– சுஷில் குமார் 

அந்த ஒடுக்கத்து வெள்ளிக் கிழமையன்றுதான் நான் பெரிய மனுசி ஆகியிருந்தேன். என் அக்காமார்களுக்கும் என் அம்மாவிற்கும் அது ஒன்றும் அவ்வளவு பெரிய விசயம் இல்லை. குறிப்பாக என் அம்மாவிற்கு அந்த விசயம் தெரிந்ததிலிருந்து அவளது முகத்தில் அப்படியொரு வெறுப்பு, அல்லது கடுமை. என்னதான் இருந்தாலும் எனக்கு அது ஒரு மறக்க முடியாத நாள்தானே? இது எனக்கே எனக்கென உரிமை கொண்டாடிக்கொள்ளக் கிடைத்திருக்கும் ஒரு மிகப் பெரிய கௌரவம் இல்லையா?

“இத்தன கொமருகள வச்சிட்டு நா என்ன செய்வேன்? ஏற்கெனவே தெரண்ட ரெண்டுக்கே இன்னும் வழி தெரிஞ்சபாடில்ல..இதுல இந்தப் புள்ளயும் உக்காந்துட்டாளே…” என்று அம்மா தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தாள். உளுந்தங்களி கிண்டிக் கொண்டிருந்தாள், நல்ல ஒரு மணம்.

“நாட்டுக் கோழி முட்ட குடுக்கணும் மக்கா..பின்ன, கொஞ்சம்போல நல்லெண்ணெய குடிக்கக் குடுக்கணும்….உளுந்தஞ்சோறும் கறியும் ரெண்டு நாளைக்கிப் பொறவு குடுத்தாப் போறும்..பைசா இல்லன்னு நெனைக்காத, என்னா? எதாம் வேணும்னா என்ட்ட கேளுட்டி…நா தாறேன்..நீ இப்ப திருப்பித் தரணும்னு ஒண்ணும் இல்ல…பொறவு ஒனக்கு எப்ப முடியுமோ அப்ப தந்தாப் போறும்…செரியா? அடுப்புல ஒல கொதிக்கி…நா இன்னா வாறேன்…..சொல்ல மறந்துட்டேன், பிள்ளக்கிப் பக்கத்துல ஒலக்கையப் போடணும்…நா கொண்டாறேன்…இந்த மனுசனுக்கு வேற பசி பொறுக்காது..” என்றவாறு கிளம்பினாள் பக்கத்து வீட்டு ருக்கு அத்தை. அவள் இல்லாவிட்டாலும் அம்மாவிற்கு சிரமம்தான். ஏன், எங்கள் மொத்த குடும்பத்திற்கும் கூடத்தான். அப்படி அவள் வலிய வந்து உதவி செய்வதற்கு என்ன காரணம் என்று எனக்கு ஒருபோதும் புரிந்ததேயில்லை. அம்மாவும் அவளும் எதோ ஒட்டிப் பிறந்தவர்கள் மாதிரி தான்.

காலையில் கிட்டங்கிக்குச் சென்ற அப்பாவிற்குத் தெரியுமோ தெரியாதோ! அம்மா யாரிடமாவது சொல்லி விட்டிருப்பாள். அப்பாவிற்கு நான் தானே செல்லப் பிள்ளை! அக்காக்களிடம் எரிந்து விழுகிற அவர் ஒரு நாள் கூட என்னிடம் சிடு மூஞ்சியைக் காட்டியதில்லையே!

