“பெப்சியில் திருநங்கையர்” – ஆர்.கே.செல்வமணி ஏற்ற மிஷ்கினின் கோரிக்கை 

நகர்வு

Devil

சென்னை: தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சியில் திருநங்கையர்களும் உறுப்பினராக வேண்டும் என்ற இயக்குநர் மிஷ்கினின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படுவதாக அதன் தலைவர் ஆர்.கே. செல்வமணி அறிவித்தார்.

மிஷ்கினின் சகோதரரும் ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஜி.ஆர். ஆதித்யா எழுதி இயக்கியுள்ள படம் ‘டெவில்’. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நவம்பர் 3 அன்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

இதில் பேசிய மிஷ்கின், “விஜய் சேதுபதியை வைத்து நான் இயக்கிவரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை முழுக்கத் தேடி அலைந்து ஆறு திருநங்கைகளை கண்டுபிடித்தேன். இந்தச் சமூகம் அவர்களை மிக மோசமாக நடத்துகிறது. துணை நடிகர்கள் குழுவில் திருநங்கைகளைச் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் சார்பாக நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். 100 துணை நடிகர்கள் இருந்தால், அதில் நான்கு பேராவது திருநங்கைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் நினைத்தால் அதைச் செய்ய முடியும். இதை எனக்காக நீங்கள் செய்ய வேண்டும்” என்று ஆர்.கே. செல்வமணியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கோரிக்கை வைத்தார்.

அப்போது ஆர்.கே.செல்வமணி, “உங்கள் கோரிக்கை இப்போதே ஏற்றுக் கொள்ளப்படுகிறது” என்று பதிலளித்தார்.

மேலும், “நடிப்பு மட்டுமின்றி, எந்தத் துறையில் இடம்பெற வேண்டும் என்று திருநங்கைகள் விரும்பினாலும், அவர்கள் முறையாக வந்து அணுகினால் நிச்சயம் அவர்களுக்கு உதவி செய்வோம். இதற்கு பெப்சி பைலாவில் எந்தத் தடையும் இல்லை. அவர்களால் கண்டிப்பாக உறுப்பினர் ஆகமுடியும்” என்று மிஷ்கினிடம் உறுதி அளித்தார்.

பதிவை பகிர

Add your first comment to this post

You cannot copy content of this page