான்.ஆட்கள் வந்து போவதால் பயிருக்கு பாதுகாப்பு. சோத்துக்கு மிளகாய்கூட அவனிடம் சொல்லிக் கொண்டுதான் பறிப்பார்கள்.எடுத்துக்கங்க என்று மனசாரச் சொல்ல மாட்டான். கேட்காத்தௌ போல, பார்க்காததுபோல நிற்பான். 

”வடக்கோரத்து செடில நாலு கத்திரிக்கா நேத்து கெடந்துச்சு. ரெண்டு வெளஞ்சது, ரெண்டு பிஞ்சு நாலையும் இன்னிக்கி காணல”

பொத்தாம் பொதுவாக சொல்லிச் செல்வான்.யாரும் வாய் தொறக்க மாட்டார்கள்.

”வடக்கோரத்து செடில நாலு கத்திரிக்கா நேத்து கெடந்துச்சு. ரெண்டு வெளஞ்சது, ரெண்டு பிஞ்சு இன்னிக்கி காணல”

களை எடுத்துக் கொண்டே மாடத்தி அவன் குரலில் சொல்வாள். வடிவானவள் அவள்.சிரித்து விட்டுப் பேசுவாள். சிரிப்பை எல்லோருக்கும் வரவழைப்பாள்.

”எங்க போயிருக்கும்? ”

எவளோ எங்கிருந்தோ கேட்க

”ராத்திரில வந்த நரி கொண்டு போயிருக்கும்”

வயல் காட்டில் சிரிப்பு அள்ளும்.அப்படி ஒருநாள் மாடத்தி சிரித்த போது கடகப் பெட்டியில் ஆமணக்கு ஒடித்துப் போட்டுக் கொண்டு மறைவாய் நின்ற ரத்தினசாமி பார்த்துவிட்டான். அவன் அதைப் பார்க்காதவன் போல போனதை, மாட்த்தியும் இன்னும் சிலரும் பார்த்து விட்டார்கள்.

”அவுஹ காதுக்குப் போயிராம” என்று மாடத்தி கேட்டுக் கொண்டாள். .அவளோட அவுஹ மாசானம்.அவள் புருஷன்..ராத்திரி கல்யாணம் நடந்த அடுத்த ராத்திரிக்குள் அவனோடு பிணக்கு வந்து விட்டது. மாடத்தி வீட்டுக்கு வந்துவிட்டாள். பலர் சொல்லியும், அவளைப் பெத்தவர்கள் அழுது திட்டியும் அவள் போகவில்லை. மாசானம் அவளையே சுற்றி வந்தான். அவள் குளத்தில் குளித்து வந்து சேலை மாற்றுவதை திருட்டுத்தனமாகப் பார்த்தான். அவள் கத்தி ஆட்களை திரட்டினாள். அவந்தான் என்று அவள் காட்டிக் கொடுக்க வில்லை. அவன் மீது இன்னும் கோபம் வந்தது. ஒருமுறை வீடு வந்து அவள் கையைப் பிடித்து இழுத்து, அவளிடம் கடிபட்டான். ஊரார் கேட்டபோது நாய்க்கடி என்றான்.

கோயில் கொடை அன்று தலை நிறைய பூவும் பொட்டுமாய் இருந்த அந்த அழகியை ஆவிசேத்துக் கட்டிப் பிடித்தான்.அவள் கூச்சலில் ஆட்கள் ஓடி வந்து பிரித்துப் பொட்டார்கள். ஊருக்குப் பாட்டைய்யா வீட்டில் விசாரிக்கப்பட்டான். ”ஆசை என்றான். எல்லோரும்  சிரித்தார்கள். பொண்டாட்டிதான என்றான். சரிதான என்று சிலர் சொன்னார்கள்.  ”” அவளுக்கு விருப்பமில்லன்னா விட்டுரணும், மறுபடி இந்த மாதிரி வச்சுக்கப்படாது என்று முடிவு சொல்லப்பட்டது.வெத்தலையில் சத்தியமும் கேட்கப்பட்டது.மறுபடி கை நீண்டால் போலீஸ் வரும் என்று சொல்லப்பட்டது.

இரண்டு முறை அவள் அவன் கண்ணில் பட்ட போது, கண்கள் சிவக்க ’’ஒரு நா ”உனக்கு இருக்குட்டீ” என்றான். அவள் அதை பேச்சுவாக்கில் சிலரிடம் சொல்லி வைத்தாள்.

இப்போது  மாடத்திக்கு ரத்தினசாமியும் எதிரியாகிவிட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். மாடத்தி ஏன் வம்பு என்று அவளது வழக்கமான குலுக்கல் பேச்சை நிறுத்தி விட்டாள். 

ஓரு முறை வரப்பில் எதிரெதிராக ரத்தினசாமியைப் பார்க்கவேண்டி வந்துவிட்டது. குனிந்து நடந்து வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து,  ஒரே நேரத்தில் விலக,  ஒரே நேரத்தில் நிற்க இருவருக்குமே சிரிப்பு பிச்சுக்கிட்டு வந்துவிட்டது.. 

அப்போதிலிருந்து மாடத்தி பழையவனாளாள். எல்லோருக்கும் அது குறு குறு என்றிருந்தது. எல்லாக் கண்களும் அவளைக் குதறின. அவள் இல்லாத நேரத்தில் அவள் பேச்சுதான்.

ரத்தினசாமிக்கும் மாடத்திக்கும் இதுவோ? உரிமையாய் அவள் வெண்டை பிஞ்சைக் கடிப்பதென்ன, துவரக்காயை உரிப்பதென்ன,யாவாரி கழித்துப் போட்ட சொத்தக் கத்திரிக்காயை அவள் எல்லோருக்கும் பங்கு பிரிச்சுக் குடுப்பதென்ன, மார்புக்கு மேல் பாவாடையை தூக்கிக் கட்டிக் கொண்டு மல்லாக்கப் படுத்து ரத்னசாமியின் கிணற்றில் நீச்சல் அடிப்பதென்ன, மாடத்தியின் வாழ்வில் ஒரு ஆண் வந்திருப்பதை எல்லாப் பெண்களும் உணர்ந்து கொண்டார்கள்.

எல்லோருக்கும் குறு குறு என்றிருந்தது.

3

ரத்தினசாமி கிணத்தில் பொணம் கிடப்பதாக ஊருக்குள் தகவல் வந்தது, ஒரு மழைக்காலத்தில். பயிர்பச்சை வாசமும், மங்கலான வெளிச்சமும், தவளைச் சத்தமும், தூரத்தில் விழுந்து கலைந்த இடியும், நீர்ச் சலசலப்பும் தாண்டி ஊர் ஓடியது. கிணற்றை அடைந்த போது கனத்த மழையும், கும்மிருட்டும் வந்து விட்டது. தீப்பெட்டிகள் நனைந்து விட்டன. சிலோனில் இருந்து வந்திருந்த மூணுகட்டை வின்சிஸ்டர் பேட்டரி ஒரு வீட்டில் இருந்ததை யாரோ எடுத்து வந்தார்கள். பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு எடுத்துவர ரெண்டுபேர் கிளம்பிப் போனார்கள்.

ரத்னசாமியின் கிணத்துக்கு நட்ட நடுவாக செவப்பு சேலை கட்டியிருந்த பொணம் குப்புற கிடந்தது.  தொடுகைக் கம்பால் இழுத்து திருப்பிப் போட்டார்கள். எல்லாக் கண்களும் அதிர்ந்து பார்த்தன.  மாடத்தி.

ஊருக்குள் போலீஸ் வந்தது பகலில்.

‘’கொடிக் குறிச்சிக்கி மாமா வீட்டுக்குன்னுதான் போனா.மழ. வயக்காட்டு வேலை இல்ல. வீடு ஒழுகுது.போயிட்டுவரட்டுமேன்னு விட்டேன்.இப்பிடி ஆச்சே இப்பிடிஆயிடுச்சே ஆத்தா, ” மாடத்தியின் அப்பன் கங்கன்  அழுதான்.

”என்ன பிரச்சினை அவளுக்கு? ”

எல்லோரும் யோசித்தார்கள். அவள் புருஷனைப் பற்றிச் சொன்னார்கள்.

குடித்துவிட்டுக் கிடந்த மாட்த்திக்கு ஒரு இரவு மட்டும் புருஷனான மாசானம் வந்து சேந்தான்.

”உண்மைய சொல்லீரு”

”எனக்கு தெரியாது”

ஏட்டையா ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விட்டார். பல் உடைந்து ரத்தம் வந்தது.

”போலீஸ் அறன்னா அறதான். ”

ஆனால் மாசானம் சொன்னதையே சொன்னான்.’’ எனக்கு எதும் தெரியாது. நா அவள பாத்தே ரொம்ப நாள் ஆச்சு ‘’

‘’அப்பிடியா? ரொம்ப நாள் ஆச்சா? நீ சொல்லுதத நா, நம்பணுமா? கொஞ்சம் இரு , கேக்கற விதமா கேக்கேன்.’’.

ஏட்டையாவும் பாட்டையாவும் அங்கும் இங்கும் சென்று ரகசியம் போலப்  பேசிக் கொண்டார்கள் யாரும் அசையாமல் என்ன நிகழப் போகிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். .வடை தின்று டீ குடித்து, பாசிங் ஷோ சிகரெட்டும் பிடித்த கொஞ்ச நேரத்தில் ஏட்டையா, ”ஒரு தகவல் வந்திருக்கு? யாரு ரத்தினசாமி? ” என்று கேட்டார்.

ரத்தின சாமி அஞ்சு கிலோ மீட்டர் தள்ளியிருந்த சுரண்டைக்குப் போயிருந்தான். புது ரக நெல் விதை வந்திருக்கிறது என்று கேள்விப் பட்டிருந்தான், மொளகா யாவாரி அவனுக்கு நெருக்கம். அவரோடு அங்கிருந்து  திருனெவேலி போய் ஊர் சுற்றிவிட்டு, அவனைத் தேடிப்போன ஆள் சொன்ன தகவல் கேட்டு, பிளசர் எடுத்துக் கொண்டு பதட்டமாக ஊருக்குள் வந்தான்.

ஏட்டையா கேட்ட கேள்விக்கு, ”ஐயோ அய்யையையோ நா அப்பிடியா யாராவது சொல்லுங்க” என்றான். யாரும் எதுவும் சொல்ல வில்லை. யார் எது சொன்னாலும் அது அவர்களுக்கு சிக்கலைக் கொண்டுவரும்.

வேன் மாடத்தி பொணத்தை தூக்கிப் போனது. மாசானமும், ரத்தினசாமியும் விசாரணைக்குப் போனார்கள்.

”அடிச்சுக் கொன்னு பொணத்த தூக்கிப் போட்டிருக்கு”

”ஒரு ஆளு வேலை இல்ல ரெண்டு ஆளு”

”கைய வச்சிருக்கானுவோ”

யாராய் இருக்கும்?  சாத்தியமான எல்லா வழிகளிலும் விசாரணை நடந்தது.

எதுவும் பேரவில்லை.

ரத்னசாமிக்கு அதுல பிரச்சன அதனாலதான் அவன் கல்யாணமே பண்ணிக்கல என்ற விஷயம் போலீசால் கண்டு சொல்லப்பட்டது.

மாசானம் ஒரு மாதிரியாக இருந்தான். யாருடனும் பேசவில்லை.

தொடவே விடாதவள் நெஞ்சில் நெருப்பு  வைத்து விட்டு வந்திருந்தான்.

கிணற்றுப் பக்கம் யாரும் போகவில்லை.

சிலநாள் கழித்து இரண்டு டீசல் மோட்டார் கொண்டுவந்து நாள் முழுக்க கிணற்று தண்ணீரை இரைத்துக் கொட்டினார்கள். காலியான கிணற்றின் ஆழத்தை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

சில நாளில் தண்ணீர் பொங்கி மேலே வந்துவிட்டது. யார் கிணற்றைப் பார்த்தாலும் மாடத்தி சிவப்பு சேலை கட்டி பிணமாக மிதந்த காட்சியே தெரிந்தது.

ஒரு நாள் மாசானம் ஊர்க்கோடி ஆலமரத்தில் தொங்கினான்.

மாடத்தி மீது உசிரையே வைத்திருந்தான் என்றார்கள்.

மாடத்தி உசிர் போனது போனதுதான்.எப்படி யாராய் இருக்கும் என்று பலரும் குழம்பினார்கள். சிஐடி போலீஸ் விசாரிக்கிறது. விரைவில் புடுச்சுவிடுவார்கள் என்று நம்பப்பட்டது.

அந்த வருஷம் ரத்னசாமி வயலில் வெள்ளாமை இல்லை. யாரும் அவனிடம் கேட்கவில்லை. முளைத்தது காய்த்தது எல்லாவற்றையும் ஆளாளுக்கு அள்ளிப் போனார்கள். அவன் அவமானம் தாங்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தான்.

ஒரு வருடத்தில் எல்லாம் மறக்கத்துவங்கியிருந்தது. ஊர் விசேஷங்களில் ரத்னசாமி கலந்து கொள்ள ஆரம்பித்தான். மெல்ல வயலுக்கும் வர ஆரம்பித்தான்.நின்று விவசாயம் பார்க்காமல் ஆய்க்குடி வெத்தல யாவரிக்கு பாட்டத்துக்கு விட்டுவிடலாம் என்று யோசித்தான்.தூரத்து சொந்தத்தில் புருஷன இழந்த ஒருத்திய அவன் கட்டிக்கிடுவானா என்ற கேள்வி வந்த போது, சரி என்றுவிட்டான்.எப்படி என்று அனைவருக்கும் ஆச்சர்யம். ”அவனுக்கு அதுல பிரச்சினை இருக்கே என்றவர்களுக்கு, . ”அது ஒண்ணுதான் கல்யாணதுக்கு முக்கியமா? என்று பதில் சொன்னவர்கள் கேள்வி கேட்டவர்களைவிட வயதானவர்களாக இருந்தார்கள்.. ”பணம் வச்சிருக்கான்ல, வேற எதும் தேவ இல்லபோல அவளுக்கு.” என்று வரப்போறவளை புறம் பேசினார்கள். இதெல்லாம் நடந்து கொண்டிருந்த வேளையில்தான் வயற்காட்டில் கேட்ட அழுகுரல் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்து,.சக்கிலியன் கோட்டையும் அதை நேரிலும் பார்த்திருந்தான்.

4

 மாலையில்தான் கோட்டை வந்தான். நெற்றிமுழுக்க குங்குமமும் திருநீரும் பூசியிருந்தான். நீண்ட மயிரை முடிச்சுப் போட்டுக் கட்டி, வெற்றிலைக்கறை உலர்ந்த உதட்டோடு நின்றான். இந்த முறை கூட்டமும் கேள்விகளும் அதிகமாக இருந்தன.

”எதுக்கு நா பொய்சொல்லப்போறேன். கண்டத சொன்னேன்”

”ஏண்டா அவ அழுதா போய் என்னன்னு கேக்க வேண்டியதுதான”

”இன்னிக்கு போறியாடா? ”

”சாமீ சாகச் சொல்லுதியளா? ”

”அவ நல்லவதான”

நாலஞ்சுபேறா போய் பாருங்க. ”

”யாரு அந்த நாலுபேரு? ”

”தீக்கு பேயி பயப்படும்”.