மூன்றாவதாக மகன் பிறப்பான் என்று கர்வமாக எல்லோரிடமும் சொல்லித் திரிந்தாராம் அப்பா. அம்மா எனக்காக மருத்துவமனையில் வலியில் துடித்த நேரம் அப்பா மிதமிஞ்சிய போதையில் “வருவாம் பாருங்கல சிங்கக்குட்டி…எங்கப்பன் மாசான மூர்த்தியே வருவாம் பாருங்கல லே…இன்னிக்கிப் பவுசு காட்டுக தொட்டிப் பயக்க அப்ப வாங்கல பாப்பம்…தாயளி, ஒரு பய நிக்க முடியாது பாத்துக்கோ…அவனுவளுக்க மெதப்பு…தொட்டிப் பயக்க…பைசா என்னல பைசா…நாளு மனுசன் வேணும்ல…எம் மவம்ட்ட வந்து காட்டுங்கல ஒங்க பவுசு மயிர…” என்று கத்திக் கொண்டிருந்தாராம்.

பிரசவம் முடிந்து மூன்றாவதும் பெண் குழந்தைதான் என்று தெரிந்ததும் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்க வேண்டும் இல்லையா? ஆனால், அடுத்த நொடியே, “வாங்கல லேய், தொட்டிப் பயக்களா…வந்திருக்கவ யாருன்னு தெரியுமால? எங்கம்மயாக்கும்…மத்த ரெண்டு அம்மைக்க கூட எங்க பேச்சியம்ம வெளயாட வந்துருக்கா பாருங்கல லேய்…பொம்பளப் புள்ளதாம்ல ஐசுவரியம்…நாளக்கி எனக்குக் கஞ்சி ஊத்துவால்லா என் ராசாத்தி…இந்நா வாரம்ல…பத்து கிலோ லட்டு வாங்கணும், எங்கம்ம பொறந்துருக்கா…” என்று சொல்லி ஓடினாராம்.

சரி, சரி…அப்பா பாசம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அக்காக்களை விட அப்பா என்னை ஏன் ஒரு படி மேலே வைத்திருந்தார் என்பதுதான் புரியவேயில்லை.

வீட்டில் நுழையும்போதே, “மக்ளே..” என்று அவர் குரல் கேட்கும். அக்காக்கள் வேண்டுமென்றே அடுப்பங்கரையில் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். எங்கிருந்தாலும் நான் சென்று ஒரு சொம்பு தண்ணீரைக் கொடுத்தால்தான் அப்பாவின் முகத்தில் ஒரு ஆசுவாசம் தெரியும். என்ன வாங்கி வந்தாலும் என் கையில் கொடுத்து, “பிள்ளைக்கி ரெண்டு..அக்காக்கு ஆளுக்கு ஒண்ணு, என்னா?” என்பார். ஒரு முறை கூட அக்காக்கள் என்மீது பொறாமைப் பட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை வயது வித்தியாசமும் காரணமாக இருக்கலாம்.

நான் உட்கார்ந்த சமயம் மூத்தவள் கல்லூரி மூன்றாம் ஆண்டில் இருந்தாள். அவளும் அடுத்தவளும் எங்கள் வீட்டிலிருந்த ஒரே பச்சை, சிவப்பு, நீல தாவணிக்கு அடித்துக் கொள்வதைப் பார்த்து நான் சிரித்த நாட்கள் உண்டு. எனக்குத் தண்ணீர் ஊற்றிய அன்று என்னைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் அந்த மூன்று தாவணிகளையும் கட்டியிருந்தார்கள்.

நான் நினைத்தது போலவே அப்பா நன்றாகக் குடித்து விட்டுத்தான் வந்தார். ஒரே ஆர்ப்பாட்டம்.

“மக்ளே…எங்க அம்ம..எம் மகராசி….எம் பேச்சியம்ம…லேய், வாங்கல லேய்…எல்லாத் தாயளி மவங்களும் வாங்கல லேய்…எம்புள்ள பெரிய மனுசி ஆயிட்டா ல லேய்..எங்கம்ம….எங்கம்ம…பத்துப் பவுனு செயினு போடுவம்ல…தங்கத்துல கொலுசு போடுவம்ல..இந்த ஏரியால எவனாம் பாத்திருக்கேளா ல பிச்சக்காரப் பயக்களா….நா போடுவம்ல எம்புள்ளக்கி….”

