— நசீமா ரசாக்

மிகவும் சந்தோஷமாக டிம்பிள் தன் சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு, சின்னு, ஜிங்கி மீது மின்னும் நட்சத்திர வடிவில் சில துகள்களை  தூவிக்கொண்டிருந்தது.

“ஏய் டிம்பிள், எங்க மேல பனிமழை போல இது என்ன தூவிக்கிட்டு வர!!!? என்று சின்னு ஆச்சரியமாகக் கேட்க,  ஜிங்கி ஒன்றும் புரியாமல் சிணுங்கிக் கொண்டே வந்தது .

“இது நாங்க சந்தோஷமா இருக்கும் போது வரும் மேஜிக் துகள்கள் சின்னு “

“அப்படினா??”

“இந்த துகள்களை வைத்து தான் நாங்க பூக்களுக்கும், வண்ணத்துப்பூச்சிகளுக்கும், வண்ணமும், வடிவமும் கொடுப்போம் . அதுமட்டுமா?? நீர் நிலைகளைச் சுத்தம் செய்வோம்…” அது இது என்று மிக நீளமான பட்டியலைச் சொல்லிக் கொண்டு வர, வியப்புடன் சின்னு அந்த மேஜிக் துகள்களைத் தொட்டுப் பார்த்தாள். ஜிங்கி விளையாட புதுசாக ஏதோ ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் விளையாடிக்  கொண்டே சின்னுவை தொடர்ந்தது.

கொஞ்ச தூரம் நடந்து போன பின் ஒரு காய்ந்து போன குட்டை கண்ணில் பட, டிம்பிள் சின்னுவின் தோள்களில் சோகமாக அமர்ந்தது .

“என்னாச்சு டிம்பிள்? ஏன் திடீரென்று சோகமாயிட்ட??”

“இங்க ஒரு பெரிய குளம் இருந்தது, நிறைய விலங்குகள் வந்து தண்ணீர் குடிக்கும். யானைகள் கூட்டம் கூட்டமா வரும். இப்ப இது மாதிரி வற்றிப் போய் இருக்கிறதைப் பார்த்து  என்னவோ மாதிரி இருக்கு சின்னு“ என்று சோகமானது.

தேவதைகள் இருக்கும் இடத்தில் இப்படி இருக்க வாய்ப்பே இல்லையே என்ற குழப்பத்துடன், டிம்பிள்க்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சின்னு அமைதியாக வர, ஜிங்கி மட்டும்  “லொள்லொள்” என்று என்னாச்சு என்று கேட்பதைப் போல் குரைத்துக் கொண்டு வந்தது .

அடுத்தடுத்து வழியில் மரங்களும் குறைந்து கொண்டு வரப் பதட்டம் அதிகரித்தது.

அப்போது அங்கு திடீரென  பட்டாம்பூச்சிகள் பறந்து வர “சின்னு அங்க பார் பட்டாம்பூச்சிகள் பறந்து வருது “ என்று சொல்லிய டிம்பிள் கண்களில் சின்ன சந்தோஷம் தெரிந்தது.

“பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு” என்று சின்னுவும் மகிழ்ந்தாள்.

“இதற்குப் பக்கத்தில் பூஞ்சோலை இருக்கவேண்டும் “ என்று டிம்பிள்  சொல்லிக் கொண்டிருக்கும்போதே 

“அப்படினா குட்டி தேவதைகளும் இருக்குமே!!!  “ என்று சின்னு ஆர்வமானாள்.

“நீ ரொம்ப அறிவாளி சின்னு, டக்குனு புரிஞ்சிக்கிட்ட“

“குட்டி தேவதைகளைப் பார்க்க போறேன்னு நினைக்கும்போதே எனக்கு அவ்வளோ சந்தோஷமா இருக்கு டிம்பிள் “

“இன்னும் கொஞ்ச நேரத்துல கண்டு பிடித்து விடலாம் சின்னு, அப்புறம் தான் நிறைய வேலை இருக்க, இல்ல…. உன்னையும்  ஜிங்கியையும் வீட்டில் முதல்ல விட்டுட்டு வந்து தான் ஆரம்பிக்கனும்“ என்று டிம்பிள் பறந்து கொண்டு வந்தது.

“முதல்ல குட்டி தேவதைகளைப் பார்க்கணும் டிம்பிள், அப்பறமா வீட்டுக்கு போகலாம்” என்று சொன்னாள் சின்னு.

“ம்ம்.. சரி சின்னு குட்டி தேவதைகளைப் பார்த்துவிட்டுக் கிளம்பிடலாம்”

“ஓகே, டிம்பிள் எனக்கு ஒரு சந்தேகம்… குட்டி தேவதைகள் இங்க பக்கத்துல இருக்கப்ப எப்படி அந்த குட்டை காய்ந்து இருக்கும்?”

“நல்ல கேள்வி சின்னு..குட்டி தேவதைகளைப் பார்த்த பின் எல்லாத்துக்கும் விடை கிடைக்கும்” என்றபடி இருவரும் பேசிக்கொண்டே  பூஞ்சோலையை அடைந்தார்கள் .

(தொடரும்…)