திரைப்புதையல் 14: – சோழ. நாகராஜன்

நகர்வு

En-kanavar

என் கணவர்:

வீணை பாலச்சந்தர் எனும்

ஒற்றை மனித முயற்சி!

‘ஒன் மேன் ஷோ’ என்பார்கள்.

ஒரு படத்தில் பலதரப்பட்ட பணிகளையும் தனது தனித் திறனால் தானே செய்து, படம் முழுவதையும் தானே நிறைத்துக்கொண்டு ரசிகர்களின் கவனத்தைக் கவரும் ஒரு கலைஞனின் செயல்பாடு ஒன் மேன் ஷோதானே?

அப்படியானதொரு படம்தான் வீணை பாலச்சந்தரின் உருவாக்கத்தில் வெளிவந்த ‘என் கணவர்’.

அது 1948 வருடத்தில் வெளிவந்தது.

வீணை எஸ்.பாலச்சந்தருடன் எஸ்.நந்தினி, வி.சீத்தாராமன், எஸ்.குருசாமி, டி.கே.பட்டம்மாள், வி.செல்லம், டி.எஸ்.கோகிலம், பேபி விஜயாள், பேபி ருக்மினி போன்றோர் நடித்தார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு வி.வி.வர்மா.

பாம்பேயின் (இன்றைய மும்பை) அஜித் பிக்சர்ஸ் தயாரித்தது.

1942 ல் என் மனைவி என்றொரு தமிழ்ப் படம் வெளிவந்தது.

அப்போது முதலே என் கணவர் என்ற பெயரிலும் ஒரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

ரசிகர்களின் அந்த விருப்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிறைவேறியது.

செவ்விசையில் தேர்ச்சிபெற்ற இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான வீணை எஸ்.பாலச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்ததோடு, தனித்தும், இணைந்தும் பல பாடல்களைப் பாடியிருந்தார்.

நல்ல நடிகருமான அவர்தான் படத்தின் கதாநாயகன்.

அதுமட்டுமல்லாமல் தயாரிப்பு மேற்பார்வையையும் அவர் கவனித்தார். படத்தொகுப்புப் பணியிலும் உடனிருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக என் கணவர் படத்தின் இயக்குநரும் அவரே.

இப்படியொரு பல்திறன் கலைஞராக அவர் தமிழ் சினிமாவில் சிறிது காலமே வலம்வந்தார்.

என் கணவர் படம் அவரின் ஒன் மேன் ஷோ என்றே புகழப்பட்டது.

சதுர்புஜ் தோஷியின் கதைக்கு ஜாவர் சீதாராமன் வசனமெழுதியிருந்தார்.

அதிகம் அறியப்படாத நந்தினி கதாநாயகி.

படத்தின் கதை இதுதான்:

‘ஒரு பணக்காரரின் மகன் பற்றிய யூகிக்கக்கூடிய கதைதான்.

அந்தப் பணக்காரர் தனது தங்கை மரணப்படுக்கையில் இருந்தபோது ஒரு சத்தியம் செய்துகொடுக்கிறார்.

அதன்படியே படத்தின் நாயகனான தனது மகனுக்கு அந்தத் தங்கையின் மகளை மணமுடித்துவைக்கிறார்.

கணவன் – மனைவிக்கு இடையே முரண்பாடு வருகிறது.

மகிழ்ச்சி துய்ப்பதையே பிரதானமாகக் கருதும் கணவனிடமிருந்து வீட்டுப் பொறுப்புகளைச் சுமக்கும் மனைவி மாறுபடுகிறாள்.

இதனால் அவன் ஏமாற்றும் குணமுள்ள ஒரு ஆடல் மங்கையின் தீய வலையில் விழுகிறான்.

பொருளை இழக்க நேரிடுகிறது.

நாயகனின் தந்தை மரணமடைகிறார்.

மரபார்ந்த நம்பிக்கைகளோடு வளர்ந்த நாயகி நிர்க்கதியாகிறாள்.

நாயகன் மனம் திருந்தி தன் மனைவியோடு இணக்கமாக வாழ்ந்தால்தான் அவனது தந்தையின் சொத்துக்கள் அவனுக்கு வந்துசேரும் என்பதாக இறக்கும் தறுவாயில் அவனது தந்தை எழுதிவைத்த உயிலைப் பற்றி பிறகுதான் அவனுக்குத் தெரியவருகிறது.

மனம் வெறுத்து வெளியேறும் அவன் ஒரு பரதேசிபோல சுற்றித் திரிகிறான்.

அவன் பட்ட கடனையெல்லாம் அடைக்கும் மனைவி வீட்டையும் இழந்து ஒரு குடிசையில் வசிக்க நேர்கிறது.

பல இன்னல்கள், துன்ப துயரங்களை அனுபவித்து மனம் திருந்தும் கணவன் கடைசியாகத் தன் மனைவியோடு சேர்ந்து மகிழ்ச்சியாக வாழத்தொடங்குகிறான்.’

வீணை பாலச்சந்தரின் பன்முகத் திறமைக்குச் சான்றாக அமைந்தபோதிலும் படம் வசூலில் பெரிய சாதனை செய்யவில்லை என்பதை என்னவென்பது?

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page