அம்மா உள்ளிருந்து, “ஆமா, குடிக்கது கஞ்சி..இதுல கொலுசு போடுவாளாம் கொலுசு…மூத்தவளுக்கு வாங்குன கடனே இன்னும் முடியல..இதுல பத்து பவுனு தாங் கொற…” என்று ருக்கு அத்தையிடம் புலம்பினாள்.

“நீ சும்மா இரிக்கா..பாவம் அண்ணேன்…குடிச்சிட்டு பொலம்பியாது அவருக்க ஆசையக் காட்டிட்டுப் போட்டும்..”

“ஆமா…அவ்வோ குடிச்சிட்டுப் பொலம்புவா…பொம்பளயோ நம்ம என்ன செய்ய? நமக்கு இந்தப் பொகையும் கிழிஞ்ச சாக்குந்தான் விதிச்சிருக்கு…ரெண்டாமத்தவளுக்கு ஒரு பொட்டுத் தங்கம் இருக்கா சொல்லு? நாளக்கி பெரியவளுக்கு ஒரு எடம் பாக்கணும்னா நம்மட்ட என்ன உண்டும்? எவனாம் ஓசில கெட்டிக் கொண்டு போனாத்தான்…”

“எக்கா…பையப் பேசு…பிள்ளேளுக்குக் கேக்கும்…”

“அவ்வொளுக்கு எல்லா வெவரமும் தெரியும் ருக்கு. நம்ம நெலம தெரிஞ்சா இந்தப் பிள்ளையோ நடக்கு..ஒண்ணும் சொல்லதுக்கில்ல…இந்த மனுசனுக்குத் தெரிஞ்சா கொன்னே போட்டுருவாரு…”

அம்மா என்ன சொல்கிறாள் என்பது எனக்குப் புரியவில்லை. பின்புறமாக நகர்ந்து உட்கார்ந்து கூர்ந்து கேட்டேன்.

“என்னக்கா ஆச்சி? தங்கம்லா நம்ம பிள்ளேள்…நீ யாம் இப்பிடிச் சொல்லுக?”

அம்மா சட்டென பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அக்காக்கள் இருவரும் உள்ளே ஓடிச்சென்று அவளைச் சமாதானம் செய்யும் சத்தம் கேட்டது. நான் எனது மூன்றிற்கு மூன்று கட்டத்திற்குள் உட்கார்ந்து, “எம்மா..எம்மா..எதுக்கும்மா அழுக…எம்மா..எம்மா…” என்று கத்திக் குழம்பியிருந்தேன்.

“சமானப்படுக்கா…என்னாச்சின்னு சொல்லு…மொதல்ல நீ ஏங்கத நிறுத்து…எக்கா..இங்கப் பாரு..நான் சொல்லுகம்லா…நீ கொஞ்சம் தண்ணியக் குடி மொதல்ல..” என்று அம்மாவைப் பிடித்து சிறிது தண்ணீர் கொடுத்தாள் ருக்கு அத்தை.   

வெளியே அப்பாவின் ஆட்டம் அடுத்த கட்டத்திற்குச் சென்றிருந்தது.

சற்று அமைதியாகக் கிடந்த அம்மா திடீரென எழுந்து மூத்த அக்காவைத் தலை முடியைப் பிடித்துச் சுழற்றித் தரையில் தள்ளி விட்டாள்.

“சவத்து மூளி…எங்கயாம் போயிச் சாவாம்ட்டி…அவளுக்குக் காலேஜு மயிரு…பொட்டப் புள்ளய கைய கால ஒடச்சிப் போட்டுருக்கணும்…நெயில் பாலீசும் பூவுமா நீ போவும்போதே எனக்குத் தெரியும்ட்டி…. நெயில் பாலீசு மயிரு…பிச்சக்காரவுள்ள…போயிரு பாத்துக்கோ…கொன்னே போடுவேன்” என்று சொல்லியவாறு அவளது மார்பில் எட்டி உதைத்தாள்.   

