வாசிப்பு வரவு – மணல்வீடு ஆகஸ்ட் 2023 இதழ்

நகர்வு

எத்தனை இடர்கள் வந்தபாடிலும் முன்னிலும் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருக்கும் சிற்றிதழ்களில் ஒன்று மணல்வீடு. ஆகஸ்ட் 2023 இதழும் அதே தீவிரத்தன்மையான படைப்புகளுடன் வெளிவந்திருக்கிறது. மொழிபெயர்ப்பு சிறப்பிதழோ என எண்ணும்படி மலையாளத்திலிருந்து சிறுகதை, பஞ்சாபி மூலச் சிறுகதை, மார்க்வெஸ் சிறுகதை என இதழ் முழுவதும் மொழிபெயர்ப்பு வாசனை. அதேபோல் இரண்டு கட்டுரைகளிலும். அதிலும் பெருமாள் முருகனின் கட்டுரை மட்டுமே இயல்பான மொழியில் உள்ளது. இதனைத் தவிர்த்து கவிதைகளில் பெரு. விஷ்ணுகுமார், சுப. முத்துகுமார், ஞா. தியாகராஜன் போன்றோரின் கவிதைகள் சிறப்பு. மீரான் மைதீனின் காதரும் ஸ்கலிதமும் சிறுகதை சிரிப்பு மூட்டி ரசிக்க வைக்கிறது என்றால் அழகிய பெரியவனின் படிகப்பாடல் சிறுகதை உணர்வுபூர்வமாய் கலங்கடிக்கிறது. பெருமாள் முருகனின் கட்டுரையில் வழக்கமான அவரின் சொல்வீச்சு. அட்டை மற்றும் உள் வடிவமைப்பிலும் இடம்பெற்றிருக்கும் எழுத்துகளிலும் இன்னும் இன்னும் சிற்றிதழுக்கான நம்பிக்கையைத் தருகிறது மணல்வீடு.

இதழ் : மணல்வீடு ஆகஸ்ட் 2023 இதழ்
விலை : 150 ரூபாய்
தொடர்புக்கு : 98946 05371

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page