புத்தகம் புதுசு- செரப்பணிகெ- சுபானந்த்

நகர்வு

படுகர் இன வாழ்க்கைப் பின்னணியில் ஒரு நாவல்.

இது இவரது முதல் நாவல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமின்றி தேர்ந்த எழுத்தின் லாவகத்தோடு கதை நகர்கிறது. எளிய அழகான காதல்கதை. கதை நிகழும் காலகட்டம் வரையறுக்கப்படவில்லை எனினும் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கொள்ளலாம்.
மலைக்கிராமங்களான அட்டிகள், அதை ஒட்டிய காடுகள் ஆகியவை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
புலி எப்படி நடக்கும் என்பதும் கிழப்புலியின் வேட்டை உத்திகள்வரை போகிறபோக்கில் நுட்பமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவலில் எனக்கு மிகவும் சுவாரசியமானது கதையின் நாயகி ருக்கியின் எருமை மந்தை. கதை நெடுகிலும் இவை மேய்ந்து செல்கின்றன. அதிலிருக்கும் வளர்ப்பு எருமைக்கும்,
காட்டெருமைக்குமான காதல் நயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இவர்களுக்குப் பிறந்த கன்று நாயகியின் செல்லம். இந்த எருமைக்கதையின் முடிவு உருக்கமானது.

நாவலின் நாயகன் காளாவின் பின்புலம் மிக முக்கியமானது. வெள்ளையர்கள் விவசாய நிலங்களில் தேயிலையை நடுமாறு நிர்பந்திக்கிறார்கள். ஒவ்வொரு கிராமமாக சுயத்தை இழந்து தேயிலைக்குப் பலியாகிறது. காளா தன்னையொத்தவர்களைக்கூட்டிக்கொண்டு இதனை எதிர்க்கிறான். அதில் சிலரை வெள்ளையர்கள் கொன்றுவிட்டு புலி அடித்துவிட்டதாக கதை கட்டுகிறார்கள். மலையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு புலி அடித்த சாவு எப்படியிருக்குமென்று நன்கு தெரியும்‌. கொலையென்று தெரிந்தபிறகும் அவர்களால் எதுவும் செய்ய முடிவதில்லை. வெள்ளையர்கள் குறி வைத்திருப்பது காளாவுக்கு. கதையில் வெறும் பின்புலமாக வந்து செல்லும் தேயிலைக்கு எதிரான போராட்டத்தை முன்களத்தில் நிறுத்தி சொல்லப்பட்டிருந்தால், இந்நாவல் நல்ல வரலாற்று ஆவணமாகவும் ஆகியிருக்கும்.

‘‘நம்ம பயிர் சாகுபடில ஒரு அறுப்புக்குப் பிறகு இடைவெளி விட்டுத்தான் அடுத்த சாகுபடி பண்றோம். அந்த நேரத்தில்தான் பூமி மூச்சுவிடும்… தேயிலையை சாகுபடி பண்ணினா பூமி எப்படி மூச்சுவிடும்..’ என்னும் மலைக்கிராம விவசாயக் குரல் அந்த மண்ணுக்கும் மனிதருக்குமுள்ள பிணைப்பைச் சொல்லும்.

செரப்பணிகெ என்பது வெள்ளியாலான கழுத்து அணிகலன்

  • கவிதா பாரதி

நூல்: செரப்பணிகெ
ஆசிரியர்: சுபானந்த்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை ரூ. 260

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page