பேராசிரியர் தி.சு.நடராசன் நேர்காணல்

நகர்வு

Thi. Su. Natarajan

சந்திப்பு: ந.முருகேசபாண்டியன்

படங்கள்: த.ரமேஷ், மதுரை

     மதுரை நகரின் தொன்மையான அடையாளமாக விளங்குகிற சமண மலைப் பின்புலத்தில் அமைந்திருக்கிற வீட்டில், பேராசிரியர் தி.சு.நடராசன் அவர்களைச் சந்தித்தபோது, உரையாடல் இயல்பாகத் தொடங்கியது. யோசிக்கும்வேளையில் வியப்பாக இருக்கிறது. நான், பேராசிரியரைச் சந்தித்து, நாற்பதாண்டுகள் கடந்த பின்னரும், எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், விமர்சனத்தில் இன்றளவும் எனக்கு அவர்  ஆசான். பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்று, இருபதாண்டுகள் கழிந்தவேளையில்- எண்பது வயது நிறைவான சூழலில்- தொடர்ந்து அவர்  எழுதிக்கொண்டிருப்பது சாதனை இல்லையா?   சமகாலப் படைப்பாளர்களான கோணங்கி, சு.வேணுகோபால், லட்சுமி மணிவண்ணன், ஜே.பி.சாணக்யா, உமா மகேஸ்வரி, மீரான் மைதீன், கண்மணி குணசேகரன், அ.முத்துலிங்கம், ஜெயமோகன், பிரபஞ்சன், ஆ.மாதவன், வண்ணதாசன் போன்றோரின் கதைகளை வாசித்து, அண்மையில் ’சிறுகதையெனும் வரைபடம்’ என்ற விமர்சன நூலைக் காத்திரமாக எழுதியுள்ளார். சிலப்பதிகாரம் காப்பியத்தை மறுவாசிப்புச் செய்கிறவர், வைதீக சமயம் குறித்தும் ஆழமான சமூக விமர்சனங்களை முன்வைத்துத் தொடர்ந்து  எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழ்ப் பேராசிரியருக்கு எழுத்துப் பணியில் இருந்து ஓய்வு என்பது ஒருபோதும் இல்லை என்பதை  தி.சு.நடராசன்  எழுதுகிற விமர்சனங்கள், உறுதி செய்கின்றன,

  நான் மட்டுமல்ல, பேராசிரியர்கள் அ.ராமசாமி, பா.ஆனந்தகுமார், சு.வேணுகோபால், பா.ரத்தினக்குமார், ஆ.பூமிச்செல்வம் எனப் பலரும் தி.சு.ந.வுடன் இணைந்து பல்லாண்டுகளாகப் பயணிக்கிறோம். தமிழ் இலக்கியக் கல்வியைப் பொருத்தவரையில், ’கேட்டல்’ என்பது முக்கியமானது. அந்தவகையில், ஆசிரியர்-மாணவர் உறவு, மகத்தானது. பேராசிரியர்-மாணவர் தொடர்பென்பது வெறுமனே வகுப்பறையுடன் முடிந்துவிடுகிற சமாச்சாரம் அல்ல. போன தலைமுறைப் பேராசிரியர்கள், தங்களுடைய மாணவர்களின் பணி, திருமணம், குடும்பம், குழந்தைகள் என எல்லாவற்றுடன் அக்கறை கொண்டிருந்தனர் என்பது இன்றைய தலைமுறையினர் அறியாதது. ஆசிரியரின் மேதைமையினால் ஈர்க்கப்பட்டு, அவருடைய புலமையுடன் தன்னையும் இணைத்துக்கொண்டு, தொடர்ந்து செயல்படுகிற மாணவர், காலப்போக்கில், ஆய்வுலகில் தனக்கான இடத்தை அடைந்திடுவார்.

    மதுரைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாக 1978 ஆம் ஆண்டில் பயின்றபோது, ’என்னய்யா எப்படி இருக்க?’ என்று புன்னகையுடன் கேட்ட பேராசிரியர் தி.சு.நடராசன் அணுகுமுறையில், இன்றளவும் பெரிய மாற்றம் எதுவுமில்லை. கடந்த அறுபதாண்டு காலத் தமிழ்ச் சமூகத்தின் சாட்சியமாக விளங்குகிற பேராசிரியரின் நேர்காணல் இலக்கியம், அரசியல், பண்பாடு, சமூகம் எனப் பல்வேறு தளங்களில் விரிந்துள்ளது.

வறண்ட நிலவெளியான திருத்தங்கல் ஊரில் பிறந்து வளர்ந்த நீங்கள் எழுபதுகளில் முனைவர் பட்டம் பெற்றது சாதாரணமானது அல்ல. உங்களுடைய கல்விப் பின்புலத்தில் குடும்பச் சூழலைப் பகிர்ந்துகொள்ளலாமா?

 வறட்சி என்பது மழையோடு சம்பந்தப்பட்டது என்றால் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் தீப்பெட்டி, பட்டாசு, அச்சு என்ற மூன்று தொழில்கள் இனிதே உறவோடு கூடியது எங்கள் ஊர். வெவ்வேறு நாட்டங்களையும் தேடல்களையும் இது தந்தது என்று சொல்லலாமே. எங்கள் குடும்பம், விவசாயக் குடும்பம். எளிய ஆனால் வசதியோடு வாழ்ந்த குடும்பம். வறுமையும் வறட்சியும் அலைஅலையாக வீசும். படிப்புக்கு எதிரான சூழல் குடும்பத்தில் இல்லை. ஆனால் படிப்பை வென்றுதான் எடுக்கவேண்டும். எங்கள் ஊரில் நான்தான் முதல் எம்.ஏ. பட்டதாரி; முதல் பிஎச்.டி. நான் படித்த தியாகராசர் கல்லூரியும் மாநிலக் கல்லூரியும் உந்துதல் தந்தன.

கல்லூரிக் கல்வியின்போது உங்களுடைய கவனம், மிழ் இலக்கியத்தின்மீது திரும்பியது தற்செயலானதா?

 தமிழின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஆன கவனம் தற்செயலானது என்று சொல்ல முடியாது. பள்ளிப் படிப்பின்போதே, சில நண்பர்களுடன் சேர்ந்து ‘மாணவன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தினோம். நன்றாக வந்தது. எங்கள் தமிழ் ஆசிரியர், செ.ரே.விந்திமூப்பனார் என்னுடைய தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்த்தார் என்று சொல்லவேண்டும்.

ஆய்வு மாணவராக நீங்கள் செயலாற்றிய காலகட்டத்தில் பேராசிரியர்களின் இலக்கிய அணுகுமுறையுடன், மாணவர்களுடனான உறவு பற்றி…

குறிப்பிட்ட இலக்கிய அணுகுமுறை என்று பேராசிரியர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை, அப்படி நம் அனுபவமும் எழுச்சியும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் பழைய-புதிய என்ற முரண்பாடுகள் இருந்தாலும் குறுக்கீடுகள் இல்லை. நான் தொல்காப்பியத்தில் ஆய்வு செய்தாலும், அந்தக் காலத்திலேயே கி.ராஜநாராயணனின் ‘கதவு’ என்ற கரிசல் கதைத்தொகுப்பு வெளிவந்தவுடன் அதுபற்றிய விமர்சனத்தை எழுதினேன்; வாசித்தேன். பேராசிரியரும் நண்பர்களும் பாராட்டினார்கள். தாமரையில் மதிப்புரை வெளிவந்தது. கல்விச்சூழல் மட்டுமல்லாது, நட்புச்சூழல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் எனக்குப் பின் வந்து சேர்ந்த செ.ரவீந்திரன் (டில்லி) து.சீனிச்சாமி ஆகியோரும் தற்கால இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். முக்கியமாக ரவீந்திரனைச் சொல்ல வேண்டும். அவர் நல்ல படிப்பாளி.