”சாமியாடுதவன் ரெண்டு பேர் கூட போங்க. ”

”நீ பாக்கும்போது மணி என்னடா இருக்கும்? ”

நிலா நட்ட நடு வானத்துல இருந்துச்சு. ”

சாதிக்கு இருவர் என்று முடிவாயிற்று. நள்ளிரவில் ஊர் கூடி அனுப்பி வைத்தார்கள்.

அன்று அழுகுரல் கேட்கவில்லை. 

அடுத்த நாளும் 

அதற்கு அடுத்தநாளும் 

அதன் பிறகு யாருக்கும் அதில் ஆர்வமில்லை.

ஆனாலும் இனிமேல் ஊரில் பிண எரிப்பு பகலில்தான் என்று கோட்டை கண்டிப்பாகச் சொல்லிவிட்டான்.

ரத்ன சாமி வெற்றிலைக் கொடிக்காலுக்கு பாட்டத்துக்கு வயலைக் கொடுத்துவிட்டான். மணி முதலியார் ஆட்களோடு வந்து தோது பார்த்துப் போனார். ரத்னசாமியின் வயலைச் சுற்றி அகத்திக் கன்றுகள் வைக்கப் பட்டன. அவை வளரும் போது வேலியாகிவிடும்.

வயல் உழவு நடந்ததைப் பார்க்க மணி முதலியார் தனியே வந்தார். குளக் கரையில் லூனா வண்டியையும், செருப்பையும் கழற்றிப் போட்டுவிட்டு, வயலுக்குள் நடந்து வந்து கொண்டிருந்தவருக்கு, பட்டப்பகல். கிணற்றில் யாரோ துணியை அடித்து துவைக்கும் சத்தம் கேட்டது. தூரத்திலிருந்து பார்க்க, சிவப்பு சேலை கிணற்றுக்கு மேலே வந்து வந்து போயிற்று. அருகே நடக்க, நடக்க சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நிற்க, கிணற்றிலும் யாருமிலாதிருக்க

மணி மயங்கி விழுந்தார். 

நினைவு வந்த போது, ”பாத்தேன் பாத்தேன்” என்றார்.

ஜனங்களுக்கு புரிந்து போயிற்று. வந்தது அவதான். மாடத்தி.

5

உழுததோடு நிலம் கிடந்து போயிற்று. அப்படியே கிடந்த தண்ணீரில் தூசு விழுந்து நிறம் மாறிப் போயிற்று.ஆட்கள் போய் வர புதுப்பாதை எடுக்க கேட்பாரற்ற நிலமாக ரத்னசாமியின் நிலம் ஆயிற்று.

”யேய், நீ யாருகிட்டயும் சொல்ல வேண்டாம். நா, கேக்கேன். அவளோட எதாவது வம்பு வழக்கு வச்சுக்கிட்டியா?

பாட்டையா ரத்னசாமியை சந்தித்து அவன் நிலைக்காக வருந்தி அவனுக்கு எதாவது செய்ய வேண்டுமென்று அக்கறையோடு ஒரு நாள் கேட்டார்.

”காசு வேணும்ன்னு ஒருதடவ கேட்டா, குடுத்தேன்.”

”எதுக்கு?”

”சீல வாங்கணும்ன்னு சொன்னா

”எதுக்கு?”

”கொடிக்குறிச்சில யாரோடயோ நெருக்கம். அவனோடயே இருந்துறப்போறேன்னு சொன்னா?”

”அடப்பாவிப் பயல, ஏஞ் சொல்லல?”

”சொல்லி என்ன ஆவப் போகுது, சண்ட சச்சரவுதான் வரும்.’

”சத்தியமாச் சொல்லு வேற எதும் நடக்கலையே

”நடக்க வழி இல்ல தாத்தா, தெரிஞ்சு கேக்கியளா? தெரியாம கேக்கியளா? சிரிச்சா சிரிச்சேன். பாத்தா பாத்தேன். ஆசைதான். வேற என்ன முடியும் என்னால.

அவன் குரல் கம்மியது.

”அப்ப கொடிக்குறிச்சிக்கு போனவளுக்கு என்னவோ நடந்திருக்கணும்’”

”ஆமா.”

”யாரையோ தேடிப் போனவளை யாரோ கைவைத்துக் கலைத்துப் போட்டுவிட்டார்கள்.

அமைதியாக வலைவிரித்த போலீஸ் குற்றவாளிகளைப் பிடித்து ஊருக்குள் கொண்டுவந்து காட்டிப் போயிற்று. காறித்துப்பலும் கல்லெறியுமாய் அவர்கள்  பாளையங் கோட்டை ஜெயிலுக்குப் போனார்கள்.செத்தவள் உடம்பில் கீறலும் பல்தடமும் கிடந்ததை மாசானத்திடம் சொன்ன போலீஸ்காரணும் அவர்களோடு வந்திருந்தான்.அதை சொல்லாமலிருந்திருந்தால் மாசானம் செத்திருக்க மாட்டான் என்று விசனப்பட்டான்.அதை யாரும் அவ்வளவாக மதித்துக் கேட்கவில்லை. 

பாட்டையா ரத்னசாமியை தேற்ற பரந்த அந்த நிலத்தை பாழிலிருந்து காக்க என்னவெல்லாமோ செய்தார்.

கடைசியாக புனலூரிலிருந்து  மந்திரவாதி வந்தான். அங்கும் இங்கும் நடந்தான்.அவனுக்குள் பேசினான். எதையோ ஓதினான்.

ஊர் கூடி நின்று வேடிக்கை பார்த்தது.

”முக்குல ஒரு கல்லு வச்சுருங்க.’’

என்றான்

”கல்லா

”ஆமா. பூச பண்ணனும்,சாவல் காவு கொடுக்கணும். அப்போ அவ வரமாட்டா?

”இங்கதான் வைக்கணுமா?” 

”ஆமா. ஏன்?”

”இல்ல அவ வேற ஜாதி. கீழ் ஜாதி”

சிரித்த மந்திரவாதி சொன்னான்.

”ஜாதியெல்லாம் மனுஷனுக்குத்தான். ”பேய்க்கு ஜாதி இல்ல. அறியோ?”

சொல்லிவிட்டு நடந்தான்.ஜனங்களும் நடந்தார்கள். நடந்து கொண்டிருந்த ரத்னசாமி பாட்டையாவை நோக்கி சம்மதம் என்பதுபோல தலையசைத்தான்.

சிரிப்பும் கேலியும் கிண்டலுமாக மாடத்தி அவனுக்குள் வந்து போனாள். அவனும் புன்னகைத்துக் கொண்டான்.

©©©©

— அரி சங்கர்

சந்திரன் பேருந்துக்காக நின்றுக்கொண்டிருந்தார். அருகே அவர் மகன் குமரனும் நின்றுகொண்டிருந்தான். பேருந்து வர தாமதமானது. குமரனின் நடவடிக்கைகளை பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தவர்கள் விநோதமாக பார்த்துகொண்டிருந்தனர். ஒருவழியாக வீராம்பட்டிணம் பேருந்து வர சந்திரனும் குமரனும் அதில் ஏறிகொண்டனர். பேருந்தில் கூட்டமில்லாமல் இருந்தது. ஜன்னல் இருக்கையில் குமரனும் அருகில் சந்திரனும் அமர்ந்துகொண்டனர். பேருந்தில் ஏறியதும் தான் குமரனின் சற்று அமைதியடைந்தான். வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான். அருகில் இருந்த தன் அப்பாவிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினான்.

“அப்பா இது இன்னா…”

“ஆட்டோ…”

“அப்பா இது இன்னா…”

“காரு…”

“அப்பா இது இன்னா…”

“பஸ்”

“இது…”

“அதுவும் பஸ்…”

வீராம்பட்டினம் போகும் வரை இவ்வாறே இருவரும் பேசிக்கொண்டு சென்றனர். பேருந்தில் சுற்றி இருந்தவர்கள் அவர்களை கொஞ்ச நேரம் வேடிக்கப்பார்த்தாலும் பிறகு தங்கள் வேலையைப் பார்க்கத் தொடங்கினர்.

இருவரும் வீராம்பட்டினத்தில் இறங்கி அங்குள்ள கோவிலுக்கு சென்று சிறிது நேரம் உட்கார்ந்திருந்தனர். சந்திரனுக்கு வீட்டு நினைவாகவே இருந்தது. தனது அம்மாவிற்கு என்ன ஆனது என்ற பதட்டத்திலேயே இருந்தார். ஆனால், அவர் புறப்படும் போது எதிரே மூத்தமகன் வந்ததை நினைத்து சுற்று நிம்மதியடைந்தாலும், கடைசியாக அவன் பார்த்த பார்வையை நினைத்து அஞ்சினார்.

“அப்பா… போலாமா…” என்று அவரை யோசனையிலிருந்து மீட்டான் குமரன்.

இருவரும் எழுந்து வெளியே வந்தனர். அடுத்தப் பேருந்து இன்னும் வராததால் இருவரும் காத்திருந்தனர். தூரத்தில் கடல்காற்று வேகமாக வீசிக்கொண்டிருந்தது. அலைகளின் ஓசை பலமாக கேட்டுக்கொண்டிருந்தது. குமரன் கடலைக் கண்டால் பயப்படுவான் என்பதால் அவர்கள் எப்போதும் கடலுக்கு போவதில்லை.

ஏதிரே இருந்த ஐஸ் வண்டியைப் பார்த்து குமரன் ஐஸ் வேண்டும் என்றான். சந்திரன் அவனுக்கு ஐஸ் வாங்கிக்கொண்டுத்தார். அவன் அதை ருசித்து சாப்பிடுவதை சந்திரன் பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு அவன் தாடியிலும் மீசையிலும் வழிந்திருந்த ஐஸைத் துடைத்துவிட்டார். தூரத்தில் பேருந்து வந்துக்கொண்டிருநது.

*

கதிர்  தெருமுனையில் திரும்பும்போதே ஏதோ பிரச்சனை என்று கவனித்துவிட்டான். அவன் வீட்டைச் சுற்றி ஆங்காங்கே தெருக்காரர்கள் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். பல ஜன்னல்களில் அசைவுகள் தெரிந்தன. கதிர் வேகமாக வந்து தன் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான். தெருவாசிகள் அனைவரும் தன்னைத்தான் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்தது. வண்டியை விட்டு இறங்காமலேயே எட்டிப்பார்த்தான். வாசலின் அருகே இருந்த படிக்கட்டுகளின் அருகே அவன் பாட்டி தலையில் ரத்தம் வழிய உட்கார்ந்துகொண்டிருந்தாள். மேலே பால்கனியில் அவன் அம்மா நின்று கத்திக்கொண்டிருக்க, படிக்கட்டுகளில் யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது. கதிர் வண்டியை விட்டு இறங்கி தன் பாட்டியிடம் வேகமாகச் சென்று அவளை எழுப்பினான். அவள் இடுப்பைப் பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்தாள். அப்போது அப்பாவின் கையை பிடித்து தரத்தரவென்று இழுத்துக்கொண்டும் கத்திக்கொண்டும் வேகமாகப் படிக்கட்டுகளில் இறங்கி வந்துகொண்டிருந்தான் கதிரின் தம்பி. அவன் அப்பா அவன் இழுத்த இழுப்புக்கு அவன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார். கீழே தலையில் ரத்தம் வழியும் தன் அம்மாவையும், கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருக்கும் தன் மகனையும் எதிர்கொள்ள தைரியமில்லாமல் தலைகுனிந்தவாறு வெளியேறினார். வீட்டைச் சுற்றி வேடிகைப்பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் ஒருமுறை தனித்தனியாகப் பார்த்தார். அவர் பார்ப்பது அனைவரும் என்மீது இறக்கப்படுங்கள் என்று கெஞ்சுவது போல் இருந்தது. ஆனால் அவர் தாய் ரத்தம் வழியக் கீழே கிடக்கும் போது அவர் இவ்வாறு தன் இரண்டாவது மகனின் இழுப்புக்கேற்றவாறு ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த பலர் முகம் சுளித்தார்கள். அவர்கள் இருவரும் தெரு முனையைத் தாண்டும் முன்னரே கதிர் ஒரு ஆட்டோவுடன் வந்து தன் பாட்டியை மருத்துவமனைக்குள் கூட்டிச்சென்றான். இவ்வளவும் நடந்துகொண்டிருந்த சமயத்தில் மேலே பால்கனியிலிருந்து கத்திக்கொண்டிருந்த கதிரின் அம்மாவை ஒருவரும் கண்டுகொள்ளவேயில்லை. அனைவரும் கலைந்து சென்ற பின் அவள் வழக்கம் போல டீவி பார்க்கச் சென்றுவிட்டாள்.

ஆட்டோவில் போகும் போது கதிர் தன் பாட்டியிடம் கேட்டான்.

“இன்னாச்சி ஆயா…”

அவன் பாட்டி வலியில் அழுதுகொண்டே சொன்னாள்.

“நான் வெளியில உக்காந்துனு இருந்தேன்… தீடீர்ன்னு உங்கொம்மா கத்திகினே ஓடு வந்த… நான் ஏந்துபோயி கதவாண்ட நின்னு பாத்தேன்… உள்ள உன் தம்பி டீவிய தூக்கி ஒடைக்க போனான்…. நான் போயி அவன மெதுவா பேசி வெளிய இட்டுகினு வந்தேன்… உங்கம்மா கத்திகினே இருந்தா… உன் தம்பி என்ன புடிச்சி மேலருந்து தள்ளிவுட்டான்…”

“அப்பா இன்னா பண்ணின்னு இருந்தாரு…”

“அவன் உனுக்கு கொஞ்சத்திக்கி முன்னாடி தான் வந்தான்…”

கதிர் அமைதியாக இருந்தான். ஆட்டோ மெல்ல மருத்துவமனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. பாட்டி விடாமல் பினாத்திக்கொண்டே வந்தாள்.

“உங்கொம்மா தான் அவன எதுனா நோண்டிவுட்டிருப்பா… என்னைய இன்னும் இட்டுகின்னு போவாம அவன் இப்புடி சாவடிக்கறானே… எனக்கு ஒரு சாவு வந்து ஒழியக்கூடாதா…”

“கம்முன்னு வா ஆயா…”

“நோவுதுடா… நீ எப்போ வருவேன்னு அப்புடியே உக்காந்துன்னு இருந்தேன்… உங்கொப்பன் அவன் பாட்டுக்கு மேலப்போயி புள்ளய கொஞ்சின்னு இருந்தான்… ரெண்டு பேரும் போனத பாத்துகினு தான இருந்த…”

“அதுக்கு இன்னாப் பண்ண சொல்ற… தலையெழுத்துன்னு ஆயிடுச்சி…”

ஆட்டோ அவசர சிகிச்சைப்பிரிவின் வாசலில் நிற்க, இருவரும் மருத்துவமனைக்குள் சென்றனர்.

கட்டுப்போட்டுக்கொண்டு இருவரும் வீட்டிற்கு வந்தார்கள். தெருவே இருளில் மூழ்கி அமைதியாக இருந்தது. அவரவர் தங்கள் வேலைகளில் மூழ்கியிருந்தனர். அவர்களுக்கு இது அவ்வப்போது நடக்கும் பொழுதுபோக்கு.

