ரெண்டு பொண்டாட்டி சினிமாக்கள்-தொடர்-கணேசகுமாரன்

நகர்வு

எங்கேயோ கேட்ட குரல் – எஸ். பி. முத்துராமன்

முரட்டுக்காளை போன்ற கடும் மசாலா படத்தை #ரஜினிகாந்துக்குத் தந்த எஸ்.பி. முத்துராமன்தான் #நல்லவனுக்கு நல்லவன், #எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களில் வித்தியாசமான நடிப்பை வழங்கிய #ரஜினியையும் காட்டினார். ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் எங்கேயோ கேட்ட குரல் #ரஜினி படமே இல்லை. #அம்பிகா படம்.

பொன்னி என்னும் திரிசங்கு நரக நிலைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் கதாபாத்திரத்தின் ஆசையும் நிராசையும் துரோகமும் தண்டனையும்தான் படம். இதில் #ரஜினிகாந்த் ஹீரோ அவ்வளவுதான். படத்தின் கதையாக அழகான கிராமத்தில் எளிய விவசாயி ரஜினிகாந்த். முறைப்பெண்களாக #அம்பிகா, #ராதா. அக்கா அம்பிகாவுக்கு சிறு வயதிலேயே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் மனது. சதா புத்தகமும் கையுமாகத் திரியும் அம்பிகாவுக்கு நேர் எதிர் ராதா. சதா எதையாவது தின்றுகொண்டிருக்கும் ராதாவுக்கு ரஜினி மீது ஆசை. அம்பிகாவுக்கோ ரஜினி மீது இருப்பது விருப்பமா வெறுப்பா என்பதே தெரியாத நிலையில் வீட்டார் வற்புறுத்தலின் படி ரஜினிக்கும் அம்பிகாவுக்கும் திருமணம் முடிகிறது.

விருப்பமில்லா வாழ்க்கையிலும் ஒரு குழந்தைக்குத் தாயாகிறார் அம்பிகா. தான் சிறு வயதிலிருந்து வளர்ந்த பணக்கார வீட்டின் சின்னய்யாவுக்கு அம்பிகா மீது சிறுவயதில் இருந்தே நல் விருப்பம். அம்பிகாவுக்கோ தான் விரும்பிய வாழ்க்கை கிடைக்காத விரக்தியில் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது வீட்டை விட்டு சின்னய்யாவுடன் ஓடிப்போகிறார். ஆனால் படி தாண்டும் அளவுக்கு மனதில் இருந்த திடம் பிறிதோர் இடத்தில் வாழ வழி செய்யாமல் போகிறது. ஓடிப்போன அம்பிகாவுக்கு ஊரை விட்டு விலக்கி தண்டனை தருகிறது கிராமம். மனநோயின் இறுதியில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். காப்பாற்றப்படுகிறார். விரும்பிப்போன இடத்திலும் வாழ முடியாமல் பிறந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் சின்னய்யாவின் விருப்பப்படி ஊருக்கு வெளியே குடிசை கட்டி வாழத் தொடங்குகிறார். பெற்ற குழந்தையை வளர்ப்பதற்காக ராதாவை இரண்டாம் கல்யாணம் செய்கிறார் ரஜினிகாந்த்.

மகளும் வளர்கிறார். குற்ற உணர்வில் புழுங்கும் அம்பிகா தான் செய்த துரோகத்துக்கான தண்டனையை முழுமையாக அனுபவிக்கிறார். சாகும் தருணத்தில் தன்னை வந்து பார்க்கும் ரஜினிகாந்திடம் தன் துறவு வாழ்வின் கதையைச் சொல்ல அம்பிகாவை மன்னிக்கிறார் ரஜினிகாந்த். நிறைவாய் கண்ணை மூடுகிறார் அம்பிகா. இதுபோன்ற கதைக்கெல்லாம் இப்போது ரஜினிகாந்த் ஒத்துக்கொண்டு நடிக்க வாய்ப்பே இல்லை. ரஜினிகாந்த்தின் நண்பர்களான பஞ்சு அருணாசலமும் எஸ்.பி. முத்துராமனும் செய்த மாயாஜாலம் அது. இப்போது பார்த்தாலும் கண்கள் கலங்க வைக்கும் க்ளைமாக்ஸ்.

ரஜினிகாந்த்: ஹேர் ஸ்டைல் மாற்றி இறுகிய முகம் உடம்புடன் அசல் கிராமத்து விவசாயியை கண் முன் காட்டியிருப்பார் ரஜினிகாந்த். அநியாய அழகனாக கிராமத்துக் காளையாய் கவர்ந்திழுக்கும் காந்தமாய் குமரன் கேரக்டர். அம்பிகாவைப் பார்த்து, ‘‘கொஞ்சம் குண்டாயிட்டா… நல்லாருக்கு” என்று வெட்கச் சிரிப்பு சிரிக்கும் ரஜினிக்கு முன்பு ஆயிரம் ஹுக்கும் வந்தாலும் ஈடாகாது. டெல்லிகணேஷும் கமலாகாமேஷும் வசனம் பேசும் ஒரு காட்சியில் தொட்டிலில் குழந்தையை ஆட்டிக்கொண்டே வசனமின்றி ரஜினிகாந்த் வெளிப்படுத்தும் முக பாவனைகள் சிறந்த நடிகனுக்கு ஆதாரமான ஒன்று.