 உங்களுடைய ஆளுமை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்திய பேராசிரியர்கள் குறித்து …

 செல்வாக்குச் செலுத்தியவர்கள் என்றால் உடனிலையாகவும் எதிர்நிலையாகவும்  சேர்ந்தே வாசிக்க வேண்டும். தியாகராசர் கல்லூரியில் அரசியல் ஆரவாரம் அதிகம். பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் வித்தியாசமானவர். மாணவர்கள் அவரை நேசிப்பார்கள். அவர் மாணவர்களை நேசிப்பார். டர்பன் கட்டிக்கொண்டு கம்பீரமாக இருப்பார். முரட்டுத்தனமாகத் தோன்றும். ஆனால் அவரிடம் உள்ள எளிமையும் நேசமும் மறக்க முடியாது. அந்தக் கல்லூரியில் ஆரவாரத்திலிருந்து விடுபட்டு வந்ததே பெரிசுதான். மாநிலக் கல்லூரி அதிலிருந்து மிக வித்தியாசமாக இருந்தது. ஒருவகையான பெருமையும் கம்பீரமும் உடையதாக அப்போது அது இருந்தது. பேராசிரியர் க.மீனாட்சிசுந்தரம் ஒரு லட்சிய மனிதர்.  சோ.பாகீரதி, ச.சங்கரராசுலு முதலியவர்களும் அருமையான ஆசிரியர்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தோடும் தொடர்புகள் உண்டு. அந்தச் சூழலில்தான் பிஎச்.டி. கனவுகள் எழும்பி வந்தன.

 உங்களுடைய முனைவர் பட்ட ஆய்வு, தொல்காப்பியம் சார்ந்து சங்க இலக்கியக் கவிதைக் கோட்பாடு சார்ந்தநிலையில், நீங்கள் கண்டறிந்த  ஆய்வு முடிவுகள் என்ன?

அப்போதெல்லாம் ஆய்வுத்தலைப்பை விட்டேன், தொட்டேன் என்று ஒதுக்கிவிட முடியாது. ஆறுமாதம் கழித்துத்தான் தொல்காப்பியம் பற்றிய ஆய்வுக்கு வந்தேன். என்னுடைய ஆய்வு மேற்பார்வையாளர் மொ.அ.துரையரங்கனார் சங்க இலக்கியத்தில் தேர்ந்தவர். ஆனால் எனக்காக என்னுடைய தலைப்புக்காக அவரும் சேர்ந்து படித்தார். அப்போதெல்லாம் ஆய்வேடுகள் ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும். என்னுடைய நெறியாளர் மேற்பார்வையில்தான் வளர்ந்தேன். தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியத்திற்கும் பரஸ்பர உறவுகளும் மேன்மைகளும் உண்டு. எனவே, தொல்காப்பிய ஆராய்ச்சி, சங்க இலக்கியம் பற்றியதாகவும் அமைந்துவிட்டது. தொல்காப்பியம் இன்றும்கூடப் பொருத்தமாகவே இருக்கிறதே. என்னுடைய ஆராய்ச்சி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. புதியன கண்டறியும் உற்சாகத்தைத் தந்தது.

 எழுபதுகளில் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள், மரபிலக்கியம் சார்ந்து ஆய்வை மேற்கொண்ட சூழலில், நீங்கள் ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி போன்ற நவீனப் படைப்பாளர்களின் படைப்புகள் குறித்துக் காத்திரமாக விமர்சித்த சூழல் பற்றி… உங்களுடைய கவனம், நவீன இலக்கியத்தின் பக்கம் திரும்பியது எப்படி?

 எனக்கு ஆரம்பத்திலேயே தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன், லா.ச.ராமாமிருதம், ஆகியவர்களின் எழுத்துக்களில் ஆர்வம் உண்டு. தி.ஜா., மேலுள்ள ஈடுபாடு, நான் திருநெல்வேலியில் இருக்கும்போது, ‘ஆராய்ச்சி இதழ்’ தந்த  வெளியில் வளர்த்துக் கொண்டது. பேராசிரியர் நா.வானமாமலை, மார்க்சியத் திறனாய்வாளர், தொ.மு.சி.ரகுநாதன் முதலியவர்கள் தொடர்பால், எனக்குப் புதிய அணுகுமுறைகள் மீதும் புதிய எழுத்துக்கள் மேலும் ஈடுபாடும் திறனும் வளர்ந்தன என்று சொல்லவேண்டும்.  இந்த ஆய்வு ஈடுபாடுகளும் அணுகுமுறைகளும் கல்வி உலகம் அன்றியும், விரிவான நட்புவட்டத்தின் சூழலிலும் சேர்ந்து வளர்ந்தன. மதுரை வாசகர்  வட்டம்,  கலை இலக்கியப் பெருமன்றம் என்ற அமைப்புக்கள் இல்லாமல் நான் இல்லை. மேலும், அன்றைய மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு சி.சு.செல்லப்பா ஒரு முக்கியமான விருந்தாளி. மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது புத்தகச் சுமையோடு இங்கே வருவார். இவர், சி.கனகசபாபதிக்கு நெருக்கமானவர். அன்றே எழுத்து இதழில் தொடர்ந்து எழுதியவர் சி.கனகசபாபதி. மேலும் பல்கலைக்கழகத்துக்கு நிறைய எழுத்தாளர்களை அழைத்து வருவார். அவருக்காக அவர்கள் வருவார்கள். அன்றையத் துறைத்தலைவர், முத்துச்சண்முகம் பிள்ளை இந்தச் சூழலுக்கு ஆதரவாக இருந்தார். மதுரைப் பல்கலைக்கழகம் தற்கால இலக்கியம் பற்றி அக்கறைகள் செலுத்தியது, தமிழகக் கல்விச்சூழல் இதனை அறிந்திருந்தது. அது அன்றையக் காலம். இன்று பெருமூச்சு மட்டுமேவிட முடிகிறது.

 மார்க்சியச் சிந்தனைப் பின்புலத்தில் ஆய்வை மேற்கொண்ட நா.வானமாமலையுடன் உங்களுக்கு ஏற்பட்ட தொடர்பு என்னவாக இருந்தது? அன்றைய காலகட்டத்தில் ஆராய்ச்சி இதழில் வெளியான கட்டுரைகள் குறித்து உங்களுடைய அபிப்ராயம் என்ன?

 நா.வானமாமலை, சரியாகச் சொல்லப்போனால் ஒரு நிறுவனம். தமிழியல் ஆராய்ச்சி அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. மார்க்சியமே அவருடைய நோக்கமும் அணுகுமுறையும். மேலும், அவருடைய அக்கறை நாட்டுப்புறவியலிலும், கோட்பாட்டுவியலிலும் விரவிக்கிடந்தது. இது தமிழாராய்ச்சிக்குப் புதிய பரிமாணம். தெ.பொ.மீ.யின் மதுரைப் பல்கலைக்கழகம் அவரை அங்கீகரித்தது. அவருடைய நூல்கள் சிலவற்றைப் பல்கலைக்கழகம் பதிப்பித்துள்ளது. ஆராய்ச்சி இதழ், தமிழாய்வில் புதியவர்களைக் கண்டறிந்தது. புதிய துறைகளை ஊக்குவித்தது விவாதங்கள் செய்தது, தமிழாராய்ச்சியின் புதிய பரிமாணமாக இருந்தது. புதிதாக எழுத வருபவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தது.