ருக்கு அத்தை குறுக்காக விழுந்து அக்காவைக் கட்டிக்கொண்டு, “எக்கா…பொம்பளப் புள்ளயக் கை நீட்டாதக்கா…ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிராம..கொமருக் காரியமாக்கும்…நாமளே ஊதிப் பெருக்கிரப் புடாது பாத்துக்கோ….” என்று சொல்லி அடுத்தவளிடம் கண்ணைக் காட்ட, அவள் சென்று அம்மாவைத் தன்னோடு சாய்த்துக் கொண்டாள்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டில் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை என்பது ஏனோ அப்பாவிற்கு வித்தியாசமாகத் தெரியவில்லை! ஒருவேளை அவருக்கு எப்போதுமே தெரியாதுதானோ என்னவோ! இல்லை, தெரிந்தும் தெரியாததுபோல இருந்திருப்பாரோ? அதனால்தான் அவர் அப்பாவாகவும் அம்மா அம்மாவாகவும் இருந்தார்களோ?

அக்காக்கள் இருவருக்கும் இல்லாத மாதிரி எனக்குப் பூப்புனித நீராட்டு விழா நடந்தது. அப்பா என்ன செய்தாரோ என்னவோ, ஒரு தங்கச்சங்கிலியைக் கொண்டு வந்து என் கழுத்தில் போட்டு விட்டார். “மக்ளே…அப்பா சொன்னமாரி பத்துப் பவுனு இப்போ போட முடியல மக்ளே..ஆனா, பிள்ளக்கி நா கண்டிப்பா ஆக்கித் தருவம் என்னா!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வெளியே சென்று நின்றார்.

சடங்கு முடிந்ததும் நிலைமை சரியாகும், என்ன நடக்கிறது பார்க்கலாம் எனக் காத்திருந்த சமயம். ஒருநாள் மதியம் மூத்தவள் ஆறடி உயரமான பயில்வான் போன்றிருந்த ஓர் ஆளுடைய கையைப் பிடித்துக்கொண்டு எங்கள் வீட்டின் முன் வந்து நின்றாள். என்னுடைய கண்களைத் தவிர்த்தவாறு அவர்களின் பின்னே நின்றிருந்தார் அப்பா. எனக்கு விசயம் புரிந்தாலும் அந்த உயரமான மனிதனின் முகத்தைப் பார்க்கத் துளியும் பிடிக்கவில்லை. என்ன சாதித்து விட்டோம் என இவர்கள் இப்படி மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது.

அம்மா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து விடப் போகிறாள் என நான் அவளருகே சென்று நின்றேன். ஒன்றும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்றவள் ஒரு தட்டைக் கொண்டு வந்து ஆரத்தி எடுத்து மிக இயல்பாக அந்த உயரமான ஆளுக்கும் அக்காவிற்கும் பொட்டு வைத்து உள்ளே அழைத்தாள். ருக்கு அத்தை அக்காவைத் தனியே அழைத்துச் சென்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். இரண்டாமவள் அடுப்பங்கரை வாசல் சுவற்றின் பின்னிருந்து வெட்கத்தோடு பார்த்து நின்றாள். என்ன செய்யவெனத் தெரியாமல் நான் சென்று அப்பாவின் அருகே நின்றேன். அந்த உயரமான மனிதன் அப்பாவின் அருகே கம்பீரமாக உட்கார்ந்திருந்தான்.

