க்ளாசிக் ரீடிங் – தொடர் – கணேசகுமாரன்

நகர்வு

மானசரோவர் – அசோகமித்திரன்

சினிமாவில் உலவும் இரண்டு கதாபாத்திரங்களின் வழியே சொல்லத்தொடங்கும் கதை சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்வில் நிகழும் அதிர்வுகளாய் நீள்கிறது. சத்யன் என்னும் இந்தி சினிமா ஹீரோவுக்கும் கோபால் என்னும் தமிழ் சினிமா ஸ்க்ரிப்ட் ரைட்டருக்கும் உண்டாகும் நட்புக்கும் மேலான காதல் போன்றொரு உன்னத உணர்வு குறித்த நாவல்.

மனித மன அவசங்களை அலசிப்போடும் கதை ஏதோ சஸ்பென்ஸ் திரில்லர் போல் அத்தியாயத்துக்கு அத்தியாயம் பரபரப்புடன் நகரத் தொடங்குகிறது. கோபால் உருவம் குறித்த வசீகர வர்ணனைக்குப் பின் வாசகனும் மானசீகமாய் கோபாலை நேசிக்கத் தொடங்குகிறான். ஆனால் கோபாலின் மனைவிக்கும் மகனுக்கும் நிகழும் கொடூரங்களைக் காணும்போதெல்லாம் மனம் பதைத்து பக்கங்களைப் புரட்ட வேண்டியிருக்கிறது.

நான்கு நான்கு அத்தியாயங்களாய் நகரும் கோபால் சத்யன் கதையில் கோபாலின் துன்பங்களின் போதெல்லாம் சத்யன் எங்கே போனான் என்றும் சத்யனுக்கு நடக்கும் நிகழ்வுகளின் போது கோபால் என்ன செய்துகொண்டிருப்பான் என்றும் வாசகனை சிந்திக்க வைத்த அசோகமித்திரனின் மாயஜால எழுத்துக்கு மகத்தான வணக்கம் வைக்கத் தோன்றுகிறது. இப்படி மனிதர்களை விட்டேத்தியாய் வாழ்வு விரட்டியடிக்கவும் காரணம் இல்லாமல் போகுமா என்ற எண்ணம் தோன்ற விடாமலே நாவலின் கடைசிக்கு கொண்டு சென்றதும் அசோகமித்திரனின் எழுத்தின் வித்தைதான். நாவலின் அதிர்ச்சி முடிவை வாசகன் மனதில் ஏற்றி சமாதானம் ஆவதற்குள் மானசரோவர் புனிதத்தில் வாசகனை மூழ்கடிக்கிறார்.

நாவல் போகிற போக்கில் ஒரு பக்கத்தின் ஒரு பத்தியில் வந்துபோகும் ஒரு கதாபாத்திரத்துக்கும் எவ்வளவு டீடெயில் …. கெட்டிக்காரத்தனமான ஒரு பார்ஸி பையன் ஒழுங்காக இன்னொரு பார்ஸி பெண்ணை மணந்துகொண்டு குடும்ப வியாபாரமாகிய மூக்குக் கண்ணாடிக் கடையையும் மாதுங்காவில் வாடகைக்கு விடப்பட்டிருந்த மூன்று வீடுகளையும் கவனிக்காமல் வாயடைத்துப்போன சாமியார் ஒருவர் பின்னால் சுற்ரிக்கொண்டிருக்கிறானே… அந்த பார்சி பையனுக்கு அதற்குப் பிறகு அந்நாவலில் வேலை இல்லை என்றாலும் வாசகன் மனதில் பெவிகால் தடவி ஒட்டிக்கொள்ள வைக்கும் எழுத்துக்கு சல்யூட்.

ஒவ்வொரு துணை கதாபாத்திரத்துக்கான தனி கதையே தனி நாவல்தான். ஆனால் அசோகமித்திரனுக்கு எந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு தூரம் வாசகனுக்கு காட்ட வேண்டும் என்ற அளவு தெரிந்திருக்கிறது. பகுத்தறிவின் பரிமாண நவீனத்துவம் என்றெல்லாம் பெரிய வார்த்தைகளில் நாவலுக்குள் செல்ல வாசகனைத் தயார்படுத்தி இருந்தாலும் அசோகமித்திரன் அந்தச் சிரமத்தை வாசகனுக்குத் தரவில்லை. மனித மன பலவீனங்களை அசலாய் இப்படி ஒரு எழுத்தில் தந்து வாழ்வு குறித்தும் மனிதர்கள் குறித்தும் வாசகனை சிந்திக்கவைக்க அசோகமித்திரன் என்னும் கதையாளரால் மட்டுமே முடியும்.

சித்தர் கதாபாத்திரம் வழியாக கோபாலுக்கு நடப்பது எல்லாம் ஆன்மீக வாழ்வின் தத்துவத்தை தொட்டுச் செல்லும் அத்தியாயங்கள். வலிகண்டு நொந்துபோன மனதுக்கு எப்படியாவது நல்லது நடந்தால் போதும் என்று பிரார்த்திக்க ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி யாராவது வரத்தானே செய்வார்கள்.

மனம் கொஞ்சமாவது சுத்தமாக அனைவரும் மானசரோவர் சென்று மூழ்கலாம் என்று தோன்றுகிறது நாவல் முடித்த பின்பு.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page