 மார்க்சியத் தத்துவம்   உங்களுக்கு எப்பொழுது, யாரால் அறிமுகமானது? அந்தச் சூழலைப் பற்றிச் சொல்லுங்கள்

 என்னுடைய இயல்பான பின்புலம், பேராசிரியர் நா.வானமாமலை, மார்க்சிய ஆராய்ச்சியாளர் தொ.மு.சி.ரகுநாதன். இதுதவிரவும் என்னுடைய சக நண்பர்கள், ஆய்வு வட்டத்தைச் சேர்ந்த வெ.கிருஷ்ணமூர்த்தி… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மார்க்சியம், குரு சிஷ்ய பரம்பரையில் வருவதல்ல. அது அறிவோடுகூடிய ஓர் உணர்வு; அது ஓர் உண்மை; அது ஓர் அனுபவம். அப்படித்தான் சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.

 இந்திய பொதுவுடைமைக் கட்சியுடன் எப்பொழுது உங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது?  அந்தக் கட்சிக் கொள்கை ஈடுபாடு காரணமாக அந்த அமைப்பில் சேர்ந்தீர்களா?

பேராசிரியர் நா.வானமாமலையோடுதான் முதலில் எனக்குக் கட்சியோடு தொடர்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் முதலில்  ஐந்தாண்டுகள் பணி செய்தபோது கட்சியில் பரவலான தொடர்பு உருவானது. 1972-இல் மாவட்ட கட்சி மாநாட்டில், கட்சியின் ஒரு பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. நா.வா.தான் அதற்கு முக்கியக் காரணம். அது ஒரு முக்கிய நிகழ்வு. தொடர்ந்து, கட்சிக்கல்வி – அதற்காக நெல்லை மாவட்டத்தில் பல ஊர்களுக்கும் சென்றுவந்தேன். அது ஒரு நல்ல அனுபவம். அதன் பின்னர், விருதுநகர் மாவட்டக்குழு, கட்சிக்கல்விக்காகவும் பயிற்சிக்காகவும் என்னை மாஸ்கோவுக்கு அனுப்பலாமா என்று யோசித்தது. பேராசிரியர் நா.வா.விடம் அவர்கள் தெரிவித்தபோது, அந்தத் திட்டத்தை மறுத்துவிட்டார். என்னை உணர்ந்தவர், அவர். கல்வியுலகிலிருந்து என்னைத்  திசை திருப்ப அவர் அனுமதிக்கவில்லை. தனக்கு நெருக்கமாக உள்ள இளைஞர்கள் யார் மீதும் அவருடைய வழிகாட்டுதலும், பிரியமும் இப்படித்தான் இருந்தன. நா.வா. மிகவும் நேசம்கொண்ட  மனிதர்.

 இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான உறவை எப்படி அவதானிக்கிறீர்கள்?

இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான உறவு – பல தளங்களில் பல நிலைகளில் பின்னிக் கிடப்பதுதான். எப்படி, ஏன் என்று படைப்பாளிகளுக்கோ வாசகர்களுக்கோ தெரியாமல் இருக்கலாம். தெரிந்து மறைக்கலாம். அல்லது அதனையறிந்து கொள்வதற்கு இன்னும் அவர்கள் தயாராகமலிருக்கலாம். அரசியல் என்பது கட்சியோடு மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல; அது குறிப்பிட்ட கொள்கையையும் வழிமுறையையும் சேர்ந்தது.  அரசியல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்கிறபோதுதான், இந்தக்கேள்வி இன்னும் கொஞ்சம் சரியாக இருக்கும்.

 கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தில் உங்களுடைய செயல்பாடுகள் என்னவாக இருக்கின்றன? உங்களுடைய பேராசிரியர் பணியுடனும், விமர்சனத்துடனும் கலை இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள்,  பொருந்திப் போகின்றனவா?

 இப்போதிருந்து பின்னோக்கிப் பார்த்தால், கலை இலக்கியப் பெருமன்றம், மாநில அளவில், அப்படியொன்றும் இறுகிப்போன அல்லது கட்டி தட்டிப்போன அமைப்பாக இல்லை. மாநில அளவில் நான் பொறுப்பில் இல்லைதான். ஆனால் 2012 மே மாதம் கோவையில் நடைபெற்ற பொன்விழாச் சிறப்பு மாநாட்டில் கொடியேற்றி வைத்துத் தலைமையுரை நிகழ்த்தினேன். அது ஒரு பெருமைதானே! ஆனால் மதுரை மாவட்ட க.இ.பெருமன்றம் நுண்ணரசியல் கொண்டதாக இருந்தது. கட்டி தட்டிப்போனதாக இருந்தது. ஆனாலும் என்ன? பெரிய அளவில் பல கருத்தரங்குகள் நடத்தினோம். அவற்றிற்குப் பெரும்பாலும், நான்தான் தலைமை தாங்கியிருக்கிறேன். முக்கியமாக ஜெயகாந்தன் சிறப்புப் பேச்சாளராக வந்து கலந்துகொண்ட கருத்தரங்குகளில் நான்தான் தலைமை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்; என்னுடைய பேராசிரியப்பணி, க.இ.பெ.நிகழ்வுகளுக்குக் குறுக்கே நின்றதாகச் சொல்ல முடியாது பல்கலைக்கழகப் பணியை ஒழுங்காகச்செய்தால் பிரச்சினைகள் ஏன் வருகின்றன? மேலும், எங்கள் பல்கலைக்கழகம், அந்த விஷயத்தில் தாராளப் போக்குக் கொண்டதுதான். பூதக் கண்ணாடிகள் கிடையாது.

 எழுத்தாளன், சமூக அமைப்பில் பல்லும் திருகாணியுமாக இருக்க வேண்டும் என்ற லெனின் வரையறை, ரசியச் சார்பிலான சோசலிச யதார்த்த வாதம் பற்றிய உங்களுடைய அபிப்ராயம்?

மார்க்சியக் கலை இலக்கியச் சொல்லாடல்களில் மிகவும் முரண்பாடுகளோடு கூடிய  கலைச்சொல், இந்த ‘சோஷலிச யதார்த்தவாதம்’ சோஷலிச யதார்த்தவாதம் என்பதை முதலில் பிரகடனப்படுத்தியவர், மக்சிம் கார்க்கிதான். சோஷலிச அரசாட்சியை லெனின் பிரகடனப்படுத்தியபோது, கார்க்கி, இதனைக் கலை இலக்கிய முறையியலாகப் பேசினார். சோஷலிசத்தை உருவாக்குவதற்காகவா? சோஷலிசத்தைப் புரிந்து கொள்வதற்காகவா? சோஷலிசத்தைத் தொடர்ந்து கொண்டு செல்லுவதற்காகவா? இத்தகைய விவாதங்கள், அன்றே இருந்தன. தமிழகத்துச் சூழலில் இது இந்தப் புரிதலின் குழப்பத்தோடுதான் முன்வைக்கப்பட்டது. சரியான சூழலில் விளக்கத்தோடு வைக்கப்படுகிறபோதுதான் இத்தகைய கலைச்சொற்கள் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

 மகாநதி என்ற இலக்கிய இதழின் உருவாக்கம், பின்னர் காந்தள் என்ற ஆய்விதழ் வெளியீடு என்றநிலையில் தங்களின் இதழியல் பணிகள் குறித்த அனுபவங்கள்

 மதுரை மாவட்ட க.இ.பெ.வின் செயல்பாடுகளில் ஒன்றுதான் ‘மகாநதி.’ இரு மாதங்களுக்கு ஒருமுறை என்று இது வந்தது. யதார்த்த நெறிக்குட்பட்ட முற்போக்குப் படைப்புக்களையும், விமரிசனங்களையும் முன்னிலைப்படுத்தினோம்.  பரிணாமன், ஆ.சந்திரபோஸ், சோ.தருமன், பொன்மணி என்று பல புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினோம். பலருடைய கவனத்தையும் பாராட்டுதலையும் பெற்றது. இரண்டாண்டுகளுக்கு மேல் அது வந்தது. நுண்ணரசியல் காரணமாகத்தான் அது நின்றுவிட்டது. அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்துக் ‘காந்தள்’ இதழைக் கொண்டு வந்தோம். திறனாய்வுக்கென்று மட்டுமே வெளிவந்த இதழ். மிக நன்றாக வந்தது. கவிஞர் மீரா, நான், பாலா மூவரும் இணைந்து நடத்தினோம். அது, ஆரம்பித்த கொஞ்ச நாளில், மீரா இறந்துவிட்டார். பாலா கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை. பத்திரிகை நின்றுவிட்டது. பத்திரிகை ஆரம்பிப்பது லேசு. கொண்டு செலுத்துவது கடினம்.