அம்பிகா: அப்போது வளர்ந்து வந்த நடிகையான அவர் இதுபோன்ற கதாபாத்திரத்துக்கு ஒப்புக்கொண்டது ஆச்சரியமான ஒன்று. ரஜினியின் மீது காட்டும் வெறுப்பும் சின்னய்யா தன் மீது வைத்திருந்த விருப்பம் தெரிந்து அதிர்வதும் பின்பு மனம் கல்லாக்கி படி தாண்டுவதுமாய் தாய்க்குலங்களின் அத்தனை ஓட்டுகளையும் அள்ளியிருப்பார். க்ளைமாக்ஸில் தனியாய் சாவுடன் போராடும்போது அப்படி என்ன தப்பு செய்துவிட்டார் என ஆடியன்ஸை கேட்க வைத்திருப்பதே இக்கதாபாத்திரத்தின் வெற்றி. படத்தில் எல்லோருக்கும் வயதாகிறது. ஒட்ட வைக்கப்பட்ட நரை முடியுடன் அந்த கெட்டப்பை காட்டினாலும் அம்பிகாவுக்கு மட்டுமே கழுத்து எலும்பு தெரிகிறது. தொண்டை நரம்புகள் முதிர்வைக் காட்டுகின்றன. அர்ப்பணிப்பான நடிப்பு.

ராதா: கிளாமருக்கென்று கணித்து ராதா கேரக்டரை அமைத்திருந்தாலும் வெள்ளந்தியான கிராமத்துப் பெண்ணாக கவனம் கவருகிறார். முதல் பாதியில் துள்ளித்திரிபவர் இரண்டாம் பாதியில் ரஜினிக்கு மனைவியாகி பெறாத குழந்தைக்கு தாயாக மாறி அக்கா அம்பிகாவுக்கு தங்கை தான் சளைத்தவரில்லை என நடித்திருப்பார். ராதாவுக்கு டப்பிங் தந்தவரையும் பாராட்ட வேண்டும். திருமணத்துக்கு முன்பும் பின்புமாய் அந்தக் குரலே இரு வேடம் போடுகிறது.

இளையராஜா: டைட்டில் கார்டிலேயே இளையராஜாவின் ராஜாங்கம் ஆரம்பமாகிவிடும். ராமாயணத்துக்கு ராஜா இசையமைத்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தின் டைட்டில் கார்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம். படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் பஞ்சு அருணாசலம் ராஜாவின் ஆகச் சிறந்த நண்பரல்லவா. படத்தின் முக்கியமான கேரக்டராக இளையராஜாவின் இசையும் படம் முழுவதும் வந்தபடி இருக்கும். ‘‘ஒரு மனுசன தெய்வமாக்குறதும் பொம்பளதான். மிருகமாக்குறதும் பொம்பளதான். நீ என்னை மிருகமாக்கிடாத” என்ற கோபமான ரஜினியின் வசனத்துக்குப் பிறகு வரும் அந்த வயலின். மரணப்படுக்கையில் கிடக்கும் அம்பிகாவை ரஜினி பார்க்க வரும் காட்சியில் இளையராஜா என்னும் இசை அரசன் செய்யும் வித்தை எழுத்தில் அடங்காதது. #மலேசியா வாசுதேவன் பாடும் பட்டுவண்ண சேலைக்காரியும், #ஜென்சியின் குரலில் வரும் ஆத்தோரம் காத்தாட ஒரு ஆச தோனுது பாடலும் இசைத்தட்டுகள் தாண்டி பென்டிரைவ் வரைக்கும் வருபவைதானே.

சீரியஸான ஒரு காட்சியில் ரஜினியின் மகளாக வருபவர் கண்கள் கலங்க நான் யாரு என்றதும் ரஜினி சிரித்துக்கொண்டே என்னம்மா இது பெரிய பெரிய மகான்களுக்கே தெரியாத ஒரு விஷயம் சாதாரணமா கேக்குறியே என்னும் இடம், படத்தின் முடிவில் அம்பிகா தலையில் கை வைத்து ரஜினி செய்யும் ஆசிர்வாதம், அம்பிகாவின் வீட்டிலிருந்து கிளம்பும்போது அறிந்தே தன் செருப்பை ரஜினி விட்டுப்போகும் இடம் என எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்துக்கும் சபாஷ் சொல்ல வைக்கும் காட்சிகள். ‘‘மனசு பண்ண துரோகத்தை ஒடம்பு பண்ணல…” என அம்பிகா கதறி அழுவதே படத்தின் ஒட்டுமொத்த செய்தி.

படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்த விதத்தை அம்மா கமலா காமேஷ் கதாபாத்திரம் மூலம் செய்யாமல் ரஜினி வழியே சொல்லியிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும். மனித உணர்வுகளின் விளையாட்டே கதைக்களம் என்னும்போது முக்கியமான இரண்டு முடிவுகளை பஞ்சாயத்து மூலம் காட்டியிருப்பது கொஞ்சம் நெருடல். எல்லாவற்றையும் விட பிற்காலத்தில் எஜமான், முத்து, வீரா என ரஜினியின் ஜோடியாய் ரசிகர்களைக் கவர்ந்த #மீனா இந்தப் படத்தில் ரஜினியின் மகளாய் நடித்திருப்பதை விட காலத்தின் விளையாட்டு ஒன்றுண்டோ.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page