இந்த பெரிய மனுசியாகுதல் ஏன் இத்தனைக் குழப்பமானதாக இருக்கிறது? என் மனதில் ஏன் சம்பந்தமே இல்லாத எண்ணங்களும் காட்சிகளும் வருகின்றன? நேற்று வரை என்னோடு பல்லாங்குழி விளையாடியிருந்த அந்தச் செல்ல அக்கா இப்போது எங்கே போய் விட்டாள்? இரண்டாமவள் என்ன, திடீரென்று இப்படியொரு வெட்கத்தில் புதைந்து நிற்கிறாள்? இந்த புது ஆள் எதோ மிகவும் உரிமைப்பட்டவன் போல எங்கள் வீட்டில் வந்து உட்கார்ந்திருக்கிறான், அவன் மூஞ்சியும் அவனும். சூரன் திருவிழாவில் எரிந்து விழும் சூரனுடைய முகம் மாதிரி ஒரு முகம். அக்காவிற்கு ஏன் புத்தி இப்படிப் போய்விட்டது?

அது சரி. இனிமேல் என்ன ஆகும்? அக்கா இந்த வீட்டில் இருப்பாளா? இல்லை இந்த ஆளோடு சென்று விடுவாளா? ஒரு வேளை இங்கேயே இருந்தால், ஒரே வீட்டில் அதுவும் என் சடங்கிற்கு ஒதுங்கியிருக்கக் கூட இடம் இல்லாத இந்த வீட்டில் இந்தப் புதிய ஆளுடன் நாங்கள் எப்படி இருக்கப் போகிறோம்?

நான் நினைத்த மாதிரியேதான் எல்லாமும் நடந்தது. அம்மா அதிகாலையிலேயே பரபரத்து எழுந்து ருக்கு அத்தை வீட்டிற்குச் சென்று ஏத்தம் பழமும் பச்சை முட்டையும் வாங்கி வந்து பசும்பாலில் அடித்து அக்காவிடம் கொடுத்தாள். பல நாட்களுக்குப் பிறகு இட்லியும் சாம்பாரும் சட்னியும். நாட்டுக் கோழிக் குழம்பென்ன? பாயாசமென்ன? அடுத்த இரண்டு வாரங்களில் அப்பா என் சடங்கிற்காகப் போட்ட தங்கச்சங்கிலி என் கழுத்தை விட்டுக் கரைந்து போனது.

எனக்கு மட்டுமேயென சில மாற்றங்கள். அக்காக்களின் பழைய நீல நிறப் பள்ளிச் சீருடைப் பாவாடைகளைக் கிழித்து தடித்த பெட்டிக்கோட்டாகத் தைத்துக் கொடுத்தாள் ருக்கு அத்தை. சுத்தமாக இருக்கவேண்டுமென அவள் அடிக்கடி எனக்கு ஞாபகப்படுத்தியது வேறு எரிச்சலூட்டியது. வீட்டின் முன் பாண்டியாட யாருமில்லை. கருக்கல் வானத்தைப் பார்க்கக் கூடாது, சினிமாப் பாட்டை முணுமுணுக்கக் கூடாது, யார் வந்தாலும் ஓடிச் சென்று அடுக்களையில் ஒளிந்துகொள்ள வேண்டும், இதுபோக, அம்மா எனக்குச் சமையல் சொல்லிக் கொடுக்கவும் ஆரம்பித்தாள்.   

“அத்தானுக்கு என்ன வேணும்னு கேளு மக்கா..காப்பி போடவான்னு கேளு, போட்டி…” என்று அம்மா என் தோளைப் பிடித்துத் தள்ளி விட்டாள். எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. அந்த ஆளுடைய பார்வையும் சரியில்லை, பேச்சும் சரியில்லை. நான் சென்று தலையைக் குனிந்தவாறு, “அம்மா என்ன வேணும்னு கேட்டா..” என்றேன்.

“என்னம்மோ? சின்னக் கொழுந்தியா, அத்தான மொகத்தப் பாத்துக் கூட பேச மாட்டுக்கிய?” என்று கரகரப்பான குரலில் கேட்டார் அக்காவின் கணவர்.

நான் பதில் பேசாமல் நின்றேன்.

