திரைப் புதையல் – 1: சோழ. நாகராஜன்

நகர்வு

image

——————–

பவளக்கொடி (1934)

திரைக்கதையையும்விட ருசிகரம் படம் உருவான கதை…

துவக்க கால இந்திய – தமிழ் சினிமாவின் வழமையான பண்புகளோடுதான் உருவாக்கப்பட்டிருந்தது இந்தப் பவளக்கொடி திரைப்படமும்.

ஆனாலும், இந்தப் படம் பல வரலாற்றுச் சிறப்புகளை இயல்பாகப் பெற்றுவிட்டதுதான் வியப்புக்குரியதாகவும் இந்தப் படத்தைக் குறித்துப் பேசவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் உள்ளது.

பவளக்கொடியின் கதை பாரதக் கதையின் உபகதைகளில் ஒன்றென்று கூறப்படுகிறது. ஆனாலும், அதற்கு ஆதாரமில்லை என்ற கருத்தும் உண்டு.

பவளத்தீவின் இளவரசி பவளக்கொடிக்கும் அர்ஜுணனுக்கும் இடையிலான காதல் கற்பனைக் கதைதான் இந்தப் படம்.

1934 ல் வெளிவந்த இந்தப் பவளக்கொடிக்கு அப்படி என்னதான் வரலாற்றுச் சிறப்பு?

தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்துக் கொடிகட்டிப் பறந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் எனும் ஜாம்பவான் திரையில் முதன்முதலில் அறிமுகமானது இந்தப் பவளக்கொடி சினிமாவில்தான்.

நாடக உலகில் அறிமுகமாகியிருந்த முன்னணி நடிகை எஸ்.டி. சுப்புலட்சுமி எனும் வெள்ளித்திரைத் தாரகை அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான்.

சினிமாவின் துவக்க காலமாகிய அந்நாளிலேயே சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் துணிந்து இடம்பெறச் செய்த இயக்குநர் கே.சுப்பிரமணியம் இயக்குநராக அறிமுகமானதும் இதே பவளக்கொடியில்தான்.

ஆக, மூன்று முன்னணிக் கலைஞர்களின் முதல் படமாக இந்தப் படம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பவளக்கொடி நாடகமாகத் தமிழ் மண்ணில் சக்கைபோடு போட்டுக்கொண்டிந்தது.

எஸ்.ஜி. கிட்டப்பா என்ற உன்னதப் பாட்டுக் கலைஞன் கோலோச்சிக்கொண்டிருந்த சமயம் அது.

கொஞ்ச வயதிலேயே அவரது திடீர் மறைவிற்குப் பிறகு அவரது இடத்தை பாகவதர் நிரப்புகிற முயற்சியிலிறங்கினார்.

லேனா செட்டியார் என்று அறியப்பட்ட செட்டிநாட்டில் நாடக ஒப்பந்தகாரராக இருந்த, இந்தப் படத்தின் தயாரிப்பாளரான எஸ்.எம் லட்சுமணன் செட்டியார்தான் பாகவதரின் நாடகக் கனவைக் கலைத்துப்போட்டு, பவளக்கொடி திரைப்படத்தில் நடிக்குமாறு ஆலோசனை வழங்கி அழைத்தவர்.

மீனாட்சி சினி டோன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது.

இதன் பின்னே அழ. ராம. அழகப்பச் செட்டியார் என்ற விநியோகஸ்தர் பக்க பலமாக இருந்தார்.

அவரது பங்குதாரர்களுக்கு அடையாறில் ஒரு படப்பிடிப்புக் கேந்திரம் இருந்தது.

அதுதான் பின்னாளில் நெப்டியூன் ஸ்டூடியோ என்றும் அதன் பின்னர் எம்ஜிஆரின் சத்யா ஸ்டூடியோவாகவும் பரிணமித்தது. (அதுதான் தற்போது எம்ஜிஆர் – ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியாக இருக்கிறது என்பது கூடுதல் பெருமைக்குரிய செய்தி.)

அப்போது அந்தப் படப்பிடிப்பு நிலையத்திற்குச் சுற்றுச் சுவர் இல்லை.

அது அதிருப்தி மனப்பான்மை கொண்ட அவர்களின் சினிமா பங்குதாரர் ஒருவருக்குத் தோதாகிவிட்டிருந்தது.

இயக்குநர் கே.சுப்பிரமணியம் எப்போதெல்லாம் ஸ்டார்ட் கேமரா – ஆக்சன் என்று சொல்கிறாரோ அப்போதெல்லாம் அந்த அதிருப்தி நபர் தனது காரின் ஒலிப்பானை ஓங்கி அழுத்துவார்.

அது உள்ளே நடக்கும் படப்பிடிப்புக்குப் பெரிய இடையூறாக ஆகிவிடும்.

அந்த அதிருப்தி மனிதருக்கு அப்படியொரு அலாதித் திருப்தி.

இந்தத் தொந்தரவைச் சமாளித்துவிட்ட பின்பும் இன்னொரு தொந்தரவு பவளக்கொடி படப்பிடிப்புக்கு இடையூறாகப் பின்தொடர்ந்தது.

அடையாறின் காகங்களின் கரையும் சப்தம்தான் அந்த அடுத்த தொந்தரவு.

அடையாறு பகுதி முழுவதும் அப்போது அடர்ந்த வனமாக இருந்தது.

