பாமா ருக்மணி-ஆர். பாஸ்கரன்
கதை திரைக்கதை வசனம் கே. பாக்யராஜ் தான். ஆனால் நடிகர் பாக்யராஜுக்கு வேறு யாரோ டப்பிங். அதனாலேயே தொடக்கத்திலிருந்து ஒருவித அன்னியத்தனம் வந்துவிடுகிறது நாயகனின் மேல். இரண்டு பெண்களைத் திருமணம் செய்துகொண்டவர் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவருடன் குடும்பம் நடத்தும் மிக மிக சீரியஸான கதையம்சப் படத்துக்கு காமெடி சாயல் பூசப்போய் எதுவுமே சரிவராமல் போன படம். இதே சப்ஜெக்டை பின்னாளில் வெவ்வேறு இயக்குநர்கள் ஏன் பாக்யராஜே திறம்பட கையாண்டிருந்தார்கள். பாமா ருக்மணி வெளிவந்த காலத்தில் என்ன மாதிரியான ரிசல்ட் தந்ததோ… பெரிதும் கவனம் கொள்ளாத திரைக்கதையால் சுவாரசியம் தவறிப்போன சினிமா.

வசனங்களில் பல இடங்களில் டி. ராஜேந்தரின் அடுக்குமொழி வந்தாலும் பாக்யராஜுக்கே உரிய ரெட்டை அர்த்த வசனமும் ஒரே அர்த்தத்துடன் வலம் வருகின்றன. இசையோ ஒளிப்பதிவோ இந்தப் படத்துக்கு இது போதும் என்ற அளவிலே. எம்எஸ்வியின் இசையில் எஸ்பிபியும் வாணி ஜெயராமும் பாடும் நீ ஒரு கோடி மலர் கூடி பாடலின் இனிமை மட்டும் காதுக்குள்ளே. க்ளைமாக்ஸ் நாடக அபத்தம் முடிந்தும் முடிவில்லாத சினிமா. ஒரு சிறுகதையாய் நிறைவு தரும் முடிவு சினிமாவுக்குப் போதவில்லை. மற்றபடி நாகேஷ், டணால் கே. தங்கவேலு போன்றோர் கொடுத்த வாய்ப்புக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

ஆறுதல் என்னவென்றால் கே. பாக்யராஜின் அப்பாவித்தனமான பாத்திரத்துடன் பொருந்திவிட்ட அவருடைய முகமும் ருக்மணியாய் வரும் பிரவீணாவின் நடிப்பும்.