“செரி, செரி அழுதுறாதம்மா…எனக்கு ஒண்ணும் வேண்டாம்…நீயே போட்டுத் தருவன்னா சொல்லு…ஒரு குத்துப்போணி காப்பி கூடக் குடிப்பேன்…எப்பிடி…ஹிஹிஹி…”

எனக்கு எரிச்சலும் அழுகையும் வர உள்ளே ஓடிச் சென்றேன். உடல் முழுதும் மசுக்குட்டி ஊர்ந்ததைப் போல அரித்தது.

அக்கா என்னருகே வந்து, “ஏட்டி..ஏம் மக்கா அழுக? அத்தான் உரிமையா ஒன்ன எசலுகா, நீயும் பதிலுக்குப் பதில் நல்லாக் கேளு…இதுக்குப் போயி யாராம் அழுவாளா?” என்று என் தலையைத் தட்டினாள்.

அத்தானின் கிண்டலும் கொஞ்சல் பேச்சும் தொடர்ந்தது. என்னால் அதை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவேயில்லை. அக்காவிற்காகப் பொறுமையாகப் பதில் சொல்லி வைக்க ஆரம்பித்தேன்.

என் அப்பாவின் குரல் மற்றும் உருவம் இந்த வீடு முழுதும் நிறைந்து இருந்த நாட்கள் போய், அப்பா வீட்டில் இருக்கும் நேரம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. பெரும்பாலும் இரவுகளில் தாமதமாகவே வந்தார். குடி மட்டும் நின்ற பாடில்லை. ஆனால், முன்பிருந்த ஆட்டமும் பாட்டமும் வசைகளும் அவரிடமிருந்து காணாமல் போயிருந்தன. மூத்த பெண்ணிற்குத் தானாகவே திருமணம் செய்து வைத்த அப்பாவின் முகத்தில் ஏன் ஒரு மகிழ்ச்சியில்லை?

அக்கா எப்படி இந்த ஆளை விரும்பினாள்? எப்படிப்பட்ட அப்பா வளர்த்த அக்கா எப்படி இப்படிப் போய் விழுந்தாள்? ஒருவேளை, அந்த அப்பாவினால்தான் அவள் இப்படி ஆகிவிட்டாளோ? அந்தத் திருமணத்தில் ஏன் நாங்கள் யாரும் இல்லை?

இந்தக் கேள்விகள் எதற்கும் எனக்கு விடை கிடைப்பதற்கு முன் அந்த உயரமான மனிதர் மிகக் கீழான விசயங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

ஒருநாள் நள்ளிரவு, பாயில் புரண்டு கொண்டிருந்த போது இரண்டாமவளிடம் இருந்து விசும்பல் சத்தம் கேட்டது. நான் மெதுவாக நெருங்கி அவள் மீது கையைப் போட்டேன். அவளது உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. உடல் முழுதும் வியர்த்துக் கிடந்தாள். அவளது வயிற்றின் குறுக்காக என் கையைக் கொண்டு போய் தடவிக் கொடுத்தேன். ஆனால், அவளுக்கான நாட்களும் இல்லையே? சட்டென என் கையைப் பிடித்தவள் அதைத் தன் மார்போடு இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். சத்தமின்றிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். எனக்கு என்னவெனப் புரியாமல் அப்படியே அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டு உறங்கிப் போனேன்.

சில நாட்கள், நான் பள்ளிக்குச் செல்லும்போது தெருமுனையில் வந்து நின்று என்னைப் பார்த்துச் சிரித்தார் அக்காவின் கணவர். பின், பல நாட்கள். பின், தினசரி. நான் ஏதும் பேசிக்கொள்ள மாட்டேன். அவராகவே என் பின்னால்  நடக்க ஆரம்பித்தவர், பின் என்னருகே வந்து இணைந்து நடக்க ஆரம்பித்தார். என்னவொரு பாதுகாப்பு, இல்லையா? ஒருநாள் எதிரே வந்த அப்பா, என்னைப் பார்க்காமல் அவரைப் பார்த்து, “செரி தம்பி..” என்று மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து சென்றார்.

