சுட்டிப் பெண் சின்னுவும், அவள் குட்டி நாய் ஜிங்கியும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சின்னு தன் கையில் இருந்த மஞ்சள் நிற பந்தை வீச, ஜிங்கி தாவி தாவி வாயால் பிடித்துக் கொண்டிருந்தான்.

அங்கு இருந்த வேப்ப மரத்தில், உட்கார்ந்துக் கொண்டிருந்த  சிட்டுக் குருவி “குக்கூ குக்கூ” என்று கத்த, இருவரும்  பந்தை கீழே போட்டு விட்டு, ஓடிச்  சென்று

அதுகூட பேசுவதை போல், இவர்களும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது , சின்னுவின் அம்மா “சின்னு, ஜிங்கிய கூட்டிட்டு உள்ள  வா,சாயந்திரம் விளையாடுவ “ என்று கூப்பிட்டார் .

இதோ வரேன் மா “, என்று சொல்லிவிட்டு அந்த குருவியை பார்த்து குக்கூ என்று கத்த அது பறந்து போனது.

மீண்டும் அம்மா கூப்பிட்டவுடன் உள்ளே சென்ற சின்னு கை, கால்களை அலம்பிவிட்டு சோபாவில் அசதியாக உட்கார்ந்தாள். ஜிங்கியும் சோபா அருகில் இருக்கும் அதன் இருக்கையில் உட்கார்ந்து,பிங்க் நிறத்தில் இருக்கும் அதனுடைய தண்ணீர் கோப்பையில் இருந்த தண்ணீரை நாக்கால் நக்கி நக்கி குடித்துக் கொண்டிருந்தது.

சின்னுவிற்கு பிடித்த பருப்பு சாதத்துடன், நல்ல மொறுமொருவலாக வறுத்த வெண்டைக்காயை வைத்து அவள் அம்மா ஊட்டிக் கொண்டே,”சின்னு பாப்பா சீக்கிரம் சாப்பிட்டீங்கனா, அம்மாவோட கடைக்கு வரலாம், இல்லனா அம்மா மட்டும் போயிட்டு வருவேன்”என்று சொல்ல சின்னு  கட கட வென்று சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை மொடாமொடவென குடித்தாள்.

“சின்னு தண்ணியை எப்பயும் உட்கார்ந்து குடிக்கணும்னு சொல்லிஇருக்கேன்ல” என்று சத்தம் வர நல்ல பிள்ளையாக உட்கார்ந்துக் குடித்தாள். கொஞ்சநேரத்தில் அம்மா பச்சை நிற சுடிதாரை மாற்றிக் கொண்டு வர, இவளும் நீல நிற கவுணுக்கு மாறினாள். ஜிங்கியை வீட்டில் கட்டிவிட்டு இருவரும் கடை தெருவிற்கு சென்றார்கள்.

கலர்கலரான பலூன்களும், டோரா புஜ்ஜி பொம்மைகளும் கொண்டிருந்த கடையை பார்த்தவுடன் சின்னு அவள் அம்மாவிடம், “ அம்மா எனக்கும் ஜிங்கிக்கும் பொம்மை வாங்கித் தாங்கப்ளீஸ் “ என்று கேட்டாள் .அம்மாவும் சரி என்று சொல்ல, சின்னு வாசலில் கட்டி வைத்திருந்த ஸ்மர்ப் பொம்மையை தொட்டு விட்டு உள்ளே சென்றாள்.

தங்க நிறத்தில் முடிகளைக் கொண்ட பார்பியை அவள் அம்மா எடுக்க ,” இது வேண்டாம் மா , அதுக்கு பக்கத்துல இருக்கும் ரெயின்போ கலர் பிரின்சஸ் முகம் பார்க்கிற கண்ணாடி வேண்டும் “ என்று சின்னு கேட்டாள். கடைக்காரர் ஜிங்கிக்கு எடுத்த எலும்பு பொம்மையையும்,கண்ணாடியையும்  பேக்   செய்து கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த சின்னுவை பார்த்து ஜிங்கி குதிக்க , அம்மா சங்கிலியை கழற்றினார் .

எப்பொழுதும் வெளியில் இருந்து வந்தால், ஜிங்கி பல நாள் கழித்து பார்ப்பது போலவே, துள்ளி குதிப்பான். அப்படியே இன்றும் செய்ய சீக்கிரமாக , பொம்மையை எடுத்து சின்னு தூர வீசனாள் . சந்தோஷமாக ஜிங்கி  அந்த புதுஎலும்பை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது.

கொஞ்ச நேரத்திற்கு பின், சின்னு ஜிங்கியை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றாள். ரெயின்போ கண்ணாடியை ஆசையாக ஜிங்கிக்கு காட்டும் பொழுது, கண்ணாடிக்குள் மிட்டாய்கள் நிரம்பிய நிலம் தெரிந்தது.

ஆச்சர்யமான சின்னு அந்த கண்ணடிக்குள் இருக்கும் மிட்டாயை தொட்டவுடன், இருவரும் அந்த மிட்டாய் நிலத்துக்குள் சென்றுவிட்டார்கள்.

==========================================================================================

நசீமா ரசாக்

தொடரும்…..