சென்னை: கிரிக்கட் நட்சத்திரம் எம்.எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது பலரும் அறிந்ததுதான்.
அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ‘தோனி என்டெர்டெயின்மென்ட்’ தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ அதாவது ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ளது.
இதன் இசை – ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் அண்மையில் நடந்தது.
இதில் பங்கேற்றுப் பேசிய தோனி, “எல்ஜிஎம் படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. என் மகளுடன் படத்தைப் பார்த்தேன். என்னிடம் சில சந்தேகங்களை அவள் கேட்டாள். அவளுக்குப் படம் பிடித்திருக்கிறது. இது ஜாலியான படம்தான். அனைவரும் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
என் தயாரிப்பு அணியால் எனக்கு பலமும் பெருமையும் வருகிறது. படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று என் மனைவி சொன்னபோது, நான் சொன்னது ஒன்றுதான்.
நீ நினைப்பதுபோல் படத் தயாரிப்பு என்பது வீட்டுச் சுவருக்கு வெள்ளையடிக்கின்ற விசயம் இல்லை. முதலில் ஒரு வண்ணம் தீட்டுவாய். அது நன்றாக இல்லை என்று பிறகு வேறு கலர் அடிப்பாய். பிறகுதான் முதல் கலரே நன்றாக இருந்தது என்று தோன்றும். மறுபடியும் முதல் வண்ணத்தையே அந்தச் சுவருக்குத் தீட்டுவாய்.
ஆனால், சினிமா தயாரிப்பில் அப்படி முடியாது. இதுதான் என்று முடிவு செய்துவிட்டால், பின்பு எதைப் பற்றியும் சிந்திக்காதே. எது பற்றியும் கவலைப்படாதே என்றேன். குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை படக்குழு உருவாக்கி முடித்திருப்பதற்கு அதுவும் காரணம்.
நடிகர்களுக்கான அல்லது படக்குழுவினருக்கான, யாருக்கான உணவாக இருந்தாலும் அது உயர்ந்த தரமான உணவாக இருக்க வேண்டும் என்ற ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கும்படி கூறினேன். கிரிக்கெட் விளையாடும்போதும் நாங்கள் எதிர்பார்ப்பது தரமான உணவு மட்டும்தான்.
இப்படத்தின் கதையை சாக்ஷி என்னிடம் கூறினார். தமிழில் அதைத் தயாரிக்க முடிவு செய்தோம். அதற்குப் பல காரணங்கள் உண்டு.
என் முதல் டெஸ்ட் கிரிக்கெட் சென்னையில்தான் நடந்தது. நான் அதிக ரன்கள் அடித்ததும் சென்னையில்தான். நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சியடையும் பல சம்பவங்கள் சென்னையில் நடந்துள்ளது. தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்பும் பாசமும் நம்ப முடியாதது. என்னைத் தமிழ்நாடு தத்தெடுத்துள்ளது. நான் போகிற இடங்களிலெல்லாம் சிஎஸ்கேயின் அன்பு தொடர்கிறது. இவைதான் இப்படத்தைத் தமிழில் தயாரிக்க காரணம்!” – என்றார் தோனி.
சாக்ஷி தோனி பேசுகையில், “என் நண்பர்கள் பலரின் வாழ்வில் இப்படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையாகவே நடந்திருக்கின்றன. இதைத் தமிழில் எடுப்பதற்குக் காரணம் என் கணவர் தோனிதான். ஏனென்றால், படத் தயாரிப்பில் இறங்கும் போது ஒரு பெரிய ஒத்துழைப்பு வேண்டும். அதற்கு சென்னை சரியான இடமாக இருக்கும் என்று தோன்றியது!” என்றார்.
தோனியின் ‘எல்ஜிஎம்’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. நாமும் ஒரு நல்ல சினிமாவை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருப்போம்!
– சோழ. நாகராஜன்