அத்தான் மாலை வீடு திரும்பும்போது அக்காவிடம் ஏதேனும் கொடுத்து, “குட்டிக்குக் குடு, என்னா?” என்று சொல்வார். அக்கா பாசமாக வந்து எனக்கு அதை ஊட்டி விட்டுச் செல்வாள். அவள் சென்றதும் நான் ஓடிச் சென்று அதைத் துப்பி விடுவேன். ஒருநாள் அப்படித் துப்பும்போது பார்த்துவிட்ட அக்கா அதன்பிறகு என்னிடம் பேசுவதைக் குறைக்க ஆரம்பித்தாள். காரணமேயின்றி என்னிடம் எரிந்து விழுந்தாள்.

என் பள்ளியிறுதித் தேர்வுக்கு முந்தைய வாரம். என் பிறந்த நட்சத்திர நாளன்று கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டில் நுழைந்தேன். முன்னறையில் யாருமில்லை. பிரசாதத்தை எடுத்து சுவற்றில் இருந்த சாமி படத்தின் முன் வைத்துக் கண் மூடி நின்றேன்.

“ஹேப்பி பெர்த்டே செல்லக்குட்டி..” என்று கத்தியவாறு என் தோள்களில் கைவைத்து என்னைத் திருப்பி இழுத்து ஓர் அட்டைப் பெட்டியை என் கையில் திணித்தார் அக்காவின் கணவர்.

நான் பயந்து போய்க் கத்திவிட அடுப்பங்கரையிலிருந்து எல்லோரும் வந்து ஒரு நொடி திகைத்துப் பின் சிரிக்க, எனக்கு அவமானமாக இருந்தது.

“எதுக்குப் பிள்ள கத்துன? அத்தான் கிஃப்ட் குடுத்துருக்கா, என்ன இருக்குன்னு தொறந்து பாருட்டி….” என்று மூத்தவள் சொல்லிவிட்டு உள்ளே செல்ல அம்மா என்னைப் பார்த்து நின்றாள்.

நான் அப்படியே நின்றேன். அத்தான் என் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்து அம்மாவின் முகத்தையும் இரண்டாமாவளின் முகத்தையும் ஒரு நொடி பார்த்துவிட்டு மீண்டும் அதை என் கையில் வைத்தார்.

“குட்டிக்கு குஷ்பு சுடிதாராக்கும் வாங்கிருக்கேன்…குஷ்புவே தோத்துப் போகப் போறா, பாரு…ஹிஹிஹி…”

அடுத்த சில நாட்களில் நடந்த நிகழ்வுகளை இன்றும் என்னால் சீரணிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. அழையா விருந்தாளிகளாய் யார் யாரோ வந்து போனார்கள். இல்லை, அழைக்கப்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். அத்தை என்றார்கள். ஒன்று விட்ட மாமா என்றார்கள். என் காதில் விழும்படியும் விழாதவாறும் என்னென்னவோ பேசினார்கள், சிரித்தார்கள்..

எனக்குப் படிக்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண்களாவது எடுத்து விடுவேன். எனக்கு ஆங்கிலம் நன்றாகப் பேச வேண்டும். எங்கள் ஸ்மிதா டீச்சரைப் போல ஆக வேண்டும். இன்னும் நிறைய, நிறைய ஆசைகள், கனவுகள்…

