திரைப்புதையல்- 12: அண்ணாவின் “வேலைக்காரி”

நகர்வு

Velaikkari

அகில இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த

அண்ணாவின் காவியம்!

– சோழ. நாகராஜன்

இந்தியத் திரைப்பட வரலாற்றில் சந்திரலேகா பிரம்மாண்டங்களுக்கு அச்சாரமிட்ட தமிழ்த் திரைப்படம் என்றால், அறிஞர் அண்ணாவின் கதை, வசனத்தில் உருவான வேலைக்காரி முற்றிலும் புதிய வகையில் நவீன அரசியல் பேசிய முதல் படம் என்ற பெயரினை இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெற்றது.

அது பேசியது வெறும் அரசியல் அல்ல…

நாத்திகம் தொனிக்கும் அரசியல்.

பகுத்தறிவு அரசியல்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில் நின்று பேசிய அந்த அரசியல் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.

அந்தப் புதுமையில் அது முதல் படமாக அமைந்துபோனது.

அண்ணா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட சி.என்.அண்ணாதுரை ஒரு அரசியல்வாதி மட்டுமல்லர்… மிகச் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும்கூட.

இவை எல்லாமும் எல்லோரும் அறிந்ததுதான்.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான அண்ணாவின் நண்பர்கள்தாம் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியும் நாடகவியலாளர் எஸ்.வி.சகஸ்ரநாமமும்.

அவர்களுக்காகவே அண்ணா எழுதிய நாடகம்தான் வேலைக்காரி.

அதை எழுதிய கையோடு கே.ஆர்.ராமசாமியும் எஸ்.வி.சகஸ்ரநாமமும் பணியாற்றி வந்த என்.எஸ்.கே. நாடக சபாவில் அண்ணாவும் இணைந்து வேலைசெய்யத் தொடங்கினார்.

அது லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிறையிலிருந்த சமயம்.

இருவருக்கும் ஏற்பட்ட பல்வேறு முரண்பாடுகள் காரணமாக சகஸ்ரநாமத்தைவிட்டு கே.ஆர்.ராமசாமி பிரிந்துபோக நேர்ந்தது.

அப்போது சகஸ்ரநாமம் அண்ணாவைத் தன்னுடன் தக்கவைக்க முயற்சி மேற்கொண்டார்.

ஆனால், தன்னுடைய அரசியல் சீடராகத் தான் கருதிய கே.ஆர்.ராமசாமிக்கு தனது வேலைக்காரி நாடகத்தை வழங்க அண்ணா முடிவு செய்தார்.

கே.ஆர்.ராமசாமியின் குழு நடத்திய வேலைக்காரி நாடகம் பெருவெற்றி பெற்றது.

எனவே, அதனை சினிமாவாக உருவாக்கவும் ஜூபிடர் பிக்சர்ஸ் சோமசுந்தரத்துக்கு யோசனை தோன்றியது.

அவர் அதனைத் திரைப்படமாக்கும் உரிமையைப் பெற்றார்.

அண்ணாவையே அதற்குத் திரைக்கதை எழுத ஒப்பந்தம் செய்தார்.

வேலைக்காரி திரைப்படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்க முடிவு செய்யப்பட்டது.

அலெக்ஸாண்ட்ரே டுமாஸ் எழுதிய தி கவுண்ட் ஆஃப் மான்டே கிறிஸ்டோ நாவலில் சில மாற்றங்களைச் செய்தார்கள்.

சிலவற்றைச் சேர்த்தார்கள்.

அண்ணா தனது கதையில் இப்படியான இணைப்புகளை எந்தவித ஆட்சேபமுமின்றி ஏற்றார்.

கே.ஆர்.ராமசாமியை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கவேண்டும் என்பதுமட்டுமே அண்ணாவின் நிபந்தனையாக இருந்தது.

அவரையும் ஒப்பந்தம் செய்தார்கள்.

படத்தில் இரண்டு முக்கியமான பெண் வேடங்களை வி.என்.ஜானகி மற்றும் எம்.வி.ராஜம்மா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

டி.எஸ்.பாலையாவின் பாத்திரமும் நடிப்பும் அவரை ஒரு மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக அடையாளம் கண்டது.

படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி பரபரப்பையும் சர்ச்சையையும் உண்டாக்கியது.

தனது பிரார்த்தனைக்கு செவி சாய்க்காத தெய்வத்தை நிந்தித்து, பூசைப் பொருட்களை வீசி எறிகிறான் நாயகன்.

இந்தக் காட்சிக்காக படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற அளவுக்கு எதிர்ப்புக் குரல் கிளம்பியது.

அவற்றையெல்லாம் கடந்து வேலைக்காரி மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.

படத்திற்கு இசை எம்.எஸ்.சுப்பையா மற்றும் சி.ஆர்.சுப்புராமன்.

சில பாடல்கள் பிரபலமாயின.

கதை, உரையாடல் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ. என்று திரையில் காண்பிக்கப்பட்டபோது ரசிகர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்தார்கள்.

இதுவும் இந்திய சினிமாவின் புதிய அனுபவமாகப் பதிவாகியது.

நாயகன் – நாயகியைத் தாண்டி, திரைக்கதாசிரியரை, வசனகர்த்தாவைக் கொண்டாடுவது சினிமாவை இன்னொரு ஆரோக்கியமான தளத்திற்கு இட்டுச் செல்லும் என்று வியந்து மதிப்பிடப்பட்டது.

அண்ணாவின் தமிழ் வசனங்கள், அவற்றில் இருந்த நாத்திகக் கருத்துகள் ரசிகர்களை மிகவும் ஈர்த்தன.

திராவிட இயக்கம் கலையை – குறிப்பாக திரைப்படக் கலையைத் தங்களின் அரசியல் பிரச்சாரத்திற்கு ஒரு முக்கியக் கருவியாகக் கருதியதை இந்த வேலைக்காரி தொடங்கிவைத்தாள்.

சினிமாவின் ஆற்றலை, அதனால் விளையப்போகும் மிகப் பெரிய மாற்றங்களை அவர்கள் உணரத் தொடங்கினார்கள்.

ஏ.எஸ்.ஏ.சாமியும் இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் ஜூபிடர் பிக்சர்சின் முதன்மை இயக்குநராக உயர்ந்தார்.

மாநில அரசியலில் தாக்கங்களைத் தமிழ் சினிமா ஏற்படுத்தும் புதிய சகாப்தத்தின் திறவுகோலாக வேலைக்காரி வரலாற்றில் குறிக்கப்பட்டது.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page