மாமன்னன் – திரைப் பார்வை.

நகர்வு

Maamannan-1

———————-

அரசியல் பின்னணி கொண்ட படங்கள் பல வந்துள்ளன. அவற்றில் பதவி மோகத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் நபர்கள் அவர்களுடைய துரோகங்கள் மோசடிகள் என்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆனால் பதவியைவிட ஆதிக்க சாதி அடாவடிகளால் கிடைத்த அதிகார அடையாளம்தான் முக்கியம் என்று பதவியை உதறிவிட்டு கட்சி மாறுகிற ஒருவனை இந்தப் படத்தில்தான் காண்கிறோம்.

ஆளுங்கட்சியின் தலைவரான முதலமைச்சர், கட்சியின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் கட்சியில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பற்றி நொந்து கொள்கிறார்.

அவருடைய மேசையில் இருக்கும் பெரியார் சிலை சமூக நீதியை நிலைநாட்டுவதை நோக்கி இன்னும் எவ்வளவு நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது அந்தப் பாதை எவ்வளவு கடினமானது என்பதை அமைதியாய்ச் சொல்கிறது.

இறுதியில் ஒலிக்கிற அம்பேத்கர் குரல், அந்தப் பாதையில் சென்றாக வேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது.

கண் முன்னால் பெரும் பாறையாக இருக்கிற சமுதாய நிலவரத்தைக் காண மறுத்து, “ஏன் திரும்பத் திரும்ப சாதிப் பிரச்சனையையே பேசுகிறீர்கள்?” – என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள்.

அப்படிக் கேட்கிற ஒருவர் இந்தப் படத்தில் தொலைக்காட்சி விவாதத்தில் இடம் பெறுகிறவராகவும் வருகிறார். மொத்தப் படமும் அவர்களுக்கு பதில் சொல்கிறது.

ஊர்க் கிணற்றில் குதித்து நீந்தி விளையாடுகிற ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் கல்லெறிந்து கொல்கிறார்கள்.

அந்தக் கொலையிலிருந்து, கடைசியில் அதிவீரனின் பண்ணையில் இருக்கும் பன்றிகள் வேட்டை நாய்களால் கொல்லப்படுவது வரையில் வெறித்தனம் ஆடுவது சாதியே அல்லவா?

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ குற்றப் பதிவுகளில் தலித் / பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்களே அதிகம்.

பிள்ளைப் பருவத்திலிருந்தே பாலோடு கலந்து ஊட்டப்படுவதாயிற்றே சாதி ஆணவம்!

வைகைப் புயலின் சிறு உதட்டசைவிலும் வாய்விட்டு சிரித்து பழகிய நமக்கு, சமூக அடிப்படையிலான அவமானத்தையும் ஆவேசத்தையும் மனதுக்குள் புதைத்து வைத்திருக்கிற இறுக்கத்துடன் அவருடைய முகத்தைப் பார்ப்பது புதிய அனுபவம்.

அசலான ஆணவ ரத்தினவேலுவை அடையாளப்படுத்துகிறார் ஃபகத் ஃபாசில்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், ஏ.ஆர். ரஹ்மான் இசையும் முக்கியமான சக கதாபாத்திரங்களாகவே வருகின்றன என்று தாராளமாகச் சொல்லலாம்.

“மலையெல்லாம் தீப்பிடிக்குது ராசா என் மனசுக்குள்ளே வெடி வெடிக்குது” – என்ற பாடல் வெளிவந்தபோது “நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்கள்” என்று பதிவு செய்திருந்தேன். மிக அதிகமாக எதிர்பார்த்துவிட்டேன் போலும், படத்தைப் பார்க்கிறபோது, குறிப்பாக பிற்பாதியில், கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படவே செய்தது.

சினிமாவாக ஒரு முழுமையான மனநிறைவு ஏற்படவில்லை.

ஒருவேளை, ஏற்கெனவே பார்த்து வந்துள்ள படங்கள் நம்மை எப்படிப் பழக்கியிருக்கின்றன என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

“நம்ம கொடி பறக்கிற காலம் வந்தாச்சு” என்று பாடி ஆடியபடி புரட்சிகர சிந்தனை உள்ள பெண் லீலாவாக அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ் பின்னர் அதிவீரனுக்கு உதவி செய்யும் ஒரு துணைக் கதாபாத்திரமாக மாற்றப்பட்டுவிடுகிறார்.