கதிரும் பாட்டியும் வீட்டிற்குள் நுழைந்தபோது அவன் தம்பி டீவி பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அப்பா தலையில் கையை வைத்துக்கொண்டு சோகமாக அமர்ந்திருக்க அவன் அம்மா உள்ளே கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த கதிரிடம் அவன் அப்பா “இன்னாடா சொன்னாங்க…” என்றார். அவன் பதிலேதும் சொல்லாமல் உள்ளே சென்றான். அவன் அறைக்குள் சென்றதும் அவன் அம்மா அறையை விட்டு வெளியேறினாள். தன் மாமியார் தலையில் கட்டைப்பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு சிறு சிரிப்பு தோன்றி மறைந்தது.

கதிர் தன் உடைகளை மாற்றிக்கொண்டிருந்தான். வெளியே பேசுவது அவனுக்குக் கேட்டது. அவன் பாட்டி தம்பியிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“சாப்டியாடா கண்ணு…”

“இல்ல…”

“சோறு துண்றியா… இரு ஆயா போட்டாறன்…” என்று உள்ளே சென்று சோறு போட்டுக் கொண்டுவந்தாள். தட்டில் சோறும் ரசமும் இருந்தது. அதைப் பார்த்த அவன் அப்பா, “வெறும் சோத்தப் போட்டா அவன் எப்புடி சாப்டுவான்… ரெண்டு வத்தல் வறுத்துக்குடு…” என்றார் தன் மனைவியைப் பார்த்து. அவள் எதுவும் பேசாமல் உள்ளே போனாள். பாட்டி நேராக அறையின் வாசலில் வந்து நின்று “நீயும் வாயேண்டா…” என்றாள்.

“அவன் சாப்ட்டும்… நான் அப்பறம் சாப்டறன்… என்றான் கதிர்.

அனைவரும் சாப்பிட்டு அவரவர் வழக்கமாக படுத்துறங்கும் இடத்தில் படுக்கையைப் போட்டனர். கதிரின் அருகில் அவன் தம்பி படுத்திருந்தான். கதிர் அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தான். இப்போது அவன் முகம் அமைதியாக இருந்தது. மீசை தாடியெல்லாம் அடர்த்தியாக இருந்த அவன் முகம் கதிருக்கு வித்தியாசமாக தெரிந்தது.  பெருமூச்சொன்றை விட்டுவிட்டு கண்களை மூடிக்கொண்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு  கதிரின் மேல் கைகளையும் கால்களையும் போட்டுக்கொண்டு அணைத்தபடி தூங்கிப்போனான் அவன் தம்பி குமரன். அனைத்து களேபரங்களுக்குப் பிறகு அன்றைய இரவு வழக்கமான ஒரு இரவாகவே தொடர்ந்தது.

*

குமரன் விடுதியிலிருந்து நிரந்தரமாக வீட்டிற்கு வந்த ஓர் இரவு.

கதிர் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அந்த வீட்டில் ஒரு பெரிய கட்டிலிருந்தது. பழையத் தேக்குக் கட்டில். கதிருடைய தாத்தா காலத்தில் வாங்கியது. நல்ல உயரமான தேக்குக்கட்டில். அந்தக் குடும்பம் பல்வேறு அளவுகள் கொண்ட வீடுகளுக்கு வெவ்வேறு காலங்களில் மாறியபோதும் அந்த கட்டிலை மட்டும் விட்டுவிடவேயில்லை. அவர்கள்  குடும்பம் கடும் வறுமையிலிருந்த சந்தர்ப்பங்களில் தெரிந்தவர்கள் சொந்தக்காரர்கள் எனப் பலரும் அந்த கட்டிலைக் கொடுத்துவிடும்படி கேட்டுள்ளனர். ஆனால், அதை மட்டும் எக்காரணத்தைக்கொண்டும் கொடுக்கவேயில்லை. அதில் தான் கதிரும் அவன் தம்பியும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர். இரவுகளில் அந்த கட்டில் கதிரும் குமரனும் தான் தூங்குவார்கள். பகல் வேளையில் எப்போதாவது அவன் அப்பாவோ அம்மாவோ ஓய்வெடுப்பார்கள். கதிரின் அம்மாவிற்குப் பயந்து அவன் பாட்டி அதில் ஏறுவதேயில்லை. ஒருகாலத்தில் தான் ஆண்ட கட்டில் என்ற ஏக்கம் கதிரின் பாட்டிக்கு எப்போதும் உண்டு. அந்த வீட்டிற்கு யார் வந்தாலும் அந்த கட்டிலில் உட்காரவே விரும்பினர். அது நிறமாறி, உருமாறி சில இடங்களில் சிதைந்து இருந்தாலும் தன் கவர்ச்சியை மட்டும் இழக்கவேயில்லை.

குமரன் விடுதியிலிருந்த காலத்தில் கதிர் மட்டுமே அந்த கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தான். இப்போது குமரன் மீண்டும் வந்து கதிருடன் கட்டிலை பகிர்ந்துகொண்டான். இதில் கதிருக்கு எந்த வருத்தமோ தயக்கமோ இருந்ததில்லை. அவன் எப்போதும் போலத்தான் தம்பியைப் பார்த்தான். சிறுவர்களாக இருந்தது போலவே தற்போதும் அவ்வப்போது கட்டிப்பிடித்தே தூங்கினர்.

தூக்கத்திலிருந்த கதிருக்கு திடீரென்று விழிப்பு வந்தது. மெல்லக் கண்விழித்தான். பக்கத்தில் குமரன் படுத்திருந்தான். நெருக்கமாகப் படுத்து கதிரின் மேல் கால்களைப் போட்டிருந்தான். அதுதான் கதிருக்கு ஒரு மாதிரியாக இருந்தது. தன் தொடையில் ஏதோ ஒட்டியிருப்பதை உணர்ந்தான். மெல்லக் குமரனை நகர்ந்திவிட்டு தன் கைலியைத் தொட்டுப்பார்த்தான். ஈரமாக இருந்தது.  அது என்னவென்று அவனுக்கு உடனடியாக தெரிந்தது. அது தன்னுடைய தல்ல என்றும் உணர்ந்தான். மெல்லக் குமரனை உருட்டிப்பார்த்தான். அவன் கால்சட்டை நனைந்திருந்தது. கதிருக்குக் கடுப்பாக இருந்தது. மெல்ல எழுந்து கழிவறைக்குச் சென்று தன் கால்களை கழிவிவிட்டு துணியை நனைத்துவிட்டு வேறு கைலியை எடுத்து உடுத்திக்கொண்டு வந்தான். இருட்டில் அவன் அம்மாவும் அப்பாவும் படுத்திருப்பது தெரிந்தது. பாட்டி சமையற்கட்டில் படுத்திருந்தாள். கதிர் சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான். குமரன் எழுந்து தூக்கக்கலக்கத்தில் நடந்துவருவது தெரிந்தது. அவன் நேராகக் கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழித்தான். கதிர் வேறு ஒரு கால்சட்டையை எடுத்துச்சென்று, அவனை பழைய கால்சட்டையைக் கழட்டச்சொல்லி நன்றாகக் கழுவச்சொல்லி, வேறு கால்சட்டையை உடுத்த செய்தான். அவனுடைய கால்சட்டையையும் நனைத்துவிட்டு வந்து படுத்தான். அதன்பிறகு அவனுக்கு தூக்கமே வரவில்லை. மீண்டும் குமரன் கதிரை அணைத்துக்கொண்டு தூங்கத் தொடங்கினான்.

அப்பா அம்மா பாட்டி மற்றும் தம்பி

கதிரின் குடும்பம் தொண்ணூறுகளில் தான் புதுச்சேரிக்கு வந்தது. அப்போது அது பாண்டிச்சேரி. சந்திரன் பாண்டிச்சேரிக்கு வந்த பொழுது கதிருக்கு நான்கு வயது. குமரன் கைக்குழந்தை. தன் மனைவி, அம்மா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அவர் தன் புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்தார். பாண்டிச்சேரிக்கு வந்தவுடன் கதிரின் அப்பா சந்திரன் சில தொழில்கள் செய்துப்பார்த்தார். ஆனால், எந்தத் தொழிலும் அவருக்கு கைகொடுக்கவில்லை. பிறகு பல வேலைகள் செய்து கடைசியாக ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்து தன்னையும் தன் குடும்பத்தையும் தற்காத்துக்கொண்டார். அவர் தன் வாழ்க்கையில் ஒருமுறை கூட மேல் நோக்கிச் சென்றதேயில்லை. முதலில் கடைவைத்தார். அதை இழந்தார். பிறகு புலம்பெயர்ந்து துணி வியாபாரம் செய்தார். அதையும் இழந்தார். பிறகு லாட்டரிக்கடை அதன் பிறகு துணிக்கடை, கடைசியாக ஒரு ஓட்டல். அதிலும் கூட முதலில் கணக்காளராக சேர்ந்து பின் சப்ளையாராக பதிவியிறக்கம் செய்யப்பட்டார். அதைப்பற்றிய புலம்பல்கள், கவலைகள் அவருக்கு இருந்தாலும் அதைவிடப் பெரிய கவலைகளும் துன்பங்களும் அவர் குடும்பத்தில் நடந்தேறிக்கொண்டிருந்தது.

குமரன் வளர வளரத் தான் அவன் மூளை வளர்ச்சியில்லாத குழந்தை என்றே தெரியவந்தது. அதன் பிறகு அவர் கவனமெல்லாம் முழுக்க குமரன் மீதே இருந்தது. அவருக்குக் கதிர் என்று மற்றொரு மகன் இருக்கிறான் என்று அவ்வப்போது தான் நினைவில் வரும். ஆனால், குமரனின் இந்த நிலை குறித்து சந்திரன் கவலைப்பட்டதில் ஒரு துளிகூட அவர் மனைவி அரசி கவலைப்படவேயில்லை.

அவள் ஒரு தனியுலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளுக்குக் கணவன் மீதோ, பிள்ளைகள் மீதோ, குடும்பம் மீதோ எந்த அக்கறையும் இருந்ததேயில்லை. அன்றைய நாள் அன்றைய சந்தோஷம் என தன் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தாள். பெட்டிக்கடையில் விற்கும் அத்தனையையும் வாங்கித்தின்றாள். வாரத்திற்கு நான்கு முறை சினிமாவுக்கு சென்றாள். கேள்வி கேட்கும் கணவனையும் மாமியாரையும் வசைமாறிப் பொழிந்தாள். கணவன் தன் அம்மாவை வைத்திருப்பதாகக் கூசாமல் பேசினாள். அவள் வார்த்தைகள் உண்டாக்கும் வலிகளைத் தாங்க முடியாமல் சந்திரன் மெளனத்தை மருந்தை தேர்ந்தெடுத்தார். அவ்வப்போது எதாவது கேட்கும் மாமியாரை உண்டு இல்லை என்றாக்கினாள். அதன் பிறகு சந்திரனின் அம்மா தன் வாழ்க்கையின் பாதி நாட்களை தன் மகள்களின் வீட்டில் கழிக்க ஆரம்பித்தாள். அவ்வப்போது தன் மகன் வீட்டிற்கு வந்து சிறிது காலம் தங்கியிருந்து தன் மருமகளிடம் திட்டோ சில சமயங்களில் அடியோ வாங்கிக்கொண்டு செல்வாள். உண்மையில் கதிரின் பாட்டி இருக்கும் போது மட்டுமே கதிரும் குமரனும் கொஞ்சம் நல்ல சாப்பாடு சாப்பிட்டார்கள். கதிரின் அம்மாவிற்குச் சரியாகச் சமைக்கவும் தெரியாது, அதை மனங்கோணாமல் பரிமாறவும் தெரியாது. அவளின் இத்தனை அடாவடித்தனங்களைச் சந்திரன் சகித்துக்கொள்வதற்கு என்ன காரணம் என்று யாருக்குமே தெரியவில்லை.

ஒருபக்கம் மகன், ஒருபக்கம் மனைவி எனச் சந்திரனின் நிலை நாளுக்கு நாள் பரிதாபமாகவே மாறிக்கொண்டிருந்தது. அவரின் இந்த இந்த நிலையைப் பார்த்தது நண்பர்கள் சொந்தங்கள் எனப் பலர் பல யோசனைகள் சொல்ல ஆரம்பித்தார்கள். ஜோசியம், மருத்துவம், மாந்திரீகம் எனப் பலவித ஆலோசனைகள். தன்னால் இயன்ற அனைத்தையும் அவர் செய்தார். இதில் சந்திரனை விடப் பரிதாபகரமான நிலை கதிருக்குத்தான்.

அம்மா எப்போதும் யாரையும் கண்டுகொண்டதில்லை. அப்பாவின் முழு கவனமும் குமரன் மீதேயிருக்க, கதிரை கண்டுகொள்ளவே குடும்பத்தில் யாருமில்லாமல் போனது. ஏதோ பள்ளிக்கூடத்திற்குச் சென்றான். வந்தான். விளையாடினான். இருப்பதை உண்டான். அவ்வளவு தான் அவன் இருப்பு அந்த வீட்டில். சில சமயங்களில் சந்திரன் வெளியே செல்லும் போது அவனை அழைத்துச் செல்வார். இந்த நேரத்தில் சந்திரனின் சொந்தக்காரர் ஒருவர் சந்திரனுக்கு ஒரு யோசனை சொன்னார். சந்திரனும் அதைச் செய்து பார்க்க முடிவெடுத்தார். அந்த நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை கதிரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டர். போகும் வழியெங்கும் கதிர், “எங்கப்பா போறோம்…” என்று கேட்டுக்கொண்டே சென்றான். அவர் எதுவும் சொல்லவில்லை. வழக்கமாக அப்பா பகலில் தான் கூட்டிக்கொண்டு செல்வார். இருட்டிய பிறகு அப்பா எங்கும் கூட்டிக்கொண்டு போக மாட்டார். எங்கே போகிறோம் என்ற குழப்பத்துடனே தான் கதிர் அவருடன் சென்றான்.

முதலியார்பேட்டையில் பேருந்து  ஏறி இருவரும் பதினைந்து நிமிடத்தில் பூர்னாங்குப்பத்தில் இறங்கினர். சிறிது தூரம் ஊருக்குள் சென்று ஒரு வீட்டிற்குள் சென்றனர். அங்கு ஏற்கனவே யோசனை சொன்ன சொந்தக்காரர் இருந்தார். அவர் கதிரைப் பார்த்ததும், “இவன ஏன் இட்டுன்னு வந்தீங்க…” என்றார். சந்திரன் பதிலேதும் சொல்லாமல் உள்ளே சென்றார். அவர்களை தொடர்ந்து அவரும் வந்தார்.

சிறிய குடிசைவீடு. கதிர் அந்த வீட்டைப் பயத்துடன் பார்த்தான். வாசலில் ஒரே ஒரு குண்டு பல்ப் எரிந்துகொண்டிருக்க எதிரே இருந்த கொஞ்சம் காலி இடத்தில் சில செடிகளும், இரண்டு வாழை மரங்களும் ஒரு வேப்பமரமும் இருந்தது.