 விமர்சனத் துறையில் உங்களுடைய முன்னோடிகள் யார்?

 உண்மையில் இவற்றைக் கல்வியாளன் எந்த முறையில்தான் எதிர்கொண்டேன்.  ஃபிரடெரிக் ஜேம்ஸன், டெர்ரி ஈசிள்டன் முதலிய மார்க்சிய திறனாய்வாளர்களை எனக்குப் பிடிக்கும். அமைப்பியலை மொழியியல் வழிநின்றுதான் எதிர்கொண்டேன். உண்மையில் மொழியியலுக்கும் அதற்கும் நெருக்கம் உண்டு. எனவே, அதிலே எளிதாக என்னால் ஈடுபட முடிந்தது. அமைப்பியல், ஆகப்பெரும் ஆராய்ச்சித்தளம்; முறையியல் அதிலிருந்து பின்னை அமைப்பியலுக்குப் போவது எளிதாக இருந்தது. அமைப்பியலின் மறுவாசிப்பாக சில எதிர்நிலைகளுடன் பின் அமைப்பியல் எதிர்கொள்ளப்பட்டது. இந்த இரண்டிலும் கட்டுரைகள் எழுதியுள்ளேன். இவற்றை அணுகுமுறைகளாகக்கொண்டு தமிழ் இலக்கியங்களைப் பற்றிய விமர்சனம் செய்துள்ளேன். பின் நவீனத்துவம், நவீனத்துவத்தின் வளர்ச்சி; நவீனத்துவத்தின் மறுதலிப்பு. திறனாய்வில் பின் நவீனத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதற்கு உற்பத்தித்திறன் அதிகம். இது அதனுள் சில, ஏற்றுக்கொள்ள முடிந்த விஷயம்தான்; சில மறுதலிக்க வேண்டியவை. எந்த ஒரு புதுமையையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முயலுவது, கடினம்; அது, பல பிழைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். பின்னை அமைப்பியலோ, பின்னை நவீனத்துவமோ, ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்ய முடியாதவை. ஏன், எப்படி என்ற மறுசிந்தனைகளுடன்தான் அவற்றைப் பார்க்க முடியும். ஜேம்சனும், டெர்ரி ஈசிள்டனும் அப்படித்தான் அவற்றை எதிர்கொண்டார்கள். மேலும் காலத்தின் வளர்ச்சியில் கொஞ்சம் நீக்குப்போக்காகத்தான் திறனாய்வாளன் யோசிக்க வேண்டியிருக்கிறது. சமூக பொருளாதார அரசியல் களங்களில்  எதுவும் குந்தமும் விளைவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவை எச்சரிக்கையாகக் கொள்ளப்படாவிட்டால், கொள்கை சார்ந்த குழப்பங்கள் ஏற்பட்டுவிடும். எட்வர்டு செய்யது முன் கொண்டுவந்த பின்-காலனியம் அதிகம் பரிசீலிக்கப்படவில்லை. காலனியத்திற்கும் பின்னைக்காலனியத்திற்கும் இடையில் உள்ள உறவுகளும், முரண்பாடுகளும் அவ்வளவு உயிரோட்டமானவை அல்ல. இப்படி நிறைய அணுகுமுறைகளும், கொள்கைகளும் வந்துபோகும் அதற்காகக் கதவுகளை மூடி வைத்துவிடக்கூடாது. ஒரேயடியாகத் திறந்துவைத்து விடவும் கூடாது. எல்லாவற்றையும் மார்க்சியப் பின்புலத்தோடு பரிசீலனை செய்து கொள்வது நல்லது.

 மு.வரதராசன் எழுதிய இலக்கிய மரபு, இலக்கிய விமர்சனம், அ.ச.ஞானசம்பந்தம் எழுதிய இலக்கியக் கலை, தா.ஏ.ஞானமூர்த்தி எழுதிய இலக்கியத் திறனாய்வியல் போன்ற விமர்சனப் புத்தகங்களை வாசிப்பதனால், படைப்புகளை விமர்சிக்க முடியாது; அவை மொக்கையானவை என்ற கருத்து, சரிதானா

 நீங்கள் சொன்ன மூன்று புத்தகங்களும், படைப்பிலக்கிய விமர்சனத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. நோக்கமே, பாடப்புத்தகங்கள் எழுதுவதுதான். மேலை நாட்டுப் புத்தகங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாமலே அவற்றை மூலமாகக்கொண்டு எழுதுவதோடு திருப்திபட்டுக் கொண்டார்கள். படைப்பாளர்களை வளர்ப்பது இவர்களின் வேலை அல்ல. இதனால் நட்டம், வளர் இலக்கியத்திற்கும், வளர்கின்ற அறிவாளிக்கும்தான். விமர்சனம் என்பது தட்டையானதோ, குட்டையானதோ அல்ல. அது, படைப்பிலக்கியம் போன்றே உயிர்ப்புடையது, உணர்வுடையது. மு.வரதராசனார்க்கும் அ.ச.ஞானசம்பந்தத்திற்கும் படைப்பிலக்கியமோ விமர்சனமோ ஒரு தளம் அல்ல. அவர்களுக்கு உதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர்கள் ஆங்கிலத்தில் பாடப்புத்தகங்கள் எழுதிய வின்செஸ்டரும், டபூள்யூ ஹெச். ஹட்சனும்தான்.  இதில் துரதிருஷ்டம் – மு.வ. ஏற்கனவே சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர். அப்படியிருந்தும் இவற்றை ஏன் அவர் பின்புலங்களாகச் சொல்லவில்லை? ஆச்சரியமாக இருக்கிறது.

எழுபதுகள், எண்பதுகள் காலகட்டத்தில் தமிழ் பயின்ற மாணவர்கள், ஒருவகையில் தீவிரமான  மனநிலையுடன் செயல்பட்டனர். இன்று இணையம் உள்ளிட்ட வசதிகள் வந்த பின்னரும்கூட அரைத்த மாவையே அரைக்கிற வேலை, வெட்டி ஒட்டுதல், நகலெடுத்தல் போன்றவை ஆய்வில் பெருகியுள்ளதற்குக் காரணம் என்ன?

 எழுபதுகளின் காலகட்டத்தில் ஒரு தேவை இருந்தது. போதாமை, நிறைவு கொள்ளாமை, தங்களை வெளிக் காட்டிக்கொள்ள வேண்டுமென்ற எழுச்சி எல்லாம் இருந்தன. வெளிகள் திறந்து கிடந்தன. 2000களின் காலகட்டத்தில் இணைய தளங்கள் அறிவின் அகலங்களில் சாதனைகள் புரிந்துகொண்டிருக்கின்றன. இறக்குமதிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எல்லாம் கைமேல் கிடைப்பதாக ஒரு பிரேமை தோன்றுகிறது. இப்படி ஒரு நினைப்பு வருகிறபோது, ஆர்ப்பாட்டமும் உண்மையின் மீது  அசமந்தமும் கிடைத்துவருகிறது. பிரபலங்கள், செல்வாக்குகள், வெளியீட்டுச் சாதனங்களின் வசதிகள் விளம்பரப்படுத்தும் தந்திரங்கள் எல்லாம் கிடைத்துவிடுகிறபோது, நகல் எழுத்துக்கள் நர்த்தனம் போடுகின்றன. ஊதுகாமாலைகள், மரியாதைக்குரியவை போல ஆகிவிடுகின்றன.

