ஹிக்கின்ஸ் பாகவதர்: தென்னிந்தியச் செவ்விசையை நேசித்த வெள்ளை அமெரிக்கக் கலைஞன்!

நகர்வு

Higgins Bagavathar 1

ஜான் பி. ஹிக்கின்ஸ் ஒரு மிகச்சிறந்த இசைவாணர்.

1939 செப்டம்பர் 18 அன்று அமெரிக்காவின் மச்சாசுசெட்டில் ஆண்டோவர் எனுமிடத்தில் பிறந்த ஹிக்கின்ஸின் தந்தை ஆங்கில ஆசிரியராகவும், தாய் இசை ஆசிரியராகவும் இருந்தார்கள்.

ஹிக்கின்ஸ் வரலாறும், இசையும் பயின்றார்.

இசையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்ட ஹிக்கின்ஸ் வெஸ்லியான் பல்கலைக் கழகத்தின் இசைப் பேராசிரியராகவும், அங்கிருந்த கலை நடுவத்தின் இயக்குநராகவும் பொறுப்பேற்றார்.

டொராண்டோவின் யார்க் பல்கலைக் கழகத்தில் இந்திய இசை குறித்த படிப்பு இருப்பதை அறிந்தார் ஹிக்கின்ஸ்.

அங்கிருந்த திருச்சி சங்கரன் என்பவரோடு அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.

சிறந்த மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய செவ்விசைப் பாடகரான ஹிக்கின்ஸ் இந்திய இசையின் மீது தீராத தாகம் கொண்டார்.

அதிலும் குறிப்பாக, தென்னிந்திய இசை மரபான கர்நாடக சங்கீதம் அவரை வெகுவாகக் கவர்ந்தது.

வெஸ்லியானில் தி. ரங்கநாதன், ராபர்ட் இ. பிரவ்ன் போன்றோரைக்கொண்டு இந்திய இசைக்கான படிப்பினைத் தொடங்கினார் ஹிக்கின்ஸ்.

கர்நாடக இசையின் அழகிய நுட்பங்களால் கவரப்பட்ட ஹிக்கின்ஸ் அதன்பொருட்டு தன் வாழ்நாளையே அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

இந்தியாவுக்குப் பயணம் செய்து, வெஸ்லியானில் அவருக்கு அறிமுகமான ரங்கநாதனின் சகோதரர் தி.விஸ்வநாதனிடம் இசை பயிலத் தொடங்கினார்.

தீவிரமான ஈடுபாட்டுடன், மொழிச்சிக்கல்களையெல்லாம் கடந்து விரைவிலேயே திருவையாறு தியாகராசர் ஆராதனை விழாவில் பங்கேற்றுப் பாடும் வாய்ப்பினைப் பெற்றார் ஹிக்கின்ஸ்.

தி.ரங்கநாதனின் சகோதரியும், மிகச்சிறந்த பாரதநாட்டியக் கலைஞருமான பாலசரஸ்வதியிடம் தொடர்ந்து பயின்ற ஹிக்கின்ஸ் பரதக் கலையில் இசைக்கூறுகள் பற்றிய விளக்கவுரையினை எழுதினார்.

தொடர்ந்து கச்சேரிகள், இசைக்கோப்பு ஒலிப்பதிவுகள் என்று கர்நாடக இசையையே தன மூச்செனக்கொண்டு இயங்கிய அவரை “ஹிக்கின்ஸ் பாகவதர்” என்றே இசையுலக ரசிகர்கள் விளிக்கத் தொடங்கினர்.

மிகப்பிரபலமான தியாகராசர் கிருதியான “எந்தரோ மகானுபாவலு… அந்தரிக்கி வந்தனமு!” பாடலை ஹிக்கின்ஸ் மிகத்திறம்படப் பாடுவதாக இசை வல்லுனர்கள் பாராட்டினர்.

தெலுங்கு மொழியை அறிந்தவர்களால்கூட பாடுவதற்குச் சிரமம் தரும் நுட்பமான இப்பாடலை ஒரு வெள்ளை அமெரிக்கர் மிக அனாயசமாகப் பாடுவதுகண்டு இசை ரசிகர்கள் வியந்துபோயினர்.

பின்னாளில் தன்னுடைய மகன் நிக்கொலாஸ் ஹிக்கின்ஸையும் இசைத்துரையிலேயே ஈடுபடுத்தினார் ஜான் பி. ஹிக்கின்ஸ்.

நிக்கொலாஸ் இன அடிப்படையிலான இசைவல்லுனராகவும், கர்நாடக இசை மாணவராகவும் தன் இசைப் பயணத்தைத் தொடங்கினார்.

இசைக்கு மொழியொரு தடையல்ல என்பதையும், இசை என்பது தேசங்கள் கடந்தது என்பதையும் தனது வாழ்வின் செய்திகளாகப் பதிவுசெய்த அற்புதமான இசை அறிஞர் ஹிக்கின்ஸ் பாகவதர் ஆப்பிரிக்காவில் நிலவிவந்த இனவெறிக்கு எதிராக ஒரு மாபெரும் இசை நிகழ்வுக்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்த சமயம் அது.

தன்னுடைய செல்லப் பிராணியான நாயினை அழைத்துக்கொண்டு நடை பயிற்சியிலிருந்த அவரை வேகமாக வந்த ஒரு குடிகார மோட்டார்சைக்கிள்காரன் இடித்துத் தள்ளிவிட்டு ஓடிவிட்டான்.

இது நடந்தது 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 7.

விபத்து நடந்த அந்த இடத்திலேயே இந்தியச் செவ்விசையின் ஈடுபாடுமிக்க அந்தக் கலைஞன் உயிர் பிரிந்தது.

– சோழ. நாகராஜன்

செப்டம்பர் 18: இன்று ஹிக்கின்ஸ் பாகவதர் பிறந்த நாள்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page