திரைப்புதையல் – 13: “மிஸ் மாலினி”

நகர்வு

Miss-Malini

படம் எடுப்பது யாருக்கு என

பாடம் சொன்ன படம்!

– சோழ. நாகராஜன்

காலத்தை மீறும்படி உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் அவை தோன்றிய காலத்தில் வரவேற்கப்படுவதில்லை என்பதற்கு உதாரணமாக 1947 – ல் வெளிவந்த ஒரு தமிழ் சினிமாதான் மிஸ் மாலினி.

அதனை உருவாக்கியவர்களின் பெயர்களே அதன் தரம் சொல்லும்.

மிஸ் மாலினியின் கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஆர்.கே. நாராயண்.

நாயகன் பாத்திரத்தில் நடித்து, இயக்கியவர் பிரபல கதாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு.

அறிவாளி ரசிகர்களுக்கு என்று மெனக்கெட்டுக் கலைத்தன்மையோடு எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்று இதைக் குறிப்பிட்டார் இதன் தயாரிப்பாளர் எஸ்.எஸ். வாசன்.

ஆம், மிஸ் மாலினியை வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் தயாரித்தது.

ராமசாமி கணேசன் என்ற பெயரோடு இந்தப் படத்தில் சிறிய வேடமொன்றில் அறிமுகமானார் அறிவியல் பட்டதாரியும், ஜெமினி நிறுவனத்தில் ஒப்பனைத்துறையில் பணியிலிருந்தவருமான அந்த அழகிய இளம் வாலிபர். அவர்தான் பின்னாளில் ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன்.

தமிழில் சிறந்த சமூக விமர்சனப் படம் என்றும் அப்போதே இந்தப் படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டிருந்தது.

கலைத்தரமும் சிறந்த இசையமைப்பும் பாடல்களும் படத்திற்கு நல்ல மரியாதையைப் பெற்றுத்தந்தது.

படத்தில் வந்த சம்பத் எனும் எதிர்மறை நாயகன் பாத்திரப்படைப்பு பேசப்பட்டது.

பின்நாளில் வந்த பல படங்களிலும் இடம்பெற்ற அதுபோன்ற நாயக பாத்திரத்தின் முன்மாதிரியானது அந்த சம்பத். மாலினி ஒரு ஏழைப்பெண்.

நோய்வாய்ப்பட்ட தகப்பனுடன் வாழ்வின் துன்பங்களையெல்லாம் அனுபவிக்கிறாள்.

அவளுக்கு ஒரு தோழி. சுந்தரி அவளது பெயர். அவள் கலா மந்திரம் எனும் மேடை நாடகக் குழு நடத்தி வருகிறாள்.

தனது ஆருயிர்த்தோழி மாலினியை அந்த நாடகக் குழுவில் இணையும்படி கூறுகிறாள் சுந்தரி.

தயக்கத் தோடு அதற்கு சம்மதிக்கிறாள் மாலினி.

விரைவிலேயே மக்களின் விரும்பும் நடிகையாக உயர்ந்து, புகழடை கிறாள்.

மாலினியின் வாழ்க்கை தென்றலெனத் தவழ்ந்து கொண்டிருந்த வேளையில் சம்பத் என்கிற நயவஞ்சகனின் நட்பு அதனைப் புயலாகப் புரட்டிப்போடுகிறது.

அவளைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகிறான் சம்பத்.

அவளைத் தனியே ஒரு சொந்த நாடகக் குழுவைத் துவங்கும்படி வற்புறுத்துகிறான்.

சம்பத்தின் கைப்பாவையாக மாறிய மாலினி தனக்கு வாழ்வில் உதவிய சுந்தரி போன்ற நட்பு வட்டாரத்தைத் துண்டித்துக் கொள்ள நேர்கிறது.

விரைவிலேயே கடனாளி ஆகும் மாலினி வாழ்வின் பாதாளத்தில் போய் விழுகிறாள்.

மீண்டும் பழைய வறுமை நிலைக்குப் போகிற மாலினியை உதறிவிட்டுப் பிரிகிறான் அவளை அந்தக் கதிக்கு ஆளாக்கிய நயவஞ்சகன் சம்பத். பழைய தோழி சுந்தரியும் மற்ற நண்பர்களும் மாலினிக்கு உதவ முன் வருகிறார்கள்.

மாலினி மீண்டும் கலா மந்திரத்தில் போய்ச் சேருகிறாள்.

மீண்டும் புத்துயிர் பெற்று நடிக்கத் தொடங்குகிறாள்.

இதுதான் மிஸ் மாலினியின் கதை.

இப்படியானதொரு சமூகக் கதையில் சென்னை வரும் மாலினி தான் கண்ட, அனுபவித்த சென்னை வாழ்வைக் கடுமையாக விமர்சிக்கிறாள்.

பட்டணத்துப் பகட்டையும், ஏமாற்றுக்காரர்களின் அன்பொழுகும் பேச்சுக்களையும் நம்பினால் பட்டணத்தில் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் என்கிற நீதியைப் படம் வலியுறுத்தியது.

இரண்டாம் உலகப் போர் காலத்துச் சென்னையின் பகட்டுமிக்க வாழ்க்கையை, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டை, விலைவாசியேற்றத்தைக் கொத்தமங்கலம் சுப்புவின் கூர்மையான, கிண்டல் தொனி வசனங்கள் அம்பலப்படுத்தின.

எதிர்நிலைக் கதாநாயகனாக அந்தப் பாத்திரத்துக்கு ஒரு புதிய பரிமாணமே தந்து தென்னிந்திய ரசிகர்களின் மனங்களில் பதிய வைத்தார் படத்திற்கு வசனமெழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்த கொத்தமங்கலம் சுப்பு.

நடிகை புஷ்பவல்லி நாயகி மாலினியாக நடித்தார்.

அவரது தோழி சுந்தரியாக எம்.எஸ்.சுந்தரிபாய் நடித்தார்.

கலா மந்திர நாடகக் கம்பெனியின் இயக்குநர் பாத்திரத்தில் ஜாவர் சீத்தாராமன் நடித்தார்.

அந்நாளில் பிரபலமான எஸ்.ராஜேஸ்வரராவ் எஸ். அனந்தராமனுடன் இணைந்து மிஸ் மாலினிக்கு இசையமைத்தார்கள்.

பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

மேலைநாட்டுப் படங்களின் தாக்கத்தில் புதிய உத்திகளோடும் கலைநேர்த்தியோடும் நெருக்கமான காதல்காட்சிகள் வைத்து உருவாக்கப்பட்ட இந்த மிஸ் மாலினியை கிராமப்புற எளிய பாமர மக்கள் அதிகம் விரும்பாததால் வசூலில் அதிகம் சாதிக்கவில்லை.

எளிய மக்களுக்கு அந்நியமான கதைசொல்லல்முறை அவர்களின் வரவேற்பை இழப்பது இயல்பே என்பதைப் படக்குழுவுக்கு உணர்த்தியத்திலும் 1947 ஆம் ஆண்டிலேயே இந்த மிஸ் மாலினி தமிழ் சினிமாவின் முதல் அனுபவமாக நின்றாள்.

அதனால், அறிவாளிகளுக்காக மட்டும் என்று படமெடுப்பது பணத்தைக் கொண்டுவந்து சேர்க்காது என்கிற படிப்பினையை இந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் பெற்றதாகச் சொன்னார் எஸ்.எஸ். வாசன்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page