தமிழிலக்கியப் பரப்பில் காத்திரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டிய முக்கியமான ஆய்வுக் களங்கள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

பிஎச்.டி என்ற பட்டத்துக்கும், வேலை கிடைக்க வேண்டுமே என்ற வில்லங்கத்துள்ளும் துவண்டு போய்க் கிடக்கிறது, இந்த ஆய்வும், ஆய்வுக்களமும். இதற்குள் காத்திரமான ஆய்வுக்களங்களைத் தேட வேண்டுமே? யார் ஆய்வு செய்யப் போகிறார்கள்? எதற்காக ஆய்வு செய்யப் போகிறார்கள்? என்பதுடன் சம்பந்தப்பட்டது, இது. உரையாசிரியர்களைப் பற்றிய ஆய்வு இன்னும் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. முக்கியமாக சேனாவரையர், இளம்பூரணர் போன்றவர்களின் உரை கூறும் பண்பு, மொழிப் புலமை, தத்துவச் சார்புகள். நச்சினார்க்கினியர் பற்றி மொழியியல் துறையில் ஆய்வு நடந்திருக்கிறது, ஆனால், அவருடைய இலக்கியப் புலமை, வருணாசிரமக் கொள்கை சார்பும் சார்பின்மையும் சரியாக ஆராயப்படவில்லை. பிற்காலச் சிற்றிலக்கியப் படைப்புகளில் பாளையக்காரர், ஜமீந்தார் பற்றிய பேச்சுகள் அதிகம். பாலியல் அம்சங்களும் நிரம்ப உள்ளன. காலம் திசைமாறுகிற பகுதியில், ஆய்வு மேற்கொள்ளும்போது, புதிய சேதிகளும், இலக்கிய முயற்சிகளும் நிறைய வெளிப்படும், இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வளர்ச்சிக்குப் பின்புலமாக விளங்கிய படைப்புகள் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் இல்லை. அவை முக்கியம் என்று நினைக்கிறேன்.

விமர்சனப் பரப்பில் உங்களுடைய  வழிகாட்டுதலால் உருவாகி, இன்று தொடர்ந்து இயங்குகிற மாணவர்கள் குறித்துச் சொல்லலாமா?

ஏன் சொல்லக்கூடாது? வலுவுடனும் வாகுடனும் இயங்குகின்ற – ஒரு காலத்திய – மாணவர்கள் ரொம்பப் பேர்.  அது, மிகவும் பெருமையுடனிருக்கிறது. தனித்தனியே அவர்களின் பெயர்களைச் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். இவர்களைக் கடந்து விமர்சனம் யோகவில்லை. கோட்பாட்டு அளவில், அணுகுமுறையில் பெருமிதங்களோடு, புதியன கண்டு சொல்லும் ஆற்றலோடு இவர்கள் வலம் வருகிறார்கள். சரியாகச் சொல்லப்போனால், எனக்கு இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கின்றன. நான் தொடர்ந்து நல்லபடியாக விமர்சிக்கிறேன் என்றால், அதற்கு இவர்கள்தான் காரணம் என்பேன். சளைத்துவிடக்கூடாதே – என்ன சொல்லுகிறீர்கள்?

போலந்து நாட்டில் வார்சா பல்கலைக்கழகத்தில் நீங்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சூழலில் எதிர்கொண்ட வித்தியாசமான அனுபவங்கள்

வார்சா பல்கலைக்கழகம், இங்கிலாந்து அல்லது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மாதிரி அல்ல. கீழைநாட்டுப் பண்பாட்டின் விழுமியங்களோடு அவர்கள் இருந்தார்கள். அன்பு, பாசம், மரியாதை எல்லாவற்றிலும்தான். சிகரெட் பிடித்தால்கூட மிகவும் தள்ளிப்போய்த்தான் புகைப்பார்கள். காதல், கீதல் எல்லாம் அப்படித்தான். விரைவாகத் தமிழில் பயிற்சி எடுத்துக்கொள்ளும் ஆர்வம் இருந்தது. நான் என்னுடைய பணிக்காலம் முடிந்து கிளம்புகிறபோது, அழுது கண்ணீர்விட்ட மாணவர்கள் உண்டு. ஆசிரியர்கள் உண்டு. இன்னும் அவர்களின் முகம் தெரிகிறது. உண்மையான நேசம், உயர்ந்த பண்பாட்டின் அடையாளம்தான்.

பல்கலைக்கழகப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து கவிதையெனும் மொழி, தமிழகத்தில் வைதீக சமயம், சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, தமிழில் சிறுகதையெனும் வரைபடம், உரையாசிரியர்கள் போன்ற காத்திரமான நூல்களை எழுதுவதற்கான பின்புலம் பற்றி..

காத்திரமான பின்னணி என்ன? எல்லாவற்றிலும் சேர்த்துத்தான் சொல்லவேண்டும்; எழுத வேண்டும் என்ற தூண்டுதல். நன்றாக எழுதவேண்டுமே என்ற ஒரு துடிப்பு. சங்ககாலம், தொல்காப்பியம் என்று மட்டுமல்லாமல், பக்தி இலக்கியம், காப்பியம், நாவல், சிறுகதை, கவிதை, இலக்கியக் கொள்கை, கோட்பாடு – எல்லாவற்றிலும் எழுதியாக வேண்டும் என்ற  சாதனையோடுகூடிய  பேரார்வம். பரப்பு, பெரும்பரப்பு, தமிழர் பரப்பு – எனக்கு எல்லாவற்றிலும் தடம்பதிக்க வேண்டும் என்ற துடிப்பு உண்டு. மற்றவர்களின் ஆராய்ச்சிப் பரப்பைவிட,  நான் கைக்கொண்ட பரப்பு, நிச்சயமாகப் பெரும் பரப்புத்தான் என்று எனக்குத் தோன்றவேண்டும். தமிழில் சிறுகதையெனும் வரைபடம் – பரவாயில்லை; நல்ல நூல்தான். தமிழ்ச் சிறுகதைகள், பரப்பு என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல், சொல்லுகிற சேதிகள், படைப்பு உத்திகள், நேர்த்திகள் இப்படிப் பல விஷயங்களில் சாதனை புரிந்திருக்கிறது. புதிய பரிமாணங்களுடன் அடையாளப்பட்டிருக்கிறது. வெறுமனே ஆராய்ச்சியாக மட்டுமல்ல, புதிதாகக் கதைகள் எழுத வருவோர்க்கு  உற்சாகத்தையும் வழிகாட்டுதலையும் தரவேண்டும் என்ற ஆசையும்  இந்த நூலில் உண்டு.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியான உங்களுடையதமிழில் சிறுகதையெனும் வரைபடம்நூலில் புதுமைப்பித்தன் தொடங்கி கோணங்கி, லட்சுமி மணிவண்ணன், ஜே.பி.சாணக்யா என இருபத்தாறுக்கும் கூடுதலான சிறுகதைப் படைப்பாளர்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய வாசிப்பு அண்மைக்காலத்தியதாக இருப்பது ஆச்சரியமானது. இது குறித்து