என்னை இறுதித் தேர்வு கூட எழுத விடாமல் ஓர் அதிகாலை எழுப்பிப் பட்டுப் புடவை கட்டிவிட்டு பூ வைத்து மருங்கூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த இன்னொரு உயரமான பயில்வான் போன்ற ஆளுக்குக் கட்டி வைத்தார்கள். ஆமாம், கட்டிதான் வைத்தார்கள்…அம்மா ஒரு பவுன் தங்கச்சங்கிலியை என் கழுத்தில் போட்டு விட்டாள். என் உடல் முழுவதும் மசுக்குட்டிகள். அந்தக் கோவில் சுவரெங்கும் மசுக்குட்டிகள். எனக்கு மிகவும் பிடித்த அந்த சிரித்த முருகன் சிலையை அன்றிலிருந்து இன்று வரை நான் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. மாலையிட்டு ஆரத்திப் பொட்டு வைத்து நான் வீட்டிற்குள் நுழைந்தபோது இரண்டாமவள் அடுக்களைச் சுவற்றின் பின் ஒளிந்துகொண்டு அதே வெட்கத்தோடு நின்றிருந்தாள். எனக்கு அவளது கருத்த முகம் தகதகத்தது போலத் தெரிந்தது.

சரி…விசயத்திற்கு வருவோம்..

இத்தனை ஆர்ப்பாட்டம் செய்து, ஒரு ஒட்டுமொத்தக் குடும்பத்தையே சிதைத்து அத்தனை எளிதாக ஒரு காதல் திருமணம் செய்து விட்ட மூத்தவளுக்கு இப்போது என்ன, ஒரு அறுபது வயதிருக்கும். நாற்பது வருடத் திருமண வாழ்க்கை. பெரிய விசயம்தான் இல்லையா? ஆனால், அப்படி அவள் என்னதான் சாதித்து விட்டாள்? ஏதேதோ வேலை செய்து முப்பது பவுன் திரட்டி தன் மகளுக்குத் தானே திருமணம் செய்து வைத்தாள். அதற்கான வட்டியை அடுத்த பத்து வருடங்கள் கட்டியிருப்பாள். ஒவ்வொரு செங்கல்லாக கடன் வாங்கிச் சொந்தமாக ஒரு வீடும் கட்டிவிட்டாள். இந்த நாற்பது வருடங்களில் அந்த உயரமான மனிதர் என்னதான் செய்திருக்கிறார்? தினமும் குடித்துக் கூத்தடிப்பதைத் தவிர, வக்கணையாக வாய்ச் சவடாலடித்துத் தின்று தீர்ப்பதைத் தவிர…எங்கே போயிற்று அவர்களது காதல்? சரி, எல்லாவற்றையும் விடுங்கள்…அக்கா அந்த உயரமான மனிதரிடம் கடைசியாகப் பேசியது எப்போதென்று தெரியுமா? பத்து வருடங்களுக்கு முன்…

இன்றைக்கும் ஒடுக்கத்து வெள்ளிக்கிழமை தான். பிள்ளைக்கு மஞ்சள் பூசித் தண்ணீர் ஊற்றியாகி விட்டது. அவளே கேட்டது போல நீலநிறக் காஞ்சிபுரப் பட்டும் எடுத்துக் கொடுத்தாயிற்று. தலை நிறையப் பூச்சூடி எங்கள் வீட்டுப் பேச்சியம்மனாக, என் அம்மாவாக, என் மூத்த அக்காவாக, என் இரண்டாமவளாக ஜொலித்து உட்கார்ந்திருக்கிறாள் என் செல்ல மகள். பரபரபரத்தவாறு குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறாள். அவளைச் சுற்றிலும் பச்சை, சிவப்பு, நீல நிறத் தாவணிகளால் கட்டமிட்டு அவளைப் பிடித்து உட்கார வைத்திருக்கிறேன். மூன்றடிக்கு மூன்றடியில் கட்டங்கள்.

அப்பாவை மனதில் நினைத்து, அவர் எனக்குச் சொன்னதைப் போல பத்துப் பவுன் தங்கச்சங்கிலியை எடுத்து அவள் கழுத்தில் போட்டுவிடும்போது நிமிர்ந்து என் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள், “அம்மா…பயமா இருக்கும்மா…இனி என்ன ஆகும்மா?”