உள்ளே ஒரு கிழவி ஏற்கனவே சில ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். வாழை இலைபோட்டு அதில் சோற்றில் சில உருண்டுகளைப் பிடித்து வைத்திருந்தாள். மற்றபடி வழக்கமான பூஜைப் பொருட்கள் இருந்தன. ஒரு  சேவல் அவள் அருகில் அமைதியாக அமர்ந்திருந்தது. சந்திரனும் கதிரும் போகும் போது அவள் குனிந்து எலுமிச்சைகளை கீறி உள்ளே குங்குமத்தை நிரம்பிக்கொண்டிருந்தாள். காலடிச் சத்தம் கேட்டுக் குனிந்தபடியே திரும்பிப் பார்த்தவள் கதிரைப் பார்த்ததும் நிமிர்ந்தாள். எதுவும் பேசாமல் பின்னாடிப் பக்கம் கையை காட்டினாள். சந்திரன் கதிரை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அவள் கதிரையும் கூட்டிக்கொண்டு போகும் படி சைகைக் காட்டினாள். கதிரும் சந்திரனும் உள்ளே சென்றனர். பின்னே குளிப்பதற்கான இடம் இருந்தது. ஆனால் குளியல் அறையெல்லாம் இல்லை. ஒரு சிறிய தொட்டி, அதில் பாதி நீர் நிரம்பியிருந்தது. நீர் குளிர்ந்திருந்தது. இருவரும் ஆளுக்குக் கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக்கொண்டு துவட்டிக்கொண்டு அதே துணிகளை அணிந்துகொண்டு வெளியே வந்தனர். அவள் அவர்களை அருகில் வரச்சொல்லிவிட்டு ஏதேதோ செய்யத் தொடங்கினாள். அவள் என்ன செய்கிறாள் என்று கதிருக்கும் புரியவில்லை, சந்திரனுக்கும் புரியவில்லை, கூட்டிக்கொண்டு சென்றவருக்கும் புரியவில்லை. கிட்டதட்ட முக்கால் மணிநேரம் பூஜை செய்து கடைசியாக அந்த சேவலை பலிகொடுத்தாள். அதுவரை சாதாரணமாக இருந்த கதிர் அதன்பிறகு வீடு வந்த சேரும் வரை நடுங்கிக்கொண்டேயிருந்தான். இந்த பூஜை விஷயத்தை வீட்டில் சொல்லக்கூடாது என்று சந்திரன் கதிரிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார். அந்தப் பூஜைக்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும், மகன் இயல்பாக மாறிவிடுவான், மனைவி சரியாகி குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்கொள்வாள் என்று சந்திரன் நம்பினார். அது அனைத்தும் வீண் என்று சில நாட்களிலேயே புரிந்துகொண்டார்.  ஒருபக்கம் மகன் குழந்தையாகவே வளரத்தொடங்கினான். மறுபக்கம் மனைவியின் ஆட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது.

*

தன்னிடமும் குமரன் அவ்வாறு நடந்துகொண்டதாகச் சந்திரன் கதிரிடம் சொன்னார். கதிர் நைட் ஷிப்டிற்கு சென்ற சமயம் தான் அவனுடன் தூங்கியதாகவும், அப்போதும் அதுபோல் நடந்ததாகவும் அவர் சொன்னார். கதிருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இது வழக்கமாக ஒன்றுதான் என்று இருவருக்குமே தெரிந்திருந்தது. ஆனால், குமரன் சாதாரணமான ஒருவன் அல்லவே. இருவருக்கும் உள்ளுக்குள் சிறு பயம் ஏற்படத் தொடங்கியது. பக்கத்திலும் கீழ் வீட்டிலும் பெண்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றார் சந்திரன். பிறகு தானே மருத்துவரிடம் ஆலோசனை கேட்பதாகவும் சொன்னார். கதிரும் சரியென்று அதை அத்தோடு விட்டான். அதன்பிறகு சந்திரன் குமரனைத் தொடர்ந்து மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போக ஆரம்பித்தார். அவனுள் ஒரு மாற்றம் நிகழ ஆரம்பித்தது.

குமரனும் அவன் அப்பாவும்

சிறுவயதில் குமரனை விடுதியில் சேர்த்தப் பின்பு வாரம் தவறாமல் ஞாயிறு மாலை விடுதிக்குச் சென்று குமரனைப் பார்த்துவிட்டு வந்தார் சந்திரன். அவ்வப்போது கதிரையும் அழைத்துச்சென்றார். குமரனின் அம்மாவிற்கு எப்போதுமே தன் மகனைப் பிரிந்திருக்கிறோமே என்ற கவலை இருந்ததேயில்லை. கதிருக்கு எப்போதுமே தம்பி மீது ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. அதுவும் அவனைப் பிரிந்திருந்த நாட்களில் அது அதிகரிக்கத்தான் செய்திருந்தது. ஆனால், சந்திரன் மட்டும் எப்போதுமே அதே மாறாத அன்போடு இருந்தார். தனக்காக கிடைக்கும் அனைத்து ஓய்வு நேரங்களையும் அவனுக்காகவே செலவிட்டார்.

குமரனுக்கு மூளை வளர்ச்சி குன்றியிருப்பதைச் சரி செய்துவிடலாம் என்று அவர் திடமாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அது அவர் மனைவி குடும்பத்தில் வரிசையாகப் பலருக்கு அவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை எல்லோரும் எடுத்துச் சொல்லி, குமரன் கடைசிவரை இப்படித்தான் இருப்பான் என்று சொல்லியபோது அவர் மிகவும் சோர்ந்துபோனார். குமரனின் நிலையையே அவருக்கு பெரும் சோர்வை ஏற்படுத்திக்கொண்டிருந்த தருணத்தில் மனைவியும் நாளுக்கு நாள் மிக மோசமாக நடக்க ஆரம்பித்திருந்தாள். எதற்கெடுத்தாலும் சண்டைகள், வசைகள் என அவள் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டிருந்தது. சினிமாவிற்கு போகவும் வாங்கி சாப்பிடவும் வீட்டிலிருக்கும் பொருட்களையும் விற்க ஆரம்பித்திருந்தாள். இதற்கெல்லாம் உச்சமாக அவள் தனது திருமணப் பட்டுப்புடவையின் சரிகைகளைக் கூட பிரித்து விற்றிருந்தாள். அந்த குடும்பத்தின் வறுமை செயற்கையாக உருவாகிக்கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தார்கள், சொந்தங்கள் என யாருமே சந்திரனை மதிக்கவில்லை. அனைவரின் பார்வையிலும் அவர் மனைவியை அடக்கத்தெரியாதவராகவும், கையாலாகாதவராகவும் தெரிந்தார். உறவினர்களின் எந்த விசேஷங்களிலும் அவருக்கு மரியாதையே இருந்ததில்லை. கதிர் வளர வளர இதை நன்றாக புரிந்துகொள்ளத் தொடங்கினான். ஒருகட்டத்தில் அவன் எந்த உறவினர் வீடுகளுக்கும் அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கும் போதையே நிறுத்தியிருந்தான். சந்திரன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்ட மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை. அதன் காரணமாகவே கதிருக்கு அவர் மீது ஆழ்மனதில் ஒரு வெறுப்பு இருந்துகொண்டேயிருந்தது.

சரியாக பதினாறு வயது முடிந்ததும் குமரன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டான். இத்தனை ஆண்டுகளில் அவன் அம்மா துளிகூட மாறாமலேயே இருந்தாள். அதனால் குமரன் திரும்பி வீட்டிற்கு வந்து அவளுக்கு மீண்டும் இடைஞ்சலாகவே இருந்தான்.

அவன் பொருட்டு அவள் மீண்டும் சந்திரனிடம் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.

*

வழக்கம் போலக் குமரனை அவனது அம்மா எதற்கோ திட்டிக்கொண்டேயிருந்தாள். அவளுக்கு அதுதான் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு யாரையாவது திட்டிக்கொண்டேயிருக்க வேண்டும். கணவனை, மாமியாரை, பிள்ளைகளை, கடைக்காரனை, கீழ் வீட்டு எதிர் வீட்டு, பக்கத்துவீட்டு ஆட்களை என யாரையாவது திட்டிக்கொண்டேயிருப்பாள். அவளுக்கு தன் பிள்ளைகள் உட்பட அனைவருமே தேவடியாப்பையன்ங்கள் தான், தேவடியாக்கள் தான்.  அன்றும் வழக்கம் போலக் குமரனைத் திட்டிக்கொண்டேயிருந்தாள். அவன் அமைதியாக டீவிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தாள். அவள் வாய் ஓயவேயில்லை. ஒருமுறை வெளியே வரும்போது குமரனின் கால் அவளைத் தடுக்கிவிட்டது. அவள் அவன் தலையில் ஒரு கொட்டு வைத்தாள். அவள் கொட்டிய அடுத்த நொடி அந்த வீட்டில் ஆக்ரோஷமான ஒரு மிருகத்தின் அலறல் அந்த தெருவையே திணறடித்தது. குரல் கேட்ட பலரும் ஜன்னல் வழியாக வாசல் வழியாக எட்டிப்பார்த்தனர். குமரனின் அலறலைக் கேட்டு அவன் அம்மா மிரண்டு சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டாள். வெளியே உட்கார்ந்துகொண்டிருந்த அவன் பாட்டி எழுந்து உள்ளே வந்தாள். உள்ளே குமரனின் முகம் விகாரமாக ஆக்ரோஷத்தோடு அவன் அம்மாவை நோக்கியிருந்தது. அவன் உரும்பிக்கொண்டேயிருந்தான். அவன் கைகள் எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடம் என்பது போல் அசைந்துகொண்டிருந்தது. அவள் இன்னும் கூடுதலாக அவனைத் திட்ட ஆரம்பித்தாள். பாட்டியோ அவனைக் கொஞ்சிக்கொண்டே அவன் அருகில் சென்றாள். ஆனால், குமரனின் காதுகளில் எதுவும் விழவேயில்லை. அவன் அம்மா திட்டத் திட்ட அவனுக்கு வெறியேற்றிக்கொண்டேயிருந்தது. கிட்ட வந்த குமரனை அவள் மீண்டும் அடிக்க கையை ஓங்கினாள். அவன் வெறிகொண்டு அவள் முடியைப் பிடித்து இழுத்துக் கடாசினான். அவன் சமையலறையிலிருந்த அம்மிக்கல்லின் அருகில் சென்று விழுந்தாள். “அய்யோ அடிக்கிறான்… கொல்றான்…” எனக் கத்த ஆரம்பித்தாள். அவன் பாட்டி அவன் அருகில் சென்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றாள்.  அந்த சந்தர்ப்பத்தில் வேகமாக எழுந்த அவன் அம்மா வாசல் பக்கமாக ஓடிச்சென்று கதவை வெளிப்புறமாகத் தாழ்ப்பாள் போட்டுவிட்டாள். உள்ளேயிருந்த பாட்டி கதவைத் திறக்கும்படி கத்தினாள். ஆனால் அவள் திறக்கவேயில்லை. உள்ளேயிருந்து பொருட்கள் உடைபடும் சத்தம் கேட்கத் தொடங்கியது. தெருவே வேடிக்கை பார்க்கத் தொடங்கியது.

குமரனும் அவன் அம்மாவும்

குமரனும் பள்ளிக்கூடத்திற்குச் சென்றான். சில ஆண்டுகள் ஒன்றாம் வகுப்பு படித்தான். எத்தனை ஆண்டுகள் தான் ஒன்றாம் வகுப்புலேயே வைத்திருப்பது என்று அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார்கள். அதன் வீட்டோடு இருந்துவிட்டான். பெரும்பாலும் வாசலில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பான். சில நேரம் தனக்குத் தானே சிரித்துக்கொண்டிருப்பான். சிறிது கோவமாகப் பேசினாலே அழத்தொடங்கிவிடுவான். அப்போது அவன் அம்மா ஒரு சினிமா பைத்தியமாக இருந்தாள். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை சினிமாவிற்கு சென்றுவிடுவாள். முதலியார்பேட்டையிலேயே கண்ணம்மை என்று ஒரு தியேட்டர் இருந்தது. இரண்டு மணிக்கெல்லாம் சென்று உட்கார்ந்துவிடுவாள். மூன்று மணியாட்டம் பார்த்துவிட்டு மெதுவாக ஆறு மணிக்கு வீட்டிற்கு வருவாள். குமரனை எப்போதும் கையில் பிடித்துக்கொண்டே அலைவாள். தியேட்டாரில் குமரனைப் பார்த்து இறக்கப்பட்டு இடைவேளையில் யாராவது எதாவது வாங்கிக்கொடுப்பார்கள்.

குமரன் எப்போதும் அவளுக்கு ஒரு சுமையாகியிருந்தான். அவன் வீட்டிலேயே இருப்பதால் அவனையும் எங்கு சென்றாலும் அழைத்து செல்ல வேண்டிய நிலை அவளுக்கு இருந்தது. அவனுக்குச் சேர்த்து செலவு செய்வது அவளுக்கு பெரும் கஷ்டமாக இருந்தது. அவ்வப்போது வரும் மாமியாரை சண்டைபோட்டு அனுப்பிவிடலாம். ஆனால், பெற்ற பிள்ளையை என்ன செய்து என்று யோசித்துக்கொண்டிருந்தாள். கடைசியில் அவளுக்கு ஒரு விடைக் கிடைத்தது. இரண்டு தெருத் தள்ளி ஒரு வீட்டில் குமரனை போலவே ஒரு குழந்தை இருந்தது என்றும் அவர்கள் அதை விடுதியில் விட்டுவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு தன் கணவனை நச்சரிக்கத் தொடங்கினாள். இதன் பொருட்டு வீட்டில் தினம் ஒரு சண்டை எனச் சந்திரனின் உயிரை எடுக்க ஆரம்பித்தாள். காலை முதல் இரவு வரை உழைத்துவிட்டு நேராக வீட்டிற்கு வரும் சந்திரனுக்கு ஒருநாள் கூட நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. பொருத்துப் பொருத்துப் பார்த்த சந்திரன் குமரனை விடுதியில் சேர்க்க ஒப்புக்கொண்டார்.

இருவரும் சென்று குமரனை மனநலம் குன்றிய சிறுவர் இல்லம் எனும் ஒரு அரசாங்க விடுதியில் சேர்த்துவிட்டனர். எதுவுமே தெரியாமல் குமரன் உள்ளே சென்றான். அந்த இடத்தில் அழுது கண்ணீர்விட்டு ஒரு சிறு நாடகத்தை அரங்கேற்றினாள். “வேணூம்னா கூட்டின்னு போயிடலாமா” என்று சந்திரன் கேட்க, உடனே அழுகையை நிறுத்திவிட்டு மறுத்தாள். குமரனை அவர்கள் பதினாறு வயது வரை தான் வைத்துக்கொள்வார்கள் என்பது மட்டும் அவளுக்கு உறுத்திக்கொண்டேயிருக்க, அதற்குப் பல வருடங்கள் இருக்கிறது என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டாள்.

குமரனை விடுதியில் விட்டதிலிருந்து கதிர் கொஞ்சம் வருத்தத்திலிருந்தான். தன்னுடன் விளையாடவில்லையென்றாலும் பேசவில்லையென்றாலும் துணைக்குத் தம்பி என்று ஒருவன் இருந்தான். ஆனால், இப்போது யாருமற்ற வெறுமை கதிரைத்தான் அதிகமாகத் தாக்கியது. குறிப்பாக விடுமுறை நாட்களில் கதிருக்கு வெறுப்பாகவே கழிந்தது. ஆனால், அவன் அம்மா தன் வழியிலிருந்த சிறுப் புல்லையும் நசுக்கிவிட்டோம் என்று மகிழ்ந்தாள்.