வாசிப்புக்கள் அண்மைக் காலத்தியப் படைப்புக்களைச் சேர்த்து அனைத்துக் கொண்டிருக்கின்றன; என்பது  உண்மைதான். இதற்கு ஒரு காரணம், என்னை முந்திக்கொண்டு வரும் என் மாணவர்கள்தான். அவர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டாமா?தமிழில் சிறுகதை எனும் வரைபடம் எந்த நூலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் வெறுமனே திரும்ப விளக்கவில்லை. மாறாக விமரிசனம் செய்திருக்கிறேன்; விவரித்திருக்கிறேன். முடிந்த அளவுக்குப் பல தரப்புக்களைப் பலவிதங்களில் அணுகியிருக்கிறேன். என்னுடைய இந்த வாசிப்புக்களில் இடைவெளிகள் உண்டு.  இந்த இடைவெளிகளின் ஊடே புகுந்து நீங்கள் புதிய விஷயங்களைக் கண்டு சொல்லமுடியும். அவை உங்களுடைய வாசிப்புக்களுக்கு அறைகூவல் விடும். அதுமட்டுமல்ல, புதிதாக எழுதி வருகிறவர்களை யோசிக்கவைக்கும். எந்த நல்ல நூலுக்கும் இடைவெளிகள் இருக்கவேண்டும் என்று நினைக்கிறவன் நான். சிறுகதைகள் இன்னும்  ஆழமாகிக் கொண்டிருக்கின்றன; விசாலமாகிக் கொண்டிருக்கின்றன. விமரிசனங்களுக்கு இன்னும் வேலை நிறைய இருக்கிறது.

 தமிழர் மரபு, சங்க காலம் முதலாக வைதிக சமயத்துடன் சமரசம் செய்துகொண்டிருப்பதைப் படைப்புகள் மூலம் அறிய முடிகிறது. தமிழகத்தில் வைதீக சமயத்தின் தாக்கத்தை ஆழமாகக்  கண்டறிந்து நூல் எழுதியன் பின்புலமாக  இருக்கிற அரசியல் என்ன?

தமிழர் மரபு, சங்ககாலம் முதலாக வைதீக சமயத்துடன் சமரசம் செய்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறீர்கள். சண்டைகளும் சச்சரவுகளும் எந்த இயக்கப்போக்கிலும் உண்டுதான். ஆனால் வைதீகப் பனுவல்களும் வைதீக மரபும், ஏதோ அலாதியானது, அநாதையானது என்று நீங்கள் கருதுவதுபோல் தோன்றுகிறது. ஆனால் வைதீக சமயங்கள் எனும் நிலைப்பாடு, தமிழ் மரபோடு சேர்ந்ததுதான். ஆரியர் வருகையின் ஆர்ப்பரிப்பில் தமிழ் அல்லது திராவிடம் என்பது தெற்கு நோக்கிப் பின்னடைவு அடைந்தாலும், அதன் பங்களிப்பு வேதங்களில் சொல்லாடல்களில் இல்லாமல் இல்லை.  நான்கு வேதங்களும் ஒரே மாதிரியானவை அல்ல. இந்திரன் வைதீகமரப ஆட்சி செலுத்துகிறபோதே செல்வாக்கை இழந்துவிட்டான். உருத்திரனும் விஷ்ணுவும் வைதீகப் பனுவல்களில் பெருங்கடவுள்கள் அல்ல. சிவன் வருகிறான். அவனுடைய வைதீக சமய நுழைவு அமர்க்களத்துடன் அமைந்துவிட்டது. அவனோடு சக்தி ஒரு தெய்வம் என்ற சொல்லாடலுடன் உள்ளே நுழைகிறது. திருமால், விஷ்ணு கலப்பு ஏற்படுகிறது. முருகன் எனும் தமிழ்மரபின் ஆக்கம் கந்தனாக – சுப்பிரமணியன் – சம்ஸ்கிருதப் பனுவல்களுக்குள் நுழைகிறது. ஐயை, காளி, மாரி முதலிய பெண் தெய்வங்கள் அடையாள மாற்றத்துடன் சம்ஸ்கிருத மரபுக்குள் நுழைகிறார்கள். அனங்கு எனும் வடிவம்கூட சம்ஸ்கிருத மரபுக்குள் அடையாள மாற்றத்துடன் உள்ளே நுழைகிறது. சம்ஸ்கிருத மரபுக்கு சமூக நகர்வுகள் அதிகம்தான். இது ,தமிழில் மட்டும் நடக்கவில்லை. வங்காளம், அசாமியம் முதற்கொண்டு கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் முதலிய மொழிகளிலும் ஏற்பட்டிருக்கிறது. வைதீக சமயம் என்பது இன்று இந்துசமயம் என்ற பெயரைத் தாங்கிக்கொண்டிருக்கிறது. அரசியலுக்கு இது தோதாக இருக்கிறது.

 இலக்கியப் படைப்புகளில் செயல்படும் நுண்ணரசியலை எப்படி அவதானிக்கிறீர்கள்?

இலக்கியப் படைப்புக்களில் நுண்ணரசியல் என்பது இன்று அல்ல, முந்தா நாளே நடந்து கொண்டிருந்த ஒரு விஷயம்தான். ஒரே நோக்கம், ஒரே குறிக்கோள், ஒரே தளம் என்றாலும் நுண்ணரசியல்கள் தவிர்க்க முடியாதவை என்பது போலாகிவிட்டன. சைவம் பற்றிய சங்கதிகளைப் பாருங்கள். சமணத்தை வீழ்த்திவிட்டு சைவத்தை நிலைநிறுத்திக்கொள்ளத் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தீவிரமாக முயன்றார்கள். உண்மைதான். ஆனால் அவர்களுக்குள் நுண்ணரசியல் எவ்வளவு சாதுரியமாக நடந்தது தெரியுமா? சொல்லாமல் கொள்ளாமல் சண்டை நடந்ததே தெரியுமா? நாயன்மார்கள் 63 பேர், இந்தப் பட்டியலுக்குள் மாணிக்கவாசகரை, நெஞ்சை உருகவைக்கும் அவருடைய திருவாசகத்தை உள்ளே விட்டார்களா? 63 பேர் பட்டியலுக்குள் திருஞானசம்பந்தருடைய உறவினர்கள் எல்லாம் இருக்கிறார்கள். நாவுக்கரசருடைய உறவினர்களைக் காணோமே? அந்தப் பட்டியலே நுண்ணரசியலின் மதிப்புத்தானே. நுண்ணரசியல், உண்மை வரலாற்றைக் கெடுத்து விடுகிறது. தமிழில் நாவல் இலக்கியத்தைப் பாருங்களேன், ராஜம் அய்யரைத் தூக்கிக் காட்டுபவர்கள் மாயூரம் வேதநாயகம் பிள்ளையை மறுதலித்துவிட்டார்களே. புதுமைப்பித்தனே இந்த அரசியலை நிகழ்த்தியிருக்கிறாரே. மௌனியைத் தூக்கிப்பிடிக்கிறவர் அதற்காகத் தெரிந்தோ, தெரியாமலோ திருமூலரைக் கொண்டுவந்து சேர்க்கிறார். கு.ப.ராவும் புதுமைப்பித்தனைக் கண்டுகொள்ளவில்லையே. அவர் மௌனியைவிட  நல்ல, வலுவான எழுத்தாளராயிற்றே. அதனால்தான் கண்டுகொள்ளவில்லையோ என்று யோசிக்க வைக்கிறதே. இலக்கியத் தளத்தில் நுண்ணரசியல் என்பது இலக்கியம் என்ற வெளிக்கு ‘நெகிழி’ (பிளாஸ்டிக்) குப்பைகைள்.