அதிவீரனுக்குத் துணையாக வர இலவசப் பாடசாலையைச் சேர்ந்த இளைஞர்கள் முன் வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு தனி ஆளாகவே வன்முறையாளர்களை எதிர்த்து நிற்கிறான் அவன்.

நாயக சாகசத்துக்கு அது உதவலாம், ஆனால் அநீதிகளை எதிர்ப்பதற்குத் தேவையான கூட்டுச் செயல்பாட்டை வளர்க்க இது உதவுமா?

எம்எல்ஏ வீட்டில் அவரும் மனைவியும் மகனையும் தவிர வேறு யாருமில்லை. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளில்கூட வீட்டில் மனைவி மட்டுமே இருக்கிறார். சொந்தக் கட்சிக்காரர்களோ, சொந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களோ ஒரு சிலராவது உடன் இருக்க மாட்டார்களா?

ஆனால், எதார்த்தத்தை மீறிய இந்தச் சித்தரிப்புகள் தருகிற ஏமாற்றங்களைப் பின்னுக்குத் தள்ளி நிறைய யோசிக்க வைக்கின்றன எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள கதைக் கருவும் காட்சிகளும்.

இதுவே கடைசிப்படமாக இருக்கக்கூடும் என்ற நிலையிலும், கதையின் மையப் பாத்திரம் தான் அல்ல என்று தெரிந்தும் இதில் நடிக்க முன்வந்த உதயநிதி ஸ்டாலினின் தேர்வு முக்கியமானது.

அரசியலாகப் படம் தனது கட்சியையும்கூட விமர்சிக்கிறது என்று தெளிவாகப் புரிந்த நிலையிலும் இதை அவரே தயாரித்திருப்பதில், கட்சிக்காரர்கள் உட்பட, அரசியல் களத்தில் செயல்படுகிற அனைவருக்குமே ஒரு செய்தி இருக்கிறது எனலாம்.

இலவசக் கல்விக்கூடத்தை அடித்து நொறுக்குகிறார்கள் வேலுவின் அண்ணன் ஆட்கள். அதற்குக் காரணம், அவர் நடத்துகிற கோச்சிங் சென்டர் வருமானத்தில் வெட்டு விழுந்ததுதான். கல்வி வணிக வேட்கையுடன் சாதித் திமிரும் கலந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றன இக்காட்சிகள்.

தன்னைச் சந்திக்க வருகிறவர்களிடம் “உட்கார்ந்து பேசணும்” என்று தனித்தொகுதி எம்எல்ஏ சொல்வதில் கதைக்கான ஓர் உயிர் முடிச்சு இருக்கிறது.

கடைசியில் அவர் உட்கார்கிற இருக்கையையைக் காண்கிறபோது, “ஏ மன்னா, மாமன்னா” என்று மனம் வாழ்த்துகிறது.

“பசித்த மீனைத் தின்றவனின் வயிற்றில் அலையடிக்கிற கடல்” போல, மாரி செல்வராஜின் கதையும் எழுத்தும் காட்சியமைப்புகளும் குறியீட்டு நயங்கள் மிகுந்து படத்தை ஓர் உயரத்தில் வைக்கின்றன.

கதை எப்படி இருக்கிறது, நடிப்பு எப்படி இருக்கிறது, தொழில்நுட்பம் எப்படி இருக்கிறது என்ற வழக்கமான விமர்சனங்களைக் கடந்து, தமிழகத்தில், இந்தியாவில் பிடிவாதமாக ஊன்றிப் போயிருக்கிற சாதியம், ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இன்னமும் நிகழ வேண்டிய அசைவுகள் பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கப்படுகிறது.

அது இந்தப் படத்தின் வெற்றி.

இத்தகைய படைப்புகள் சமூகத்தில் நிகழ வேண்டும் என்று விரும்புகிற உரையாடல் அல்லவா அது?

* குமரேசன் அசாக்

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page