*

கதிர் வீட்டிற்கு வரும் வரை அவன் அம்மா தெருவேப் பார்க்கும்ம்படி கத்திக்கொண்டிருந்தாள். அவன் வந்து கதவைத் திறந்து உள்ளே சென்றபோது குமரன் அமைதியாக டீவிப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பாட்டி உள்ளே சமையலறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தாள். அவன் பாட்டியைப் பார்க்க அவள் எட்டி அவன் அம்மா வருகிறாளா என்று பார்த்தாள். கதிர் வெளியே சென்று அவன் அம்மாவை உள்ளே அழைத்தான். அவள் கத்திக்கொண்டே உள்ளே வந்தாள். அவளின் நீண்ட கத்தலையும் புலம்பலையும் கொண்டு என்ன நடந்தது என்று கதிர் ஒருவாறு ஊகித்திருந்தான். ஆனால், குமரன் ஏன் இவ்வாறு நடந்துகொண்டான் என்று அவனுக்குப் புரியவில்லை. தற்போது அவன் அமைதியாக இருந்ததால் அவன் தன் வேலையைப் பார்க்கச் சென்றான். இரவு சந்திரன் வீட்டிற்கு வந்ததும் மீண்டும் அதே புராணம் வாசிக்கப்பட்டது. அவர் எதையுமே நம்பவில்லை. கதிரிடம் கேட்க, அவனும் தான் எதையும் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டுப் படுத்துவிட்டான்.

பிறகு குமரனின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கதிரும் சந்திரனும் கவனிக்கத் தொடங்கினர். சந்திரன் எதற்கெடுத்தாலும் அவனை மருத்துவரிடம் அழைத்துச்சென்றார். அவனுக்குக் கொடுக்கப்படும் மாத்திரைகளின் அளவுகள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. சந்திரன் எதையுமே யாரிடமும் சொல்லவில்லை. கதிரிடம் கூட அவர் குமரனுக்கு என்ன மருத்துவம் பார்க்கிறார் என்று சொல்லவில்லை. தற்போது அவன் இரவுகளில் அமைதியாகத் தூங்குகிறான். எந்த வித உணர்ச்சிகளும் அவனிடம் இல்லை என்பதை மட்டும் கதிர் கவனித்தான். ஆனால், நாளுக்கு நாள் அவன் ஆக்ரோஷம் அதிகரித்துக்கொண்டே சென்றது. தெருவில் உள்ளவர்களுக்கு அவன் ஒரு வேடிக்கைப் பொருளாக மாறினான். சந்திரனை அடிக்கடி வெளியே கூட்டிக்கொண்டு செல்லும் படி தகராறு செய்ய ஆரம்பித்தான். அவனுடைய ஆக்ரோஷத்தை சந்திரன் கதிர் இருவராலும் சமாளிக்க முடியவில்லை. அனைவரையும் அடித்தான். கிடைத்ததையெல்லாம் உடைத்தான். சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவன் அம்மா அவன் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டேயிருந்தாள். அவன் பாட்டியை மாட்டிவிட்டு ஓடிவிடுவாள். பலமுறை பாட்டிதான் அவனைச் சமாதானப்படுத்துவாள்.

கதிருக்கு சந்திரன் மேல் சந்தேகமாகவே இருந்தது. அவர் கொடுக்கும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளே குமரனின் நடவடிக்கைகள் என்று நினைத்தான். ஒருநாள் அதைச் சந்திரனிடம் கேட்கவும் செய்தான்.

“அவன இன்னாத்துக்கு அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு இட்டுன்னு போற… எதுக்கு இத்தன மாத்தர…”

“ஓன்னும் இல்லடா… அதெல்லாம் சத்து மாத்தர…”

“இப்ப நீயா சொல்றயா… இல்ல நான் இதெல்லாம் எடுத்துகினு போயி மெடிக்கல்ல கேக்கவா… இதெல்லாம் இன்னா மத்திரன்னு கண்டுபுடிக்க முடியாதுன்னு நெனக்கறியா…”

சந்திரன் அமைதியாக இருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. இவர்கள் பேசுவது எதையும் கண்டுகொள்ளாமல் குமரன் டிவிபார்த்துக்கொண்டிருந்தான். அவன் அம்மாவும் இவர்கள் பேசுவதைப் பற்றி கவலையில்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். பாட்டி மட்டும் சந்திரனிடம் கோவமாகக் கேட்டாள்.

“இன்னா தாண்டா பண்ணி வெச்ச அந்த கொழந்தையா…”

“அவன் எதனா தப்பா நடந்துக்க போறான்னு அவனுக்கு அதுமாதிரி எதுவும் தோணாத மாதிரி டாக்டருகிட்ட கேட்டு மாத்திர குடுத்தேன்… ஆனா இப்படி சைட் எஃப்க்ட் ஆவும்ன்னு எனக்கு தெரிலயே… டாக்டரு கூட எதுவும் ஆவாதுன்னுதான் சொன்னாரு…”

சந்திரன் என்ன சொல்கிறார் என்று பாட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், கதிருக்குப் புரிந்தது. அவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

“உனுக்கு எதுனா அறிவு இருக்குதா…”

“நீதாணடா சொன்ன… அவனுக்கு ராத்திரில இப்புடி ஆவுது… கட்டி கட்டி புடிச்சிக்கிறான்… யாரன்னா எதுனா பண்ணிடப்போறான்னு…”

“அதுக்கு… ஏன் வெஷம் கொடுத்துக் கொல்ல வேண்டியது தான…”

சந்திரன் அமைதியாக இருந்தார். அவன் அம்மா சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டே வந்தாள்.

அனைவரும் ஏதோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு “இன்னாச்சி” என்றாள்.

யாரும் எதையும் பேசாமல் படுத்துக்கொண்டனர். சந்திரன் அனைத்து மாத்திரைகளையும் எடுத்துச் சென்று கழிவறையில் போட்டுவிட்டு வந்து படுத்துக்கொண்டார். ஆனால் தூங்கவில்லை.

உள்ளேயிருந்து குமரன், “அப்பா… அப்பா… இங்க வா…” என்றான்.

அவர் மெல்ல எழுந்து அவன் அருகில் சென்றார். அவன் மட்டும் கட்டிலில் படுத்திருந்தான். கதிர் ஜன்னலில் வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கக் குமரன் அவன் அப்பாவை அருகில் படுத்துக்கொள்ளும்படி சொன்னான். அவர் தயங்கியவாறே அவன் அருகில் படுத்துக்கொண்டார்.

“அப்பா… நாளிக்கு பஸ்ல போலாமா…”

“ம்…”

“நீல பஸ்ஸா… செவப்பு பஸ்ஸா…”

“நீல பஸ்ல போலாம்…”

“பீச்சிக்கா…”

“கோயிலுக்கு போலாம்…”

“பஸ்லயா…”

“ஆமா…”

“நீல பஸ்லயா…”

கீழே படுத்துக்கொண்டிருந்த அவன் அம்மா “ஏய் சனியனே… கம்முன்னு தூங்கு…” என்றாள்.

ஜன்னல் அருகே வேடிக்கப் பார்த்துக்கொண்டிருந்த கதிர் வேகமாக வந்து அவன் அம்மாவை ஒரு மிதி மிதித்தான். அவள் ‘அய்யோ’ என்று அலறினாள்.

குமரன் பலமாகச் சிரித்தான்.

*

குமரனை எதாவது விடுதியில் சேர்த்துவிடும் படி மீண்டும் தகராறு செய்ய ஆரம்பித்திருந்தாள் அவன் அம்மா. சந்திரனுக்கு இது மேலும் மன வேதனையை அதிகரித்தது. தன் மனைவியின் தொல்லை தாங்காமல் வீட்டிற்குத் தாமதமாக வரலாம் என்று நினைத்தாலும் அவர் குமரனை நினைத்துப் பயந்தார். யாரை யார் என்ன செய்வார்களோ, எப்போது என்ன நடக்கும் என்றோ  அவர் பயந்தவாறே தன் காலத்தைக் கழிக்க ஆரம்பித்திருந்தார்.

இதுபோன்ற ஒரு சூழலில் தான் குமரன் தன் பாட்டியை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டிருந்தான். அது அவர் மனைவிக்குச் சாதகமாகவே அமைந்தது. அவள் தனக்குப் பயமாக இருப்பதாகத் தினமும் இரவுகளில் ரகளை செய்தாள். கதிருக்கு தன் அம்மாவைப் பார்க்கப் பார்க்க அருவருப்பாக இருந்தது. அவன் வீட்டிற்கு வருவதையேக் குறைத்துக்கொண்டான். வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வந்தான். குமரன் தாக்கியதால் பலவீனமடைந்திருந்த அவன் பாட்டி சமையலறையில் நடக்கும்போதே இடுப்பொடிந்து கீழே விழுந்தாள். அதன் பிறகு அவளை எங்காவது கொண்டு விடும் படி பிரச்சனை செய்ய ஆரம்பித்தாள். ஒருகட்டத்தில் சந்திரனுக்கு வேறு வழியே தெரியவில்லை. அங்கே இங்கே என அலைந்து ஒரு விடுதியைக் கண்டுபிடித்தார்.

*

தன்னை சுற்றியிருந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்கக் குமரனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டதாக நினைத்தான் கதிர். குமரனிடம் எந்த ஆக்ரோஷமும் இல்லை அமைதியாகவே இருப்பதாக விடுதியில் சொன்னார்கள். வாரம் ஒருமுறை சந்திரன் குமரனைச் சென்று பார்த்து வந்தார். கதிர் அவ்வப்போது சென்று வந்தான். சந்திரனும் கதிரும் சேர்ந்து எப்போதாவது செல்வார்கள்.

சந்திரனும் கதிரும் குமரனை நடுவில் உட்காரவைத்து கேக் ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தனர். அவன் அதை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இருவரும் அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் சாப்பிட்டுக்கொண்டே அமைதியாகக் கேட்டான்.

“அம்மா வரல செத்துட்டாளா…”

சந்திரன் அமைதியாக இருந்தார்.

“அம்மா வரல செத்துட்டாளா…”

“இன்னும் இல்ல…” என்றான் கதிர்.


1.
பல்லாயிரம் உயிர்களை வாரிச்சுருட்டியதைச் சொல்லி
கழுத்தறுக்க வேண்டும்
கடலின் கழுத்துயெது

லட்சக்கணக்கான உயிர்களைச் சுழற்றியெரிந்ததைக் காண்பித்து
மாறுகால் கை வாங்க வேண்டும்
காற்றின் கை கால்யெது

பெருகியோடும் குருதி வெள்ளத்தின் வீச்சம் நுகரவைத்து
சங்கு அறுக்க வேண்டும்
நதியின் முகமெது

எண்ணிக்கையற்ற உயிர்களை
புதைத்துக் கொண்டது குறித்தக் கேள்வியுடன்
தலைக்கொய்ய வேண்டும்
நிலத்தின் தலையெது

மிதக்கும் முழுநிலவு
அலையாடும் கப்பல்
கடல் பார்ப்பது எவ்வளவு ஆனந்தம் நண்ப


2.
இங்கிருந்து தெரியும்
கடலசையும் கப்பலுக்குள்
வாழ்நாட்களை..

மாலுமிக்கு தெரிந்திருக்கிறது
நகரத்தில் சுவையான தேனீர் கிடைக்குமிடம்.


3.
நீள்வெளிச்சபாதையைச் சுழற்றியடிக்கும்
கலங்கரை விளக்கு
சிறிதும் பெரிதுமாய் மின்னொளி புள்ளிகள்
தீப்பொறி சிதறும் சோள கதிர்கள்

நடந்தும் அமர்ந்தும் பேசிக்கொண்டும் உணவருந்தியும்
தனித்தும்
அலைபேசி மனிதர்கள்
இளைப்பாறும் குதிரைகள்
மோந்து களைத்த மூச்சிரைக்கும் நாய்கள்
ஒருக்களித்தும் ஒய்யாரமாகவும் படகுகள்

முப்பாக கரிப்பு அலைகளின்
நுரை குமிழ்களை
மிச்ச நிலத்தின் கரைகள் உடைக்கின்றன

மீண்டும் மாலுமி வான் நோக்குகிறார்
நட்சத்திர எண்ணிக்கை தொடர்கிறது

(அகரமுதல்வனுக்கு..)

-வேல் கண்ணன் 

தனது செல்லாத பணம் நாவலுக்காக 2020ம் ஆண்டின் சாகித்திய அகாடமி விருதினைப் பெற்றுள்ளார் எழுத்தாளர் இமையம் அவர்கள்.

நாள்: 9 மார்ச் 2021.


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும், சென்னை நாணயவியல் அமைப்பும் (CCC) இணைந்து ராஜேந்திர சோழனின் தங்கத்திலான அரிய நாணயம் வெளியிட்டனர். இந்த நிகழ்வானது சென்னை புத்தகக் காட்சி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அருங்காட்சியகத்துறை ஆணையர் திரு.எம்.எஸ். சண்முகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். பபாசியின் திரு.ஆர்.எஸ். சண்முகம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர் திரு. சென்னை மணிகண்டன்., அவர்கள் கருத்துரை வழங்கி நாணய சேகரிப்பின் அவசியம் குறித்து பேசினார்.
அருங்காட்சியகத்துறை ஆணையர் திரு. எம். எஸ்.சண்முகம் இ.ஆ.ப. அவர்கள் நாணயத்தை வெளியிட, சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர் திரு. சென்னை மணிகண்டன் மற்றும் பபாசி தலைவர் திரு. ஆர்எஸ் சண்முகம் ஆகியோர் பெற்றுக் கொள்கிறார்கள்.👍

இந்த நாணயத்தை பற்றி திரு.சென்னை மணிகண்டன் அவர்கள் கூறுகையில்;

தமிழகத்தின் வீரத்துக்கும், கலை, இலக்கியம் சார்ந்த பண்பாட்டிற்கும், வானளாவிய கட்டிடக்கலைக்கும், மிகப்பெரிய உதாரணமாக நம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் அமையப்பெற்றிருக்கும் ஒரே இடம் இது என்றால், இன்றைய தமிழ்நாட்டின் மையம் அன்றைய சோழமண்டலம் ராஜராஜேஸ்வரம் என்கிற பெரிய கோவிலாகும்.❤️ ராஜேந்திர சோழன் நாணயங்கள்:- மாமன்னன் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் ஆட்சி காலமானது, தமிழர்களின் வாழ்வில் ஒர் பொற்காலம் எனலாம். இந்நாணயத்தின் முன்பகுதியில் ராஜராஜசோழனின் நின்றநிலை உருவமும், இடது பக்கம் விளக்கு ஒன்றும் உள்ளது. நாணயத்தின் பின் பக்கத்தில் அமர்ந்த நிலையில் ராஜாவின் உருவமும், அதன் வலது பக்கத்தில் ஸ்ரீ ராஜேந்திரஹ என்று மேலிருந்து கீழ் நோக்கி நாகரி எழுத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. 4.2 கிராம் எடையுள்ள நாணயம், தங்கத்தில் இயற்கை அன்னையின் பேரழகோடு தெளிவான வடிவமைப்போடு கிடைத்திருப்பது வியப்பாகும் 👍.