 தமிழ் மொழி காலந்தோறும் வேற்று மொழிகளுடன் போராடி, தனது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல் காலகட்டத்தில் நுகர்பொருள் பண்பாடு ஆதிக்கம் செலுத்துகிற சூழலில், ஆங்கிலத்துடன் எதிர்வினையாற்றி, நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தமிழ்மொழி, காலந்தோறும் வேற்று மொழிகளுடன் போராடி வந்திருக்கிறது. தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்கிறீர்கள். கேள்விக்குள்ளேயே பதிலிருக்கிறது. ‘விதி விதியே தமிழ்ச்சாதியை என் செயப் படைத்தாயடா…’ என்கிறீர்கள். இப்பொழுது இந்தி மொழியால் ஆபத்துக்குரிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தி மொழியினால் மட்டுமல்ல. இங்கே தமிழ்நாட்டிலுள்ள பணம் பிடுங்கி அரசியல்வாதிகளால் முக்கியமாக இது நிகழ்கிறது. பொருளாதாரப் பேராசைகள், சமயம், சாதி, தான் என்ற அகந்தை எல்லாம் கூடி நின்றுதான் தமிழை மட்டுமல்ல, மலையாளத்தை, தெலுங்கை, கன்னடத்தை, வங்காளத்தையெல்லாம் நிலைகுலைய வைக்கின்றன. அரசியல், பேரினவாத அரசியல் கை ஓங்கியிருப்பது போல் தோன்றுகிறது. நம்பிக்கை வையுங்கள் . இதற்கெல்லாம் மாற்றுப் பிறக்காதா என்ன? ஆங்கிலத்துடன் எதிர்வினையாற்றியபோது அது, வேற்று நாட்டு ஆதிக்க அரசியல்.  போராடுவது லேசு. இன்றுள்ள நிலைகள் வேறு; ஒரே தேசத்துக்குள் நிகழ்வது – கொஞ்சம் சாதுரியமாகவும் சரியான திட்டத்துடனும் காய்களை நகர்த்தவேண்டும். உள்முரண்பாடுகள், வெளிமுரண்பாடுகளைவிடப் பலமானவைதான். விதியை நம்புவதா? சுயமான பலத்தை நம்புவதா? புருவங்கள் நெரிகின்றனவோ? ‘இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்‘.

மதஅடிப்படைவாத அரசியல், ஊடுருவிக்கொண்டிருக்கிற இன்றைய சமூகச் சூழலை இலக்கியவாதியாக எங்ஙனம் எதிர்கொள்கிறீர்கள்? இத்தகைய சூழலில் தமிழர் பண்பாடு, தமிழர் அடையாளம் தமிழர் மரபு போன்ற சொல்லாடல்கள், தாக்குப் பிடிக்குமா?

இந்தியாவில் மதவாத அரசியல் தனியாக இல்லை. சாதி, இனம், வட்டாரம் என்ற நிலைகளோடு சேர்ந்துதான் பகைமையை நிகழ்த்துகிறது. இது, மதவாதிகளுக்குக் கடினம்தான். இந்தியா அடிப்படையில் பன்முகத்துவம் கொண்டது. பலவாகிய நிலைகளுடன் ஆனால் ஆக்கப்பட்ட ஒரு தேசம் இது. அடிப்படை மதவாத அரசியல் வெற்றி பெறுவது என்பது கடினம். அதனால்தான், இது தனியாக வரவில்லை. பெருமுதலாளித்துவம், கார்போரைட் செக்டார் முதலியவற்றுடன் கைகோர்த்துக் கொண்டுதான் வருகிறது. இது ஆரம்பத்தில் வெற்றி ஈட்டுவதாகத் தோன்றும். ஆனால் இது, முரண்பாடுகளுடைய கூட்டணி. கார்போரைட் முதலாளித்துவத்துக்குப் பேராசைகள் உண்டு. உலகம் தழுவிய திட்டங்கள் உண்டு; நெருக்கடிகளும் உண்டு. இது சிறு தேசியங்களை, சிறு இனங்களை அழிக்க முற்படும் என்பது உண்மைதான். ஆனால், யாரோடு கூட்டுச்சேர்ந்து எதுவாக இருந்து என்பதில் முரண்பாடுகள் ரொம்பவே உண்டு. இந்தியா முரண்பாடுகள் நிறைந்த நாடு. யார், முதல் எடுக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரியாது. மகாராஷ்டிர அரசியல் இந்தியாவில் அதிசயமில்லை. நாளை இது, குஜராத்திலும் நடக்கலாம்; உ.பி.யிலும் நடக்கலாம், இதில் தமிழர் பண்பாடு, தமிழர் மரபு என்பது எப்படி இயங்கும் – எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனென்றால் தமிழக அரசியல், இன்று நிதானித்துப் பார்க்கமுடியாத கேவலங்கள் கொண்டதாக விளங்குகிறது.

ஞானபீடம், சாகித்ய அகாதெமி போன்ற அமைப்புகளின் செயற்பாடுகளில், இணைந்து தாங்கள் செயல்பட்டபோது, உங்களுடைய  நிலைப்பாடுகள் என்னவாக இருந்தன? அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்

  நான், சாகித்ய அகாதெமி உறுப்பினராக இருந்தபோது, பிற உறுப்பினர்களுடன் சேர்ந்து, பல புதிய திட்டங்களைச் செயல்படுத்தினோம். புதிய இலக்கிய வரலாறு, திறனாய்வுப் பனுவல்கள் போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தேன். அப்பொழுது உறுப்பினராக இருந்த கி.ராஜநாராயணன் எனது செயல்பாடுகளுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அதுபோல சாகித்ய அகாதெமி உறுப்பினர்கள் சிறு நூல்களை எழுதும் போக்கு முன்னர் இருந்தது. எங்கள் குழு, அதைத் திட்டவட்டமாக ஏற்கவில்லை. ஞானபீட விருது வழங்குகிற தேர்வுக் குழுவில் ஈரோடு தமிழன்பன், தமிழண்ணல் ஆகியோருடன் நானும் இருந்தேன். தமிழில் யாருக்கு ஞானபீடம் விருது அளிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது எங்களுடைய பணி. முன்பு அகிலன் பெற்றிருந்தார். இப்பொழுது யாருக்கு? ஜெயகாந்தனுக்குக் கொடுக்க வேண்டுமென்று எனது சார்பில் பலத்த விவாதம். முதலாண்டு மற்ற இருவரும் ஏற்கவில்லை. அடுத்த ஆண்டில் மீண்டும் ஜெயகாந்தன் பெயரை மீண்டும் முன்மொழிந்தேன். ஜெயகாந்தன் பற்றிய விரிவான அறிவிக்கையும், அவருக்குக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும்,  அவருக்குக் கொடுக்காமல் இருந்தால் என்ன நடக்குமென்பதையும் விரிவாக எழுதி, ஞானபீடக் குழுவினர்க்கு அளித்தேன். மூவரின் ஒப்புதலுடன் பரிந்துரை, ஞானபீடக் குழுவினர்க்குப் போனது. ஜெயகாந்தன் பற்றி எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஜெயகாந்தன் இருக்கும்போது, வேறு யாருக்கு ஞானபீடம் விருது கொடுப்பது?

அடிப்படையில் மார்க்சியவாதியான நீங்கள்  புதிய கோட்பாடுகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், பின் காலனியம், பின் பழமைத்துவம் போன்ற புதிய கோட்பாடுகள், தமிழுக்கு அறிமுகமானபோது, அவை குறித்துப் பதற்றமடையாமல், அவற்றைத் திறந்த மனநிலையுடன் தமிழிலக்கிய விமர்சனத்தில் பயன்படுத்திய மனநிலை, உங்களுக்கு எப்படி உருவானது?