எங்கும் ஓங்கி வளர்ந்த மரங்களும் பசுமையான சூழலுமே அந்நாளின் அடையாறு.

அப்போது சினிமாவின் கலைஞர்கள் யாரும் யாருக்கும் வசதியிலும் நட்சத்திர அந்ததிலும் உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் அடையாளம் பெறவில்லை.

பவளக்கொடி படப்பிடிப்பின்போது அனைவருக்கும் ஒரேவிதமான உணவுதான் பொட்டலங்களாக வழங்கப்பட்டன.

சூரிய ஒளியை மேகங்கள் மறைக்கிற நேரங்களில் சந்தர்ப்பம் பார்த்துப் பொட்டலங்களைப் பிரித்துச் சாப்பிடும் கலைஞர்கள் திடீரென மேகங்கள் கலைந்து, வெயில் அடிக்கத் தொடங்கிவிட்டால் உணவுப் பொட்டலங்களை அப்படியே விட்டுவிட்டு காமிராவுக்கு முன்னால் ஓடிவந்து ஆஜராகிவிடுவார்கள்.

இதுதான் நல்ல சமயமென்று காட்டுக்குள்ளிருந்து காகங்கள் உணவுப்பொட்டலங்களை மொய்க்கத் தொடங்கிவிடும்.

அவை சத்தமாகக் கரையும் ஓசை ஒரே கூப்பாடாக ஒலிக்கும்.

அப்போதெல்லாம் வசனங்களை கலைஞர்கள் பேச, பாடல்களையும் பாட படப்பிடிப்பின்போதே பதிவு செய்யவேண்டும்.

அவ்வளவுதான் அந்நாளைய தொழில்நுட்ப வளர்ச்சி.

படப்பிடிப்பையே நடத்த முடியாத அளவிற்கு இந்தக் காகங்களின் தொந்தரவு ஒரு தொடர்கதையானது.

இயக்குநர் கே. சுப்பிரமணியத்திற்கு ஒரு யோசனை தோன்றியது.

ஒரு ‘ஏர் ரைஃபிள்’ ரகத் துப்பாக்கியுடன் ஒரு ஆங்கிலோ இந்தியரைப் பணியமர்த்தினார் இயக்குநர்.

அவருக்கு வேலை படப்பிடிப்பு தொடங்கும்முன் ஆகாயத்தை நோக்கிச் ஒன்றிரண்டு முறை சுட வேண்டும்.

அது அங்கே சத்தமாகக் கரைந்துகொண்டிருக்கும் காகங்களை அச்சமூட்டி விரட்டும்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே முன்னெப்போதுமில்லாத வகையில் படத்தின் டைட்டிலிலேயே சுப்பிரமணியம் நன்றியுடன் இப்படியொரு எழுத்தைப் போட்டார்: காகம் சுட்டவர் (Crow shooter: Joe): ஜோ.

அப்போது மதறாசில் தொழில்நுட்பக் கூடங்கள் இல்லை.

படம் எடுத்து முடித்தபின்னர் மற்ற வேலைகளுக்காக பம்பாய்க்குத்தான் அனுப்ப வேண்டும்.

படப்பிடிப்பு முடிந்த ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட்டதுவரை படம் எப்படி வந்திருக்கிறது என்றுகூட அறிந்துகொள்ள இயலாது.

நன்றாகத்தான் வந்திருக்கும் என்கிற மிகுந்த தன்னம்பிக்கையோடுதான் ஒவ்வொரு நாளும் அந்த சினிமா முன்னோடிகள் பணியாற்றியிருக்கிறார்கள்.

பவளக்கொடியில் திறம்பட நடித்தும், பாடல்களைப் பாடியும் பாகவதரும் சுப்புலட்சுமியும் தங்கள் முழு திறன்களைக் காட்டியிருந்தார்கள்.

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்கிற நிலையை நோக்கிய பாகவதரின் ஒளிமிக்க திரைப் பயணத்திற்கு அழுத்தமாக அச்சாரமிட்டது இந்தப் படம்.

படத்திற்கு இசை பாபநாசம் சிவன்.

படத்தில் மொத்தம் 50 பாடல்கள். அவற்றில் 22 பாடல்களை பாகவதரே பாடியிருந்தார்.

9 மாதங்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, வசூலில் சாதனை படைத்து, ஆரம்பகால வெற்றிப்படங்களின் வரிசையில் முக்கியமானதாகப் பெயர் பெற்றது இந்தப் பவளக்கொடி.

அதுமட்டுமல்ல… படத்தை வெற்றிகரமாக உருவாக்கி முடித்த கையோடு படத்தின் நாயகி எஸ்.டி. சுப்புலட்சுமியை இரண்டாவது மனைவியாகக் கரம்பிடித்தார் இதன் இயக்குநர் கே.சுப்பிரமணியம்.

படத்தின் திரைக்கதையைவிட இன்றைக்கு 86 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பவளக்கொடி உருவான கதை இப்படித்தான் ருசிகரமான சுவாரயங்களை நிரம்பத் தன்னகத்தே கொண்டிருந்தது.

பவளக்கொடியின் ஒரேயொரு பிரதி இன்றைக்கும் பூனேயின் ஃபிலிம் இன்டிடியூட்டில் பாதுகாக்கப்பட்டுவருவது நமக்கொல்லாம் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரும் நற்செய்திதானே?

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page