இந்திய வரலாற்றில் முதன்முதலாக இந்நாணயம் அரிய எழுத்துப் பொறிப்புகளோடு கிடைத்திருப்பது அபூர்வம் ஆகும். இதற்கு முன்னால் கிடைத்த ஸ்ரீ ராஜேந்திர நாணயங்களில் ஒரு பக்கம் பலி மற்றும் அமர்ந்த நிலையில் ராஜாவும் மற்றொரு பக்கம் நின்ற நிலையில் ராஜாவுடன் கிடைத்திருக்கிறது.👍 மேலும் மற்றொரு நாணயத்தில் முன் பக்கத்தில் வில் மற்றும் வலது பக்கம் நோக்கி அமர்ந்திருக்கும் புலியின் முன்னால், செங்குத்தாக நின்ற நிலையில் இரண்டு மீன்கள் அருகருகில் இருக்கும். அதன் கீழே ஸ்ரீ ராஜேந்திரஹ எனும் எழுத்தும் இடம் பெறும்.👍👍
அந்த நாணயத்தின் பின் பக்கத்திலும் இதே போன்ற அமைப்பு தான் மீண்டும் இடம்பெறும்.
#ஆனால் நாம் இப்போது பார்க்கின்ற நாணயம் ஸ்ரீ ராஜராஜ சோழ மன்னன் வெளியிட்ட நாணயத்தைப் போன்ற அமைப்புடன், ஸ்ரீ ராஜேந்திரன் என்கிற எழுத்து பொறுப்போடு தங்கத்தில் வெளி வந்திருப்பது இதுவே முதல்முறை.
ஸ்ரீ ராஜேந்திர சோழ மன்னனின் முதல் வெளியீடாக தான் இதை நாம் எடுத்துக்கொள்ள முடியும். மேலும் கடல் கடந்து இலங்கையில் தன்னுடைய ஆட்சியை நிர்மாணித்தவர்; என்பதற்கான ஆதாரமும் நாணயத்தில் வெளிக்கொணர முடிகின்றது 👍


இதுவரை இலங்கையில் வெளிவந்த ஸ்ரீலங்க வீரா என்கிற நாணயம், சோழ மன்னன் அங்கு வெளியிட்டார் எனவும், இல்லை எனவும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஆனால் நாணயம் சோழ மன்னனின் மூலம், மேற்குறிப்பிட்ட தங்க நாணயங்களை வெளியிட்டார் என்பது தீர்மானிக்கின்றது. காரணம் நாம் இங்கே புகைப்படத்தில் பார்க்கும் நாணயத்தில் அமர்ந்த ராஜாவுக்கு கீழ் ஆறு கட்டங்கள் உள்ளன இதேபோல் இலங்கையில் வெளிவந்த ஸ்ரீலங்காவின் நாணயத்திலும் கட்டங்கள் இருப்பதை நாம் காண முடியும்.

இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே கடல் கடந்து தன்னாட்சியை விரிவுபடுத்திய முதல் மன்னன் சோழ மன்னன் மட்டும்தான். என்பது இதன் மூலம் உறுதியாகின்றன. இராஜராஜனின் ஆட்சியின் கீழ் பாண்டி மண்டலம், சேர மண்டலம், தொண்டை மண்டலம் ஆகிய ஜெயங்கொண்ட சோழ மண்டலம், கொங்கு மண்டலம், நுளம்பபாடி நாடு, கலிங்க நாடு மற்றும் இலங்கை ஆகிய மும்முடிச் சோழ மண்டலமாகத்தான் இருந்தன, என்கிற செய்தி கல்வெட்டுகளின் மூலம் மட்டுமின்றி, நாணயங்களின் மூலமும் அறிந்து கொள்ளமுடிகிறது. உலக நாடுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உண்டு ஆனால் நாம் தாய்த் தமிழ் நாட்டின் நம் தமிழர்களின் வாழ்வியலை அறிய பெருமைகளை, பாரம்பரியத்தை மற்றும் ஆகச்சிறந்த வரலாற்றை ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் நாணயங்களின் மூலம் நாம் பார்க்கவும், அறியவும் ஆராயவும், முடிகிறது.
📌 நம் தாய் தமிழர்கள் ஒவ்வொருவரையும், வியப்பில் ஆழ்த்தி, பெருமை கொள்ளச் செய்வதில், முதல் இடத்தை பிடிக்கும் ஆகச்சிறந்த வரலாற்றுத் தடையும் நாணயங்கள் மட்டும்தான்.

இப்படிக்கு
“சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர்”

— “சென்னை மணிகண்டன் “
9940720123,9080156981

நீல நிறத்தில் வட்டமாக, பெரும் வெளிச்சத்தோடு கதவு திறந்தது.

” நீ மொதல்ல போ” என்று குட்டி தேவதை சொல்ல ,

சின்னு ஜிங்கியை எடுத்து அணைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் . அவர்களைத் தொடர்ந்து அந்த குட்டி தேவதையும் நுழைய , கதவு மாயமாய் மறைந்தது .

உள்ளே போன சின்னுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த இடம் முழுவதும் பச்சை பசேல் என்ற மரங்களும் , பறவைகளின் கிரீச் , கிரீச் சத்தமும், இதுவரை அவள் காணாத வண்ணங்களில் பூக்களுமாய் நிறைந்து இருந்தது. ஜிங்கிக்கு, பாதாளத்திலிருந்து தப்பித்து வந்த சந்தோசம் தாங்கவில்லை. அங்கு இருந்த பூக்களைச் சுற்றிக் கொண்டு இருந்த பட்டாம்பூச்சியை விரட்டி விளையாடிக் கொண்டு இருந்தது .

“என்ன சின்னு !! நான் வாழ்ந்த இடம் மாதிரி தெரிகிறது, உங்க வீடும் இங்க தான் இருக்கா ?? என்று கேட்டது குட்டி தேவதை.

“எங்க வீடு இங்க இல்ல , இது ஏதோ காடு மாதிரி இருக்கு. குட்டி தேவதை உன் வீடு இங்கயா இருக்கு ?”

“என் பேரு குட்டி தேவதை இல்ல , டிம்பிள் “ என்று சொல்லிய டிம்பிள், சின்னுவின் பதிலால் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து, யோசித்துவிட்டு ஏதோ பளிச்சிட சின்னுவிடம் திரும்பியது,

“என்ன மன்னிச்சுடு சின்னு , உன் வீட்டுக்கு போறதுக்கு பதிலா மாறி, நான் வசித்த இடத்துக்கு வந்துட்டோம் . பல வருஷமா உபயோகிக்காமல் இருந்த மாயாஜால கோல நம்பியது தப்பா போச்சி, ஆனா சீக்கிரம் கண்டிப்பா உன்னையும் ஜிங்கியையும் உன் வீட்டுக்கு கூட்டிகிட்டு போவேன் “ என்று வருத்தத்துடன் கெஞ்சும் குரலில் கூறியது டிம்பிள்.

“பரவாயில்ல டிம்பிள், அந்த அரக்கன் கிட்ட இருந்த காப்பாத்துன நீ எங்களை வீட்டுக்கும் கொண்டு போவனு நான் நம்புறேன்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே , ஜிங்கி டிம்பிளை முதல் முறை தாவி தாவி நக்கியது.

“நீ என் மேல வச்ச நம்பிக்கைக்கு நிறைய நன்றி சின்னு” என்று ஜிங்கியை தடவிக் கொண்டே சொன்ன டிம்பிள், “சரி இப்பவே மீண்டும் மாயாஜால கோலை சுழற்றி மந்திரம் சொன்னால் போகுது” என்றது.

“இல்ல டிம்பிள் , உன் வீடு இங்க இருப்பதா சொன்னியே , முதல்ல உன் வீட்டுக்கு போவோம்” என்று சின்னு சொன்னவுடன் , டிம்பிள் சின்னுவை சுற்றி சுற்றி பறந்து சந்தோஷமானது .

“மரங்கள் தான் என்னைப் போன்ற குட்டி தேவதைகளின் வீடு . ஒவ்வொரு தேவதை பிறக்கும் போதும் அதற்கான மரம் பிறந்துவிடும்”

“ரொம்ப வித்யாசமா இருக்கு டிம்பிள்” என்று ஆர்வமாகக் கேட்டாள் சின்னு .

“அதுமட்டுமா , மனிதர்களைப் போல எங்களுக்கு குடும்பம் கிடையாது. எங்க வேலையே இந்த காட்டை, காட்டில் இருக்கும் பறவை, பூ , மிருகங்கள் என்று எல்லோரையும் பாதுகாப்பது தான்”

“தேவதைகள் வேல பெரிய வேல தான் போல என்று வியந்து சொன்னாள்” சின்னு

“நாங்க இல்லனா மரங்கள் காய்ந்து போய்விடும் , குட்டை வத்தி போய்விடும்” என்று சொல்லிக் கொண்டே தன்னோட மரம் இருக்கும் இடத்தை நோக்கி மெல்லமாகப் பறந்து, சின்னு ஜிங்கியுடன் பேசிக் கொண்டு வந்த டிம்பிளுக்கு பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.

அது என்ன அதிர்ச்சி அடுத்த பாகத்துல பார்ப்பமா…

– உமா மகேஸ்வரி

குளம் பச்சைப் பசேலென்று வட்ட இலைகள் விரியக் கிடந்தது. பச்சைக் குளம். அதில் வெண்ணல்லிப் பூக்கள் பிராத்திக்கக் குவிந்த கரங்கள் போலப் பொங்கி நின்றன. இன்று விடுமுறை நாள் . கல்லூரியிலிருந்து கடைசி ஆறுமாதப் பயிற்சிக்காக இருவரும் இங்கே வந்தவர்கள். நிதி நேற்று மாலை கான்டீனில் அவளுக்கும் காபியைத் தானே வாங்கி வந்து, எதிரில் உட்கார்ந்தபடி,

“நாளை வெளியே போலாமா “என்றான் அவளிடம்.

“ம்” என்றாள் மோனா.

எதற்கெடுத்தாலும் பெரும்பாலும்”ம்” அல்லது “ம்ஹூம்” போன்ற ஒற்றைச் சொல் பதில்கள் தான். சமயத்தில் அதுவும் இல்லாமல் மேல் கீழாகவோ அல்லது இடவலமாகவோ தலையாட்டல். ஒரே வாக்கியமாகப் பேசி எப்போது கேட்கப் போகிறேனோ என்றெண்ணினான். அவனுடன் என்றில்லை பொதுவாகவே எல்லோருடனும் அவள் மௌனச்சாமி தான். பெயரும் பொருத்தமாக ‘மோனா’ என்று வைத்திருக்கிறார்கள்.

அவளைப் பார்த்தான். நீல நிறச் சேலை பாந்தமாக இருந்தது. நீண்ட நேரம் பார்க்கவும் பயமாக இருந்தது. அவளைப் போலவே குளத்தின் மீது பார்வையை அலைய விட்டபடி, எந்த முன் யோசனையோ திட்டமோ இல்லாமல் விருட்டென்று குள மத்தியில் இருந்து வான் தொடும் பறவை போல் தானாகவே அச்சொற்கள் வெளி வந்து விட்டன.

“மோனா, நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா”

ஒரு வினாடி அவள் கண்களைப் பார்த்தான். அவ்வளவு தான். அவள் கரு விழிகள் மேல் இமைக்குள் செருகி விட்டன. பற்கள் கீழுதட்டில் பதிந்து ரத்தம் கோர்த்தது. அவள் மயங்கிச் சரிந்தாள் .

“என்னாச்சு”என்று ஹிந்தியில் கேட்ட படி யாரோ ஒரு பெண்மணி ஓடி வந்து அவளைத் தாங்கினாள். யாரோ வந்து பையிலிருந்த பாட்டில் தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தார்கள். யாரோ அதில் கொஞ்சம் பருகத் தந்தார்கள். அவள் மெதுவாக விழித்தாள். “Doctor here” என்று யாரோ கை காட்ட, “கூட வரவா” என்று அந்தப் பெண்மணி கேட்டார்கள். இவள் மறுத்துத் தலையசைத்தாள் “ஒன்றுமில்லை, லேசான தலை சுற்றல்” அவனுக்கு மட்டுமல்ல, அவள் முகமும் சங்கடத்தில் சிவந்து விட்டது.

“இல்லை மோனா, நாம் இங்கிருந்து டேராடூனுக்குக் காரில் போக ரொம்ப நேரமாகும். எதற்கும் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு போய் விடலாம். அதான் நல்லது”

“நோ, நிதி ப்ளீஸ் ஐ’ம் ஆல் ரைட். கொஞ்சம் பசிக்குது. அவ்ளோ தான்”

“சரி, உன் இஷ்டம்” என்று பேண்ட்டின் பின் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து அவர்கள் வந்த டாக்ஸி நம்பரை அழைத்தான் .

குளத்துப் படியிலேயே காத்திருந்தார்கள்.

“இப்ப பரவாயில்லயா”

“ம்”, என்றதும் சிரித்து விட்டான் .

“நல்லா வழக்கமான மோனாவாகிட்ட”

அவளின் மேல் கீழான தலையாட்டல். டாக்ஸி வந்ததும் பின்புறக் கதவை அவளுக்காகத் திறக்கப் போனவனை,

“நிதி, நிதி ப்ளீஸ், நானே திறந்துக்குவேன்” என்று தடுத்துத் தானே திறந்து உட்கார்ந்தாள். வந்தது போலவே முன் சீட்டிற்கு ஓடியவனை,

“நிதி, நிதி இங்கேயே உட்காரலாமே” எனவும் திகைத்து விட்டான்.

“ஓ, உட்காரலாமே” என்று கவனமாக இடைவெளி விட்டுக் கதவை ஒட்டி உட்கார்ந்தான். வண்டி கிளம்பியது.

“விழுந்துடப் போறிங்க” என்று ஒரு சின்னச் சிரிப்பொலியில் இன்னும் திகைத்து அவள் புறம் சற்றே நகர்ந்தான். “ஒரு நல்ல ஹோட்டலில் நிறுத்துங்க” என்று ஓட்டுநரிடம் சொல்லி விட்டு, கண்களை மூடிக் கொண்டான். கல்யாணம் என்றதும் ஏன் மயங்கினாள்? ஏதோ ஒன்று கசப்பாக நடந்திருக்கிறது. கேட்டால் மறுபடி மயங்கி விழுந்தாலும் விழுவாள். எதற்கு வம்பு? இருந்தாலும் ஒரு அழகிய பெண்ணுடனான என் முதல் சந்திப்பு இப்படி ஆகி இருக்க வேண்டாம். அவள் கோயிலுக்கு என்பதற்காக உடுத்தி இருந்த புடவையைப் பாராட்டி ஆரம்பித்திருக்கலாமோ? ஒரு துல்லிய நீலப் புடவை பூக்கள் அச்சிடப்படாத, ஜரிகை எதுவும் போடாத வெற்று நீலப் புடவை. வெற்று நீலம். இச்சொல்லில் மனம் திடுக்கிடுகிறது. நீலத்தில் எப்போதும் எதுவோ நிரம்பித் தானே இருக்கிறது. காதலின் நீலம், ஆகாய நீலம், கடல் நீலம், மழை நீலம், வெறுப்பின் நீலம், விஷ நீலம்… அவன், அவள் தொண்டையை ஒரு கணம் பார்த்தான். சங்கு நீலம், பொன் நீலம் என்றெண்ணினான். ஆனால் அவளிடம் சொல்லவில்லை.

சிறிய ஆனால் சுத்தமான ஹோட்டல் ஒன்றில் டாக்ஸி நின்றது. காலியான கிரானைட் மேஜைகள், நாற்காலிகள், கண் கூசும், கை வைக்கத் தயங்க வைக்கும் அதி சுத்தம். உள் நுழைந்து சுவரோர மூலையில் எதிர் எதிரே அமர்ந்தார்கள்.