 புதிய கோட்பாடுகள், மார்க்சியத்திற்கு எதிராக இருப்பது என்பது வேறு, மார்க்சியத்தை எதிர்கொள்ள முடியாமல் போவது என்பது வேறு. மார்க்சியவாதி என்ற அடிப்படையில், இந்த மாதிரி அமைப்பியல், பின் அமைப்பியல்,  பின்நவீனத்துவம் போன்ற கொள்கைகளை முழுக்க மறுதலித்துவிட்டுப் போக வேண்டியது இல்லை என்பது என்னுடைய கருத்து. மார்க்சியத்தை அமைப்பியல் என்ற பார்வையில் அணுகுவது முக்கியமானது. பின் அமைப்பியல் என்பது அமைப்பியலை மறுதலிப்பது என்பது ஒரு நிலை. அதுபோலப் பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவத்திற்கு எதிரானது என்ற கருத்து உண்டு. மார்க்சியத்தை அமைப்பியல் என்பதால், நவீனக் கொள்கை என்பதாகக் கருதுகிறவர்கள் உண்டு. அதேநேரத்தில் மார்க்சியத்தை எதிர்க்கிறவர்கள், பின் அமைப்பியலையும், பின்நவீனத்துவத்தையும் முன்மொழிந்து தங்கள் நிலைப்பாட்டை நிறுவ நினைக்கின்றனர். மார்க்சியவாதி, பின் அமைப்பியலையும், பின்நவீனத்துவத்தையும் அவற்றின் சரியான பொருளில் புரிந்துகொள்ள வேண்டும். வெறுமனே மறுப்பது நோக்கம் அல்ல. எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். இந்த இரண்டையும் பற்றி நான் எழுதியிருக்கிறேன். ஆனால், அவற்றை விமர்சித்து, விவாதித்து பின்நவீனத்துவம் தெரியாமல், இன்றையப் படைப்புகளையும், சமூக நிலைமைகளையும்  புரிந்துகொள்வது சிரமம். அவற்றை விமர்சிக்காமல் இருக்க முடியாது.

 பின்நவீனத்துவம் எல்லோரையும் விமர்சகராக்கியுள்ள சூழலில், விமர்சகர்கள் அருகி வரும் உயிரினமாகி விட்டார்களா?  இது குறித்து…

பின்நவீனத்துவம் எல்லோரையும் விமர்சகராக்கியுள்ளது என்பதை  என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது, சற்று தாராளமும், சுதந்திரமும் கொடுத்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நவீனத்துவத்திற்கு எதிர்நிலையாகப் பின்நவீனத்துவத்தை முன்வைக்கிறார்கள். அது ஏன்? எப்படி? என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றால், நவீனத்துவத்தைத் திரும்பக்கொண்டு வருவதுபோல ஒரு பிரேமை தோன்றுகிறது.  இதில், பின்நவீனத்துவத்தில் நவீனத்துவத்தின் ஏதிர்நிலைக் கருத்துகள் தெளிவாகவும், திறம்படவும் சொல்லியாக வேண்டும். பின்நவீனத்துவத்தை வைத்து  விமர்சனம் எழுதுவது லேசுப்பட்ட காரியம் அல்ல.  இது, விமர்சனத்தை முழுக்கத் தீர்த்து விடாது. பின்நவீனத்துவத்துக்கு அப்பால் எத்தனையோ நிலைப்பாடுகள் உண்டு. மொழியியலும், மானிடவியலும், தொல்லியலும் பல விமர்சன முறைகளைக் கோடு காட்டியுள்ளன. விமர்சனம் அருகி விடாது, தீர்ந்து போகாது. புதிய உலகமயமாக்கல் பொருளாதாரம் பல சவால்களை நம் முன்னர் தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கிறது.

நான், எம்.ஃபில் படிக்கும்போது, நீங்கள்தான் எனக்கு ஆய்வு நெறியாளர். அப்பொழுது நான் மார்க்சிய லெனினியக் கருத்தை ஏற்றுக்கொண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் தீவிரமாகச் செயலாற்றிய சூழலில், நீங்கள் சார்ந்திருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் போலிக் கம்யூனிஸ்ட் கட்சி, சந்தர்ப்பவாதக் கட்சி  என்றும், புதிய ஜனநாயகப் புரட்சி வரும்போது, நீங்கள் எனக்கு எதிரி என்றும் உங்களிடம் சொல்லியபோது, நீங்கள் புன்னகையுடன் என்னைப் பார்த்தீர்கள். அது ஒருவகையில் அதிகப் பிரசங்கித்தனம் என்று பின்னர் எனக்குப் புரிந்தது. அப்பொழுது உங்களுடைய மனநிலை என்னவாக இருந்தது?

கொள்கைகள் சற்று முன்னே – பின்னே  இருந்தாலும், சமூக மாற்றமும் எழுச்சியும் பொது என்றிருக்கும்போது, சிறிய வேறுபாடுகள், எந்தவிதத்திலும் ஆத்திரமூட்டுபவை அல்ல. தந்திரோபயங்கள் மாறுபடலாம், வழிமுறைகளில் வேறுபாடுகள் வரலாம், எது சரியானது – மிகச்சரியானது – என்பதில் பார்வைகள் மாறலாம். பொறுத்திருந்து பார்க்கலாம் என்ற நினைப்பில் புன்னகைகள் வரலாம். இதற்காகப் பிரசங்கங்கள் ஏன் அதிகமாகிப் போகவேண்டும்?

பேராசிரியர் என்றால் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் இறுக்கமாக விளங்கிய காலகட்டத்தில், மாணவர்களுடன் இயல்பாகப் பழகிய மனநிலை, உங்களுக்கு உருவான பின்புலம்  குறித்து…

 இறுக்கமும் கட்டுப்பாடும் மெனக்கெட்டு யாரும் போட்டதில்லை. இவர்களாகச் செய்து கொண்டவை. புதிய அந்தஸ்து, புதிய கோலங்களைத் தந்துவிட்டு விலகிக்கொண்டது. அந்தஸ்துக்கு அர்த்தம் தெரியவிட்டால், அது போலியாகப் போய்விடும். விலகி நிற்பது, விரக்திக்கு வழிவகுக்கும். வேலிகளைத் தாண்டிப் போகும்போதுதான் புதிய உலகம் பூப்பதைப் பார்க்கமுடியும். மாணவர்களுடன் பழகாமல் தனிமைப்பட்டுக்கொள்வது பயத்தினாலும் இருக்கலாம்; பரிதவிப்பினாலும் இருக்கலாம்.

 உங்களுடைய எழுத்துப் பணி குறித்து உங்களுடைய குடும்பத்தினரின் அபிப்ராயம் என்னவாக இருக்கிறது?

 என் எழுத்துப் பணிக்குப் பின்புலமாக விளங்குகிறவர், என் மனைவி ரமோலா. தொடர்ந்து எழுதுவதற்கு உற்சாகப்படுத்தவும், சிலவேளைகளில் தொந்தரவு செய்து எழுதிடத் தூண்டுவதும் எல்லாம் என் துணைவியார்தான். முதல் விமர்சகரும் அவர்தான். என் மகள்கள் இருவரும்,  மகனும் என் எழுத்துகளை அவ்வப்போது வாசிப்பார்கள்; புரிந்துகொள்வார்கள். சில சமயங்களில் எதிர்கொண்டு அவற்றைப் பற்றிப் பேசுவார்கள்.  குடும்பப் பின்புலம்தவிர, நட்புப் பின்புலம், மாணவர் பின்புலம். இந்தப் பின்புலங்கள் நன்றாக இருந்ததால்தான், என்னால் தொடர்ந்து எழுத முடிந்தது. அது, முக்கியம் இல்லையா?

பதிவை பகிர

பின்னூட்டம் இடுக


You cannot copy content of this page