ரெண்டு பொண்டாட்டி சினிமாக்கள்-தொடர்-கணேசகுமாரன்

நகர்வு

இரு கோடுகள் – கே. பாலச்சந்தர்

கொஞ்சமல்ல; நிறையவே வயசான இரு தாரங்களின் கதை. நாயகன் ஜெமினி கணேசனும் ஆடி ஓடி ஓய்ந்த நிலையில் ஒப்புக்கொண்ட பத்திரம் போலும். திரைப்படத்தின் மூலக்கதை ஜோசப் ஆனந்தன் என்ற இன்னொருவர் என்பதாலோ என்னவோ திரைக்கதை லாஜிக் பற்றியோ ஓட்டைகள் பற்றியோ கவலைப்படவில்லை கே. பாலச்சந்தர்.

கலெக்டர் ஆபீசில் குமாஸ்தாவாக வேலை பார்க்கும் ஜெமினிகணேசன் நடுத்தர வர்க்க ஆசாபாசங்களுடன் வாழ்பவர். தன் மனைவி ஜெயந்தி மீது உயிராய் இருப்பவர். மூன்று குழந்தைகளுக்குத் தந்தை. புதிதாய் வரும் கலெக்டர் செளகார் ஜானகி மூலம் ஃப்ளாஷ்பேக் விரிகிறது. ஜெமினி குடும்பத்துடன் காசிக்கு டூர் செல்கையில் அங்கே தமிழ் பேசும் செளகாரைக் கண்டதும் காதல் மணிரத்ன பாணியில். ஒரு காபிக்காக உயிரையே கொடுக்கத் துணிகிறார். ஒரு டூயட் கூட பாடாமல் கல்யாணம் செய்துகொள்கிறார்கள். ஹனிமூன் கூட போகாமல் டெல்லிக்குச் செல்கிறார் ஐஏஸ் எழுத. ஜெமினியின் தாயின் சதியால் செளகார் இறந்துவிட்டதாகச் சொல்லி காசியிலே அவரை விட்டுவிட்டு சென்னைக்குச் சென்றுவிடுகிறார்கள். டெல்லியிலிருந்து வந்து தேடும் ஜெமினிக்கும் ஏமாற்றமே. சென்னையில் தாயின் வற்புறுத்தலில் ஜெயந்தியைத் திருமணம் செய்துகொண்டு நன்றாகவே வாழ்கிறார். இந்த ஜோடிக்கும் டூயட் இல்லை.

இறந்துவிட்டதாய் நம்பிய முதல் மனைவியை பல வருடங்களுக்குப் பிறகு நேரில் அதுவும் தனக்கான உயர் அதிகாரியாய் காணும் ஜெமினி கணேசன் இருதலைக் கொள்ளியாய் தவிக்கிறார். பல சந்தேகங்கள், பல ட்ராமாக்களுக்குப் பிறகு நாடகத்தனமாக முடிகிறது. படத்தை முடித்தே ஆகவேண்டும்; இருதார பிரச்சனைக்கு தீர்வாக ஒருவரைக் கொன்றே ஆக வேண்டும் என்ற அவசர முடிவுக்கு இயக்குநர் சிகரமும் பலியாகிறார். கேபியின் பெரும்பாலான பழைய படங்களில் நாடகத்தனம் இருக்கும். இன்னொருவர் கதையானாலும் இப்படத்தின் நாடகத்தன்மையை திரைக்கதையில் மாற்றியிருக்கலாம் கே. பாலச்சந்தர். அந்தக் கால ஆடியன்ஸுக்கு இதுபோதும் என்பது போலவே பல நாடகத்தனமான லாஜிக் இல்லா காட்சிகளும் க்ளைமாக்ஸும். இரு தாரங்களும் பெரிய அளவில் பிரச்சனை தராமலே ஜெமினி கணேசனை மண்டை காய விட்டிருப்பது நல்ல உத்தி.

கோவிலில் நடக்கும் பிறந்தநாள் அர்ச்சனை, ஆபீசில் காணாமல்போன ஃபைல் விசாரணையில் குறுக்கிடும் தொலைந்த லைஃப், ஏப்ரல் பூல் மூலம் உண்மை தெரியவருவது போன்ற இடங்களில் பாலசந்தர் டச். கெளரவ கதாபாத்திரத்தில் மறைந்த முதல்வரின் குரல் நடிக்கும் காட்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். மற்றபடி குளறுபடிகள் நிறைய. வி. எஸ். ராகவனையெல்லாம் கொடூர வில்லனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நெகடிவ் கேரக்டர் நாகேஷுக்கு எதற்கு படத்தில் இரண்டு பாடல்கள். அந்தப் பாடல்களும் சுமார். வி. குமார் இசையில் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் பாடல் ஓகே.

க்ளைமாக்ஸில் கொஞ்சம் ஆக்சன் சேர்க்கும் முயற்சியில் ஆந்திரா, அரிசி கடத்தல் என்று குண்டு போடுகிறார். எல்லாமே செயற்கையாகத்தான் முடிகிறது. சொல்லப்போனால் இரு கோடுகள் தத்துவமே மெயின் கதைக்கு உபயோகப்படாமல் வெவ்வேறு காட்சிகளுக்குத்தான் ஒத்து வருகிறது. ஒருவேளை இதைவிட மோசமான படம் பார்த்தபின் அதற்கு இது தேவலாம் என நினைக்கும் ஆடியன்சுக்கு சொல்லப்பட்ட தலைப்பாக வேன்டுமானால் எண்ணிக்கொள்ளலாம்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page