“என்ன சாப்பிடுற”

“மொஸாம்பி ஜூஸ். யூ நோ, அது ஸ்கின் டோனுக்கு ரொம்ப நல்லது” புன்னகைத்தாள்.

“சரி, எதாவது சாப்பிட்டு விட்டு உன் மொஸாம்பியைக் குடிச்சுக்கோ, வேறென்ன ரொட்டி, பராத்தா தான் கிடைக்கும். நம்ப ஊர் தோசை, இட்லியா கிடைக்கப் போகுது.”.

அவள் சொன்னவற்றையே தனக்கும் சொல்லிவிட்டு, “உடனடியாகக் குடிக்க என்ன இருக்கு?” பரிமாறுபவரைக் கேட்டான். அவன் கண்ணாடிக் கதவுள்ள ப்ரிஜ்ஜைக் காட்டினான்.

“கோக்?” அவள் தலையசைத்ததும் கோக் டேபிளுக்கு வந்தது.

கண் கலங்க அதை உறிஞ்சியவளை, “ஏன்,எதுக்கு அழுற”

“இவ்ளோ அக்கறை அப்பா தவிர யாரும் காட்டியதில்லை”

“ஓ, ஆனா அழாத. உன் அறையில் போய் அழுதுக்கோ. இது பொது இடம் “

“ம்” அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

வந்த ரொட்டியை அவசர அவசரமாக வழக்கமாகச் செய்யும் நுனி விரல் நளினங்களற்றுச் சாப்பிட்டாள். அவன் தன் வட்டிலில் இன்னும் விரல் வைக்கும் முன்பே.

வயிறாரச் சாப்பிட்டு விட்டு அவளுடைய சாத்துக்குடி ஜூஸையும் குடித்து விட்டு வெளியேறினர்.

காரை நெருங்கியதும், “நிதி, நீங்க இப்ப முன் சீட்ல உட்கார்ந்துக்கிறிங்களா ?”

“அதான பார்த்தேன் ” என்று அவன் மனதில் நினைத்து முடிக்கு முன்,

“ப்ளீஸ், நான் தூங்கணும்” என்று ஒரு சிறு பூனைக் கொட்டாவி விட்டாள் மெஸஞ்சர் ஸ்டிக்கர் மாதிரியே.

“பாவம் இவ” என்று எண்ணினான்.

அவள் பின் சீட்டில் சாய்ந்து கால்களைக் குறுக்கிப்படுப்பதைப் பார்த்த டிரைவர் சிறிய தலையணையை எடுத்துத் தந்தார். அவளைப் பற்றிய அவருடைய விசாரணைக்குப் பதில் சொன்னான், லேசான களைப்பு என்று மட்டும். டேராடூன் வந்து சேர நன்றாக இருண்டு விட்டது. அவளுடைய தனி அறை வந்தது. ஆங்காங்கே சிறிய வீடுகள் போன்ற வசிப்பிடங்கள். முதுகலைப் படிப்பிற்கும், ஆய்வுகளுக்கும். டாக்ஸி நின்றதும் தானாக விழித்த அவள், “நிதி, நீ இங்கேயே இன்று மட்டும் தங்குறியா” பெருந்திகைப்பை முகத்திலிருந்து மறைக்க முடியவில்லை.
“சட்ட திட்டங்கள் உனக்கு இருக்குமே” 

“ஆமா, அப்ப நான் உன் அறைக்கு வந்துடுறேனே, அழைச்சுட்டுப் போவியா” தயங்கும் சன்னக் குரல்.
“ம். அதில் ஒரு பிரச்னையும் கிடையாது”
“ஒரு நிமிஷம்”என்று இறங்கியவள், அவள் அறைக்கு சென்று ஒரு சிறு பையுடன் வந்தாள்.
 

அவனுக்கோ மறைக்க முடியாத சந்தோஷம். முதன் முறையாகத் தன்னை அவள் ஒருமையில் அழைத்ததையும் கவனித்தான். அவன் அறைக்கு வழி சொன்னான்.
“அவ்ளோ சுத்தமா இருக்காது”
“பரவால்ல நிதி .ஒரு நாள் தானே “
தனது அறையைத் திறந்தான். “நீ உட்காரு” என்று விட்டு அவசர அவசரமாகத் துணிகளை ஒதுக்கினான். தரையைப் பெருக்கினான். நல்ல வேளை, விருந்தினருக்கான சிறு கட்டில் ஒன்றும் இருந்தது. ஆனால் அதை அதே அறையில் தான் போட வேண்டும். வராந்தா மிகச் சிறியது. 

“நீ அங்கே தூங்கு. நான் இதில்”என்று சிறிய கட்டிலைக் காட்டினான். 

“சிரமமில்லையே..” 

“ம்ஹூம்” என்றான் அவளிடமிருந்து தொற்றப்பட்டவனாக.


அவள் குளியலறைக்குப் போய் இரவாடையை அணிந்து வந்தாள். தொளதொளப்பான பைஜாமாவில் மிகவும் சிறிய பெண்ணாகத் தெரிந்தாள். அவனும் உடை மாற்றி வருதற்குள் தூங்கி இருந்தாள் அல்லது அப்படி நடிக்கிறாளோ. அவன் தன் கட்டிலில் சரிந்தான். இவள் மனம் முற்றிலுமாகத் தனக்காகத் திறந்து விட்டது என்று புன்னகைத்தான். இரவு முழுவதும் உறங்கவில்லை. அடுத்த நாள் வழக்கம் போல் வகுப்புக்கள். அந்த வாரத்தில் இன்னொரு முறை அவன் அறையில் தங்கினாள். அவனும் மாலை நேரங்களில் அவள் அறையில் அவளைச் சந்தித்தான்.

தனித்த இரவெல்லாம் குறுஞ்செய்திகள், குரல் அனுப்பல்கள். பிறகு சிறு சிறு தழுவல்கள், முத்தங்கள் என இருவர் நாட்களும்  இனிய நிறங்கொண்டன.

உறங்காத இரவுகளில் எதையெதையோ நினைத்துப் புரண்டு கொண்டிருப்பாள். இதையெல்லாம் அவனிடம் சொல்ல வேண்டும். எப்போது எப்படி என்று தான் தெரியவில்லை.

****

வீடு மதிய வெயிலில் விறைத்து நின்றது. முன்புற புளிய மரத்தின் அயர்ந்த தோற்றமும் உதிர் இலைகளும்,  புடைத்த நரம்புகளாகத் தெரியும் கிளைகளும் எதையோ சொல்லி எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. அதன் நிழல் வீட்டின் வாசலில்  சாய் சதுரமாக வீழ்ந்திருக்க, அதில் நின்றிருந்தது அந்த பைக். எப்போதும் ஏற்படும் கசப்பும், அருவருப்பும் அவள் மனதில் படர்ந்தன. பள்ளி நாட்களில் வீடு திரும்புகையில் அவன் அங்கிருந்தால் மிகைச் செல்லத்தோடு “பேபி, ஸ்கூல் முடிஞ்சதா” என்று கன்னத்தைத்  தடவித் தட்டும் அந்த விரல்கள். அவள் உடனடியாக தன் கன்னத்தைத் துடைத்துத் தடமழித்துக் கொள்வாள். யதேச்சையாகப் படுவது போல் அவளுடலை உரசுவான். இடுப்பை, மார்பை அழுத்திய போது அவள் ஒரு தடவை அறைந்து விட்டாள்.
“நடந்து வாறப்ப தெரியாமபட்டிருக்கும்” என்பாள் அம்மா.
இன்று  கல்லூரி வகுப்பு  சீக்கிரம் முடிந்து விட்டது. ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ஹெல்மட்டைக் கழற்றியபடி படியேறினால் உள்ளே.. இவன். மனம் துவள்கிறது. படியில் உட்கார்ந்து பார்த்த போது அந்த பைக்கின் இறுமாப்பும், விறைப்பும் அவளை விதிர்க்கச் செய்தது. அது வாசலில் நின்றால் கதவு வெறுமனே சாத்தி இருந்தாலும், பூட்டி இருந்தாலும் படியில் அமர்ந்து அவன் வெளியேறக் காத்திருப்பது வழக்கமாகி விட்டது. ஒரு முறை தன் அறையில் இருந்து காலி தண்ணீர் பாட்டிலோடு சமையலறைக்குப் போன போது, இருவரும் அவள் கதவருகே நிற்பதை அறியாத மயக்க உலகில் இருந்தார்கள். அவன் இடது கையை அம்மாவின் தோளில் வைத்தபடி, வலது கையிலிருந்த மொபைலைக் காட்டி,

“இப்படிப் பண்ணலாமாடா, இது பிடிக்குதா”, என்று கேட்க அம்மா சிணுங்கிக் கொண்டிருந்தாள். மோனா தண்ணீர் பிடிக்காமலே அரவமின்றி அறைக்குத் திரும்பி விட்டாள்.

மற்றொரு நாள் வகுப்புகள் சீக்கிரம் முடிய வீட்டுக்கு வழக்கத்துக்கு மாறாக வெகு நேரம் முன்பே வந்திருந்தாள். டாய்லெட் போகவென்று அவசரமாகத் தன்னிடமிருந்த இன்னொரு சாவியால் வீட்டுக் கதவைத் திறந்து உள் நுழைந்தாள். அம்மாவின் அறையைத் தாண்டித் தான் அவள் மாடியறைக்குப் போக முடியும். படியேறிக் கடக்கும் போது கேட்ட மோக  முனகல்கள். திறந்த கதவு வழி யதேச்சையாகக் கண்ணில் பட்ட  கட்டிலில் அவர்கள் இருவரும், விசித்திரமான கோணத்தில்.. இப்போதும் அவர்கள் அவளைக் கவனிக்கவியலாத மிதப்பிலிருந்தாள்.  பயத்தில் ஒரு சொட்டு சிறுநீர் கசிய சத்தம் காட்டாமல் தன் அறைக்கு ஓடினாள். அழுதாள். பிறகு தெளிந்தாள். அம்மாவின் அந்தரங்கத்தின் சிமிழ் தன் முன் தவறித் திறந்திருக்கக் கூடாது தான். இதில் தலையிடவோ, விமர்சிக்கவோ, நீதி சொல்லவோ அவள் விரும்பவில்லை. அப்பாவிடம் அம்மாவிற்குப் போதாமைகள் இருக்கலாம்.. ஆனால் அப்பா… அவள் கண்ணீர் திரள அசையாமல் காத்திருந்தாள் அம்மாவின் கூர்மையான சிரிப்பொலி அடிவயிற்றில் குத்தியது. கதவு ஒருக்களித்துத் திறந்திருந்தது. காலையிலேயே வந்திருப்பான். அவளுள் கடுங் குரோதம் திரண்டது. 

“இருந்துட்டுப் போலாமே ” கொஞ்சலான அம்மாவின் குரல். 
“வருவேன்ல?” என்றபடியே அவன் மேல் நோக்கி வாரப் பட்ட தலைமுடியால் தள்ளி விட்டு, மணிக்கட்டிற்கு இறங்கிய தங்கக் காப்பை மேலேற்றியபடி வெளி வந்தவன் அவளைப் பார்த்ததாக தோன்றவில்லை. சாவதானமாகத் தன் பைக்கை   நோக்கி நடந்தவாறே “ஏன் மோனா, வெளியவே உட்கார்ந்திருக்க?” என்று பைக் ஹாண்டிலைத் திருகிச் சீறிக் கிளம்பினான்.
“அடிக்கடி வா தினேஷ்” அம்மாவின் அப்பட்டமான சரசக் குரல். அவன் தலையசைத்தபடி  பைக்கின் உறுமலோடு மறைந்தான்.
கறுப்பு ரவிக்கைக்குக் கீழே பிதுங்கிய அம்மாவின் சந்தன நிற இடுப்புச் சதையும், மதர்த்த மார்பகங்களும், அவற்றைத் தெளிவாகக் காட்டிய ஸூத்ரூ புடவையும்.. அவளுக்குக் கூசியது.
“என்னை விட ஓரிரு வயசு பெரியவனாயிருப்பான். மகன் போன்றவனோடு அம்மாவுக்கென்ன பேச்சும்,சிரிப்பும்” என்று நினைத்தவள் “அதைப் பற்றி எனக்கென்ன? அவர்கள் இஷ்டம். இதில் எனக்கென்ன பிரச்னை?” என்று  வாஷ் பேஸின் குழாய் நீரை முகத்தில் வடிய, வடிய  ஊற்றவும் மனம் சற்றுத் தணிந்தது. முற்றத்துத் திண்ணையில் குத்துக்கால் வைத்து, முழங்காலில் முகம் புதைத்து உட்கார்ந்தவளுக்கு எங்கேயாவது போய் விட வேண்டும் போலிருந்தது. அப்பாவின் அலுவலகமும்  அடுத்த ஊரில் இருந்தது. அங்கேயே அறை எடுத்துத் தங்கியிருந்தார். வாரக் கடைசியில் தான் வீட்டுக்கு வருவார். இந்த வீட்டை விட்டு எங்கேயாவது போய் விட வேண்டும். எங்கேயாவது… எவ்வளவு  விடுபடுதலைத் தருகிற, இனிமையாக மனதைப் பறிக்கிற சொல். நெடுங்காலமாக மனதாழத்தில் குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது. 

எங்கேயாவது.. எங்கேயாவது.. எங்கேயாவது.. மனிதப் பாதங்களே படாத தடங்களேயற்ற இடம்.. பாதைகளோ, திசைகளோ, இலக்குகளோ அற்ற எங்கேயோ இருக்கிற இடம் அது. 

என்னை முந்திக் கொண்டு என் பொன்னிறத் துப்பட்டா பறந்து போய்க் கொண்டிருக்க மலர்களும் பறவைகளும் மரங்களும் நட்சத்திரங்கள் திக்குகள் சிதறச் சிறகடிக்கும். 

இந்த அம்மா இல்லாத இடம் .அப்பாவும் அங்கில்லை. எப்போதுமே “என்னம்மா, எப்படிஇருக்க,நல்லாச் சாப்பிடும்மா” எனும் மூன்றே வாக்கியங்களையே எப்போதும் பேசுகிற, நெற்றியில் விழும் ஒற்றை முடிக் கற்றையை நுனி விரல் பட்டு விடாத கவனத்தோடு ஒதுக்கி விடும் அப்பா.. ‘அப்பா’ என்று உச்சரிக்கும் போதே உடலில் பரவும் சிலிர்ப்பு..

ஆனால்.. 

வேண்டாம், அவரும்  வேண்டாம். நான்..  நான் மட்டுமே.. நானே எல்லாமுமான நான். மிருதுவாகப் பாதம் பட இருந்தும் செம்மண் வெளியும், அதிசயமான மணல் நிற ஆகாயமும், தன் போக்கில் தலையசைத்தும், தவம் காத்தும் நிற்கும் மரங்களும் மலைகளும் நீண்ட இசைக் குறிப்பாய் ஓடும் நதியும் எல்லாம் நான், நானே தான். 

அந்தத் தெரியாத இடம் என்னை அமைதிப்படுத்தும். ஆனந்தமாக்கும். கடும் நீலச் சுவர்களும், தடதடக்கும் மின் விசிறியும் அவளைக் கலைத்தன.

“அம்மா” எப்படியும் கண்களைத் ததும்ப வைக்கும் வார்த்தை. அந்த மரம்.. மலர்களோ, இலைகளோ, கிளைகளோ அற்ற மரம்… அடியில் உட்கார்ந்திருக்கும் அம்மாவின் மீது கருப்பு வரிகளை வரையும் மரம். அம்மாவின் மடியில் சாய்ந்திருக்கும் அவன். முகம் அவள் மார்பை நோக்கித் திரும்பி இருக்கிறது. கைகள் இடுப்பை இறுக அணைத்துக் கொண்டிருக்கின்றன.. அவள் தலையை உலுக்கித் தன் எண்ணங்களைக் கலைத்தாள். இவை எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டால் போதும். 

அப்பாவிடமும் மோனா எதையும் சொல்லவில்லை .சொல்ல முடியுமா என்ன?.அம்மாவிற்கும், அவளுக்கும் இடையே ஒரு நிசப்தச் சுவர் முளைத்தது. ஏன் என்று அம்மாவுக்குப் புரியவில்லை.

துணிகளை மடித்தவாறே அம்மா,

“தினேஷ்க்கு உன்னய ரொம்ப ப் பிடிச்சிருக்கு, ரொம்ப நல்ல பொண்ணுனு சொல்றான்” என்ற போது சங்கடமாக உணர்ந்து பதிலேதும் சொல்லவில்லை.

“தினேஷ்  எதேதோ படிச்சிருக்கான் .இப்பக் கூட கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ் ஏதோ படிக்கிறான். வீடு முழுக்க பளிங்கும்,கிரானைட்டும் தான். எல்லாம் ஏ.சி. ஆனா ஒரு கர்வம் இல்ல அவனிடம்” என்றெல்லாம் சொன்ன போது எதுவோ தன் மேல் மோத வருவதாக உணர்ந்தாள். இவ்வளவு பெரிதாக வருமென்று எண்ணவில்லை.

“தினேஷ் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிறேன்கிறான்.. நல்ல படிப்பு. வசதி. அப்பாவின் கடன்களும் அடைப்பட்டு விடும்”.  அம்மாவின் கண்கள் தாழ்ந்திருந்தன. “அப்பாவிடமும்  சொல்லி விட்டேன்…” அம்மாவை முறைத்தாள்.

முதன் முறையாக அப்பாவைத் தேடி அவர் அறைக்குப் போனாள். அறையல்ல, சிறிய வீடு. அப்பா அவளைப் பார்த்து அதிர்ந்தார்.
“ஏம்மா, போன் பண்ணினா நானே வந்திருப்பேனே”

“அப்பா” அழுகையினூடே உடைந்த சொற்களால் தினேஷையும், அம்மாவையும் பற்றிச் சொன்னாள். குற்றச்சாட்டாக அல்ல, தற்காப்பாகத் தான். அப்பா நொறுங்குவதைப் பார்க்கத் தாங்க முடியவில்லை.

பிறகு தான் அப்பா அவளை மேற் படிப்புக்காக டெல்லி அனுப்பினார். அங்கிருந்து டேராடூன். அப்புறம் இந்த நிதி. தப்தரீஸ்வரர் ஆலயம். நிதியின் மனதிற்குள் அவள் நெடுங்காலமாகத் தேடிய அந்த இடம். எங்கேயோ என்று அவளை அலைக்கழித்த அந்த இடம். ஒருக்களித்திருந்தவள் திரும்பி உறங்கும் அவனைப் பார்த்தாள்.
“மற்றதெல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் இன்னமும். 

கண் மூடிப் புன்னகைத்தாள். அவளுக்குள் அந்தக் கரும் பச்சைத் தடாகம் ஆழ்ந்து விரிந்தது. அடுத்த முறை அவனோடு  போகும் போது குளம் நிறைய அந்தக் குவிந்த அல்லி மொட்டுக்கள் “குப்” பென்று அடுக்கடுக்காய் விரிந்து சிரித்துக் கொண்டிருக்கும்.


-நறுமுகை தேவி

“அக்கா,போட்டோ எடுக்கணும்னா 20 ரூபா,ஒரு ரவுண்ட் போயிட்டு வரணும்னா 100 ரூவா..வாங்கக்கா..100 ரூவா தாங்க்கா..ரொம்ப யோசிக்காதீங்க..”

குதிரை மேல்.அமர்ந்தவாறு பேசுக் கொண்டிருந்தவனை ஏறிட்டாள்..
ரொம்ப உயரமுமில்லை..தலை நிறைய பொசுபொசுவென்ற முடி.இடது பக்கமாய் ஒட்ட வெட்டியிருந்தான்.அதனால் தானோ என்னவோ வலதுபக்கம் அதிக முடியிருந்தது போல் தோன்றியது.
முன்னால் தொங்கிக் கொண்டிருந்த முடிக் கற்றைக்கு செம்பட்டைக் கலரிங் செய்திருந்தான்.
எப்படியாவது நைச்சியமாகப் பேசி என்னைக் குதிரைச் சவாரிக்கு ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காய் சிரித்தபடிக்கு நின்றான்.சிரிக்கும் போது தெரிந்த பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தன.

நான் திரும்பி என் தோழியைப் பார்த்தேன்.”போயிட்டு வா “என்றாள்.

“வேணாம்..போட்டோ மட்டும் எடுத்துக்கலாம்”

“இல்ல ..போயிட்டு வா..ஒரு எக்ஸ்பீரின்ஸ் கிடைக்கும்”
பழைய படகு ஒன்றின் விளிம்பில் நான் ஏறி நின்று அதன் பக்கத்தில் நின்ற குதிரையின் மீது ஏற முயற்சி செய்தேன்.என்னுடைய குறைந்த உயரம் தொந்தரவு செய்தது. குதிரையின் முன் வயிற்றின் அருகே தொங்கிக் கொண்டிருந்த வளையத்தில் கால் வைத்து ஒரு ஒரு எம்பு எம்பி…ஆஹா.. ஒரு வழியாக குதிரையின் மீது அமர்ந்து விட்டேன்.
குதிரைச் சவாரி தொடங்கியது.

குதிரையில் அமர்ந்தவுடன் உலகின் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது போல ஒரு உணர்வு. தன்னம்பிக்கை அதிகமானது போல ஒரு ஒளிச்சுடரின் கீற்று .
குதிரை நான்கு அடிகள் வைத்தவுடன் எனக்குள் பயம் கவியத் துவங்கியது. என் உடல் மண்ணை நோக்கிச் சரியத் துவங்குவது போல் பிரமை.
குதிரைக்காரனை நோக்கி..ஏய்ய்,தம்பி..எனக்குப் பயமாயிருக்க என்றேன்.அவனோ,மிக அலட்சியமாக ஒண்ணும் பயமில்லக்கா..நல்லா அந்தக் கயிறை இழுத்துப் பிடிச்சுக்கோங்க…காலை வளையத்துக்குள்ள இருந்து எடுக்காதீங்க..நான் தான் கூடவே வரேனில்ல?
என்றான் சற்றே சினேகமாக.
ம்ம்..அவன் எத்தனை ஆயிரம் மனிதர்களைத் தன் குதிரை மீது ஏற்றியிருப்பான்? நடமாடும் சாரதி அவன்.நானே சிரித்துக் கொண்டேன்.கொஞ்ச நேரம் கண்களை இறுக்க மூடிக் கொண்டிருந்தேன். பிறகு,என்ன தோன்றியதோ கண்களை நன்றாக விழித்துப் பார்த்தேன்..கடல் கண்களில் அடித்தது.எவ்வளவு பிரமாண்டம்? எவ்வளவு ரகசியங்கள்?
திடீரென்று கடலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ராஜாக்களும்,ராணிகளும் நினைவில் வந்தார்கள். இப்போது நான் குதிரையின் மீது மிடுக்காக அமர்ந்து கொள்வது போன்ற முகப் பாவனைக்கு மாற்றிக் கொண்டேன்.
ஆனால்,அது கொஞ்ச நேரம் தான். குதிரையின் கழுத்து அகலத்திற்கு கால்களை அகட்டிய வைத்து உட்கார்ந்து வந்ததில் இரண்டு தொடைகளும் வலிக்கத் துவங்கியது.

எப்படித்தான் ராஜா,ராணிகள் குதிரையேற்றம்,யானை ஏற்றம் எல்லாம் செய்தார்களோ ? நான் அவர்கள் குறித்து இப்போது கவலைப்படத் தொடங்கினேன்.சிரிப்புத் தாளவில்லை.
“என்னாச்சுக்கா?”
குரல்..யார் குரல்?
“அக்கா…”
அட! குதிரைக்காரச் சாரதி…
அவனைப் பார்த்தேன்.
“என்னக்கா.. ரொம்பச் சந்தோஷமா? குதிரைல போறது இது தான் பர்ஸ்ட் டைமா?”

” இல்லல்ல..இதுக்கு முன்னாடி கொடைக்கானல்ல ஒரு டைம் போயிருக்கேன்..”
ஓ!
“தம்பி..உனக்கு இதே ஊரா?”
“இல்லக்கா..நான் கேரளாவுல இருந்து சின்ன வயசுலயே இங்க வந்துட்டேன்..”
“எந்த ஊர்?”
“திருவனந்தபுரம்”
“அப்படியா?”
“அக்காவுக்கு எந்த ஊரு?”
“தாத்தா,பாட்டியெல்லாம் கேரளா தான்..ஆனா, அப்பா காலத்திலயே தமிழ்நாட்டுக்கு வந்து செட்டில் ஆயிட்டாங்க..”
“அப்போ சேச்சி மலையாளியானு அல்லே?”
சட்டென்று அக்காவைச் சேச்சியாக்கினான்.
“ம்ம்”
உடனே பேச்சில் ஒட்டிக் கொண்டான்.அவனுக்கு அம்மா,அப்பா இல்லாததையும்,ஒரே ஒரு தங்கச்சியை பெங்களூரு ஹாஸ்டலில் படிக்க வைப்பதாகவும்,அவனுக்கு 29 வயதாகி விட்டது என்பதையும் சொன்னான்.
“இந்தக் குதிரை என்ன விலை வரும்?”
“ஒரு லட்சத்து,இருபதனாயிரம் ரூபா”
“உன்னோட சொந்தக் குதிரையா?”
“அய்யோ! சேச்சி…நா எங்க போறது..அத்தன ரூபாக்கு? இதுக்கு வேற ஓனர் இருக்காரு..நான் சம்பளத்துக்கு வேலை செய்யறேன்..”
“எவ்வளவு சம்பளம்?”
“ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டுனா 400 ரூபா எனக்கு..”
“எவ்வளவுக்கு ஓட்டும்?”
“நல்ல கூட்டம் இருக்கிற அன்னிக்கு 3000 ரூபாய்க்குக் கொறயாம ஓடும்”
“ஓ..அவ்வளவு வருமானம் வருமா? ” கண்களை மலர்த்தியவாறே சொன்னேன்…நீ சொந்தமா ஒண்ணு வாங்கிக்கலாம்ல?

“அய்யோ! சேச்சி அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல..குதிரைக்குக் கரெக்ட்டாத் தீனி போடணும்..சவாரி இல்லாத சமயத்துல கட்டி வெக்க எடம் வேணும்..நானெங்கே போறது?ஆயிரத்தி ஐநூறு ரூபா வாடகைக்கு ஒரு குட்டியூண்டு எடத்துல தங்கியிருக்கேன்..”

-ம்ம்… என்று முணகிக் கொண்ட நான் வேறொன்றும் பேசாமல் கடலையும்,மணல்பரப்பையும் ரசிக்கத் துவங்கி விட்டேன்..அதிகாலை நடை முடிந்தவர்கள் சிலர் திரும்பத் தொடங்கிநர்,சிலர் கடலைப் பார்த்தவாறு கால் நீட்டி உட்கார்ந்து கொண்டனர்.சிலர் கால் நனைத்தவாறு நின்று கொண்டனர்.
கடல் எத்தனை வியப்பானது!எத்தனை உள்ளங்களை நிறைத்து விட்டு அலைகிறது.

” சேச்சி,இங்க கெடைக்காதது எதுவும் இல்ல..ஜாலியாத் தான் போகுது”
நான் கவனத்தை இவனிடம் திருப்பி “எல்லாமேன்னா?” என்றேன்.
தலையைக் கொஞ்சமாய்க் குனிந்த்வாறே எல்லாமே தான் சேச்சி என்றான்.
” தண்ணியடிப்பியோ?”
” அடிப்பேன் சேச்சி…கஞ்சா கூடக் கெடைக்கும்.அதுவும் பழக்கமிருக்கு..”
எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சி..
“கஞ்சா அடிக்கிறது தப்பில்லையா? உடம்புக்கு கெட்டதில்லையா?”
“அப்படியெல்லாம் இல்ல சேச்சி..உடம்புவலியெல்லாம் பறந்திடும்..வேற உலகம் பாக்கலாம்..”
“ஏம்ப்பா..எல்லாக் கெட்ட பழக்கமும் கைல வெச்சிருக்க..பேசாம ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?”
சிரித்தான்.
“என்ன சிரிப்பு?”
“கல்யாணம் பண்ணாமயே தேவையானது கிடைக்குது சேச்சி.
ராத்திரியானா பொண்ணுங்க இங்க வருவாங்க..நமக்கு இஷ்டமான பொண்ணு கூட்டிட்டுப் போலாம்..சரக்கு,கஞ்சா,பணம்னு தேவையானதைக் கேப்பாங்க..அப்படியே இருட்டுல,மணல்லயே சேர்ந்திருப்போம்”
-ஓ!
“என் மேல கோவமா? அமைதியாயிட்டீங்க?
இந்த மாதிரி தான் இங்க இருக்கிற பல பேரோட வாழ்க்கை ஓடீட்டு இருக்கு.தப்பு அல்லது சரிக்கு இங்க வேலையில்லக்கா.காசு கொடுத்தா தேவையானது கெடைக்குது.அவ்வளவு தான்.சொந்தமா எல்லாமே வேணும்ங்கற எண்ணம் என்னை மாதிரி ஊர் மாறுன அகதிக வாழ்க்கைல எதிர்பார்க்க முடியாது.கூடாது..இப்படித் தான் வாழ்க்கை போற பாதைல நாங்க ஓடறோம்.நாங்க ஏதும் பாதை போட்டுட்டு வாழறதில்ல… ஏன்னா…அது நடக்காது” சிரிக்கிறான்.
“தூரத்தில் தோழி கையசைப்பது தெரிந்தது..
திரும்பலாம் என்றேன் இவனிடம்.
குதிரையைத் திருப்பினான்.
” ஆனா ஒரு ஆசையிருக்கு சேச்சி..கல்யாணம் பண்ணி,ஒரு குழந்தையைப் பெத்துக்கணும்.ஒரு பாலியல் தொழில் செய்யற பொண்ணாப் பார்த்துக் கட்டிக்கிடணும்.ஒரு நாளும் அவ செஞ்ச தொழிலைப் பத்தி அவளிடம் கேட்டுக் கஷ்டப்படுத்த மாட்டேன்.ஒரே ஒரு கண்டிஷன் தான்.கல்யாணத்துக்கு அப்புறம் அவ அந்தத் தொழிலை விட்டுடணும்.”
நான் அவனை வியப்போடு பார்த்தேன்.ஆரம்பத்தில் உயரம் குறைவாகத் தெரிந்தவன் இப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்பது தெரிந்தது.